தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, “கிளம்பலாம் தேவா” என, அவனை ஒரு பார்வை பார்த்தாள் தேவா.
அவள் பார்வையில், “தூங்கிட்டேன் சாரி” என தேனமுதன் கூறிட,
“உன்னையெல்லாம் கூட வச்சுட்டு எப்படி என் அப்பா பிசினஸ் பண்றாரு.”என்றாள் தேவா.
இப்போது தேனமுதன் முறைக்க, “பங்க்சுவாலிட்டின்னா என்னனாவது தெரியுமா உனக்கு?” என்று மீண்டும் அவள் காய,
“ம்யூஸியம் போக பங்க்சுவாலிட்டி எதுக்கு?”
“எதுவா இருந்தாலும் பங்க்சுவாலிட்டி பர்ஸ்ட் குவாலிட்டி. எனக்கு ஒரு நேரம் சொல்லிட்டு, நீ ஒரு நேரத்துக்கு வந்து நிற்க நான் ஏன் தயாராகி காத்திருக்கணும்?” என்றவள், “நீ கிளம்பு என்னால இப்போ வர முடியாது. வேற வேலையெல்லாம் இருக்கு” என்றுவிட்டாள்.
“தேவா…” என்று தேனமுதன் தொடங்க, அவன் பேச்சை காற்றில் விட்டு எழுந்து தனது அறையை நோக்கி நடந்தாள் தேவசேனா. தேனமுதன் விடாமல் அவளைத் தொடர்ந்து வர, அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு அமைதியாக அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“தேவா இனி இப்படி நடக்காது. இன்னிக்கு என்னால நம்ம பிளான் கெட வேண்டாம். கிளம்பி வா ப்ளீஸ்” என்று தேனமுதன் அழைக்க, பார்வையால் மறுப்பு தெரிவித்தாள் தேவசேனா.
“ப்ளீஸ் தேவா. எனக்கு கில்டியா இருக்கும்” என்று அவன் லேசாக கெஞ்சவும், அமைதியாக எழுந்து அவனுடன் நடந்தாள் தேவா.
தேனமுதன் அவளை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமைந்திருந்த நேவி ம்யூஸியம் அழைத்து செல்ல, வகைவகையான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், நவீன ரக போர்க்கருவிகள் என்று அமெரிக்காவின் வல்லமையை காட்சிப்படுத்துவதாக அமைந்திருந்தது அந்த திறந்தவெளி ம்யூஸியம்.
காலை பத்துமணி அளவில் அந்த இடத்தை அடைந்தவர்கள் மாலை ஐந்து மணிவரை அங்கேயே நேரம் செலவிட, தேவா சற்று ஆர்வத்துடன் அங்கிருந்தவற்றை வேடிக்கைப் பார்த்திருந்தாளே தவிர, தேனமுதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அவள் பின்னோடு சுற்றிக் கொண்டிருந்தவனும் அவள் கவனத்தை ஈர்க்க பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், இயல்பாக அவளை அவள் போக்கில் விட்டு அவள் பின்னே அலைந்து கொண்டிருந்தான். மதியம் சரியான நேரத்திற்கு அங்கேயே இருந்த கடையில் உணவு வாங்கி கையில் கொடுத்ததோடு அவன் ஒதுங்கி கொள்ள, தேவாவுக்கும் மனம் சற்று இதமாக இருந்தது.
அவள் அமெரிக்கா வந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்க, நாட்கள் நகர்வது அத்தனை கடினமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை அவள். காலை தொடங்கி மாலை முடிவது ஒரு யுகத்தை கடப்பது போல் இருந்தது அவளுக்கு.
அதுவும் இந்தியாவில் இடைவெளி இல்லாமல் வேலை வேலை என்று ஓடிவிட்டு இங்கே இப்படி வீட்டிலேயே அடைந்து கிடப்பது எப்படியோ இருக்க, அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவளின் தந்தையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி தான்.
