மயங்கி சரிந்த மாலினியை தூக்கிக் கொண்டிருந்த சீனியர் மாணவன் கிருஷ்ணன் தோள் மேல் ஒரு கை விழுந்தது. கிருஷ்ணன் திரும்பி பார்த்தான், அங்கு நின்றுக் கொண்டிருந்தவனை இவனுக்கு யாரென்று தெரியவில்லை.
கிருஷ்ணன், “என்ன?”
அவன், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
அவனுக்கும் இவனை யாரென்று தெரியவில்லை. மாலினியின் முகமும் அவனுக்கு தெரியவில்லை. அவன் சற்று தொலைவில்(மாலினியின் பின் புறம்) நடந்து வந்து கொண்டிருந்த போது அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன் திடீரென்று ஒரு கார் வழியை மறித்து நின்றது, அதில் இருந்து இறங்கியவன் அவள் அருகே வந்து, கையை அவள் முகத்தருகே கொண்டு வந்தான்.. அவள் மயங்கி சரிய தொடங்கினாள். அவனுக்கு ஏதோ தப்பு நடக்கிறது போல் மனதில் தோன்றவும் அவசரமாக வந்து விசாரிக்க தொடங்கினான்.
“என் பிரெண்ட்.. உடம்பு சரி இல்லை.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்”
“நல்லா தானே நடந்து வந்துட்டு இருந்தாங்க?”
கிருஷ்ணன் திருதிருவென்று முழிக்க, அவனுக்கு சந்தேகம் வலுத்தது.
அவன் சற்று குரலை உயர்த்தி, “ஹலோ.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க? யாரு இந்த பொ………………ஆஆஆ” என்று அவன் தலையை தேய்த்தபடியே திரும்பி பார்க்க, கிருஷ்ணன் நண்பர்களுள் ஒருவன் ஒரு சிறு கல்லைக் கொண்டு அவனது பின்தலையில் அடித்திருந்தான்.
அவன் சற்று வலிமையானவனாக இருக்கவே அந்த அடியை சமாளித்து, தன்னை அடித்தவனை அடித்தான். கிருஷ்ணன் மாலினியை கீழே போட்டுவிட்டு அவனை அடிக்க வர, வண்டியுள் இருந்த மற்றொருவனும் இறங்கி வர, கீழே விழுந்த மாலினியின் நெற்றியை ஒரு சிறு கல் பதம் பார்க்க அவள் நெற்றியில் இருந்து சிறிது இரத்தம் கசிந்தது.
அவனை மூவரும் ஒரே சமயத்தில் அடிக்க வர அவன் இரண்டு கைகளையும் விரித்து ஒரு சுற்று சுற்ற, போதையில் இருந்த மூவரும் தள்ளாடி கீழே விழுந்தனர்.
மூவரும் எழுந்து வந்தனர், ஆனால் அவனுக்கு சிரமம் தராமல் நான்கைந்து குத்துகளில் செயலிழந்து விழுந்தனர். அவன் மூவரையும் தூக்கி வண்டியினுள் அடைத்துவிட்டு வண்டியை பூட்டி சாவியை எடுத்தான்.
பிறகு மாலினியின் அருகே சென்று அவளது முகத்தை பார்த்தவன் அதிர்ந்தான். அவசரமாக அவளது கன்னத்தை தட்டி, “மாலினி… மாலினி” என்று அழைத்தான், அவளிடத்து அசைவே இல்லை.
சாலையை சுற்றி பார்த்தான், யாரும் இல்லை..
இரண்டு நொடிகள் யோசித்தவன், மாலினியின் பையை சோதித்து அவளது கைபேசியை எடுத்து அதில் அவளது வீட்டு எண்னை தேடினான்.. கண்டு பிடிக்க முடியவில்லை, தோழிகளின் எண்னை தேடினான், அவற்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
[மாலினி அருணா, பிளவர், செல்லம்ஸ், ஜில்ஸ், க்ராப்(Crab) என்று பெயர்களை பதிவு செய்து வைத்திருந்ததால் அவனால் யாருடைய எண்னையும் கண்டறிய முடியவில்லை]
அவசரமாக தன் கைபேசியை எடுத்து தன் நண்பனை அழைத்தான்..
அழைப்பு எடுக்கப்பட்டதும் அவன் அவசரமாக, “டேய் மாலினி பிரெண்ட் பிருந்தா நம்பர் இருக்கா டா?”
