அத்தியாயம் – 9
ப்ரியா விலகி விட்டாள். எந்த பிரச்சனையும் செய்யாமல், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், ரவியின் வாழ்வில் தன்னிலை என்னவென்பது உணர்ந்து சென்றுவிட்டாள். அவள் மனதில் இருந்தது எல்லாம், வாழ்கை கொடு என்று கேட்கும் நிலை எனக்கு தேவை இல்லை என்பது மட்டுமே.
ஆனால் ரவியோ திவ்யாவிடம் யாசித்து நின்றான். என் வாழ்வு முழுவதும் நீ வேண்டும், நீ மட்டுமே போதும் என்று. ஆம் யாசித்து தான் நிற்கிறான், என் சகலதிற்கும் திவ்யா வேண்டும் என்று. திவ்யாவின் மௌனம் ரவியை கொல்லாமல் கொன்றது. பொ
ள்ளாச்சி வந்து ஒருவாரம் ஆகிறது, ஆனால் இன்றுவரை அவள் எதுவும் பேசவில்லை. ஏதாவது பேசினால் தானே அவனும் தன் மனதில் இருப்பதை எல்லாம் பேச முடியும். திவ்யாவின் பதில் தெரியாமல் செல்வதாய் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு ரவி சென்னை செல்வதை பற்றிய நினைப்பையே விட்டுவிட்டான்.
“நீ வேலைக்கு போகலையா??” என்ற தர்மலிங்கத்தின் கேள்விக்கு என்ன சொல்வது என்பது தெரியாமல் முழிக்க, “என்னடா இப்படி முழிக்கிற..? என்ன பிரச்சனை..?” என்று மகன் அருகே வர, அவ்வளவு தான் ரவி, “அப்பா…!!!!” என்று அவரை இறுக கட்டிகொண்டான்.
ரவி இப்படி எல்லாம் இருந்ததும் இல்லை செய்ததும் இல்லை. ரவியின் முகம் பார்த்தே எதுவோ சரியில்லை என்று உணர்ந்த தர்மலிங்கம் மகனிடம் எப்படி கேட்க என்று யோசித்து தான் வேலையை பற்றி பேச்சை தொடங்கினார். ஆனால் ரவியோ இப்படி அவரை இறுக கட்டிக்கொள்ளவும் திகைத்து போய் விட்டார்..
“என்.. என்ன டா..?? என்ன ரவி…” என்று சற்றே திடுக்கிட்டு கேட்க,
“என்னால முடியலப்பா… நிஜமா முடியலை.. என்.. எனக்கு திவ்ஸ் வேணுப்பா.. லைப் லாங் எனக்கு அவ வேணுப்பா…” என்று ஆரம்பித்து ஒன்றுவிடாமல் சொல்லி விட்டான். ஒன்றுவிடாமல்…!!!
இனி ரவிக்கு தன் இமேஜ் பற்றிய கவலை எல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், முடிவில் திவ்யா அவனிடம் வந்து சேர்ந்தால் சரி. அவ்வளவே. அவளோடு பேசாமல் அவனுக்கு இருதயமே அடைத்தது போல் இருந்தது. இதில் அவளை இங்கு விட்டு வேலைக்கு செல்வதாவது ஒன்றாவது.
தன் மனதில் அழுத்திக்கொண்டு இருந்ததை எல்லாம் தர்மலிங்கத்திடம் இறக்கிவிட்டான். அவர் இதையெல்லாம் சிறிதும் எதிர்பார்கவில்லை. திவ்யாவின் திருமணம் எந்த காரணத்தினால் நின்றது என்று தெரியும். அப்படியிருக்க, ஏற்கனவே ப்ரியாவிடம் காதலை சொல்லி அதுவும் திவ்யா மூலமே சொல்லி, இப்பொழுது அவளையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு திவ்யா வேண்டும் என்று வந்து நிற்கிறான்.
நிச்சமாய் இது திகைப்பு தான் அவருக்கு.
“என்ன டா இதெல்லாம்…”
“இது தான் ப்பா என் மனசுல இருக்கு.. இது மட்டும் தான். இனி இந்த ரவிக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. தயக்கமும் இல்லை..” தீர்க்கமாய் அவன் குரல்.
“அதெல்லாம் சரிடா ஆனா… பாப்பா…”
“திவ்ஸ்கிட்ட நீங்க இது பத்தி ஒருவார்த்தை பேச கூடாதுப்பா.. அவ என்னை எனக்காகவே ஏத்துக்கணும்.வேற யார் சொல்லியும் இல்ல..”
அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது. இவன் என்ன கதை சொல்வது போல் சொல்கிறான் என்று நினைத்தவர், “அப்புறம் எதுக்குடா என்கிட்ட சொன்ன..” என்றார் கடுப்பாய். அவருக்குமே ரவியை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
“சொல்லணும் போல இருந்துச்சுப்பா அவ்வளோதான். மத்தபடி திவ்ஸ்.. நானே பார்த்துக்கிறேன்..”
“ஏன்டா ஆரம்பத்துல இருந்து எல்லாத்தையும் தப்பு தப்பா பண்ணிட்டு இப்போ என்னத்தடா பாக்க போற…?”
“எல்லாத்தையும் சரியா பண்ண பாக்குறேன் ப்பா..”
“என்ன பிள்ளை பெத்து இருக்கேனோ…” என்று தோன்றியது அவருக்கு. திவ்யாவின் திருமணத்தில் இருந்தே ரவி சரியில்லை என்று தெரியும் ஆனால் அது இந்தளவுக்கு வரும் என்று தெரியாது. மகன் முகத்தில் இருந்த தீவிரம் அவன் மனதில் இருப்பதை நன்றாய் புரியவைக்க, இனி ரவியிடம் எதுவும் பேசி பயனில்லை என்று புரிய நேராய் திவ்யாவிடம் தான் சென்றார்.
“மாமா…. என்ன மாமா…”
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பாப்பா..”
“என்.. என்ன மாமா..??”
சில நேரம் பெரியவர்கள் கூறும் அறிவுரை அத்தனை ஏற்புடையதாய் இருக்காது. இது எப்படி முடியும், அது எப்படி நடக்கும் என்றே நம் மனம் எதிர் கேள்வி கேட்க முண்டி அடித்து வரும். ஆனால் வாழ்ந்து பார்த்த அவர்கள் கூறுவது ஒவ்வொன்றும் அனுபவம் நிறைந்தது என்று நாம் அதனை அனுபவிக்கும் போது மட்டுமே புரியும்.
உன் வாழ்வை மட்டும் பார் என்று சொல்லும் போது சுயநலமாய் தோன்றும், ஆனாலும் ஏதாவது ஒரு புள்ளியில், நட்பு, உறவு சொந்தம், பந்தம் என அனைத்தையும் தாண்டி நமக்கு நம் வாழ்வு மட்டுமே முக்கியம் என்ற இடத்தில் வந்து நிற்போம்.
ரவி அப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் திவ்யா???
தர்மலிங்கம் வேறு எதுவும் அவளிடம் கேட்கவில்லை. ரவியை ஏற்றுக்கொள்ள் என்றோ அவனை மன்னித்துவிடு என்றோ எதுவுமே கேட்கவில்லை. ஆனால் வாழ்கையின் நிதர்சனத்தை புரியவைத்தார். இரு குடும்பங்களின் பழக்க வழக்கம், ரவியின் குணம், அவளது வாழ்வு, எதிர்காலம் என்று அனைத்தையும் மேலோட்டமாய் பேசி அவளை யோசிக்கும் படி சொன்னார்.
சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார் ஆனால் குழப்பி நிற்பதோ திவ்யா தான். இத்தனை நாளில் ப்ரியாவிற்கு நிறைய முறை அழைத்துவிட்டாள், முதலில் பதிலே பேசாதவள் பின், என் வாழ்வு நிம்மதியாய் செல்ல வேண்டும் என்று நினைத்தால் இதற்கு மேல் தொல்லை செய்யவேண்டாம் என்று குறுந்தகவல் வர திவ்யாவிற்கு என்ன பதில் சொல்வது தெரியவில்லை.
நடந்த எதற்குமே திவ்யா காரணமில்லை, ஆனால் நடந்த அனைத்தும் அவளை மையமாய் வைத்தே. இனி ப்ரியாவோடு பேசினால் அவளை தொல்லை செய்வது மட்டுமில்லை தன்னுடைய தன்மானத்திற்கும் இழுக்கு என்று தோன்ற, அவள் மனதில் அடுத்து தோன்றியது ரவியின் முகம்.
இதுவரை ரவி இல்லாது ஒரு விசயத்தை திவ்யா என்றுமே தன் வாழ்வில் நினைத்து கூட பார்த்தது இல்லை. ஆனால் இன்றோ அவள் எடுக்கும் முடிவே இனி தன் வாழ்வில் ரவியின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய போகிறது. தன் தோழனாய், ப்ரியாவின் காதலனாய் பார்த்த ரவியை தன்னுடைய வாழ்க்கை துணையாய் நினைத்திட மனம் இன்னும் அத்தனை தைரியம் வரவில்லை.
