அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது.
வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே பார்த்திருந்தவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது.
“எனக்கு புடிச்ச வாழ்க்கையை இல்லாமல் பண்ணிட்டல்ல” அழுகையோடு வந்தது அவளது வார்த்தைகள்.
அதற்காகவே காத்திருந்தாற்ப்போல் “ம்.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை, அதை நான் இல்லாமல் பண்ணிட்டேன். உனக்கு பிடிச்சது மட்டும் நடந்தா போதும்ல.. அடுத்தவனுக்கு அது புடிக்குதா இல்லையான்னு கூட யோசிக்க மாட்டல்ல” அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவனின் குரல் அந்த அறையை நிசப்தமாக்கிகொண்டு ஒலிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் லாவா.
“நீ மட்டும் புடிச்சவனோட வாழனும், அது சரி, அதுக்காக நீ எந்த லெவலுக்கு வேணும்னாலும் போவ, அதுவும் சரி.. ஆனால் அதை மத்தவங்க பண்ணினால் மட்டும் தப்போ”
“என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்” இவன் சொன்ன கனம், புழுவை பார்ப்பது போல் இவள் பார்த்து வைக்க
“ஹ..” என இதழ் வளைத்தவன் “ஆனால் கல்யாணம் செஞ்சுகிற அளவுக்கு என்னை பிடிக்காதுன்னும் தெரியும்” இவன் சேர்த்தே சொன்னான்
“இப்போ உன் கழுத்தில் தாலி கட்டி சரியா பத்து செகன்ட் தான் ஆகுது. ஒரு பத்து செகன்ட் கூட, என்னை புருஷனா ஏத்துக்க முடியலை, இத்தனைக்கும் நீயும் நானும் நகமும் சதையும் மாதிரி” விரக்தியாய் சிரித்தான்.
“விஜய் உயிருக்குயிரா மகாவை காதலிச்சிட்டு உன்னோட எப்படி வாழ்வான். பத்து நிமிஷம் கூட நீ பொறுக்க மாட்ட, வாழ் நாள் முழுக்க அவன் பொறுத்துக்கனுமா?” அடுத்தடுத்த கேள்விகளில் அதிர வைத்தான் அவளை.
தனது போனை எடுத்து உயர்த்தி பிடித்து, “நிமிர்ந்து பாரு” என கரகரத்த குரலில் கூற.. இவளும் நிமிர, அடுத்த கனம் கேமரா பட்டனை அடுத்தடுத்து தட்ட, படபடவென ஐந்தாறு படங்களை அடித்து தள்ளி்யது அந்த போன்.
“விஜய் லைப்பில் அவன் நிம்மதியை கெடுக்குற மாதிரி ஏதாவது வேலை பார்த்தன்னு வை.. அடுத்த நிமிஷம்.. நீ என் பொண்டாட்டி தான்! என்னை ஒரு பத்து நிமிஷம் கூட புருஷனா நினைக்க முடியலை.. அந்த தண்டனையை வாழ் நாள் முழுசுக்கும் அனுபவிக்க வைச்சிருவேன் நியாபகம் வச்சுக்கோ” என கதவை திறந்து கொண்டு இவன் வெளியேற
பிரம்மை பிடித்தாற்ப்போல் நின்றுவிட்டாள் லாவா. ஆனாலும் அழுகை நின்றபாடில்லை. அழுதுகொண்டு அங்கேயே இருப்பது இன்னமும் அசிங்கமாய் பட, அழுத விழிகளை அழுத்தமாய் துடைத்து கொண்டு, அறையை விட்டு வெளியே வந்து மண்டபத்தை கடந்து தன் ஸ்கூட்டியை தேடி வந்தாள். “ஏய்.. லாவன்யா.. எங்க போற தனியா” எதிரில் இலைகட்டுகளோடு வந்த செல்லபாண்டி கேட்க, “தலைவலி செல்லம் அதான் வீட்டுக்கு போறேன்” என
“ம்.. ஒன்னு குடுத்துட்டு குடிக்கனும், இல்ல கொஞ்சமா குடிக்கனும்.. இல்லைன்ன தலைவலி மட்டுமா வருமா, சில நேரம் வாந்தி பேதி கூட வரும், அவன்கூட சேர்ந்துகிட்டு கொஞ்ச நஞ்சமா ஆடுனா..” என நக்கலாய் கூறியவனை விழிகளாலேயே பொசுக்கி பதிலுக்கு பார்வையாலேயே எரித்தவளிடம் அடுத்து வாங்கி கட்டும் முன்பு அங்கிருந்து மறைந்தான் செல்லம்.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து தன் வீட்டிற்கு விட்டாள் படு வேகமாக.
