“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென.

களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை வாழ விட மாட்டான்” என கேட்டிற்கு பின் வைக்கப்பட்டிருந்த கடப்பாரையை எடுத்து கொண்டு வர, வேடிக்கை பார்த்திருந்த தெருக்காரர்கள் இருவரையும் பிடித்து பிரித்துவைக்க, இதற்கிடையில் போலீஸிக்கு போலாம்ப்பா.. கொலை கேசாச்சுன்னா விசாரணைன்னு நம்ப தாலிய அறுப்பானுக. முதலையே சொல்றது தான் நல்லது என போலீஸிற்கு அழைத்துவிட்டனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்தனர் விக்ராவும் ராஜ சேகரும். சப்இன்ஸ்பெக்டர் வந்த பிறகு தான் விசாரிக்க முடியும் என இருவரையும் பிரித்து இவனை செல் முன் இருந்த இருக்கையில் அமர வைத்து, ராஜசேகரை கான்ஸ்டபிள் அருகிலும்  உட்கார வைத்துவிட்டனர்.

இவர்கள் இங்கிருக்கும் தகவல் விக்ரபாண்டி வீட்டிற்கும் பறக்க, அனைத்தையும் கேட்டு கொண்ட சமரசு பாண்டி “நான் வர மாட்டேன்ல.. அவன் எம்புள்ளையே இல்லை” என கத்திவிட, மற்றவர்கள் அடித்துபிடித்து ஓடிவந்தனர் ஸ்டேஷனிற்கு.

முகமெல்லாம் இரத்தமாய், சட்டை கிழிந்து முடிகலைந்து மண்ணை வாரி தூற்றியது போல் இருந்தவனை கண்டு நாச்சி தலையில் அடித்து கொண்டு அழுதார்.

“எத்தனை தடவை கேட்ருப்போம் அந்த புள்ளைய விரும்புறியான்னு! அப்போலாம் இல்லைன்னு சொல்லிட்டு, இப்போ…”   “என்னடா” ஆங்காங்கே வழிந்த ரத்தத்தை துணியால் துடைத்தபடி வீரா

“ப்ச் தனியா ஏண்டா போன.. எங்களை கூப்பிட வேண்டியது தானே?” சலித்துக்கொண்ட செல்லம்

“இவ்ளோ தூரம் வரவிட்ருக்க மாட்டோம், அந்தாளு பாரு தெருவெல்லாம் கூடி வேடிக்கை பார்க்குற அளவுக்கு அசிங்கபடுத்தி விட்டுட்டான்” முகம் சுருங்கபடி சங்கர் என ஆளாளுக்கு புலம்பிதள்ளினர் தமையன்கள் மூவரும்.

நல்ல வேளை இதையெல்லாம் கேட்கா தூரத்தில் ராஜசேகர் நின்றிருந்தார்.

இதற்கிடையில் எஸ்ஐ வர ஏற்கனவே கேசை விசாரித் திருந்த கான்ஸ்டபிள் அவரிடம் நடந்ததை கூறிவிட “ஒரு நாள் நிம்மதியா இருக்க விடமாட்டானுக, வர சொல்லுயா அவங்களை” தொப்பியை டேபிளில் போட்டுவிட்டு தளர்வாய் அமர்ந்தார்.

தள்ளி இருந்த பெஞ்சில் விக்ரா உடன் வீராவும் அமர்ந்திருக்க, இன்ஸ்பெக்டரின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராஜசேகர்.

அத்தனை இரத்தகளரியிலும் அடுத்து என்ன செய்யலாம் என்று தான் பார்த்திருந்தான். அவனது அழுத்தம் கண்டு “சும்மாவே பிளான் பக்காவா போடுவான், மாமாவை என்ன செய்ய காத்திருக்கானோ! இவர் வேற லாவன்யா மேல கை வச்சிருக்கார். சும்மா விட மாட்டானே” வீரா அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்த விக்ராவை தான் பார்த்திருந்தான்.

“வீரா, அடுத்து என்னை தான் விசாரிப்பாங்க. முடிஞ்ச வரை அதை தெளிவா ரெக்கார்ட் பண்ணி லாவன்யாக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிடு” என மெதுவாய் அவன் காதில் சொல்லிவிட , புருவம் சுருக்கி எதற்கு என யோசித்தாலும்’ இவன் குணமறிந்து சரி என தலையசைத்தான். அவரை விசாரித்து பின் விக்ராவையும் விசாரித்தார்.

விக்ராவை விசாரிக்கும் போது அவன் பேசியதை மட்டும் லாவன்யாவிற்கு வாட்ஸ்ப்பில் ரெக்கார்டிங் செய்து அனுப்பிவிட்டான் வீரா.

‘இதென்ன இப்படி பேசுறான். இவன் புளுகுற புளுகுக்கு அவ ஒத்து வரணுமேடா இப்போ முடிவு லாவன்யா கையில் தான்’ வீராவினுள் ஓடியது இது மட்டும் தான்.