என்னவோ, பத்து வயது குறைந்தவராக காட்சியளித்தார் பிரபாகரன். வீட்டிற்குள் நுழையும்போது ஹாலில் அமர்ந்திருக்கும் மகளைக் கண்டுவிட்டால் பட்டென ஒரு பிரகாசம் முகமெங்கும் பரவிவிடும் அவருக்கு. அவரை அப்படி காணும் நேரமெல்லாம் தந்தையை தனித்து விட்டு விட்டோமா என்று மகள் கவலை கொண்ட அதே நேரம் பிரபாகரனும் மகளின் சோர்வை உணர்ந்து தான் இருந்தார்.
அவள் மனநிலையை மாற்றவென்று தான் அவர் தேனமுதனிடம் மகளை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. அவனும் அவனால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறான். அத்தனைப் பேரும் தனக்காக பார்ப்பதும் புரிகிறது தான் தேவாவுக்கு.
ஆனால், என்னவோ ஒரு வெற்றிடம். அவள் மனம் தொலைந்து போன எதையோ தேடுகிறதோ என்று பல நேரம் அவளுக்கே தோன்றினாலும், சேஷனின் முகம் எங்கும் இல்லை அவள் எண்ணங்களில். பெரிதாக அவனைக் குறித்த சிந்தனைகளும் இல்லை.
“வேண்டாம்” என்று விலகிவிட்ட பின் அவனைப்பற்றி சிந்திப்பது வீண் வேலை என்று அவ்வபோது மனதை அதட்டி வைத்துக் கொண்டு, அமைதியாக அவள் வலம் வர, அந்த அருங்காட்சியக பார்வையாளர் நேரம் முடியும் தருவாயில் தான் அவளை அழைத்தான் தேனமுதன்.
ஏதோ சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவள் அவன் குரலில் தெளிந்து திரும்ப, “கிளம்புவோம்.” என்றான் தேனமுதன்.
“ம்ம்ம்” என்று தலையசைத்து அவள் நடக்க, அவளை வித்யாசமாக பார்த்தபடி அவள் பின்னே நடந்தான் தேனமுதன். காரில் ஏறிய பின்னும் அவளது அந்த மௌனம் தொடர, “என்னாச்சு தேவா. இங்கே பிடிக்கலையா?” என்றான் மெல்ல.
அவளிடம் பதிலில்லாமல் போக, “நான் அங்கிள்கிட்ட பேசட்டுமா? இந்தியா கிளம்புறியா?”
“உன் அங்கிளால என்னை பிடிச்சு வைக்க முடியாது” என்று பிசிறில்லாமல் வந்தது பதில்.
“தென் வாட்…”
“எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடணுமா… நீ எனக்கு அவ்ளோ க்ளோஸ் கிடையாதே” என்று வெகு இலகுவாக தேவா பேசிவிட, அந்த வார்த்தைகள் முள்ளாக குத்தியது தேனமுதனுக்கு.
சிறு குரலில், “சாரி” என்று அவன் சொல்லிட, தேவாவுக்கே தான் பேசியது சற்று அதிகப்படியோ என்றாகிவிட்டது.
“இங்கே பார் அமுதா. நீ அப்பாவோட ரொம்ப க்ளோஸ்… தேவோட பிரெண்ட் எல்லாமே ஓகே தான். ஆனா, எனக்கு உன்னை அவ்வளவா தெரியாது. நாம பார்த்து பேசியே ரெண்டு வாரம் தான் ஆகுது.”
“இந்த ரெண்டு வாரத்துல என்னோட சொந்த விஷயங்களை உங்கிட்ட பேசற அளவுக்கு நான் முன்னேறல. சோ, அப்பா என்ன சொல்லி இருந்தாலும் சரி. அதை வச்சு என்கிட்டே உரிமை எடுக்க வேண்டாம்.” என்று எப்போதும் போல் தெளிவாக பேசிவிட்டாள் பெண்.
