மௌனமாய் எரிகிறேன் 19

சேஷன் அவனது படப்பிடிப்புத் தளத்தில் இருக்க, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது அங்கே. இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சேஷன் மற்றவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சியில் இருக்க, இயல்பாகவே அசாத்தியமாக இருசக்கர வாகனங்களை அசாத்தியமாக கையாளுபவன் என்பதால், டூப் போடவிருந்த  நபரை மறுத்துவிட்டு, தானே இருசக்கர வாகனத்தை முறுக்கிக் கொண்டிருந்தான் சேஷன்.

அப்படியொன்றும் அதிக வேகம் எல்லாம் இல்லை. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எடுக்கப்படும் காட்சிதானே. அதுவும் சேஷன் இப்படி ஆபத்தான காட்சிகளில் நடிப்பதும் இது முதல் முறை கிடையாதே. அதனால் சாதாரணமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்திருந்தான் நிவாஸ்.

அடுத்தடுத்த காட்சிகள் இயக்குனர் நினைத்தபடி சிறப்பாக அமைந்துவிட, கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருணம் அது. சேஷன் அவன் அமர்ந்திருந்த வண்டியின் முன்பக்கத்தை சற்றே உயர்த்தி வீலிங் செய்வதுபோல், எதிரில் வந்து கொண்டிருந்த காரின் மீது மோத வேண்டும் என்பது காட்சி.

சரியாக அவன் மோதும் நொடியில் கார் வலதுபக்கம் மொத்தமாக திரும்ப வேண்டும். சேஷன் காரில் மோதி நின்று, கேமராவைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்க, எதிர்பாராத விதமாக சேஷன் பைக்கின் முன்பக்கத்தை உயர்த்திய நொடியில், குறிப்பிட்டிருந்ததை விட அதிகமான வேகத்தில் அவனை நெருங்கியது அந்த கார்.

சேஷன் மட்டும் சுதாரிக்காமல் போயிருந்தால் நிச்சயம் அந்த காரில் அடிபட்டு கீழே விழுந்திருப்பான். அவன் காரின் வேகத்தைக் கணக்கிட்டுக் கொண்டவனாக, வண்டியிலிருந்து இடது பக்கமாக குதித்திருக்க, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அங்கே.

கீழே விழுந்தவன் கையை மடக்கியபடி தரையில் ஊன்றிவிட, முழங்கை பகுதியில் நன்றாக சிராய்த்துவிட்டிருந்தது. முதுகிலும் லேசாக வலியிருக்க, நிவாஸ் “சேஷா…” என்று கத்தியபடியே நண்பனை நெருங்கியிருந்தான்.

சேஷா நிவாஸின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்துவிட, அதற்குள் யாரோ தண்ணீரை நீட்டி இருந்தனர். அங்கேயே வைத்து அவன் காயத்தை கழுவி, அவனது பாதுகாவலர்களுடன் சேஷனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டான் நிவாஸ்.

அவன் கிளம்பிய அடுத்தநொடி, அந்த காரின் ஓட்டுனரை நெருங்கிய நிவாஸ் அவனை அடித்து துவைக்க, “சார்… சார்… வேணும்னு பண்ணல சார். கார்ல பிரேக் பிடிக்கல சார்.” என்று வலி தாங்காமல் அலறினான் அவன்.

நிவாஸ் அவனை அப்படியே விட்டு அங்கிருந்த டெக்னீஷியன்களை நெருங்க, அப்போதுதான் காரின் பிரேக் வயர் அறுந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிவாஸ் அங்கிருந்தவர்களை காய்ச்சி எடுத்ததோடு நிற்காமல், காவல்துறையிலும் புகார் கொடுத்துவிட்டான்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் அவனிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும், யாரின் பேச்சையும் காதில் வாங்காமல் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான் அவன்.

அவன் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கு முன்பே, சேனா அவனை அலைபேசியில் அழைத்துவிட, ஒரு பெருமூச்சுடன் தான் அழைப்பை ஏற்றான் நிவாஸ்.

“என்ன நடந்தது?” என்று சேனா நிதானமாக வினவ,

“ஆக்சிடென்ட் தான். ஸ்டண்ட் ஸீன். கார் பிரேக் வயர் கட்டாகி இருந்திருக்கு.”

“சேஷா கண்டிஷன் என்ன?”

“கையில காயம் ஏற்பட்டு இருக்கு. முதுகுல லேசா அடிபட்டு இருக்கணும்.” என்று அவன் கூறிய நிமிடமே அழைப்பைத் துண்டித்துவிட்டாள் சேனா.

அந்த நிமிடம் அவளது முகம் ருத்ராகாரமாக மாறிப் போயிருக்க, சில நிமிடங்கள் யோசனையில் கழிந்தது. பின் முடிவெடுத்து விட்டவளாக தன் வீட்டிலிருந்து கிளம்பினாள் சேனா.

