அத்தியாயம் 17

லாவாவின் அறை கதவு பூட்டியிருக்க, லேசாய் தட்டினான்.

“அம்மாவா அப்பாவா?” என தயங்கி போய் இவள் கதவை திறக்க, இவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை தாளிட்டான்.

எப்போதும் ஊஃபரில் பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் அவளது அறையில். இன்றோ  உயிரோட்டத்தை தொலைத்து அமைதியாய் இருந்தது.

“இங்க இப்போ எதுக்கு வந்த, கிளம்பிடு விக்ரா”  மென்குரல் வந்த திசைக்கு இவன் திரும்ப, பயத்தை அப்படியே முகத்தில் காட்டியபடி நின்றிருந்தாள்.

“உனக்கு சிவா வேண்டாம்டி, உங்கப்பாவுக்காக சரின்னு சொல்லிடாத” என ஆரம்பித்தவன் இவள் முகத்தில் விழுந்த மெல்லிய வெளிச்சத்தில் தான் கண்டது உண்மையா என இவன் லைட்டை போட, கண்கள் சொன்ன செய்தியில் “லாவா” கிட்டதட்ட அலறியே விட்டான்.

முகத்தில், கழுத்தில், கையில் நன்றாகவே பட்டை பட்டையான காயங்கள் நன்றாகவே தெரிந்தது.

பாய்ந்து வந்து பட்டென லைட்டை அணைத்தவள் “இங்கிருந்து போ விக்ரா ப்ளீஸ்” சொல்லி முடிக்கும் முன் அவள் அணிந்திருந்த மெல்லிய நைட்டி இவனது கையில் இருந்தது.

கூடவே லைட்டையும் போட, அவளை பார்த்தவன் வாயை இறுக பொத்தியபடி அப்படியே சுவரில் முட்டி நின்றான்.

அவள் கை இரண்டையும் வைத்து மறைக்க முயன்று, அருகில் கிடந்த போர்வையை எடுக்க இவள் கைகள் நீளும் முன்னே “லாவா” கிட்டதட்ட அலறிக்கொண்டு கையில் இருந்த நைட்டியை அவள் மேல் பொத்திவிட்டான்.

“என்னடி இதெல்லாம்” குரல் கரகரவென இவள் காதுக்குள் செல்ல, அவன் விட்ட கண்ணீரோ கடகடவென சிதறி அவள் பாதங்களை சென்று சேர்ந்தது.

“என்னடி ஆச்சு” இம்முறை அவனது கடுமை கலந்த குரலில் “அப்பா பெல்ட்டால அடிச்சார், போதுமா, தெரிஞ்சிடுச்சா போ இங்க இருந்து” கெஞ்ச

இழுத்து அணைத்தான் அவளை.. அவளுக்கும் தேவையாய் இருந்ததோ அந்த அணைப்பு. இருவரின் கண்ணீரும் இருவரின் தோள்களையும் நிறைத்தது.

“சாரிடி.. சாரிடி.. என்னால் தானே எல்லாம்” இறுக்கி கொண்டு கதறினான்.

“இல்லைன்னாலும் வாங்கிருப்பேன்” இவளது கரகரத்த குரலில் “என்ன?” இவன் பிரிந்து இவளை பார்த்தான் குழப்பமாய்.

சட்டென தெளிந்தவளோ “இங்க இருந்து போ.. இந்த ஒரு முறை நான் சொல்றதையும் காதில் வாங்கிட்டு தயவு செய்து செய்.. போ இங்க இருந்து” இரு கை கூப்பி நின்றாள் இவன் முன்.

விடாது வழிந்த நீரை துடைக்கவும் மாட்டாமல் வந்தபடியே சத்தம் செய்யாது கிளம்பிவிட்டான்.

இவன் கிளம்பியதும் அழுகை அடக்கி நின்றிருந்தவள் யார் மீது கோப பட என தெரியாமல் விழி பிதுங்கி போனாள்.

“உன்கூட நான் கல்யாண வாழ்க்கையை ஒரு நாளும் நினைச்சதில்லை. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இவனோட பேசாம, சண்டைபிடிக்காம, வம்பிழுக்காம எப்படி இன்னொருத்தன் கூட இன்னொருத்தன் வீட்ல இருக்க போறோம்னு அடிக்கடி நினைச்சிருக்கேன்.

இதற்கு என்ன பேருனு தெரில. விஜய், நீ இரண்டு பேருமே எனக்கு பண்ணினது துரோகம் தான். ஆனால் அவனை விட உன்னை தான் தேடுறேன்” இமை மூட வழிந்தது கண்ணீர்.

