சேஷன் குரூப்ஸ் நடத்தவிருந்த விருது விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. துறை ரீதியாக வாங்க வேண்டிய அனுமதிகள், அரங்கம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள், அழைக்கவேண்டிய விருந்தினர்களின் பட்டியல், விழாவுக்கான விளம்பரங்கள் என்று நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் தேவா.
அவளும் மலர்விழியும் வீடு சென்றே இரண்டு நாட்கள் ஆகியிருக்க, இரவு பகல் பாராத அயராத உழைப்பு தான். சத்யதேவ் உதவி செய்வதாக வந்து நின்றபோதும் அவனை மறுத்துவிட்டு, தன் வேலைகளை தானே முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா.
இந்த விருது விழா ஊடகத்துறையில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பதைத் தாண்டி, அவளுக்கான தனிப்பட்ட சவால் இது. இதில் நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்கிற முனைப்பு நிறையவே இருந்தது தேவாவிடம்.
எத்தனையோ இடர்கள் வந்தபோதும் வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறாள் அவள். அவள் கணவனே இந்த விழா நடந்துவிடக்கூடாது என்பதில் அத்தனை தீவிரமாக இருக்கையில், வெளியில் இருப்பவர்களை பற்றி சொல்லவும் வேண்டுமா?
ஆனால், அத்தனையும் மீறி வெல்வது தானே வெற்றி. அவளை அடித்து அமரவைக்க நினைத்த அத்தனைப் பேரையும் மீறி அவள் வென்று காட்ட வேண்டும். அவள் துறையில் அவள் ஆகச் சிறந்த ஆளுமை என்று அவள் எதிரிகளுக்கு அவள் பாடம் சொல்லித்தர வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், இன்னும் சில சொல்ல முடியாத காரணங்களும் அவளின் இந்த உறுதிக்கு காரணமாகிப் போக, விடுவதாக இல்லை அவள்.
அன்றும் அலுவலகத்தில் விழாவிற்கான இறுதிகட்ட அழைப்பிதழ் விவரங்களை சரிபார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளது அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவள் சகோதரன் சத்யதேவ். அவன் முகம் வழக்கத்திற்கு மாறாக, சற்று பதட்டத்துடன் காணப்பட, சகோதரனை கேள்வியாகப் பார்த்தாள் தேவசேனா.
சத்யதேவ் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து, தன் அலைபேசியை உயிர்ப்பித்து அவளிடம் நீட்ட, அவனைக் கேள்வியுடன் பார்த்தபடியே அலைபேசியைக் கையில் வாங்கினாள் அவள்.
அதில் ஒரு யூட்யூப் சேனலின் பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, பேட்டி கொடுத்தது ஆத்மீகா. அவளின் துறை, அதை சார்ந்த நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் கேட்காது எடுத்த எடுப்பில், சேஷாவைக் குறித்த கேள்விகள் இடம்பெற்றிருக்க, கொஞ்சமும் அலட்டாமல் பதில் கொடுத்திருந்தாள் ஆத்மீ.
அந்த நெறியாளர், “உங்களுக்கும் சேஷாவுக்குமான உறவைப் பற்றி சொல்லுங்களேன்?” என,
சட்டென பெரிதாகிவிட்ட சிரிப்புடன், “அதைப்பத்தி பேசுறதுக்கான நேரம் இன்னும் வரல. சரியான நேரத்துல சம்பந்தப்பட்டவர்களே உங்களுக்கு அப்டேட் கொடுப்பாங்க…” என்றிருந்தாள் அவள்.
“சேஷா சார் சீக்கிரமே பேசுவார்ன்னு நீங்க சொல்றதா எடுத்துக்கலாமா?” என்றதற்கும், ஒரு பளீரென்ற சிரிப்புதான் பதில்.
எதையும் வெளிப்படையாக கூறாமலே இதுதான் விஷயம் என்பதுபோல் ஒரு ஊகத்திற்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டிருந்தாள் ஆத்மீ. அவளின் இந்த சாமர்த்தியம் தேவாவுக்கு சற்றே வியப்பைக் கொடுத்தாலும், தேவ் அளவுக்கு அதிரவில்லை அவள்.