அவளது நிலை சொல்லில் அடங்காததாய் இருந்தது. முகத்தில் மின்னி மறையும் உணர்வுகள் கூட வார்த்தைகளால் வடிக்க முடியாததாய் இருந்தது.
தோன்றியது ஒன்றே ஒன்று தான். அது விக்ரா தனக்கு துரோகம் இழைத்து விட்டான் என. அதுவும் நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டான் என.
நேற்று காலை இதே நேரம் மூக்குமுட்ட குடித்துவிட்டு இதே ஸ்கூட்டியில் கதைகள் ஆயிரம் பேசியபடி சந்தோஷம் முழுவதையும் அவளுக்கே என பட்டா போட்டு எழுதியதை போல், தன்னுடன் வளைய வந்த விக்ரா மண்டைக்குள்ளும், ஒட்டுமொத்த தவறும் உன் மேல் தான் என பழி சுமத்தி அதோடு தாலி எனும் தண்டனையையும் கொடுத்து சென்ற அதே விக்ரா மனதினுள்ளும் உலா போனான்.
அதற்குள் அவளது வீடும் வந்துவிட, இடபக்கமாய் ஓட்டி சென்றவள், வலப்புறமிருந்த தன் வீட்டிற்கு வண்டியை ஒடித்து திருப்ப, வேகம் குறைப்பதற்கு பதில் கூட்டி விட, ஸ்கூட்டியோ ரோட்டை தாண்டி இருந்த பெரிய சாக்கடைக்குள் போய் மடார் என விழ, கூடவே இவளும் போய் விழுந்தாள்.
ஒரு கால் உள்ளே ஒரு கால் வெளியே, இதில் சேலை வேறு எழக்கூட திராணி அற்றவளாய் அப்படியே கிடக்க, அருகில் இருந்த மளிகை கடையில் இருந்த ஆண்களும் பெண்களும் வந்து உதவ, ஸ்கூட்டி வீட்டிற்கு வெளியேயும், லாவா வீட்டிற்கு உள்ளேயும் வந்து சேர்ந்தனர் கைத்தாங்காலாக.
ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டதில் உடல் எரிய, கண்ணாடியில் தெரிந்த உருவம் அதை விட அவள் கழுத்தில் கிடந்த தாலி அவளுடலை எரிய வைத்தது.
விடிகாலையில் பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் யாவும் அவளை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது. ஆத்திரம், கோபம், இயலாமை என அனைத்தும் ஒன்றையொன்று முண்டி அடித்துக்கொண்டு, நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு வெளிப்பட, வேக வேகமாக கலைந்தாள் தன் தலையில் இருந்த கேர்பின் முதல், காலில் கிடந்த கொலுசு வரை.
எஞ்சி நின்ற தாலியை கையில ஏந்தினாள். கண் மூடி நின்றாள், இமைகளினூடே இரண்டு சொட்டு நீர் ஓடி விழுந்தது. அடுத்த நொடி சிறிதும் யோசிக்கவில்லை. கழற்றி விசிறி அடித்தாள் தாலியை.
————–
“என்னத்தை… அதுக்குள்ள வீட்டுக்கு போகனுமாக்கும். சொந்தபந்தமெல்லாம் இருக்கும் போது வீட்டுக்கு போய் நீங்க என்ன செய்ய போறீங்க” மீனா வீட்டிற்கு கிளம்புகிறேன் என விக்ராவிடம் வந்து நின்றதில் இவனும் கேட்க
“எல்லாம் நான் பெத்துவச்சிருக்கனே, மகன்ற பேரில் ஒருத்தியை அவளுக்காக தான், பந்தி ஆரம்பிச்சாச்சு, பசி தாங்க மாட்டான்னு தேடுனா ‘அவள் அப்போவே ஸ்கூட்டியை எடுத்துட்டு தலைவலின்னு வீட்டுக்கு போய்ட்டா..’ ன்னு செல்லபாண்டி செல்லுதான். அவளை அங்க விட்டுட்டு, நான் மட்டும் எப்புடி இங்க இருக்க?”
