வேலை பார்க்கும் இடத்தில் விக்ரவாண்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர்.

அதோடு ராதையம்மாளின் உடல் நிலை சரியல்லையென, அவனது தந்தை நான்காவது முறையாய் போன்வழியாக கூறி இருக்க,அவசரமாய் இவனும் கிளம்பி நேற்று பெரம்பலூர்க்கு வந்துவிட்டான்.

பஸ் ஸ்டாண்டில் இருந்து விக்ராவை அழைத்து செல்ல, செல்லபாண்டி சைக்கிளை எடுத்து கொண்டு வந்திருந்தான்.

கையில் ஒரு லெதர் பேக்கும், தோளில் ஒரு லெதர் பேக்கும் சுமந்தபடி “ஏண்டா, ஊருக்குள்ள அவ்வளவு தூரம் போகனும் டூவிலர் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல” என விக்ரா கேட்க

சைக்கிள்ல போனால், “ஏண்டா இவ்வளவு லேட்டூ ன்னு’ சமரசு கத்த மாட்டார்” செல்லபாண்டி சிரிக்க

“நீ் தேறிட்டா டோய்” பெரிதாய் இவனும் சிரிக்க

அந்நேரம், இவர்கள் முன் சடன்பிரேக் அடித்து நின்றது பாக்ஸர் பைக், அதோடு பைக்கை உரும விட்டபடி, விக்ராவின் முகத்திற்கு நேராக ஹெட்லைட்டை அடிக்க,
முகத்திற்கு நேராய் விழுந்த வெளிச்சத்தை கை வைத்து மறைத்து, அந்த இடைவெளியில் பைக்கில் இருந்த வீரா, சங்கர் இருவரையும் கண்டு கொண்டவன் “ஏண்டா ஒருத்தன் வந்தா பத்தாதா? ஏண்டா அத்தனை பேரும் கிளம்பி வந்திருக்கீங்க” விக்ரா கேட்க

“நம்ப மாம்ஸ் வாங்கி கொடுத்து விட்டாருடா..  வாங்கி வச்சு ரொம்ப நாளாச்சுடா.. வீட்டுக்கு போனால் முடியாதே.. அதான்” என்றபடி மிலிட்டரி ரம் பாட்டில் இரண்டை உயர்த்தி பிடித்தபடி ஆட்டினான்.

“டேய், நம்ப தாய்கிழவிக்கு தெரிஞ்சா விளக்கமாறு பிஞ்சுடும்ல.. ஒளிச்சு வைல.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்ற விக்ராவை, நயமாய் பேசி, ஆசைகாட்டி இழுத்து கொண்டு சென்றனர்.

மெயின் ரோட்டில் இருந்து பிரிந்த ஒற்றயடி பாதை கொண்ட சற்று உள் அடர்ந்த கருவேலமரங்கள் சூழ்ந்த பகுதி அது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக வீற்றிருந்த போஸ்ட் லைட்களின் உதவியால் வெகுவாய் இருட்டு இல்லை. ஆனால் அதிலும் இரண்டு மூன்று போஸ்ட் கம்பங்களில் இருந்த லைட்டுகள் பழுதாகி எறியாததால் சில இடங்களில் மட்டும் கருமையுடன் பீதி கொள்ள வைக்கும் இருட்டு சூழ்ந்திருந்தது.

சற்று வெளிச்சம் குறைந்த பகுதியாய் தேர்ந்தெடுத்து, மரத்தடியில் கும்பலாய் வட்டம் கட்டி அமர்ந்து முட்ட முட்ட குடித்துவிட்டு, செல்ல சண்டைகளும், சில்மிச பேச்சுகளுமாய் இளவட்டங்கள் எந்தவொரு கட்டுபாடுகளுமின்றி கும்மாளமிட்டனர் வெகு நேரமாய்.
பாட்டில் தீர்ந்ததும், உடல் உறக்கத்தை வேண்டவும் தான் அவ்விடம் விட்டு அகன்றனர் நால்வரும்.

