ஆனால், இருவருக்குமே தவறென்ற எண்ணம் எப்போதும் வந்ததே கிடையாது. இருவருமே ஒருவருக்கு மற்றவர் என்று முடிவு செய்திருக்க, எங்களை கேட்பவர் யார்? என்ற நிலையில் தான் இருந்தனர்.

சேஷாவுக்கு அவ்வபோது கலையரசியின் அப்பாவி முகம் கண்ணில் உறுத்தினாலும், அமிர்தாவின் அருகாமை அதை மறக்கடித்துவிடும்.

உண்மையில் சேஷாவிடம் மயங்கித்தான் கிடந்தாள் அமிர்தா. அவளின் ஒவ்வொரு அசைவும் சேஷாவின் விருப்பப்படி தான். அவன் துறையின் பயனாய் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவன் அவன். அவனும் இலகுவாக அனைவரிடமும் பழகிவிடும் குணம் கொண்டவன் என்பதால், நட்பு வட்டமும் பெரியது தான்.

ஆனால், எங்குமே தனது காதலை அவன் மறைத்ததில்லை. தனது காதலி என்று பெருமையாகத்தான் அறிமுகப்படுத்துவான் அமிர்தாவை,

இருவருக்குமே அவர்களின் குடும்பம், எதிர்காலம் என்று அத்தனையும் மறந்திருந்த நேரம் அது. எங்கும் இனிமை குறையாத, இடர்பாடுகள் அற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் இருவரும்.

அமிர்தாவின் படிப்பு முடிந்து அவள் இந்தியாவிற்கு கிளம்பவும், அவளை மேலும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே படிப்பைத் தொடருமாறு வற்புறுத்தினான் சேஷன். ஆனால், அமிர்தாவின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போக, சேஷனைப் பிரிந்து இந்தியாவுக்கு கிளம்பினாள் அவள்.

அவனது வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு இரண்டு மாதங்களில் சென்னை வந்துவிடுவதாக சேஷன் உறுதி கொடுக்கவும் நிம்மதியாக சென்னை கிளம்பினாள் அமிர்தா.

சொன்னபடியே, இரண்டாவது மாதம் ஒருநாள் அதிகாலையில் யாரும் எதிர்பார்க்காதபடி சேஷன் சென்னை வந்திறங்கம் அவனை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தாள் அமிர்தா. இரண்டு மாத பிரிவு மிகப்பெரியதாக தெரிய, சென்னையில் இருப்பதை மறந்தவளாக அவள் தன்னவனை அணைத்து வரவேற்க, அங்கிருந்த சிலரின் பார்வையில் விழுந்தனர் இருவரும்.

அன்று மதியம் வரை அமிர்தாவுடன் நேரத்தைக் கழித்து, அதன்பின்பே சேஷன் வீடு வர, கலையரசிக்கு தன் கண்களையே நம்ப முடியாத நிலை. ‘வந்துவிட மாட்டானா’ என்று ஏங்க வைத்தவனாகிற்றே.

அவன் வந்து நிற்கவும், மற்றது அனைத்தும் மறந்தவராக அவர் மகனை அணைத்துக்கொள்ள, அன்னையின் அன்பில் உருகிப் போனான் சேஷன்.

வீட்டிற்குள்ளிருந்து வந்த தேவாவும், “ஹேய் மாமா… எப்போ வந்த. சொல்லவே இல்ல.” என்று அவன் தோள்தட்டி விசாரிக்க, அவளுக்கு பதில் கொடுத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் சேஷன்.

அவன் வந்த நேரம் பாட்டி வீட்டிலில்லை. கலையரசி அவருக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும், அவர் அவசரமாக வீட்டிற்கு கிளம்ப, அப்போதுதான் அவரது தொழில்முறை நட்பான முரளிதரன் அவரை அழைத்தது.

“சேஷன் எங்கே இருக்கான்?” என்று அவர் விசாரிக்க,

“இன்னைக்குத்தான் வந்திருக்கான் அண்ணா.” என்று பிரகதீஸ்வரி கூற,

“அவன் தனியா வரல ஈஸ்வரி. யாரோ ஒரு பொண்ணு அவனோட இருந்தா. என்ன விஷயம் கேளு.” என்று உரிமையாக கூறினார் முரளிதரன்.

பிரகதீஸ்வரிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், முழுதாக மறுக்கும் எண்ணமோ, கோபமோ எதுவும் இல்லை. மனதை தேற்றிக் கொண்டவராக அவர் வீடு வர, பேரன் எப்போதும் போல் இயல்பாக இருப்பதாகத் தான் பட்டது.

அப்படியே அவன் போக்கில் விட்டவர் இரண்டு நாட்கள் கடக்கவும் பேரனை அழைத்து விசாரிக்க, “எஸ் பாட்டி. நாங்க லவ் பண்றோம். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று உறுதியாக நின்றான் பேரன்.

