Advertisement

 

வானம் – 9

டுத்த மூன்று நாட்கள் கொடுமையும் வெறுப்புமாய் கழிந்தன அனுவுக்கு. காலையில் பரத்தும் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் தான் வருவான். முகம் கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாமல் தனிமையின் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

 

பரத் மாலையில் வந்தாலும் முகத்தை கடுகடுப்புடன் வைத்திருந்த அன்னையையும், உர்ரென்று காணாதது போல் இருக்கும் அக்காவையும் காணப் பிடிக்காமல் அருகில் இருந்த கிளப்புக்கு சென்றுவிடுவான். அனு வீட்டு வேலைகளை செய்தாலும் சமையல் அத்தையின் பொறுப்பில் இருந்ததால் அவர்கள் தன்னை அழைக்காமல் தானாகவே எடுத்து உண்ண அவளுக்குப் பிடிக்கவில்லை.

தனிமையின் வெறுமையில்

உள்ளம் உலைக்கலமாய் உணரும்…

உடன் இருப்போரின் புறக்கணிப்பில்

மனம் அனிச்சமலராய் மாறும்…

 

அனு ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் வரும். அவர்களாய் இவளிடம் பேசுவது இல்லை. பரத் முதலில் கோபமாய் அவர்களுடன் பேசத் தொடங்கி பின்னர் சரியாகிவிட அவர்களும் மெதுவாய் நார்மலாயினர்.

 

அவர்கள் பேசவில்லையே நாம் ஏன் பேசவேண்டும் என்று நினைக்காமல் அனுவும் வம்படியாகப் பேசவும் அந்தக் கசப்பான நிகழ்ச்சியை மறந்து அவர்களும் சாதாரணமாய் பேசத் தொடங்கினர். நந்தினியின் குழந்தையை அதிக நேரமும் அவளே பார்த்துக் கொண்டதால் நந்தினியும் பழையபடி பேசத் தொடங்கினாள்.

 

ஒருநாள் அனுவுக்கு தலை சுற்றி குமட்டிக் கொண்டு வரவும் நாளைக் கணக்கிட்டுப் பார்த்தவள் மகிழ்ந்தாள்.

 

பரத் வந்ததும் அவனிடம் சொல்ல, இருவருமாய் டாக்டரிடம் சென்று பரிசோதனை முடித்து வீட்டின் புது வாரிசை முடிவு செய்தனர்.

 

அதைக் கேட்டு வீட்டில் யாரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவெல்லாம் இல்லை. இது எல்லா வீட்டிலும் நடக்கும் சாதாரண விஷயம் தானே என்பது போல் பொதுவாய் சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு மாதம் ஒருமுறை பரிசோதனைக்கு செல்லும் நாளுக்காய் காத்திருக்கத் தொடங்குவாள் அனு.

கணவனுடன் அதன் பேரில் மட்டும் தானே வெளியே தனியாகக் கிளம்ப முடியும். அப்படி செல்லும்போது அவளுக்குப் பிடித்த உணவையோ, ஐஸ்க்ரீமையோ வாங்கிக் கொடுப்பான் பரத். இருவருமாய் பீச்சுக்கும் சென்று கை கோர்த்து நடக்கவும் செய்வார்கள்.

 

உன்னோடான சில மணி

நேரத் தனிமைக்காய்

நாட்கணக்கில் நீளுகிறது

என்னுடைய காத்திருப்பு…

 

கல்யாணத்திற்கு முன்பு வரை சைவ உணவுகளை மட்டுமே உண்டு பழகிய அனுவுக்கு பரத் வீட்டின் அசைவ உணவுப் பழக்கம் அந்த கர்ப்பகாலத்தில் வயிற்றைப் புரட்டியது. சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே அவள் உணவானது.

 

ஒரு கர்ப்பமான பெண்ணுக்கு என்று எந்த பிரத்யேக கவனிப்பும் அந்த வீட்டில் இல்லை. சரி இதான் இந்தக் குடும்பத்தின் இயல்பென்று அவளும் பழகிக் கொண்டாள்.