“இதுக்கு ஏன் இத்தனை பதட்டம்?” என்று சாதாரணமாக அவள் கேட்க,
“பதறாம என்ன செய்ய சொல்ற?” என்று கத்தினான் தேவ். அருகில் நின்றிருந்த மலரும் கோபத்துடன் தேவாவை முறைக்க,
“சிம்பிள் தேவ். சம்பந்தப்பட்டவங்க சொல்லட்டும். சொன்னபிறகு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்… அவ்ளோதானே. உனக்கு இந்த பீல்ட் பத்தி தெரியாததா? இதுக்கெல்லாம் இத்தனை பெரிய முக்கியத்துவம் கொடுக்கணுமா?” என்று நிதானமாக அண்ணனுக்கு அறிவுரை கூறினாள் தங்கை.
“என் பயத்துக்கு இது மட்டுமே காரணம் இல்ல தேவா. சேஷாவும்… நீயும் அவனை விட்டு வரமுடியாதுன்னு நிற்கும்போது என்னை என்ன செய்ய சொல்ற? நீ வேண்டாம்ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா, சேஷா யாரோ… நான் இவங்க யாரைப்பத்தியும் யோசிக்கக்கூட மாட்டேன்.” என்று அப்போதும் தன்னிலையை தேவ் விளக்க, மௌனமான ஒரு புன்னகை தான் பதிலாக கிடைத்தது அவனுக்கு.
“எது கேட்டாலும் இப்படி சிரிச்சா, நான் என்னன்னு நினைக்கட்டும் தேவா? என்கிட்டே கூட உன்னோட பிரச்சனைகளை சொல்ல மாட்டியா… நான் யார் தேவா உனக்கு?” என்று மீண்டும் அவன் உடைய,
“இப்படி எமோஷனலா கனெக்ட் ஆகாத தேவ். நீ யாருன்னு உனக்கு தெரியாதா? நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா? இது நான் எனக்காக எடுத்த முடிவு. இதோட நல்லது, கெட்டது அத்தனைக்கும் நான்தான் பொறுப்பு. இந்த விஷயத்துல எதுவா இருந்தாலும், நானே தான் சமாளிக்கணும். என்னால முடியாத நிலைன்னு வந்தா, அப்போ உங்கிட்ட வருவேன்… புரியுதா?”
“சும்மா இப்படி நீயும் வருத்தப்பட்டு, என்னையும் உடைக்காத… இப்போ கிளம்பு.” என்று அவனை கிட்டத்தட்ட விரட்டித்தான் அனுப்பினாள் தேவா.
தேவ் சுருங்கிய முகத்துடன் வெளியேறவும், “நம்ம பங்க்ஷனுக்கான ஆட்ஸ் இன்னைக்கே டெலிகாஸ்ட் ஆகணும் மலர். நம்ம லிஸ்ட்ல இருக்க செலிபிரிட்டிஸ் அத்தனைப் பேரும் பங்க்ஷன் அன்னைக்கு ஆடிட்டோரியம்ல இருக்கணும். யாரும் மிஸ் ஆகக்கூடாது. இன்விடேஷன்ஸ் அனுப்பிடு. அவங்களுக்கான வசதிகள் எதுவும் எங்கேயும் குறையக்கூடாது. எல்லாமே உன் பொறுப்புதான்.” என்று தேவா அடுக்கிக் கொண்டிருக்க,
“லிஸ்ட் எல்லாம் ஓகே தேவா… சேஷா எப்படி? கண்டிப்பா வரமாட்டார்.” என்று மலர் உறுதியாக கூறிட,
“நிச்சயமா வருவார். அதை நான் பார்த்துக்கறேன். நீ மற்ற வேலைகளை கவனி.” என்று முடிந்துவிட்டாள் தேவா.
அந்த ஊடகச்செய்தி குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், தன் மீத வேலைகளை முடித்து இரவு பதினோரு மணிக்குமேல் அவள் வீடு வர, அவள் பின்னோடு வந்து சேர்ந்தான் சேஷா.
அவனது கார் வாசலில் நிற்கவும், தேவா வீட்டிற்குள் செல்லாமல் முதல்படியில் நிற்க, வீட்டிற்குள்ளிருந்து அத்தனை வேகமாக வெளியே வந்தார் கலையரசி.
முழுதாக நிற்கக்கூட முடியாமல் தடுமாறியவனாக சேஷா காரிலிருந்து இறங்க, மகன் தடுமாறும்போதே எட்டி அவனைப் பிடித்துக் கொண்டார் கலையரசி. கலையரசியின் கைப்பிடியில் இருந்தவன் இன்னும் அதிகமாக தடுமாற, கலையரசியும் சேர்ந்து கீழே விழ வேண்டிய நிலைதான்.
