வானம் – 3
தடதடவென்று ரயில் ஓடிக்கொண்டிருக்க, மரங்களும் செடிகளும் மலைகளும் கடந்து காட்சிகள் நீண்டு கொண்டிருந்தன. அனுவின் மனம் முழுதும் பரத்தை சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தது.
அடுத்தநாள் அவர்கள் புதிய வீட்டு கிரகப் பிரவேசமாயிற்றே. அனுவின் குடும்பம் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
ரயிலைக் காட்டிலும் வேகமாய் அவள் மனது பரத்தைக் காணப் பறந்து கொண்டிருந்தது.
வெகுநாட்கள் காணாமல் இருந்து பழகிடும் நெஞ்சம் மீண்டும் கண்டுவிட்டால் மட்டும் தவிப்பதை நிறுத்துவதே இல்லை. ரயில்நிலையத்தை அடைந்து ஆட்டோவில் மாமன் வீடு நோக்கிப் பயணித்தனர். அனுவின் மனம் ஆசையும் எதிர்பார்ப்புமாய் உணர்ச்சியில் தத்தளித்தது.
வீட்டின் முன்பு ஆட்டோ நிறுத்தி இறங்கினர்.
அளவான அழகான புதிய வீடு வேலை முடிந்து வண்ணம் பூசி பளிச்சென்று மின்னியது. முன்னில் கட்டியிருந்த வாழை மரமும் வீட்டு வாசலில் போடப் பட்டிருந்த நாற்காலியும் விசேஷத்தை அறிவிக்க, அவர்களைக் கண்டதும் புன்னகையுடன் ஓடி வந்து வரவேற்றனர் பரத்தின் அன்னையும் அக்காவும்.
நலம் விசாரிப்பு முடிந்து வீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க அனுவின் கண்களோ பரத்தைத் தேடிக் கொண்டிருந்தது. எங்கோ வெளியே சென்றிருந்தான்.
“வாங்க வீட்டைப் பார்க்கலாம்…..” என்று பரத்தின் அன்னை அழைக்க உடன் சென்றனர்.
வாசற்படியில் கால் வைத்தவளுக்கு மொசைக்கில் அழகாய் கோர்க்கப் பட்டிருந்த எழுத்து கவனித்துப் பார்த்ததில் கண்ணுக்குப் புலப்பட ஆச்சர்யத்தில் கண் விரித்தாள். அதில் BA என்று எழுதியிருந்தது. பரத்தின் முதல் எழுத்தும் அனுவின் முதல் எழுத்தும். அதைக் கண்டதும் அவள் நெஞ்சில் பட்டாம்பூச்சி சிறகடித்தது.
“அட….. ரெண்டு பேர் முதல் எழுத்தையும் மொசைக்ல பதிச்சிருக்காங்க….. இதெல்லாம் அத்தை பார்த்தா என்ன நினைப்பாங்க…. கவனமாப் பார்த்தா நல்லாத் தெரியுமே….” யோசித்துக் கொண்டே வலதுகாலை வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
வீடு அளவாய் அழகாய் இருந்தது. அதற்குள் அத்தையின் தம்பி வரவும், அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவளது உடல் அவர்களுடன் இருந்தாலும் மனம் முழுதும் பரத் எப்போது வருவான் என ஏங்கிக் கொண்டிருக்க வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
தலைமுடியை கையால் சரி செய்துகொண்டே புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் பரத். ஆவலுடன் அனுவைப் பார்க்க அவளோ கவனிக்காதது போல் நின்றிருந்தாள்.
“நல்லாருக்கீங்களா மாமா…… அத்தை வீடெல்லாம் பார்த்திங்களா…. பிடிச்சுதா….” கேட்டவனிடம் அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க அனுவோ சம்மந்தம் இல்லாத போல எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
“இவளுக்கு என்னாச்சு….. இவளைப் பார்க்க ஆசையா ஓடிவந்தா மூஞ்சத் திருப்பிட்டு நிக்கறா…..” யோசித்துக் கொண்டே அவர்களிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான். பரத்தின் தாய்வீட்டு உறவினர்கள் வந்து கொண்டிருக்க, எல்லாரும் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.
