மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி.

தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய் ஏற்க முடிந்தவனுக்கு, அதே தாலி அவள் கழுத்தை விட்டு இறங்கியதை, அவளே இறக்கிவிட்டதை அத்தனை எளிதாய் ஏற்கமுடியாது போனது அவனுக்கு.

ஆக மொத்தம் கட்டும் போது அவனுக்கும் கழற்றி எறியும் போது அவளுக்கும் தாலி ஒரு ஆபரணமாக தான் தெரிந்திருந்தது. அது ஆபரணமில்லை என கழற்றி எறியபட்ட கனம் இவனுக்கு புரிந்து போனது. ஆனால் அவளுக்கு புரிவது எப்போது?

அதே நேரம் உள்ளே குளியலறை கதவின் தாழ்பாள் நீக்கும் சத்தம் கேட்க, விருட்டென வெளியே வந்து சோபாவில் அமர்ந்தவனுக்கு அலைபாய்ந்தது மனது இறுகிபோன முகத்துடன்.

சில நிமிடங்களின் பின், அறையை விட்டு வெளியே வந்தவளை கண்டு அரண்டே போனான் என்றால் இவளோ அதிர்ந்து போய் மீண்டும் அறையினுள்ளே அடைந்தாள்.

ஆம், தொடை வரையிலான சிறிய டிரவுசரும், சிறிய சட்டையுமாய் வர, கண்டவன் அதிர, இவனை கண்டவளோ மேலும் அதிர்ந்தாள்.

அவளது அங்கங்ககளுக்கு பதிலாய், முழங்காலின் மேலும் கீழும் என இரத்தத்தோடு உராய்ந்த தடங்கள் மட்டுமே அதிர்வை உருவாக்க, ‘அய்யோ இதென்ன இப்படி சிராச்சிருக்கு, இதோடவா குளிச்சா? சலம் வைக்குமே? சட்டென பதற்றம் தொற்றி கொண்டது.

வெளியே நின்ற ஸ்கூட்டி பாதி கதையை கூறியது என்றால், இதோ காயம் கண்ட அவளுடல் முழுகதையை கூறியது. சாக்கடையில் விழுந்து வாரியிருக்கிறாள் என.

அறைக்குள் சென்றவளோ, கண் மூடி கதவில் சாய்ந்து நின்றாள். அவனை அங்கு எதிர்பார்த்திருக்க வேண்டுமே? அத்தனை எளிதாய் தாலியை கட்டிவிட்டு அப்படியே விடுபவனா இவன்? எண்ணியிருக்க வேண்டுமே? எண்ணியிருந்தால் அதற்கு தக்கவாறு மனதை தயார் செய்திருக்கலாமே? இப்போது எப்படி இவனை எதிர்கொள்ள? சமாளிக்க? திமு திமுவென அடித்து கொண்டது இதயம்.

சமாளிக்க தான் வேண்டும், எத்தனை நாள் ஒளிந்து ஓடுவது. முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, பீரோவில் இருந்த லாங் ஸ்கர்ட் ஒன்றை தன் இடைக்கு மேல் போட்டு கொண்டு வெளியே வந்தாள் மிக நிதானமாக.

இவள் வருவாளென அறையையே பார்த்திருந்தவன், இவளை கண்டதும் கால்களை ஆராய, அதுவோ மறைந்துவிட்டது அவளது உடைக்குள்.

மீண்டும் முகத்தை ஏறிட்டவனுக்கு, ‘ஏன் காயம், எதற்கு காயம்?’ என கேட்க துடித்தது மனது. ஆனால் அது அத்தனைக்கும் தான் தான் காரணம் எனும் போது? கேள்வி எங்கிருந்து வரும்.

“வீட்டில யாரும் இல்லை. எதுவா இருந்தாலும் அம்மா வந்த பிறகு வாங்க.. இப்போ கிளம்புறீங்களா?” முதல் பாலிலேயே அடித்தாள் சிக்ஸர், ‘உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை’ என

இதே வீட்டில் இருவர் மட்டுமே தனியாய் இருந்து எத்தனையோ பகல்களும் இரவுகளும் அடித்த கொட்டங்கள் யாவும் போன ஜென்மமோ என எண்ணும் வகையில் இருந்தது அவளது புறகணிப்பு.