“இருக்குது.. எதுக்கு டா கேட்கிற?”
“மாலினி வீட்டு நம்பர் வேணும் டா.. வெரி அர்ஜென்ட்..”
“என்ன கிருஷ்ணா.. என்ன பிரச்சனை?”
[அவன் யாரென்று இப்பொழுது தெரிந்துவிட்டதா!ஹ்ம்ம்.. சண்டை போட்டு மாலினியை காப்பாற்றியது வேறு யாருமில்லை நம்ம கிருஷ்ணமூர்த்தி தான். அவன் அழைத்தது ராஜசேகரை]
“அதை சொல்றதுக்கு இப்போ நேரம் இல்லை நீ பிருந்தா நம்பர் கூடு”
“அப்பா நம்பரே.. ஐ மீன் சிஸ்டர் அப்பா நம்பரே என்னிடம் இருக்குது.. நோட் பண்ணிக்கோ, **********”
“********** கரெக்ட்டா?”
“ஹ்ம்ம்.. கரெக்ட்.. நீ இப்போ எங்க இருக்க?”
“திருவான்மயூர்”
“நானும் அங்க தான் இருக்கிறேன்.. நீ சரியான இடத்தை சொல்லு”
கிருஷ்ணமூர்த்தி சொன்னதும் சேகர், “நான் அஞ்சு நிமிஷத்தில் வந்துறேன்.. என்ன பிரச்சனை டா?”
“மாலினியை யாரோ கடத்த முயற்சி பண்ணாங்க, நான் காபாத்திடேன்.. அவ மயக்கமா இருக்கிறா.. நீ வா.. பேசிக்கலாம்.. நான் மாலினி அப்பாவிடம் பேசுறேன்”
“டேய்…………………” அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
கிருஷ்ணமூர்த்தி இரண்டு நொடிகள் இடைவெளியில் தன்னை திடப் படுத்திக் கொண்டு, அருணாசலத்தை அழைத்தான்.
என்ன தான் பதட்டத்தை அவர் மறைக்க நினைத்தாலும் அவரது குரல் காட்டிக் குடுத்தது.
“பயப்படாதீங்க பா.. மாலினிக்கு ஒன்னும் இல்லை.. சொல்றதை பதறாம கேளுங்க பா.. அவளை யாரோ கடத்த முயற்சி பண்ணாங்க, நான் காப்பாத்திட்டேன்.. இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.. பட் அவ மயக்கமா இருக்கா” என்று வேகமாக சொல்லிமுடித்தான்.
“நீங்க இப்போ எங்க இருக்கீங்க?”
கிருஷ்ணமூர்த்தி சொன்னான்.
அருணாசலம், “ஓகே பா.. உங்க கிளாஸ் மேட் மோகனா வீடு பக்கத்துல தான் இருக்குது.. நீ மாலினியை அங்க கூட்டிட்டு போய்டு.. நான் உடனே கிளம்பி வரேன்” என்றவர்,“நீ தனியா எப்படி கூட்டிட்டு.. வண்டி……………….”
“அருணாசலம் போன் பண்ணான்.. நான் வாசலில் தான் நிற்கிறேன்.. சீக்கிரம் வாங்க.. இப்போ ஸ்ட்ரீட்டில் யாரும் இல்லை”
“ஹ்ம்ம்.. இதோ வந்துறோம் பா.. பைக்கில் தான் வரோம்”
“ஹ்ம்ம்.. சீக்கரம்” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
ராஜசேகர் வண்டியை ஓட்ட, மாலினியை நடுவில் ஒருபக்கமாக அமர செய்து கிருஷ்ணமூர்த்தி இருபக்கம் கால்களை போட்டு மாலினியை தாங்கியவாறு அமர்ந்திருந்தான்.
ஒரே நிமிடத்தில் மோகனாவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் ராஜசேகர். மோகனாவின் வீடு அடுக்கு-மாடி வீடாக இல்லாமல் தனிப்பட்ட வீடாக இருந்ததால் எந்த பிரச்சனையும் இன்றி யாரும் பார்பதற்கு முன் மூவரும் மாலினியை வீட்டின் உள்ளே தூக்கிச் சென்றனர்.
மருத்துவர் வருவதற்கு காத்திருந்த நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி நடந்ததை கூறினான்.