ஆனால், ஆண்டாண்டு காலமாக அவளுக்கான காதலை சேமித்து வைத்திருந்தவன் ஆகிற்றே. தேனமுதனால் அவள் பேச்சை அப்படி இலகுவாக எடுக்க முடியவில்லை. அதற்காக அவளை மறுத்தும் எதுவும் பேசவில்லை. தனக்குள் புலம்பியவனாக அமைதியாகி விட்டான் அவன்.
அதன்பிறகான பயண நேரம் மொத்தமும் ஒருவித மௌனத்தில் கழிய, தேவா அலட்டிக் கொள்ளாமல் வெளியே தன் வேடிக்கையைத் தொடங்கியிருந்தாள்.
இருபது நிமிடங்களில் அவர்களது கார் வீட்டை அடைந்து விட, வாசலோடு விடைபெற்றுக் கொண்டான் தேனமுதன். தேவா ஒரு நொடி தயங்கினாலும், அலட்டிக்கொள்ளாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அவள் தந்தை ஹாலில் அமர்ந்திருக்க, “தேனு எங்கே தேவா” என்றார் மகளிடம்.
“ஏதோ முக்கியமான வேலையாம். அப்படியே கிளம்பிட்டான்” என்று முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்துவிட்டாள் தேவசேனா.
என்னவோ, தேனமுதனின் பார்வையில் ஏதோ ஒன்று அதிகப்படியாக உணர்கிறாள் அவள். என்னவென்று துல்லியமாக கணிக்க முடியவில்லையென்றாலும், எதுவுமே வேண்டாம் என்ற நிலையில் இருப்பதால் அவனை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துக் கொண்டாள்.
நாள் முழுவதும் அலைந்து திரிந்த களைப்பு தீர வெந்நீரில் குளித்து முடித்து வந்தவள் ஹாலை எட்டிப் பார்க்க, பிரபாகரன் இன்னும் அங்குதான் இருந்தார். தேவா தானும் வந்து தந்தையின் அருகில் அமர, “என்னடா என்ன பண்ணப் போற. ஏதாவது முடிவெடுத்தியா” என்றார் அவர்.
ஆம். மகள் அமெரிக்கா வந்த மறுநாளே அவளை தன்னுடன் அலுவலகம் வருமாறு அழைத்துப் பார்த்தார் பிரபாகரன். ஆனால், தேவா மறுத்துவிட்டாள். பிரபாகரன் காரணம் கேட்டபோதும் சரியான பதில் ஏதும் கொடுக்கவில்லை அவள்.
“என்னை கொஞ்சநாள் பிரீயா விடுங்கப்பா. நான் யோசிச்சு சொல்றேன்” என்றிருந்தாள் அப்போதைக்கு.
மகள் தொழில் செய்து பழகியவள் என்பதால், தந்தையும் அவளை பெரிதாக வற்புறுத்தவில்லை. எத்தனை நாட்களுக்கு தேவாவால் இப்படி பொழுதைக் கழிக்க முடியும். விரைவில் தன்னுடன் வந்துவிடுவாள் என்று நம்பினார் அவர்.
ஆனால், தேவா இப்போதுவரை ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பது அவளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே. அவளுக்கு தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவதில் விருப்பமில்லை. அவருக்கு உதவியாக இருக்கலாமே தவிர, உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் அவள்.
அவளைப் பொறுத்தவரை தந்தையின் சொத்துகளிலோ, அவரது தொழிலிலோ தனக்கு எந்த உரிமையும் வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தாள். அவளது தாய்வழி சொத்துகள் அத்தனையும் அவள் பாட்டியால் அவள் பெயருக்கு மாற்றி எழுதப்பட்டிருக்க, அப்போதே பிரபாகரனின் சொத்துக்களில் உரிமை கோர மாட்டேன் என்று முடிவெடுத்திருந்தாள் அவள்.