********

இவனுக்கோ இரவு ஒரு பொட்டு தூக்கமில்லை. அமைதியாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கை வேறெங்கோ நகர்வது போல் உணர்ந்தான்.

எங்கையோ இழுத்து செல்ல நினைத்தான், ஆனால் அது தான் அவனை இழுத்து சென்று கொண்டிருக்கிறது.

ஏன் நடக்கிறது, எதனால் நடக்கிறது ஒன்றும் புரியவில்லை. இப்போதைய ஒரே பிரச்சனை லாவாவை தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்பதே.

உடல் முழுதும் காயங்களோடு நின்றவள் அவன் உறக்கத்தை அடியோடு துரத்தினாள். எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் குதூகலம் என உயிர்போடு இருப்பவள், அவளுக்கு இனி உயிர் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

அத்தனை பிரச்சனை அதுவும் இந்த கொஞ்ச நாளிலேயே, தலை விண் விண் என தெரித்தது. இரு வீட்டினர் நினைத்தால் கூட லாவா தன்னிடம் வருவது நடக்காத விசயம், அம்மா, அப்பா என புராணம் பாடுவாள்.

ஆனால் அவளாக வர வேண்டும் வர வைக்க வேண்டும்.. எப்படி எப்படி..! கிரிமினலாய் யோசித்தான். பட்டென ஒரு எண்ணம் உதயமாகியது.

கண்மூடி கடவுளை வேண்டினான், இந்த ஒரு முறை அவளை என்கிட்ட எப்படியாவது கொண்டு வந்து விட்டுடு என மனதார வேண்டினான்.

விடிய காத்திருந்தவன், முதல் ஆளாய் கிளம்பி வெளியே சென்றான் மருத்துவமணைக்கு எப்படியோ கெஞ்சி கூத்தாடி லாவாவின் காயங்களை சொல்லி மருந்து மாத்திரை வாங்கி வந்தான். கூடவே அவள் அணிய ஏதுவாய் இரு உடைகள் வேறு வாங்கி வீட்டில் வைத்து விட்டு, லாவாவின் வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

கேட்டை திறக்கையிலேயே ‘மாமா’ என அழைத்துக் கொண்டு தான் வந்தான்.

சத்தம் கேட்டு முதலில் வந்தது லாவா தான். “உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்ல” அடிக்குரலில் கத்தியவள் அவனை இழுத்துக்கொண்டு சுற்று சுவரையொட்டி வீட்டின் பின்புறமாய் ஓடினாள்.

இரவு பார்த்ததை விட காயம் இப்போது இன்னமும் கொடூரமாக இருந்தது அதில் மெதுவாய் விரல்களை படறவிட்டவன் “அதுக்காக நீ இப்படி அடி வாங்குறதை பார்த்துட்டு இருக்க சொல்றியா?” அவன் கண்களில் நேற்றைய வரி அப்படியே இருந்தது.

“நான் ஏற்கனவே வாங்க வேண்டிய அடி தான்..” என கூற, நேற்றும் இதை தானே கூறினாள்.. இவன் நெற்றியோ சுருங்க சட்டென சுதாரித்தவள் “நீ இப்படி என்னை பார்க்க வந்தது தெரிஞ்சா, இன்னமும் அடி வாங்குவேன். தயவு செஞ்சு போய்டு” சொன்னவளின் நாடி பிடித்து திருப்பியவன்

“எல்லாத்தையும் நம்புற.. ஏன் என்னை மட்டும் நம்ப மாட்ற? துணிஞ்சு வாயேண்டி, தூக்கிட்டு போறேன்”

“ப்ச், சினிமா டயலாக்கெல்லாம் பேசாத, அப்பா உன்னை பார்த்தா பெரும் பிரச்சனை ஆகும். இங்கிருந்து கிளம்பு முதலில்” தந்தை பார்த்திடுவாறோ என்ற பதட்டம் இவளிடம்.

“அப்போ நீயும் வா”

 “முடியாது” இவள் வீம்பு பிடித்தாள்

“அப்போ சிவாவை வேண்டாம்னு சொல்லு?”

“முதலில் நீ இப்படி பேசுறதை நிறுத்து. எல்லாத்தையும் நான் முடிவு பண்ற மாதிரி பேசிட்டு இருக்க? முதலில் விஜய் முடிவு பண்ணினான், அப்புறம் நீ முடிவு பண்ணின, இப்போ முடிவு அப்பாவோடது. நான் என்ன பண்றது சொல்லு? எல்லோரும் ஆட்டி படைக்கிறீங்க, நானும் ஆடுறேன்” அத்தனை வலி முகத்தில்.

“உன் அப்பா பத்தி யோசிக்காதே, நமக்கு அல்ரெடி கல்யாணமே ஆகிடுச்சு, என்கூட வந்துரு மத்தத நான் பார்த்துகிறேன்டி” மன்றாடினான்.

