Advertisement

வானம் – 4

 

“உனக்கு வாடா போடான்னு கூப்பிட்டா பிடிக்காதாமே…..”

 

கிண்டலாய் கேட்டவளை அதிர்ச்சியுடன் நோக்கினான். “கூப்பிட்டா என்னடா பண்ணுவே…..” கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவனது இதழால் சிறை பிடிக்கப்பட்டிருந்தது. முதலில் அதிர்ந்து திணறியவள், அவனை உதற முடியாமல், மனம் கவர்ந்தவனின் முதல் முத்தத்தில் அடங்கி கிறங்கிப் போனாள்.

 

வெளியே நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செயலில் அதிர்ந்து பிறகு கூச்சத்துடன் கையை உதறிக் கொண்டே, “அய்யய்யோ….” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

 

கோபத்துடன் முத்தமிட்டு, பிறகு அவளை விலகமுடியாமல் உணர்ச்சியில் தத்தளித்தவன் மெல்ல விடுவித்தான்.

 

அவளது உடலில் ஒரு நடுக்கம் தெரிய கூச்சத்துடன் தலை குனிந்து நின்றவளைக் காண அவனுக்கே வருத்தமாய் இருந்தது.

 

“ச… சாரி அனு…..” என்று தடுமாறியவனை ஏறிட்டவள், நாணத்துடன் சிரித்தாள். அவளது சிவந்த உதடுகள் அவனது அழுத்தத்தில் மேலும் சிவந்திருந்தன.

 

“எதுக்கு சாரி…..”

“இல்ல…. என்ன இருந்தாலும் நான் உன்கிட்ட அப்படி…..” என்று தயங்கியவனை நோக்கி குறும்பாய் சிரித்தவள்,

 

“ஹப்பா…. என்னா கிஸ்டா……” ரசனையுடன் சொன்னவள்,

 

“நான் இன்னும் உன்னை நிறைய டா சொல்ல வேண்டி வரும்னு நினைக்கறேன்…. ரெடியா இருடா, மாமன் மகனே…..” சொல்லிக் கொண்டே ஓடியவளை சிரிப்புடன் பார்த்து நின்றான் பரத்சந்தர்.

 

சிறகை விரித்துப் பறந்த அழகான நாட்கள். அங்கிருந்த ஒவ்வொரு நொடிகளையும் அனு மிகவும் ரசித்தாள்.

 

பரத்தின் அம்மாவும், அக்காவும் தம்பியும் அனுவிடம் அன்பாய்ப் பழகினார்கள். பரத்தைக் கல்யாணம் செய்தால் அவனது அன்போடு நல்ல அன்னையாய் அத்தையும், அக்காவாய் நாத்தனாரும், தம்பியாய் கொழுந்தனாரும் இலவச இணைப்பாய் உடன் வருவார்கள் என்று மனதுக்குள் கனவு கண்டு கொண்டிருந்தாள்.

 

அத்தையின் பேச்சிலிருந்து அங்கே கல்யாணம் செய்து வரும் பெண்களுக்கு நகை அதிகம் கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டாள். அங்கிருந்து செல்ல மனமில்லாமல் கிளம்பி குடும்பத்தினருடன் அவள் வீட்டுக்கு சென்றாள்.

 

மீண்டும் இயந்திரத்தனமான ஓட்டம். கல்யாணத்திற்காய் அவளது சம்பாத்தியத்தை சேமிக்கத் தொடங்கினாள். பரத் அரசாங்க அலுவலகத்தில் வேலைக்கு செல்லத் தொடங்கியதும் இவளது அலுவலக எண்ணுக்கு தொலைபேசியில் அடிக்கடி அழைத்தான். அனுவும் பரத்தின் அலுவலக எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினாள்.

 

அவர்களால் தொலைபேசி இலாக்காவுக்கு தொல்லையாக இருந்தாலும் நல்ல வருமானமும் வரத் தொடங்க காதலும் வளர்ந்தது.

