இவன் கனவை நினைத்து பரிதவித்து, மனதோடு மல்லுகட்டிக்கொண்டு இருக்க
“இந்தாடி, இங்க நா பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், உன் மவன பார்த்தியா, இன்னமும் கனா கண்டுட்டு இருக்குறத, புள்ளயவா பெத்து வச்சிருக்க நீ” சமரசு ஏகத்துக்கும் எகிற
“ஆமா, அப்பன் எப்படியோ, புள்ளயும் அப்படி. நீர் மட்டுந்தேன், இவனை நினச்சு கவல படுதீரு, நான் அப்படியே சந்தோஷ கப்பல்ல மெதக்குறேன் பாரு” என பதிலுக்கு நாச்சியும் எகிற
“ஆமாமாம்.. உங்கொப்பன் வாங்கி விட்ருக்கான்ல.. கப்பல்ல மட்டுமா மெதப்ப, என்னயவே கடல்ல தூக்கி போட்டு, கட்டுமரமாக்கி அதுலையும் மெதப்படி நீ” நாச்சி எட்டடி பாய்ந்தால் சமரசு எண்பதடி பாய, இருவரும் எலியும் பூனையுமாய் சிலிர்த்து கொண்டு களத்தில் இறங்கினர்.
“இந்தா, ஆரம்பிச்சிட்டாக இரண்டு பேரும்.. காலம்போன காலத்துல கபடி ஆடிக்கிட்டு.. அதுவும் வாயாலையே” தலையில் அடித்துகொண்டான் செல்லப்பாண்டி
‘லேய், செல்லபாண்டி.. அவுகல விடுல.. விக்ராவை பாருடா.. ஏண்டா இவன் பேய் புடிச்ச மாதிரி இருக்கான்’ வீர பாண்டி கேட்டு முடிக்கும் முன், “பேய ஓட்டிட்டா போச்சு” பேச்சு பேச்சாக இருக்கும் போதே, விக்ராவின் பிடறியில் ‘பொடீர்’ என ஒன்று வைத்தான் செல்லபாண்டி
“அடங்.. கோ…” விக்ரவாண்டி என்ன சொல்ல வந்தானோ, அதற்கு முன் அவன் வாயை அடைத்த, செல்லபாண்டி, எதிரில் இருந்த பெரியவர்களை கண் ஜாடை காட்ட, சொல்ல வந்த வார்த்தைகள் அப்படியே தொண்டை குழிக்குள் இறங்கி கொள்ள, அதற்குள் நாச்சியுடன் இட்ட வாய் தகறாரு, வழக்கம் போல் வாரிக்கொண்டு சென்றுவிட, மனைவியிடம் தோற்ற கோபம், மகனிடம் வெற்றிகரமாய் திரும்பியதில் “ஏலே.. விக்ரவாண்டி” சமரசு உறும
தன் வாயிலிருந்த செல்லத்தின் கையை தட்டிவிட்டதோடு, “சொல்லுங்க சமரசபாண்டி” நேற்று அவரிடம் வகையாய் வாங்கிய அடி, அவன் வார்த்தைகளில் நக்கலாய் தெறித்தது.
“அடி செருப்பால.. பேர் சொல்லியா கூப்புடுத!”
