இமை – 13

 

“ரோஹி…” கோபமாய் ஒலித்தது மித்ரனின் குரல்.

 

“எதுக்கு இப்படிப் பேசறே… படியில் தவறி விழப் போன என்னை பவித்ரா பிடிச்சுகிட்டா… அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படறே… அவ பிடிக்காம நான் கீழ விழுந்து மறுபடியும் இன்னொரு காலையும் உடைச்சுக்கணும்னு நினைக்கறியா…” கோபமாகவே மித்ரனும் கேட்டான்.

 

அவன் அப்படி சொல்லவும் தான் நடந்தது தலைக்கேற கோபம் குறைந்து சாந்தமானாள் ரோஹிணி.

 

அவன் அருகில் வந்து கையைப் பிடிக்கவும், விலக்கி விட்டவன் நொண்டிக் கொண்டே சென்று சோபாவில் அமர்ந்தான். அவனது சிவந்த முகம் சூரியனின் கோபத்தை உணர்த்த அருகில் சென்று அவளும் அமர்ந்தாள்.

 

மீனாவும் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவர்,

 

“மித்ரா… அவ எதுக்கு கோபப்பட்டா.. உன் மேல உள்ள அன்புனால தான…. ரோஹியை உனக்கு இப்ப இருந்தா தெரியும்… சின்ன வயசுல இருந்தே அவளுக்குப் பிடிச்ச ஒரு பொம்மையை யாராச்சும் எடுத்துட்டா கூட வீட்டையே ரெண்டு பண்ணிருவாளே… அப்படிப்பட்டவ, உன்னை இப்படிப் பார்த்ததும் கோபப் பட்டுட்டா… உன்மேல அத்தனை பிரியம்பா… இல்லையா ரோஹிம்மா…”

 

“ம்ம்… ஆமாம் அத்தை… அத்தானையும், அவளையும் அப்படி நெருக்கமா பார்த்ததும் என்னால தாங்கிக்க முடியலை… சாரி அத்தான்…” என்றாள் அவளும் முகத்தில் வருத்தத்தை தேக்கி வைத்துக் கொண்டே. “சரி… சரி… போகட்டும்… என்ன, நீ மட்டும் தனியா கிளம்பி வந்திருக்கே… மாமா வரலியா…”

 

“அப்பாக்கு எதோ வேலை இருக்காம்… முடிச்சிட்டு ரெண்டு நாள்ல டாக்டரைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னார்… இப்போ எப்படி இருக்கு அத்தான்… நடக்கும்போது கால் வலிக்குதா… உங்களை நினைச்சு எனக்கு நிம்மதியாவே இருக்க முடியலை… அதும் நர்ஸ் வேற போயிட்டான்னு தெரிஞ்சதும் நீங்க எப்படி கஷ்டப் படுவீங்களோன்னு கவலையா இருந்துச்சு… அதான் நாலு நாள் கிளாஸ்க்கு லீவு எடுத்திட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு ஓடி வந்துட்டேன்…” என்று சொல்லவும் முன்பு அவள் மீதிருந்த கோபம் மாற மெல்ல புன்னகைத்தான்.

 

“அதனால என்ன ரோஹி… நர்ஸ் போனாலும், பவி என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறாளே… இதுக்காக நீ லீவ் போட்டு வரணுமா…” எதார்த்தமாய் கேட்டுக் கொண்டே டீபாயின் மீதிருத்த தினசரியைக் கையில் எடுத்துக் கொண்டவன் அப்போது மட்டும் ரோஹிணியின் முகத்தைக் கண்டிருந்தால் அதிர்ந்திருப்பான்.

 

அதில் அத்தனை வன்மமும், குரோதமும் பளிச்சிட்டது.

ஆனால் அவளது கோபத்தை உணர்ந்து கொண்ட மீனா, “சரி… சரி… ரோஹிம்மா… நீ போயி கொஞ்சம் ரெஸ்ட் எடு… அப்புறம் வந்து உன் அத்தானை நீயே பார்த்துக்க…” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

 

ரோஹிணியின் மனதில் பவித்ராவின் மீதிருந்த கோபம் மேலும் அதிகமாயிருந்தது.