பரத்தைத் தேடி உள்ளே வந்த ஆதவனிடம், “என்னடா….. உன் அக்கா மூஞ்சியத் தூக்கி வச்சிட்டு இருக்கா…. என்னாச்சு….” என்றான் பரத்.
“ஹா… யாருக்குத் தெரியும்…. வரும்போது நல்லாத்தானே இருந்தா…. ஒருவேளை இங்க வந்ததும் உங்களைக் காணோம்னு கோபமா இருக்குமோ…..” என்றான் அவன்.
“ஓ….. இருக்கும்… இருக்கும்….” என்றவன் புது வீட்டில் அவனது நண்பர்கள் வேலை செய்து கொண்டிருக்க அங்கே சென்றான்.
அவர்கள் வீட்டுக்குப் பின்னாலேயே அவனது பாட்டி வீடு இருந்தது. இப்போது அங்குதான் உபயோகித்து வந்தனர்.
“அம்மா….. இங்க எல்லாருக்கும் டீ கொடுத்து விடுங்க….” என்று குரல் கொடுக்கவும், “சரிப்பா….” என்று உள்ளே சென்று டீயைக் கலந்தவர்,
முன்னில் நின்று கொண்டிருந்த அனுவிடம், “அனு…. இதை பரத் கிட்டே கொடுத்திரும்மா…..” என்று நான்கு பேருக்கான டீயைக் கொடுத்துவிட்டார்.
முதலில் அவள் கண்டு கொள்ளாமல் இருக்கவும் பிறகு அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
“அய்யய்யோ…. தேவை இல்லாம சிங்கத்தை நாமளே சீண்டி விட்டுட்டோமோ…..” என்று யோசித்துக் கொண்டுதான் அவள் வாசலில் நின்று வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அத்தை அவள் கையிலேயே டீயைக் கொடுத்துவிடவும் தயக்கமும், ஆவலும் சேர மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள். பரத்தின் நண்பர்கள் அவளைக் கண்டதும் புன்னகைத்தனர்.
“மணமகளே மணமகளே வா… வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா… வா….” என்று ராகத்துடன் பாட, அவளது முகம் சிவந்தது.
“அய்யயோ… இவர்கள் என்ன இப்படி சத்தமாகப் பாடுகிறார்கள்…. அப்பா, அத்தை காதில் விழுந்தால் என்ன நினைப்பார்கள்….” அவள் மனம் தவிக்க, மருண்ட அவள் பார்வையைக் கண்டவர்கள் பாட்டை நிறுத்திக் கொண்டனர்.
“என்ன அனு…. நல்லாருக்கியா….” எதார்த்தமாய் நண்பனின் மனைவியாகப் போகிறவளை விசாரித்தனர்.
“ம்ம்… நல்லாருக்கேன்…..” என்றவள் டீயை டம்ளரில் ஊற்றி அவர்களிடம் நீட்ட வாங்கிக் கொண்டனர். பரத்திடம் நீட்ட, அவன் எங்கோ பார்த்துக் கொண்டே வாங்கிக் கொள்ளவும், அவளுக்கு வருத்தமாய் இருந்தது.
“என்னம்மா… வாசற்படில மொசைக் டிசைன் பார்த்தியா…. நான்தான் போட்டேன்….” என்றவனை நோக்கி நிமிர்ந்தவள், “எதுக்குண்ணா அப்படிப் போட்டிருக்கிங்க…. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க….” கேட்கவும், பரத் அவளைப் பார்த்தான். “பார்க்கறவங்க நினைக்கறது இருக்கட்டும்…. நீ என்ன நினைக்கறே….” என்றான்.
“நான் என்ன நினைக்கறது…. நீங்க ஏன் இப்படி செய்ய சொன்னிங்க…..” அவள் கேட்க,
“நானொண்ணும் செய்ய சொல்லலை…. இந்த அதிகப் பிரசங்கி தான் அவனே முடிவு பண்ணி இதைப் பண்ணி இருக்கான்…. பார்த்தியா…. அப்பவே இவளுக்குப் பிடிக்காதுன்னு சொன்னேன்ல….” என்றான் நண்பனிடம்.