அவள் அண்ணனோ, தந்தையோ அவளை பிரித்துப் பார்க்க போவதில்லை. ஏன் அவர்களது மொத்த உழைப்பையும் கூட அவளுக்கே கொடுத்துவிட துணிபவர்கள் தான் இருவரும். ஆனால், தேவாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சத்யதேவ் எந்த வகையிலும் யாருக்கும் குறைந்தவனாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் அவள். இப்போதும் அதையே யோசித்து, “நான் ஆபிஸ் வந்தாலும், ஜஸ்ட் ஒர்க் பண்ணுவேன் அவ்ளோதான் டாடி. நீங்க எனக்கு பே பண்ணாலும் ஓகே தான். பட் எம்டியா இருக்கமாட்டேன்.” என்றாள் முடிவாக.
“ஏன்டா…” என்று தந்தை அதிர்ச்சியாக,
“எனக்கு பிரஷர் எடுக்க முடியாது டாடி. இப்போ உங்க பிசினஸ் எப்படி இருக்கோ, அப்படியே போகட்டும். எனக்கு ஏதாவது ஒரு போஸ்ட் கொடுங்க. நான் ஒர்க் பண்றேன்.” என்றாள் முடிவாக.
அதற்குமேல் கேள்வி கேட்டால் மொத்தமாக மறுத்துவிடுவாள் என்று மகளை பற்றி அறிந்தவராக, “சரிம்மா. உன் விருப்பப்படி செய்” என்றபடி எழுந்து கொண்டார் பிரபாகரன்.
“கோபமா டாடி”
“இல்லடா… என் பொண்ணு ஒரு முடிவெடுத்தா நிச்சயம் அதுல ஏதாவது விஷயம் இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ நினைக்கிறத செய். அப்பாவுக்காக கம்பெனிக்கு வர வேண்டாம். உனக்கு விருப்பமில்லன்னா, நான் வேற ஏதாச்சும் ஏற்பாடு பண்றேன்” என்றார் பிரபாகரன்.
அவர் புரிதலில், “தேங்க் யூ டாடி” என்றவள், “நான் உங்க ஆபிஸ்க்கே வரேன்” என்றாள் முடிவாக.
சொன்னதோடு நிற்காமல், அடுத்தநாள் காலையில் அவருடனே தயாராகி, அலுவலகம் வந்து நின்றாள் தேவா. தேனமுதன் அவன் அறையில் இருக்க, பிரபாகரன் அழைக்கவும் அவர் அறைக்கு வந்தான். வந்தவன் தேவாவை அங்கே எதிர்பாராமல் அதிர்ந்து நிற்க, அவன் அதிர்ச்சியை கண்டும் காணாமல் நின்றாள் தேவசேனா.
தன்னை மறைத்து, “சொல்லுங்க அங்கிள்” என்று அவன் பிரபாகரனிடம் கேட்க, அப்போதும் பெரிதாக எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை தேவா.
“தேவா நம்ம ஆபிஸ்ல ஜாயின் பண்றா தேனு. அவளுக்கு ஆர்கிடெக்ச்சர்ல இன்ட்ரெஸ்ட் அதிகம். அந்த டிபார்ட்மெண்ட்ல அவ ஒர்க் பண்ணட்டும். நீ நம்ம ஸ்டாப்ஸ்க்கு தேவாவை இன்ட்ரோ பண்ணிடு” என்றார் பிரபாகரன்.
“ஓகே அங்கிள்.” என்றவன் உள்ளூர மகிழ்ந்தவனாக தேவாவை அழைத்துச்செல்ல, அவர்களைப் பார்த்து பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டிருந்தார் பிரபாகரன். அவர் நினைத்தபடி அனைத்தும் முடிந்திருந்தால், தன் மகள் இந்தளவுக்கு வருந்தியிருக்க மாட்டாளே என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.
இங்கு தேவாவை அழைத்துச் சென்றவனோ, மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். பின்னே, டிசைனிங் அவனது இடமாகிற்றே. அந்த பிரிவின் தலைமை பொறுப்பில் அவன் இருக்க, இப்போது அவனுக்கு கீழ் தேவா பணியாற்றவிருப்பதால் வந்த உவகை அது.