 இப்படி ஒரு ஒதுக்கத்தை எதிர்பார்க்கவில்லை என அவன் முகமே காட்டி கொடுக்க, அது அவளுக்கும் நியாபகம் வந்ததோ என்னவோ, அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் இவளும் பார்வையை திருப்பி கொண்டாள்.

“நா.. நா..ன் உன்னை பார்க்க தான் வந்தேன்.. உன் அம்மாவை இல்லை” திணறி இவன் பேச

“எதுக்கு பார்க்கனும்? இன்னும் நிறைவேத்திக்க எதுவும் பிளான் இருக்கா என்ன?” “ஓ.. தாலி கட்டியாச்சு, அடுத்து பர்ஸ்ட்நைட்க்கு பிளானா? அதுக்காக தான் என்னை பார்க்க வந்திங்களா?” கொஞ்சமும் பாவம் பாராது சொல்லாலேயே இவள் அடிக்க,

அடுத்த நொடி “ஏய்..” உறுமிக்கொண்டு அவள் கழுத்தை பிடித்த அவன் கைகள், அவளது அந்த மீளா விழிகளில் மிரட்சியை கண்டு, பிடித்த பிடி அப்படியே தளர்ந்தது.

“அதுக்கு இல்லைனா.. வேற எதுக்கு வந்தீங்க?”  விடுதலை கிடைத்த கழுத்தை தடவியபடியே ஒற்றை புருவம் ஏற்றி இவள் கேட்க

‘வாங்க, போங்க என வார்த்தை இன்னமுமே அவன் மனதை ரணமாக்கியது.

“தாலிய எங்க?” உள்ளே எரியும் ரணத்தை மறைத்து வெறுமையான அவள் கழுத்தை பார்த்து கேட்டான்.

“ஓ.. தாலியா?” அதை அப்போவே கழட்டி எறிஞ்சிட்டேனே!” அசால்ட்டாய் இவள் பேச

இவனோ இப்படிபட்ட எடுத்தெறிந்த பேச்சுவார்த்தைகளை சமாளிக்க முடியாது விழி பிதுங்க,

அதை உள்ளுக்குள்ளே ரசித்த லாவன்யாவோ “ஏன் தாலி ஏறின உடனே, கத்தி கதறி அழுது தீர்த்துட்டு, நீ் செய்ததை எல்லாத்தையும் மறந்துட்டு, தொங்க தொங்க அதை கழுத்தில் போட்டுகிட்டு, நீங்க தான் எனக்கு எல்லாமேன்னு உங்க பின்னாடியே வந்துடுவேன்னு நினச்சீங்களா?” கூர்மையாய் கேட்டு அவனை அதிர வைத்தவள் “எந்த ஒரு நிலை வந்தாலும் உங்க பின்னாடி வரவே மாட்டேன்” அவளது உறுதியில் ஆடி தான் போனான் விக்ரா.

“என்ன பேசுற நீ? அப்போ நம்ப கல்யாணத்தை மறைக்க செல்றியா?” அவள் கொடுத்த அதிர்ச்சி சிறிதும் குறையாதவனாய் கேட்டான்.

“ஆமா, நூறு பேர் பார்க்க, ஊர் மொத்தமும் கூட்டி வச்சு தாலி கட்டின பாரு.. பண்ணினது திருட்டு கல்யாணம், எந்த மூஞ்ச வச்சிகிட்டு சொல்ல சொல்ற” எக்காளமாய் பதிலடி கொடுத்தவள்

ஒரு வார்த்தை கூட பேசாது நின்றிருந்தான் விக்ரவாண்டி “பதில் பேசுங்க மிஸ்டர் விக்ரபாண்டி..?” இவனை தூண்ட

“நீ எதுவும் சொல்ல வேண்டாம், நான் சொல்லிக்கிறேன், உங்கவீட்டில், எங்க வீட்டில் நானே சொல்லிக்கிறேன். எல்லா தப்பும் செய்தது நான் தானே.. அவங்க எதுவும் தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன். நம்ப கல்யாணத்தை மறைக்க வேண்டாம்”

“ஹல்லோ… இங்க தண்டனை கொடுக்க வேண்டியது நான் தான்.. உங்க குடும்பமோ என் குடும்பமோ இல்லை. இதுக்கு பேரு கல்யாணம்னு நீங்க தான் சொல்லிக்கனும். வெளியில சொல்லிடாதீங்க.. நான் கம்ளைண்ட் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை, போக்ஸோ ல தூக்கி உள்ள வச்சிடுவாங்க” வெகு எளிதாய் இவளிடம் இருந்து வரும் வார்த்தைகள் யாவும் தேள் கொடுக்காய் இவனை கொட்டி சென்றது.