 

அவள் சாப்பிடுவதைக் கண்டு பரத் கோபத்தில் கத்தினான்.

 

“எப்பப் பார்த்தாலும் இந்தக் கஞ்சியவே குடிச்சா குழந்தை எப்படி ஆரோக்கியமா இருக்கும்… இதெல்லாம் சொல்ல மாட்டிங்களா அம்மா…” என்று கடிந்து கொண்டான்.

“நான் என்னடா பண்ணறது… அவளுக்கு வேண்டாம்னு சொல்லுறா… வற்புறுத்தி சாப்பிட வச்சு வாந்தி எடுத்திட்டா, அதான் நிர்பந்திக்கல…” என்றார் அன்னை.

 

“குழந்தைக்கு வெயிட்டே இல்லேன்னு டாக்டர் சொல்லுறார்… அனு, இனி இப்படி சாப்பிட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்… ஒழுங்கு மரியாதையா நல்லா சாப்பிடு…” என்றவன் அதற்குப் பிறகு அவள் சாப்பிடுவதை கவனிக்கத் தொடங்க, முதலில் வேண்டா வெறுப்புடன் அசைவம் சாப்பிடத் தொடங்கியவள், பிறகு அதற்கு பழகிக் கொண்டாள்.

 

நாட்கள் சில பிரச்சனைகளுடனும், கடன்காரர் தொல்லைகளுடனும் நகரத் தொடங்க அனுவின் வயிற்றில் குழந்தையும் வளரத் தொடங்கியது. எப்போதும் செய்யும் வேலைகளை எல்லாம் அவள் செய்து கொண்டு தான் இருந்தாள்.

 

நடுவில் ஒருமுறை டாக்டர் பரிசோதித்துவிட்டு, “கொஞ்சநாள் பெட்ரெஸ்ட்ல இருக்கணும்…” என்று கூறிவிட, அதை பரத் அன்னையிடம் சொன்னான்.

 

“நாங்களும் தான் புள்ள பெத்துகிட்டோம்… எங்க காலத்துல இப்படி மாசம் மாசம் டாக்டரைப் பார்க்கறதும் பரிசோதனைக்கு போறதும் எல்லாம் எங்க இருந்துச்சு… நாங்கல்லாம் புள்ள பெத்துக்கலையா… இப்போதான் புதுசு புதுசா ஒவ்வொண்ணும் சொல்லுறாங்க…” என்று அவர் கூற பரத்துக்கு கடுப்பாகியது.

அறையில் இருந்த அனுவிடம், “இங்க பாரு அனு… இந்த அம்மா இப்படி தான் சொல்லுவாங்க… அதுக்காக நீ எப்பவும் போல தண்ணி எல்லாம் எடுக்காதே… கொஞ்ச நாளைக்கு நானே எடுத்துக்கறேன்… சமையல்ல ஏதாச்சும் உதவி பண்ணு… மத்தபடி வெயிட் தூக்குறது, வீடு பெருக்குறது, துடைக்குறதுன்னு செய்து குழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சு… அப்புறம் என்னமோ பண்ணுன்னு நானும் விட்டிருவேன்…” என்று மிரட்டிச் சென்றான் பரத்.

 

“ஹூம்… மருமக மாசமா இருக்காளே, அவளுக்காக ஏதாவது பழம், பால்னு கொடுக்கலாம்னு இருக்கா… தனியா எந்த கவனிப்பும் இல்லை… இதுல நான் பெட் ரெஸ்ட் எடுத்தா மறுபடியும் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்குவாங்க…” என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் கணவன் சொன்னது போல் செய்தாள்.

 

துணியை மடக்கி வைத்துக் கொண்டிருந்தவள், வயிற்றில் அசைவை உணர புன்னகையுடன் கையை அங்கு வைத்தாள். குழந்தை வயிற்றுக்குள் அசைவதை உணர்ந்து சந்தோஷித்தாள்.

