அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான்.
முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி, ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன்.
புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து எனக்கும் ஸ்கூபிக்கு அடி வாங்கி விட்டுட்டு குஜாலா கால் மேல கால்போட்டா தூங்கிட்டு இருக்கீங்க.
இன்னைக்கு உங்களை சுத்தல்ல விடுறனா இல்லையானு பாரு என சூளுரைத்து கொண்டு, கடைசியாய் படுத்திருந்த இரண்டு குட்டிபூனைகளையும் எடுத்து மறைத்துவைத்துவிட்டு, மீண்டும் வந்து குத்த வைத்து அமர்ந்தவன், முதலில் மினியை தூக்க வந்து பின் என்ன நினைத்தானோ, ஷினியின் கால்களை பிடித்து தூக்கி கொண்டு சென்றான்,
தலைகீழாய் தொங்கியதில், தூக்கம் விடுபட பதறி போய் கன்னாபின்னாவென கத்த துவங்க, ‘‘ச்சை’ எதுக்கிப்படி கத்துற’ என பொத் என கீழே போட, அதுவோ தரையில் விழுந்து ‘ஆத்தி இவனா! என்ன செய்ய காத்திருக்கானோ?’ என திருதிருவென விழித்தது.
“மூனு புள்ளைகளை அட் அ டைமில் பெத்து போட்டுட்டு புள்ளைகளுக்கு காவலா கடைசில படுக்காமல், உன் பொண்டாட்டிகிட்ட படுத்து தூங்குற, அதுவும் காலை மினி மேல போட்டு, வெட்கமா இல்லை” என முறைக்க
“எம்பொண்டாட்டி மேல தான காலை போட முடியும்’ நீண்ட வசனத்தை ‘ம்யாவ்’ என்ற ஒற்றை வார்த்தையில் வெளிப்படுத்த
“என்ன கத்துற? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆனவத்துல ஆடுறியா.. நல்லா ஆடு.. ஆனால் என் முன்னாடி, ஸ்கூபி முன்னாடி ஆடதே.. கன்னிபசங்கன்னு தானே எங்களை வச்சுகிட்டு ரொமான்ஸ் பண்றதென்ன? மேட்டிங் பண்றதென்ன? அட்டூழியம் பண்ணிட்டு திரியுற! நீ என்னடா அட்டூழியம் பண்ற? பண்றேன்டா நானும் ஸ்கூபியும்! இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் பண்ணிகிட்டு உன்முன்னாடியே நாங்க பண்றோம்டா அட்டூழியம்” இவன் வீராவேசமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே
“கர்மம் கர்மம், கல்யாணமா? நீயும்,ஸ்கூபியுமா? ஏன்டா பொண்ணு கிடைக்கலைன்றதுக்காக நாயைப்போய், அதுவும் ஆம்பள நாயைப்போய், ச்சைய்” தப்பர்த்தம் கொண்டு சமரசு காறி உமிழ
‘ஸப்பா.. இந்த எம்டன்கிட்ட வாக்கப்பட்டு நான் படுற பாடு’ மூக்கிற்கு மேல் கோபம் ஏறிநிற்க, வேண்டுமட்டும் அவரை முறைத்து பார்த்தவன், “தாடி, நீ மேட்ச் த பாலோயிங் தப்பா பண்ணிட்டு திரியுற.. அதுக்கு அர்த்தம் அது இல்லை, நான் தனியா, ஸ்கூபிக்கு தனியா, இரண்டு பேருக்கும் ஜோடி கிடைச்சப்புறம் கல்யாணம் பண்ணிப்போம்னு சொல்லிட்டிருந்தேன்” இவன் விளக்க
“ச்சை முதல்ல வெளக்கமாறு மாதிரி விளக்கம் கொடுக்கெறத நிப்பாட்டுவே! நேத்து நீ குடிச்சிட்டு வரும் போது விட்டுட்டு வந்த ஒத்த செருப்பை கண்டுபிடி நாயே.. ஒரு ஜோடி செருப்பையே பத்தரபடுத்தாத உனக்கு கல்யாணம் பண்ண ஜோடி கேக்குதாக்கும் ஜோடி”
“அதுவும் பூனைக்கிட்ட போய் சபதம் போடுறளவுக்கு, போவே.. அண்ணன்காரன் கல்யாணம் பண்ணாம கிடக்குதான், உனக்கு கல்யாணம் கேட்குதா, கல்யாணம், புடுங்கிடுவேன்ல” என ஏசிவிட்டு முன்னுக்கு செல்ல
“எல்லாம் உன்னால தான், நேத்து எங்கண்ணன் கிட்ட, இப்போ எங்கப்பன்கிட்ட.. கிழி வாங்கி விடறதே உனக்கு வேலையா போச்சு. உனக்கு இருக்குடி இன்னைக்கு” என ஷினியை முறைத்துவிட்டு சென்றான் விக்ரா.
