“ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த
“ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க
“அதான் வரிசை கட்டி நிக்கிறீகளே, அப்படியே ஒரு பேஷன் ஷோவ போடுறது” என ஏற்றிவிட, ஆர்ப்பரித்தது அந்த இடம்
“பேஷன் ஷோ தானே நடத்திடுவோம்” எதற்கும் சளைக்காதவனாய் முதலில் துவங்கி வைத்தான் செல்லம். பாட்டிலை கீழே வைத்துவிட்டு
கட்டியிருந்த கைலியை கழற்றி நெஞ்சிற்கு மேல் தூக்கி கட்டிகொண்டு, கீழே வைத்த பாட்டில்களை கைக்கு ஒன்றாக எடுத்து கொண்டு செல்லம் நகர, அவன் எண்ணம் புரிந்து கைலியை அவிழ்த்து மாலை போல் கழுத்தில் மாட்டியபடி சங்கரும், கைலியை அவிழ்த்து கிராஸாக வலது கைக்கும் இடது இடைக்குமாய் தவழவிட்டபடி வீராவும் கைக்கு இரண்டிரண்டு பாட்டில்களோடு செல்லத்தின் பின்னே வரிசை கட்டி நிற்க,
“அட ஆமாம்.. இவனை கவனிக்கவே இல்லைலே”.. “ஏலே விக்ரா ஏம்லே நீ இம்பூட்டு அமைதி கிடக்க, ஏதும் சம்பவம் பண்ணிட்டியா என்ன, கையில்ல வேற அடிபட்டிருக்கு கேட்டாலும் பதில் சொல்ல மாட்ற” அப்போது தான் வீராவின் கவனம் விக்ராவின் கட்டு போட்டிருந்த கை மேல் விழ
“அதெல்லாம் ஒன்னுமில்ல” இவன் சரிகட்ட நினைக்க
“இவன் சரியில்லடா.. ஏதோ பண்ணிருக்கான், காலையில் மண்டபத்தில் பார்த்தது பிறவு எங்க போனான்னே தெரில்ல.. வீட்டில் போய் பார்த்து வீடே அலங்கோலமா கிடந்ததுலே. இப்போ நைட்டுக்கு தான் வந்திருக்கான், வீரா வுடாத இவன கேளு” செல்லம் தூண்டிவிட
“ஆமா வீரா வுடாத கேளு.. பாட்டிலை கையில் எடுத்தா அலம்பல் பண்ணாம விடமாட்டான். இன்னைக்கு தான் இவன் இம்பூட்டு அமைதியா இருக்கான்” சங்கரும் சேர
“பெம்பளபுள்ள ஏதையாச்சும் கைபுடிச்சு இழுத்திட்டியா?” என கேட்டதற்கு விக்ரா இல்லையென தலையசைக்க
“அப்போ கட்டிபுடிச்சிட்டியா” திகைத்து கேட்டதற்கு, முறைப்பை பதிலாய் கொடுக்க
சிரிக்கும் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “உண்மைய சொன்னாலும் நம்பமாட்டானுக. நம்பாதீகடா அதுதான் எனக்கு நல்லது” ஒரு மார்க்கமாய் பார்த்துவிட்டு, வாசலில் சமரசுவின் பைக் இல்லாததையும் நோட்டம் விட்டபடி உள்ளே சென்றான் விக்ரா.
சோபாவின் மேல் இருந்த மினி, ஷினியும் அடித்துபிடித்து சோபாவை விட்டு இறங்கினர் இவனை கண்டதும். ஸ்கூபி மட்டும் விக்ராவை பார்த்துவிட்டு வாலை ஆட்டிக்கொண்டு அவன் அருகிலேயே நின்றுவிட்டது.