 

“பரத்… வயித்துல கை வச்சுப் பாரேன்…” என்று அவனிடமும் சொல்ல அவனும் சந்தோஷத்தில் கட்டிக் கொண்டான்.

 

“எட்டு மாசம் தொடங்கிருச்சு… அப்பாவும் சித்தியும் என்னைப் பார்க்க வரேன்னு சொல்லிட்டே இருக்காங்க… இன்னும் வரலை…” கவலையுடன் கூறினாள்.

“ம்ம்… என்ன இருந்தாலும் உன் சித்தி தானே… இதுவே உன் அம்மாவா இருந்தா மகளுக்கு ஒரு விசேஷம்னா உடனே ஓடி வந்து பார்த்திருப்பாங்க… இவங்க நம்ம கல்யாணம் முடிஞ்சதுல இருந்து வரேன்னு சொல்லி இவ்ளோ மாசமா இன்னும் வர முடியலை… பிரசவமே ஆயிரும் போலருக்கு…” நொடிந்து கொண்டான் பரத்.

 

“ம்ம்… எனக்கு என்னங்க எல்லாம் சரியா நடந்திருக்கு… எப்படியோ நடக்குது அவ்ளோ தானே… இதான் என் விதி… அவங்களை சொல்லி என்ன…”

 

“ம்ம்… நீ இப்படியே சொல்லி சமாதானம் பண்ணிக்க, தலைப் பிரசவத்துக்கு அங்கே அழைச்சிட்டுப் போகணும்… அதான் செய்யலை, வந்து பார்க்கக் கூட முடியாதா…” கடுப்புடன் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

 

அவன் சென்றாலும் அந்த நினைவு அவள் மனதை மிகவும் அலட்டிக் கொண்டிருந்தது.

 

அதே யோசனையுடன் ஹாலில் ஜன்னல் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவள் கீழே மொசைக் நிலத்தில் தவழத் தொடங்கியிருந்த நந்தினியின் மகன் சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து சென்றதைக் கவனிக்கவில்லை.  

 

சற்றுநேரம் கழித்து மகனை எடுப்பதற்காய் அங்கு வந்த நந்தினி மூத்திரத்தில் கால் வைக்க வழுக்கி விழப் போனாள். அங்கே அனு இருப்பதைக் கண்டதும் அவளுக்கு கோபம் வந்தது.

“ஏண்டி அனு… இங்கே தானே நிக்கறே… குழந்தை ஒண்ணுக்குப் போயிருக்கான்… துடைக்க மாட்டியா…” என்றாள் கோபத்துடன்.

 

அவள் வழுக்கி பாலன்ஸ் செய்து நின்றதும் தான் திரும்பிய அனு, “அச்சோ ஒண்ணுக்குப் போயிட்டானா, நான் பார்க்கலை அக்கா… இப்பத் துடைச்சிடறேன்…” என்றாள் கவனிக்காத குற்றவுணர்வுடன்.

 

“நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம்… குழந்தை ஒண்ணுக்குப் போனதைத் துடைச்சா என்ன, கையில ஒட்டிக்குமா… நாளைக்கு உனக்கும் குழந்தை பிறக்கும்ல… அப்பவும் இப்படி தான் கண்டுக்காம இருப்பியா…”

 

“இல்லக்கா… நான் ஏதோ யோசனையா இருந்தேன்… கவனிக்கல…” அவள் வருத்தத்துடன் மறுத்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே அமிர்தவள்ளியும், வீட்டுக்கு வெளியே தம்பியுடன் நின்று பேசிக் கொண்டிருந்த பரத்தும் சத்தம் கேட்டு உள்ளே வந்துவிட்டனர்.

