“ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா.
“உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன் இருக்கும், இருக்கு அவளுக்கு” என பொய்யாய் கோபம் கொள்ள நாச்சியின் தோளில் கைபோட்டு, “தேங்க்ஸ்மா.. எதிர்பார்க்கவே இல்லை”
“ஆனா நான் எதிர்பார்த்தான்டா நாரபயலே! திடுதிப்புன்னு கண்மணிவீட்டுல இருந்து சம்மதம் கிடச்சப்பவே சந்தேகம் தாண்டா உம்மேல. என்னவோ போக்கு மாக்கு தனம் பண்ணுத” வேட்டியை தூக்கி கட்டிகொண்டு வழக்கம் போல வம்புக்கு கிளம்பினார் சமரசு.
“எப்ப பாரும் அவன்கூட மல்லுக்கு நின்னுகிட்டு, போரும், சும்மா அவனை வஞ்சுகிட்டு, போரும் அங்கிட்டு” லெப்ட் ஹேண்டிலேயே டீல் செய்தார் நாச்சி.
“உம்மவன ஒன்னு சொல்லிட கூடாது வந்துருவா கம்பு சுத்த”
“இப்படி நீரு தேன் கம்பு சுத்துரோம். நாளைக்கு மீனா வீட்டுக்கு போகனும், போய் காலம்பர படுத்து தூங்கும்” புருஷனிடம் சத்தம் போட்டவர்
“நீயும் போயா.. தூங்குய்யா.. அப்ப தான் காலையில புது மாப்பிள்ளையா கிளம்ப முடியும்” மகனிடம் பாசத்துடன் கூறி அனுப்பிவிட்டார்.
“அவன்கிட்ட மட்டும் பாசம் என்கிட்ட வேஷமா.. இராவுக்கு என்கிட்ட தானே வரனும்.. வாடி இருக்கு உனக்கு” அந்த வயதிலும் நாச்சியை வெட்கம் கொள்ள வைத்தார் சமரசு.
மறுநாளை காலை பத்துமணி இருக்கும்..
‘இன்னைக்கு தான் உம்புருஷன் வந்திருக்காப்ல, உடனே எப்படி பேச.. சங்கட்டமா இருக்காத மீனா’, பத்தாம் முறையாய் சமரசு போனில் கேட்க
“அண்ணே, இவர் வந்ததில் இருந்து பாரிஜாதம் கிட்ட போனில் பேசிட்டே இருக்காக, இவ லாவன்யாவை கேட்டு, இவரு சரின்னு சொல்லிபுட்டா கஷ்டம்ண்ணே. சும்மா பேசி மட்டும் உறுதி பண்ணிக்கலாம். வீரா கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட இவுக கல்யாணத்தை வச்சிகிடலாம்” மீனா அழாத குறையாய் பேச
“நீரு இப்போ வாரீரா? இல்லை நானும் எம்புள்ளையும் மட்டும் போய் பேசிட்டு வரவா?” இவர்களது சம்பாசனைகளை கேட்டபடி இருந்த நாச்சி போன் வழியாக மீனாவிற்கே கேட்கும் விதமாய் கத்தினார்.
அதில் “மயினி ஒரு ஆள் போதும்” என மனதினுள் நினைத்து, தாம்தூம் என சமைக்க கிளம்பி விட்டார்.
ஊருக்கு வருகையில் எல்லாம் டிசர்ட், டிராக் என வருபவன், வீட்டுற்குள் அதுவும் குறைந்து சார்ட்ஸோடு சுற்றும் மகன், பேண்ட், சர்ட், டிரிம் செய்யபட்ட தாடி, அழகாய் வெட்டபட்ட முடி என முழு மாப்பிள்ளையாகவே மாறி அமர்ந்திருக்க, இம்முறை சச்சரவு ஏதும் செய்யாமல் கிளம்பிவிட்டார் சமரசு அவர்களுடன்.
மீனா சமையலறையில் இருக்க அந்நேரம் அழைப்பு மணி அழைக்க, “லாவா யாருன்னு பாரு” மீனாவின் அலறலில் இவள் போய் கதவை திறக்க, அழையா விருந்தாளியாய் வந்தான் விஜய்.
“கோவிலுக்கு செல்லத்தை கூட்டிட்டு வந்தா நான் பயந்துடுவனா? இந்த விசயத்துக்கு எவனை கூட்டிட்டு வர்றன்னு நானும் பார்க்குறேன். உன்னை எங்க எப்படி அடிக்கனும்னு எனக்கு தெரியும்” அவளுக்கு மட்டும் கேட்கும் படி இவன் பேச வார்த்தைகளின்றி நின்று விட்டாள்.
