மௌனமாய் எரிகிறேன் 09

அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண் சிலையின் கைகளில் ஒரு மூன்றாம் பிறை நிலவு.

தனக்கு முன்னே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளை ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிலைகள் மொத்தமும் அவளின் கலைநயத்தில் உருவானவை. அவளின் எண்ணத்திற்கு அந்த கலைஞர்கள் அப்படியே சிலை வடிவம் கொடுத்திருக்க, பரிபூரண திருப்தியுடன் அமர்ந்திருந்தாள் தேவா.

விருது வழங்கும் விழா நாளை நடைபெறுவதாக இருக்க, கடைசிகட்ட வேலைகளையும் முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தாள் அவள். அந்த நேரம் தான் அந்த சிலைகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அங்கே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றாலும், விழா நடைபெறுவதாக இருந்த அரங்கில் தான் இருந்தாள். மலர்விழி வற்புறுத்தியபோதும் கூட, கிளம்ப மறுத்து அவள் அங்கேயே அமர்ந்து கொள்ள, அவள் அங்கே இருக்கிறாள் என்பதால் வேலைகளும் சற்று வேகமாக நடந்து கொண்டிருந்தது.

அவ்வபோது கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த திரைத்துறையினரும் வந்து அவளிடம் பேசிச் செல்ல, அவர்களின் நலனையும், தேவையும் கூட பேச்சுப் போக்கில் விசாரித்துக் கொண்டாள் அவள்.

மீதமிருந்த நேரங்களில் அவள் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க, அப்படியான இடைவெளியில் தான் ஆத்மீகா அவளை அழைத்தது. தேவா ஒரு நொடி தயக்கத்திற்குப் பின், அலட்சியம் கொண்டவளாக அழைப்பை ஏற்க, “என்ன தேவா நினைச்சதை சாதிக்கப் போற பூரிப்போட இருக்காயா?” என்றாள் ஆத்மீ.

“உன்கிட்ட பேசற அளவுக்கு நான் வெட்டியா இல்ல. சோ…” என்று தேவா அழைப்பைத் துண்டிக்க, விடாமல் மீண்டும் அழைத்தாள் அவள்.

“என்ன வேணும் உனக்கு?” என்று பொறுமையிழந்தவளாக தேவா கேட்கவும்,

“கேட்டவுடனே கொடுத்துடுவியா தேவா. அவ்ளோ நல்லவளா இருந்திருந்தா, என் அக்காவோட வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்கமாட்ட.” என்று அபாண்டமாக அவள் பழிசுமத்த,

“நல்ல கதை. ஆனா, என்கிட்டே சொல்லி எந்த பயனும் இல்ல. சேஷாகிட்ட சொல்லிப் பாரேன்.” என்று சிரித்தாள் தேவா.

“என்ன… சேஷா உன் புருஷனா இருக்க திமிரா? அந்தளவுக்கு இணைபிரியாத ஜோடியா நீங்க? நீ குடும்பம் பண்ற லட்சணம் என்னன்னு சேஷாவைப் பார்த்தாலே தெரியாதா?” என்று ஆத்மீ தேவாவை நோகடிக்க முயல, அதற்கெல்லாம் கிஞ்சித்தும் வருத்தம் கொள்ளவில்லை தேவசேனா.

“உனக்குதான் சேஷா மேல இத்தனை அக்கறை இருக்கே. நீயும் உன் அக்கா இடத்துக்கு வர தயாராதான் இருக்க. பேசாம அவரையே கட்டிக்கோ. இன்னும் எல்லாத்துக்குமே வசதியா இருக்கும்ல?” என்ற தேவா, “ஸ்ஸ்ஸ்… அது முடியாதில்லையா… வேணும்ன்னா உன் அக்காவைப் போலவே நீயும்…” என்று முடிப்பதற்குள், “தேவா…” என்று அடித்தொண்டையில் இருந்து கத்தினாள் ஆத்மீ.

“உண்மைகள் அப்படித்தான் ஆத்மீ. சில நேரங்கள்ல ரொம்பவே வலிக்கும். இதுக்குதான் சொல்றது, பேசுறதுக்கு முன்ன பத்துமுறை யோசிக்கணும்.” என்று நிதானமாக வகுப்பெடுத்தாள் தேவசேனா.

