போனை ஒரு பக்கமாய் விட்டெறிந்து, சரசரவென புடவையையும், ஏனைய உடைகளையும் அவிழ்த்தெறிந்து, அதை மூட்டையாய் சுருட்டி பீரோவினுள் திணித்து, தன்னையும் ஒரு நைட்டிக்குள் திணித்துவிட்டு, காற்றில் பறந்த கார்மேக கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, முகத்தில் இருந்த அத்தனை கோட்டிங் மோக்கப்பையும், வெட் வைப்ஸ்ஸினால் அழுந்த துடைத்து அதை தடயமே இல்லாமல் ஜன்னல் வழியே தூக்கி எறிய,
அதுவோ வெளியே நின்றிருந்த பானிபூரி காரனின் ‘பானி’யில் சென்று விழ, ’ஐய்யய்யோ’ என பதறி ஜன்னலை விட்டு விலக, அங்கே திடுக்கிட்டு போனவனோ, பதறிப்போய் சுற்றி சுற்றி பார்வையை ஓட்டினான்.
“ஐய்யோ இவனோட ஒரு நாள் வியாபாரம் என்னால போச்சே” புலம்பியபடி ஜன்னலின் வழியே மீண்டும் பார்வையை ஓட்ட, பானிபூரிகாரனோ எட்டுதிசைக்கும் எட்டி போட்ட விழிகளின் வழியே யாருமில்லை என்பதை உணர்ந்து, ‘பானி’யில் கிடந்த வைப்ஸ்ஸை எடுத்து கீழே போட்டுவிட்டு, அவ்விடத்தை விட்டு இவன் நகர்ந்தான், என் தொழிலை எதுவும் பாதிக்காது என்பதை போல்.
“அட பாடையில போற பானிபூரிகாரா” நெஞ்சில் கைவைத்தவளுக்கோ ‘அதே பானிபூரிகாரனிடம் தினம் தினம் வேலைமுடிந்து ஆறு மணி போல் களைத்து வருபவளுக்கு, தெருமுனையில் இருக்கும் இதே பானிபூரிகாரனின் ஆறு பூரிகளை, ஏழு நாளும் வாரி வழங்க, வழங்க அதை வாங்கி ‘பே’ வென ஒன்றையடி அகலத்திற்கு வாய் திறந்து, உள்ளே தள்ளுபவளுக்கு, தின்ற அத்தனை பூரிகளும் வெளியே வருவது போல் இருக்க, ‘ஓஹ்….’ என ஓங்கரித்து கொண்டு வந்தது.
ஆனால் ஆம்புலன்ஸ் சைரன் போல் தொடர்ந்து அடித்து கொண்டிருந்த காலிங் பெல் சத்தம், பத்ரகாளியான மீனாவை நினைவுக்கு கொண்டுவர, தொண்டை வரை வந்த வாந்தி அப்படியே நின்றது.
“மம்மி, நீ ஒன் மேன் ஆர்மினு நினைச்சேன், இப்போ தானே தெரியுது, ஸ்பீடா வர்ற வாந்தியை கூட அதே ஸ்பீடுல நிப்பாட்டுற டிராபிக் போலீஸ்னு..” மனம் வாந்தி நின்றதில் குதுகளிக்க, துள்ளளுடன் ஓடினாள் வாசலுக்கு, அரக்கபறக்க கதவை திறந்தவளிடம்,
பத்ரகாளி, ருத்ரகாளியாய் முறைத்து நின்றாள் மீனா.
“வயசுப்புள்ளை கதவை பூட்டிக்கிட்டு என்னடி பண்ற, அதுவும் கதவை திறக்க இம்புட்டு நேரம்” அவள் மேலிருந்து கீழாக பார்வை ஓட
லாவா.. அலர்ட் ஆகுடீ… மீனா உன் வாயை புடுங்குறா…, ம்ம்ம்.. அலர்ட் அலர்ட்.. மனசாட்சியை தயார் செய்து
“திறந்து கிடந்தா.. ஏழு கழுதை வயசாச்சு, கதவை பூட்டனும்னு அறிவில்லையான்னு கேட்ப.. பூட்டி வச்சா, பூட்டிகிட்டு என்ன பன்ற? அறிவில்லையானு கேட்குற.. உன் பிரச்சனை தான் என்ன?
நான் உனக்கு மக தானே.. மருமக இல்லைல்ல.. ஆகாத மருமக கைப்பட்டா குத்தம், கால்பட்டா குத்தம்னு, மருமக மாதிரி தான் ட்ரீட் பண்ற..
நீ எனக்கு அம்மாவா? இல்லை மாமியாவா?
எல்லா பொண்ணுகளுக்கும் கல்யாணத்துக்கு பிறகு தான் மாமியா வருவா.. ஆனால் எனக்கு பிறக்கும் போதே அனுப்பிவிட்டுட்டான், அதுவும் தாய் ரூபத்துல..