“அடடா…… இதென்னடா வம்பாப் போச்சு…. ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறீங்க…. கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க…. இப்படி பார்த்தா சந்தோஷப் படுவிங்கன்னு நினைச்சு செய்தா, இதைக் காரணமா வச்சு சண்டை போட்டுட்டு இருக்கீங்க…..” என்றான் அவன்.
அதைக்கேட்டு வருத்தத்துடன் அவள் பரத் முகத்தைப் பார்க்க, அவன் உர்ரென்று அமர்ந்திருந்தான்.
“ஆஹா….. இதை நீங்களே பேசிக்கங்க….” என்றவன்,
“வாடா… நாம போயி வேலையைப் பார்ப்போம்…..” என்று மற்றவர்களையும் அழைத்துச் செல்ல அந்த அறையில் அனுவும், பரத்தும் மட்டுமே இருந்தனர்.
சில நிமிடம் அப்படியே கழிய, அவன் கோபமாய் இருப்பதைக் கண்டவள், “என்னோட பேச மாட்டிங்களா பரத்….” என்றாள்.
“என்ன பேசறது….. வந்ததும் என்னைப் பார்த்து ஓடி வந்து கட்டி பிடிச்சுகிட்டியே…. அதான் எனக்குப் பேச வரலை….” என்றான் கிண்டலுடன்.
“ம்க்கும்….. எங்களை அழைச்சிட்டுப் போக ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவிங்கன்னு பார்த்தா…. வரலை…. வீட்டுக்கு வந்து ஆசையா உங்களைப் பார்க்க தேடினா அப்பவும் காணோம்….. உங்களைப் பார்க்கணும்கிற ஆசை எல்லாம் எனக்கு மட்டும்தான் போல…. உங்களுக்கு அப்படி ஒண்ணும் இல்லையே….” நொடிந்து கொண்டாள்.
அதைக் கேட்டதும் அவன் முகத்தில் புன்முறுவல் தோன்ற, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவளை தன்னிடம் இழுத்து கையைக் கோர்த்துக் கொண்டான். முதன் முதலில் அவனது ஸ்பரிசம் உணர்ந்தவள் உடலுக்குள் ஒரு மின்சார உணர்வு பாய, அவள் கூச்சத்துடன் கையை விடுவிக்க முயல, அவன் விட்டுவிட்டான்.
“என் அனுக்குட்டி….. எப்படிடி இருக்கே……” அவளை நேருக்கு நேர் நிறுத்தி முகம் நோக்கிக் கேட்க, அந்த காந்தப் பார்வை தாளாமல் நாணினாள் அவள்.
“ம்ம்… இருக்கேன்….” என்றவளின் குரல் பாதியே ஒலித்தது.
“ஆனா நான் உன்னைப் பார்க்காம நல்லாவே இல்லடி….. ஒவ்வொருநாள் கழியும்போதும் உனைப் பார்க்கப் போகுற நாள்ல ஒரு நாள் கழிஞ்சதா தான் நினைச்சு சமாதானப் பட்டுக்குவேன்….. ஆசையா உன்னைப் பார்க்க வேலையை விட்டுட்டு ஓடிவந்தா மூஞ்சிய திருப்பிட்டு நிக்கற…. எனக்கு வந்த கோபத்துல அப்படியே உன்னை…..”
அவன் நிறுத்தவும் காதலோடு ஏறிட்டவள், “என்னை….. என்ன செஞ்சிருப்பிங்க பரத்…. சொல்லுங்க….” என்றாள் சிரிப்புடன்.
“ஹூம் கடிச்சு வச்சிருப்பேன்…” என்றவன், “வேற ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்தியோ….” என்றான் அவள் முகத்தைக் குறுகுறுவென்று நோக்கி.
அந்தப் பார்வை தாளாமல், “ஹா…… நான் போறேன்……” என்றவள் ஓடிவிட்டாள்.
அடுத்தநாள் விசேஷம் நல்லபடியாய் முடிய வந்திருந்த உறவினர்கள் எல்லாம், “அடுத்து புது வீட்டுல ஒரு கல்யாணமா…. ரெண்டு கல்யாணமா….” என்று சாடையாகக் கேட்கவும் செய்தனர்.
இளம் மஞ்சள் நிற சுரிதாரில் இயல்பான அழகோடு மிளிர்ந்தவளை தன் கையில் இருந்த காமிராவில் கிளிக்கிக் கொண்டான் பரத்.