அன்று மாலையே அவள் ஆத்மீயை ஒரு பொது இடத்தில் வைத்து சந்திக்க, அவளது ஏற்பாட்டின்படி அடுத்த ஒருமணி நேரத்தில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தன் தந்தையின் மீது புகார் அளித்தாள் ஆத்மீகா.

தனது அக்கா அமிர்தாவின் மரணத்தில் தனது தந்தை ஆத்மநாதன் மீது சந்தேகம் இருப்பதாக அவரது மகள் புகார் கொடுத்திருந்தாள்.

ஆத்மநாதன் பதறியவராக வீடு வர, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தான் வீடு வந்து சேர்ந்தாள் ஆத்மீகா. “நீ வீட்டுக்கு போக வேண்டாம் ஆத்மீ.” என்ற தேவாவின் வார்த்தையையும் மீறி, தன் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.

அவள் அன்னை மகள் வீட்டிற்கு நுழைந்த நிமிடமே, “என்ன காரியம் பண்ணியிருக்க ஆத்மீ நீ?” என்று மகளை அறைந்துவிட, சோஃபாவில் அசையாமல் அமர்ந்திருந்தார் ஆத்மநாதன்.

“என்னம்மா… நான் பொய்யா புகார் கொடுத்து இருக்கேன்னு சொன்னாரா? அவரை உண்மையை சொல்ல சொல்லு. உன் புருஷந்தானே… உன்கிட்ட பொய் சொல்லமாட்டாரே. நீ கேளு.” என்று நின்றாள் மகள்.

“ஆத்மீ… என்னடி பேசற.. உன் அப்பாடி அவர். அவர் மகளை அவரே கொல்வாரா?” என்று ராதா கதற,

“அவரோட பொண்ணை கொல்லமாட்டார். உன் அண்ணன் பொண்ணை கொலை பண்ணுவாரு. உன் சொத்துக்காக தான் அத்தனையும் செஞ்சிருக்காரு.” என்றாள் மகள்.

“வாயை மூடு ஆத்மீ. அடிவாங்குவ நீ. கிறுக்குத்தனம் பண்ணாத.” என்று உயிரைக் கையில் பிடித்தவராக ராதா மகளை அதட்ட,

“அம்மா… உன் மேல சத்தியம் பண்ண சொல்லு. அமிர்தா சாவுக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சத்தியம் பண்ண சொல்லு.” என்று ஆத்மீ கத்த, அப்போதுதான் தன் கணவரைத் திரும்பி பார்த்தார் ராதா.

“என்னங்க சொல்றா இவ… நீங்களாவது சொல்லுங்களேன்.” என்று ராதா தன் கணவரை நெருங்கி அவர் அருகில் மண்டியிட,

“சொல்லுங்கப்பா… உன் அண்ணன் சொத்துக்காக அவர் பொண்ணை கொன்னுட்டேன்னு சொல்லுங்க உங்க பொண்டாட்டிகிட்ட. இன்னும் உங்களை நம்புறாங்க இல்ல. அவங்ககிட்ட சொல்லுங்க” என்று மீண்டும் இரைந்தாள் மகள்.

“உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்தது? ஒருநிமிஷம் கூடவா, அவளை உங்க மகளா நினைச்சது இல்ல. அவ விரும்பியவன் கூட அவளை அனுப்பி இருந்தாலே, உங்க சொத்தை கேட்டு வந்திருக்கமாட்டாளே அவ. இல்ல, அவகிட்ட உண்மையை சொல்லியிருந்தா கூட, அத்த்னையும் எழுதிக் கொடுத்திருப்பாளே. உங்களுக்கு அவளை புரியவே இல்லையா… ஏன்ப்பா இப்படி பண்ணீங்க?” என்று ஆத்மீ ஆத்திரமிகுதியில் ஆத்மாவின் சட்டையைப் பிடித்துவிட, மகளைப் தூர தள்ளியிருந்தார் ஆத்மநாதன்.

“பொம்பளைப் பிள்ளைன்னு வீட்டோட வைக்காம, உனக்கு தொழில் சொல்லிக்கொடுத்து கூடவே வச்சிருக்கேன்ல அதுதான் இந்த நிலைமைக்கு வந்து நிற்குது. உன் அக்கா ஒழுங்கா பிழைக்கத் தெரியாம அவளா உயிரை விட்டா…”

“நீ தேவையில்லாத விஷயங்கள்ல தலையிட்டு அடிபட்டே சாகப் போற.” என்றவர் மகளை அறைந்து தள்ள, அப்போதுதான் உயிர் வந்தவராக அவரை நெருங்கினார் ராதா.

மகளுக்கு முன்பாக நின்று கொண்டவர், “வேண்டாம்ங்க… அவளை விட்டுடுங்க.” என்று இடையிட,

“அவர் அமிர்தாவை என்ன செஞ்சாருன்னு கேளும்மா.” என்று மீண்டும் கத்தினாள் ஆத்மீ.