 

“பவியாம் பவி… என் வயிதெரிச்சலைக் கிளப்ப வந்த பாவி… செல்லமா கூப்பிடற அளவுக்கு வந்தாச்சா… அதும் நர்சை விட அவ நல்லாப் பார்த்துக்குவாளாம்… இந்த அத்தான் எந்தப் பொண்ணையும் பார்க்கக் கூட மாட்டார்… இப்போ இப்படி எல்லாம் அவளுக்கு சப்போர்ட்டா யோசிக்க ஆரம்பிச்சுட்டாரே.. இது நல்லதுக்குன்னு தோணலை…”

 

எரிச்சலுடன் யோசித்துக் கொண்டே அறைக்குள் சென்றவள் குளித்து பிரஷாகி விட்டு ஹாலுக்கு வந்தாள்.

 

“அத்தை… எனக்குப் பசிக்குது… அவகிட்ட ஜூஸ் கொண்டு வர சொல்லுங்க…” என்றாள் அதிகாரத்துடன்.

 

தினசரியில் ஒரு எழுத்து விடாமல் படித்துக் கொண்டிருந்த மித்ரன் நிமிர்ந்தான்.

 

“பவித்ரா மாடில ரூம் கிளீன் பண்ணிட்டு இருப்பா ரோஹி… உனக்குதான் அவ ஜூஸ் போட்டா பிடிக்காதே… சாவித்திரிக்கா கிட்ட சொல்லு…” எனவும் அதிர்ந்தாள்.

 

அவளது முகத்தில் கோபத்தின் ஜூவாலை கொழுந்து விடத் தொடங்கியதைக் கண்ட மீனா, அவசரமாய் சாவித்திரியை அழைத்தாள்.

 

“சாவித்திரி… எல்லாருக்கும் ஜூஸ் போட்டு எடுத்திட்டு வா…” என்றவர், “பசிக்குதுன்னு சொல்லறியே… ஏதாச்சும் சாப்பிட கொண்டு வரட்டுமா செல்லம்…” என்று கேட்கவும் அத்தையை எரித்துவிடுவது போல முறைத்தவள்,

 

“அவ ஜூஸ் போட்டு அன்னைக்கு மாதிரி நீ குடிக்காமப் போயிட்டா, உனக்கு பசிக்குமே… அதான், உன் மேல உள்ள அக்கறைல மித்ரன் அப்படி சொல்லிருக்கான்…” என்று இருவருக்கும் நடுவில் சமாதான உடன்படிக்கை வாசிப்பதே மீனாவின் வேலையானது. ஒருவழியாய் சாவித்திரி கொண்டு வந்த ஜூஸைக் குடித்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் ரோஹிணி.

 

மித்ரனுக்கு பவித்ராவை நினைத்து பாவமாக இருந்தது. என்னதான் அவள் வாடகைக்கு நடிக்க வந்தாலும், அநாதரவான அவள் மீது ரோஹிணி அதிகாரம் செலுத்துவது பிடிக்கவில்லை. அதும் அவனை கண்ணும் கருத்துமாய் அவள் பார்த்துக் கொள்ளும் போது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்… அன்னையின் முகத்துக்கு வேண்டிதான் அமைதியாய் இருக்க வேண்டி இருந்தது.

 

அவனுக்கு ரோஹிணியைப் பிடிக்கும் தான்… தன்னை சிறுவயதில் இருந்து அக்கறையோடு வளர்த்த அன்னைக்கு அவளைப் பிடிக்கும் என்பதாலும், தன்னையும் சொந்த மகனைப் போல பார்த்துக் கொண்ட மாமா, அத்தையின் மகள் என்பதாலும் அவள் மேல் மிகுந்த பிரியம் இருந்தது. நினைத்தது நடந்தே ஆகவேண்டும் என்ற அவளது எண்ணப்போக்கு பிடிக்காவிட்டாலும் வெறுத்து விலக்க முடியவில்லை.

அவர்கள் பெரிதானதும் இருவருக்கும் மணமுடித்து சொத்தும், உறவும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைய வேண்டும் என்பது சோம சுந்தரத்துக்கும், மீனலோசனிக்கும் மிகுந்த ஆசை. அவர்கள் ஆசைக்கு ஏற்றது போல் ரோஹிணியும் அத்தான்… அத்தான் என்று அவனையே சுற்றி வந்தாள்.

 

நல்ல கம்பீரமான அழகும், அன்னை சொல்லைத் தட்டாத குணமும், எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் நோக்காத சுபாவமும் அவளுக்கு அவன்மேல் ஈர்ப்பை உண்டாக்கின. அவனுக்கு அவள் மேல் காதல் என்றும் இல்லை… அவளைக் கல்யாணம் பண்ணுவதில் வெறுப்பும் இல்லை… அன்னையின் விருப்பமே தன் விருப்பமாய் கொண்டிருந்தான்.

