“டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க

“அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச

“நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற

“அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர் ஆக்குறியே.. அதுக்கு நான் என்னடி பண்ணனும், அத சொல்லு?” டென்சன் ஆனான் விக்ரா.

“ப்ச், அத தான்டா சொல்ல வரேன்.. நாளைக்கு விஜய்க்கு கல்யாணம் நடக்கனும் ஆனால் மகா கூட இல்ல, என்கூட” சடுதியில் வில்லியானாள் லாவா.

“அதெப்படி முடியும், இதென்ன சினிமான்னு நினைச்சியா” இவன் புருவம் உயர்த்த

“சினிமாவோ கதையோ.. எனக்கு பிடிச்சது மட்டும் தான் அங்க நடக்கனும். தோ பாரு.. கல்யாண வீட்டுக்கு இன்னைக்கு நைட்டே போறோம். நைட்டு புல்லா பிளான் பண்ணி”

“பண்ணி” என இரட்டை அர்த்தத்தை இவன் உருவாக்க

“போடா… பன்னி” பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவள், அவன் முதுகிலேயே படாரென ஒன்று வைத்து “சொல்றதை மட்டும் கேளுடா வக்ரம் புடிச்ச விக்ரா” உச்சஸ்தாயில் இவள் கத்தினாள்.

‘ஸ் ஸ்…. ஸ்…’ என ஒற்றை விரலை தன் வாயில் வைத்து, ‘நான் பேசலை.. நீ சொல்லு’ என சைகை காட்டினான்.

“எனக்கு விஜயை விட்டு கொடுக்க மனசில்லை விக்ரா..  அதே நேரம் அவனே என் கழுத்தில் தாலி கட்டனும். அதனால” என இழுத்தவளை, வைத்த விழி வாங்கமல் பார்த்தவன் மேலே சொல்லு என விழிவிரித்து பார்க்க

“மகாவை நீ கடத்திரு, தன்னால விஜய் என் கழுத்தில் தாலி கட்டிடுவான்” ஆசையாய் கூற

“ம்.. அப்படியே அவன் எனக்கு பாடையும் கட்டிடுவான்” இவனோ அசால்ட்டாய் நிலையை உரைக்க

“உனக்காக உயிரையே கொடுப்பேன்னு டயலாக்லாம் அடிச்சடா”

“ஓய்…” என எகிறியவன் “அதுக்காக உயிரை மட்டுமே கேட்பியா..” வடிவேலு மாடுலேஷனில் இவன் கேட்க

“தேவை இருக்குறத தானே கேட்க முடியும்? வேற என்னத்த கேட்குறதாம்” இவள் புருவம் சுளிக்க

“ம் இரண்டு புள்ள கேட்குறது? இரண்டுக்கு மூணா கொடுப்பேன்ல” பேசியவனின் தலையில் ‘டங்’ என வைத்தாள் ஒரு கொட்டு

“ஆ.. ஆ” வென அலறியவனை சிறிதும் கண்டு கொள்ளாமல்

“சும்மா வம்பிழுத்திட்டே திரியாமல், சொல்றதை பண்ணி தொலை.. எனக்கு தெரியாது, அந்த மகாவை தூக்குற, நான் விஜய்க்கு முறை பொண்ணு, எப்படியும் மகனோட கல்யாணத்தை அப்படியே நின்னு போகட்டும்னு நினைக்க மாட்டாங்க.

அத்தை கண்டிப்பா எங்கம்மா அப்பாகிட்ட பேசுவாங்க.. எப்படியும் என் கல்யாணம் நடந்திடும்” வெகு உறுதியாய் சொன்னவளை பார்த்து முற்றிலும் அதிர்ந்து

“அப்போ மகா” என கேட்டவனின் கையில், தன் ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்த ஒரு லட்டரை திணித்துவிட்டு,

இவன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி மீண்டுமாய் மடமடவென தன் வாய்க்குள் இறக்கும் வேலையில் இவள் இறங்க,

இவனோ, அவளிடம் ஒரு கண்ணை வைத்தபடி, லட்டரை வேகமாய் பிரித்து பார்த்தான்.