“சோ… உன் படிப்பு இத்தனை வருஷம் நீண்டதுக்கும் இதுதான் காரணம் இல்லையா?” என்று கண்களை சுருக்கி அவர் விசாரிக்க,

“நிச்சயமா இல்ல. நான் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். அதுக்காகத் தான் சென்னைக்கு வரல. மற்றபடி, அம்ருவுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்ல.” என்று மறுத்தான் பேரன்.

“யார் அந்த பொண்ணு?”

“இங்கே AN நெட்ஒர்க்ஸ் ஆத்மநாதன் பொண்ணு.” என்று பேரன் கூறிய கணமே, பாட்டியின் முகம் ஏளனமாக சிரித்தது.

“நீ முட்டாள்ன்னு உன்னோட ஒவ்வொரு முடிவிலேயும் எனக்கு நிரூபிச்சுட்டு இருக்க சேஷா.” என்று அதட்டலாக அவனை கடிந்து கொண்டார் பாட்டி.

சேஷன் புரியாமல் பார்க்க, “ஆத்மநாதன் இந்த வீட்டுக்கு நிச்சயமா சம்பந்தி ஆக முடியாது. அவனோட பொய் பித்தலாட்டங்கள் எதுவும் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது.”

“நான் அவரோட மகளைத்தான் காதலிக்கிறேன் பாட்டி. அவரை இல்ல.”

“எதுவா வேணா இருக்கட்டும். அவன் பொண்ணுக்கு இந்த வீட்ல இடம் கிடையாது.”

“அப்போ என்னை நீங்க மறந்திட வேண்டியது தான்.”

“என்ன மறுபடியும் மிரட்டலா? என்னை உன் அம்மான்னு நினைச்சியா? நீ என்ன சொல்றது, நான் சொல்றேன்… அவன் பொண்ணைத் தான் கட்டுவேன்னு நீ அடம்பிடிச்சா, உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது. நீ தாராளமா வெளியே போகலாம்.”

“ஆனா, தணிகைவேல் பையன்னு எங்கேயும் சொல்லிடாத. அதுக்கு உனக்கு தகுதி இல்ல. முதல்ல, சொத்து கிடைக்காதுன்னு உன் காதலிக்கிட்ட சொல்லு. உன் ஆருயிர் காதலி என்ன முடிவெடுக்கிறான்னு பார்த்துட்டு, என்கிட்டே சவால் விடு.” என்று படபடவென பொரிந்துவிட்டு வெளியேறினார் பிரகதீஸ்வரி.

சேஷா பாட்டியின் பேச்சை பெரிதாக எடுக்காமல் இயல்பாகவே வலம்வர, பிரகதீஸ்வரி தான் செய்ய வேண்டிய வேலைகளைத் தொடங்கியிருந்தார்.

அவருக்கு ‘சேஷன் நெட்ஒர்க்ஸ்’ கனவு. கடந்த சில ஆண்டுகளாக, அதை மீட்டெடுக்க அவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். மகனது விருப்பத்திற்காக அவன் சுயமாக அவன் தந்தையின் பெயரில் தொடங்கிய நிறுவனம் அது.

ஆனால், என்னவோ இந்த மீடியா மட்டும் பிரகதீஸ்வரியின் கணிப்புக்குள் அடங்கவே இல்லை. எத்தனை முயன்றும் முடியாமல் போராடிக் கொண்டிருந்த நேரம் தான் தேவசேனா அதன் பொறுப்பை கேட்டது. அந்த நிறுவனத்தை சேஷாவிடம் ஒப்படைக்க நினைத்து இத்தனை நாட்கள் சேனாவின் விருப்பத்தை மறுத்து வந்த பிரகதீஸ்வரி இப்போது உறுதியாக முடிவெடுத்துவிட்டார்.

சேஷனிடம் பேசிய மூன்றாவது நாள் சேஷன் நெட்ஒர்க்ஸின் பொறுப்பை முழுமையாக பேத்தியிடம் ஒப்படைத்துவிட்டார் அவர்.

இந்த செய்தி சேஷாவுக்கும் அதிர்ச்சிதான். அவன் தந்தையின் நிறுவனம் அது. அவன் தந்தை அவனுக்காக, அவன் விருப்பம் அறிந்து தொடங்கியது. அவன் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.

ஆனால், அத்தனையும் ஒன்றுமில்லாமல் செய்து, சாதாரணமாக பிரகதீஸ்வரி நிறுவனத்தை தேவாவிடம் கொடுத்திருக்க, அவரிடம் நியாயம் கேட்டு நின்றான் பேரன்.

“நான் சொல்றபடி தொழிலைப் பாரு. நான் கைகாட்டுற பொண்ணை கட்டிக்கோ. நீ கேட்குறது அத்தனையும் கிடைக்கும்.” என்றார் அவர்.

