அத்தியாயம் – 12
“உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.
“ப்பா… ப்பா… வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு தான் குட்டி போறோம். உங்கம்மா ஏன் இப்படி உம்முனாமூஞ்சி மாதிரி வர்றா. அப்பா ஊருக்கு வந்ததுல அம்மாக்கு பிடிக்கலியா” என்று குழந்தையிடம் பேசிக்கொண்டே மனைவியை நோக்கினான்.
“உன்கிட்ட நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை. நான் வந்தது இப்போ உனக்கு பிடிக்கலையா!! திரும்பவும் இப்படியே பிளைட் ஏறிடவா” என்றான்.
“நான் எப்போ சொன்னேன் பிடிக்கலைன்னு”
“அப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
“என்ன கேள்வி??”
“உள்ள வர்றதுக்கு இவ்வளவு நேரமான்னு கேட்டேன். உனக்காக தான் அரைமணி நேரமா உள்ளயே காத்திட்டு இருந்தேன்”
“எனக்காக காத்திட்டு இருந்தீங்களா இல்ல அவளோட ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்களா” என்றாள் வெடுக்கென்று.
“தேங்க்ஸ்…” என்றவன் மேலே ஒன்றும் பேசாமல் பெட்டியை தள்ளிக்கொண்டு குழந்தையை தூக்கியவாறே சென்றான்.
“குழந்தையை கொடுங்க” என்றாள்.
“ஏன் நான் தூக்கிட்டு வந்தா என்ன??” என்று முறைத்தான்.
“அப்போ பெட்டியாச்சும் கொடுங்க. ரெண்டையும் ஒண்ணா எதுக்கு”
“எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை” என்றான். ‘இவர் எதை கஷ்டமில்லை’ என்கிறார் என்று எண்ணிக்கொண்டவள் “எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்க”
“இப்போவாச்சும் உனக்கு கேட்கணும்ன்னு தோணிச்சே” என்றவன் எதுவும் பேசாமலே நடந்தான்.
“கேட்டேன் நீங்க எனக்கு பதிலே சொல்லலை” என்றவாறே அவனுக்கு இணையாய் அவளும் வேகமாய் நடந்தாள்.
“முதல்ல ஒரு வண்டியை பிடிப்போமே இங்கயே நின்னுட்டு பேசணுமா” என்றான்.
“கார்ல தான் வந்தேன், வெளிய நிக்குது” என்றவள் அவனுடன் வெளியில் சென்று அங்கு நின்றிருந்த காரில் ஏறினர்.
அவனாக சொல்லுவான் என்று அவள் அவன் முகத்தை பார்ப்பதும் குழந்தையை கொஞ்சுவதுமாய் ஏதேதோ செய்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்ய அவனோ எனக்கென்ன என்பது போல் வெளியில் சற்று நேரம் வேடிக்கை பார்த்தான்.
மதுவும் அதென்ன இதென்ன என்று கேட்க அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டு வந்தான். மதுபாலா அவனுடன் அதிக நேரம் செலவழித்ததில்லை என்றாலும் தந்தையை கண்டதும் துள்ளுவாள்.
மித்ராவிற்கு இப்போதும் அவர்களை கண்டு சற்று பொறாமையாய். நாளெல்லாம் அவளுடன் இருக்கிறேன். குறைந்த பட்சம் வீட்டில் இருக்கும் போது அவளுடன் தான் நேரம் செலவழிக்கிறேன்.
ஆனாலும் இந்த குட்டி அப்பா வந்ததும் என்னை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறதே என்றிருந்தது அவளுக்கு. “குட்டிம்மா உங்க அம்மா நம்மை பார்த்து கண்ணு வைக்குறாடா” என்று அவளை திரும்பி பார்க்காமலே சொன்னான். ‘பார்க்காமலே சொல்றாரு’ என்று திகைத்து அவனை பார்த்தாள்.
“எப்படி தெரியும் உங்களுக்கு??” என்றாள்.
“அதான் இப்போ சொன்னியே” என்றான் அவன்.
“என்ன சொன்னேன்??” என்று விழித்தாள் அவள்.
