“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர
“அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா, பெசிஷன்லாம்..” சொல்லி முடிக்கும் முன் கன்னம் விட்டு அவள் வாயை பொத்தினான் இவன்.
இவன் கையை தட்டு விட்டவள், “எல்லாத்தையும் படிச்சிருப்ப தான, எப்படி எங்கிட்ட பேசுற? அருவருப்பா இல்லையா” இவள் கேட்க
‘இல்லை’ உடனே மறுத்தான் இவன்.
“ஆனா எனக்கு அசிங்கமா இருக்கு, அருவருப்பா இருக்கு, என்னை விட்டுடு விக்ரா ப்ளீஸ்” பெரிய முடிவை இவள் சாதாரணமாக கூற
“ஒட்டு மொத்தமா விட்டுடு விக்ரா. நான் உனக்கு வேணாம்”
“இப்பவும் வேணாம்னு தான் சொல்ற, என்னை பிடிக்கலைன்னு சொல்ல வாய் வரலை” சவால் விட்டான் இவன்.
முகம் திருப்பியவளை தன் பக்கம் திருப்பியவன் “எங்கே என்னை பிடிக்கலைனு சொல்லு, எங்கூட வாழ இஷ்டமில்லைனு சொல்லு நான் விட்டுடுறேன், அப்படியே போய்டுறேன்” மீண்டும் சாவல் விட்டான்.
அவன் முகத்தை விட்டு வேறு பக்கம் பார்வை திருப்பி “பிடிக்கலை.. பிடிக்கலை” என இவனை உதறி எழுந்து நின்று ஆங்காரமாய் இவள் கத்த
எழுந்து நின்ற இவன் பாரபட்சம் பார்க்காது மறு கன்னத்திலும் விட்டான் பொளீரென ஒரு அறை. கன்னத்தை பிடித்தபடி தரையில் போய் விழுந்தாள்.
“எப்போ இருந்துடி நீ பொய் சொல்ல கத்துகிட்ட, பிடிக்கலைன்னு சொல்ற? எப்படிடி சொல்ல மனசு வருது” இருக்கும் கோபத்திற்கு தரையை உதைக்க, அதிர்ந்து தூசி கிளம்பியது அவ்விடம்.
“இப்போ அசிங்கம் அவமானம்னு பாட்டு படுச்சா எல்லாம் சரியாகிடுமா. அசிங்கம் அவமானத்துக்கலாம் பயந்தா மனுஷனாவே பிறக்ககூடாது. இல்லை வாழக்கூடாது.
நீ கேட்பியே கிணறு.. அந்த பக்கத்துல தான் இருக்கு ஒன்னு குதிச்சு செத்துடு, இல்லை இப்படியே என் கையை பிடிச்சுக்கிட்டு வா, என்ன ஆனாலும்னு வாழ்வோம். மவளே உனக்கு இரண்டே சாய்ஸ் தான். இப்போ நீ முடிவெடுக்குற. சும்மா விட்டுடு விட்டுடுன்னு பாட்டு படிச்சா, நானே சாவடிச்சிடுவேன்!” கிணற்றின் சுற்று சுவரிலேயே போய் டங்கென அமர்ந்தான்.
கண்ணீரை துடைத்து கொண்டு வேகமாய் எழுந்தவள் இவனை நெருங்கினாள் “சாவுறேன்” என அவனை பார்த்தபடி கிணற்று சுவரின் மீதேறினாள். விழ தயாராக இருக்கையில் இவள் கை பிடித்து நிறுத்தினான் விக்ரா.
“ஏன் அந்த பக்கமெல்லாம் போய் விழுந்தா ஆகாதா? என்னை உரசிக்கிட்டே தான் விழனுமா?” என கேட்க
“விடு நான் சாவுறேன்” என மீண்டும் அதையே சொல்ல
“சாவ தான் போறியா?” இவன் கண்கள் இடுங்க கேட்டான்
“ஆமாம்” இவள் தலையசைத்ததிலேயே தெரிந்தது அவள் உறுதி.
“ஏற்கனவே ஊருக்குள்ள எனக்கு நல்ல பேரு, இப்போ போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டேன்” என நிறுத்த
“அதனால” இவள் பார்க்க
“எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான். பொண்ணு இல்லைன்னா நானும் செத்துடுவேன். கன்னி கழியாம செத்தா நானெல்லாம் பொண்ணுக்காக செத்தும் அலைவேன். சாவுறது தான் சாவுற.. அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை” என தோட்டத்து வீட்டை கண்ணால் காட்டி, ஒற்றை கண் அடிக்க
‘ஹா..’ வாயிலேயே கை வைத்து இவள் அதிர “ஒரு தடவை வேணாமா? சரி இரண்டு” என இரு விரலை காட்ட, அட்பாவி என மறுகையை நெஞ்சில் கைவைத்தவளுக்கு படபடவென வந்தது.
“அப்போ மூனு” இன்னும் ஒரு விரல் புதிதாய் முளைத்தது இவனிடம்.
இப்போது தஸ்புஸ்ஸென மூச்சு வாங்க கிணற்று சுவரில் இருந்து ஜங்கென குதித்தாள்.
