“என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம்.

“ஆமாம் நான் புளுகு வண்டி, நீ பெரும பீத்தகளையம்.. போடி.. போக்கத்தவளே.. பெரும பீத்தகளையமாம், குடிக்குறது ஓட்ட களையாமாம், யாருகிட்டடி விடுற ரீலு” சிலுப்பினார் ராதை.

“யாரு நானா? பண மரத்துல இருக்குமாம் பன்னாடை, பரணுல தொங்குதாம் கிழிஞ்ச பாவாடைனு நீ தாண்டி விடுவ ரீலு.. அதுவும் இத்தா தண்டிக்கு” கை இரண்டை அகல விரித்து நையாண்டி பேசினார் பர்வதம்.

“தருத்தரம் பிடிச்சவ தண்ணியெடுக்க போனாளாம், தண்ணிபாம்பு தற்கொலை பண்ணிகிச்சாம்ன்ற மாதிரி நீ எங்க போனானாலும் புகையுமேடி, உன்கிட்ட பேச்சு வாங்க வச்சுட்டானே, என் கூட பொறந்த மவராசன்” தன் அண்ணனை நினைத்து ராதை கூக்குரல் போட்டார். ராதையின் அண்ணன் தான் பர்வதத்தின் கணவனும் கூட

சண்டைக்கு காரணமான லாவன்யாவோ அதுவரை கைக்கு நாடியை கொடுத்து வேடிக்கை பார்த்தவள், “வாயா இது.. வண்டலூர் ஜூ.. எம்மா பெரிசு. இப்போ தான் தெரிது, ஏன் இரண்டு தாத்தாவும் பொட்டுனு போய்ட்டாங்கன்னு. பேசி பேசியே போக வச்சிருக்கும்க கிழவிக” புலம்பினாள்

“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், ஹாபானாலும் ஹஸ்பண்ட்டு வாழ்ந்தவடி நானு, எம்புருஷனை பத்தி பேசுன.. பிஞ்சுபோவும் வெளக்கமாறு” பர்வதம் பாய்ந்தார்.

“பேசுவடி பேசுவ.. அந்த கள்ளு, ஃபுல்லு, ஹாப் எல்லாத்தையும் ஊத்தி குடுத்து குடிக்க வச்சு எங்கண்ணனை நீ தான்டி அனுப்பிட்ட. ஆனா கூடவே குடிச்ச நீ மட்டும் எப்படி தேன் உயிரோட இருக்கியோ? என ராதை ஜாடை போட

“அடக்கிழவி.. உன்கிட்ட இருந்து தான் எனக்கும் குடிக்குற பழக்கம் வந்திருக்கா, பாவி் ஜீன்ல நோய் தான் பரவும்னு பார்த்தா குடியுமா பரவுது” என மனதினுள் திட்டியவள்

“எல்லாத்துக்கும் காரணம் நீதானா? மூனு வேளைக்கு சாப்பாடு, ஒரு பக்கம் வெத்தல இடிக்க உரலு, இன்னொரு பக்கம் கோபத்தை இடிக்க என் அத்த நாச்சி, ஊர் ஊரா சுத்த கவர்மெண்ட் பஸ். ஒரே கொண்டாட்டமா இருக்க போல கிழவி..” திட்டி

“நீ் நல்லா உடம்பு சரியில்ல சரியில்லனு சொல்லிட்டு இங்க வந்து டேரா போட்டுகிட்டு ஒரண்டை இழுத்துட்டு திரியுற” என பர்வதத்தையும்  இவள் திட்ட

“நானே எமன் எப்போ அழைப்பான்னு இருக்கேன், போடி போக்கத்தவளே” என பர்வதமும்

“உனக்கு சப்போர்க்கு வந்தா என்னை வைத.. போடி” என ராதையும் ஒரே போல் பாலை இவள் பக்கமாய் திருப்பிவிட்டு “ஏண்டி அந்த பால்காரன் பொண்டாட்டிய உன் பக்கத்து வீட்டுகாரியை இழுத்துட்டு போய்ட்டானாமே என்னடி சங்கதி” ராதை பர்வதத்திடம் கேட்க “இழுத்து போனது பக்கத்து வீட்டு காரியை இல்லை.. அந்த சமையல் சாமானை வாடகைக்கு விடுவால்ல அவள தேன்” இத்தனை நேரம் இழுத்த சண்டையை மறந்து புரணியில் கவனமாகிவிட்டனர் இருவரும்.

