மற்றவர்களை பொருத்தவரை, சகல பாதுகாப்போடும் இருக்கும் பெண் லாவா. ஆனால் வீட்டினரை பொருத்தவரை பாண்டிகள் குழுவில் ஐந்தாவது பாண்டியாய் சேர்ந்தவள் தான் இந்த லாவன்யா பாண்டி.
தாங்கள் கற்ற அத்தனை மொள்ளமாரிதனங்களை அவளுக்கும் கற்று கொடுத்தனர், அவளது மாமன் மகன்கள். இவள் பாசையில் சொன்னால் லகுடபாண்டிகள்.
கிட்டத்தட்ட அவர்கள் மத்தியில் மகுட பாண்டியாய் தான் வளர்ந்தாள். வம்பு, அடிதடி, வாய்தகராறு, கைத்தகராறு என எதையும் விட்டு வைக்காமல், பாண்டிகளுடனே வளர்ந்ததால் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் பயம் கூட இல்லாது, ‘எதுவாக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற திடகாற்றம் திண்ணக்கம் பெற்றவள்.
மீனா பயந்து நடுங்குவது கூட இவளது இந்த ஆண்பிள்ளை குணத்தை கண்டு தான்.
அப்படி வளர்ந்தவள் சமரசுவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனான விஜய் மீது காதல் கொண்டாள், அவனும் தான். அதுவும் கடந்த ஒரு வருடமாய் தான்.
ஆனால் அவனுக்கோ அதே ஊரில் தங்கள் வீட்டின் அருகே லாவன்யாவை விட ஐந்து மடங்கு வசதி வாய்ப்போடு இருந்த மகாவிற்கு விஜயின் வீட்டினர் பேசி முடித்திருக்க அதை கலைக்க தான் விக்ராவுடன் சேர்ந்து இந்த போராட்டம்.
எப்படி பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சொந்தம் என்கையில் அது அவர்களது கல்யாணவீடாய் மாற, அடித்து பிடித்துகொண்டு ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்து கொண்டு பம்பரமாய் சுழன்றனர் திருமண மண்டபத்தில்.
உசிலம்பட்டியில் இருந்த இன்னொரு சகோதரியும், பிள்ளைகள், கணவனோடு அன்றே வந்து சேர, மீனாவிற்கு துணை கிடைத்த மகிழ்ச்சி. தவிர மகா, விஜய் புற சொந்தங்கள், ஊர்காரர்கள், உற்றார் உறவினர்கள் என புடைசுழ்ந்து கலகலவென கிடந்தது அவ்விடம்.
அப்படியிப்படி என நேரம் கடந்தோட இரவு நடந்த அந்த நிச்சயதார்த்த விழாவும் முடிந்து ஒரு வழியாய் காலையும் அழகாய் விடிய, அலங்கரித்து கொண்டு மீண்டும் வந்துவிட்டாள் மண்டபத்திற்கு.
அதிகாலை விழிப்பு வந்தவுடனே விக்ராவிற்கு தான் போன் அடித்தாள்., “மகாவை தூக்கிட்டியா இல்லையா” என கேட்க “முகூர்த்த நேரத்துக்கு தூக்குவோம், அது தான் நல்லது யாரும் தேடி போக மாட்டங்க, எப்படியாவது நின்னு போன கல்யாணத்தை நடத்த தான் பார்ப்பாங்க, அது தான் உனக்கும் நல்லது” என சொல்லி விட்டான்,
சரியென அரக்கபறக்க கிளம்பி வந்தாள்.ஏன் இரவு நடந்த நிச்சயவிழாவிற்கு வரவில்லை என கேட்டவர்களுக்கெல்லாம் வயிறு வலி என சொல்லி சமாளித்தாள்.
மீனா அமர்ந்து கதையளந்துகொண்டிருக்க, அவரை முறைத்த லாவா.. எனக்கு அம்மாவும் சரியில்லை, இந்த சாம்பூவும் சரியில்லை. பாவி பய எங்க போனான்னே தெரியல’ இவங்க சரியாய் இருந்தால் எனக்கெதுக்கு இவ்வளவு டென்சன்? தன் திருமணத்திற்கு தானே பிளான் போடும் நிலையை அறவே வெறுத்து, மீனாவை குதற முடியாததில், நகத்தை குதறிக்கொண்டிருந்தாள் பற்களால்.
இவனை காண வில்லை. வாட்சை பார்த்தவள் “ முகூர்த்த நேரமும் இன்னும் அரைமணிநேரத்தில் முடிஞ்சிடும். இவன் இன்னும் என்ன புடுங்குறான்” மீனாவிடமிருந்து நைசாக கழன்டு வந்தாள்.
விழிகளை அங்குமிங்கும் சுழற்றியபடி, விக்ராவை தேடி இவள் வர, விக்ராவோ அவ்வப்போது குறிப்பிட்ட ஆட்களிடம், நேரடியாகவோ, இல்லை போனிலோ, இல்லை தூரத்தில் இருந்து சைகையிலோ பேசிக்கொண்டிருந்தான்.