“நான் சொன்னதை உறுதிப்படுத்துற மாதிரி எப்படி தெரியும்ன்னு கேட்டியே. அப்போ நீ எங்களை பார்த்து கண்ணு வைச்சது நிஜம் தானே”
“இந்த கதையை விடுங்க, ஏர்போர்ட்ல வைச்சு எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்க. அ… அஷ்… அவகிட்ட என்… என்ன பேசிட்டு இருந்தீங்க??” என்று மனதில் நினைத்ததை திக்கி திக்கி கேட்டேவிட்டாள் அவள்.
பதிலேதும் சொல்லாமல் அவளை திரும்பி அவன் பார்த்த பார்வையில் அவள் பொசுங்காதது தான் மிச்சம். அவ்வளவு அனலடித்தது அந்த பார்வையில்.
‘எதுக்கு இப்படி கோபமா பார்க்கறாரு’ என்று வேறு மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அந்நேரம் சரியா சுஜி போன் செய்தாள். உடனே எடுத்தவள் “சொல்லு சுஜி” என்றாள்.
“ஹேய் என்ன வந்துட்டாரா உங்க ஆளு!! மித்ரா ஹாப்பி தானே!!” என்றாள் நேரங்காலம் தெரியாமல்.
“ஹ்ம்ம் வந்திட்டார் சுஜி, ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு கார்ல போயிட்டு இருக்கோம். நான் உனக்கு அப்புறம் பேசவா” என்றாள்.
“சரி சரி நீ அவரை பாரு” என்று வைத்துவிட்டாள் அவள். ‘ஹ்ம்ம் பார்த்திட்டு மட்டும் தான் இருக்கேன்’ என்று எண்ணிக்கொண்டு பெருமூச்சு விட்டாள்.
அதன்பின் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீடு வந்து சேர்ந்ததும் மகேஸ்வரி ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். மருமகளை மகனுக்கு ஆரத்தி எடுக்குமாறு கூறி அருகில் நின்றுக்கொண்டு மகனை பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே நுழைந்ததும் “எப்படிம்மா இருக்கீங்க?? என்னை தேடுனீங்களாம்மா??” என்றான் அவன். மகேஸ்வரிக்கோ மகனை கண்டதும் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
அவன் படிக்க சென்ற இத்தனை வருடங்களில் அதிகப்பட்சமாய் அவன் இங்கிருந்தது எண்ணிச் சொல்லும் நாட்களே. கடைசியாக நெல்லூருக்கு செல்லும் முன் ஒரு இரண்டு நாட்கள் வந்து சென்றான்.
“ஏம்மா அழறீங்க??” என்றவன் எழுந்து சென்று அவர் அருகில் அமர்ந்து கொண்டான் மதுவை தன் மடி மீது வைத்துக்கொண்டு.
“அழலைப்பா ராஜா. நீ ஊருக்கு போய் எவ்வளவு நாளாச்சு, அதுவும் இல்லாம உங்கப்பாவோட ஆசையை நிறைவேத்திட்டு வந்து நிக்கறதை பார்க்கும் போது ரொம்ப நிறைவா இருக்குப்பா” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் மித்ரா மதிய உணவை விரைவாக தயாரித்து முடித்திருந்தாள். சாப்பிட்டு அவன் அறைக்கு செல்ல மித்ரா அடுக்களை வேலை முடித்து வந்து பார்க்க அப்பாவும் மகளும் கட்டிலில் படுத்து உறங்கியிருந்தனர்.
‘பேசலாம்ன்னு வந்தா தூங்கிட்டாரா!! அம்மாகிட்ட மட்டும் போய் என்னம்மா ஏதும்மான்னு பேசுறாரு. இங்க ஒரு மனுஷி இருக்காளே அவளை என்ன ஏதுன்னு கேட்போமான்னு தோண மாட்டேங்குதே இவருக்கு’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டாள்.
அவளுக்கு உறக்கமும் வருவதாக தெரியவில்லை. அவன் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளில் முதலில் இருந்த நம்பர் பெட்டியை திறந்து அதிலிருந்த துணிகளை எடுத்து அடுக்கி வைத்தாள். மற்றொரு பெட்டி பூட்டியிருந்தது சாவி எங்கு வைத்திருக்கிறானோ என்று எண்ணி அதை ஓரமாய் எடுத்து வைத்தாள்.
