அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர்.

“அத்தை, என்னை எங்க வீட்டில் விட்டுடுங்களேன்” யாரிடமோ பேசுவது போல் வந்தது குரல்.

நாச்சியும் விக்ராவும் இவளை அதிர்ந்து பார்த்து “ஏன் அங்கே போகனும்ங்கிற?” ஒரே நேரத்தில் கேட்டனர் இருவரும்.

“அப்பா, அம்மாவை கஷ்டபடுத்திட்டு என்னால் அங்க வந்து இருக்க முடியாது, அவங்களை சமாதானம் பண்ணனும்” நிலவரம் புரியாது சிறுபிள்ளையாய் இவள் கூற

“அடிச்சுட போறான்மா.. உங்கப்பன். உன் முடிவை கொஞ்சம் ஆறப்போடும்மா. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாயிடும். வேணும்னா விக்ரா கூடவே அவன் வேலை பார்க்குற இடத்துக்கு போய்டு தாயி” என

“இல்லைத்த வேணாம், என்னை எங்க வீட்டில் விட்டுடுங்க” எனவும், “சரி நானே கொண்டு போய் விடுறேன்” என லாவன்யாவிடம் இவன் கூற,

 நாச்சி அதிர்ந்து போய் விக்ராவை பார்க்க அவனோ நான் பார்த்துகிறேன் என கண்களை மூடி திறக்க, நாச்சிக்கு குல தெய்வதிடம் வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

விக்ராவின் வீடு வர நாச்சியை இறங்க சொல்லிவிட்டு இவனும் இறங்கினான். “வா” என அவளையும் அழைக்க “எங்க வீட்டுக்கு” என பேச வந்தவளிடம்

“உங்க வீட்டுக்கு போகலாம், ஆனால் இப்படியே வர சொல்றியா” இரத்தகறை படிந்த உடலையும் உடையையும் இவன் காட்டி பேச, அமைதியாய் உள்ளே சென்றாள்.

ஆட்டோவை அனுப்பி வைத்துவிட்டு, உள்ளே வந்தவன், அவளை சோபாவில் அமர வைத்து “இரு டிரஸ் மாத்திட்டு வரேன்” என்றவன், அம்மா அவளுக்கு குடிக்க ஏதாவது கொடுங்க” சொல்லிவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டான். சிறிது நேரம் சென்று வந்தவன் குளித்து உடை மாற்றி இருந்தான். இவனுக்கும் நாச்சி டீ கொடுக்க, அதை குடித்தான்.

 “ம்மா, கொஞ்சம் அவகிட்ட பேச வேண்டி இருக்கு. ரூமுக்கு கூட்டி போகவா” தயங்கி தயங்கி இவன் கேட்க

“உன் பொண்டாட்டியா அவ.. அவளுக்கு சம்மதம்னா கூட்டி போ” என டம்ளர்களை எடுத்து கொண்டு இவர் சென்றார்.

நிறைய நடுக்கம், குழப்பம், இயலாமை என அத்தனையும் கலந்த கலவையாய் இருந்தவளை கைபிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றான்.

கட்டிலில் இருந்த மருந்துகளை காட்டி “காலையில் ஹாஸ்பிடல் போய் டாக்டர் பார்த்து வாங்கிட்டு வந்த மருந்து, இருக்குற காயத்துக்கு நீயா போட முடியாது, அம்மாவை வர சொல்லவா”

“வேண்டாம் வேண்டாம்” இவள் வேகமாய் மறுத்ததில் போய் கதவை சாத்திவிட்டு வர இன்னமும் அதிர்ந்தாள் என்றால் எதுவும் கேட்காமல் அவள் தடுக்க தடுக்க மறுக்க மறுக்க, வேகமாய் அவள் ஆடைகளை களைந்து தூக்கி எறிந்ததில் இதயமே நின்றது.

தாலியையும் கழற்றி ஓரமாய் வைத்துவிட்டு, வரி வரியாய் உடல் முழுதும் இருந்த எல்லா காயத்திற்கும் குளிர குளிர மருந்திட்டான்.