 

அடுத்த சில மாதங்களிலேயே பரத்தின் அக்கா நந்தினிக்கு வரன் அமைந்தது. மும்பையில் நல்ல வேலையில் இருந்தவரை அவளுக்குப் பிடித்துப் போக சீக்கிரமே கல்யாண வேலைக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். மகளுக்காய் அவள் தந்தை எந்த சேமிப்பையும் வைத்திருக்கவில்லை…. எனவே கல்யாணப் பொறுப்பு முழுதும் பரத்தின் தலையில்.

 

தன் பிடித்தங்களை எல்லாம்

பின்னுக்குத் தள்ளிவிட்டு – தன்

உடன்பிறப்புகளின் தேவைகளை

நிறைவேற்றத் துடிக்கும் தமையன்

தந்தைக்கு நிகரானவனே…..

 

அவனிடம் சேமிப்பு இல்லாவிட்டாலும் அவனது உத்தியோகத்தின் பேரில் அவனுக்கு கடன் கொடுக்க தயாராய் இருந்தனர். வீட்டுக்கு வாங்கிய கடன் தீர்க்கப் படாமல் இருக்கும்போதே மேலும் சகோதரியின் கல்யாணத்துக்கு கடன் வாங்கத் தொடங்கினான்.

 

சிறுவயதில் பெரிய பொறுப்புகளை தோளில் சுமந்திருந்தாலும் நல்லவிதமாய் எல்லாவற்றையும் முடித்துவைத்தான். அக்காவின் திருமணம் நல்லவிதமாய் குறைவில்லாமல் நடந்தது. உணவுப் பொருட்கள் எல்லாம் மாமன்மார்களின் கவனிப்பில் தாராளமாய் பாக்கியானது.

 

கல்யாணத்துக்கு இரண்டுநாள் விடுமுறையில் வந்து கண்கலங்க விடை பெற்றுச் சென்றாள் அனுபமா. கல்யாணத்தின் வேலையில் அவனாலும் அவளை சரியாய் கவனிக்க முடியவில்லை. அவளது ஏக்கமான பார்வை அவனுக்குப் புரிந்திருந்தாலும் கண்டுகொள்ள நேரமில்லாமல் மௌனம் காத்தான்.

 

கல்யாணம் முடிந்து அக்கா மும்பைக்கு சென்றுவிட, வீட்டில் இரு மகன்களும் அன்னையும் மட்டுமே. சுகமான நாட்கள் அழகாய் செல்லத் தொடங்கின. உறவினர்கள் எல்லாரும் அவ்வப்போது பரத்தின் வீட்டில் முகாமிடத் தொடங்கினர்.

 

அம்மாவின் துணைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கட்டும் என்று நினைத்தான் பரத். அவர்கள் வந்துபோவதோடு மட்டுமில்லாமல் அங்கேயே தங்கத் தொடங்கினர்.

 

பரத்தின் அன்னை, சகோதரர்களின் குடும்பத்தையோ, தங்கை குடும்பம் வந்து தங்குவதையோ எப்படி வேண்டாம் என்று நினைப்பார். ஆனால் இவர்கள் யாரும் தன் கணவன் இறந்தபோது கை கொடுத்து தூக்கி விடவில்லை என்பதை நினைக்க மறந்து போனார். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அவர்களும் டேரா போடத் தொடங்கினர்.

 

அன்னையும் மகன்களுமாய் அழகாய் கழிந்தது நாட்கள். அடுத்து மகனுக்கும் சீக்கிரமே கல்யாணப் பேச்சைத் தொடங்கி விட வேண்டியது தானே என்று ஒவ்வொருத்தரும் கேட்கத் தொடங்க பரத்தின் சித்தி மகளின் கல்யாணம் முடியட்டும் என்று அவன் அன்னை சொல்லிவிட்டார்.

 

சித்தி மகளுக்கும் அண்ணன் என்ற முறையில் கல்யாணத்துக்கான செலவில் ஒரு பங்கை பரத்தின் தலையில் கட்டி வைத்தனர். அவனும் எப்படியோ கடனை வாங்கி சமாளித்தான்.

 

அனுவின் குடும்பமும் கல்யாணத்துக்கு வந்திருக்க, அவளைக் கண்டதும் பரத்தின் சுமைகள் எல்லாம் சுகமாகிப் போனது. நாணம் கலந்த அவளது காதல் பார்வைகள் அவன் இளமனதை சூடாக்கின.