 

இவர்கள் எல்லாருக்கும் இவருடைய கல்யாணத்தில் விருப்பம் என்றாலும் விதியின் விருப்பம் வேறாய் இருந்தது. சோமசுந்தரம், மீனலோசனி இருவருக்கும் அவர்களின் குடும்ப ஜோசியர் வாசுதேவன் சொல்லும் வார்த்தைகள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. குடும்பத்தில் நடக்கும் பல கார்யங்களில் அவர் சொன்ன வாக்கு பலித்ததால் எந்தக் காரியமும் அவரிடம் கேட்டே நடத்துவது வழக்கம்.

அப்படி ரோஹிணி, மித்ரனுக்கு ஜாதகத்தில் கல்யாண யோகம் எப்போது வருகிறது… தாங்கள் நினைத்தது போல இருவருக்கும் மணமுடிக்க எல்லாப் பொருத்தமும் சரியாக இருக்கிறதா எனக் கேட்பதற்காய் ஜோசியரைக் கண்ட போதுதான் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

 

ரோஹிணியின் ஜாதகத்தில் கல்யாணப் பிராயம் வரும்போது பெரிய தோஷம் ஒன்று உள்ளதை அவர் முன்னமே கணித்திருந்தாலும் நேரமே சொல்லி அவர்களை வருந்த வைக்க விருப்பமில்லை என்றவர் அந்த விஷயத்தைக் கூறியதும் சோமுவும் மீனாவும் அதிர்ந்து போயினர்.

 

“ரோஹிணியின் மாங்கல்ய பலம் மிகவும் சக்தியற்று இருப்பதால் அவளைத் திருமணம் செய்யும் மணமகன் அல்பாயுசில் சீக்கிரமே இறந்துவிடுவான்…” என்று அவர் சொன்னதைக் கேட்டதும் சோமுவின் மனம் அதிர்ச்சியில் உறைய, மீனாவின் மனமோ மித்ரனை நினைத்து நடுங்கிப் போனது. அதிர்ச்சியோடு இருந்தவர்களிடம் ஜோசியரே அதற்கு ஒரு பரிகாரத்தையும் கூறினார். ரோஹிணியை இரண்டாம் தாரமாய் அதாவது முன்னமே திருமணமாகி மனைவியைப் பிரிந்த அல்லது இழந்த ஒருத்தனைத் தான் ரோஹிணிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே அது.

 

அதைக் கேட்டதும் அவர்களின் அதிர்ச்சி மேலும் அதிகமானது. வாங்கும் பொருளில் கூட முதல்தரம் உள்ளதா என்று தேடுபவளுக்கு இரண்டாம் தாரமாய் போக வேண்டும் என்றால் நடக்கும் காரியமா… அல்லாமல் மித்ரனுக்கு அவளை மணமுடித்து இரு உண்மையாய் நடக்குமா, இல்லையா என்று பரீட்சித்துப் பார்க்க மீனாதான் சம்மதிப்பாரா… 

 

அடுத்து மித்ரனின் ஜாதகத்தைப் பார்த்தபோது அவனுக்கு அப்போதே கல்யாண யோகம் முடியப் போவதாகவும் அவன் ஆயுளில் கண்டம் இருப்பதால் ஜாதகத்திற்குப் பொருத்தமான மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை உடனே கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். அது அவர்களுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சி.

 

யோசனையோடும், குழப்பத்தோடும் வீட்டுக்கு வந்த சோமு மகளிடம் ஜாதகத்தைப் பற்றிக் கூற அவள் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தாள்.

“ஜாதகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை, அத்தானையே கல்யாணம் செய்து வைக்க வேண்டும்…” என்று துள்ளினாள். “அதற்கு உன் அத்தை சம்மதிக்க மாட்டாளே…” என்று சோமு கூற, “அத்தை சம்மதிக்காவிட்டால் நான் வேறு யாரையுமே கல்யாணம் செய்யமாட்டேன்…” முடிவாகக் கூறினாள் அந்த பிடிவாதக்காரி.