அதுவரை அசையாமல் நின்றிருந்த தேவா, தனது அத்தையை தாங்க முற்பட, “வேண்டாம் தேவா. என் மகனை நான் கவனிச்சுக்கறேன்.” என்றுவிட்டார் கலையரசி.
தேவா பெரிதாக அதிர்வெல்லாம் காண்பிக்கவில்லை. காலையில் அவர் பேசிய வார்த்தைகளுக்கு முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தன்னை சுதாரித்துக் கொண்டு, தனது அறைக்குச் சென்று விட்டாள் அவள்.
எப்போதும்போல், சில நிமிடங்கள் பாட்டியுடனான அவள் வாதங்கள், அவள் பாட்டியின் தாலாட்டு, பால்கனி ஊஞ்சல் என்று அந்த இரவு கழிந்துபோக, அடுத்தநாள் காலையிலும் நேரமாகவே கிளம்பி கீழே இறங்கினாள் அவள்.
அந்த வீட்டில் அமர்ந்து உணவுண்ணும் எண்ணம் அப்போதைக்கு இல்லாததால், யாரையும் கவனிக்காமல் தன் போக்கில் தனது காரை நோக்கி அவள் நடந்தாள் தேவா. தேவின் பலத்த எச்சரிக்கையால், அவள் வருவதற்கு முன்பே ஓட்டுநர் காரில் ஏறி அமர்ந்து கொண்டிருக்க, தேவா கார்கதவில் கையை வைக்க முற்பட்ட நிமிடம், அவளுக்கு எதிரில் வந்து நின்றான் சேஷா.
தேவசேனா அவன் முகம் பாராமல் காரின் கதவை திறந்துவிட, திறந்த கதவை மூட விடாமல் பிடித்தபடி நின்றுகொண்டான் அவன். காரின் ஓட்டுனரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, வேகமாக காரில் இருந்து இறங்கி, சற்றே தள்ளிச் சென்று நின்றார் அவர்.
அவன் கண்களை தளராமல் சந்தித்து, “வாழ்த்துக்கள் சேஷா… உனக்கும், ஆத்மீக்கும் கல்யாணமாமே.” என்று சிரித்தாள் தேவசேனா.
“ஏன் செஞ்சா என்ன தப்பு?”
“தப்புன்னு எவன் சொன்னது? நாய்க்கூடத்தான் நாலு காதல் செய்யுது.” என பட்டென அவள் கூறிவிட,
“ஏய்…” என்று பல்லைக் கடித்தவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தனது தொடையில் கையை மூடிக் குத்திக் கொண்டான்.
தேவா அவன் கோபத்தை இம்மியளவும் பொருட்படுத்தாமல், “தப்பா என்ன?” என்று மீண்டும் கண்சிமிட்ட,
“நிச்சயமா இதுக்கெல்லாம் நீ பதில் சொல்வ தேவா…” என்று அனலுடன் தகித்தது சேஷாவின் வார்த்தைகள்.
“எக்சாட்லி சேஷா… கண்டிப்பா பதில் சொல்வேன். நான் பதில் சொல்லும்போது, பதிலுக்கு பேச முடியாத நிலையில நீ நிற்ப. நான் நிறுத்துவேன்.”
“வெரிகுட்… என்ன சபதமா?” என்று ஏளனமாக அவன் சிரிக்கையில், கார்கதவில் இருந்து கையை எடுத்துக்கொண்டு, கைகளை கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்று கொண்டாள் தேவா.
“நான் சபதம் எடுக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்ல சேஷா. குடிகாரன் நீ. ஒரு பாட்டில் உள்ளே போனா, இப்போ என்கிட்டே பேசின எதுவும் உனக்கு நியாபகம் இருக்காது. தேவசேனா பிரகதீஸ்வரி வாரிசு. எனக்கு எதிரியா இருக்கக்கூட சில தகுதிகள் வேணும். நிச்சயமா அதெல்லாம் உன்கிட்ட கிடையாது.” என்று அவனை குத்தி கிழித்துக் கொண்டிருந்தாள் தேவா.
