அத்தியாயம் 14

“இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க

“அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்” குரல் கம்ம கூறினாள். தோளில் கைபோட்டு “சரி விடு” என தேற்றினான்  இவன்.

ஏமாந்ததை, ஏமாற்றபட்டதை நினைத்து இருவருமே கவலை கொண்டனர். ஒருவரை ஒருவர் விழியகலாது பார்த்திருந்தனர்.

“நான் யாருக்கு என்னடா பண்ணேன். சும்மா இருந்த என் பின்னாடி அவன் தான் சுத்துனான். நீ அழகா இருக்க, என்ன மாதிரி ஒரு கேரக்டர் கூட நூறு வருஷம் வாழனும்னு ஆசையா இருக்குனு அவன் தான் பிரபோஸ் பண்ணினான். அவனுக்கு நிச்சயம் ஆகுற வரை என்பின்னாடி சுத்தி்ட்டு இருந்தான். ஆனால் அதுக்கு பிறகு என்னை சுத்த விட்டுட்டான்.

எவ்ளோ கனவு, எவ்ளோ ஆசை தெரியுமா? அவன் தான் புருஷன்னு நினைச்சு” சொல்ல முடியாமல் இவள் வேறு பக்கம் பார்த்தாள் அழுகையை அடக்கி கொண்டு

“ரொம்ப ரொம்ப வலிக்குது விக்ரா.. இருக்குற வலிக்கு, உன் தோளில் சாஞ்சு அழுது தீர்க்கனும்னு ஆசை.. ஆனா இப்போ தான் நீ என் ஃபிரண்ட் இல்லையே!” கண்ணீர் சடசடவென இறங்க

அவளையே பார்த்திருந்தவன் “ஃபிரண்ட் தான், யார் இல்லைனு சொன்ன?” அவளை இழுத்து தன்னில் சாய்த்து கொள்ள, தடுமாறி விலகினாள்.

“அப்போ தாலி கட்டினது தான் பிரச்சனைன்னா, அதை மறந்திடு. இப்போதைக்கு நான் உனக்கு ஃபிரண்ட் தான், பெஸ்டினு கூட வச்சுக்கோ. ஹஸ்பண்ட் மோட்லாம் ஆப் பண்ணி வச்சுடறேன். ஓகே யா” இவள் எண்ணவோட்டத்தை அறிந்தவன் போல அப்படியே இவன் படித்து கூற

உதடு பிதுங்க, முகம் சுருங்க, கண்கள் இறுக அழுகை உடைப்பெடுக்க, அவன் கழுத்தை கட்டிகொண்டு அப்படி ஒரு அழுகை அழுதாள்.

நேரம் கூட கூட அழுகையின் அளவும் கூடிக்கொண்டே சென்றது. தலை கோதிக்கொடுத்து அழுகையை இவன் மட்டுபடுத்த, மட்டுபடுவேனா என்றது அழுகை.

இதுவரை இவள் இப்படி அழுது பார்த்திராதவன், தன்னில் இருந்து அவளை பிரித்தெடுத்து, “அவனை நினைக்காதடி” பல்லைகடித்து இவன் பேச, மீண்டும் தோள்வளைவை கட்டிக்கொண்டு அழ ‘அதுவே சொன்னது நான் அழ காரணம் வேறு என’

“ஏமாத்தி உன்னை கேட்காமல் தாலி கட்டினதுக்கா அழற” இவன் மீண்டும் கேட்க அதற்கும் பதில் சொல்லாது அவனது தோள்களுக்குள்ளே மேலும் அழுத்தமாய் புதைந்து கொண்டாள். விஜயும் காரணமில்லை தானும் காரணமில்லை பின் ஏன் இவ்வளவு அழுகை, வெகுவாய் குழம்பி போனான்.

 “அழாதடி, நீ இப்படி அழுது பார்த்ததே இல்ல. ஏதோ பண்ணுது” குரல் கம்ம பேசியவன் “வேற எதுவும் பிரச்சனையாடி” இதழ் உரசும் தூரமே இருந்த இவள் காதினுள் கேட்க, விலுக்கென அவனை விட்டு விலகி தவறு செய்த குழந்தையாய் விழித்தாள். பயந்தே போனான் இவன். “என்னடி எதுவா இருந்தாலும். சொல்லு நான் இருக்கேன் உன் கூட” சொல்லி முடிக்கும் முன்னே

 “இல்லை.. பிரச்சனை எதுவும் இல்லையே…” தலை வேகமாய் மறுப்பாய் அசைய, உதடுகளும் கண்களும் அழுகையோடு சிரிக்க, அதில் அப்பட்டமாய் அவளது பொய் தெரிந்தது, நெற்றி சுருங்க, கண்கள் கூர்மை பெற்றன.

இவன் பார்வையை மேற்கொண்டு பார்க்க முடியாமல் மீண்டும் பிறந்த அழுகையோடு சாய்ந்தாள் அவனில்.