 

அப்படி பலவித குழப்பமான யோசனையின் முடிவில் சோமுவுக்கு உதித்த ஐடியா தான் இது. மித்ரனுக்கே இரண்டாவது தாரமாய் மகளைக் கொடுப்பது… ஆனால் பெயருக்கு மட்டுமே மனைவியாய் அவனுக்கு ஒரு பெண்ணாய்த் தேடுவது என்று கூறினார். இதில் மீனாவுக்கு சம்மதம் என்றாலும் மித்ரனும், ரோஹிணியும் சம்மதிக்க வேண்டுமே… அத்தோடு மித்ரனுக்கு ஆயுளில் கண்டம் இருப்பதால் தகுந்த ஜாதகப் பொருத்தம் உள்ள பெண்ணாய்க் கிடைத்து அவள் இந்தக் காரியத்துக்கும் சம்மதிக்கவும் வேண்டுமே…” என்ற கவலை மீனாவுக்குத் தொடங்கியது.

 

அதைப் பற்றி பேச மீண்டும் ஜோசியரிடம் சென்ற போது தான் பவித்ராவின் அத்தை கோமதியைக் கண்டார்.

ஜோசியருடன் மீனா பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர் மனதில் பவித்ராவின் தீர்க்கசுமங்கலி ஜாதகம் நினைவில் வந்தது. மகள்களின் ஜாதகத்தைப் பார்க்க வந்திருந்த கோமதியை மீனாவுக்கு முன்னமே பரிச்சயம் இருந்தது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் குடும்ப விழாவிலும், கல்யாண வீட்டிலுமாய் அங்கங்கு பார்த்திருந்தார். கோமதி, மீனாவிடம் சென்று பவித்ராவின் ஜாதகத்தைப் பற்றிக் கூற, உடனே மித்ரனின் ஜாதகத்துடன் பொருத்தம் பார்த்த ஜோசியர் பத்துக்கு ஒன்பது பொருத்தமும் பொருந்தி இருப்பதாய் கூற, மீனாவின் மனம் மகிழ்ந்தது.

 

கோமதியிடம் ரோஹிணியின் ஜாதகத்தைப் பற்றிக் கூறிய மீனா, எப்படியாவது பவித்ராவிடம் சொல்லி ஒரு வருட பொம்மைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கும்படியும், பிரியும்போது அவளது வாழ்க்கைக்குத் தேவையானதை தான் செய்து கொடுப்பதாகவும் கூறினார். ஆனால் கோமதியோ, இப்போது அவளிடம் இதைப்பற்றிக் கூற வேண்டாம், ஒருவருடம் கழித்து, தான் எதையாவது சொல்லி அவளைப் பிரிந்து செல்ல சம்மதிக்க வைப்பதாய் கூறினார்.

இதற்கு கைமாறாய் வங்கி கடனில் இருந்த கோமதியின் வீட்டுப் பத்திரம் அவரது கைக்கு வந்தது. பவித்ராவின் மாமா குணசேகரனுக்கு தெரிந்தால் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்பதால் அவருக்கும் சொல்லவில்லை.

 

இந்த பொம்மைக் கல்யாணத்தைப் பற்றி ரோஹிணியிடம் கூற முதலில் குதித்தாள். “அதெப்படி சரிவரும்… கல்யாணம் முடிந்து பிரிந்து செல்லாமல் அப்பெண் அத்தானை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டால் என் நிலைமை என்னாவது… அதும் இல்லாமல் கல்யாணம் முடிந்து இருவரும் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது…” என்று அவள் மாறி மாறிக் கேட்க, மீனாவுக்கு தோன்றிய ஐடியா தான் ஒருவருடம் இருவருக்குள்ளும் சாந்தி முகூர்த்தம் நடக்கக்கூடாது என்று மருமகளாகப் போகும் பெண்ணிடம் கூறுவது.

 

“மித்ரனிடம் இந்த நாடகக் கல்யாணத்தைப் பற்றி சொல்லி விட்டால் பிரச்னை இல்லை… எந்தப் பெண்ணாய் இருந்தாலும் விலகி இருப்பான்…” என்று சொல்லவும், அவன் மீது இருந்த நம்பிக்கையில்  ரோஹிணி ஒருவழியாய் சம்மதிக்க, அடுத்து மித்ரனை சம்மதிக்க வைப்பது தான் பெரும் பாடாயிற்று.