 

உன் பிரியங்கள் இல்லாத

பொழுதுகள் எல்லாம் – நான்

கடக்க முடியாத பெருங்கணங்களாய்

என் காதலின் அதிகாரம் நீ…..

 

உற்றமும் சுற்றமும், வாழ்த்த கொண்டாட்டமும், சந்தோஷமுமாய் கல்யாணம் நல்லபடியாய் முடிந்தது. பரத்தின் அக்கா மும்பையில் இருந்து தங்கை கல்யாணத்துக்கு வந்திருந்தார். அடுத்து பரத், அனுவின் கல்யாணம் தானே என்று எல்லோரும் வெளிப்படையாகப் பேசவும் அனுவின் இளமனது சிறகடித்துப் பறந்தது.

 

கல்யாணம் முடிந்து மாலையில் வராண்டாவில் அமர்ந்து  குடும்பமாய் கதை பேசிக் கொண்டிருக்க, கல்யாணத்திற்குப் பிறகு பரத்தைத் கண்ணில் காணவே இல்லையே என்று நினைத்த அனு அவனைத் தேடினாள்.

 

வீட்டின் பின்பக்கம் இளைஞர்களுக்கு கல்யாணப் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. பரத் அங்கே இருப்பானோ என்று நினைத்தவள் பின்பக்க ஜன்னலை மெல்லத் திறந்து கண்களால் துளாவ, பரத்தின் கோலத்தைக் கண்டவள் அதிர்ந்தாள்.

 

தலைமுடி கலைந்து கண்கள் ரத்த சிவப்பைக் காட்ட, உடையெல்லாம் செம்மண் அப்பிய அடையாளத்துடன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தவன் கையில் மதுக்குப்பி இருந்தது. அவன் குடித்திருக்கிறான் என்பதை அந்த செய்கைகள் உணர்த்த அதிர்ந்து போனாள்.

 

அவளுக்கு மதுவின் வாசமே பிடிக்காது. மனதில் சட்டென்று அச்சமும் கவலையும் நிறைந்து கொண்டன. அனுவின் தந்தைக்கு குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. அவரும் மது அருந்தும் சுபாவம் இல்லாதவர்.

 

“இது என்ன புதுப்பழக்கம்…. பரத் எப்போது இதைப் பழகிக் கொண்டான்…” என யோசித்தாள். பரத்தின் அன்னையின் குடும்பத்தில் குடிக்காத ஆண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

“இது அத்தைக்குத் தெரியுமா….. மாமாவும் குடிக்கு அடிமையாகித்தானே குடும்பத்தை ஒழுங்காய் பார்த்துக் கொள்ளவில்லை என்று சொன்னார்கள்…. எல்லாம் தெரிந்தும் பரத் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்…….” குழப்பத்துடன் யோசித்தவளுக்கு கவலையாய் இருந்தது.

 

அந்தவிஷயம் மனதை அழட்டிக்கொண்டே இருக்க யாரோடும் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.  அனுவின் தந்தைக்கு மகளைத் தன் அக்காவின் மகனுக்குக் கல்யாணம் முடித்துக் கொடுக்க சிறு ஆசை இருந்தது. அவனும் மின்சாரத் துறையில் அரசாங்க உத்தியோகத்திலேயே வேலை செய்து கொண்டிருந்தான்.

 

அனுவுக்கு பரத்தின் மீது விருப்பம் இருப்பதையும் அக்கா மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதையும் அறிந்தவர், அந்த ஆசையை மனதிலிருந்து அழித்துவிட்டார்.

 

இப்போது பரத் குடிப்பது தெரிந்தால் என்னாகுமோ….. என்ற கவலை அவளை வேதனைப் படுத்தியது. “என் பரத் எத்தனை பொறுப்பானவன்….. எல்லாவற்றிலும் கவனமாய் பார்த்து செய்பவனுக்கு குடிப்பழக்கம் குடும்பத்திற்கே ஆகாதென்று புரியாதா…… கடவுளே…. இவனை இந்த நிலையில் அப்பா பார்த்துவிடக் கூடாதே…..” என்று மனதில் வேண்டுதலோடு அமர்ந்திருந்தாள்.