எப்படி நெட்டி தள்ளிய போதும் நேரம் போகாமல் அழிச்சாட்டியம் செய்தது போல் இருந்தது அவளுக்கு. ஐந்து மணி போல் கண்விழித்தவன் மித்ராவை தேட அவளோ சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
ஏதோ தோன்ற சட்டென்று அவள் திரும்பி பார்க்க சைதன்யன் சமையலறை வாயிலில் நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று விதிர்த்து நின்றவளின் உள்ளே புதுரத்தம் பாய்வது போல் ஒரு உணர்வு.
என்னமோ இன்று தான் அவனை புதிதாய் பார்ப்பது போல் தோன்றியது. படபடவென்று அடித்துக்கொண்டது. “என்ன வேணும் காபி போடட்டுமா” என்றாள்.
அவன் எதுவும் சொல்லாமல் அவளருகே எட்டு வைத்து வர அவளுக்கு கை காலெல்லாம் சில்லென்று ஆகிப்போனது. ‘இதென்ன இப்படி ஆகுது’ என்று எண்ணிக்கொண்டு பிரிட்ஜை திறந்து பாலை எடுத்தாள்.
அவனுக்கு வேண்டாம் என்றால் தனக்காவது போட்டுக்கொள்ளுவோம் என்று எண்ணி பாத்திரம் எடுத்து காஸின் மேல் வைத்து பாலை ஊற்றினாள். “இங்க என்ன பண்றே??” என்றவன் சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.
“பார்த்தா எப்படி தெரியுது” என்றாள்
“ரொம்ப சூடா இருக்க மாதிரி தெரியுது” என்றவனின் பேச்சு சாதாரணமாய் இருந்ததா!! இல்லை வேறொரு அர்த்தம் இருந்ததா!! என்று எண்ணி அவள் யோசனைக்கு தாவ பாத்திரத்தில் ஊற்றிய பால் பொங்க ஆரம்பித்தது.
“காஸ்ல பாலை வைச்சுட்டு என்ன யோசனை தான் பண்ணுவியோ??” என்றவன் அடுப்பை குறைந்த தீயில் வைத்தான்.“இல்லை ஏதோ யோசனை சாரி” என்றவள் “உங்களுக்கு காபி, டீ எதுவும் போடவா” என்றாள்.
“டீவேணும்” என்றுவிட்டு அவன் வெளியில் சென்றுவிட்டான்.
‘இப்போ எதுக்கு வந்தாரு, எதுக்கு வெளிய போனாரு’ என்றவளுக்கு சற்றே ஏமாற்றமாய் இருந்தது. தான் என்ன எதிர்பார்க்கிறோம் என்று புரியாமல் சிறிது நேரம் வெறித்தவள் அவனுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு சென்றாள்.
டீயை குடித்து முடித்தவன் “என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்று கேட்டு வைத்தான். அப்போது தான் அவளுக்கு மதியம் நடந்ததை பற்றி கேட்கவேயில்லை என்று எண்ணி ஆரம்பித்தாள்.
“எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்கன்னு இப்போ வரை நீங்க சொல்லவேயில்லை”
“அதை தான் இவ்வளவு நேரமும் யோசிச்சுட்டு இருந்தியா!!!”
“இல்லை… ஆமாம்…” என்றாள்
“ஆமாவா!! இல்லையா!!”
“சொல்லுவீங்களா!! மாட்டீங்களா!!”
“நான் அஸ்வினியை பார்த்ததை நீ பார்த்துட்டேன்னு ஒத்துக்கிட்டல அதுக்கு தான் தேங்க்ஸ் சொன்னேன்”
“ஹ்ம்ம்…” என்றவள் “என்ன சொன்னா அவ??” என்றதில் அஸ்வினியின் மேல் பொறாமையோ இல்லை அவன் தன் கணவன் அவனை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றதில் வந்த செருக்கோ அவனிடம் திமிராய் கேட்டாள்.