“உன்னை விடவே மாட்டேன் தேவா. நீ என் அக்கா வாழ்க்கைக்கு பதில் சொல்லியாகணும்.” என்று மீண்டும் அவள் சத்தமிட,

“ஷட் அப் ஆத்மீ… யாரோட வாழ்க்கைக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கில்ல. நீ எனக்கு கால் பண்றது இதுவே கடைசியா இருக்கணும். இல்ல, உன் அக்காவோட வாழ்க்கையைப் பத்தி மொத்த மீடியாவும் காசிப்ஸ் பேசும். நான் பேச வைப்பேன்…” என்று நேரடி மிரட்டலில் இறங்கியிருந்தாள் தேவசேனா.

“உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா தேவா. ஒரு பொண்ணா இருந்து, எப்படி இந்தமாதிரி பேச முடியுது உன்னால. அதுவும் என் அக்காவை… அவ எவ்ளோ சாப்ட் தெரியுமா?” என ஆத்மீயின் குரல் இறங்கி ஒலித்தது.

“உன் அக்கா யார் என்ன எதுவும் எனக்கு தெரிய வேண்டாம் ஆத்மீ. என்னை வாஷ்அவுட் பண்ணனும்னு ஆத்மநாதன் பிளான் பண்ணாரு. இப்போ அவரோட பிளானை அவருக்கே நான் எக்சிகியூட் பண்ணிட்டு இருக்கேன். தட்ஸ் ஆல். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ப்யூர்லி பிசினஸ். உன்னோட உணர்ச்சிகளை எல்லாம் இங்கே கொண்டுவராத.” என்று முடித்துவிட்டாள் அவள்.

“நீ இப்படி இருக்கறதால தான் சேஷா உன்னை அப்படி வெறுக்கிறார் போல. என்னை உன்னால தடுக்க முடியாது தேவா. நீ என் அப்பாவோட பிசினஸை இல்லாம பண்ணியிருக்க. என் அக்கா வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்க. இதுக்கெல்லாம் உனக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா? நீ மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம்?”

“உனக்கென்ன சீரியல் வில்லின்னு நினைப்பா. ஒழுங்கா உன் வேலை என்னவோ, அதைப் பாரு. வீணா, இந்த விஷயங்கள்ல தலையிடாத.” என்று தேவா அறிவுறுத்த,

“ஏன் பயமா இருக்கா? சேஷா என்னோட வந்திடுவார்ன்னு பயம் வருதா தேவா?”

மெல்லிய நகைப்பொலிக்குப் பின், “வந்தா நீ தாராளமா கூட்டிட்டுப் போகலாம் ஆத்மீ. நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே… ஆனா, ஒருவிஷயம் நீ சேஷாவோட பொண்டாட்டியா இருக்க முடியாது.” என்று அழைப்பைத் துண்டித்தாள் தேவசேனா.

ஆத்மீ பேசியதில் வெகுவாக கோபம் ஏறினாலும், அரைகுறையாக அனைத்தையும் தெரிந்துகொண்டு பிதற்றும் அவளை நினைத்து பாவமாகவும் இருந்தது. அவளுக்கு சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதோடு, அவளுக்கு புரியவைப்பது தன் வேலையில்லை என்பதால், அவளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை தேவசேனா.

ஆத்மீயின் விஷயத்தை அங்கேயே மறந்தவளாக, வேலைகளை முடித்துக்கொண்டு அவள் வீடு திரும்ப, இன்னும் சேஷா வந்திருக்கவில்லை. தேவாவின்  உணர்ந்தாலும், எழுந்து வெளியே வரும் எண்ணமில்லாதவராக கலையரசி அவரது அறையிலேயே அமர்ந்திருக்க, தேவாவும் நேரே அறைக்கு சென்றிருந்தாள்.

எப்போதும் அறையில் அடைந்து கொள்பவள் அன்று குளித்து முடித்து சேஷாவின் அறைக்கு வந்து காத்திருக்க, ஒருமணி நேர காத்திருப்புக்குப் பின்னரே வந்து சேர்ந்தான் சேஷா. படப்பிடிப்பில் இருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தான் அவன்.