அப்போது தான் ஒவ்வொருவராய் எழுந்தமர்ந்த பாண்டிகளுக்கு வள்ளி (காலையும் மாலையும் மட்டுமே வேலைக்கு வரும் வேலையாள்) கொண்டு வந்து கொடுத்த டீயையும் வர்க்கியுமாய் வாரி வழங்கி கொண்டிருந்தார் நாச்சி.
கடுப்புடன் முன்னால் தன் கணவனையும், எடுப்புடன் அவருக்கு பின்னால் வந்த தன் மகனையும் கண்டு இருவருக்கும் டீயை கொண்டு வந்து கொடுக்க “உம்புருஷனுக்கே குடு, எனக்கு வேண்டாம்” என முறைத்து கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, எத்தனையோ வற்புறுத்தியும் வேண்டாம் என்றவனின் பார்வை, டங்கு டங்கு என இடிக்கும் சத்தத்தில் திரும்ப, அங்கமர்ந்திருந்ததோ ராதையம்மாள்.
வெத்தலை பாக்கு இடிக்கும் எந்திரத்தில் வர்க்கியை போட்டு தட்டியெடுத்து அதை டீக்குள் நிறைத்து, இரண்டொரு நிமிடங்கள் கழித்து சவக் சவக் என சத்தம் கொடுத்து தின்ற ராதையை பார்த்து ‘வர்க்கிய இடிச்சு திங்கிற இதுக்கிருக்குற குசும்பு இருக்கே’ ‘உஃப்’ இதழ் குவித்து ஊதியவனோ, லாவா, மினி, வீரா, சமரசு என இவர்களால் காயப்பட்டு அதை தீர்க்க வழியறியாமல் கடுப்புடன் அமைதியாகிப்போனான்.
“டேய் சரியில்லைடா இவன்” என செல்லம் ஆரம்பிக்க, வீராவோ “நேத்துல இருந்தே சரியில்லைவே அவன். கொஞ்சம் தனியா விடு, அவனே நேரம் வரும் போது சொல்லுவாம்லே.. அப்புறம் பார்த்துக்கலாம் இவனை” என்று விட, சங்கரும் கூட பார்வையாளன் ஆகிப்போனான். விக்ராவின் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே தங்களுக்கு முன் தட்டில் இருந்த வர்க்கியை காலி செய்ய துவங்கினர்.
ஆனால் விக்ரா மட்டும் எழுந்ததில் இருந்தே டீ கூட அருந்தாமல் சோபாவிலேயே கிடக்க, இவனுக்கு என்ன ஆச்சு நாச்சி தலையை பிய்த்து கொள்ளா குறையாய் வலம் வந்தார்.
‘டீ வேணாம்னா காபி தண்ணி கொண்டாரவாவே! இல்லை சோறு பொங்கிட்டேன், சோறு சாப்பிடுதியா! இப்படி வயித்தை காயப்போட்டு கிடக்காத!’ என பல முறை முயற்சி செய்தும் அசையாமல் இருந்த மகனை பார்க்கையில் நாச்சிக்கு திக்கென இருக்க, எவ்வளவோ காரணம் கேட்டும் பதில் வரார கைக்காயமும் அவருக்கு நிம்மதியை குலைத்தது.