“அவ என்ன சொன்னான்னு நீயே உள்ள வந்து கேட்டிருக்க வேண்டியது தானே. எதுக்கு ஓடி ஒளிஞ்சுகிட்ட, அவளை பத்தி நான் கேட்கும் போதெல்லாம் தெரியாத மாதிரியே ஏன் இருந்த??” என்றான்
“நான் ஒண்ணும் ஓடி எல்லாம் ஒளியலை. எனக்கு பிடிக்கலை நான் வரலை”
“நீ அவளை பார்க்க வந்திருந்தியா!! இல்லை என்னை பார்க்கவா!! என்னை பார்க்க வந்திட்டு அவளை பார்த்து ஒளிஞ்சா என்னன்னு சொல்லுறது”
“நீ பாட்டுக்கு அவகிட்ட என்னை மாட்டிவிட்டுட்ட, அவ பாட்டுக்கு என்னென்னமோ பேசிட்டு இருக்கா. என்னை இப்படி அப்படி நகரவிடாமா பேசிட்டு இருந்தா”
“என் கூட வேலை பார்க்கற ஒருத்தர் கூட இருந்ததுனால பேசாம பல்லைக்கடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். உள்ள வந்தவ நேரா வருவாளா ஒளிஞ்சு நின்னு எட்டிப்பார்த்திகிட்டு நிக்கிறா”
“தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு வெளிய வந்தா நீ பாட்டுக்கு கிளம்பி போக பார்க்கிற. மனுஷனுக்கு கோவம் வருமா!! வராதா!!இதுல கார்ல வைச்சே என்ன விஷயம்ன்னு சொல்லலைன்னு வேற மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு இருக்க”
“ஏற்கனவே ஒருத்தி என் கலீக் முன்னால கேள்வி கேட்டு நைனைன்னு நின்னுட்டு இருந்தா. நீ அவளுக்கு மேல கார்க்காரன் முன்னாடியே எல்லாம் சொல்லணும்ங்கற மாதிரி அங்க வைச்சு கேள்வி கேட்குற” என்று படபடவென்று பொரிந்து தள்ளினான் அவன்.
அவன் பேச்சில் அவளுக்கு சாரல் அடிப்பது போல் இருந்தது. அஸ்வினியிடம் இருந்து தப்பி பிழைத்து வந்ததாய் சொன்னால் என்ன அர்த்தம். வந்தவன் தன்னைத் தானே தேடியிருக்கிறான் என்று எண்ணி மனம் சந்தோசத்தில் மிதந்தது.
“ஆனா மித்ரா நீயேன் அஸ்வினி பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலை” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தான்.
அவளுக்கு புஸ்சென்று ஆகியது “தெரிஞ்சா தானே சொல்றதுக்கு” என்றாள் முகத்தில் அடித்தது போல்.
அடுத்து அவன் ஒன்று கேட்க அவளுக்குள் இருந்த பிடிவாதக்காரி நன்றாக முழித்துக்கொண்டு வீம்பு பிடிக்க ஆரம்பித்தாள். கேட்டவன் என்னவோ அதை சாதாரணமாக தான் கேட்டான்.
“மித்ரா இன்னைக்கு உனக்கு நைட் டியூட்டி தானே கிளம்பலையா??” என்றான்.
மித்ரா முருங்கைமரமே ஏறிவிட்டாள் அவளுக்குள் சடசடவென்று கோபம் பொரிந்தது. ‘இவருக்காக நான் லீவ் போட்டா, ஏன் வேலைக்கு போகலைன்னு கேட்கிறாரே’ என்று மனதிற்குள் அவனை நன்றாக வைதாள்.
“என்ன மித்ரா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ மைன்ட் வாய்ஸ்க்கு போயிட்டியா??” என்றான்.
“ஹ்ம்ம் இதோ கிளம்பிட்டே இருக்கேன்” என்றாள். ‘இப்படி கேட்பவனிடம் என்ன சொல்ல’ என்ற வீம்பு மனதில் எழ அலுவலகம் கிளம்ப சென்றாள்.