யாருடைய நல்ல நேரமோ… வந்தவன் மதுவின் வாடையில்லாமல் வீடு வந்து சேர்ந்திருந்தான். தனது அறையில் அமர்ந்திருந்த தேவாவைக் கண்டு அதிர்ச்சியானாலும், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாதவனாக குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.

தேவா தனது பொறுமையை எட்டிப் பிடித்தவளாக அமர்ந்திருக்க, அரைமணி நேரத்திற்குப்பின் குளியலறையில் இருந்து வெளியே வந்தான் அவன். அப்போதும் கட்டிலில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கொள்ளாமல், அந்த அறையில் இருந்த ம்யூசிக் பிளேயரை அவன் இசைக்கவிட,

பல்லைக் கடித்துக்கொண்டு, “நான் பேசணும் சேஷா.” என்றாள் தேவா.

“உன்கிட்ட பேச விருப்பமில்லை. உன் மூஞ்சியை கூட பார்க்கவேண்டாம். வெளியே போ.” என்றான் நிர்தாட்சண்யமாக.

தேவா அதற்குமேல் அலட்டிக்கொள்ளவில்லை. “நான் நல்லவளா இருக்க முயற்சி பண்ணாலும், நீங்க விடமாட்டிங்க. ஓகே… நாளைக்கு நடக்கப்போற அவார்ட் பங்க்ஷனுக்கான இன்விடேஷன். நீ வந்தா உன் முன்னாள் காதலியோட குடும்பம் பிழைக்கும்.”

“வரலைன்னா, ஆத்மநாதனோட அத்தனை தொழிலும் அடுத்த ஒரு மாசத்துல தெருவுக்கு வரும். முக்கியமா உன்னோட இந்நாள் காதலி ரொம்ப வருத்தப்படுவா… உன் காதலியோட குடும்பம் பிச்சை எடுக்கிறத பார்க்க உனக்கு ஆசையா இருக்கா சேஷா?” என, துச்சமான பார்வையுடன் வினவினாள் தேவசேனா.

“ச்சீ… நீயெல்லாம் ஒரு…”

“பொண்ணான்னு கேட்கறியா? அதையும் நீயே டெஸ்ட் பண்ணிக்கலாம். உனக்கு உரிமை இருக்கே.” என்று என்றோ அவன் பேசியதை இன்று நினைவூட்டியவள் அதற்குமேல் அங்கு நிற்காமல் வெளியேற,

“நிச்சயமா நான் வரமாட்டேன் சேனா…” என்று எச்சரித்தான் சேஷா.

“அது என் பிரச்சனையில்ல சேஷா.” என்று இலகுவாக சிரித்தபடி வெளியேறினாள் தேவசேனா.

‘இவ இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது’ என்று கொதிப்புடன் நினைத்தபடியே சேஷா படுக்கையில் விழ, அடுத்தநாள் காலை செய்திகளில் தலைப்புச் செய்தியாகி இருந்தார் ஆத்மநாதன்.

அவர் வீட்டில் வருமானவரி சோதனை நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. சேஷா திகைத்துப் போனவனாக அமர்ந்திருக்க, அதைப்பற்றிய கவலை சிறிதும் இல்லாதவளாக அழகாக நடந்து வந்தாள் தேவசேனா.

அவன் முன்னே வந்து நின்று, “கிளம்புவோமா மாமா.” என்று பாசமாக அவள் அழைக்க,

“நீ எல்லைமீறி நடக்கிற சேனா… இது தப்பு.” என்றான் சேஷா.

“தப்பு சரியெல்லாம் யார் பேசுறதுன்னு இல்லையா மாமா?” என்று சிரித்தாள் தேவா.

அவள் சிரிப்பு அந்த நேரம் சேஷாவை தகிக்கச் செய்ய, “நான் நிச்சயமா வரமாட்டேன்.” என்று உறுதியாக நின்றான் அவன்.

“ஆத்மநாதன் ஆத்மாவாகாம கடவுள் காப்பாத்தட்டும்.” என்று மேல்நோக்கி கும்பிட்டு கிளம்பிவிட்டாள் தேவா.

செல்லும் அவளை நினைத்து தலையிலேயே அடித்துக் கொண்டான் சேஷா. தான் நினைத்ததை சாதிக்க நினைக்கும் அவள் குணத்தை எப்படி எடுப்பது என்று சத்தியமாக புரியவில்லை சேஷாவுக்கு.

