இமை – 12

னது அறைக்கு வந்ததும் மனம் அமைதியை உணர சற்று நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தான் மித்ரன். திறந்திருந்த ஜன்னல் வழியாய் சிலுசிலுத்த காற்று தேகம் தழுவிச் சென்றது.

 

சற்று நேரம் கழித்து அங்கே வந்த பவித்ரா, “உங்களைக் கேக்காம பொருளை எல்லாம் இடம் மாத்திட்டேன்னு கோவிச்சுக்காதிங்க… இப்படி இருந்தா இன்னும் வசதியா இருக்கும்னு தோணுச்சு… அப்புறம் உடம்புக்கு முடியாம வர்ற நீங்க தங்கற சூழல் அழகா இருக்கட்டும்னு தான் உங்களுக்குப் பிடிச்ச கலர்ல கர்ட்டன் மாத்தினேன்… உங்களுக்குப் பிடிக்கலைன்னா பழையபடி மாத்திடறேன்…”

 

“இல்ல வேண்டாம்… புதுசா வந்த மாற்றம்கூட அழகா தான் இருக்கு…” என்றவன் சொன்னபிறகு தான் எதை நினைத்து இப்படி சொன்னோம் என்று யோசித்தான். அவளது அருகாமையில் தன் மனம் தடுமாறுவதை உணர்ந்தவனுக்கு கோபமாய் வர, “நீ என் கட்டிலை தான் யூஸ் பண்ணியா…” என்று கேட்டான்.

 

“இல்லங்க… நான் என் பெட்டை தான் யூஸ் பண்ணேன்…”

 

“ஓ… சரி, இனி நான் இங்கயே இருக்கேன்…” என்றவனிடம், “அது… உங்களுக்கு படி ஏற, இறங்க கஷ்டமா இருக்கும்னு அத்தை சொல்லுவாங்களே…”

 

“அதைப் பத்தி நீ கவலைப்படாதே… நான் பார்த்துக்கறேன்… அந்த ரூம்ல எனக்கு சரியாத் தூக்கமே வரலை…”

“ஓ… சரிங்க… நீங்க ரெஸ்ட் எடுங்க…  நான் உங்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்திட்டு வரேன்…” என்றவள் அது அவன் தினமும் ஜூஸ் குடிக்கும் டைம் என்பதால் அடுக்களைக்கு விரைந்தாள். செல்லும் அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன், “இத்தனை இயல்பாய் ஒருத்தியால் நேசிக்க முடியுமா…” என்று யோசித்தான்.

 

பென் டிரைவை எடுப்பதற்காய் மேசை வலிப்பைத் திறந்தவன், அங்கே அழகாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அவன் பொருட்களைக் கண்டு திகைத்தான். முன்னிலேயே பென் டிரைவும் இருந்தது.

 

அவனது புகைப்படங்கள் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஜூஸுடன் வந்தவளிடம் லாப்டாப்பை எடுத்து வருமாறு கூறியவன் அவனது பொருட்களை எல்லாம் இந்த அறைக்கு மாற்றுமாறு சொல்லவும் பவித்ராவின் மனது துள்ளியது. “இனி எப்போதும் அவனது அருகாமையில் இருக்கலாமே…” என்று சந்தோஷித்தாள்.

 

மாலையில் வீட்டுக்கு வந்த மீனா நர்ஸ் கிளம்பியதையும், மித்ரன் அறை மாறியதையும் அறிந்து ஏனென்று கேட்க, நர்ஸ் தந்தையைப் பற்றி கூறியவன், அந்த அறையில் ஏசி இல்லாததால் உறக்கம் வரவில்லை என்றும் கூற அவரும் அரை மனதாய் தலையசைத்து சென்றார்.

 

அவனது அறைக்கே இரவு உணவைக் கொண்டு வந்தாள் பவித்ரா. மாத்திரை கொடுத்துவிட்டு அடுக்களைக்கு சென்றவள் சாப்பிட்டு மீனாவின் அறையில் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வைக்க அவர் காலைப் பிடித்துக் கொண்டு முகத்தில் வேதனையோடு அமர்ந்திருந்தார்.

 

“என்னாச்சு அத்தை, கால் வலிக்குதா… நான் பிடிச்சு விடட்டுமா…” என்றவள் மறு நிமிடம் அவரது காலில் கை வைத்து பிடித்து விடத் தொடங்கியிருந்தாள். “இந்தப் பெண்ணின் மாசில்லா அன்பை எப்படி உன்னால்  கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது…” என்று அவரது மனம் கேள்வி கேக்க குற்றவுணர்ச்சியில் தவித்தார்.