“பொம்மைக் கல்யாணமா… முடியவே முடியாது…” என்று உறுதியாய் நின்றவனை, “அத்தானைக் கல்யாணம் செய்து வைக்காவிடில் தற்கொலைதான் செய்துகொள்வேன்… வேறு யாரையும் மணக்க மாட்டேன்…” ரோஹிணி அடம் பிடிக்க, மீனா கண்ணீருடன் மகனிடம் கை பிடித்து வேண்டினார்.

 

கல்யாணப் பெண்ணிடம் உண்மையை சொல்லவேண்டும் என்ற நிபந்தனையுடன் மனமில்லாமல் சம்மதம் கூறினான் மித்ரன். ஆனால் அவன் சொன்னது போல் நடக்காமல் கோமதி சொன்னதுபோல் மறைத்தே கல்யாணம் நடந்தது. அடுத்து நடந்த காரியங்கள் அனைவரும் அறிந்ததே.

 

மதிய உணவு வரையிலும் பவித்ரா கீழே வராததால் மித்ரன் வருந்தினான். “இந்தப் பெண் ரோஹிணி கூறியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பாளோ…” என நினைத்தான். அன்னையிடம் கேட்கவும் விரும்பவில்லை. அவரும் ரோஹிணியின் பின்னாலேயே சென்று விட்டார்.  

 

சாவித்திரி சமையல் முடித்து மேசையின் மீது எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது பவித்ரா கீழே வந்தாள். அழுதிருக்கிறாள் என்பதற்கு அடையாளமாய் அவளது பெரிய கண்கள் சிவந்து மேலும் பெரிதாகி வீங்கி இருந்தன. இதுவரை அவள் முகத்தில் எப்போதும் சிரிப்பை மட்டுமே கண்டிருந்தவன், சோர்ந்த சிரிக்க மறந்த அவளைக் கண்டதும் மனதுக்குள் பரிதவித்தான். மௌனமாய் சாப்பாட்டு மேசைக்கு சென்றவள் ஒரு தட்டை எடுத்து அதில் வேண்டிய உணவுகளை வைத்து ஸ்பூனுடன் ஹாலில் அமர்ந்திருந்த மித்ரனிடம் கொண்டு நீட்டினாள். குனிந்திருந்த அவளது முகத்தைக் கண்டு அவனுக்கு பாவமாய் தோன்றியது.

 

“பவி… அழுதியா… ரோஹி ஏதோ நான் விழப் போறேன்னு நினைச்சு கத்திட்டா…. பயந்துட்டியா…” அவனது மென்மையான வார்த்தைகள் புண்பட்ட மனதுக்கு மருந்தை தடவினாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள். “சரி… நீயும் சாப்பிடு…. ரொம்ப சோர்வாத் தெரியறே…”

 

“இ… இல்ல… நீங்க சாப்பிடுங்க… மாத்திரை போடணும்… டைம் ஆச்சு… நான் அப்புறம் சாப்பிடறேன்…” சோர்வுடன் வந்த வார்த்தைகளில் தனக்கு மாத்திரை கொடுக்கும் சமயம் ஆனதால் தான் கீழே இறங்கி வந்திருக்கிறாள் என்பது புரிய அவன் மனம் நெகிழ்ந்தது.

“நீ இப்போ சாப்பிடப் போறியா இல்லியா…” அதட்டலாய் கேட்கவும் அறைக்குள் இருந்து ரோஹிணியும் மீனாவும் வெளியே வந்தனர். இப்போது மீனாவின் முகத்திலும் திகைப்பும் சற்று குழப்பமும் தெரிய ரோஹிணியின் கோபம் அதிகரித்துக் கொண்டே செல்ல வரவழைத்த புன்னகையுடன் அங்கே சென்றாள். அவளைக் கண்டதும் பவித்ரா ஒதுங்கி நிற்க, “பவித்ரா… ரொம்பப் பசிக்குது… எனக்கு சாப்பாடு எடுத்து வை…” என்றவள் சாப்பாடு மேசை முன்பு ஸ்டைலாய் அமர்ந்து,

 

“அத்தை… நீங்களும் வந்து உக்காருங்க… பவித்ரா நமக்கு பரிமாறுவா… இல்லையா பவித்ரா…” என்று அமர்த்தலாய் கேட்க, பசிக்கிறது என்று அவள் சொன்ன பின்னே அமைதியாய் நிற்கப் பிடிக்காமல் அவர்களுக்கு தட்டை எடுத்து வைத்தவள் பரிமாறத் தொடங்கினாள். பவித்ராவின் அழுத முகம் கண்டு மீனாவுக்கு வருத்தமாய் இருந்தாலும், ரோஹிணியின் முன்பு எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாப்பிடத் தொடங்கினார்.