அதற்குள் “விஜய்., வா வா.. மகாவையும் அழைச்சிட்டு வரலாம்ல” என மீனா அழைக்க.
“ஆபீஸ் போகனும் அத்த, இன்னொரு நாள் அழைச்சிட்டு வரேன்” என கையில் இருந்த பென்டிரைவை கொடுத்துவிட்டு, மீனா பாராதவாறு, இவளை மறுபடி கண்அடித்து சென்றான்.
“நம்ப விஜய் தானடி, நீ ஏன் கத்துற? விஜயோட கல்யாணத்துக்கு அப்பா வரலை தானே, உங்கப்பா தான் வீடியோ வேணும்னு கொண்டு வர சொன்னார். அதான் கொடுத்துட்டு போறான், நீயேண்டி அவனை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி பார்க்குற, விக்ரா மாதிரி இவன் கூடவும் சுத்திட்டு தானடி இருந்த, என்ன இவன் கூடவும் சண்டை போட்டுட்டியா?”
“ஆமாம் சண்டை போட்டுட்டா மட்டும் திருந்துற ஆளா, அடி அடின்னு அடி பின்னிவிட்டா தான் திருந்துவான். ஆளும் மூஞ்சியும் முகரையும் பார்வையும் ச்சைக்” என முகம் சுண்டி முனுமுனுத்துக்கொண்டே அறைக்குள் சென்றாள்.
இவர்களது பிரச்சனை தெரியாத அவரும் “அட்டை பூச்சி மாதிரி ஒன்னாவே சுத்துறா, அப்புறம் எதிரி மாதிரி மூஞ்சை திருப்பிட்டு போறா! இவளுக்கு அப்பப்போ பைத்தியம் முத்திடும் போல” கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தார்.
“லாவன்யா சாப்பிட வா” ராஜசேகரின் சத்தத்தில் இவள் அறையை விட்டு வெளியே வர, டிவியில் விஜய் மகாவின் கல்யாண வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.
தாயும் தந்தையும் அதை பார்த்தபடி, திருமணதேதியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை சிரிப்புடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
விஜய்–மகாவின் திருமணம், கேட்டாலே முன்னெல்லாம் கவலை கொடுக்கும், இப்போதெல்லாம் எரிச்சலே மிஞ்சி நின்றது. சலிப்போடு தட்டில் உணவை எடுத்து வைத்து உண்ண துவங்கினாள்.
“கல்யாணத்துக்கு லீவு கூட போட முடியாமல் என்ன வேலையோ, நாளைக்கு லாவன்யா கல்யாணத்துக்காவது வருவீங்களா இல்லை லீவு இல்லைன்னு, மகளோட கல்யாணத்தையும் வீடியோல பார்க்க போறீங்களா?” சிறு சிரிப்போடு கூறினார்.
“வாய்ப்பே இல்லை மீனா” அத்தனை உறுதி அவர் குரலில் “எனக்கு தான் இன்னும் ஆறு மாசத்தில் பதினேழு வருச சர்வீஸ்ஸூம் முடிய போகுதே. விஆர்எஸ் வாங்கிட்டு சிறப்பா வைப்பேண்டி என் மக கல்யாணத்தை! ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்ய போறேன்” இவ்வளவு ஆசை அவர் குரலில்.
“என்ன விஆரெஸ்ஸா?” என மீனா அதிர
“ஷாக் ஆகுற சரி, ஆனால் சந்தோஷமான ஷாக்கா இல்லையே? ம்..?” புருவம் ஏறி இறங்க கேட்டதில்
“அதெல்லாம் சந்தோஷம் தான் நீங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டா நானா பொறுப்பு?” என
“சமாளிக்காத மீனா, அதான் உன் மூஞ்சே காட்டி கொடுக்குதே”
“நான் ஒன்னும் சமாளிக்கலை, நீங்க திரும்பி வந்தா சந்தோஷம் தான், வேணாம்னு சொல்ல நானென்ன லூசா?”
“அப்புறம் ஏன் மூஞ்சு இப்படி இருக்கு, சோகமா, உம்முனு?”