 

“என்னாச்சுடி… எதுக்குக் கத்தறே…” அன்னை மகளைக் கேட்கவும், “உன் மருமக என் பையன் ஒண்ணுக்குப் போனாத் துடைக்கக் கூட மாட்டாளாம்… அவ கைல ஒட்டிக்கும் பாரு… நாளைக்கு இவளுக்குப் புள்ள பொறந்தா என்ன பண்ணுவான்னு பார்க்கலாம்…” எனவும்,

 

நந்தினி சொன்னதைக் கேட்டும், முன்னமே இருந்த மனக் கலக்கமும் சேர்ந்து அனுவுக்கு அழுகை வந்தது.

அழுகை ஆத்திரமாய் மாற வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாள்.

 

“ச்சே… எனக்குக் குழந்தை ஒரு கேடா… நான் ஏதோ யோசனைல கவனிக்கலன்னு சொன்னாலும் வயித்துல இருக்குற குழந்தையை சொல்லறீங்க… நான் எப்பவாச்சும் உங்க பையனை கவனிக்காம இருந்திருக்கேனா… எனக்குக் குழந்தையே வேண்டாம்…” என்று வயிற்றில் அடித்துக் கொண்டு கத்தியவளைக் கண்டு நந்தினியே மிரண்டு போனாள்.

 

“ஒரு மூத்திரத்துக்கு இத்தனை பிரச்சனையா… அதைத் துடைச்சா முடிஞ்சது…” என்றார் அமிர்தவள்ளி.

 

“அதுக்கு எதுக்குடி வயித்துல அடிக்கறே…” கோபமாய் அனுவின் கையை அமர்த்திப் பிடித்த பரத், “ஏய் நந்தினி, உன் பையன் மூத்திரம் போனா அதைத் துடைக்க வேண்டியது தானே… இவளே துடைக்கணும்னு எதுக்கு குதிக்கறே…” என்றான் கோபத்துடன்.

 

“அதானே நீ உன் பொண்டாட்டிக்கு தானே சப்போர்ட் பண்ணுவே… அவ வேணும்னே தான் துடைக்காம தெரியாத போல நின்னுருக்கா…”

 

“நான்தான் இல்லேன்னு சொல்லறேன்ல…” மறுபடியும் கத்திய அனுவைக் கண்டு, “போதும்… ரெண்டு பேரும் நிறுத்திக்கங்க…” பரத் சொல்லவும் நந்தினி முனங்கிக் கொண்டே குழந்தையுடன் செல்ல, “அனு போ…” என்றான்.

முதன் முறையாய் அப்போது தான் அனுவின் எதிர்ப்புக் குரல் அந்த வீட்டில் ஒலித்தது. அடுத்து வந்த நாட்கள் பிரச்சனை இல்லாமல் கழிய அனு துவைப்பது, வீடு பெருக்கித் துடைப்பது, வாசல் கூட்டுவது என்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டு தான் இருந்தாள்.

 

அவளது வயிற்றைப் பார்ப்பவர்கள், “ரொம்ப சின்ன வயிறா இருக்கே, ஆண் குழந்தை போலருக்கு…” என்று கூற ஆசையாய் குழந்தைக்கு தினேஷ் என்று பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தாள்.

 

நந்தினியின் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல், காது வலி என்று வரவும் அவளுக்கும் அமிர்தவல்லிக்கும் டாக்டரைப் பார்ப்பது குழந்தையை கவனிப்பது என்று நேரம் சரியாய் இருந்தது.

 

“என்னங்க… அஸ்வின்க்கு இப்ப அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகுது… குழந்தை பிறந்து ஆறாவது மாசம் பார்த்திட்டுப் போன மாமா அப்புறம் வரவே இல்லை… இப்ப குழந்தைக்கு அடிக்கடி முடியலைன்னு சொல்லியும் வந்து பார்க்கவே இல்லை…” கவலையுடன் பரத்திடம் கேட்டாள் அனு.