“இல்லை டா.. அந்த தெரு கொஞ்சம் இருட்டா தானே இருந்தது.. டிரெஸ் கலரெல்லாம் தெரியலை.. நான் யாரோ னு நினைத்து தான் விசாரித்தேன்”
“சூப்பர் டா” என்று சேகரும், மோகனாவின் தந்தை, “உனக்கு நல்ல மனசும் தைரியமும் இருக்கிறது” என்றும் கூறினர்.
கிருஷ்ணமூர்த்தி, “இதில் என்ன பா இருக்கிறது?”
“அப்படி இல்லை.. நமக்கெதற்கு வம்பு னு கண்டுகொள்ளாமல் போபவர் தான் அதிகம்”
“கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்கும் போது எப்படி சும்மா விட முடியும்? அதுவும் ஒரு பொண்ணு………..”
“இதை தான் நல்ல மனசு னு சொன்னேன்.. கூடவே தட்டி கேட்கும் தைரியமும் இருக்கிறது”
அப்பொழுது மருத்துவர் வந்தார். மாலினியை மருத்துவர் சோதித்துக் கொண்டிருந்த போது அருணாசலம் பதட்டத்துடன் உள்ளே வந்தார்.
மருத்துவர், “பயப்பட ஒன்றுமில்லை.. நெற்றியில் சின்ன காயம் தான்..மயக்க மருந்து தாக்கத்தால் மயக்கமா இருக்காங்க.. ரெண்டு மணி நேரத்தில் முளிச்சிடுவாங்க.. சூடா பால் குடுங்க.. நத்திங் டு வொர்ரி.. ஷி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்” என்று கூறவும் தான் அருணாசலம் இயல்பிற்கு திரும்பினார்.
அருணாசலம் கிருஷ்ணமூர்த்தியின் கையை பற்றி சிறிது கலங்கிய விழிகளுடன், “ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா” என்றார்.
ராஜசேகர், “டேய்.. என்னடா.. உன் ஷர்ட் காலரில் ரத்தக் கறை?”
கிருஷ்ணமூர்த்தி, “அது ஒன்னும் இல்ல டா.. தடுக்கும் போது ஒருத்தன் கல்லால மண்டையில் அடிச்சான்.. சின்ன காயம் தான் ஒன்னும் இல்லை” என்று அலச்சியத்துடன்கூறினான்.
அருணாசலம், “என்ன கிருஷ்ணா.. இதை ஏன் பஸ்ட்டே சொல்லலை?” என்று கண்டிப்புடன் சிறிது பதற,
கிருஷ்ணமூர்த்தி, “ஒன்னும் இல்ல பா.. சின்ன காயம் தான்”
அருணாசலம், “அதை டாக்டர் சொல்லட்டும்” என்று கூறி மருத்துவர் பக்கம் திரும்ப, மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அருகே சென்று காயத்தை ஆராய்ந்தார்.
மருத்துவர் காயத்தை சுத்தம் செய்து மருந்து தடவினார். வலியின்கிருஷ்ணமூர்த்தி சிறிது முகம் சுளித்தான்.
மருத்துவர், “பெரிய காயம் இல்லை பட் ஒழுங்கா ஆயின்மென்ட் அப்ளை பண்ணலைனா ரொம்ப பெருசாகிடும் ஸோ அலட்சியம் வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் மருந்தை கிருஷ்ணமூர்த்தி கையில் கொடுத்தார்.
மருத்துவர் கிளம்பிய பின் கிருஷ்ணமூர்த்தி நடந்ததை மீண்டும் கூறவும் அருணாசலம், “கடவுள் தான் உன்னை அனுப்பி இருக்கார்..”
கிருஷ்ணமூர்த்தி, “நேத்து நைட் தான் பா ஊரில் இருந்து வந்தேன்.. என் அத்தை பையன் வீடு இங்க பக்கத்தில் தான் இருக்குது.. அத்தை சில திங்க்ஸ் அவனிடம் குடுக்க சொல்லி குடுத்தாங்க.. அதை குடுத்துட்டு வந்துட்டு இருந்தப்ப தான் இது நடந்துது”
அருணாசலம், “ஹ்ம்ம்.. எல்லாம் அவன் செயல்”
ராஜசேகர், “அவன்களை என்ன செய்றது பா?”
அருணாசலம், “அதான் நானும் யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற மோகன்?” என்று மோகனாவின் தந்தையிடம் வினவினார்.