செபாஸ்டியனுக்கு போன் செய்து விடுப்பை ரத்து செய்ய சொல்லலாம் என்று அவனுக்கு போன் செய்ய அது அடித்துக் கொண்டே இருந்தது. அவசரமாய் அவனுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தயாராகி வந்தாள்.
மகேஸ்வரியும் அப்போது ஹாலில் தான் இருந்தார். “என்னம்மா எங்க கிளம்பிட்ட??” என்றார்.
“ஆபீஸ்க்கு கிளம்பிட்டேன் அத்தை”
“இன்னைக்கு லீவுன்னு சொன்னியே??” என்றார் அவர். இப்போது சைதன்யன் அவளை முறைப்பது அவனை பார்க்காமலே அவளால் உணர முடிந்தது.
“லீவு கேட்டிருந்தேன் கிடைக்கலை அத்தை அதான் கிளம்பிட்டேன்” என்றாள். ‘ஓ!! அதுக்கு தான் கிளம்புறாளா!!! அப்போ சரி’ என்று எண்ணிக்கொண்டவன் “நான் ட்ராப் பண்ணட்டுமா??” என்று எழுந்து நின்றான்.
“இல்லை நீங்க ரெஸ்ட் எடுங்க நானே போய்க்குவேன்” என்றுவிட்டு வெளியில் வந்தாள். பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தவள், அடுத்து வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
அலுவலகத்திற்கு ஏழு மணிக்கு மேல் கிளம்பினால் போதும் என்றிருந்ததால் சுஜியிடம் தன் மனக்குமுறலை கொட்டலாம் என்று எண்ணி அவள் வீட்டிற்கு சென்றாள்.
“ஹேய் என்னடி உன் வீட்டுக்காரர் ஊர்ல இருந்து வந்திருக்காரு எங்காச்சும் வெளிய போவீங்கன்னு பார்த்தா நீ இங்க வந்து நிக்குற!! என்னம்மா மறுபடியும் ஊருக்கு கிளம்பிட்டாரா!!” என்றாள் கிண்டலாய்.
“உனக்கும் கூட என் நிலைமை கிண்டலா போச்சுல சுஜி” என்றவளின் கண்ணில் இருந்து மளுக்கென்று கண்ணீர் உருண்டது.
“ஹேய் லூசாடி நீ!! நான் சும்மா கிண்டல் பண்ணேன். நீ எப்போ வேணா இங்க வரலாம்டி. ஆனா இப்படி அண்ணாவை வீட்டுல தனியா விட்டுட்டு வரமாட்டியேன்னு கேட்டேன்டி” என்றாள் சுஜி.
“அண்ணாவாம் அண்ணா போடி நீயும் உன் அண்ணனும். ஊர்ல இருந்து வந்த மனுஷனுக்கு பொண்டாட்டி நினைப்பே இருக்காதா. வந்ததும் அம்மா பார்த்து அப்படி உருகறாரு, மதுவை அந்த கொஞ்சு கொஞ்சறாரு”
இப்போது சுஜி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். “இப்போ எதுக்குடி சிரிக்கற” என்று அதற்கும் கோபமாய் பார்த்தாள் மித்ரா.
“இல்லை உன்கிட்ட உருகலை, கொஞ்சலைன்னு தானே உனக்கு காண்டு. அதானே இப்படி பேசிட்டு இருக்கன்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சு” என்றாள்.
“என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா” என்றவள் விமான நிலையத்தில் இருந்து நடந்தவைகளை தோழியிடம் கூறினாள்.
“அஸ்வினியை அவர் தற்செயலா தானே பார்த்தார். அவர் தெளிவா தான் இருக்கார். நீ தான் கண்டதை போட்டு குழப்பிக்கறன்னு தோணுதுடி”
“நான் தான் குழப்பவாதின்னு சொல்றியா” என்று மூக்கை உறிஞ்சினாள் மித்ரா மீண்டும்.
“அதென்ன கண்ணா இல்லை வைகை டேமாடி இப்படி அடிக்கடி ஓபன் பண்ணுற” என்றவளை முறைத்தாள் அவள்.