நேற்றிலிருந்து வின்வின் என ரணமாய் தெறித்து கொண்டிருந்த வலிக்கு நல்ல நிவாரணியாய் இருந்தது அம்மருந்து.

ஒவ்வொரு காயத்திற்கும் மருந்திடும் போதெல்லாம் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டே போட்டான்.

அதை பார்த்த இவளுக்கும் அழுகை வந்தது.  முழுதாய் மருந்திட்டவன்.  மெலிதான காட்டன் நைட்டியை அணிய சொல்லி கொடுத்தான்.

கூடவே தாலியை எடுத்து வந்தவள் விக்ராவின் கையில் கொடுத்து “போட்டு விடு” என நின்றாள்.

“காயம் ஆறட்டும் லாவா, அம்மா கேட்டா நான் சொல்லிகிறேன்” இவன் எவ்வளவு கூறியும் போட்டு விடு என நின்றாள்.

அதை கையில் வாங்கியவன் அவள் கழுத்தில் மெதுவாய் போட்டு, நெற்றியில் அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தான்.

கையில் அதே மருந்தை மீண்டும் எடுத்து கொண்டு வந்தவள் இவனுக்கு மருந்திட முயல “அம்மா நாட்டு மருந்து அரச்சிட்டு இருக்காங்க, எனக்கு அது தான் சேரும்” இவளிடம் மறுத்துவிட்டு

பின் கதவை திறந்து வெளியே சென்றவன், வரும் போது கையில் உணவோடு வந்தான். சாதாரண நாட்களிலேயே பசி அறிந்து தீர்ப்பவன். இந்நாளில் மறப்பானா? அவளை முழுதாய் உண்ண வைத்து, மாத்திரைகளை போட கொடுத்து தூங்க வைத்தபின் தான் வெளியே வந்தான்.

சோபாவில் வந்து அமர்ந்தவன் காலில் முழங்கைகளை ஊன்றியபடி தலையை இரு கைகளாலும் தாங்கி பிடித்து அமர்ந்துவிட்டான்.

சிறிது நிமிடங்களிலேயே, தலையில் இருந்த கையை விலக்கிவிட்டு, ஏதோ இலை கலந்த மருந்தரைத்து கொண்டு வந்த நாச்சி, அவனது நெற்றி காயங்களில் பூசி விட, இவன் அப்படியே சோபாவிலேயே தலை சாய்ந்தான். போட்டிருந்த சட்டையையும் கலைய சொல்லி முதுகில் தோளில் இருந்த காயத்திற்கும் மருந்திட்டார்.

“ஆமா ஆமாம் இவரு உலகப்போர்ல சண்டை போட்டு நாட்டை காப்பாத்திட்டு வந்திருக்காரு. நல்லா மருந்தை போட்டு விடு. அப்ப தான் இன்னும் நாலு நல்ல மனுசங்க கூட சண்டை போட தெம்பு வரும்” வாசலை தாண்டும் முன்னே சமரசுவின் குரல் இவர் காதை தாண்டியது.

“அய்யோ, அடுத்து சாம்புவா.. விக்ரா செத்தடா நீ” தலை சாய்ந்திருந்தாலும் கண்கள் மூடியே கிடந்தான்.

“அதான் ஸ்டேஷனுக்கு கூப்டவுடனே வரலை தானே. புள்ளையே இல்லைன்னு கத்துனீரு, இப்போ எந்த உரிமையில  புள்ளைய வைதீரூ”

“ஏண்டி ஆத்தாளும் மகனும் செய்றதையும் செஞ்சுபுட்டு ஒன்னும் தெரியாகணக்கா என்னடி நாடகம் போடுறீங்களா? பொம்பளை புள்ளைய பெத்திருந்தா உனக்கும், அக்கா தங்கச்சிக கூட பொறந்திருந்தா அவனுக்கும் அறிவு இருந்திருக்கும்” இரண்டுமே நடக்கலை பின்ன எங்க இருந்து வரும் புத்தி. பெத்தவகளுக்கு எதிரா  பொம்பளைபுள்ளைய திருப்பி விடறதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பீங்க” சமரசு கத்து கத்தென கத்திவிட்டு சென்றார்.