ஆனால், அவள் பேசியதை பொருட்படுத்தாமல், “அப்படியா தேவா மேடம். டிவி சேனல் நடத்துறதால, நிறைய தமிழ்ப்படம் பார்க்கிறிங்களா. வசனமெல்லாம் பலமா இருக்கு.” என்று சேஷா சிரிக்க, சலனமே இல்லை அவளிடம்.
“அதுக்காக என்ன செய்யலாம்? உனக்கு ஆத்மீ கிடைச்ச மாதிரி, நானும் யாரையாவது கரெக்ட் பண்ணிக்கணுமா?” என்றவளை என்ன செய்வது என்று புரியாமல் சேஷா நிற்க,
“உன் கேள்வி எப்படியோ, பதிலும் அப்படித்தான் கிடைக்கும்.” என்றவள், “முத்து…” என்று குரல் கொடுக்க, காரின் ஓட்டுநர் ஓடி வரவும், அமைதியாக காரினுள் அமர்ந்துவிட்டாள். சேஷா அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல், காரின் கதவை பட்டென அடித்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
அடுத்தடுத்த நாட்கள் அதற்கே உரிய பரபரப்புடன் பறந்து செல்ல, விருது விழாவிற்கு இன்னும் நான்குநாட்கள் மட்டுமே இருந்த நிலையில், தனது தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தேவா.
அவர்கள் தொலைக்காட்சி நடத்தவிருக்கும் விருதுவிழா, அதன் சிறப்பம்சங்கள், விழாவிற்கு வரவிருக்கும் பிரபலங்கள் என்று அத்தனையும் விரிவாக எடுத்துக் கூறி, விழாவுக்கு முழு ஒத்துழைப்பை நல்கும்படி போலிப்பணிவுடன் அனைவருக்கும் அழைப்பு விடுத்து முடிக்க, எதிரில் அமர்ந்திருந்தவர்களின் திருப்தி அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.
அடுத்தபடியாக, நிருபர்களின் கேள்விகள் தொடங்க, அதற்கும் ஓரளவு பொறுமையுடன் தான் பதில் கொடுத்து கொண்டிருந்தாள் தேவசேனா.
கேள்வி பதில்கள் அவளது சொந்த வாழ்வு குறித்தும் நகர, “மேம்… AN குரூப்ஸ் ஆத்மீகா, சமீபத்துல ஒரு பேட்டில சீக்கிரமே அவங்களோட திருமணத்தை அறிவிக்கிறதா சொல்லியிருக்காங்களே… அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
“மேம் அவங்க பெயர் சேஷா சார்கூட அடிபடுதே.. அதைப்பத்தி…”
“யாரோ எதையோ சொல்லிட்டுப் போனா, அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணும்னு என்ன இருக்கு? அப்படியே பதில் சொல்றதா இருந்தாலும், என்னோட கணவர் மிஸ்டர். ஆதிசேஷன் தான் சொல்லணும். என் கணவர்கிட்ட நான் சினிமா, மீடியால வர்ற காசிப்ஸ் பத்தியெல்லாம் விவாதிக்கிறது இல்ல.” என்று புன்சிரிப்புடன் முடித்துவிட்டாள் அவள்.
மலர் சரியான நேரத்தில், “மேம்.. டைம் முடிஞ்சுது.” என்று அவள் காதருகில் கிசுகிசுக்க, வேகமாக எழுந்துவிட்டாள் தேவா. எப்போதும்போல் பளிச்சென்ற புன்னகையுடன், அங்கிருந்தவர்களை நோக்கி கைகூப்பியவள் தன் வழியில் நடந்துவிட்டாள்.
தேவாவைப் பொறுத்தவரை அந்த நிகழ்வு அதே இடத்தில் முடிந்துபோனது. கேட்ட கேள்விக்கு அவள் பாணியில் பதில் கொடுத்து சென்றிருந்தாள் அவள். ஆனால், அவள் பேசிய தோரணையும், அவளது ஆளுமையும் அவள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்று அவர்களை நம்ப வைத்திருக்க, அதன் பலனாக ஆத்மீயை வறுத்தெடுக்க தொடங்கியிருந்தனர் வலைத்தள போராளிகள்.
சேஷாவின் ரசிகர்கூட்டமும், தேவசேனாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்க, ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆத்மீ, வீண் வதந்தியை கிளப்பி விடுவதாக செய்திகள் பரவ தொடங்கியிருந்தது.