செல்லபாண்டி சைக்கிளின் முன்னால் அமர்ந்து பெடல் போட, பின்பக்கம் இரு கால்களையும் பக்கத்திற்கொன்றாய் தொங்க போட்ட படி கைகள் இரண்டையும் செல்லத்தின் இடையில் கை போட்டு இறுக்கியபடி சங்கர் அமர்ந்திருக்க, அவர்கள் பின் பாக்ஸரில், வீரபாண்டியை பின்னால் அமர்த்தி, சைக்கிளின் பின் கால் வைத்தபடி விக்ரவாண்டி வண்டி ஓட்ட, பெடல் போடாமலேயே சைக்கிள் தன்னாலேயே சென்றது.

குடி போதை, வெகு நாள் பிரிவு என நால்வரும் குதூகலமாய் பேசிக்கொண்டும் கும்மாளமிட்டு கொண்டும், அந்த நிசப்த இடத்தை சிரிப்பால் நிறைத்தபடி அவர்களோடு அவர்களது இரு சக்கர வாகனங்களையும் உலட்டி கொண்டே சென்றனர்.

அவர்களது பேச்சும் சிரிப்பும் அந்த அத்துவான ஒத்தயடி பாதையில் எதிரொலித்து கொண்டிருக்க, முதல் ஆளாய் சைக்கிளை செலுத்தி கொண்டிருந்த செல்லாவிற்கு, கண்ணில் விழுந்த காட்சிகள் கருத்திலும் பதிந்தது.

எரியாத போஸ்ட் லைட்டுகள்  ஆள்நடமாட்டமில்லாத பாதை என அவ்விடம் மட்டும் விர்விர்ரென காற்றடித்து ‘வ்வோய்ங்’ என காதை கிழித்து சென்ற காற்று, கிழியை பறப்பும் பேயிருட்டு, கூடவே இவர்களது சிரிப்பு என செல்லத்திற்கு லேசாய் வயிற்றை கலக்கியது.

“ஏலே.. நாம சிரிக்குற சத்தம் எக்கோவடிச்சு மறுபடியும் நம்ப காதுலயே விழும் போது பேய் சிரிக்கிற மாதிரி இருக்குடா.. ஊருக்குள்ள போற வரைக்கும் கொஞ்சம் சிரிக்காமல் வாங்கடா” செல்லம் சொல்ல

“நாமளே பெரிய பேய்.. அதுவும் நாழு பேய், நாம இருக்குற இடத்துல எப்படிடா ஒரு பேய் வரும்” சங்கர் உளற

“ஏய் வர்றது தான் வர சொல்ற, நாழு பேயா வர சொல்லு.. ஆளுக்கு ஒன்னொன்னு” வீரபாண்டி குளற

“ஏய் ஐஞ்சா வர சொல்றா.. எனக்கு மட்டும் இரண்டாக்கும்” ஒற்றை கையில் வண்டியை பிடித்துகொண்டு, மறு கையில் சட்டை காலரை தூக்கி விட்டு விக்ரா சிலுப்ப, காடே அதிர்ந்தது அவர்களது சிரிப்பு சத்தத்தில்.

“மொத சிரிக்கிறத விட, இப்போ நீங்க சிரிக்கிறத பார்த்தா எனக்கே பயமா இருக்குடா, சிரிச்சு தொலைக்காதீங்கடா, காத்து வேற விர் விர்னு அடிக்கி, மனசு வேற படபடன்னு துடிக்கி” சொல்லி முடித்த நொடி, முழு வெள்ளையில் ஒரு உருவம் மின்னலென இவர்களை கடக்க

“யம்மே…ஏ…ஏ….” அலறிய செல்லத்திற்கு சைக்கிளை கட்டுபடுத்த முடியா அளவிற்கு நரம்புகள் இழுபட,

பிரேக் பிடித்து அழுத்த வேண்டிய கைகளுக்கு பதில் பெடலை வேகவேகமாய் கால்கள் அழுத்த, ஏற்கனவே பைக் சென்ற அதே வேகத்தோடு இவன் பெடல் போட்டது சேர்ந்து சைக்கிளின் வேகம் இன்னுமே அதிகரித்தது.

கிடுகிடுவென அவனோடு சைக்கிளும் நடுங்க ஆக மொத்தம், சாலையை விட்டு சைடில் இருந்த பள்ளத்தில் பயணித்தது.