மாலையில் வந்தவர்கள் எல்லாம் சென்றிருக்க முக்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். பெண்கள் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இரவோடு இரவாக பழைய வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புது வீட்டுக்கு கொண்டு வருவதாய் இருந்தது.
எல்லாப் பொருட்களையும் புதுவீட்டுக்கு கொண்டு வந்தவர்கள் முடிந்தவரை ஒதுக்கிவிட்டு உறங்க சென்றனர். அடுத்தநாள் எல்லோருமாய் பொருட்களை ஒதுக்கத் தொடங்கினர். பரத்தின் அக்காவும் அனுவும், அலமாரியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
“நந்தினி…. மளிகைப்பொருள் எல்லாம் எங்க வச்சிருக்கே…..” அடுக்களையில் இருந்து பரத்தின் அம்மா குரல் கொடுக்கவும்,
“இந்த அம்மாக்கு எல்லாத்துக்கும் நானே வரணும்…..” முனங்கிக் கொண்டே எழுந்து சென்றாள் நந்தினி. பரத்தின் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள், அழகான அந்த டீஷர்ட்டைக் கண்டதும் புன்னகைத்தாள். அது அவனது பிறந்தநாளுக்காய் அவள் முதன்முதலில் வாங்கிய பரிசு. வீட்டு விசேஷத்துக்கு அழைக்க வந்தபோது அவனிடம் கொடுத்திருந்தாள்.
அந்த டிஷர்ட்டை கையில் எடுத்து நுகர்ந்தாள். மனதுக்குள் ஒரு இனம் புரியா உணர்வு பரவியது. அதை ஆவலுடன் விரித்துப் பார்த்தவள், நந்தினி வருகிறாளா என்று பார்த்துவிட்டு நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டாள்.
வேகமாய் எழுந்து சென்று கதவை மெல்ல சாத்திவிட்டு அந்த டிஷர்ட்டை அணிந்து பார்த்தாள். அதில் பரத்தை உணர்ந்தவள் மனம் சிறகில்லாமலே பறக்கத் தொடங்கியது. அலமாரியில் இருந்த கண்ணாடியின் முன்பு நின்று தன்னை நாணத்துடன் ரசித்துக் கொண்டாள்.
சட்டென்று ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் திகைத்தவள் அங்கே பார்க்க, குறும்புப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த பரத் புருவத்தைத் தூக்கி, “என்ன பண்ணிட்டு இருக்கே….” என்று கேட்கவும்,
நாணத்தில் சிவந்தவள் வேகமாய் அதைக் கழற்றிவிட்டு, “சும்மா…. போட்டுப் பார்த்தேன்…..” என்று சொல்லிவிட்டு அவன் கண்ணில் படாதவாறு தள்ளி நின்று கொண்டாள். மனதில் அவளது செயலை ரசித்துக் கொண்டே நகர்ந்தான் பரத். “அடடா…. கதவை சாத்தியவள் ஜன்னலை சாத்தாமல் விட்டேனே….” செல்லமாய் தலையில் தட்டிக் கொண்டாள்.
உன் நேசத்தைப் போலவே
என்னை விட்டுப் பிரிய மறுக்கிறது….
நான் கட்டிக் கொண்ட போது
ஒட்டிக் கொண்ட உன்
சட்டையின் வாசம்….
அடுத்து வந்த நாட்கள் அழகானவை. அடுத்தநாள் மாலையில் சின்னவர்கள் எல்லாம் சேர்ந்து பீச்சுக்கு சென்றனர். பரத்தின் மாமா மகள்களும், சித்தி பொண்ணும் எல்லாரும் இருந்தனர். அலையில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த பெண்களை அங்கங்கே நின்று கொண்டிருந்த வாலிபர் கூட்டம் ரசித்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தது.
அதை கவனித்த பரத், விளையாட வேண்டாம்…. என்று சொல்லிவிட, அவர்கள் முகம் வாடிப்போனது. அனுவுக்கு அதிலெல்லாம் பிரச்சனை இல்லை. பரத் இருக்கும் இடத்தில் அவளும் இருந்தாலே பெரிய சந்தோஷமென்று நினைத்திருந்தாள். கடற்கரை மணலில் கால் புதைய அவனோடு கைகோர்த்து நடக்க மனம் ஆசையில் துடித்தது.