அவள் நினைக்கும்படிக்கு அத்தனை சுலபத்தில் ஆத்மநாதன் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் ஆள் இல்லை என்பது சேஷாவுக்கு தெரியும். இதற்கான எதிர்வினை பெரிதாக இருக்கும் என்று அவனது உள்மனது எச்சரித்தது அவனை.

சேஷாவைப்போல் எந்த கவலையும், சிந்தனையும் அற்றவளாக, உற்சாகமாக அன்றைய விழாவிற்கு கிளம்பியிருந்தாள் தேவா. அழகான அடர்ந்த நீல வண்ணத்தில் அமைந்த டிசைனர் சேலை, அதற்கேற்ற அணிமணிகள் என்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

விழாவுக்கான எந்த மெனக்கெடலும் இல்லை அவளிடம். எப்போதும்போல் தனது உழைப்பை மட்டும் முன்னிறுத்தி இருந்தாள் தேவசேனா. அவள் குழுவினரின் வற்புறுத்தலுக்காக முன்வரிசையில் பிரதானமாக அமர்ந்திருந்தாள் அவ்வளவே.

நிகழ்ச்சி தொடங்கி அதன்போக்கில் நடந்து கொண்டிருக்க, திரைத்துறை மட்டுமில்லாமல், இசை, இலக்கியம், சமூக நலன், விளையாட்டு, பெண்கள் முன்னேற்றம், கல்வி, ஊடகம்  என்று பல்வேறு துறைகளை உள்ளடக்கி இருந்தது சேஷன் விருதுகள்.

அந்தந்த துறையின் வித்தகர்கள் விருதை வாங்கிக்கொண்டு, சேஷன் குழுமத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, சாதனைகள் குறித்தும் பேசிக் கொண்டிருக்க, விழா தொடங்கி ஒருமணி நேரம் முடிந்திருந்த நிலையில், திடீரென அரங்கத்தில் ஒரு சலசலப்பு.

திரண்டிருந்த மொத்த கூட்டமும், “சேஷா…” என்று ஒரே குரலாக ஆரவாரிக்க, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த பெண், “எஸ் மக்களே… நம்மோட சேஷா சார் வந்துட்டாங்க…” என்று அறிவிக்க, கைதட்டல் ஓசையும், விசில் சத்தமும் தூள் கிளப்பியது.

தேவசேனா கூட்டத்தை திரும்பி பார்த்து, மெல்ல புருவத்தை ஏற்றி இறக்கி திரும்ப, இதற்குள் அவள் கண்ணில் படும் தொலைவில் வந்து கொண்டிருந்தான் சேஷா. ஆனால், அவனைக் கண்ட நிமிடம் வெகுவாக சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டாள் தேவசேனா.

அங்கு கூடியிருந்த கூட்டத்தையும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தையும் மனதில் இருத்திக்கொண்டவளாக, தனது முகம் மாறாமல் காத்து புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

சேஷனின் வருகை நிச்சயம் அவளுக்கு ஆனந்தத்தை தான் பரிசளித்திருக்க வேண்டும். பின்னே அவனை மிரட்டி அழைத்திருந்தாளே.

ஆனால், அவனும் அத்தனை எளிதில் விட்டு கொடுப்பவன் இல்லையே. தேவா அதை மறந்திருக்க கூடாது.

சேஷா விழாவிற்கு வந்திருந்தான். ஆனால், கூடவே துணையாக ஆத்மீயை அழைத்து வந்திருந்தான் அவன். அவன் முன்னே வர, அவனுக்கு ஓரடி பின்னே அப்சரஸாக ஜொலித்தபடி நடந்து வந்தாள் ஆத்மீகா.

இதில், நடந்து வருகையில் கால் தடுக்கி அவள் விழப் பார்க்க, சட்டென கைகொடுத்து அவளுக்கு உதவினான் சேஷா. இது அத்தனையும் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகிக் கொண்டிருக்க, எதைப்பற்றியும் கவலைகொள்ளவில்லை அவன்.

இயல்பாக நடந்து, தேவாவை சமீபித்தவன் அவள் சட்டென எழுந்து நிற்கவும், மென்மையாக அவளை அணைத்துக்கொள்ள, அவன் கைப்பிடியில் எப்போதும் போல் சலனமில்லாமல் நின்றிருந்தாள் தேவா.