“இங்க பாரு நீ லீவ் போட்டிருக்கேன்னு அவர்கிட்ட சொன்னியா?? இல்லை தானே, உனக்கு ஆபீஸ் இருக்குமேன்னு நினைச்சு அவர் சாதாரணமா கூட கேட்டிருக்கலாம் தானே”
“நீ எனக்கு பிரண்டா இல்லை அவருக்கா!! எப்போ பார்த்தாலும் அவருக்காகவே பேசிட்டு இருக்க!!”
“அடி லூசி இவ்வளவு நேரமும் நான் உனக்காக தானே பேசிட்டு இருக்கேன். எங்கண்ணன் பாடு ரொம்ப கஷ்டம்டி, ரொம்ப தான் படுத்துற”
“ஆமா நான் தான் உங்கண்ணனை படுத்தறேன். அவர் என்னை படுத்தறது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதே. ஊருக்கு போன எங்கண்ணன் போன் பண்ணலை பேசி ஒரு வாரம் ஆச்சு சண்டை அது இதுன்னு என்கிட்ட சொல்லுவல அப்போ பேசிக்கறேன் உன்கிட்ட” என்றாள்.
“நான் என்ன பெருமாளை அப்படியா படுத்தறேன். அவர் தான் என்னை படுத்தறார்” என்றாள் சுஜி.
“அதே தான் உங்க நொண்ணனும் பண்ணுறார்” என்று திருப்பினாள் மித்ரா.
“எத்தனை மணிக்கு ஆபீஸ் கிளம்புற, நைட்க்கு எதுவும் சாப்பாடு கட்டி தரணுமா” என்றாள்.
“எதுவும் வேணாம் சுஜி எனக்கு எதுவுமே பிடிக்கலை”
“இங்க பாரு திரும்பவும் சொல்றேன் கண்டதும் நினைச்சு குழம்பிக்காதே. இன்னைக்கு ஏதோ கோவத்துல ஆபீஸ் கிளம்புற, சோ ஆபீஸ் போயிட்டு வா. நாளைக்கு ஒழுங்கு மரியாதையா லீவ் போட்டு வீட்டுல இரு அவரோட மனசுவிட்டு பேசு” என்றாள் சுஜி.
‘ஹ்ம்ம் பேசிட்டாலும்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு தோழியிடம் மண்டையை ஆட்டி வைத்தாள்.
வீட்டில் இருந்த சைதன்யனுக்கு வெறுமையாக இருந்தது. ‘இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டிருக்கலாம்ல, பெரிய வேலை அவபாட்டுக்கு கிளம்பி போய்ட்டா’ என்று மனதிற்குள் அவளை திட்டிக்கொண்டான்.
அப்போது கைபேசியின் ஒலி கேட்க அந்த ரிங்டோன் அவன் கைபேசினது போல் இல்லாததை அப்போது தான் கவனித்தான். அங்குமிங்கும் தேடி பார்க்க டிரெஸ்ஸிங் டேபிளின் மீது இருந்தது அந்த போன்.
‘மித்ரா போனை வைச்சுட்டே போய்ட்டா போல’ என்று எண்ணிக்கொண்டு அருகே சென்று போனை பார்க்க அது TL என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.
பொத்தானை அழுத்தி போனை காதுக்கு கொடுத்தான் ஹலோ என்றவாறே.எதிர்புறம் ஆண் குரல் கேட்டதும் செபாஸ்டியன் முதலில் விழிக்க பின் “மித்ரா இல்லையா” என்றான்.
“மித்ரா ஆபீஸ் கிளம்பிட்டாளே” என்றான் சைதன்யன் பதிலுக்கு.
“ஆபீஸ்க்கா இன்னைக்கு தான் மித்ராக்கு ஆப் கொடுத்திட்டேனே அப்புறம் எப்படி” என்றான் அவன் இவனிடம் கேள்வியாய்.
சைதன்யனுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறியது. “இல்லை அவ ஆபீஸ்க்கு தான் கிளம்பினா…” என்று இழுக்க எதிர்முனையில் “ஒரு நிமிஷம் சார்” என்றுவிட்டு அமைதி காத்தான்.