மனித மனம் ஒரு குரங்கு என்பது சரிதான். எப்போது எப்படி தாவும் என்று தெரியாது. இப்பொழுதெல்லாம் ரவியை பற்றிய சிந்தனை திவ்யாவிற்கு அதிகம் வந்தது. ஊருக்கு வந்ததில் இருந்து அவளிடம் ஒருவார்த்தை கூட அவன் பேசவில்லை. அத்தனை ஏன் கண்ணில் கூட படவில்லை.
இப்படியிருக்க தான் என்ன யோசிப்பது என்றே அவளுக்கு தெரியவில்லை. தர்மலிங்கம் வேறு வந்து பேசிவிட்டு செல்லவும் தோய்ந்து அமர்ந்துவிட்டாள். ஆனால் ரவி சும்மா இருப்பானா??
தந்தையிடம் கூறிவிட்ட பிறகு அவனுக்கு எங்கிருந்து அத்தனை தைரியம் வந்ததோ, கஜினி முகமது படையெடுத்தது போல தொடர்ந்து அடுத்து அடுத்து திவ்யாவிடம் வந்தான்.
“திவ்ஸ் யுவர் சைலன்ஸ் கில்ஸ் மீ…” என்று வந்தவனை அவள் விழிகள் ஆராய்ந்தது. தாடியும் மீசையுமாய், கண்கள் லேசாய் சிவந்து. சட்டையின் மேல் பட்டன் திறந்து, பார்க்கவே அவனது தோற்றம் எப்படியோ. அவளது பார்வை தன்னை அலசுவது உணர்ந்தாலும்,அதை கவனிக்காது இருப்பது போல் இருந்தான்.
“என்கிட்டே பேசுறதுக்கு கூட என்ன வந்துச்சு உனக்கு…” என்றவனின் குரலில் இயலாமை வழிந்தோடியது.
“என்ன..?”
“ஆனாலும் உனக்கு இவ்வளோ கெத்து ஆகாது திவ்ஸ்….”
“ம்ம்..”
“ம்ம்ச் இப்போ என்னத்துக்கு நீ இப்படி இருக்க..??”
“எப்படி..??”
அவனது பொறுமை காற்றில் பறந்தது. “ஏய் என்ன டி நானும் அமைதியா பேசிட்டு இருக்கேன் நீ என்ன ஒருவார்த்தைல பதில் சொல்லிட்டு உயிரை வாங்குற…” என்று கத்தினான்.
ஆனால் அவளோ எதுவுமே பேசவில்லை பதிலுக்கு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். எதுவுமே எளிதில் கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது என்பது சரிதானோ.
திவ்யாவிற்கு ரவியை பிடிக்கும். அதற்கு அளவு எல்லாம் இல்லை. தோழன் தன்னை புரிந்தவன், தனக்காக எதுவென்றாலும் செய்வான் என்பதை எல்லாம் தாண்டி தன் கண் முன்னே ப்ரியாவோடு பழகியது எல்லாம் அவளுக்கு அத்தனை எளிதில் மறந்திட முடியவில்லை. அவளது கண்களை மூடினாலே அந்த நியாபகங்கள் தான்.
ப்ரியா, ரவிக்கும் திவ்யா வாழ்வில் இடையே திடீரென்று வந்தாள், அதே போல திடீரென்று சென்றுவிட்டாள். அப்பொழுது நண்பனாய் மட்டுமே இருந்தான், இப்பொழுது அதையும் தாண்டிய ஒரு உறவில் வந்து நிற்கிறான்.அதுவும் எப்படி என் வாழ்விற்கு நீ மட்டுமே போதும் என்ற முடிவில்.
அவன் தெளிந்துவிட்டான். இவள் தள்ளாடுகிறாள்..
“திஸ் இஸ் டூ மச் திவ்ஸ்.. மொபைல் டார்ச்ல, நான் தூங்கிட்டேன்னு படிச்சிட்டு இருக்க… பிராடு…” என்ற குரல் வரவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் திவ்யபாரதி.
ரவ்பிரதாப்போ அவளை ஏகத்துக்கும் முறைத்தான். டன் டன்னாய் அசடு வழிந்தது அவள் முகத்தில்.