இந்த டிக்ஷனரியில எல்லாம் அம்மான்ற வார்த்தைக்கு டெபனிஷன் இருக்கும்ல.. அதுக்கும் உனக்கும் ஏணி இல்லை ஏரோ பிளேன் வச்சாகூட எட்டாது” அஸ்டகோனலாய் மாறியது முகம்.
“ஏய் என்னடி, வாய் நீளுது.. என்னை பேசவிடாமல், நீ பக்கம்பக்கமா டயலாக் அடிக்குறதை பார்த்தா சிறப்பா ஏதோ சம்பவம் பண்ணிருக்க போல, நான் இல்லாத நேரத்தில் என்ன பண்ணின? சொல்லுடி” என சரியாய் லாவாவின் கேடிதனத்தை கண்டு கொண்டார் மீனா.
“எ..என்ன.. சி.. சிறப்பான.. சம்..பவமா.. அதுவும் நா..நானா… இஇஇ.. இல்லையே” ஈ.. என இளித்து வைத்தவளிடம் அதுவரை பத்து சதமிருந்த சந்தேகம் நூறு சதமாய் உறுதியாய் மாறியது.
“ம்மா.. மாமியா மருமக சண்டையை அப்புறமா போடுங்க.. கொஞ்சம் வழி விடுறீங்களா?” என மகாவின் குரல், சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் மனநிலையை திசை மாற்ற.
முந்தி கொண்டாள் லாவா..
“ஏய் வாடி மகா.. வா உள்ள வா.. அம்மா அப்படி தான்.. நீ அதைல்லாம் கண்டுகாத” ஈ என இளித்து கொண்டு ‘யப்பா.. மீனாவோட என்க்வ்யரில இருந்து கிரேட் எஸ்கேப்..
மகா நீ வாழ்க
நூறாண்டு காலம் வாழ்க,
என் விஜயை விட்டு மத்த எவனா இருந்தாலும் அவன் கூட வாழ்க,
சந்தோஷமாக வாழ்க
சண்டை போட்டு வாழ்க
சாகுற வரை நல்லா வாழ்க’ மனதில் இருந்ததை பாட்டாகவே படித்தாள் லாவான்யா மனதினுள்.
‘இன்னைக்கு தப்பிச்சுட்ட.. மவளே ஒரு நாளைக்கு மாட்டுவல்ல..’ முறைத்து கொண்டிருந்த மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி, மகாவை உள் அழைத்து சென்று சோபாவில் அமரவைக்க, அந்த கேப்பில்
“டீ லாவா.. வெளியே போகனும்.. சீக்கிரமா டிரெஸ்ஸ மாத்திட்டு வா” மகா குரலே வராத ஒரு குரலில் கூறிவிட்டிருக்க,
‘இத இத தான் எதிர்பார்த்தேன்’ என அவளது அறைக்குள் உடை மாற்ற ஓடினாள் லாவா.
மீனாவோ கையில் இருந்த பைகளை எல்லாம் டேபிளில் வைத்துவிட்டு “என்ன மகா.. கல்யாணத்தை நாளைக்கு வச்சுட்டு இங்க என்ன பண்ற? உங்க வீட்டில் எப்படி தனியா விட்டாங்க” என கேட்க
“தனியா எப்படி விடுவாங்க ம்மா.. அண்ணா கொண்டு வந்து உங்க வீட்டு வாசல்வரை விட்டுட்டு, உங்களையும் பார்த்ததுக்கு பிறகு தான் போனான். பர்சனலா கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும்மா.. அதான் லாவாவை கூட்டி போகலாம் வந்தேன்” என மகா கூற
“மகா, அப்படி என்ன பொருள் வாங்கனும்” என வாயை கிளறியவரின் முன்பு சுடிதாரில் தயாராகி, வந்த லாவா..
“ம்மா.. அதெல்லாம் பர்சனலா கல்யாண பொண்ணுக்கு நிறைய பொருள் தேவைப்படும். அதெல்லாம் உனக்கெதுக்கு. அரை மணிநேரத்தில் வந்துடுவேன், போகும் போது திட்டாத, எங்க போற எப்படி வருவன்னு கேட்டு கொல்லாத.. பிறகு விழுந்து வாரிட்டு வந்துடுவேன். அப்புறம் நீ்தான் எனக்கு பெட் பேனெல்லாம் வச்சு கவனிச்சுக்கனும். வந்தபிறகு வச்சுக்கோ உன் சுப்ரபாதத்தை” லாவா பேசியது மீனாவிற்கு உச்சபட்ச எரிச்சலை மூட்ட
வந்ததே மீனாவுக்கு கோபம் “என்னடி வர வர வாய் வாடிவாசல் வரைக்கும் நீளுது. இவ்வளவு வாய் பேசிட்டு நீ் இங்க இருந்து போய்டுவியா.. போயேன் பார்க்கலாம்” விளக்குமாரை கையில் எடுத்தபடி இவளை நெருங்க,
‘அய்யோ வெளக்கம் செல்றதுக்கு பயந்து வெளக்குமாத்துகிட்ட மாட்டிகிட்டனே.. ஏ.. ராதை கிழவி.. பொண்ணயா பெத்து போட்டுருக்க.. இருக்கு உனக்கு ஒரு நாளைக்கு, தரமான சம்பவமா வச்சு செஞ்சுவுடுறனா இல்லையான்னு பாரு’ கவலை, பயம் கோபம், ஆத்திரம் என பலவகை ரசங்களையும் கொட்டிய லாவாவை காக்கும் பொருட்டு.