தூரத்தில் கேட்ட புல்லட்டின் சத்தம் கேட்டு “லேய்.. சமரசுடா.. எந்திரிங்கடா, ரூமுக்குள்ளறா போய்டலாம். மாட்டினோம் சொத்தோம்லே” என செல்லம் பதறி எழ, ஏனையவர்களும் பதறி எழ, அப்போது தான் விக்ராவின் கையில் இருந்த பாட்டிலை பார்த்தபடி
“ஏலே, விக்ரா இத ஏம்லே வீடு வரைக்கும் எடுத்தாந்த..” விக்ரா கையில் கால்வாசி மதுபானத்தோடு இருந்த பாட்டிலை பார்த்து வீரா பதறி கேட்க
“வயித்துல இடமில்லையாக்கும். புட்டியும் கையுமா சமரசு பார்க்கனும், வீட்டுலயே நமக்கெல்லாம் இடமிருக்காதுடா” சங்கர் பீதியோடு பார்க்க
“ஆளுக்கொரு வாய் குடிச்சிக்கலாம்டா, நிறையலாம் இல்லை” விக்ரா சமாளிக்க
“ஆளுக்கொரு வாய் குடிக்க அதென்ன அருகம்புல் சூஸாடா, ஏற்கனவே குடிச்சது தெரியகூடாதுன்னு கொய்யாக்கா இலையெல்லாம் மேய்ஞ்சிட்டு வந்தோம். இப்போ இதை குடிச்சிட்டு மறுபடியும் மேய முடியாது, போ” சங்கர் சிலுப்பும் போதே வீட்டு வாசலில் “இந்நேரம் கூடத்துல என்ன பண்ணிட்டு இருக்கீகலே” கணீரென்ற சமரசுவின் குரலில் அலேக்காய் அபவுட்டர்ன் போட்டு பாட்டிலோடு திரும்பி நின்றான் விக்ரா.
அவன் முகம் பார்த்து ஸ்கூபி நின்றிருக்க “ஈ..” என இளித்தவன், ஸ்கூபியின் வாயை பிடித்து பாட்டிலை சரிக்க, அந்த கால்வாசி மதுபானமும் கடகடவென உள்ளே இறங்கியது. அடுத்து பாட்டிலை மறைக்கனுமே என திரும்பியவனின் பார்வையில் அழுக்கு துணி கூடை பட, போட்டுவிட்டான் அதனுள்.
“அப்பாடா தடயத்தை எல்லாம் அழிச்சாச்சு.. தப்பிச்சோம்டா” என விக்ரா நினைக்கையில், சமரசு அவனை முறைத்தபடி தாண்டி செல்ல
“என்னடா, தாடி எதுவும் பேசாமல் போது” விக்ரா வீராவின் காதில் கிசுகிசுக்க
“வாண்டை வாண்டையா திட்டிட்டு போறாரூவே..”
“அப்படியா, எனக்கொன்னும் கேட்கலையே..”
“உனக்கொரு நூதன நோய் இருக்குவே, யாரும் எவரும் கிழி கிழின்னு கிழிச்சா மீயூட்டல விழுந்துரும்வே உன் காது” எனவும், விக்ரா முறைக்க
“நீ முறைச்சாலும் அது தாவே உண்மை, போ.. போ.. தூங்குற வழிய பாரு. உன் திருவாயை தொறந்து போன சமரசவுவ திரும்ப கூப்ட்ராதவே. நானே ஏதோ சொல்லி சமாதானபடுத்தி அனுபிருக்கேன்” வீரா தன் பாட்டுக்கு புலம்ப, விக்ராவோ பதில் சொல்லாமல் வெறித்த வண்ணம் இருக்க, அவன் பார்வையை தொடர்ந்த வீராவின் புருவமோ சுருங்கியது.