இருவரையும் விசாரித்தவரோ, விக்ராவை ஆழ்ந்து பார்த்துவிட்டு, ராஜசேகரிடம் திரும்பினார். “இது லவ் மேட்டர், நீங்க சொன்னா எல்லாம் கேஸ் பைல் பண்ண முடியாது, உங்க பொண்ணையும் விசாரிக்கனும்” ஒரே போடாய் போட்டார்.

“முடியவே முடியாது” என மறுத்த ராஜசேகரை காட்டி கண்களால் கான்ஸ்டபிளுக்கு சிக்னல் கொடுக்க,

ராஜ சேகரை “ஒரு நிமிஷம் வாங்க” என அழைத்து சென்ற கான்ஸ்டபிள் “சார் சொன்ன மாதிரி உங்க பொண்ணை கூட்டிட்டு வாங்க. விசாரிப்போம். தப்பு அவன் பேரில் இருந்தா சார் பார்த்துப்பார். அவர் எப்போவுமே நியாயவாதி அழைச்சிட்டு வாங்க” என அனுப்பி வைக்க, சிறிது நேரத்திற்கெல்லாம்  அழைத்து வந்தார்.

இப்போது இன்ஸ்பெக்டரின் முன் ராஜசேகர் அமர்ந்திருக்க, அவரின் இரு புறமும் விக்ரா லாவன்யா இருவரும் நின்றிருந்தனர்.

“‘ஏமாத்தி தாலி கட்டிருக்கான், வீட்டில் பின்பக்கம் வச்சு பாலத்காரம் பண்ண ட்ரை பண்ணிருக்கான், தடுக்க வந்த உன் அப்பாவை அடிச்சிருக்கான்’ இது உன் அப்பா அவன் மேல வைக்கிற கம்ளைண்ட்”

“ ‘விருப்பதோட தான் கல்யாணம் பண்ணிகிட்டா, அவங்க அப்பாக்கு பயந்து பொய் சொல்றா. நாங்க லவ் பண்றோம். வேணா பொண்ணுகிட்ட கேளுங்கனு’ அந்த பையன் சொல்றான்.

இப்போ நீ பேச போறது மட்டும் தான் இங்கே நிக்கும். நீ என்ன சொல்ற” லாவன்யா புறமாய் இன்ஸ்பெக்டர் கேள்வியை திருப்பினார்.

“அவ சின்ன பொண்ணு அவளுக்கென்ன தெரியும். நான் கம்ளைண்ட் கொடுக்குறேன்” என ராஜசேகர் ஆரம்பிக்க

“சார் நீங்க மிலிட்டரியா இருக்கலாம். முடிவு எடுத்தோம் முடுச்சுவிட்டோம்னு நீங்க இருக்கலாம். இங்க பிரசூயூச்சர்ஸ் இருக்கு. பொண்ணு சொல்றது தான் இங்க முடிவு. உங்க பொண்ணு கொடுக்கட்டும் கம்ளைண்ட்,  வக்காலி உயிர் தனியா உடம்பு தனியா உடம்பை பிரிச்சு விட்ரேன்” என கூறிய நொடி இவளது பார்வை விக்ராவில் தான் படிந்தது பீதியோடு.

யார் கவனித்தார்களோ இல்லையோ, விக்ரா நன்றாகவே ஆழ்ந்து கவனித்தான் அவள் பீதி கலந்த முகத்தை.

“அடிச்சே கொன்னு புடுவாக தம்பி.. கம்ளைண்ட்ட கொடுக்க வேணாம்னு சொல்லுங்க தம்பி. இனி என் புள்ள உன் வீட்டு வாசபடிய கூட மிதிக்க மாட்டான். என்னை நம்புயா. எம்புள்ளைய என்கிட்ட கொடுத்துடுய்யா” எங்கிருந்தோ வந்த நாச்சி, ராஜ சேகரிடம் கெஞ்ச, இன்ஸ்பெக்டர் பார்த்த பார்வையில், கான்ஸ்டபிள் அவரை இழுத்து கொண்டு போய் பார்க்கும் தூரத்தில் நிறுத்திவிட்டு வந்தார்.

கான்ஸ்டபிள் விக்ராவின் அப்பாவையும் அழைத்து வர சொல்லியிருந்ததால், அந்நேரம் செல்லமும் சமரசுவை திட்டி அழைத்து வந்திருந்தான்.

லாவன்யாவிடமிருந்து உதிரபோகும் வார்த்தைகளுக்காக அங்கிருந்த அத்தனை பேரும் காத்திருக்க

“விருப்பட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அப்பாவுக்கு பயந்து தான் மறச்சேன்” என ஆடைக்குள் மறைந்து கிடந்த தாலியை வெளியே எடுத்து போட்டாள்.

விக்ரா முதற்கொண்டு அத்தனை பேரின் முகத்திலும் அதிர்ச்சி தாண்டவமாடியது.

தன்புறம் தான் நிற்பாள் என தெரியும் விக்ராவிற்கு, ஆனால் தாலி எப்படி இவள் கழுத்தில் என புருவம் சுருக்கினான்.