“பேர் சொல்லி கூப்டா.. செருப்பால அடிப்பியோ தாடி, அப்போ நீ மட்டும் பேர் சொல்லி கூப்டலாமோ”
“ஆமாம் இவன் பெரிய வெண்ண, மரியாதை கொடுத்து கூப்ட.. முதல்ல அப்பான்னு கூப்பிட்டு பழகு, டாடி, தாடின்னுட்டு.. ச்சீ” என முகம் சுளிக்க
“இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை! ஏன் தூங்குற என்னை டார்ச்சர், பண்ணிட்டு, இருக்க? தாடின்னு கூப்டுறதான் பிரச்சனையா? இனி கூப்பிடலை சரியா”
“என்ன பிரச்சனையா?” “நீ தான்டா பிரச்சனை, நீ மட்டும் தான் பிரச்சனை, உயிரோட இருக்குற என் ஆத்தாளுக்கு செத்து போய்ட்டானு எதுக்குவே பேனர் கட்டுன”
“அப்ப இன்னும் அது சாவலையா, பேனருக்கு இழைச்ச காசெல்லாம் தெண்டமா? பொட்டு தூக்கமில்லாமல் நானே டிசைன் பண்ணினதெல்லாம் வேஸ்ட்டா?” இவன் புலம்ப
“ஏலே, என் ஆத்தா உசுரும், பேதில போற பேனரும் ஒன்னாவே..? எட்டி மிதிச்சன்னு வையி” காலை தூக்கி கொண்டு இவன் பக்கம் வர
“யம்மாஆஆஆ” அலறிக்கொண்டு, நாச்சியின் பின் மறைந்ததோடு “பாருமா உன் புருஷனை, காலை ஓங்கிகிட்டு எங்க வராருன்னு.. எனக்குனு இருக்குறது ஒன்னே ஒன்னு, அதையும் இல்லாம ஆக்க போறாரு.. அப்புறம் உனக்கு பேரன் எப்படி வருவான்.. பேத்தி எப்படி வருவா?”
“ஆமால.. ஏய்யா.. உமக்கு அறிவிருக்கா இல்லையா..! எங்க ஏறி மிதிக்க வாரீரு புள்ளைய?” புருஷனிடம் இவர் பாய்ந்தார்.
“எனக்கு நிறையா தான் இருக்கு, உனக்கும் உம்மவனுக்கும் தான் இல்லாமல் போச்சு போல.. ஆத்தாளும், மகனும் பேசுற பேச்சை பாரு, பேரனாம், பேத்தியாம்” மனைவியிடம் காய்ந்தவர்
“ஏண்டா, உனக்கு மட்டும் தான் ஒன்னு இருக்கு, மத்தவனுக்கெல்லாம் ஐஞ்சாறு இருக்கு பாரு.. ஏலேய் நீ இப்படியே பேசிட்டு கிட.. இருக்குற அந்த ஒன்னையும் களைய புடுங்கி எறியுற மாதிரி எறிஞ்சிடுறேன்” மகனிடம் எரிந்து விழுந்தார்.
“புல்லுகட்டோ, புண்ணாக்கோ, அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ பண்ற வேலைக்கு அடுத்து அதை தான் செய்ய போறேன். எங்காத்தா, அதுபாட்டுக்கு குடுக்குறத தின்னுபுட்டு ஒரு மூலையில் செவனேன்னு கிடக்கு, அது சாகுறதுல உனக்கென்னவே சந்தோஷம்?”
“சந்தோஷமா.. சந்தோஷம்லா இல்ல தாடி, நிம்மதி தாடி, நிம்மதி. நிம்மதியா, ஹைத்ராபாத்ல வேலை பார்க்குற என்னை ‘ஏலேய், உன் அப்பத்தா முடியாம கிடக்குடா.. கடைசியா உன்னைய பார்கனும்டா, உடனே கிளம்பி வாடா, பால் ஊத்த வாடா, பெருமாள் கோவில் தீர்த்தம் ஊத்த வாடா ன்னு என் உயிரை எடுக்க மாட்டிங்கல்ல, அதுக்கு தான் பேனர் கட்டுனேன்”
“ஏண்டா.. அதுக்காக என் ஆத்தாளை சாக சொல்றியா?” ஷாக் ஆனார் சமரசு.
“சும்மா மனுசன நிம்மதியாவேலை பார்க்க விடாமல் செஞ்சா, நான் ஏடாகூடமா இப்படி தான் பண்ணுவேன்”
“உன் ஆத்தா கூட தான் என்னைய நிம்மதியா இருக்க விட மாட்றா.. நீ என் ஆத்தாளுக்கு பேனர் கட்டுனல்ல, இரு நான் உன் ஆத்தாளுக்கு பேனர் கட்டுறேன்” சொல்லி முடிக்கும் முன், அலறிவிட்டார் நாச்சியா.