அடுத்த தெருவில் அம்மாவின் வீட்டை வைத்து கொண்டு, மகிழ்ச்சியாய் யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்து விட்டு, இனி திண்டுக்கல் போக வேண்டும், மாமியார், மாமனாரை கவனித்து கொள்ள வேண்டும், வாரத்தில் நான்கு நாட்கள் வந்து செல்லும் நாத்தனார் அவரது குடும்பத்திற்கு பொங்கி போட வேண்டும். தூக்கம், நிம்மதி போய்டும், கைவலி, கால்விலின்னு எல்லா வலியும் வருமே ஐய்யய்யோ அலறிவிட்டார் மீனா.
லாவன்யா மட்டும் சாப்பிட்டு கொண்டு இருக்க, ராஜசேகரோ மீனாவை முறைத்து பார்த்திருக்க,
மகளின் கையை சுரண்டி, ‘உன் அப்பா ஏண்டி என்னை முறைக்காரு’ என கேட்க
“நீ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசி, ரொம்ப சத்தமா அலறிட்ட” என இவள் விட்ட வேலையை தொடர்ந்தாள்.
“ஏண்டி என் குடும்பத்தை இந்தளவுக்கு மட்டமாவாடி எடைபோட்டு வச்சிருக்க” ராஜசேகர் முறைப்புடன் கேட்க
“எடை போட்ட வரைக்குமே அவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கேன், முழுசா தெரிஞ்சா உசுரு மிஞ்சும்?” கீழ்கண்ணால் பார்க்க
லாவன்யா சாப்பிட்டு முடித்து கைகழுவுவதற்காக கிச்சனுக்குள் நுழைந்திட
மீனா அமர்ந்திருந்த சேரின் கைபிடியை பிடித்து தன் அருகில் இழுக்க, சர்ரென ராஜ சேகரின் அருகே வர மீனாவின் இடது கையை பிடித்து இழுத்து “என் குடும்பத்தில் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் டார்ச்சர் பண்றாங்கனு அலர்ற? நான் ஏதும் பண்ணலையா?” மீசையை முறுக்கி கொண்டு கேட்க
“வயசுபுள்ளைய வீட்டில் வச்சுக்கிட்டு, அய்யோ கையை விடுங்க” இவர் முகம் சிவந்தது.
மகளை மனதில் கொண்டு கையை விட்டவர், சாப்பிட்டு முடித்திருக்க தட்டிலேயே கை கழுவி விட்டு “என் தங்கச்சிக குடும்பத்தை விடு, எங்கம்மா அப்பாவை எனக்காக பார்க்க மாட்டியா? வயசான காலத்துல எங்க போவாங்க? இருக்குற ஒரு மகனை தேடித்தானே வருவாங்க. நீ இங்க இருக்குற மாதிரி அங்கேயும் இருக்கலாம். வீட்டு வேலைக்கு வேணா ஆள் போட்டுக்கலாம்” என சொல்ல
தனக்காக இத்தனை செய்பவருக்கு, ஏதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் நொடியில் தோன்ற “ம்” என ஒற்றை எழுத்தில் இவர் சம்மதம் கூறிறார்.
கை கழுவி விட்டு வந்த மகளிடம் திரும்பி “உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும் சொல்லு லாவன்யா. இப்போ சொல்லி வச்சா தான் அடுத்த ஆறு மாசத்துக்கு பிறகு கல்யாண வேலையை பார்க்க சரியா இருக்கும்” என கேட்டதற்கு, தலை குனிந்தபடியே இருந்தால் ஒழிய வாயை திறக்கவில்லை. ராஜசேகரின் பார்வை இவளில் கூர்மையாய் படிந்தது.
அந்நேரம் அழைப்புமணி ஒழிக்க, மீனா தான் போய் கதவை திறக்க, சமரசு, நாச்சி, விக்ரா என மூவரும் வந்திருக்க “வாங்கண்ணே, வாங்க மதினி, வாய்யா விக்ரபாண்டி” என வாய் நிறைய அழைத்தார்.
விக்ராவின் பார்வையில் விழுந்தது லாவா தான். “ஏன் இவ உம்முனு இருக்கா?” தாடையை தேய்த்தபடியே உள்ளே வந்தான்.
ஆர்மியிலிருந்து லீவுக்கு வரும் நேரமெல்லாம் குடும்பமே வந்து பார்த்து செல்வது வழக்கம் என்பதால் ராஜசேகருக்கு இது புதிதாய் தெரியவில்லை.
அவரும் வாய்நிறைய, மனம் நிறைய அழைத்து விருந்தோம்பல் செய்தார். மீனா காபி கலக்க கிச்சனுக்குள் சென்றிட, “அத்த” என நாச்சியுடன் லாவன்யா ஒட்டிக்கொண்டாள்.