எண்ணி பார்த்ததில் ஆறு பேர், அப்படியானால் இவர்கள் தான் கடத்தல் கும்பளா? நினைத்த மாத்திரத்தில் எம்பி குதித்தது லாவாவின் குட்டி இதயம்.
அந்நேரம் சரியாய் இவனும் அவளை பார்க்க, அதில் சுற்றம் உணராது இதழ் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்கு அனுப்ப, அதிர்ந்து போனான் விக்ரா.
இவன் பார்க்கிறான் என்றதும் மேலும், ‘என் செல்ல குட்டி’ என அவனுக்கு கண் திருஷ்டி கழித்து, இருகை விரல்களையும் உதட்டில் வைத்து அழுத்தி ‘ப்ச்சக்’ ‘ப்ச்சக்’ என இரு முத்தங்களையும் அவசரமாய் அவனை நோக்கி பறக்கவிட, இமையும் அசைக்காது நின்றுவிட்டான் விக்ரா.
அதிர்ந்து நின்ற விக்ராவிடம் , கட்டை விரலை உயர்த்தி காட்டி, ‘ஆல் தி பெஸ்ட்’ என உதடைசைத்துவிட்டு, நின்ற இடத்திலிருந்தே திரும்பி விஜயின் பக்கம் பார்வை திருப்பினாள்.
அதன் பின் டிஜே பிளேயுடன் விக்ராவும், லாவாவும் சேர்ந்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
விக்ரா ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் ஆட்டத்திற்கு குறைவில்லை.
அங்கே அவனோ ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லியபடி, அழகிய பட்டு சட்டை வேஷ்டியில் அமர்ந்தபடி ராஜ தோரணையுடன், அக்னி குண்டத்தின் முன் அமர்ந்திருக்க அவனை கண்களில் தேங்கிய காதலோடு பார்த்திருந்தாள்.
தனியாக ஓம குண்டத்தின் முன் அமர்ந்திருந்தவனின் அருகே சென்று அமர துடியாய் துடித்து போனது அவள் மனது. மண்டபத்தின் சுவரில் பெரும் பகுதியை அடைந்திருந்த மணிகூண்டை பார்த்து பார்த்து ஒவ்வொரு வினாடிகளையும் கடத்தினாள்.
இதோ அவள் எதிர்பார்த்த அந்த நொடியும் வந்து சேர, “அழகிய அசுரா.. அழகிய அசுரா..” என்ற பாடலின் பிஜிஎம் அவளை கலைத்தது.
ஆம் அவளது ஆசை கனவுகள் நிறைவேற போகிறது என நேற்று இரவு தான் ஆசை ஆசையாய் எத்தனையோ பிஜிஎம்களை கேட்டு கேட்டு அதில் கேட்கும் போதே கிறங்க வைத்த இந்த பிஜிஎம்மை டவுன்லோட் செய்து, ரிங்க் டோனாக வைத்தாள்.
பாட்டாக வைக்க தான் ஆசை ஆனால் கேட்பவர்கள் என்ன நினைப்பார்களோ என பிஜிஎம் மட்டும் போதுமென விட்டாள்.
ரிங்டோன் செட் செய்த பிறகு வரும் முதல் போன் கால், வெட்கத்தோடு போனை எடுத்து பார்த்தவளுக்கு ‘விக்ரா’ காலிங்.. என டிஸ்பிளேயில் ஒளிர, முகம் இன்னமும் புன்னகையை பூசிக்கொள்ள, அவசரமாய் அதை காதுக்கு கொடுத்தாள்.
“டேய்.. மகாவை தூக்கிட்டியா?” கொள்ளை ஆசை அவள் குரலில்.
“ப்ச்.. அதுல தான் ஒரு பிரச்சனை நீ வா, பொண்ணோட ரூமுக்கு பக்கத்தில் ஒரு ரூம் இருக்குல்ல.. அங்க வா” என வைத்துவிட்டான்.
இன்னும் முகூர்த்தத்திற்கு பத்தே நிமிடங்கள் தான் இருக்க, இன்னமும் வந்து சேராத மகாவை நினைத்து மனம் இன்னமும் குதூகலிக்க விக்ரா சொன்ன அறைக்கு விரைந்தாள்.
ஆங்காங்கே ஆட்கள் நடமாட்டம் இருக்க, கதவை தள்ளிகொண்டு உள்ளே சென்றாள்.
விக்ராவும் இல்லாமல் மகாவும் இல்லாமல் அறையானது வெறிச்சோடி கிடக்க, “விக்ரா” என இவள் குரல் கொடுத்த அதே நேரம், அந்த அறையின் கதவு உட்புறமாய் பூட்டபட்டது விக்ராவின் கைகளால்.