அச்சு அசலாய் மகாவின் கையெழுத்து, ‘திருமணத்தில் விருப்பமில்லை, விருப்பத்தை தெரிவிக்க முடியாமல் விலகி செல்கிறேன், தேடவேண்டாம்’ என்ற எழுத்துகளுடனும், இறுதியாய் ‘அன்புடன்’ மகா, என்ற அவளது அக்மார்க் கையெழுத்தும் இருந்தது.

‘அடங்கொப்பொத்தா டேய்.. நானே கேடி, இவள் கேடிக்கெல்லாம் கேடியா இருப்பா போலவே.. யப்பா, டேய் விஜய், எந்த ஜென்மத்துல பாவம் பண்ணியோ.. ம்ஹூம் எந்த ஜென்மத்திலேயோ இல்லை… நீ பிறப்பெடுத்த எல்லா ஜென்மத்திலயும் பண்ண பாவம்.. எப்படி வந்து இவ கிட்ட சிக்கியிருக்க பார்த்தியா’ வாய் பிளக்கவில்லை. மாறாய் விழிகள் பிளந்தது.

“எப்படி என் ஐடியா?” சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட.

“ம்.. டிவில சீரியல் பார்க்காத பார்க்காதன்னு எத்தனை முறை சொல்லியிருப்பேன். இப்போ பாரு.. வில்லிக்கே டப் கொடுப்ப போல, அப்படி இருக்கு உன் ஐடியா” என சிலாகித்தவன்

“எல்லாம் சரி, செலவுக்கு என்ன பண்றது” கேட்ட கனம்,

“எ.. எ.. ன்ன செலவு?” என கேட்டவளிடம் சிறிது குளறல்,

‘ம் சரக்கு வேலைய காட்டுது’ நினைத்து கொண்ட விக்ரா,

“மகாவை கடத்தனும்கிற? கையிலயா தூக்கிட்டு போக முடியும், எப்படியும் பொண்ண தூக்க இரண்டு பேரு, மண்டபத்தை கண்கணிக்க இரண்டு பேரு, ஊருக்குள்ள ஆள் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு பேரு, எப்படியும் போர்வீலர் வேணும், அதுக்கு டிரைவர் வேணும், ஆக மொத்தம் ஏழு பேரு, இவனுகளுக்கு மூனு வேளை சாப்பாடு, ஒரு நாள் சம்பளம்னு கொடுக்கனும்.

சரியா ஸ்கெட்ச் போட்டு பொண்ணை தூக்கனும், கடத்திட்டா பிரச்சனையில்லை.. ஒரு வேளை மாட்டிகிட்டா?” என இவன் நிறுத்த

குடிப்பதை அவளும் நிறுத்தி “மாட்டிகிட்டா?” என விழி பிதுங்க கேட்டாள்.

“பயப்படாத.. வகையா மாட்டிகிட்டா நம்பளை காட்டி கொடுக்காமல், போலீஸோ, பொரம்போக்கோ.. யார்கிட்டானாலும் அடி வாங்க தயாரா இருப்பானுங்க தான். ஆனால் அடுத்து அவனுகளுக்கு எக்ஸ்ட்ராவா மெடிக்கல், டியர்னஸ், டிராவலிங் அலவன்ஸ்னு , ஒரு பெரிய காம்பன்சேஷன் லிஸ்ட்டே கொடுக்கனுமே” என

“என்னடா.. ஏதோ நாம கடத்தல் கம்பெனி நடத்துற மாதிரியும், இவனுக எல்லாம் நம்ப எம்ப்ளாயீஸ் மாதிரியும், காம்பன்சேஷன் பத்திலாம் பேசுற” என கவலை கொண்டாலும், நாளைய கல்யாண கனவுகள் அவளை அப்படியே தேங்கிவிடாமல் பாதுகாக்க,

கையில் இருந்த பாட்டிலை விக்ராவின் கையிலேயே கொடுத்துவிட்டு ஹேண்ட் பேக்கில் இருந்து கத்தையாய் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் கையில் திணித்து

“என்னோட ஐஞ்சு மாச எக்ஸ்ட்ரா சம்பளம், போதுமா இன்னும் வேணுமா?” என கேட்க

கையில் இருந்த பணத்தை கண்களாலேயே எடை போட்டபடி “ம்.. போதும் போதும்” என

“வி..க் கி..ரா.. கரெக்ட்டா பண்ணி.. டு… வல்ல.. என்னோட மூனு வருச காதல்” குளறல் உளறலானது.