ஸ்கூபியின் பார்வை கொடூரமாய் மினியின் மேல் இருக்க, மினியை மறைத்தபடி மினியின் ஆள் ஷினி சீறும் சிங்கமாய் நின்றிருந்தது. அதையெல்லாம் தூசியாய் தட்டிவிட்டுகொண்டு நான்கு கால்களையும் நாற்திசைக்கு அகட்டி போட்டு நடந்து, ஷினியை ஒரே எத்தில் தூக்கி எறிய, ‘ம்மியாவ்..’ என கர்ண கொடூரமாய் கத்தி கொண்டு சுவற்றில் அடித்து சொத் என கீழே விழுந்து, விட்டால் போதுமென அலறி அடித்து கொண்டு ஓடிவிட,
‘அடப்பாவி உன்னைய நம்பி மூனு புள்ளைய பெத்துபோட்டதுக்கு விட்டுட்டா ஓடுற..” ஷினியை திட்டிய மினி, ஸ்கூபியை பார்த்தது “இந்த ஸ்கூபி இருக்குற சைஸ் என்ன, நான் இருக்குற சைஸ் என்ன!’ கண்கள் கலங்கி நின்ற மினியை வில்லனாய் நெருங்கியது ஸ்கூபி.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என உணர்ந்த வீரா “லேய் புட்ரா.. அந்த கிறுக்கு ஸ்கூபிய..” கத்த, விக்ராவோ ‘பே’ வென பார்த்து நிற்க, அவன் பிடரியிலேயே மடார் என ஒன்று வைத்து “புடிடான்ன வெறிக்க பார்த்துட்டு நிக்கிற, நீ தான் இப்படி இருக்கன்னு பார்த்தா நீ வளர்க்குற நாயும் உன்னை மாதிரியே இருக்கு” வீரா கிழித்து தள்ள,
வீரா கொடுத்த அடியில் நிதானத்திற்கு வந்தவன் மினியின் மீது பாயவிருந்த ஸ்கூபியின் மீது ஓரே பாய்ச்சலாய் பாய்ந்து அழுக்கி பிடித்தான் விக்ரா.
அவ்வளவு தான் அடுத்த நொடி ‘யம்மாடி தப்பிச்சேன்டா இந்த நாரப்பயகிட்ட இருந்து, சிறுத்தையாய் சீறிபாயந்து ஓடி தன்னிருப்பிடம் நோக்கி ஓடி மறைந்தது மினி.
“நாய் வளர்க்குறான் நாயி..” விக்ராவிற்கு ஒரு எத்து “எத்த தண்டி நாய் நீ.. இஸ்காண்டி பூனை மேல் பாயுற” என ஸ்கூபிக்கும் ஒரு எத்து என பாரபட்சமின்றி வாரிக்கொடுத்தான் வீரா.
“ஏய் அவன் பண்ணதுக்கு அவனை மிதிடா.. என்னை எதுக்குடா மிதிக்குற” அத்தனை நேரமாய் அமைதியாய் இருந்த விக்ரா சீற
“நீ தான அவனை வளர்க்குற, எல்லாம் சோறு போட்டு வளர்த்தா நீ் மட்டும் சோமபானம் குடுத்துல வளர்க்குற” விக்ரா மீது எகிறியவன்
ஸ்கூபியின் புறம் திரும்பி “குடிச்ச கால் பாட்டிலுக்கே இந்த அக்க போரு, அதுவும் குடிச்சு பத்துநிமிஷம் கூட ஆகலை. இதுல புல்லா குடிச்சிருந்தியோ.. பூனை மட்டுமா.. பொம்பள புலியை கூட விட்டு வைக்கமாட்டல்ல, அத்தனை பேரையும் புள்ளதாச்சி ஆக்கிவிட்டுருப்ப, அப்படிதான” வீரா கடுப்புடன் கேட்க
‘ம்..’ என முனகிகொண்டு ஸ்கூபி தன் முகத்தை திருப்பி கொண்டது.
‘கிடைத்த சான்ஸ் மிஸ் ஆன கடுப்பில்’ ஸ்கூபி அப்படியே படுத்துவிட, அதன் மேல விக்ரா படுத்து இருந்தான். பம்புசெட் போல் குறட்டை வேறு வர
“அதுக்குள்ளயுமா தூங்கிட்டான், லேய்.. விக்ரா.. லேய்” வீரா எத்தனை எழுப்பியும் அவனிடம் அசைவில்லாது போக, சங்கரையும், செல்லத்தையும் துணைக்கு அழைக்க பார்க்க, அவர்களோ கிடைத்த இடத்தில் கண்டமேனிக்கு கிடந்து உறங்கியிருந்தனர்.
‘நான் மட்டும் தனியா என்ன பண்றது’ என வீராவும் ஒரு மூலையில் ஒதுங்கி உறங்கி போனான். அத்தனை படுக்கயறை கொண்ட வீடு அது, ஆனால் எப்போதும் உறக்கம் ஹாலில் தான்.