பெடல் போட்டவன் பட படவென பெல்ட்டி அடித்து சரிவில் சரிய, பின்னால் அமர்ந்து வந்த சங்கரபாண்டியோ, செல்லபாண்டியின் தலைக்கு மேல் தாண்டி கொண்டு பறந்து போய் மண்ரோட்டில் ‘அய்யோ.. ஆத்தா’ என அலறிகொண்டு விழ

இவர்கள் இருவர் செய்த அழிசாட்டியத்தில், விக்ரா சடன் பிரெக் அடித்து பாக்ஸரை நிறுத்த, பிடிமானம் இல்லாத வீரபாண்டியோ ‘கிர்’ ரென பறந்து ‘கிருட்டு கிருட்டு’ என சுழன்று, ஏற்கனவே எழமுடியாமல் தவழ்ந்து கொண்டிருந்த சங்கரபாண்டியின் மீது போய் ‘பொத்’ என விழ, ‘யாத்தே’ என இவன் அலறிய அலறலில் காடே கிடுகிடுத்தது.

தப்பி நின்றது விக்ரா மட்டும் தான். பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் நேரத்தில்,

தட்டு தடுமாறி எழுந்து நின்ற மூவரும், எதனால்? யாரால்? யார் யார் மீது விழுந்து வாரி இருக்கின்றனர்? என யோசிக்க துவங்கிய கனம், ‘டங்’ கென அவர்கள் முன் குதித்து நின்றது ஒரு உருவம்.

கல்லறையில் வெள்ளை துணி கொண்டு கட்டி புதைக்கபட்ட ஒரு உருவம் அவர்கள் முன் ‘ஜங்’ என குதித்து நிற்க,

‘எம்மா எங்கம்மா இருக்க.. என்னைய காப்பாத்தும்மா’ செல்லபாண்டி எடுத்தானே ஒரு ஓட்டம் தலை தெறிக்க,

மறுபக்கம் சங்கரபாண்டி ஓட்டம் எடுக்க எத்தனிக்க, காற்றில் சர்ரென பறந்து வந்த இரத்தம் கன்றி,குருதி வழிந்து, சதைகள் தோய்ந்த ஒரு உடல் அவன் மேலேயே வந்து விழ,

மேலும் அலறினான் சங்கரபாண்டி, தன் மேல் விழுந்த அழுகிய உடலை உருட்டி தள்ளுகிறேன் என அந்த உடலோடு உருண்டு பிரண்டு எழுந்து செல்லத்தை விட அதி ஓட்டமெடுத்து, அவனுக்கு முன்பாய் ஓடியிருந்தான் சங்கர்.

முழு வெள்ளையில் காற்றில் பறந்த உடை, இடைவரை கோரைபுற்களாய் வளர்ந்த கூந்தல் என தனக்கு முதுகு காட்டி நின்றிருந்த அந்த உருவத்தை, பைக்கை ஸ்டாண்ட் போட்டபடி பார்த்திருந்தான் விக்ரவாண்டி.

‘ஒருத்தன் உயிர் போற மாதிரி அலறிக்கிட்டு ஓடுறான், இன்னொருத்தன் உயிரே போய்ட்டா மாதிரி பறந்துகிட்டு போறான்.

இவன் என்னடான்னா, பேயை சைட் அடிச்சிட்டு இருக்கான். சைட் அடிக்கிறனாலும் ஒரு நியாயம் வேணாமாடா?
“லேய் விக்ரா.. விக்ரா..” கீழே விழுந்து எழுந்து வந்த வீரா அவனது கையை சுரண்ட

“என்னடா..” இவன் சலித்து கொள்ள

“லேய்.. வாவே ஓடிடலாம்” முதுகு காட்டி நின்ற உருவம் எப்போது தன் கோர முகத்தை காட்டுமே, தங்களை ஒரு காட்டு காட்டுமோ? ‘இவன் வேற காம பார்வை பார்க்குறானே’ என வீரா பயத்தில் நைசாக இவன் கையை மீண்டும் சுரண்ட,

விக்ரவாண்டியோ “சும்மா தான் இரேண்டா” இவனிடம் எரிச்சலில் கத்த,  படாரென இவர்களை நோக்கி திரும்பியது கோர முகத்துடன் இருந்த அந்த உருவம். வெறும் காற்று வீராவின் தொண்டைக்குழிக்குள்  ஏறி இறங்க, மெல்ல நடையிட்டு தங்களை நோக்கி வந்து கொண்டிருந்ததை வைத்த கண் வங்காமல் பீதி கிளம்பியது.