கைகள் தம்போக்கில் அவளது தலை கோத, விழிகளோ ஓரிடத்தில் உறைந்தது. “வேறதோ பிரச்சனை” மூளைக்குள் ஆழமாய் பதிந்த்து அவளது முகமும், முகம் காட்டிய வலியும்.

அவன் தோளில் சாய்ந்திருந்தவளின் தலையில் தன் கன்னத்தை சாய்த்து இவனும் பலத்த யோசனையில் ஈடுபட்டான். யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்.

நிறைய நாட்கள் மறைந்திருந்த தூக்கம், இன்று ஒருவரின் அருகில் மற்றவருக்கு நிம்மதி பிறக்க தூங்கி போயினர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விக்ராவிற்கு விழிப்பு வர, அழுகையோடு தன் தோளில் சாய்ந்தவள், இப்போது அரணாய் கை கொண்டு அணைத்து படுத்திருக்க, இதழ்களுக்குள்  அரும்பாய் பூத்தது காதல்.

மீண்டுமாய் அவனது பார்வை அவளை வட்டமடித்தது. தோளில் தலை வைத்து சாய்ந்திருந்தவளின் ஒரு கரம் அவன் கழுத்தில் கிடக்க, மறுகரம் இவன் மார்பை சுற்றி கொண்டு வளைத்திருந்தது. “லாவா, லாவா” என நெற்றி முட்டி அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.

பின் தரையில் இருந்த போனை எடுத்து நேரம் பார்த்தான். மணி எட்டரை என காட்டியது.

‘இவ பசி தாங்க மாட்டாளே’ என

தன் போனை எடுத்து செல்லத்திற்கு அழைத்தவன், மட்டன் இலை புரோட்டவும், ஹாப் தந்தூரியும் வாங்கிட்டு நம்ம கிணத்தடிக்கு வாடா” என வைத்து விட்டான்.

அந்நேரம் லாவன்யாவின் போன் அடிக்க அதையும் அட்டெண்ட் செய்தான் “அத்த, சொல்லுங்க” என்றான்.

“விக்ரா, நீ என்ன இவளோட போன்ல.. நீ எப்போ ஊரில் இருந்த வந்த? அவளை எங்க?” கேள்விகள் தொடுத்து வர,

“லீவு கிடச்சது அத்த, அதான் கிளம்பிட்டேன். வரும் போது கோவில்ல லாவாவை பார்த்தேன். பசிக்குன்னா. ஹோட்டல் வந்திருக்கோம். அவள் ரெஸ்ட் ரூம் போயிருக்கா ஒரு அரை மணி நேரத்தில் கூட்டிட்டு வந்திடுறேன்த்த” வாய்க்கு வந்ததை தெளிவாய் உளறினான்.

“சரிய்யா, நேரம் போக முன்ன வந்திடுங்க” என்றவர் “அப்புறம் விக்ரபாண்டி இன்னொரு விஷயம்” என

“என்னத்த?”

“லாவன்யா இந்த பத்து பதினைஞ்சு நாள் ஒரு மாதிரி அமைதியா இருக்காய்யா, பழைய துடுக்கு தனமெல்லாம் காணலை! ஏதும் பிரச்சனையா யாய்யா?” என

தோளில் சாய்ந்திருந்தவளையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்தவன் “எனக்கொன்னும் தெரியலையே அத்த! அவகிட்ட விசாரிக்கவா?” என இவன் கேட்க

“ம் விசாரிய்யா.. புள்ளைகிட்ட களையே இல்லை. சிரிச்சே பார்க்கல” என “சரித்த விசாரிச்சு சொல்றேன்” என வைத்துவிட்டான் இவனும்.

ஒரு வேளை அந்த விஜய் எதுவும் பிரச்சனை செய்கிறானோ? அவன் மேல் இதுவரை இருந்த சந்தேகம் வலுப்பெற்றது.

சட்டென இவளது போனில் ஏதும் கிடைக்குமா? என அதை அன்லாக் செய்தான். ஆனால் அதுவோ ராங்க் பேட்டர்ன் என காட்ட, இல்லையே இவள் இந்த பேட்டர்ன் தானே பாஸ்வேர்டா வச்சிருந்தா என மீண்டுமாய் முயற்சி செய்ய, மீண்டும்  அதே ராங்க் பாஸ்வேர்ட் என காட்டியது.

ஏதோ பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள் வலுவானது சந்தேகம்.

 “பேர்ட்டன் மாத்திட்டா” என பார்வை இவளை திரும்பி பார்க்க, “யாருடைய உரையாடல்களும் என் தூக்கத்தை பாதிக்காது” என ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

“எதையோ மறைக்கிறல” என கன்னம் வருடி, “நீயா சொன்னா தப்பிப்ப, நானா கண்டுபிடிச்சேன் மவளே, செத்தடி நீ”  வருடிய விரல்கள் அவளது இரு கன்னங்களையும் இறுக்கி பிடித்து, குவிந்த இதழ்களில் தன் இதழ்களால் நச்சென வைத்தான் ஒரு முத்தத்தை.