நேற்றைய அமைதியை சமரசுவும் கவனிக்க தானே செய்தார், அதை மனதில் கொண்டு “அவன் பிறந்ததுல இருந்து இவ்வளவு அமைதியாய் நேத்தைக்கும் இன்னைக்கும் தான் இருக்கான், அது உனக்கு பொறுக்காதே.. போடி போ.. உம்மவனுக்கு கொண்டாரவா, கொண்டாரவான்னு கேட்டுகிட்டே கிடக்க, கொண்டாந்து கொடுடி தின்காம எங்க போவ போறான்.. தின்னுட்டு நாய் பூனைக்கிட்டலாம் சபதம் போட வேணுமில்ல, அதுக்கு துரைக்கு தொம்பு வேணாம்” என நக்கலடிக்க
“ம்மோவ்.. தாடியை வாயை மூட சொல்லு” சீறிக்கொண்டு இவன் வர
“இல்லைன்னா என்ன புடுங்கிடுவியா” என இவர் எகிறிக்கொண்டு வர
“இவரு எப்போ பாரு புடுங்குறதுலையே தான் இருக்காரு” சத்தமாய் சொல்லியபடி அகட்டி கிடந்த கால்களை ஒடுக்கி வைத்து அமர, கொல்லென சிரித்தான் வீரபாண்டி. சங்கரும் செல்லமும் கூட விக்ராவிற்கு பயந்து வாய்க்குள் சிரித்து கொள்ள
“இந்தா வந்துட்டாருல்ல, எம்மவனை வம்பிழுக்க, ஏய்யா, உமக்கு வயக்காட்டுல வேலை இல்லையா?” என நாச்சி ‘டீ வர்க்கியை’ டங்கென அவர் முன் வைக்க
“ஆமான்டி வயசான நான் வயக்காட்டு போவனும், உன் மவன் வயசுக்கு வந்துருக்கான், குச்சு கட்டி உக்கார வைடி. அப்படியே பக்கத்து வீட்டுல உலக்கை இருக்கும் வாங்கி வந்து உம்மவன் கிட்ட போடு, படி தாண்டாம கிடப்பான்” இவரும் பாய,
பதிலுக்கு நாச்சி மல்லுகட்ட ஆரம்பிக்கும் அந்த நேரம், லாவன்யா வந்தாள் வீட்டினுள். அவளின் இடது புறம் மினியும், ஷினியும் இருக்க, ஷினியை ஒட்டி பிறந்த இருபதே நாட்களான ஒரு குட்டி பூனையும் வந்தது.
நேற்று நடந்தவைகளும், அதனால் உண்டான காரசார விவாதங்களும் அதன் பின் அவள் அசிங்கபடுத்தியதும் இருவருக்கும் ஓடி மறைய விக்ரா, லாவாவின் விழிகள் நச்சென மோதி நின்றது.
“வா தாயி.. என்ன இந்த பக்கம்” லாவாவை வரவேற்று, “வள்ளி புள்ளைக்கு, டீ தண்ணி கொண்டுவா” என நாச்சியிடம் வேலை ஏவிவிட்டு “வா தாயி வந்து உக்காரு” என அழைக்க, லாவாவும் தன் தாய் மாமனின் அருகில் வந்து அமர்ந்தாள். “என்ன தாயி காலங்காத்தல வந்திருக்க” என கேட்க
சமரசுவின் விழிகள் சட்டென விக்ராவை பார்க்க, அவனோ லாவாவின் மேல் இருந்த பார்வையை படாரென திருப்பி கொண்டான். சிறிது நேரம் முன்பு கூட இவன் ஷினியோடு வம்பிழுத்தது நியாபகம் வந்தது.
“அந்த இரண்டு பூனைகளையும் கண்ணுலையே காங்க விடாதவன் இந்த எடுபட்டபய தான். ஏலே என்னலே பண்ண அந்த பூனைய” சமரசு விக்ராவிடம் எகிற
“ம்..” தெனாவட்டாய் சமரசுவை பார்த்து உருமியவன் லாவாவிடம் திரும்பி “குக்கர்ல வச்சு அவுச்சுட்டேன்” எனவும், லாவாவிற்கு இதயமே நின்று போக, சமரசு என்ன சொல்ல வந்தாரோ, அவரை முந்திகொண்டு விருட்டென எழுந்த லாவாவிற்கு சுருசுருவென கோபம் ஏற, அவனை நெருங்கி நின்று
“உண்மைய சொல்லு பூனையை என்னடா பண்ண?” என மூக்கின் மேல் கோபமேற கேட்டாள்.