“நேஷனல் அவார்டே கொடுக்கலாம். இதுக இந்த வயசுலயும் இந்த வாய் பேசுனா, எமன் எங்க இருந்து அழைக்க போறான். பயந்து பாய் போட்டு படுத்து தூங்கியிருப்பான்” பெருமூச்சு விட்டபடி கொண்டு வந்திருந்த பையை எடுத்துக்கொண்டு இவனறைக்கு போனாள்.

அங்கு இவனோ குப்புற படுத்து, உயர்த்தியிருந்த காலை ஆட்டிபடி முழங்கைகளை தலையணையில் ஊன்றி, இரு கைகளுக்கு நடுவே மொபைலை பிடித்து ஆன்லைன் கேம் விளையாண்டு கொண்டு, ஹாலில் இவர்கள் அடித்த லூட்டியெல்லாம் காதில் வாங்கி சிரித்தபடி படுத்திருந்தான் விக்ரா

“எப்படா வந்த எரும” இவன் கையில் இருந்த போனை பிடிங்கி, அவன் மேலேயே மல்லாக்க படுத்துக்கொண்டு தெரியாத கேமை தெரிந்தது போல் விளையாடிக்கொண்டிருந்தாள்.

“அதான் இவ்வளவு இடம் இருக்குல்ல, நீ பார்க் பண்ண என் முதுகுல கிடச்சதா?”

“ஆமா இது மட்டும் தான் பார்க்கிங், மத்த இடமெல்லாம் நோ பார்க்கிங்” உயர்ந்திருந்த அசைந்து கொண்டிருந்த இவனிரு பாதங்களின் மேல் இவளும் தன் கால்களை வைத்து முன்னும் பின்னுமாய் அசைத்து கொண்டிருந்தாள்.

“என்னத்தடி தின்ப? ஒவ்வொரு முறை லீவுக்கு வரும் போது, பத்து பத்து கிலோ கூடிடுற”

“புளுகாதடா புளுகு வண்டி. பத்து கிலோ கூடியிருந்தா நஞ்சிருப்ப டா!” என்றவள் “ஆமா இந்த முறை ஏன் நீ வரேன்னு சொல்லவே இல்லை? சாம்பூ”

“வரேன்னு சொன்னா, வாய்க்கு ருசியா சமச்சு போட போறியா என்ன? வெண்ண?”

“சைட் எபக்ட் இல்லாத மிலிட்டரி சரக்கை ஆட்டைய போட்ருப்பேன், கூடவே சைட்டிஸ்ஸோட”

“ஹேய்” என ஆனந்த அதிர்ச்சியில் இவன் முகம் திருப்பி இவளை பார்க்க

தலைக்கு மேல பாட்டிலை பிடித்து, மறு கையால் சிக்கன் பார்சலையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள்.

பாட்டிலை பார்த்து பரவசமானவன் அவளை ஒரு பிரட்டு பிரட்டி தள்ளிவிட்டி, பாட்டிலை அவளிடமிருந்து கைப்பற்றி “சைட் டிஸ் உனக்கு, மெயின் டிஸ் எனக்குடி” அவன் ஓட எத்தனிக்க

“டேய் தனியா குடிச்ச வயித்தால போய்டும், வாய் வெந்திடும்” சாபம் கொடுத்து கொண்டே இவனை விரட்டினாள்.