பூவில் புதைந்து எழுந்தது போல் ஓர் உணர்வு உடல் முழுதும் ஓடி மறைந்தது. இன்னும் வேண்டும் என்ற எண்ணமும் சேர, மீண்டுமாய் வைத்தான் இன்னொரு முத்தத்தை. இம்முறை மேகங்களுக்குள் மூழ்கி எழுந்தாற்போல் ஓர் உணர்வு.

மீண்டும் அதே எண்ணம் தலைவிரித்தாட, கன்னங்களை இன்னும் அழுத்தி பிடிக்க, இன்னும் விரிந்தது இதழ்கள், அவ்வளவு தான் தன்னிலை மறந்து புதைந்து விட்டான் அவ்விதழ்களுக்குள். பசிக்கு அவள் இதழ்களை தான் உணவாய் உண்டுவிட்டான்.

‘எந்திச்சிர போராடா’ மனமென்னும் அலாரம் தலைக்குள் அடிக்க இதழ்களை பிரித்து கொண்டான் மனமேயில்லாமல். ‘பகுமானமா சொன்ன, ஹஸ்பண்ட் மோட் ஆப் தான்னு? இதோ ஆன் பண்ணிட்டல்ல’ மனம் காறி துப்ப, ‘மூளையோ’ விடறா விடறா, மோட் எப்போதும் ஆன் தான் என துடைத்து கொண்டது.

இவள் முகத்தை உத்து பார்த்தாலே உச்சிக்கு ஏறுதுடா போதை. தலை உலுக்கி நிதானத்திற்கு வந்தவன் ‘இவ தூங்குறது நமக்கு நல்லதில்லைடா யப்பா’ என கன்னம் தட்டி

“ஓய், தூங்குனது போதும் எழுந்திரு” என ஒருமுறைக்கு மூன்று முறை அதட்டி எழுப்பிய பின்பே, நன்றாக கண் விழித்தாள்.

அவன் முகம் கண்டு மலர்ந்து, பின் நிதர்சனம் உறைக்க, முகம் சட்டென கருத்தது.

“என்ன பீல் பண்றியா? இவன் கிட்ட வந்து சிக்கிட்டமேன்னு?” என இவன் சீண்ட, பதிலுக்கு இவள் முறைத்தாள்.

“பசிக்குது, சாப்பிட்டுகிட்டே பீல் பண்ணலமா” என கேட்டவன் எழுந்து சென்று கிணற்றின் அருகே இருந்த தொட்டியில் கை, முகம், கால் என கழுவி வர, இவளும் சென்று முகம், கையை கழுவி வந்தாள். அந்நேரம் சரியாய் செல்லமும் பார்சலோடு வந்து இவனிடம் கொடுத்துவிட்டு, லாவன்யாவை முறைத்துவிட்டு சென்றுவிட்டான்.

பார்சலை பிரித்து அவளிடம் கொடுத்தவன், தந்தூரியில் கொஞ்சத்தை மட்டும் பிய்த்து எடுத்து கொண்டான்.

பேப்பரில் சுற்றபட்டு இருந்த பார்சலை பிரி்த்தாள்,  உள்ளே அலுமினிய பேப்பர் அதையும் பார்த்தாள் பிரிக்கையிலே ஆவி பறந்தது. அதன் பின் வாழை இலை அதையும் பார்த்தாள் சூட்டை பொறுத்து கொண்டு. எண்ணெய், சால்னா, புரோட்டா என கலந்து கட்டி பறந்து வந்த ஆவியை நாசியை கொண்டு இழுத்து பிடித்து நுகர்ந்தாள். பசியில் இருந்தவளுக்கு மேலும் தூண்டப்பட்டது பசி

முழுதாய் பிரித்த பின் எண்ணையிலும் சால்னாவிலும் முங்கி நீச்சலிடித்த புரோட்டாகளின் மேல், மட்டன் பீஸ்கள் மேல தூவபட்டிருக்க, ஆங்காங்கே எட்டி பார்த்த மல்லி இலையும், கிள்ளி போட்ட வத்தலும் தலை நீட்ட ஒரு பிடி பிடித்தாள். ரசித்து ருசித்து உண்டாள்.

இதுவரை அழுத அழுகை என்ன? இப்போ உக்காந்து மொக்குறது என்ன? இரண்டுமே சிங்க் ஆக மாட்டிக்குதே? ஏதோ விசயம் இருக்கு. அது தலைக்குள்ள ஏறாத வரை அவள் அவளா இருக்கா.. ஏறுன அடுத்த நிமிசம் சந்திரமுகியா மாறிடறா? இவன் யோசனைகள் இப்படியிருக்க

முக்கல்வாசி உண்ட பிறகே, “உனக்கு” என பார்சலை அவனிடம் நீட்ட, “எனக்கு வேணாம். நீ சாப்பிடு” என முழுதாய் உண்ண விட்டான். என்ன பசியோ முழுதாய் தின்றும் முடித்தாள். பின் பைக்கிலேயே அவளது வீட்டிற்கும் அழைத்து வந்தான்.