“டூ பேட் திவ்ஸ்…”
“இன்னிக்கு எப்படியும் முடிச்சிடனும்னு….” என்று அவள் இழுக்க,
“நோ…” என்றபடி அவளது கரங்களில் இருந்த புத்தகத்தை பறித்தவன் கண்களால் கடிகாரத்தை காட்டினான்.. நேரம் நள்ளிரவு ஒன்றை காட்டியது.
“ஈவ்னிங்கே முடிச்சு இருப்பேன்.. கெஸ்ட் வந்துட்டாங்க…” என்று உதடு சுளித்தாள்.
“நாளைக்கு படி…”
“ம்ம்ஹும் ம்ம்ஹும் இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு…” என்று அவன் புறம் எம்பி அவனுக்கு பின்னே இருந்த புத்தகத்தை எடுக்க முயற்சிக்க, அவனோ அவளது முயற்சியை சுலபமாய் தடுத்து மீண்டும் அவளை படுக்க வைத்தான்.
“தூங்கு திவ்ஸ்.. யூ ஆர் லுக்கிங் டயர்ட்…”
“டயர்ட் ஆக்கினதே நீங்கதான்…” அவனது கைகள் போட்டு அவளை எழ விடாமல் அழுத்தியது.
“நாளைக்கு நான் ஊருக்கு வரணும்னா தூங்கு..”
அழுத்தம் திருத்தமாய் அவன் குரல் கேட்க, “ஹேய் நிஜமாவா???” என்று வேகமாய் எழுந்தமர்ந்தாள். ஆனால் அதற்கு நேர்மாறாய் இருந்தது அவன் முகம், நள்ளிரவு பேசும் பேச்சா என்று கூட தோன்றியது அவனுக்கு.
“ம்ம்..”
“என்ன ம்ம்.. நைட் தூங்கும் போது கூட வரமுடியாது தானே சொன்னீங்க..”
“ம்ம் பட் நீ சொன்னது அம்மா சொன்னது எல்லாம் தின்க் பண்ணேன் திவ்ஸ்..”
“ஹ்ம்ம்… சில நேரம் இப்படி எல்லாம் நம்ம பேஸ் பன்னிதானே ரவி ஆகணும்.. ஜஸ்ட் நீங்க அங்க வந்தா மட்டும் போதும்…” என்றால் அவனை சமாதானம் செய்யும் எண்ணத்தில்.
“அது மட்டும் தான் நான் செய்வேன். வேற எதுவம் என்கிட்ட எதிர் பார்த்திடாதிங்க.. வருவேன் அவ்வளோதான்..”
ஹாப்பாடி இதுவே பெரிது என்று தோன்ற, ரவியின் கரங்களை மீண்டும் எடுத்து தன் மீது போட்டுகொண்டு படுத்தாள். அவனுக்கு இதில் சுத்தமாய் பிடித்தமில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. முதல் முறையாய் அவனுக்கு பிடிக்காத ஒன்றுக்காய் அவனை கட்டாய படுத்தி இருக்கிறாள்.
நிச்சயமாய் ரவி அங்கு வந்தால் அவனால் நிம்மதியாய் இருக்க முடியாது. அந்த மாதிரி தான் அந்த ப்ரியா செய்துவிட்டாள். உடன் இருந்தே குழி பறித்துவிட்டாள்.
இத்தனை நாள் உடன் ஒரே அறையில் இருந்தவள் ஆகிற்றே திடீரென்று ஊருக்கு கிளம்பி சென்றாளே என்ன ஏது என்று விசாரிப்போம் என்று ஒரு அக்கறையில் தான் ப்ரியாவை திவ்யா அழைத்து பேசினாள்.
அவளும் நல்லவிதமாய் பேசியது போல் தான் இருந்தது. பேச்சுவாக்கில் நாளை தங்கள் வீட்டிற்கு சுத்தம் செய்ய போவதாய் திவ்யா சொல்ல. ப்ரியாவின் மூளை ஒன்றும் ஒன்றும் நான்கு என்று அனைத்தையும் சரியாய் கணக்கு போட்டுவிட்டது.
ஆனால் இதெல்லாம் அறியாமல் ரவியும் திவ்யாவும், திவ்யாவின் வீட்டில் மகிழ்வாய் பொழுதை கழிக்க, அவள் வீட்டு அழைப்பு மணியும் சரியாய் அலறியது.