“பீருக்கே கிணத்தடில மட்டையாய்டுவ, இதில் மிலிட்டரி சரக்கு, கிணத்துக்குள்ள மட்டையாய்டுவடி வெண்ண மவளே” அவளிடமிருந்து தப்பியபடியே இவனும் பதில் பேசி ஓட,  கட்டிலின் மேல் ஏறிக்குதித்து இவன் மேல் பாய்ந்து அவனை பிடித்தாள்.

“பரவால்ல செத்தாலும் குடிச்சிட்டு சாவுறேன், நானும் வரேண்டா” தோளில் தொங்கி கொண்டே இவள் மூச்சு வாங்க பேச

“உனக்கு பீரே அதிகம். சொன்ன கேளுடி. நான் வேணா பீர் வாங்கி வரவா?” இவள் கெஞ்சுவதில் மனம் மாறி கேட்டான் இவன்.

“அய்யோ அப்பா வீட்டில் தான் இருக்கார்.  அப்புறம் மர்கயா தான்” மீண்டுமாய் கட்டிலிலே சென்று அமர்ந்தாள்.

“ஓ.. அதான் புல் பாட்டிலும் என் கைக்கு வந்திருக்கா! நீ கேடி டி” என திட்டவும் செய்தான்.

“விக்ரா, எனக்கொரு சந்தேகம் ஒரு வேளை நான் குடிச்சே செத்துட்டா என்னடா பண்ணுவ? நீ” நானில்லாமல் இவன் என்ன செய்வான் எனும் க்யூரியாசிட்டி அவளிடமும் எழுந்தது.

“நம்ப முறைப்படி எரிக்கிறது தான் வழக்கம், வச்சு எரிச்சுற வேண்டியதான்” என்றானே பார்க்கலாம்

‘ஆத்தி’ நெஞ்சிலேயே கை வைத்து “பாவி கொஞ்சம் கூட பாசமேயில்லையாடா என்மேல? ஒரு பேச்சுக்காச்சும் உனக்கு அவ்வளவு சீக்கரமலாம் சாவு வராது. நூறு வருஷம் வாழுவன்னு சொல்றியாடா?” மனமே ஆறவில்லை அவளுக்கு.

“ஏய்.. நாம குடிக்குற குடிக்கு நாப்பது தாண்டுறதே கஷ்டம், இதில் நூறாய்சா? கொஞ்சமாவது நியாயமா இருடி”

“அப்போ நான் நாப்பதுல செத்துருவனா?” பீதியானாள் லாவா.

“அப்சலூட்லி அப்சலூட்லி” இன்னும் இவன் ஏற்றிவிட்டான்.

“இப்போவே இருபத்தி ஐஞ்சுடா.. இன்னும் பதினைஞ்சு வருஷம் தானா? அய்யய்யோ பதினைஞ்சு வருஷத்துல என்னத்தடா வாழ? என்னத்த சாதிக்க?”

“அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. சாதிக்க பதினைஞ்சு வருஷம் எதுக்கு ஒரு வருஷம் போதாது?”

“ஒரு வருஷத்துல என்னத்தடா சாதிக்க?”

“என்ன சாதிக்கவா? காதல் பண்ணலாம், கல்யாணம் பண்ணலாம், குழந்தை கூட பெத்துகலாம்” என்றவனின் வாயிலேயே நான்கடி போட்டாள் இவள்

“இதெல்லாம் சாதனையா?” “சாதனையா?” முதுகிலும் தோளிலும் அடி போட்டு “சோதனைடா. இந்த சோதனைக்காக வாழறதை விட சாவுறதே மேல்” வீரவசனம் பேசினாள் இவள்.

“சாவப்போறியா? எப்படி எப்படி?” குதற்கமாய் இவன் கேட்க

“இருக்கவே இருக்கு கிணறு, குதிக்கறேன் சாவுறேன்”

“குதிக்கிறதான் குதிக்கற, ஒரு மூனு மாசம் கழிச்சு குதிடி கிணத்துல” சீரியஸாய் சொன்னான் இவன்.