 

“இவளுக்கு நான் செய்த கொடுமை தெரிந்தால் என்ன செய்வாள்… என் முகத்திலே விழிப்பதும் பாவம் என்று விலகி செல்வாளா…” என யோசித்தவர்,

 

“அதற்கு நான் என்ன குற்றம் செய்தேன்… இவளது அத்தையிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிதானே பெண் கேட்டேன்… பணத்தாசை பிடித்த அவர்தானே இப்போது அவளிடம் சொல்ல வேண்டாம்… ஒருவருடம் கழித்து இந்த விஷயத்தை தானே சொல்லி பவித்ராவை அழைத்துச் செல்வதாகக் கூறினார்… இங்கே அவளை நான் எந்தக் கொடுமையும் செய்யவில்லையே…” இப்படி நினைக்கவும் தான் அவரது மனம் சமாதானமானது.

 

சோர்வுடன் கண்ணை மூடிக் கொண்டவர், அவளது மென்மையான கைகளின் மந்திரத்தில் மெல்ல உறங்கத் தொடங்கியதும் கதவை சாத்திவிட்டு மாடிக்கு வந்தாள். மித்ரன் முகத்தில் கையைக் குறுக்காகக் கொடுத்து படுத்திருந்தான். அவனது அருகில் வந்து நின்றவள், ஆசையோடு ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

அவளுக்கான படுக்கையை நிலத்தில் விரித்தவள், எப்போதும் போல அவளது டைரியை எடுத்து அதில் இருந்த மித்ரனின் புகைப்படத்தை மௌனமான முத்தங்களால் எச்சில் செய்துவிட்டு, “என் கற்பனை முத்தம் கூடிய சீக்கிரமே நிஜ முத்தமா மாறணும்… மை டியர் ஹீரோ…” என்று சொல்லிவிட்டு தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டாள்.

 

அதைக் கண்ட மித்ரனின் முகம் கூம்பியது. “ஓ… அது யாருடைய போட்டோவாக இருக்கும்… ஒருவேளை பணத்துக்காகதான் இந்த காரியத்தை செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளோ…” என நினைத்தான். அவள் அப்படி இருப்பதுதானே நல்லது… என்று நினைத்து சமாதானம் ஆகாமல் தனக்குள் ஒரு ஏமாற்றம் பரவி மனதில் சஞ்சலம் அதிகரித்ததை அதிசயமாய் உணர்ந்தான்.

 

“ச்சே… எனக்கு என்னவாயிற்று… நான் ஏன் இவளுக்காக இத்தனை யோசிக்கிறேன்…” என நினைத்தவன் மனதை ஒருநிலைப்படுத்தி கண்ணை இறுக மூடிக் கொண்டான்.

கண்ணுக்குள் புன்னகையுடன் வந்து நின்றாள்  பவித்ரா. “என்னங்க…” என்ற அழைப்பில் மனதில் உள்ள அன்பு மொத்தத்தையும் தேக்கி வைத்து அழைக்கும்போது தன் உயிரைத் தீண்டிய உணர்வு தோன்றியது.

 

எட்டி நிற்க எச்சரிக்கிறேன்…

எனக்குள் நீ வந்து விடுவாயோ

என்ற எண்ணத்திலே…

தட்டிவிட நினைக்கின்றேன்…

என் இதயம் தொட்டுவிட்டாய்

என்பதை அறியாமலே…

நுனிப்புல்லில் அமர்ந்த பனித்துளியாய்

மனம் வீழ்ந்தேதான் விடுவேன்

என்கிறது உனதன்பாலே…

 

உறக்கம் வராமல் பவித்ரா என்ற அப்பாவிப் பெண்ணின் எதார்த்தமான அன்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது அவன் மனம். மெல்ல எழுந்தவன் இரவு விளக்கின் ஒளியில் கீழே படுத்திருந்த பவித்ராவை நோக்கினான். மலர்ந்த முகத்துடன் உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையுடன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த பேதைப் பெண்.

 

அவள் தலையணைக்கடியில் உள்ள டைரியை எடுத்து அந்த போட்டோவில் உள்ளது யாரென்று பார்த்துவிட கைகள் பரபரத்தாலும், அது தவறென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் தண்ணீரைக் குடித்துவிட்டு கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டான்.