எதார்த்தமாய் சொல்லி சென்றாலும் நூறு சதம் உண்மை அது. அந்த குற்ற உணர்வில் தவித்தவனுக்கு சமரசுவின் பேச்சு இன்னும் தவிப்பை உண்டாக்க, அப்படியே சோபாவில் சரிந்து படுத்துவிட்டான்.

“அவரு அப்படி தான்யா.. கத்துவாறு செத்த நேரத்துக்கு பிறகு வந்து, உம்புள்ளைய எங்க இருக்கனா இல்லை ஊருக்கு கிளம்பிட்டானானு தேடுவாறு. விடுய்யா” அவன் தலை கோதி சமாதானம் சொன்னார்.

“லாவன்யா அவ வீட்டுக்கு போறேன்னு சொன்னா?” தயக்கமாய் ஆரம்பிக்க “இப்போதைக்கு போக மாட்டா” தலையில் கைவைத்தபடியே கூற

“அவளுக்கும் மருந்து போடனும்” என இவர் தயங்க

“இது எரியும் மா, தாங்க மாட்டா ஹாஸ்பிடல்ல மருந்து வாங்கியாந்து போட்டுவிட்டுட்டேன்” என சொல்லி “ம்மா, யாரையாவது விட்டு மீனா அத்தக்கு என்னாச்சு விசாரிம்மா”

“ஏண்டா” என நாச்சி பதற

“வீட்டில் அவ்வளவு தூரம் சண்டை சச்சரவு இருந்தும் வெளியே வரவே இல்ல, ஸ்டேஷனுக்கும் வரலை” பெரிய சைஸ் வெடி ஒன்றை போட்டுவிட்டு வேறு எதுவும் பேசவும் இல்லை. அப்படியே தூங்கியும் போனான்.

எட்டி சென்று லாவன்யாவையும் பார்க்க அவளும் ஆழ்ந்த உறக்கத்தில் தான். இருவரும் தனிதனியே உறங்கி இருக்க, ‘இதென்ன இப்படி தனிதனியா?’ உள்ளே எண்ணம் ஓடுகையிலேயே ‘அதுவும் நல்லதுக்கு தான்’ என்ற எண்ணமும் சேர்ந்தே ஓடியது.

அமைதியாய் நடக்கும் அனைத்தையும் பார்த்திருந்தனரே தவிர, இவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. தவிர இவனை தொந்தரவு செய்யவுமில்லை.

அமைதி நிறைந்த அவ்விடத்தில் “நாசமா போறவன், பொம்பளை புள்ளனு கூட பார்க்காமல் இந்த அடி அடிச்சிருக்கான். பேதில போக எம்பேரனையும் அடிச்சுவிட்ருக்கான். நல்லாவா இருப்பான்!” எனும் வசவுகள் மட்டுமே அரை மணி்நேரத்திற்கொரு முறை வித்யாச வித்யாச டோனில் ராதையிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

சோபாவில் தூங்கிகொண்டிருந்த விக்ராவின் முன் அறுவாளும் கையுமாய் நின்றிருந்தார் ராஜசேகர் “ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தா, எம்புள்ளைய எனக்கெதிரா திருப்பி விடுவ” ஒரே போடாய் போட, உடல் இரண்டாய் பிளவு பட, செங்குருதி பீறிட்டு கிளம்பியதில் “விக்ரா” என அலறிக்கொண்டு எழுந்தாள் லாவா.

பரக்க பரக்க விழித்தவள் வேகவேகமாய் அறையை விட்டு வெளியே வர, சோபாவில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தான் விக்ரா.

‘கனவா’ என முகத்தை அழுந்த தேய்த்து அவனருகே சென்றாள். அவனது ஏறி இறங்கிய மார்ப்பும், சீரான சுவாசமும் தான் அவள் சுவாசத்தையும் மீட்டெடுத்து, இதய துடிப்பை சீர் செய்தது.