 

“ம்ம்… லீவ் கிடைக்கலை அஸ்வினைப் பார்க்க சீக்கிரம் வர்றேன்னு போன் பண்ணி இருக்கார்ல, அவருக்கும் பொண்டாட்டி, பிள்ளையைப் பார்க்கனும்னு இருக்காதா… வருவார்… வரும்போது நந்தினியையும் அழைச்சிட்டுப் போவார்னு நினைக்கறேன்…” என்றான் அவன்.

பரத்தின் தம்பியும் அப்போது மெல்ல குடிப்பழக்கத்தை தொடங்கி இருந்தான்… குடியால் எத்தனை பேருடைய குடும்பம் நாசமாய்ப் போகிறது என்று தெரிந்தாலும் அவர்களும் அந்தக் குட்டையில் தான் சென்று விழுந்தனர்.

 

எந்தவொரு நல்லநாளும், விசேஷமும் அனுவுக்கு நரகமாய்த்தான் தோன்றும். அவர்கள் உற்சாகத்திற்காக உள்ளுக்குள் உற்சாகபானத்தை ஏற்றிக் கொண்டவர்கள் மற்றவர்களின் மன வேதனையை உணர்ந்து கொள்ளவில்லை. அனுவுக்கு அந்த ஒரு விஷயம் மட்டும் பரத்தின் மீது பயமாகவும் வேதனையாகவும் இருந்தது.

 

அவனது குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. சனி ஞாயிறுகளை அடியோடு வெறுக்கும்படி ஆயிற்று. பரத்திற்கு முன்போல் இல்லாமல் அடிக்கடி எல்லாவற்றுக்கும் கோபம் வந்தது.

 

அவனுக்கு நல்லதை எடுத்து சொன்னால் கூட, “என்ன, எனக்கு கிளாஸ் எடுக்கறியா… எனக்குத் தெரியும், பேசாமப் போ…” என்று கத்தினான். அவனுக்கு ஆண் என்ற ஆதிக்கம் எப்போதும் அதிகம் இருந்தது.

 

நல்ல நாட்களில் அவர்களின் உற்சாக மிகுதியில் கூச்சலும் கும்மாளமுமாய் பல இரவுகள் வீட்டில் பெண்களுக்குத் தூங்கா இரவுகள் ஆயின. அடுத்தநாள் நல்ல நிலைமையில் இருக்கும்போது கணவனிடம் நல்ல விதமாய்ப் பேசி புரிய வைக்க முயலுவாள் அனு.

 

“அனு… சும்மா இதைப் பத்தியே பேசிட்டு இருக்காதே… விடு… எனக்குத் தெரியும் என் லிமிட்…” என்றவனுக்கு உண்மையில் அவன் லிமிட் தெரியாமல் தான் இருந்தது. மற்ற நேரத்தில் அன்பைக் காட்டுபவன், இதைப் பேசினால் மட்டும் சண்டைக்கு வருவதால் அனுவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் கலங்கினாள்.

 

நாட்கள் இப்படிக் கழிந்திருக்க அவளுக்கு ஒன்பதாவது மாதமும் தொடங்கி சில நாட்கள் ஆகி இருந்தது.

 

நந்தினியின் மகன் அஸ்வின் எப்போதும் காதைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருப்பான்… இரவு, மழை என்று பாராமல் ஆட்டோவில் அக்காவையும், மகனையும் அழைத்துக் கொண்டு பரத் தான் டாக்டரிடம் அழைத்துச் செல்வான். குழந்தைக்கு முடியாமல் எப்போதும் பிடிவாதம் பிடித்து அழுது கொண்டே இருப்பதால் நந்தினிக்கு குழந்தையை கவனிக்கவே சரியாய் இருந்தது.