 

சாப்பிடத் தொடங்கிய ரோஹிணி, “சாவித்திரிக்கா… இந்தக் கூட்டு நீங்களா பண்ணினிங்க… உப்பு கம்மியா இருக்கு… சாம்பார் கூட கொஞ்சம் தண்ணியா இருக்கே… பவித்ரா ரொம்ப நல்லா சமைப்பான்னு அம்மா சொன்னாங்களே… அப்படியா அத்தை… நீங்க சாப்பிட்டிருக்கீங்களா…” என்று மீனாவிடம் கேட்கவும், “ஆமாம்மா… பவித்ரா… நல்லா சமைப்பா…” என்றார் அவர்.

 

“ஓ… அப்ப இன்னைக்கு எதும் நீ சமைக்கலியா பவித்ரா…” இதுவரை எதுவுமே நடக்காத போல இயல்பாய் கேட்டவளிடம், என்ன சொல்வதென்று திகைத்த பவித்ரா, “இல்லை… நான் இன்னைக்கு சமைக்கலை…” என்றாள்.

 

“ம்ம், சாவித்திரிக்கா சமையல் வரவர ருசி கம்மியாகிட்டே வருது… நாளைல இருந்து நீயே சமைச்சுடேன்… உன் சமையல் ருசியா இருக்கும்னு அம்மா சொன்னது சரியான்னு பார்த்திடுவோம்… இல்லையா அத்தை…” என்று நைசாய் அவளிடம் சமையல் பொறுப்பை சுமத்தவும், மறுக்க முடியாமல் அவரும் தலையாட்டினார்.

 

“ஆமாம், பவித்ரா… நீ சமைச்சா என் மகன் கூட ஒரு பிடி அதிகமா சாப்பிடுவான்…” என்று சொல்லிவிட்டவர், நாக்கைக் கடித்துக் கொண்டு அவசரமாய்  ரோஹிணியைப் பார்க்க அவள் முகம் ஒருநிமிடம் மாறி பழையது போல் ஆனது.

 

“சரி அத்தை… நானே நாளையில் இருந்து சமைக்கிறேன்…” மித்ரன் தனது சமையலை விரும்பி சாப்பிடுவான் என்று கூறியதும் அவள் சந்தோஷமாகவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். இது எல்லாமே மித்ரனின் காதில் விழுந்து கொண்டிருந்தாலும் அவன் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தான்.

 

சாப்பிட்டு முடித்தவன், “பவி…” என அழைக்கவும், வேகமாய் ஓடியவள் கை அலம்பத் தண்ணீர் கொடுத்து, மாத்திரையும் கொடுக்க, முழுங்கினான்.

 

“ரொம்ப நேரம் உக்கார்ந்துட்டிங்க… ரெஸ்ட் எடுங்க… கூட்டிட்டுப் போகட்டுமா…” மென்மையான குரலில் அவள் கேட்டு முடிக்கும் முன்பே அங்கே வந்திருந்தாள் ரோஹிணி. நனைந்த கையை டவலால் துடைத்துக் கொண்டே வந்தவள், “நீ போயி சாப்பிடு பவித்ரா… நான் அத்தானை மாடிக்கு அழைச்சிட்டுப் போறேன்…” என்றவள், அவனது கையைப் பிடித்து, “வாங்க அத்தான்…” எனவும் எழுந்து நடந்தவன் மெல்லத் திரும்பிப் பார்க்க கையிலுள்ள மிட்டாயைத் தட்டிப் பறித்ததுபோல ஏமாற்ற முகத்துடன் நின்றுகொண்டிருந்தாள் பவித்ரா.

 

சலனமில்லா நெஞ்சில் கூட

சட்டென்று சாரல் வீசக் கண்டேன்…

உன் கண்ணீர் எனக்காக எனும்போது…

தாயாகத் தாங்குகின்றாய்

நான் நீயாக ஏங்குகின்றேன்…

உன் கண்ணில் நீர் கண்டு

ஊசிமுனை ஒன்று

உள்ளுக்குள் குத்துதடி….

இமைகள் இதமாய் வருட

இதயம் சுகமாய் திருட

இதுதான் காதலா…

இரு நெஞ்சின் கூடலா…

இமைப்பீலி வரும்…