“ஏன்யா.. வாழ வேண்டிய வயசில என்னைய எதுக்குய்யா சாக சொல்லுத” எங்கே தனக்கு பேனர் கட்டிவிடுவாறோ என்ற பீதி நாச்சியிடம்.
“ஆமா, ஐம்பத்திமூனு வயசு உனக்கு வாழ வேண்டிய வயசா? நீயே சாக யோசிக்க, என் ஆத்தா உன்ன விட கொஞ்ச வயசு தான் மூத்தது அது வாழறதுல என்னடி தப்பு..” நாச்சியிடம் காய்ந்தவர்,
விக்ரா பக்கம் திரும்பி
“ஏவே நீ ஐதராபாத் போ.. இல்லை அலிபாபா குகைக்கே போ.. எங்க வேணா போவே, இனி என் அத்தாளுக்கு கொள்ளி கூட வைக்க நீ வர வேணாம், நீ இல்லனா, இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுன்னு நினைச்சியாவே. இனி கனவுல கூட நினைச்சு பார்த்துடாத என் ஆத்தாளுக்கு கொள்ளி நான் வச்சுப்பேன்.. இனி உன்னை கூப்புட்டா என்னை செருப்பால அடிவே” என்றவர்
“உன்னை ஐதராபாத்துக்கும், பெரம்பலூர்க்கும் அலைய விடறதுக்காக பேனர் கட்டுன மாதிரி தெரியல.. நேத்து உன்னையை அடிச்சதுக்கு, எங்கத்தாளை வச்சு பழி தீர்க்குற, அப்படி தானே”
‘ஐய்யய்யோ சரியா கண்டு பிடிச்சுட்டாரே’ இவன் திருதிருக்க
“நேத்து நைட் ஊருக்கு வந்த உன்னை ‘நேரமாகியும் ஆளக் காணலை, போய் என்னாச்சு, ஏதாச்சுன்னு பார்த்துட்டு வாடா, என் ராசுவ’..ன்னு என் ஆத்தா தாண்டா பார்த்துட்டு வர சொல்லுச்சு. வந்து பார்த்த அப்புறம் தான்டா உன் பவுசியெல்லாம் தெரிஞ்சது” நேற்றைய கோபத்தின் ஜூவாலை இன்னமும் சமரசுவின் கண்களில் தெறித்து கொண்டிருக்க, அப்படியே தாயின் பின்பக்கமாய் ஒதுங்கினான் விக்ரா.
பேனர் வைத்ததற்கு தான் இத்தனை கோபமென நினைத்து “ஏண்டா, இவரு இப்படி கோபப்படுற அளவுக்கு, அப்படி என்னடா பேனர் வச்ச, என்கிட்ட காட்டவே இல்லை. எங்க வச்சிருக்குற, சொல்லு.. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரேன்” கண்கள் மின்ன, நாச்சியா இவன் காதை கடிக்க,
“ஏண்டி.. நீ பார்த்துட்டு மட்டுமா வருவ? பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமாவுல வருவ! மாமியர் செத்தா மருமகளுக்கு கொண்டாட்டம் தான! ச்சை இதெல்லாம் ஒரு அல்ப ஆசை, த்தூ” ஏக கடுப்பு இன்னமும் அவரிடம் மிச்சமிருக்க
அதற்குள், தன் மொபைலை தேடி எடுத்து வந்து, கேலரியில் கிடந்த போட்டோவை எடுத்து, மெத்தனமாய் சமரசுவை ஒரு லுக் விட்டபடி “நீ ஏன் ம்மோவ், பேனரை பார்க்க அங்க வர போகனும்.. உனக்காகவே போட்டோவ எடுத்து வச்சிருக்கேன் மா.. பாரு இங்க இருந்தே நல்லா பாரு” விக்ரா, நாச்சியின் பக்கமாய் போனை கொடுக்க, அதை பார்க்கும் முன் ‘சுளீர்’ என விக்ராவின் பின்புறம் விருந்தது பலமாய் அடி,