 

அன்று தந்தையும் சித்தியும் அவளைப் பார்க்க வருவதாகக் கூறி இருந்ததால் காலையில் படுக்கை விரிப்பை மாற்றி வீட்டை அழகாய் ஒதுக்கினாள். பெட்ஷீட்டை சோப்பு பவுடரில் நனைத்து வைத்தவள் கல்லில் துவைக்கும் போது வயிற்றுக்குள் அவஸ்தையாய் உணர்ந்தாள். அவள் நெளிந்து கொண்டும், நிறுத்தி நிறுத்து துணியைக் கல்லில் வீசுவதையும் கண்ட பரத்தின் பாட்டி அவளது வயிற்றைப் பார்க்க நன்றாக இறங்கி இருந்தது.

“இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல இந்தப் புள்ளைக்குப் பிரசவம் ஆயிரும் போலருக்கே…” என்று நினைத்துக் கொண்டே சென்று விட்டார்.

 

மதியம் தந்தையும், சித்தியும் நிறையப் பலகாரங்களுடன் அவளைக் காண வந்து விட்டதால் அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது. வீடே பேச்சும் சிரிப்புமாய் அமர்க்களப்பட்டது. அனுவின் சித்தி அமிர்தவல்லிக்கு நாத்தனார் என்பதால் அந்த உறவு முறையும் இருக்க கவனிப்பும் நன்றாகவே இருந்தது.

 

அன்று இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் தாமதமாகவே உறங்க சென்றனர். அதிகாலை மூன்று மணிக்கு வயிற்றுக்குள் சுள்ளென்று ஒரு வலி பரவவும் உறங்க முடியாமல் அனு எழுந்து அமர்ந்தாள்.

 

“என்னாச்சு அனு… வலிக்குதா…” அவளது அசைவில் உணர்ந்து கொண்ட பரத் பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தான்.

 

“ஆமாங்க, சுள்ளுன்னு இடுப்புல ஒரு வலி தோணுச்சு…” என்றவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு நெளிய, “இரு, அம்மாவைக் கூப்பிடறேன்…” என்றவன் வேகமாய் சென்று அமிர்தவல்லியை எழுப்பி விஷயத்தை சொல்ல, அனைவருமே எழுந்து விட்டனர்.

 

பரத்தின் பாட்டி அவளது வயிற்றில் கை வைத்துப் பார்த்து நல்ல சூடாக உணர்ந்தவர், “வயிறு இறங்கிருச்சு… சீக்கிரம் கொஞ்சம் சீரகம் போட்டு தண்ணியைக் கொதிக்க வச்சு குடிக்கக் குடு… டேய் பரத்… நீ வண்டிக்கு சொல்லிடுடா… ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிடுங்க…” என்றார்.

 

ஆனால் அப்போது அனுவுக்கு வலி எதுவும் தோன்றவில்லை. இருந்தாலும் ஏழெட்டு குழந்தைகளைப் பெற்ற பாட்டி சொன்னதால் அனைவரும் ஆசுபத்திரிக்கு செல்லத் தயாராகினர். மகளைக் காண வந்த போதே அவளுக்கு பிரசவ வலியும் வந்துவிட அனுவின் தந்தைக்கு சந்தோஷமும், பரபரப்புமாய் இருந்தது.

 

அனுவுக்குக் கொண்டு போக வேண்டிய பொருட்களை ஒரு கூடையில் எடுத்து வைத்து உடைகளையும் எடுத்து வைக்க டாக்ஸி வந்துவிட்டது. டாக்டர் அவளைப் பரிசோதித்து லேபர் வார்டுக்கு அனுப்ப, அங்கே பிரசவ வலியில் துடித்துக் கொண்டு கத்திக் கதறிக் கொண்டிருந்த பெண்களைக் காண அவளுக்கு பயமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

 

வெளியே நின்றிருந்த பரத்துக்கும் அனுவின் தந்தைக்கும் தான் பெண்களைவிடப் பதட்டமாய் இருந்தது.