 

இரவு உறங்குவதற்கு அனுவின் குடும்பம் பரத்தின் பாட்டி வீட்டுக்குக் கிளம்பவும் தான் அவளுக்கு சற்று மூச்சு வந்தது. அன்றிரவு பரத் அங்கே வராமல் கல்யாண வீட்டிலேயே இருந்தான். அடுத்தநாள் இவர்கள் கிளம்புவதற்கு சற்று முன்தான் வந்தான்.

 

அனுவின் பாராமுகமும் வருத்தமும் ஊருக்குப் போவதால் வந்த வருத்தமாய் நினைத்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் அவளை நோக்கிக் கண்ணடித்தவன் அவள் பின்னில் வந்து நின்று, “அனுக்குட்டி…. சீக்கிரமே உங்க வீட்டுக்கு அம்மாவைக் கூட்டிட்டு வரேன்….. பீல் பண்ணாம இரு…..” என்று கிசுகிசுத்தான்.

 

அவனது குரலும், அந்த அழைப்பும் அவளது மனதுக்கு ஆறுதலாய் இருக்க, அவனோடு பேசிவிட நினைத்தவள், “பின்பக்கம் வாங்க…. பேசணும்….” என்றாள்.

மெதுவாய் அங்கே சென்றவளை யாரும் காணாமல் அவனும் தொடர்ந்தான்.

 

“என்ன அனு…. என்னை டான்னு சொல்லணும் போலருக்கா….. நான் ரெடி….” என்றவன் குறும்பாய் கண்ணை சிமிட்டி உதட்டை தடவிக் கொள்ள அவனை  யோசனையாய் பார்த்தாள். 

 

“பரத்….. நேத்து நீங்க டிரிங்க்ஸ் பண்ணிங்களா….. எப்ப இருந்து இந்தப் பழக்கம்….” கேட்டவளை சற்று அதிர்ச்சியோடு நோக்கியவன் அமைதியாய் இருந்தான்.

“சொல்லுங்க பரத்…….”

 

“அனு….. அது சும்மா பிரண்ட்ஸ்க்கு கம்பெனி கொடுக்க தான்…. நீ ஏதும் நினைச்சுக்காதே…….”

 

“ஓ.. கம்பெனி கொடுக்க சேர்ந்து குடிக்கணுமா…. பக்கத்துல சும்மா உக்கார்ந்தா பிரண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்களா…..” கேட்டவளுக்கு அவன் நண்பர்கள் மீது கோபமாய் வந்தது.

 

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை… இதெல்லாம் எல்லாரும் பண்ணறது தானே…. என்னமோ உலகத்தில் யாரும் பண்ணாத ஒண்ணைப் பண்ணின போல கேள்வி கேட்டுட்டு இருக்கே….” எரிச்சலோடு கூறியவன் அவளுக்குப் புதிதாய் தெரிந்தான்.

 

“அப்படின்னா இது தப்பில்லைன்னு சொல்லறீங்களா…. மாமா இதைப் பண்ணிதானே எல்லாரும் வருத்தப் பட்டுட்டு இருந்திங்க… எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படிப் பண்ணலாமா பரத்……”

 

அவளது கேள்விக்கு ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன், “இங்க பாரு அனு….. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்…. அதுக்காக என் சுதந்திரத்தில் நீ தலையிடாதே…. எனக்கு எங்கே எப்படி நடந்துக்கணும்னு தெரியும்…. நீ கிளாஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை…” அவன் சொல்லவும் அதிர்ந்து நோக்கினாள்.

 

“பரத்….. நான் உங்களுக்கு கிளாசா எடுக்கறேன்…..”

 

“இங்க பாரு…. என் லிமிட் என்னன்னு எனக்குத் தெரியும்… இதெல்லாம் எல்லாரும் பண்ணுறது தானே… நீ விடு….”

 

அவன் சமாதானம் சொல்ல முடியாமல் நழுவினான். முதன் முதலாய் அனுவின் மனதில் குழப்பம் சூழ்ந்தது. அதற்குமேல் பேசிப் பிரயோசனம் இல்லையென்று நினைத்தவள், அமைதியாய் அங்கிருந்து சென்றாள்.