“இதெல்லாம் நியாயமே கிடையாது பாட்டி. நீங்க எனக்கு துரோகம் பண்றிங்க.” என்று பேரன் வருந்த,

“எனக்கு நியாயம், அநியாயம் எல்லாம் தெரியாது. எனக்கு நான் நினைச்சது நடக்கணும். உன்கிட்ட சேஷன் நெட்ஒர்க்ஸை கொடுத்தால், அதை அவனுக்கு தாரை வார்த்துட்டுதான் மறுவேலை பார்ப்ப நீ. உன்னை நம்பி தொழிலை கொடுக்க முடியாது. என் மகனோட கனவு இது. உனக்காக இதை அழிக்க முடியாது.” என்று நிர்தாட்சண்யமாக பதில் கொடுத்தார் பாட்டி.

அவரிடம் பேச விரும்பாதவனாக சேஷன் தன்னறைக்கு வந்துவிட, அமிர்தா அழைத்திருந்தாள். சில நொடிகளிலேயே அவன் குரலின் பேதத்தை உணர்ந்து கொண்டு, “என்னாச்சு சேஷு.. ஏன் குரல் எப்படியோ இருக்கு?” என,

“நத்திங் அம்ரு… பாட்டிக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு. கொஞ்சம் பிளே பண்றாங்க. சொத்து கொடுக்கமாட்டேன்… தொழில் கொடுக்கமாட்டேன்… அப்படி இப்படி நிறைய…” என்று சேஷன் கூறிவிட, சில நொடி பேச்சில்லாத மௌனம் மட்டுமே எதிர்முனையில்.

“அம்ரு…” என்று மீண்டும் சேஷன் அழைக்க,

“இருக்கேன் சேஷு.” என்றாள் அவள்.

“என்னாச்சு.”

“தெரியல. பயமா இருக்கு… என்னால நீங்க இல்லாம வாழ முடியாது சேஷு.” என்றவள் குரல் கலங்கியது.

“நான் இல்லாம உன்னை யார் வாழ சொன்னது.?” என்று சிரித்தான் சேஷன்.

“உங்களுக்கு என் அப்பாவைப் பத்தி தெரியாது சேஷு. உங்ககிட்ட காசு இல்லேன்னு தெரிஞ்சா, நிச்சயமா அவர் நம்மை சேர விடமாட்டார்…” என்று பயத்துடன் வந்தது அவள் குரல்.

“அதுக்காக நான் என்ன செய்யணும்?” என்று சேஷன் வினவ,

“என்னை உங்களோட கூட்டிட்டு போய்டுங்க. எனக்கு இந்த சொத்து, தொழில், என் அப்பாவோட அந்தஸ்து எதுவும் வேண்டாம். நாம திரும்ப லண்டன் போயிடுவோம். எனக்கு நீங்க சம்பாதிக்கிறது போதும். வேற எதுவும் வேண்டாம்.” என்று முடிக்கும்போது அழுதுவிட்டாள் அவள்.

அவள் பேச்சில் நிம்மதியாக உணர்ந்தான் சேஷா. தன் அம்ருவை சந்தேகித்ததற்காக அவன் தன்னையே கடிந்து கொள்ள, எதிர்முனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

“அழாத அம்ரு.” என்று அதட்டி, “நிச்சயமா நம்ம கல்யாணம் நடக்கும். எங்கேயும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் நமக்கில்ல… நான் இருக்கேன்ல, தைரியமா இரு.” என்று அவளை தேற்றி, மேலும் சில நிமிடங்கள் பேசியபின்னரே அழைப்பைத் துண்டித்தான் அவன்.

அவளிடம் பேசிவிட்டாலும், இந்த குழப்பங்களை சரிசெய்து எப்படி அமிர்தாவை கரம்பிடிப்பது என்று புரியவே இல்லை அவனுக்கு. அதிலும், பிரகதீஸ்வரி நிச்சயம் சொன்னபடி செய்துவிடுவார்.

அவனுக்கு சொத்தின் மீதெல்லாம் பெரிதாக ஆர்வம் கிடையாது. ஆனால், அவன் தந்தையின் உழைப்பு இது. அப்படியெல்லாம் பாட்டியின் விருப்பத்திற்கு விட்டுச் செல்ல முடியாது என்பதில் தெளிவாக இருந்தான்.

இதே யோசனையில் அவன் சென்னையை சுற்றிவந்த நேரங்களில் தான் அவனைத் தேடி வந்தது திரைத்துறை வாய்ப்பு. அவன் பின்புலமும் உதவியாக இருக்க, பாட்டியிடம் இந்தமுறை செய்தியாக கூற எதையும் கூறவில்லை அவன்.

அவன் போக்கில் அனைத்தையும் சமாளித்து, முதல் படத்திற்கு முன்பணம் வாங்கியிருந்தான். ஆனால், அப்போதும் பிரகதீஸ்வரிடம் கூறவில்லை. ஆனால், அவருக்கா தெரியாது தன் பேரனை.