ஒரு நிமிடத்திற்குப்பின் அவளை விடுவித்தவன் அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனுக்கு அடுத்தபடியாக அமர்ந்தாள் ஆத்மீ.

இதில் மொத்தமாக கீழாக உணர்ந்தவள் தேவா தான். என்னவோ, அப்படி அங்கே அமர்ந்திருப்பதில் விருப்பமே இல்லை அவளுக்கு. தனக்கு சரியாக ஆத்மீ அமர்ந்தது ஒருபுறம் என்றால், சேஷாவுக்கு இருபுறமும் இருவரும் அமர்ந்திருப்பதையும் ஒப்ப முடியவில்லை அவளால்.

சட்டென சூழல் மறந்து அவள் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள நினைக்கையில், அவள் கையை அழுத்தமாகப் பிடித்திருந்தான் சேஷா.

தேவா அவன் கண்களை சந்தித்த நிமிடம், “நீ சொன்னபடியே வந்துட்டேன். பாதியில விட்டுட்டு போகணுமா?” என்றான் ஏதுமறியாதவன் போல்.

“கையை விடுடா…” என்று அழுத்தமான குரலில் அவள் ஆணையிட,

“விட முடியாது…” என்றான் சேஷா.

“அப்படி நீ நினைச்சபடி எழுந்து போக முடியாது தேவசேனா. உன்னோட வெற்றிக்கான தம்பட்டமாச்சே இந்த அவார்ட் பங்ஷன். எல்லாரும் தேவசேனாவோட பெருமை பேசுவதை நீ கேட்க வேண்டாமா?” என்று அவள் குணம் தெரிந்தும் அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் சேஷா.

அந்தநிமிடம் தேவசேனாவின் முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை. “நீ என்ன நினைக்கிற சேஷா. நான் இந்த மீடியாக்கெல்லாம் பயப்படற ஆளா?” சிரிப்புடன் கேட்டு, அதே வேகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் அவள்.

“சேனா…” என்று இரண்டுமுறை சேஷா அழைத்தும் அவனை கண்டுகொள்ளாமல், சுற்றியிருந்த யாரைக் கண்டும் தயங்கி நிற்காமல், நிமிர்ந்து நடந்தாள் அவள். அந்த அரங்கை விட்டு அவள் வெளியேறவும், அவளின் பாதுகாவலர்கள் ஓடி வந்து நிற்க, “கார் எடுத்துட்டு வர சொல்லுங்க.” என்றாள் அலட்டாமல்.

கார் வந்து நிற்கவும், அத்தனையும் மறந்து காரில் ஏறி கிளம்பினாள். கார் நேரே அவளது அலுவலகத்தில் சென்று நிற்க, அங்கிருந்த அவளது ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கையில் இருந்த அலைபேசி ஒருமூலையில் கிடக்க, அவளது கைப்பை, செருப்பு என்று அத்தனையும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. அங்கிருந்த படுக்கையில் விட்டத்தைப் பார்த்து படுத்துவிட்டாள்.

அந்த நேரம் மனம் அமைதியை மட்டுமே நாட, மென்மையாக கண்களை மூடிக் கொண்டவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவள் காதை நனைக்க, உறுதியுடன் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.

தனது அலைபேசியை தேடி எடுத்தவள் அதிலிருந்த சில எண்களை தொடர்புகொண்டாள். எதிர்முனையில் இருந்தவர்களிடம் அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்து முடித்து, அலைபேசியை தூர எறிந்தாள்.

வழக்கம் போல், தன் கைப்பையில் இருந்த சிட்டையில் இருந்து இரண்டு மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடினாள் அவள்.

அடுத்து நடக்கவிருக்கும் எதை குறித்தும் கவலை இல்லாதவளாக அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று கொண்டிருக்க, அங்கே இவளது செயலுக்கான எதிர்வினை தொடங்கியிருந்தது.

ஊடகங்கள் அன்றைய விழாவின் நிகழ்வுகளை பேசுபொருளாக மாற்றியிருக்க, அத்தனையும் சேஷனை குற்றவாளியாக நிறுத்தியது மீண்டும் ஒருமுறை.