“ஏய்… ஆமா, நாந்தான் அவளை சாக சொன்னேன்.  என்ன செய்யப்போற.” என்று ஆணவமிகுதியில் ஆத்மநாதன் வாயை விட,

“என்ன சொன்னிங்க?” என்று அதிர்ந்தவராக கணவரின் முகம் பார்த்தார் ராதா.

“சாக சொன்னிங்களா..” என்று அதிர்ச்சி மிகுதியில் அவர் வாய்விட்டு புலம்ப,

“அக்காவை கொலை பண்ணி இருக்கார்மா இவர்.” என்று ராதாவிடம் பேசினாள் மகள்.

“உன்னை…” என்று ஆத்மநாதன் மீண்டும் மகளை நெருங்க, கணவரைப் பிடித்து தூர தள்ளியிருந்தார் ராதா.

ஆத்மநாதன் இரண்டடி பின்னால் சென்று நிற்க, “என் பொண்ணு மேல கையை வச்ச… கொன்னுடுவேன் உன்னை.” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினார் அவர்.

“என்ன செஞ்ச என் மகளை… சாக சொன்னியா? இல்லை, கழுத்தை நெறிச்சு கொலை பண்ணிட்டியா?” என்றவர் கணவரை நெருங்கி அவர் சட்டையைப் பிடிக்க,

“ஏய் விடுடி.” என்று மனைவியை அதட்டினார் ஆத்மா.

“உனக்கு எப்படிய்யா மனசு வந்தது? என் பிள்ளையைக் கொன்னுட்டியா நீ.” என்று புத்தி பேதலித்தவராக அவர் கேட்டதையே மீண்டும் மீண்டும் ஆத்மநாதனிடம் கேட்டுக் கொண்டிருக்க,

“என்னவோ, நீ பெத்த மாதிரி உன் பிள்ளைன்னு சொல்ற. போறவன் வர்றவன் பேதத்தை எல்லாம் நான் ஏண்டி வளர்த்து விடணும்? நான் வளர்த்து ஆளாக்கினா, இவ எனக்கு பிடிக்காதவனை காதலிப்பாளா? புதைச்சுடுவேன்… அவளுக்கு மட்டுமில்ல. உனக்கும் உன் பொண்ணுக்கும் கூட இதே கதிதான்.”

“நான் சொல்றதை கேட்டு நடக்கிறது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. இல்ல, அவ நிலைமை தான் உங்களுக்கும்.” என்றவர் மனைவியின் கழுத்தை நெறிக்க தொடங்கிவிட,

“விடுங்க.. விடுங்க..” என்று அவர் கையை இழுக்க முயன்றாள் ஆத்மீ.

ஆனால், அவரது பலத்தின் முன்னே போராட முடியவில்லை அவளால். அவர் பிடித்து தள்ளியதில், ஆத்மீ நிலைதடுமாறி கீழே விழ, அதே நேரம் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் இளமாறன்.

அவனைக் கண்டதும், “ஏய். வெளியே போடா.” என்று அவர் அலற, அவரின் கத்தலை கண்டுகொள்ளாமல் கீழே விழுந்திருந்த ஆத்மீயை எழுப்பி நிறுத்தினான் இளா.

 ஆத்மாவின் பிடியில் இருந்த ராதாவையும் விடுவித்து தனக்கு அருகில் நிறுத்திக் கொண்டான் இளமாறன். அவனது பாதுகாவலர்களும் அவனுடன் வந்திருக்க, அவனை எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் இருந்தார் ஆத்மநாதன்.

“நீங்க பண்ண பாவங்களுக்கு பதில் சொல்ற நேரம் இது. இன்னுமின்னும் உங்க பாவக்கணக்கை ஏத்திட்டே இருக்காதிங்க.” என்று எச்சரித்தான் இளா.

ஆத்மா அசராமல் நிற்க, “இவரோட இனி நீங்க இருக்கவேண்டாம் வாங்க.” என்று அவரது மனைவியையும், மகளையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான் இளமாறன்.

ஆத்மநாதன் தனக்குள் இறுகியவராக நின்றிருந்தார். நிச்சயம் அவர் மகளுக்கு இத்தனை நிதானம் கிடையாது என்று தெரியும் அவருக்கு. அதுவும் ஆத்மீ அன்று மாலை தேவசேனாவை சந்தித்ததும் அவருக்கு தெரிய வந்திருந்தது.

இரண்டும் இரண்டும் நான்கு என்று தானே கணக்கிட்டுக் கொண்டிருந்தார் அவர். சேஷாவை மொத்தமாக முடித்துவிட, அவர் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்க, இப்போது தேவா தன் குடும்பத்தையே தன்னிடம் இருந்து பிரித்து விட்டதை பொறுக்க முடியவில்லை அவரால்.

சேஷாவை அப்போதைக்கு தள்ளி வைக்க நினைத்தவரின் மொத்த கவனமும் இப்போது தேவசேனாவின் மீதே திரும்பியிருந்தது.