 

என் மனோரதங்கள் எல்லாம்

உன் நினைவு சுழியில் மட்டுமே

மீள முடியாமல் தவிக்கிறது…

 

“நான் ஏன் இவளைப் பற்றியே யோசிக்கிறேன்… ரோஹிணியின் நினைவே வருவதில்லையே…” என யோசித்தவனுக்கு தன் மனம் போகும் போக்கை நினைத்துக் கவலையாய் இருந்தது. துள்ளிக் குதித்து குதிரையின் வேகத்தில் பறந்து கொண்டிருந்த மனதுக்கு ரோஹிணியைப் பற்றிய நினைவு கடிவாளமானது.  அவனாக நினைத்துக் கொள்ளாமல் அவன் மனதுக்குள் ஏனோ அவள் முகம் எட்டிப் பார்ப்பதேயில்லை… என்பது கூட திகைப்பாய் இருந்தது.

 

அடுத்தநாள் காலையில் மீனாவின் அலைபேசியில் அழைத்த ரோஹிணி, தான் கிளம்பி வந்து கொண்டிருப்பதாகவும் காரை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறியவள், மித்ரனுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும், சொல்ல வேண்டாம்… என்றுவிட்டாள்.

 

மீனாவுக்கும் ஒரு வேலை இருந்ததால் அதை முடித்துவிட்டு அவரும் காரில் ஏர்போர்ட் சென்றார்.

 

காலை முதல் அறைக்குள்ளே படுத்தே இருந்த மித்ரன் குளிக்கவேண்டும் என்று சொல்ல அவனுக்கு சுடுதண்ணீர் எடுத்துவைத்து, உக்கார்ந்து குளிப்பதற்காய் ஒரு ஸ்டூலைக் கொண்டு போய் குளியலறையில் வைத்தாள் பவித்ரா.

“என்னங்க… தண்ணி எடுத்து வச்சுட்டேன்… குளிக்க வாங்க…” என்று குழந்தையைப் போல் கணவனை அழைத்தாள் அவள். இடுப்பில் ஒரு டவலும் மார்பை மறைக்க ஒரு டவலுமாய் காலை நொண்டிக் கொண்டு வந்தவனைக் கண்டவள் களுக்கென்று சிரித்துவிட்டாள்.

 

“எதுக்கு சிரிக்கறே பவித்ரா…” “இல்ல… இவ்ளோ நாள் குழந்தை போல நடந்து பழகுனிங்க… இப்ப கொஞ்சம் பெரியவனாகி தனியா குளிக்கப் பழகறீங்கன்னு நினைச்சதும் சிரிப்பு வந்திருச்சு…” என்றவள் அவனது ஒரு கையைப் பிடித்து குளியலறைக்குள் அழைத்து வந்தாள்.

 

“ம்ம்… என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா…”

 

“ச்சேச்சே… அப்படி இல்லைங்க… அவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து நீங்க எழுந்து இந்த அளவுக்கு சீக்கிரமா சரியாகி வந்ததே பெரிய விஷயம்… நான் போயி கிண்டல் பண்ணுவேனா…” படபடத்தவளின் கண்ணில் தெரிந்த கலக்கம் அவனுக்கு ஏனோ சந்தோஷமாய் இருந்தது.

“சரி நீ போ… நான் குளிச்சிட்டு வரேன்…”

 

“என்னது, நீங்க தனியா குளிக்கறதா… அதெல்லாம் வேண்டாம்… நான் தண்ணி ஊத்தறேன்…” அவள் சொல்லவும் கூச்சத்துடன் தயங்கினான்.

 

“வேண்டாம் பவித்ரா, சொன்னா புரிஞ்சுக்க… நீ எப்படி… எனக்கு கூச்சமா இருக்கு…” என்றவனை அதிசயமாய் பார்த்தாள் அவள்.

 

“அதென்னது, நர்ஸ் உங்களுக்கு தண்ணி ஊத்தும்போது வராத கூச்சம், நான் ஊத்தினா மட்டும் வந்திடுமா… நீங்க பேசாம உக்காருங்க…” என்றவள் உரிமையுடன் கை பிடித்து ஸ்டூலில் அமர வைத்தாள். கால் நனையாமல் இருக்க கவரை சுற்றி கட்டியவள் அதற்கும் ஒரு ஸ்டூலை வைத்து அவன் காலை அதன் மேல் தூக்கி வைத்தாள்.

 

தண்ணீரை அவன் உடலில் ஊற்றி சோப்பைக் கையில் எடுக்க, “கொடு… நானே தேச்சுக்கறேன்…” என்று வாங்கிக் கொண்டான். அவன் சோப்பைத் தேய்த்து முடிக்கவும் தண்ணீரை ஊற்ற ஒருவழியாய் குளித்து முடித்தான்.