விஷயம் கேள்வியுற்ற சேஷாவுக்கும் சற்று அதிர்ச்சிதான். தேவா இப்படி ஒரு பதில் கொடுப்பாள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அவனை குத்தி கிழிப்பவள் மீடியா முன்பு, “என் கணவன்…” என்றிருக்க, நிச்சயம் பொய்தான் என்று புரிந்தாலும், ‘அவளா சொன்னாள்.’ என்று ஆச்சர்யமாகத் தான் வாய் பிளக்க முடிந்தது அவனால்.
விஷயம் அவன் காதுக்கு வருவதற்கு முன்பே, ஆத்மீக்கு தெரிந்து இருக்க, அவள் வேறு விடாமல் அழைத்துக் கொண்டிருந்தாள். அவளைச் சொல்லியும் குற்றமில்லை.
அவள் தந்தை விஷயம் கேள்விப்பட்ட நொடியில், அவளை மிகவும் மோசமாக பேசிவிட்டிருக்க, இப்போது சேஷாவும் அழைப்பை ஏற்காமல் போகவும், அவளது மொத்த கோபத்திற்கும் தேவசேனா இலக்காகிப் போனாள்.
அவள் விடாமல் சேஷாவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க, அவள் அழைப்பை ஏற்க வேண்டியவனோ, அவளைப் பற்றிய நினைவு துளிகூட இல்லாமல், தன் அம்முவின் நினைவில் கசிந்து உருகிக் கொண்டிருந்தான்.
தேவசேனாவின் “என் கணவர்…” என்ற வார்த்தைகள் அவனை உயிருடன் கொன்று கொண்டிருந்தது. அவளின் கோபத்தையும், அலட்சியத்தையும் பொறுத்துக் கொண்டவனால் இந்த உரிமையுணர்வை ஏற்க முடியவில்லை.
மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை அவனுடையது. தொண்டையில் முள் குத்தியவனாக துடித்துக் கொண்டிருந்தான் சேஷா.
அவன் கண்முன் நிழலோவியமாக அவன் அத்தைமகள் காட்சியாக, அவன் காதோரத்தில், “சேஷன்…” என்று உருகிக் கரைந்தது அவன் அம்முவின் குரல்.
யாருக்கும் நியாயம் செய்ய முடியாமல் தவித்துதான் நின்றான் ஆதிசேஷன். இதில் மூன்றாவதாக சமீபகாலமாக அவனே ஏற்றுக்கொண்ட தலைவலியாக ஆத்மீ வேறு. ஆனால், அவள் விஷயத்தில் நிச்சயம் அவனுக்கு வேறு உணர்வுகள் கிடையாது.
அவன் ஆடும் ஆட்டத்திற்கு அவளை உபயோகித்துக் கொள்ள நினைத்தவன், இப்படி தானே கைதியாகி நிற்கும் நிலையை எதிர்பார்க்கவே இல்லை.
தேவசேனாவின் வாழ்வை குறித்த குற்றவுணர்வால் தான் முழுநேரமும் தன்னை அவன் மூழ்கடித்துக் கொள்வதே. இதில் அவனுக்கிருந்த ஒரே ஆறுதல் அவன் பாட்டி நினைத்தது போல், கணவனே கண்கண்ட தெய்வம் என்று தேவசேனா உருகாதது ஒன்றுதான்.
ஆனால், அதற்காக அவன் செய்வதெல்லாம் சரியென்று ஆகிவிடாது என்பதும் புரிந்து இருந்ததால் தான், தண்ணீரில் ஒரு கால், தரையில் ஒரு கால் என்று அவன் தவித்துக் கொண்டிருப்பது. அவன் நினைத்தால் ஒருநொடியில் இது அத்தனையும் தூக்கியெறிந்து விட்டு, அவன் வாழ்வை அவனால் சீராக்கிக் கொள்ள முடியும்.
ஆனால், அவனால் அவன் அம்முவை அவளுக்கான நியாயத்தை அப்படியே விட முடியாது… அவளுக்காகவே அவனது இத்தனை போராட்டமும்.
அத்தனையும் யோசித்தவன் ஒன்றை மறந்துவிட்டான், தேவசேனா… அம்முவுக்கு நியாயம் செய்ய நினைத்து, அவன் தேவாவுக்கு அநியாயம் செய்து கொண்டிருக்க, அதை அவன் உணரும் வேளையில் அவன் சேனா என்னவாகி இருப்பாளோ…