“யோவ் தாடி.. திருப்பி அடிக்க மாட்டேன்னு தைரியத்துல ஆடுறியா? உனக்கு இருக்குயா ஒரு நாள்” வலியில் முகம் சுருக்கி, வார்த்தைகளை இவன் விட
“ஒரு நாளா? ஏன் அந்த ஒரு நாளில் என்ன புடுங்கி தள்ளிடுவியாம்? அதையும் பார்க்குறேன்” கையில் இருந்த குச்சியை தூக்கி போட்டு விட்டு இவர் குறையா கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் போனதும் அத்தனை பேருக்கும் நிம்மதி பெருமூச்சு கிளம்ப
பின்புறம் வலி போக தோய்த்து கொண்டிருந்தவனிடம் “உனக்கெல்லம் இன்னும் நாழு அடி சேர்த்து வைக்கனும், ஏண்டா, ஊரே வீட்டு வாசல்ல! ஒரு பத்து பேரு உன் ரூம் வாசல்ல! பத்தாததுக்கு பயர் சர்வீஸ் ஆளுக வேற.. இத்தனை பேரும் கிடந்து கத்தா கத்துறோம், அது கூட காதில் விழுகாத அளவுக்கு அப்படி என்னாடா தூக்கம் வேண்டி கிடக்கு” வீரபாண்டி அடுத்ததாய் ஆரம்பிக்க
பின்புறத்தை பிறகு தேய்த்து கொள்ளலாம் என அலர்ட் ஆனவன் ‘டேய் விக்ரா, இவனுக உன் வாயை கிண்டுதானுக, சிக்கிறாத.. அதுவும் தாலிகட்டுற சீனெல்லாம் இவனுக காதுக்கு போச்சு, மானம் கோமனம் அளவுக்கு கூட மிஞ்சாதுவே’
‘ம்.. எல்லாம் பாக்கானுவ.. கெத்த விடாதவே.. சொங்கி மாதிரி பார்க்காதவே.. ம்.. அப்படி தான்.. புருவத்தை தூக்கி, முகத்தை இறுக்கி, கொஞ்சமும் சிரிக்காம நில்லுடா’ அப்போ தான் ஒரு ஹீரோ தோரணை வரும், என இவன் மெனக்கெட
“இவன் ஏண்டா இப்போ, வேட்டிக்குள்ள ஓணான் புகுந்த மாதிரி நிக்குறான்” என நாச்சியார் கேட்கவும்
ஙே என விழித்தவன் “ச்சீ, நீயெல்லாம் ஒரு தாயா? என்னை அசிங்க படுத்த வேற யாரும் வர வேணாம்.. நீ மட்டும் போதும். அசிங்கபடுத்தி ஆறடி குழியில் போட்டு மூடுறதுக்கு” ஹீரோவை ஜீரோவாக்கிய கடுப்பு அவனிடம்..
“டேய், இவன் இவ்வளவு கோபப்படுறானா, அப்போ தூக்கத்திலேயே ஏதொ சம்பவம் பண்ணிருக்காண்டா இவன்” வீரபாண்டி, செல்லபாண்டியிடம் போட்டுவைக்க
“நேத்து பண்ணினதே பெரிய சம்பவம் இதுக்கு மேல இவன் வேற எதுவும் பண்ணனுமா என்ன?” செல்லபாண்டி சிரிக்க
“டேய், புரியற மாதிரி பேசி தொலைங்களேண்டா” நாச்சியா் எறிந்து விழ
“தெளிவா சொல்றேன் கேளும்மா” என விக்ரா தடுக்க தடுக்க பிளாஸ்பேக்கை ஓடவிட்டான் செல்லம்.