“ஆமாம் ஆமாம் உன் மூனு வருஷ காதல் இந்த ஐஞ்சு மாச சம்பளத்தில் தான் இருக்கு..” என கிண்டலாய் கூறியவன் “டோன்ட் வொரி பேபி.. விக்ரா இருக்க பயமேன்” முருகன் போல் கை வைத்து இவன் அருள் பாலிக்க, இவன் சொன்ன சந்தேஷ செய்தியிலோ, இல்லை வாய்க்குள் போன போதையாலோ கலகலத்து சிரித்தாள்.

“மகா பாவமில்லையா?” கேட்டுவிட்டு இப்போது குடிப்பது இவன் முறையானது.

“நீ கல்யாணம் பண்ணிக்க” பட்டென போட்டு உடைக்க

“நானா?” கையில் இருந்த பாட்டிலை இறுக்க பிடித்தான் விக்ரா.

“ஆமாம் நீ்தான்.. மகா மேல உனக்கு ஒரு கண்ணுன்னு எனக்கு தெரியுமே” என கேட்டு அதிர வைத்தாள் அவனை.

அதில் திடுக்கிட்டு, சுற்றிலும் பார்வை ஓட்ட, “ஹ..ஹ..’ பெரிதாய் சிரித்தவள்..

“என்ன மாட்டிகிட்டன்னு முழிக்கிறியா?” “எனக்கு தெரியும்.. நீ தனியா மொட்டமாடியில் போனில் மகா மகான்னு பேசிட்டே இருக்குறதை பார்த்திருக்கேனே” இவள் கண்ணடிக்க

“ஓ.. மகான்னா அது இவ ஒருத்தி தானா?”  என முறைத்து பார்த்தவனை

“சும்மா முறைக்காத சரியா. உண்மைய தானே சொல்றேன். சொன்னதை நியாபகம் வச்சுகிட்டு முடிச்சிடு” என சொல்லிவிட்டு மீதமிருந்த சிக்கனை ஒரு கை பார்த்தாள்.

“நீ சொல்லி செய்யாமலா? உனக்கு விஜய், எனக்கு மகா.. அங்க அவனுக கொண்டாடுறானுகளோ இல்லையோ, இங்க நாம நல்லா கொண்டாடுறோம்ல பேச்சுலர் பார்ட்டியை, அதுவும் பகல்ல” விக்ராவும் உளறியபடி கூற, கூடவே இருவரது கைக்கும் பாட்டில் கைமாறிக்கொண்டே இருந்தது.

நேரமாக நேரமாக போதை தலைக்கு ஏறியது இவளுக்கு. அதை உணர்ந்து “லாவா போதும்..” என அவளிடமிருந்து பாட்டிலை பிடுங்கி ஓரமாய் வைத்துவிட்டு,

“வீட்டுக்கு போய்டுவியா.. இல்லை நான் வரவா” இவன் கேட்க..

“வரவா வா..வா? நீ தான் வரனும்.. அப்றம் ம்ம்மீனா.. சோத்துல்ல வெஷம் வச்சிருவாஆஆ” இழுவையாய் இழுத்தாள்.

“சரி வா…” என அவளுக்கு கை கொடுத்து தூக்கியவன், தோளிலிருந்து சரிந்த துப்பட்டாவை சரிசெய்தான்.