“அப்போ அவன் கூட வாழ சம்மதமா? இல்லை இவன் உன்னை மிரட்டுனானா” என கேட்க

“வாழ சம்மதம் தான். யாரும் மிரட்டலை”

“பிறகென்ன கன்னம், கழுத்து, முழங்கையெல்லாம்?”

“அது.. அது.. விக்ராக்கும் அப்பாக்கும் சண்டை, பிரிச்சு விட போகும் போது விழுந்துட்டேன்…” என இவள் இழுக்க

“பிரிச்சு விடும் போது உனக்கும் இரண்டு விழுந்துருக்குன்னு சொல்லு” என்றவரின் இதழ்கள் ஒரு பக்கமாய் வளைந்தது.

‘ஒழுங்கு மரியாதையா அவன் மேல கம்ளைண்ட் கொடுக்குற, இல்லை நடக்குறதே வேற’ என இரண்டு அறை வைத்து அறைந்து தான் அவளை கூட்டி வந்திருந்தார் ராஜசேகர்.

எப்படியும் கம்ளைண்ட் கொடுத்துவிடுவாள் என நம்பிக்கையாய் இருந்தவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

ஏற்கனவே அவள் கன்னங்களிலும் முழங்கைக்கு மேலும் இருந்த அடியின் தடங்கள் எஸ்ஐக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்க, இப்போது தாலி ஊர்ஜிதமே செய்தது அவர்களுக்குண்டான காதலை. பத்தாததற்கு தெருக்காரகர்களும் இருவரும் ஒன்றாய் சுற்றியது முதல் தற்போது நடந்த அடிதடி வரை சொல்லியிருந்தனர்.

“இப்போ தெரியுதா? ஏன் பொண்ணை விசாரிக்கனும்னு சொன்னேன்னு. உங்களுக்கு இது முதல் தடவை.. நாங்க நூத்துக்கும் மேல இந்த மாதிரி கேஸை பார்த்தாச்சு சார்.

இப்போ பொண்ணையும் பையனையும் அடிச்சதுக்கு அவங்க கம்ளைண்ட் கொடுத்தால், உங்க மேலயும் நான் ஆக்‌ஷன் எடுக்க தயார்” ராஜசேகரிடம் கூறியவர், விக்ராவிடம் திருப்பி “கம்ளைண்ட் கொடுக்குறியா என்ன?” புருவம் ஏற்றி இறக்க “இல்லையென” மறுப்பாய் தலையசைத்தான் விக்ரபாண்டி.

“அப்போ சரி” என்றவர், ராஜ சேகரிடம் “பொண்ணை விட்டுட்டு கிளம்புங்க, உங்கள் கூட அனுப்பி வைக்க முடியாது” என கூறிவிட்டு விக்ராவை பார்த்தவர்

“யாருக்கும் தெரியாம தாலி கட்டினா மட்டும் பத்தாது தைரியமா வெளியே சொல்லனும். இப்படி மறச்சு வச்சா இப்படி தான் பிரச்சனை கிளம்பும். உனக்கு ஒரு வாரம் டைம், ரெஜிஸ்டர் ஆபீஸில் மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணிட்டு ஸ்டேஷனில் ஒரு காபி கொடுக்குற. இல்லை உள்ள தூக்கிவச்சு நொக்கி விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்ட மறுப்பேதும் கூறாமல் தலையசைத்தான்.

பின் நாச்சியிடம் திரும்பி ‘வாங்க’ என அழைக்க, சிறு பிள்ளையாய் ஓடி வந்தார் நாச்சி. சமரசுவையும் வர சொன்ன எஸ்ஐ  நடந்ததை பார்த்தீங்க தானே” என

“ஆம்” என இருவருமே தலையசைக்க

“பொண்ணு இவன் கூட தான் இருப்பேனுட்டா. அவனை  மட்டும் நம்பி அனுப்பலை, உங்களையும் நம்பி தான் அனுப்புறேன். நாளைக்கு இந்த பொண்ணே வந்து இரண்டு பேரு மேலயும் கம்ளைண்ட் கொடுத்தாலும் எடுப்பேன் நியாபகம் வச்சுகோங்க” என அனுப்பி வைக்க, நாச்சியையும் சமரசுவையும் முன்னே போக சொல்லிவிட்டு, அசையாமல் நின்றிருந்தவளை கைபிடித்து வந்தான் இவன்.

கூடவே வந்த கான்ஸ்டபிள் “மேரேஜ் சர்டிபிகேட்டை ஒரு வாரத்தில் நீயே கொண்டு வந்து கொடுத்துடு தம்பி, நாங்க கேட்குற அளவுக்கு வச்சுக்காத” என அவரும் மிரட்டி சென்றார்.

கோபம் கோபம் என படு ஆத்திரத்தில் இருந்த ராஜசேகர் மகளை நிமிர்ந்தும் பாராமல் ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டார்.

லாவன்யா தலை குனிந்து நின்றிருந்தவள் தான் நிமிரவே இல்லை. ஏனோ இம்முறை அழுகை வரவில்லை, கனத்த அமைதி மட்டுமே. எங்கோ வெறித்தபடியே நின்றிருந்தாள்.