 

துண்டை எடுத்து அவளே தலையைத் துவட்டத் தொடங்க, சேலை சற்று விலகி அருகாமையில் தெரிந்த அவளது இடுப்பு வளைவில் அவன் மனம் சென்று உட்கார்ந்து கொண்டது. தேகமெங்கும் பரவிய உணர்ச்சி அலைகளில் சிலிர்த்துக் கொண்டு அந்த புதிய அனுபவத்தில் அவஸ்தையாய் உணர்ந்தான்.

 

“ப்ளீஸ் பவி… நானே துவட்டிக்கிறேன்…” என்று அவள் கையைப் பிடித்து டவலை வாங்கிக் கொண்டான்.

 

அவன் உடுத்த வேண்டிய உடைகளை கட்டில் மீது எடுத்து வைத்துவிட்டு, வேறு டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்தவனை வெளியே கூட்டி வந்தவள், “நீங்க டிரஸ் பண்ணிக்கங்க… என் சேலை எல்லாம் நனைஞ்சிருச்சு… ஒரு குளியல் போட்டு வந்திடறேன்…” என்று சென்றாள்.

 

குளித்து வேறு சேலையில் பளிச்சென்று வந்தவளை ஒரு கள்ளப் பார்வை பார்த்தவன், கண்டு கொள்ளாதது போல் திரும்பிக் கொண்டான்.

 

அவனது காலில் கட்டை சரியாக்கி விட்டவள், “நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் கீழே போறேன்…” என்று கூறவும், “நானும் வரேன் பவி…” என்றவன், சட்டைக் கையை மடித்து விட்டுக் கொண்டே மாடிப்படி இறங்க அவனுக்குப் பின்னாலே பவித்ராவும் வந்தாள். படிகளில் மெல்ல இறங்கியவன் சட்டென்று வளைவில் கால் தடுமாறவும், பவித்ரா வேகமாய் தாங்கிக் கொண்டாள்.

 

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ரோஹிணியும், மீனாவும் அதைக் கண்டு அதிர்ந்து நிற்க, அவர்களை கவனிக்காமல், “தேங்க்ஸ் பவித்ரா… கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு…” என்று புன்னகையுடன் சொன்ன மித்ரனின் கையைப் பற்றிக் கொண்டே நடந்து வந்த பவித்ராவைக் கண்டதும் ரோஹிணியின் கண்களில் அனல் மூளத் தொடங்கியது.

வேகமாய் முன்னே வந்து பாகை சோபாவில் எறிந்தவள், “அத்தான்…” என்றாள் உறுமலுடன் கத்திக் கொண்டே. அவள் குரலில் அடிபட்ட வேங்கையின் குரோதம் நிறைந்திருந்தது. அவளை அப்போது எதிர்பார்க்காத மித்ரன் அதிர்ந்து நிற்க, அவனைப் பிடித்திருந்த பவித்ராவின் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தான்.

 

மீனாவின் கண்களிலும் கோபம் தெரிய அன்னையைக் கண்ட மித்ரனின் மனம், “அன்னை தப்பாக நினைத்து விடுவாளோ…” என்று தவிக்கத் தொடங்கியது.

 

சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், “அது, படி கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சுமா…” என்று அன்னையிடம் சொன்னவன்,

 

“ஹாய் ரோஹி… வாட் எ சர்ப்பரைஸ்… சொல்லாம வந்து நிக்கறே… மாமா, அத்தை நல்லாருக்காங்களா…” என்றான் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தைக் குரலில் தேக்கி.

 

பவித்ராவை முறைத்துக் கொண்டே முன்னில் வந்தவள், “என்ன நடக்குது இங்கே… ரெண்டு பேரும் கை கோர்த்து ஆனந்தமா கொஞ்சிட்டு இருக்கீங்களா…” எனவும் அவளது வார்த்தைகளின் கனம் தாங்காமல் பவித்ராவின் கண்கள் சட்டென்று உடைப்பெடுத்துக் கொள்ள கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டோட அவன் கையை விட்டுவிட்டு வேகமாய் அறைக்கு ஓட மித்ரன் அதிர்ந்து நின்றான்.

 

இமையாலே இதயம் கட்டி

இழுத்த காதல் வித்தகன் நீயடா…

மீட்கப்பட வேண்டும்…

வன்முறை செய்யும் உன்

விழிகளிடமிருந்து

விடுபட மறுக்கும் என் இமைகளை…

விடுபடுதலும் உனக்குள்ளே

நிரந்தரமாய் விழுந்திடவே கண்ணா…

இமைப்பீலி வரும்…