“ஆனாலும் இந்த ஆம்ளைக எல்லாம் ஏன் கஷ்டம் வந்தா குடிக்கானுவனு இன்னக்கு தான் தெர்து.. இல்லல்ல, கொஞ்ச நாள்..ளா தெர்து”

“என்ன தெர்து”

“ம் எல்லா..த்தையும் போதையி..ல்ல மற்ந்து.. வானத்லயு, காத்துலயு சொம்மா மித..ந்..துட்டு.. குஜாலாகீது டா..”

“இப்போ எப்டிருக்கு தெர்மா.. கன்னுகொட்டி தேடி வந்தே தண்ணி தட்டி நான்..னு பாட்டை பாடிகிட்டே இந்த கிணத்.. மேல ஒரு ரவுண்டு போவனும்.. போலக்குது”

பாட்டை தப்பு தப்பாய் பாடியதில் சிரித்து வைத்தவன்

“ஓய்.. அதென்ன பைபாஸ் ரோடா.. ரவுண்டு போவனுமாம்? கிணறுடி.. விழுந்தன்னு வச்சுக்க” இவன் இழுக்க

“பின்னாடியே குதிச்சு காப்பாத்த தான் நீ இருக்கியே”

“ம் இதெல்லாம் நல்லா தெளிவா பேசு..” என்றவனின் ஒரு கை இவளை கிணற்றின் சுற்று சுவரின் மேல் ஏற உதவி செய்ய.. மற்றொரு கையோ.. செல்போனை எடுத்து அவள் கேட்ட பாடலை ஒலிக்கவிட்டது.

“ஹேய்..” என கூச்சலிட்டவள் “நானே பாட..லம்னு இந்தேன்..” என குதூகலிக்க

“இப்போ மட்டும் என்ன சேர்ந்து பாடு” எனவும்

இன்னும் கூடிய குதூகலத்தோடு பின்பாட்டும் பாடதுவங்கினாள் ஒரு வரி விடாது.

“தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி

என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி”

கூடவே பாடியவளுக்கு அப்படி ஒரு அத்ம மகிழ்ச்சி அவளது குரலில் வெளிப்பட

அது விக்ராவையும் தூண்டிவிட, அவனும் இணைந்தான் அவளோடு..

“சாராயத்தை ஊத்து..

ஜன்னலைத்தான் சாத்து

சாரயத்தை ஊத்து..

ஜன்னலைத்தான் சாத்து”

அவனோடு பாடிக்கொண்டும், இடை வளைத்து ஆடிக்கொண்டும் கிணற்றின் சுற்று சுவரை இவன் கை பிடித்து கொண்டு வலம் வந்தாள்.

இன்னும் தொடர்ந்தது இந்த இரு இசைகலைஞர்களின் போதை கலந்த குரல்

“புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்

ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா

இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா” என காட்டு கத்தலில் கத்தினர்.

இருவரின் குரல் நன்றாக இருந்ததா எனகேட்டால் பதில் இல்லை தான்.

சந்தோஷ ஊற்றை கொப்பளிக்கும் அவள் குரலும், அவளது சந்தோஷத்திலேயே முக்குளிக்கும் இவன் குரலும், ஒரு வகையான உணர்வை, அதிர்வை உள்ளுக்குள் பிரவாகமாய் பொங்கி எழ செய்தது.

மகிழ்ச்சி என்பது மற்றவரை சார்ந்தது அல்ல.. உனக்கே உரித்தானது, உனக்குள் உதயமாவது, அதை நிரூபிப்பது போல்…

வானில் பறக்க வைக்கும் போதை,

மனம் நிறைய மிதக்கும் கல்யாண கனவு,

அதை வெளிக்கொணரும் இசை,

அதை எல்லாம் நிறைவேற்றும் நண்பன்

என சகல சந்தோஷமும் சேர, உலகின் ஒட்டு மொத்த சந்தோஷமும் எனக்கே எனக்கு என்பதை போல சத்தமாய் பாடிக்கொண்டும் கிணற்றின் மேல் ஆடிக்கொண்டும் அந்நிமிடங்களை அவளுக்குரியாதாக்கி கொண்டாள் லாவா.