அவனோ பெண்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி போல சுற்றிலும் கவனமாய்ப் பார்த்துக் கொண்டே இருந்தான். நல்ல கூட்டம் இருந்ததால் நிறையப் பெண்களும் இரண்டு ஆண்களும் மட்டுமே இருந்தனர். அவர்களின் பாதுகாப்பு ஒன்றே தனது கடமை என்பதுபோல இருந்தான் அவன்.
தன்னைக் கண்டு கொள்ளாமல் அவன் அப்படி இருந்தாலும் அவனது பொறுப்பும், கடமையுணர்வும் உடன் வந்தவர்களை கவனமாய் பார்த்துக் கொள்ளுவதும் எல்லாம் அவன் மீதிருந்த காதலை அவள் மனதில் அதிகப் படுத்திக்கொண்டே இருந்தன. யாருக்கும் தெரியாமல் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் பெரியவர்கள் எல்லாம் அடுக்களையில் ஏதோ செய்து கொண்டிருக்க சின்னவர்கள் வெளியே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
பரத்தின் அன்னை எல்லோரிடமும் நன்றாகப் பழகுவார்….. யார் வந்தாலும் முகம் சுளிக்காமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நன்றாய் கவனித்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவரது உறவுகள் எப்போதும் அவர் வீட்டில் முகாமிட்டுக் கொண்டிருப்பர்.
பெண் பிள்ளைகள் ஏதோ பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருக்க, அடுத்து யாருக்கு தில் அதிகம்….. என்ற போட்டி வந்தது. ஆளாளுக்கு ஏதேதோ சொல்ல, ரஞ்சனி, “சரி…. உங்களுக்கு அவ்ளோ தில் இருந்தா பரத் கிட்டே போயி போடான்னு சொல்லிட்டு வாங்களே…..” என்றாள். அவள் அப்படி சொல்ல ஒரு காரணம் இருந்தது…. வயதில் கீழே இருப்பவர்கள் மரியாதை இல்லாமல் டா சொல்லிப் பேசினால் அவனுக்கு பயங்கரமாய் கோபம் வரும்.
“ஏய்… நாம டா சொல்லிப் பேசினா தானே பரத்க்கு கோபம் வரும்…. அவனோட அனுக்குட்டியை அனுப்பி போடான்னு சொல்ல வச்சா….” என்றாள் நிஷா. “ஐயோ…… நான் மாட்டேன்…. பரத்க்கு பிடிக்காது……” மறுத்தாள் அவள்.
“ப்ச்…. அவன் என்ன பண்ணுவான்னு பார்ப்போம்…. நீ சொல்லு….” என்று எழுப்பிவிட தயக்கத்துடன் பரத்தின் அறைக்கு சென்றாள் அனு. அவளை அந்த பட்டாளமும் பின்தொடர்ந்தது. பாடலை முணுமுணுத்துக் கொண்டே எங்கோ செல்லப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் பரத்.
மெல்ல உள்ளே நுழைந்தவள், “டேய் பரத்….. எங்கேடா கிளம்பறே…..” மெதுவாய் சொல்ல அவன் கவனிக்காமல் இருக்க பின்னில் பார்த்தவளை மறைவாய் நின்று கொண்டு சத்தமாய் சொல்லுமாறு கூறினர்.
“டேய்…. எங்கேடா கிளம்பிட்டே….” உரக்கக் கேட்டவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன், “என்னடி சொன்னே…..” என்றான்.
“உனக்கு வாடா போடான்னு கூப்பிட்டா பிடிக்காதாமே… வா…டா, போ…டா… இனி உன்னை அப்படிதான் கூப்பிடப் போறேன்… என்னடா பண்ணுவே…..” அவள் சொல்லி முடிக்கவும் அடுத்து நடந்த சம்பவத்தில் அனைவரும் உறைந்து நின்றனர்.
ஏனோ தானோவென்று தான்
கிறுக்குகிறேன் உனை நினைத்து…..
கிறுக்கிய அனைத்தும்
கவிதையான மாயம்தானென்ன….