நெற்றியிலிருந்த பெரிய காயத்தை வருடியபடி, அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்.

நாச்சி போன் செய்திருந்ததில் அடித்து பிடித்து வந்தார் மீனா, நாச்சி வீட்டிற்கு.

“மயினி, மயினி” என கத்தி கொண்டு வந்தவரை “ஸ்” என்ற சப்தம் அமைதியடைய செய்தது.

நாச்சி சோபாவை காட்ட, அங்கே விக்ரா தலையில் கைவைத்து படுத்திருக்க, அவனது சட்டை நுனியை இறுக்கி பிடித்தபடிக்கு, தரையில் அமர்ந்து சோபாவில் தலை சாய்த்திருந்தாள் லாவன்யா.

மீனாவிற்கு சிறு மகிழ்ச்சி அந்நிலையிலும் உண்டானது. அவர் மட்டுமில்லை, ராதை அவர்களை கண்டு நெட்டி முறித்தார். பாண்டிகள், சமரசு கூட ரசனையுடன் கடந்துவிட்டனர்.

பார்க்கும் யாருக்கும் தங்களது ஜோடியை கண்டிப்பாய் நியாபகபடுத்தும் படி தான் இருந்தது அக்காட்சி.

அதன் பின் வீட்டின் வெளியே ஒரு பெரிய மாநாடே நடந்தது நாச்சி, மீனா, ராதா தலைமையில்.

“ஏண்டி கூறு கெட்டவளே, இரண்டு புள்ளைகளையும் அடிச்சிருக்கான், நீ என்ன வேடிக்கையாடி பார்த்துட்டு இருந்த, உன்னை பெத்த இந்த வயித்துல பிரண்டையை கொண்டி தான் அடிக்கனும்” ராதா புலம்ப

“அவர் என்னையும் தான் அடிச்சாரு” என அவர்கள் மேல் ஒரு குண்டை போட்டு காயம்பட்ட இடங்களை காட்டி “அவ இளவட்டம் தாங்கிட்டா, என் வயசுக்கு குளிர் காச்சாலே வந்துடுச்சு மயினி, எந்திக்க மாட்டாம கிடந்தேன்” இவரது நிலையை சொல்ல, ஐய்யோவென போனது நாச்சிக்கு.

“உள்ளூர்ல மாப்பிள்ளை பாருன்னு சொன்னேன், அடங்குனியா நீயும் உன் புருஷனும், திண்டுக்கல்லு போயி, தூக்கிட்டு வந்திருக்கீங்க ஒரு அணுகுண்டை. மனுஷனா அந்தாளு. முதலில் உன்னை கொல்லனும்” தாய் என்றும் பாராது ராதை கிழித்து தள்ளினார் மீனா.

பின் ஸ்டேஷனில் நடந்ததை நாச்சி கூற, வீட்டில் நடந்ததை மீனா கூற, எல்லாத்தையும் ஒன்றாக முடிச்சு போட்டு, நார வசவு விழுந்தது பரிஜாதத்திற்கு.

சமரசுவிற்கும், பாண்டிகளுக்கும் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

“இரண்டு மூனு முறை விக்ராவை பத்தி நல்ல விதமா பேசி இவரை சரி பண்ணிடுவோம்னு நினைச்சேன் மயினி. அந்தாளோட தங்கச்சி என்ன பேசி்தொலைஞ்சாலோ, அவ பேச்சை கேட்டு அடி பின்னிட்டாரு.. இவர் இந்தாட்டம் ஆடுவாறுன்னு நான் நினைக்கலை மயினி. மகளோட நல்ல வாழ்க்கையை ஒரு நாள் இவரும் புரிஞ்சிப்பாரு. நல்ல வேளை இவ்வளவு கலவரத்திலும் எம்புள்ளைய விக்ரா விடலை.. இந்த வாரம் எப்படியும் ஊருக்கு போய்டுவாறு போன பிறகு வரேன் மயினி” என இப்போதைக்கு லாவாவை நாசரசியின் பொறுப்பில் விட்டு சென்றார் மீனா.