அவன் போனை நோண்டுவது அதன் சத்தத்திலேயே உணர்ந்தான் சைதன்யன். “நீங்க மித்ரா ஹஸ்பன்ட் தானே” என்றது இப்போது எதிர்முனை.
“ஆமாம்ங்க…என்னாச்சு!!ஒரு நிமிஷம்ன்னு சொன்னீங்க” என்றான்.
“சாரி சார் மித்ரா எனக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக்கா!! நான் தான் கவனிக்கலை. இன்னைக்கு ஆப் வேணாம் இன்னொரு நாள் எடுத்துக்கறேன்னு அனுப்பி இருக்காங்க”
“பட் இன்னைக்கு ஆப் கேன்சல் பண்ண முடியாது. நான் அதுக்கு ஏத்த மாதிரி இங்க ஆளுங்களை அரேன்ஞ் பண்ணிட்டேன். மித்ராவோட இன்னொரு நம்பர் என்கிட்ட இல்லை நீங்க சொல்லிடறீங்களா” என்றவனிடம் “தேங்க்ஸ் மிஸ்டர்…” என்று இழுத்தான் சைதன்யன்
“செபாஸ்டியன்… நீங்க??”
“சைதன்யன்” என்றதும் எதிர்முனை அமைதியானது. பின் “ஓகே சார் நான் வைக்குறேன்” என்று வைத்துவிட்டான் செபாஸ்டியன்.
‘இவளுக்கு என்ன ஆச்சு எதுக்கு இப்படி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கா!!’ என்று கோபமாய் வந்தது சைதன்யனுக்கு. அவளின் மற்றொரு எண்ணுக்கு அழைத்தான்.“ஹேய் உன் போன் அடிக்குதுடி” என்று அவள் போனை எடுத்து கொடுத்தாள் சுஜி.
“அவர் தான்டி பேசுறார்” என்று அவளிடம் சொல்லிவிட்டு “ஹலோ சொல்லுங்க” என்றாள்.
“எங்க இருக்க??” என்றவனின் குரல் கர்ஜிப்பது போல் தோன்றியது அவளுக்கு.
“ஆபீஸ் போறேன்னு சொல்லிட்டு தானே போனேன்”
“இன்னைக்கு உனக்கு ஆப் தானே, அப்புறம் எதுக்கு கிளம்பி போன?? எங்க இருக்க முதல்ல அதை சொல்லு”
“இப்போ எதுக்கு கத்துறீங்க” என்றாள்.
“என்னடி பிரச்சனை உனக்கு எதுக்கு இப்படி என்னை படுத்துற!! ஒரு மனுஷன் ஊர்ல இருந்தது வந்தது உனக்கு பிடிக்கலையா!! அதான் இப்படி என் உயிரை எடுக்கறியா!!” என்று அடிக்குரலில் உறுமலாய் கேட்டான்.
“நான் என்ன பண்ணேன் எதுக்கு இப்படி பேசறீங்க” என்றவளின் குரல் உடைய ஆரம்பித்தது.
“உன் TL போன் பண்ணான். வேற நாள் எல்லாம் உனக்கு ஆப் கொடுக்க முடியாதாம். வேற ஆளுங்களை அரேன்ஞ் பண்ணிடானாம். உன்னோட ஆபீஸ் நம்பர்க்கு இப்போ தான் கூப்பிட்டு சொன்னான். போதுமா” என்றான்.
மித்ராவுக்கு கை காலெல்லாம் உதறியது. ரொம்ப கோவமா இருக்கான் போலவே. இந்த செபாஸ்டியன் வேற போன் பண்ணி போட்டு கொடுத்திட்டானே என்று இருந்தது அவளுக்கு.
“எங்க இருக்கன்னு சொல்லு, நான் வர்றேன்” என்றான்.
“சுஜி வீட்டுல ஆபீஸ் போக கொஞ்சம் டைம் இருந்துச்சு அதான் இங்க வந்தேன்” என்றவள் முகவரி சொல்லவும் போன் துண்டிக்கப்பட்டது.
அடுத்த பத்து நிமிடத்தில் சுஜி வீட்டு வாயிலில் அவன் பைக் உறுமும் சத்தம் கேட்டது….