 

“இவங்கல்லாம் இப்படி கதர்றாங்க… நமக்கு வலிக்கவே இல்லையே… அப்புறம் எதுக்கு டாக்டர் நம்மை உள்ளே அனுப்பினாங்க…” யோசித்துக் கொண்டிருந்தவளை, நர்ஸ் உள்ளேயே நடக்கும்படி கூற மற்றவர்களைப் பார்க்க பயமாய் இருந்ததால் அவள் நடந்து கொண்டிருந்தாள். வெகு நேரத்துக்குப் பிறகு அவளுக்கு மெல்ல வலிக்கத் தொடங்க பரிசோதித்த நர்ஸ், “இவங்களை உள்ளே அழைச்சிட்டுப் போ…” என்று மற்ற நர்ஸிடம் கூற, உள்ளே இருந்த மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

பிரசவத்துக்கான கட்டிலைக் காட்ட, படுத்துக் கொண்டாள். கருப்பை தசைச் சுருக்கம் படிப்படியாக அதிகமாக, வலியும் கூடுவதை உணர்ந்தவள் கதறத் தொடங்கினாலும், மற்றவர்களைப் போல மிகப் பெரிய வலி வந்தால் தான் பிரசவம் ஆகும் என்று காத்திருக்க உள்ளே வந்தார் டாக்டர். அவளைப் சரியான பொசிஷனில் படுக்க வைத்து பரிசோதித்தார்.

 

“குழந்தையோட தலை தெரியுது… நல்லா முக்கு மா…” என்று டாக்டர் கூறவும், வாயால் காற்றை நன்றாக உள்ளிழுத்து வேகமாக முக்கினாள். வலி தாங்க முடியாமல் குழந்தையை தானே வெளியே இழுத்துப் போட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது.

 

குழந்தை இன்னும் சற்று வெளியே வரவும், “இன்னும் நல்லா முக்கு மா…” என்று நர்ஸ் கூற, முக்கினாள். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அவளது குழந்தை இந்த பூமியின் காற்றை சுவாசிக்கத் தொடங்க பாதுகாப்பான கருவறைக்குள் இருந்து திறந்த உலகத்திற்குள் வந்த அந்த குருந்து மெல்லிய குரலில் வீரிட்டுக் கதறியது.

 

“பொண்ணு பிறந்திருக்கா மா…” டாக்டர் கூறியது சந்தோஷமாய் காதுக்குள் நுழைய குறையத் தொடங்கிய வலியோடு மகளை மெல்ல ஏறிட்டுப் பார்த்தவள் ரோஜாப் பூவாய் நர்ஸின் கையில் கண்மூடிக் கிடந்த தனது உதிரத்தின் உயிரை கண்ணில் நிறைத்துக் கொண்டாள். மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து குழந்தையை வெளியே கொண்டு போய்க் காட்டவும் தான் பரத்தின் முகம் தெளிந்தது.

 

“பெண் குழந்தை பிறந்திருக்கா…” எனவும் எல்லாரும் குழந்தையைக் கவனிக்க, “அனு எப்படி இருக்கா…” என்றான் பரத். “நல்லாருக்காங்க… கொஞ்ச நேரத்துல வார்டுக்கு கொண்டு வந்திருவாங்க… பார்க்கலாம்…” என்ற நர்ஸ் குழந்தையை மீண்டும் உள்ளே கொண்டு சென்று விட்டார்.

 

சிறிது நேரத்தில் வார்டுக்கு அனுவைக் கொண்டுவர, சிறு கூச்சத்துடன் சிரித்த முகமாய் வந்தவளைக் கண்டு எல்லோரும் அதிசயித்தனர். “பிரசவம் முடிஞ்சு சிரிச்சுகிட்டே வார்டுக்குத் திரும்பி வர்றது உலகத்துலேயே நீ ஒருத்தியாதான் இருப்பே…” என்று அமிர்தவல்லி திகைப்புடன் சொல்லவும் செய்தார்.

 

எழுத்துகளை மட்டுமே

பிரசவித்து கவிதையாக்கிய நான்

இதோ முதன் முறையாய்

ஒரு கவிதைப் பூங்காவையே

பிரசவித்திருக்கிறேன்…

வானம் வரும்….

Advertisement