“இங்க யார்…” என்று குழப்பமாய் ரவியின் முகம் பார்த்தவள், சென்று கதவை திறக்க, வெளியே ரவியின் பெற்றோர்கள் தான் நின்றிருந்தனர். ரவி திகைத்து பார்க்க, திவ்யா குழம்பி நிற்க, வந்தவர்களின் முகத்திலோ அப்பட்டமாய் கோவமும் அருவெருப்பும்.
“ம்மா… ப்பா…” என்று ரவி சொல்லிய பிறகே தான் திவ்யாவிற்கு வந்திருப்பவர்கள் யார் என்று உறைத்தது.
“வா.. வாங்க.. உள்ள வாங்க..” என்று அவள் அழைக்க, அவளை ஒரு தீ பார்வை பார்த்துவிட்டு,
“என்ன ப்ரதாப் இதெல்லாம்???” என்ற பெற்றோரின் பார்வையில் ரவிக்கு முதலில் ஒரு சங்கடம் தோன்றினாலும் இனி மறைப்பதற்கு எதுவுமில்லை என்றான பின்,
“நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்…” என்றான் தீர்க்கமாய், திடமாய்..
“அப்போ இதென்ன…” என்று ஒரு கத்தை புகைப்படங்களை தூக்கி எறிந்தார் ரவியின் அப்பா ராம் ப்ரதாப்.
அனைத்திலும் அவனும் ப்ரியாவும்..
ட்ரிப் சென்றபொழுது இவனும் திவ்யாவும் எடுத்துக்கொண்ட அத்தனை புகைப்படத்திலும் இப்பொழுது அவனும் ப்ரியாவும்.. தன்னையும் அறியாது திவ்யாவின் வாய் “பாவி…” என்று முனங்கிற்று.
“என்னடா இதெல்லாம்.. என்ன இது?? நீ எத்தனை பேர் கூட தான் பழகுவ.. சொல்லுடா.. அந்த பொண்ண ஏமாத்தி ஊருக்கு அனுப்பிட்டு இங்க இந்த பொண்ணு…” என்று வசுந்தரா பேசிக்கொண்டே போகவும்,
“போதும் நிறுத்துங்க…” என்று கத்தியது திவ்யாவே.
ரவியின் முகமோ அவமானத்தில் சிவந்திருந்தது. தன்னை போய் இத்தனை கீழ்த்தரமாய் ச்ச்சே என்றானது. திவ்யா கத்திய பிறகு தான் அவனுமே நிமிர்ந்து பார்த்தான்.
“உங்க மகனை பத்தி உங்களுக்கு தெரியாதா??”என்று அவள் கண்ணீர் விழிகளுடன் கேட்க,
“எல்லாம் கண்ணு முன்னாடி பாக்கும் போது வேறென்ன நினைக்க முடியும்??” என்று வசுந்தரா பதில் சொல்ல, திவ்யா எதற்கும் அசருவதாய் இல்லை.
ரவிக்கும் அவளுக்கு வெட்டவெளிச்சம் ஆனது இது ப்ரியாவின் வேலை என்று. இதற்கு தான் அவள் அடித்துபிடித்து ஊருக்கு சென்றாள் என்று. ஆனால் இவர்கள் நம்பவேண்டுமே.
ராம்பிரதாப் வேறு எதுவும் கேட்கவில்லை, “ப்ராதப் ஊருக்கு கிளம்பு.. அடுத்த வாரம் உனக்கும் ப்ரியாக்கும் கல்யாணம்..” என்று இடியை இறக்க, ரவியோ இரும்பாய் விறைத்து நின்றான்.
“முடியாதுப்பா..”
“உன் முடிவை நாங்க யாரும் கேட்கலை. நாங்க ப்ரியா குடும்பத்துக்கு வாக்கு குடுத்துட்டோம்..”
“நான் திவ்யாவ தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா..”
ஆண்களின் குரல் உயர, திவ்யாவும் வசுந்தராவும் ஒருநொடி திகைத்து நிற்க, ரவியின் அப்பாவோ தன் முடிவை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை.
“அங்கிள் ஆன்ட்டி, முதல்ல உங்க மகன் மேல நம்பிக்கை வைங்க, எங்க லவ் ப்ரியா பிரச்சனை எல்லாம் அடுத்து தான்.. ஆனா ரவி அப்படி ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணுங்க வாழ்கையில விளையாடுவாரா?? கொஞ்சம் யோசிங்க…” என்று மெதுவாய் அதே நேரம் அழுத்தமாய் பேச,
“அந்த பொண்ணு அங்க சாக கிடக்குதும்மா… ”