“நீ தண்டனை கொடுத்தாலும், கம்ளைண்ட் கொடுத்தாலும் நான் ஏத்துப்பேன், ஆனால் என்கூட என் வீட்டுக்கு வந்துடு”

“அதுக்கு முதலில் நான் உங்களை புருஷனா ஏத்துக்கனுமே? முன்னையாவது ப்ரண்டா, பெஸ்டியா நினைச்சிட்டு இருந்தேன், இப்போ மனுஷனா கூட மதிக்கலை, இதில் நான் உங்களை புருஷனா ஏத்துகிடனுமா.. நல்ல கனவு தான்” பேசிய வார்த்தைகள் அவளிடமிருந்து எளிதாய் வந்தாலும், எதிரில் நின்று அதை உள்வாங்கியவனுக்கு, செத்துவிடலாம் போல் இருந்தது. அவசரபட்டுவிட்டோம்.. புத்தி கெட்டு பெரும் பிரச்சனையை இழுத்துவிட்டு விட்டோம், நினைத்து நினைத்து நொந்து போனான்.

 “என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு லாவன்யா.. வாய் இருக்குனு பேசிட்டே போகாத? பதிலுக்கு நான் பேசுனா நீ தாங்க மாட்ட? வாய மூடிட்டு இரு அது தான் உனக்கு நல்லது?” பல்லை கடித்துக்கொண்டு இவன் பேச

அத்தனை வார்த்தைகளில் ‘லாவன்யா’ எனும் வார்த்தை மட்டும் கூர் ஈட்டியாய் அவள் நெஞ்சை பதம் பார்த்தது. இது நாள் வரை லாவா, லாவ்ஸ், என அழைத்து அழைத்தே வசியம் செய்திருந்தவனிடத்தில் நன்றாகவே தெரிந்தது ஒதுக்கம்.

அது இன்னமும் இவள் கோபத்தை கிளறி விட “நல்லதா? எது நான் பேசாமல் இருக்குறதா? அதென்னவோ நூத்துல ஒரு வார்த்தை.. உன்கிட்ட பேசாமல் தான் இருந்திருக்கனும், விஜய பத்தி, என்னோட காதலை பத்தி, என்னோட  அது தான் ரொம்ப நல்லதா இருந்திருக்கும். உன்கிட்ட ஒன்னுவிடாமல் பேசினேன்ல.. அதான் உன்னால் எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவைவும் செஞ்சிட்ட, என்னோட காதலை, வாழ்க்கையை உடச்சிட்ட, நடிச்சு ஏமாத்திட்ட!” இவள் கதற

“மெண்டல், மெண்டல் மாதிரி பேசாத.. ஏற்கனவே லவ் பண்ணிட்டு இருக்குற லவ்வர்ஸை பிரிச்சிவிட்டுட்டு, அதில் நீ வாழனும்னு நினைக்கிற, அது தான் உன் காதலா? அது தான் உன் வாழ்க்கையா?”

என்ன மகாவும் விஜயும் லவ் பண்ணாங்களா? வெகுவாய் கூர்மை பெற்றது இவள் விழிகள்.

“அப்புறம் என்ன சொன்ன? நடிச்சனா? ஆமா நடிச்சேன், நடிச்சு ஏமாத்தினேன் தான்! ஏன் தெரியுமா?

விஜய் – மகா காதலிக்கிறதை பார்த்துட்டு, மகாவை பிரிக்கனும், அதுக்கு பதிலா நான் அவன்கூட சேரனும்னு சொல்லிட்டே இருப்ப..  முதலில் நீ ஏதோ ஆதங்கத்துல என்கிட்ட புலம்புற, சரி புலம்பட்டும், பிறகு சரியாகிடும்ன்னு அப்படியே விட்டா.. நாளாக நாளாக நீ பண்ற ஆராத்துலாம் ஓவரா போய்ட்டு இருந்தது.