குழப்பத்துடன் சுருங்கியது இவள் முகம்.
மென்மையான ஆரஞ்சு வண்ணத்தில் ஒயின்கலர் பாடர் பட்டுபுடவையில் கழுத்தை நிறைத்த சோக்கர், காதில் குடைபிடித்த ஜிமிக்கி, நெற்றியை அலங்கரித்த சுட்டி, கலகலத்த வளையல்கள், சிணுங்கும் கொலுசுகள், வாசம் நிறைத்த மல்லிகை, அத்தனை அலங்காரத்திற்கும் உயிர் கொடுப்பது போல் சந்தோஷத்திலும் புன்னகையிலும் மிளிர்ந்த முகம் என கல்யாண பெண்ணுக்கே டஃப் கொடுப்பவள் போல வந்து நின்றவளை விட்டு இமையும் சிமிட்டாது பார்த்திருந்தான்.
அவனின் அசையாத பார்வையை கண்டு கைகளை அவன் முன்பாய் அசைத்து
“ஏய், மகாவை எங்கடா.. அவளை விட்டுட்டு, நம்பளை ரூமுக்குள்ள வச்சு பூட்டிருக்க?” என கேட்க
“காரணமா தான்.. உக்காரு” என கட்டிலை காட்ட
அதில் அமர்ந்தபடி
“என்னடா எதுவும் பிரச்சனையா?” என
“ம் பிரச்சனை தான்” என்றவன் அவள் முகத்தையே விடாது பார்த்திருக்க
இவனோ ஒரு வார்த்தை கூட பேசாது நேரத்தை கடத்தி கொண்டிருக்க, வரிசை வரிசையாய் இவள் கேட்டு தள்ளிய எந்த கேள்விக்கும் பதிலளிக்காது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
நேரத்தையும் கடத்துகிறான் என அப்போது தான் அவளுக்கு புரிய, “டேய் எதுவும் விளையாடுறியாடா? உன் விளையாட்டெல்லாம் அப்புறமா வச்சுக்கடா” வயிற்றில் சிறிதாய் புளியை கரைத்தது அவனது மோன நிலை.
அறையின் வெளியே அதே நேரம் கெட்டி மேள சத்தம் காதை பிளக்க, அது அவளது இதயத்தையும் இரண்டாய் பிளந்து “விக்ரா..” என இவள் அதிர்ந்து விழித்த கனம், பேண்ட் பாக்கெட்டில் தேடிக்கொண்டிருந்ததை எடுத்தவன், அவள் என்ன ஏது என உணரும் முன்பே லாவாவின் கழுத்தில் போட்டிருந்தான்.
அங்கே மகா கழுத்தில் விஜய் தாலி கட்டிய அதே நேரம் இங்கே விக்ரா லாவாவின் கழுத்தில் தாலி கட்டி இருந்தான். லாவாவிற்கு இரண்டொரு நிமிடங்கள் ஆனது சூழ்நிலை உரைப்பதற்கு.
கழுத்தில் கிடந்த தாலியை கையில் எடுத்து வைத்து, “எ.. எ.. ன்ன வி…க்ரா, இ..தெ..ல்லாம்” இவளது திக்கி வந்த கலக்கம் கலந்த கேள்வியே காட்டி கொடுத்தது அவளது மனநிலையை.
எந்நேரமும் படபடவென பேசியே பதறவைப்பவளுக்கு, அன்று வார்த்தைகளே வரவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே கோடாய் இறங்க
அவளது அழுகையையும் கேள்வியையும் தாங்கமுடியாதவனாய் இவன் கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு மறுபுறமாய் திரும்பி நின்றான்.
சிறுவயது நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லாமே விக்ரா தான் அவளுக்கு, யாராவது கேலி கிண்டல் செய்தால் கூட புகார் கொடுப்பதே அவனிடம் தான்.
உண்டு இல்லை என செய்துவிடுவான் அவளை அழவைத்தவர்களையும், மனம் கலங்க வைத்தவர்களையும். ஆனால் அவனே அழவைப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. இதுவரை தன்னை பற்றிய நிறைய ரகசியங்கள் தன் தாய்க்கு கூட தெரியாது.
ஆனால் லாவன்யாவின் நிழலான விக்ரவிற்கு அத்தனையும் தெரியும். தெரியும் வகையில் தான் இருக்கும் அவனுடனான நட்பு.
காதல் கைகூட நண்பர்களை துணைக்கழைப்பது தான் வழக்கம், இவளும் நண்பனான இவனை நாட, விக்ரா செய்தது என்னவோ பெரும் துரோக செயலாக முடிந்துவிட்டிருந்தது.
அத்தனை நம்பிக்கை வைத்த நண்பனா இத்தனை பெரிய துரோகத்தை செய்தது இன்னமும் நம்ப மறுத்து, கண்ணீர் வழிய வழிய இமை சிமிட்டாது பார்த்திருந்தாள்.