“நெருக்கம் கிடையாது என்றாளே, இனி நெருங்குகிறேன்” என்று தனக்குள் பேசியபடி அவள் பின்னால் நடந்து கொண்டிருந்தான் அவன்.
ஒருவழியாக, அன்றே தேவாவின் அறிமுகப்படலம் முடிவடைய, அதன்பிறகான நேரங்களில் அழகாக வேலையில் மூழ்கிவிட்டாள் அவள். ஒரு மழலையர் பள்ளிக்கான வடிவமைப்பை அவளிடம் கொடுத்திருக்க, அதற்கான வேலைகளை தொடங்கி விட்டிருந்தாள் தேவசேனா.
தேனமுதன் அவளைப்பற்றி அறிந்தவன் என்றாலும், அவளது திறமையை அவன் முழுதாக அறிந்துகொண்டது அன்றுதான். முன் மதியத்தில் வேலையைத் தொடங்கி இருந்தவள் அன்று வேலை முடியும் நேரம் கிட்டத்தட்ட அந்த பள்ளிக்கான முதற்கட்ட வடிவமைப்பு வேலைகளை முடித்து வைத்திருந்தாள்.
வேகம் இருந்த அதே அளவிற்கு வேலையும் சீராக இருந்ததை மனதில் மெச்சிக் கொண்டு அவன் அலுவலகத்தை விட்டு வெளியேற, அங்கே வாசலில் அவள் தந்தையுடன் காரில் ஏறிக் கொண்டிருந்தாள் தேவசேனா.
தேனமுதன் சட்டென யோசித்து, “அங்கிள்” என்று சத்தமாக அழைத்தான் பிரபாகரனை. அவர் திரும்பி பார்க்கவும், அவரை நெருங்கி, “நானும் வர்றேன். அந்த டெஸ்ட்டா ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.” என்றபடி காரின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து கொள்ள, தேவா ஏற்கனவே முன்பக்கம் ஏறி அமர்ந்திருந்தாள்.
அவனைப் பார்த்து பெயருக்கு புன்னகைத்தவள் வெளியே திரும்பிவிட, பிரபாகரன் அவரது லேப்டாப்பில் மூழ்கிப் போயிருந்தார். தேனமுதன் அவ்வபோது தேவாவைப் பார்ப்பதும் பின் சாலையைப் பார்ப்பதுமாக இருக்க, தேவா அவன் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்து வைக்க, அவள் பார்வையில் அவன் தலை தானாக சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டது.
அவனிடம் கோபப்பட முடியாதபடி அவனது சிரித்த முகம் தடுக்க, “நல்லா வாங்கப் போறான் இவன்” என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா.
தேனமுதன் அவள் பார்க்கிறாளா என்று மீண்டும் அவள் பக்கம் திரும்ப, இந்த முறை வலிக்கும்படி அவன் கையில் கிள்ளி வைத்தாள் தேவா.
“அம்மா…” என்று தேனமுதன் கத்திவிட, “என்னடா” என்று பதறி நிமிர்ந்தார் பிரபாகரன்.
“நத்திங் அங்கிள். கொசு ஒன்னு கடிச்சிடுச்சு” என்று அவன் சிரிக்க,
“நான் உனக்கு கொசுவா” என்று தந்தை பார்க்கும்படியே இன்னும் இரண்டு அடி வைத்தாள் தேவசேனா.
“தேவா பார்த்துடா” என்று பிரபாகரன் மகளை அடக்க நினைக்க,
“அடிவாங்குறது நானு. அவளை பார்த்துடா சொல்றிங்க நீங்க. அடிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க அங்கிள்” என்று தேனமுதன் அவரை துணைக்கு அழைக்க,
“டாடி. இவன்கிட்ட சொல்லி வைங்க. என்னை இரிடேட் பண்ணிட்டே இருக்கான்.” என்று தேவா புகார் கூற, தேனமுதனை ஆச்சரியமாகப் பார்த்தார் பிரபாகரன். அவர் அறிந்த தேனமுதன் இப்படி யாரிடமும் வம்பு வளர்ப்பவன் இல்லையே.