 

அந்த விஷயம் சிலநாட்கள் அவள் மனதை உறுத்திக் கொண்டிருந்தாலும் பரத்தின் தொலைபேசி அழைப்பு வந்ததும் அந்த நெருடல் நீங்கி ஆசையோடு எடுத்தாள். அவனது குரல்தான் அவளது தவிப்பைப் போக்கியது….

 

அவனிடம் கொண்டிருந்த வருத்தமும் அவனது குரலைக் கேட்ட மாத்திரத்திலே விலகியது.

 

 

உயிரைப் பறித்த

உன் வார்த்தைகளே மீண்டும்

உயிர் கொடுக்கின்றன……

உயிரிழந்த உணர்விற்கு….

 

அப்படி அவனுக்கு அந்தப் பழக்கம் இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு அவனிடம் சொல்லிப் புரிய வைத்துக் கொள்ளலாம்…. தன் காதலுக்கு அந்த சக்தி நிச்சயம் இருக்கும்….. என்று நம்பினாள்.

 

நாட்கள் அழகாய் செல்ல இருவருக்குள்ளும் தபால் துறையும், தொலைபேசித் துறையும் காதலை வளர்த்திக் கொண்டிருந்தன. அப்போதுதான் அவளது அலுவலக முகவரிக்கு பேரிடியை சுமந்து கொண்டு அந்த லெட்டர் வந்து சேர்ந்தது.

 

பரத்தை வேறு ஒரு பெண் விரும்புவதாகவும், அவன்மீது உயிரையே வைத்திருப்பதாகவும், கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அனு அவளுக்காய் பரத்தை விட்டுக் கொடுத்து ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்றும் அதில் எழுதி இருந்தது.

 

அதைப் படித்து முடித்ததும் அவள் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. பெயர் ஒன்றும் இல்லாத மொட்டைக் கடிதாசியை நம்பலாமா வேண்டாமா எனத் தவித்தாள். பரத்திடமே கேட்கலாம் என்றால் அவன் ஒரு முன்கோபக்காரன்….. எதோ ஒரு மொட்டைக் கடிதாசிக்கு என்னை சந்தேகிக்கிறாயா எனக் கேட்கவும் செய்வான். யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தவள், அவளைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒரு தோழியிடம் இதைப் பற்றிக் கூறி கடிதத்தையும் காட்டினாள். 

 

இருவரும் பலவிதமாய் யோசித்தனர். “இதை யார் எழுதி இருப்பார்கள்… ஒருவேளை பரத்தே இந்த மாதிரி கடிதமெழுதி என்னை சோதித்துப் பார்க்கிறானோ….” என்று கூட நினைத்தாள். இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

இந்தக் கடிதத்தில் உள்ள அதே போல திருப்பி பரத்துக்கு ஒரு கடிதம் எழுத முடிவு செய்தனர். அனுவை யாரோ உயிராய் விரும்புவதாகவும், பரத்திடம் அவளை விட்டுக் கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டிருந்தனர். எழுதி முடித்தும் அந்தக் கடிதத்தை பரத்துக்கு அனுப்பலாம.. வேண்டாமா… என குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை இதை பரத் செய்திருந்தால் இதன் மூலம் கண்டு கொள்ளலாம்…. இல்லாவிட்டால் வேறு யாரென்று விசாரிக்கலாம்… என சிறுபிள்ளைத்தனமாய் யோசித்தனர்.

 

ஒருவழியாய் முடிவு செய்து பரத்தின் அலுவலக முகவரிக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்தனர். அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அனுவுக்கு திகிலோடு கழிய, ஆறாவது நாள் பரத்திடம் இருந்து பதில் கடிதம் வந்தது.

 

நடுங்கும் விரலோடு அதைப் பிரித்தவள் உள்ளே இருந்த எழுத்துக்களைப் படித்ததும் மூளை உறைந்து போக, கண்ணில் கண்ணீர் நிறைந்து எழுத்துக்களை நனைத்தது.

உலர்பனியாய் உலர்ந்திருந்த நான்

உருகுபனியாய் உருகுகிறேன்….

உறைபனியாய் என் உள்ளில்

உறைந்திடுமோ உன் உருவம்…

 

Advertisement