“பத்தாதா? சரி நாழு, ஐந்து தடவை” ஐவிரல்களையும் காட்டி இவன் கேட்க,
“ஏண்டா நான் சாக போறேன்னு சொல்றேன், நீ சாகசம் பண்ணலாம்ன்றியா?” அவனை நெருங்கி கைக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் அடித்து கடித்து “ஒன்னு, இரண்டுனு வரிசையா போற..!”
“இந்தா ஒன்னு” பின்னாலேயே விட்டாள் ஒரு மிதி, “இந்தா இரண்டு” “மூனு” “நாழு” “ஐஞ்சு” சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு இடத்தில் மிதி வைத்தாள். வாங்கியது போதும் என கண் இமைக்கும் நேரத்திற்குள் தப்பி இவன் ஓட, துரத்தினாள் இவள்.
கிணற்றை சுற்றி கொண்டு தோட்டம் வழியாக வீட்டையும் இவன் அடைய எதிரில் வந்த ராதையை பார்த்து இவன் சடன் பிரேக் அடிக்க, பின்னால் வந்தவள் படுவேகமாகமாய் இவனில் மோதினாள்.
“யாத்தே” என்ற சத்தம் வீடை அதிர செய்ய நாச்சி, பாண்டிகள் என குடும்பமே ஓன்று கூடியது.
தட்டுதடுமாறி இவள் முதலில் எழ, அவளின் கீழ் இருந்த விக்ரா அடுத்து எழ, லாரியில் மாட்டிய எலி போல கிடந்தார் ராதை.
“இருக்கா செத்துருச்சாடா” செல்லம் எட்டி பார்க்க
“கண்டிப்பா செத்திருக்கும்டா” வீரா வந்தான்.
“அரச்சொல்லா பேசாத மூதேவி” அவன் வாயிலேயே போட்டான் விக்ரா.
“உனக்கு ஏண்டா இவ்வளவு பீலிங்கு” இவன் யோசிக்க
“இப்போ தான் ஸ்டேஷன்ல எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுன்னு, கண்மணி வீட்ல பேசி நிச்சயம் வேணாம் நேரா கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அம்மா பேசிட்டு இருந்துச்சு. சந்தோஷத்துல மூச்சு தான் விட்டேன். மோப்பம் பிடிச்சிட்டு வந்து, இதுக்கு மூச்சில்லாம பண்ணிட்ட, இழவு விழுந்த வீட்டுல ஒரு வருஷத்துக்கு கல்யாணம் வைக்க மாட்டானுங்க!
ஏண்டா எனக்கு நல்லது நடக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? இது உனக்கே நியாயமா? உனக்கே அடுக்குமா” வீரா புலம்ப
“அதுகுள்ள என்னை சாக சொல்லுற! வாழ வேண்டியவடா நானு” என குத்துகல்லாய் ராதை எழுந்தமர
“அதான என் மாமியாவா சாகும்” முகத்தை தாடையில் இடித்தார் நாச்சி.
“நான் சாகுறது தான் உனக்கு சந்தோஷம்னா சாவ மாட்டாடி இந்த ராதையம்மா” கைப்பிடி கூட இல்லாமல் ஜங் என எழுந்து நிற்க
“உலகப்போர்ல கொண்டு போய் உன்னை விட்டாகூட பூராபேரையும் உருட்டி தள்ளிட்டு, பாதயாத்திரையிலேயே ஊரு வந்து சேர்ந்துவீக அத்த!” என நாச்சி சொல்ல வீடே சிரித்தது.
அத்தனையையும் பார்த்த சமரசு கூட லேசாய் புன்னகையோடு கடந்து சென்றார்.
இந்த பய இருந்தா தான் வீடே கலகலன்னு கிடக்கு! எண்ணாமல் இல்லை இவர்.
அத்தியாயம் 20
அன்றிரவு “போட்டோ வேறெங்கேயும் போய் இருக்குமா விக்ரா” கிடைத்த கேள்வியை இவள் கேட்க..
“கூகுள் லென்ஸ் வச்சு செக் பண்ணிட்டேன். உன் போட்டோ எதுலையுமே, எந்த சோஷியல் மீடியாலையும் இப்போதைக்கு இல்லை. விஜயோட போன் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டா அக்கவுண்ட் எல்லாத்தையும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணி தூக்கியாச்சு. அவனோட டிரைவில் இருந்த போட்டோவை பார்த்து பர்மணன்டா டெலிட்டும் பண்ணியாச்சு. போட்டோ ஷேர் ஆகிருக்க வாய்ப்பே இல்லை இனியும் அவனால ஷேர் பண்ண முடியாது” இவன் கூற முகம் பளிச்சென மலர்ந்தது.
‘ஒரு வேளை பிளாக்வெப்ல இருந்தா ஒன்னும் செய்ய முடியாது, நீ பேஸ் பண்ணிதான் ஆகனும்’ என சொல்ல வந்தவன், இவளது பளிச் முகத்தை பார்த்து எதற்கு இவளுக்கு பயத்தை கொடுக்க வேண்டும் என நினைத்து மறைத்து விட்டான்.