நான் காது கொடுத்து கேட்கலைன்னா? நீ சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருக்கலைன்னா? எனக்கு தெரியாமல் லூசு மாதிரி சினிமேட்டிக்கா ஏதாவது செஞ்சு வப்ப, ஆசையா இருக்குற அவங்க கல்யாணத்தை நிறுத்திடுவியோன்னு தான் நீ சொல்ற எல்லாத்தையும் கேட்குற மாதிரி நானும் நடிச்சேன்?” எவ்வளவு நேரம் இவள் கொட்டுவதை வாங்கி கொண்டே இருப்பான்? திருப்பியும் கொடுத்தான்.

சாசராய் விரிந்தது விழிகள். குழப்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அணி வகுத்தது. ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை. ஆக  மொத்தம் அவளுக்கு புரிந்ததெல்லாம் ஒன்று தான். விஜய் மகாவிற்கு இடைஞ்சல் இந்த லாவன்யாவா? என.

“நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன்.  விஜய் உனக்கு வேணாம் விட்டுடுனு, நீ கேட்டியா? அன்னைக்கே கேட்டிருந்தா நானும் இப்படி புத்தி கெட்டு போய் இருந்திருக்க மாட்டேன்”

“ஆமா சொன்னதான்.. அட்வைஸ் பண்ண தான். அவனை விட்டுடுன்னு தானேன்னு சொன்ன? விடலைன்னா ‘நீ என் கழுத்தில் தாலி கட்ட வேண்டிவரும்னு சொன்னியா?’

“அப்போ, விஜய் உன் கழுத்தில் தாலி கட்டாமல் போனதில் கவலையில்லை, நான் உன் கழுத்தில் தாலி கட்டுனது தான் பிரிச்சனை” அப்படி தானே என பார்க்க

“பேச்சை மாத்தாதே விக்ரா. நீ ஏன் என் கழுத்துல தாலி கட்டுன. நான் பிளான் பண்ணின மாதிரி நீயும் ஏதோ பிளான் பண்ணிருக்க”

“ஆமாண்டி, உன்னை எவனுக்கும் தாரை வார்த்துட்டு என்னால் நிம்மதியா இருக்க முடியாது” விருட்டென சோபாவை விட்டு எழுந்து வந்தவன் அவளை உரசிக்கொண்டு நின்றான்.

இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. விழியோடு விழி மோத “நீ என் நிழல் மாதிரி, போற இடமெல்லாம் ஒன்னாவே போய்ட்டு, இப்போ பாதியில விட்டுட்டு நீ போவ. நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா? அதான் பிளான் பண்ணி உன் கழுத்தில் தாலி கட்டுனேன். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவ. உருட்டி மிரட்டி உன்னை என் வழிக்கு கொண்டு வரலாம்னு பார்த்தா? உன் வழிக்கு என்னை இழுத்துட்டு போற!” மூச்சடைக்க பேசிய இவன் வில்லனாய் தான் தெரிந்தான் இவள்  கண்களுக்கு.

“இனி விஜய் – மகா சாப்டரை மறந்திடு,  நம்பளை பத்தி மட்டும் யோசி” என அழுத்தம் கொடுத்து பேசி “ஆனது ஆச்சு, நம்ப கல்யாணத்தை பத்தி இரண்டு பேரோட வீட்லையும் நான் பேசுறேன், மறைச்சு வச்சு வேற எதுவும் பிரச்சனை கிளம்புனா அது இன்னமும் தலைவலி” திமிராய் இவன் முடிக்கும் முன்

அவனிடமிருந்து தன் கையை உதறிக்கொண்டு, “நமக்கு நடந்தது கல்யாணமே இல்லைங்கறேன், பின்ன எப்படி அதை வெளியே சொல்ல முடியும். நீயும் சொல்லாத அது தான் நல்லது. இது தான் என் முடிவும் கூட” அதை விட திமிராய் இவள் கூற, முறைத்து நின்றான் இவன்.

மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு

நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு

வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இன்ப துன்பம் யாரால