‘வாங்க போங்க என மூன்றாம் மனிதனாய் நேற்று விலக்கி வைத்து பேசியவள் இன்று உரிமையாய் அருகே நின்று உரிமையாய் டா போட்டு அழைத்து பேச’ நமட்டு சிரிப்பு சிரித்தான் ‘நம்ப சண்டைலாம் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்காது’ அத்தனை சந்தோஷம் வேறு.
அதே சிரிப்போடு “நிஜமாவே மூனு லிட்டர் குக்கர்ல வச்சு அவுச்சுட்டேன்” வேணா அடுப்பங்கறைல போய் பாரு எனவும், நாச்சியை இவள் கண்கலங்கி போய் பார்த்தாள்.
“அவன் சும்மா சொல்லுதான்டி.. காலையில் எழுந்ததுல இருந்து சமயகட்டுபக்கம் வரவே இல்லை அவன், வேணா வள்ளிகிட்ட கூட கேளு” என அவளை சமாதானம் செய்து
“ஏலே, அவளை என்னைக்கும் அழ வைக்க மாட்டல்ல.. இன்னைக்கு என்னவே ஆச்சு, பூன குட்டிய குடுவே.. அவகிட்ட” நாச்சி கூற
“குடுக்க முடியாது” இருவருக்கும் பொதுவாய் இவன் கூறிட, அப்படியென்றால் பூனை இவனிடம் தானிருக்கிறது என முடிவாய் தெரிய, கலங்கிய கண்களில் இப்போது கோபம் குடியேறியது.
இருக்கும் இடைவெளியை குறைத்து அவனை நெருங்கியவள் “எனக்கு இப்போ, இந்த நிமிஷமே பூனை குட்டி வேணும், தரப்போறியா இல்லையா” பல்லைகடித்து கொண்டு பேச
“பூனைக்குட்டிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. புள்ளகுட்டி வேணா கொடுக்குறேன். நீ மட்டும் ம் சொல்லு இப்போவே தரேன்” விகாரமாய் கேட்டு விசமமாய் பட்டென கண்ணடிக்க, லாவா அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.
மற்றவர்களுக்கு அவர்கள் ஏதோ குசுகுசுவென பேசி சண்டையிடுவது போல் தெரிய, இது வழக்கமாய் இருவரும் போட்டுகொள்ளும் சண்டை தான் இவர்களுக்குள் யாரும் வராமல் போக,
சமரசு மட்டும் எழுந்து அவனருகில் வந்து “கடையும் போது வராத வெண்ண, குடையும் போதா வர போது?” சொலவடையில் அவனை திட்டி “அவன்கிட்ட கேட்குறது சுவத்துல முட்டிகிறதுக்கு சமானாம்” என சொலவடைக்கு அர்த்தம் கொடுப்பது போல் பேசினார்.
அதற்கு இவன் நக்கலாய் சிரித்து “அதெதுக்கு அவ்வளவு கஷ்டபட்டு கடைஞ்சு, குடைஞ்சு? கடையில காசு கொடுத்தா தரப்போறான்” எகத்தாளமாய் இவன் பேச
எரிச்சலானார் சமரசு “இந்த எடுபட்ட பயகிட்ட கேட்டு பிரயோஜனம் இல்ல தாயி.. வீட்டுக்குள்ளாற தான் எங்கனயாச்சும் வச்சிருப்பான். வா தேடுவோம்” “ஏய், வள்ளி நாச்சி பங்கு போய் தேடுங்க” “ஏய் நீங்களும் தாண்டா” என எஞ்சிய மூன்று பாண்டிகளுக்கும் கட்டளையிட, அத்தனை பேரும் பூனைகளை தேடும் பணியில்.
வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தார்கள் பூனையை தேடும் பணியில். இவனோ காலாட்டியபடி சோபாவில் அமர்ந்திருந்தான். அவனது பார்வை எல்லோரிடமும் வட்டமடித்தாலும், இறுதி பார்வை லாவாவிடமே போய் நின்றது.
சிம்பிளாக சொன்னால் நன்றாகவே சைட் அடித்து கொண்டிருந்தான்.