அந்த பேய் விக்ராவை நோக்கி ஒவ்வொரு அடியாய் நெருங்கி வர, இவனோ அதை விட இருமடங்கு வேகத்தோடு அதை நெருங்க போக
நெருங்க விடாது அவன் கையை பிடித்து தடுத்து

“லேய் விக்ரா.. என்னடா, பேய்கிட்ட போற”

“பெண்ணு தான் சிக்கலை..”

“அ..ஆ…துக்கு”

“பேய் சிக்கிருக்கு..”

“அ..ஆ..துக்கு?”

“ இருடா ஒரே ஒரு தடவை”

“ஒரே … ஒரு தடவை”

“ச்சை .. நீ ஒரு இம்சடா.. அதை என் வாயால வேற சொல்லுமா.. நீ எதை நினைக்கிறியோ அதை தான் செய்ய போறேன்” சொன்ன நொடி, இவன் பிளந்ததை விட, அந்த கோர உருவம் வாய் பிளந்து நிற்க
அந்த கேப்பில் அவ்வுருவத்தை நான்கே எட்டில் அணுகி, அதன் கைபிடித்து இழுக்க, இம்முறை அலறிக்கொண்டு ஓடுவது பேயின் முறை ஆக,

வைத்திருந்த விக்கும், வெள்ளை உடையும் ஓடிய ஓட்டத்தில் அது அது பக்கத்திற்கு ஒன்றாக பறந்தோட, பேய்க்கு பதில் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள்.

பேயையே விடாதவன் விக்ரவாண்டி, பெண்ணை விடுவானா? பின்னோடு துரத்தி கொண்டு ஓட,..இருவருக்கும் இடையே இருந்த ஒரு ஆறடி தூரத்தை கணக்கிட்டு, ‘ம்ஹூம் இது ஆவுறதுக்கில்லை’ என ஓரே பாய்ச்சலில் தாவ, இவன் நேரம் அந்த பேய் விலகிட, எதிரே திருதிருவென இவனை தேடி வந்த சமரசபாண்டியின் மீது பாய்ந்தான் விக்ரா.

“செத்தாண்டா சமரச பாண்டி” வீரா வாய் விட்டே கூறினான்.

‘இந்த விக்ரா பயல கூப்ட போன மூனு பாண்டி பயலுகளையும் காணோம்’ இன்னும் என்ன பண்றானுங்க’ என நான்கு பாண்டிகளையும் தேடி வந்த சமரசுவிற்கு விக்ரா ஒரு பெண்ணை துரத்தி கொண்டு வருகிறான் என்பது மட்டும் உறைக்க, ‘அடப்பாவி பயலே, பொம்பள புள்ளைய துரத்துற’ வாய்பிளந்து நின்ற நொடி, அந்த பெண் விலகியதில், அவ்விடத்தில் நின்றிருந்த சமரசுவின் மேல் நச்சென மோதி, அவரின் மேலேயே விழுந்து உருள, கரும்பு மெசிஷினிற்குள் மாட்டினாற்போல் ஆனார் சமரசு.

பிளாஸ்பேக் முடியும் முன் கேட்டு கொண்டிருந்த அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்க,  நாச்சி அதற்கும் மேல் சிரித்தார். “அப்புறம்” என நாச்சி சிரிப்பினுடேயே இழுக்க

“அப்புறம் என்ன? ‘முளைச்சு மூனு இலை விடலை அதுக்குள்ள பொண்ணு கேக்குதா உனக்கு, அதுவும் யாரு எவருன்னு தெரியாத புள்ளயை தொரத்தி தொரத்தி பாய்றன்னு,  கைக்கு கிடச்ச கம்ப எடுத்து அடி விளாசிபுடுச்சு சமரசு” என வீரா விளக்க

“ம் நான் அந்த பொண்ணு மேல பாய்ச்சதில் கடுப்பில்லை.. அவரால பாய முடியலேன்னு கடுப்பு” விக்ராவும் சேர்ந்து கொள்ள, இன்னும் உயிர்ப்புடன் சிரிப்பின் ஒலி இரண்டு மடங்காகி அந்த வீட்டையே நிறைத்தது.