“என்ன பார்த்துப்ப? அன்னைக்கு அப்பா அடிச்சப்போ என்ன பண்ண முடிஞ்சது உன்னால?” வெகு கோபம் இவளிடம்.

“திருப்பி அடிக்க சொல்றியா? தப்பு நம்ப மேல இருக்கும் போது தணிஞ்சு தான் போகனும். எங்கே சிலுப்பிட்டு நிக்கனும்னு எனக்கு தெரியும்” சிறிதாய் கோபம் துளிர்த்தது இவனிடம்.

“ஓ.. அப்போ அடிதடிக்கு அஞ்ச மாட்ட! சரி.. உன் அப்பா தலை குனிஞ்சு நின்னாங்க தானே? என்ன பண்ண முடிஞ்சது? போன மரியாதை போனதுதானே? உங்கம்மா அழுதுட்டு போனாங்க என்ன என்ன பண்ண முடிஞ்சது உன்னால?  மேலும் மேலும் அசிங்க பட போறியா? உன் குடும்பத்தை அசிங்க படுத்த போறியா?” கோபத்தை விட்ணு இவள் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“அவங்களை விட இப்போ நீ தான் எனக்கு முக்கியமா படுற. ஆனால் அதுக்கு நீயும் ஒத்துழைப்பு கொடுத்தா தான் முடியும். அவங்க கோபம் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ போய்டும். ஆனால் நீ… உன் சந்தோஷம்… உன் வாழ்க்கை.. போனது போனது தாண்டி.. பிடிக்காத வாழ்க்கை வாழ்றது அவ்வளவு ஈசி இல்லை” இமைக்காது இவளை பார்த்தபடி கூற, வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து போனாள் லாவா.

கலங்கி கொண்டு வந்தது கண்கள் “நான் உனக்கு வேணாம் விக்ரா” அப்போது கூடபிடிக்கவில்லை எனும் வார்த்தை வாராததை உணர்ந்தான்.

“ஆனால் நீ எனக்கு வேணுமே. எங்கிட்ட தான் நீ சந்தோஷமா இருக்க முடியும்னு மனசு சொல்லிட்டே இருக்கு லாவா” இழுத்து அணைத்து கொண்டான்.

அவளுக்குமே அதே எண்ணம் தான், இவனிடம் இருப்பது போல் வேறு யாரிடமும் இத்தனை இயல்பாய் இருக்க முடியாது என தோன்ற அவன் தோளில் சாய்ந்தாள். அடுத்த நொடி அழுகை பீறிட்டு கிளம்பியது.

“அவனுக்கு முன்னாடியே நீ பிரபோஸ் பண்ணியிருக்கலாம்ல.. ஏன் ஏன் பண்ணல” மனதிலிருந்த இத்தனை நாள் கோபம் ஒட்டுமொத்தமாய் பீறிட்டு கிளம்ப, அவனை விட்டு பிரிந்து நின்று அவன் நெஞ்சிலேயே படபடவென அடித்து “ஏன்? ஏன்? முன்னையே நீ என்கிட்ட வரலை? சொல்லலை? செத்திட்டு இருக்கேண்டா.. தினம்தினம் வெளியில் சொல்ல முடியாமல் செத்திட்டு இருக்கேன்” இன்னுமின்னும் அவனை அடிக்க, அடிகளை வாங்கி கொண்டு இறுக்கி அணைத்து நின்றிருந்தவனுக்கோ இதயமே ஒருநொடி நின்றது.. என்ன சொல்கிறாள் இவள்!

வலுக்கட்டாயமாய் அனைத்து நின்ற விக்ரா, அவனை அடித்து கொண்டிருந்த லாவான்யா! இவர்களது நிலை ராஜசேகருக்கு தவறாகவே தெரிய

 “டேய் என்னடா பண்ற என் புள்ளைய” என்ற வெங்கல குரலில் இருவரும் பிரிந்து நிற்க, வேக எட்டில் அவனை நெருங்கி “உன்னை கொன்னு போட்ருக்கனும்! உயிரோட விட்டது என் தப்புடா” அவன் சட்டையை பிடித்து இழுத்து கொண்டு வந்து வெளியே தள்ளியதில் இவன் கேட்டில் முட்டி கீழே விழ, விழுந்தவன் “மாமா, நாம பேசலாம்.. நான் பேசுறதை முதல்ல கேளுங்க” கத்தியதை காதிலேயே வாங்காமல் தரதரவென ரோட்டில் இழுத்து போட்டு வெளுத்து விட்டார் அவன் பேசவே இடம் கொடுக்காமல்