“ம்மா ப்ளீஸ்மா.. எனக்கு இவளை விட்டா வேற யாரு இருக்கா.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறோம், இப்போவே அம்மா கொடுத்த டைமில் கால்மணி்நேரம் போய்டுச்சு, இனியும் லேட்டா போனால் பாவம் அம்மா.. பயந்து டென்சன் ஆகிடுவாங்க” முகத்தை குழந்தை போல் வைத்து, கெஞ்சி, கொஞ்சி கேட்பவளிடத்தில் யாருக்கு தான் கோபம் வரும்.
அதுவும் அவளது தாய்க்காக கவலையோடு பேசுபவளிடத்தில் மீனாவிற்கு கோபம் அப்படியே அடங்க,
“உனக்காக மட்டும் தான் விடுறேன் இவளை. போறது சரி சீக்கிரம் அவளை கூட்டிட்டு வந்துடு மகா.. நீயும் சீக்கிரமா வீட்டுக்கு போ..” என அனுமதி வழங்க, ஓடி போய் அவர் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து ஓடியபடி,
“அடுத்த வீட்டு ஆளு மாதிரி முகூர்த்த நேரத்திற்கு வராமல் சாயந்தரமே மண்டபத்துக்கு வந்துடுங்கமா” என கூறியபடி பறந்தாள், ‘அப்பாடி கிரேட் எஸ்கேப், மீனா கிட்ட இருந்து’ என துள்ளி குதித்து தனக்கு முன்பே சென்ற லாவாவுடன் இணைந்து கொண்டாள்.
இவர்கள் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு சென்ற சில நிமிடங்களிலேயே, “ஏய் அப்படி என்னடி பொருள் வாங்கனும்.. என்கிட்ட எதுவுமே சொல்லையே, நானும் மீனாகிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு உன்கூட வந்துட்டேன்” என ஆரம்பிக்க, அதற்கு மகா பதில் சொல்லும் முன்பே, அவர்கள் முன் சடன் பிரேக் அடித்து தன் பல்சரை நிறுத்தினான் விஜய்.
அவ்வளவு தான் அதுவரை தாயினால் விளைந்த இறுக்கமெல்லாம் பறந்து, தன் எதிரில் தன் கனவு கண்ணன் நிற்பதை கண்டு ‘தந்தன தந்தன தந்தன தாளம் வரும்’ என மனம் பின்னனியில் தாளமிட்டுகொண்டு அப்படியே காதலோடு கலந்த புன்னகைக்கு மாறியது மகாவின் முகம் அல்ல, லாவாவின் முகம். பதிலுக்கு விஜயின் முகம் பலமடங்கு பிரகாசத்தை காட்டியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்கையிலேயே
அவர்களது அந்த மோனநிலையை குரூரமாய் பார்த்தவள் “டீ லாவன்யா, எங்கம்மாகிட்ட இருந்து தப்பிக்க தான் உன்னை இழுத்துட்டு வந்துட்டேன். இனி நீ் தேவையில்லை, எங்கையாவது சுத்திட்டு வீட்டுக்கு போடி” என்ற மகாவின் குரலில் சட்டென தெளிந்தவள் கண்களில் கண்டது, பல்சரை ஓட்டி சென்ற விஜயும் இரட்டை காலிட்டு அவன் பின்னால் அமர்ந்து சென்ற மகாவும் தான்.
ஒரு வேளை கனவோ என முகம் பீதியோடு மாறி சட்டென திரும்பி தன் பின்பக்க சீட்டை பார்க்க, அதுவோ காலியாய் கிடந்தது.
‘அடிபாவி எனக்கு மேல நீ கேடியா இருப்ப போல.. அசந்த நேரத்துல ஆட்டைய கலச்சிட்டியேடி.. உன்ன போய் எங்கம்மா நம்பிட்டு திரியுது நல்லவன்னு.. என்ன பொய்யி.. என்ன நடிப்பு.. ஏ.. எப்பா.. ஏசப்பா’ எரிச்சலும் கடுப்புமாய் புலம்பியதில் முகத்தில் எள்ளும் கொள்ளுமா மட்டுமா வெடித்தது, பல நூறு வெடிகுண்டுகளே வெடித்து சிதறியது.