நெற்றி சுருங்கியது விக்ராவிற்கு, அவளுக்கும் தனக்குமான விவாதம் முடிந்து பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி வீட்டிற்குள் போனாள்? என யோசித்தவன்,
“நான் போய் என்னன்னு பார்க்கேன்த்தை, நீங்க இங்க இருங்க” என உறுதியாய் சொல்லவும், சுற்றி இருக்கும் சொந்த பந்தங்களை நோட்டம் விட்டவர், சரியென்றுவிட, விக்ரா வீரபாண்டியின் பைக்கை வாங்கி கொண்டு லாவாவிடம் விரைந்தான்.
வாசலில், லாவாவின் பைக்கை ஒட்டி, தன் பைக்கை நிறுத்தியவனுக்கு, மூச்சடைத்தது, சாக்கடையில் குளித்திருந்த அவளது ஸ்கூட்டியின் முன்பகுதியை கண்டு.
கேட்டை திறந்து கொண்டு வேக வேகமாய் உள்ளே சென்றான். இதயம் படபடவென அடித்து கொள்ள, கதவை தட்டுவதற்காக கைவைக்க, இவன் கைபட்டு கதவோ பட்டென திறந்து கொண்டது.
மற்ற நேரமாக இருந்தால் “லாவா, லாவ்ஸ்” என கெஞ்சல், கொஞ்சலில் அழைக்க ஆரம்பித்து, “எவ்ளோ நேரம் கத்துறது, காது கேட்கலையாடி வெண்ண மவளே” என கோபத்தில் அழைத்து திட்டி முடித்திருப்பான்.
இப்போதோ அவள் முகம் பார்க்க கூட பயமாய் இருந்தது இதில் எங்கிருந்து அழைப்பது.
அவள் மேல் உரிமையில்லாதபோது இருந்த உரிமை, உரிமை வந்தபிறகு உரிமையே இல்லாதது போல உணர்ந்தான்.
இருந்தும் அவளுக்கு என்னானதோ என அடித்து கொண்ட இதயத்தோடு, வீட்டினுள்ளே வந்தவன் ஹாலை கடந்து அவளது அறைக்குள் எட்டி பார்த்தான்.
அவள் அணிந்திருந்த பட்டுபுடவை ஒரு புறம் குவிந்து கிடக்க, ஆபரணங்கள் அத்தனையையும் அவிழ்த்து வீசியிருந்தாள்.
கழற்றி வைப்பதற்கும் அவிழ்த்து வீசுவதற்கும் தான் வித்யாசம் இருக்கிறதே! ஜிமிக்கி, வளையல், சோக்கர், நெற்றிசுட்டி, கொலுசு, வாடாமல் வாசம் வீசய பூ என அவள் அவிழ்த்து வீசியிருந்த ஒவ்வொன்றின் மீதும் வலம் வந்த அவன் விழிகள், இறுதியாய் வீசப்பட்டு கிடந்த பொன்தாலியின் மீது படிந்து விழிகள் அகண்டது.
விழிகள் உள்வாங்கியதை மனம் ஏற்க மறுத்து, அவனின் கால்கள் தாலியை நோக்கி விரைய, கைகளோ அதைவிட விரைவாய் டேபிளில் கிடந்த தாலியை கையில் ஏந்தியது.
தண்ணீர் விழும் சத்தம் கொடுத்த குளியலறையின் பக்கம் போனது இவன் பார்வை. ‘கழற்றி வீசிவிட்டாளா?’ இன்னுமே நம்பமுடியவில்லை அவனால்.
சற்று முன் ‘என்னை ஒரு பத்து நிமிஷம் கூட புருஷனா நினைக்க முடியலை.. அந்த தண்டனையை வாழ் நாள் முழுசுக்கும் அனுபவிக்க வைச்சிருவேன் நியாபகம் வச்சுக்கோ’ என வீராப்பாய் சொல்லிவிட்டு வந்ததெல்லாம், காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்துவிட்டிருக்க, மனம் முழுதும் கவலை வந்து அப்பிகொண்டது.