“ஏன்?” பெரும் கேள்விகுறி இவள் மனதில்

“இது வெயில் காலம் கிணத்துல தண்ணி ஊறல. மூனுமாசம் கழிச்சுன்னா மழைக்காலம், கிணறு நல்லா ஊறி நிறைய தண்ணி இருக்கும். அப்போ குதிச்சு சாவு” என்றவனை கட்டிலில் தள்ளி அடித்து மிதித்து அவனை ஒரு வழி செய்தாள் லாவன்யா.

அவள் கொண்டு வந்த பாட்டிலும், சிக்கனும் கேட்பாரற்று கட்டிலின் ஓரமாய் கிடந்தது.

பட்டென விழிப்பு வர, நாச்சி தான் அவனை எழுப்பி கொண்டிருந்தார் “போன் விடாம அடிக்குதுய்யா” என எழுப்பி கொடுத்து விட்டு சென்றார்.

*******

விக்ரா- லாவா பிரச்சனைக்கு பிறகு, ராஜ சேகரை அடிக்கடி தொடர்பு கொண்டு விசயத்தை பாரிஜாதம் கறந்துவிட, பரம சந்தோஷம் அவரிடம்.

இதுதான் சாக்கென “அதுக்கு எதுக்குண்ணே எம்மருமவளை போட்டு அடிச்ச” என பக்குவமாய் பேசி பேசி, இறுதியில் “கடைசியிலே உன் ராஜ்ஜியம்னு நிரூபிச்சுட்டணே. நீ இப்போ ம் சொல்லு.. எம்புள்ளைக்கு பொண்ணு கேட்டு நான் வாரேன். தங்கமா பாத்துக்க மாட்டான ணே எம்மருவமவளை” நைச்சியமாய் பேசி

“சரி சிவாவையும், மச்சானையும் இந்த வாரம் சேர்த்து அழைச்சிட்டு வா.. நான் திரும்ப கிளம்ப முன்ன பரிசம் போட்டுடலாம், அப்ப தான் அந்த பய வாலாட்டாம இருப்பான்” என ராஜ சேகரின் வாயாலேயே சொல்ல வைத்து காரியத்தை கட்சிதமாய் முடித்து வைத்தார் அவருடைய தங்கை.

ஹாலில் அமர்ந்து போன் வழியாக பேசியா இந்த பேச்சுகள் யாவும் கிறங்கி போய் ஆளுக்கொரு மூலையில் கிடந்த மீனாவையும், லாவாவையும் கேட்காமலேயே அவர்கள் காதில் சென்று விழுந்தது.

ஒரு தவறும் செய்யாத போதே சிவாவை மறுத்தவர் மீனா. இப்போதும் இந்த பிரச்சனைக்கு பிறகும் சிவாவை தேர்ந்தெடுத்தால் லாவாவின் வாழ்வு எப்படி பட்டதாய் இருக்கும் என அவர் கண் முன்னே ஓடியது.

ம்ஹூம் எது நடந்தாலும் இது மட்டும் நடக்கவே கூடாது, என பாத்ரூம் செல்வது போல் சென்று மீனா போன் மூலம் விக்ராவை அழைத்து கூறிவிட்டார்.

கேள்விபட்ட அடுத்த நொடியில் இருந்து இவளுக்கு போன் அடித்து அடித்து ஓய்ந்தான். எடுத்த பாடில்லை இவள்.

இனி தாமதிக்க முடியாது என காத்திருந்தவன் அன்று இரவே காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து வீட்டிற்குள் வர முயன்றான். முன் வாசல் பூட்டி இருந்தது. முயன்று பார்ப்போமே என பின் வாசல் வழியாய் வர, சரியாய் பூட்டபடாத கதவு திறந்து கொள்ள பெருமூச்சு விட்டபடி ஒரு வழியாய் வீட்டிற்குள்ளும் வந்துவிட்டான்.