Advertisement

திருமலை திருப்பதி சானலில் “கௌசல்யா சுப்ரஜா “, ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்…. MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும் வைத்தாள். குக்கர் விசில் வர பால் அடுப்பை அனைத்தவள் ….

“உமா …..”, காலிங் பெல்லோடு ஒலித்த கணவனின் குரல் கேட்டு அவசரமாய் நிமிர்ந்தாள் உமாமகேஸ்வரி … இதென்ன அதிசயமால்ல இருக்கு…. பாசமலர் படத்துக்கு சமமா., பாசத்தை புழியற அக்கா வீட்டுக்கு போன மனுஷன் ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்டாரே? நிறைய ஆச்சர்யத்துடன்…. தன்னவனை பார்த்துக் கொண்டே… கேட்டை திறந்தாள்….

“என்னங்க இவ்ளோ சீக்கிரம் வந்துடீங்க…?, உங்க அக்கா பொண்ணு பாரதிய ஆடி சீரோட வீட்ல விடணும்னு சொன்னாங்க…. காவேரி கரை புரண்டு ஓடுது… , கூடவே சீதா கல்யாணம் நடக்குது – ன்னு, ஆபீசுக்கு ஒரு வாரத்துக்கு லீவ் சொல்லிட்டு, நல்லா என்ஜாய் பண்ண போறேன்னு போனீங்க…, இப்போ என்னடான்னா…. “,

“ஏய்…. வீட்டுக்குள்ள விட்டுட்டு பேசுடி …”, விட்டா திருப்பி அனுப்பிட்டுதான் மறுவேலை பாப்பா போலிருக்கு”, குறுக்கிட்டு பேசிக்கொண்டே… உள்ளே நுழைந்தான் ஈஸ்வர்.

“ரெண்டு நிமிஷம் இருங்க… வாசல் தெளிச்சிட்டு வர்றேன்….”, பதிலை எதிர் பார்க்காது… வேலையை செய்ய…..

ஈஸ்வர் காலைக்கடன்களை முடித்தவனாய்…. “உமா …. பில்டர் போட்டுட்டியா?, காபி உனக்கும் சேர்த்து கலக்கவா?”, என்று கேட்க….

கோலமிட்டுக்கொண்டே.. ” ரெண்டாவது டிகாஷன் இறங்கினதுக்கப்பறம்…. கலக்குங்க… இல்லனா… அடுத்த ரவுண்டு காபி தண்ணியா இருக்கும்……. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுத்தா என்ன?”….

கேட்டவளுக்கே தெரியும்… கொண்டவனின் அன்பு.. சின்னதாய் சிரிப்பு ஓடியது இதழில்.. ம்ம்ம்… இனி தலை ஊர் கதை சொல்ல போகுது… அதான் காபி கூட கலந்தாச்சுது. இங்கு வண்டி ஏறியத்தில் இருந்து , திரும்பி வீடு வரும் வரை உள்ள அனைத்தையும் மனைவியிடம் சொன்னால் தான் அவனுக்கு திருப்தி. அவனை பொறுத்த வரை அவனே அவள் அவளே அவன்.

கையை துடைத்துக்கொண்டே உள்ளே வந்த உமா , ” சொல்லுங்க.. உங்க ஊர் புராணத்த ,” என்று ஆரம்பிக்க…”அர்ஜெண்ட் கிளயன்ட் மீட்டிங்… அதான் சீக்கிரம் வந்துட்டேன்,….அப்பறம்…சோனி பொண்ணு பெரியவளாயிட்டா….. 5000 ரூபா வச்சு கொடுத்தேன்…. சுப்பி தான் வந்து என்னை பிக்கப் பண்ணினான்… அடுத்த மாசம் பட்டா ரெடி ஆகிடும்னு சொல்ல சொன்னான்….”,என்று வான் தொடர…

“ம்க்கும் ..பேர பாரு… சோனி,சுப்பி..என்ன பெரு இதெல்லாம்… அவங்களுக்கு அழகழகா பேரு இருக்கு அதை விட்டு..செல்ல பேருங்கிற சாக்குல நீங்களும் உங்க செட்டும் பண்ற அலப்பறை இருக்கே … தாங்கல…,”, இவளது நெடு நாள் குடைச்சலை அவனுக்கு தெரியப்படுத்தினாள்.. பின்ன சும்மாவா? போற இடத்தில எல்லாம் தக்கிடி( nick name of ஈஸ்வர் ) பொண்டாட்டி குட்டிம்மா-ன்னு (குட்டியா இருந்ததுனால )அடைமொழியோடு பவனி வர்ற கஷ்டம் அவளுக்கு தான் தெரியும்…

அவளுக்கு பதிலாக., “பழகிடுச்சி, மாத்த முடில, ..”, சிரித்துக்கொண்டே சொன்னவன்…இன்னும் கொஞ்சம் ஊர் நிலவரத்தை சொன்னவன், அலைபேசி அழைக்க… அதில் கவனமாகினான்…

“யாருங்க அது விட்டவிடிகாலைல?, காரணம் அப்போதுதான் மணி 5.30. இன்னும் சென்னையில் இருள் பிரியாத வேளை …

போனை தூக்கிக்கொண்டு அவசரமாய் வெளியே செல்லும் கணவனை… பார்த்து, “என்னடா இது?, வழக்கமா இவர் பேசறத கேட்டு, மத்தவங்க எல்லாம் பீதியாவங்க …. யாரே இவரையே டென்ஷன் பண்றாங்களே?”, யோசனையோடு காத்திருந்தாள்….

இரண்டு நிமிடத்தில் உள்ளே வந்தவன், ” ஹா ஹா ஹா “, தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தான்….

என்னவென்று கேட்ட மனைவியை….”வெயிட்….”, என்க , முதலில் சற்று நேரம் விழித்தவள்… , பிறகு முறைக்க ஆரம்பித்தாள்… பின்ன, சொல்லிட்டு சிரிக்க வேண்டியது தான?

“இரு இரு…”, சற்று ஆசுவாச படுத்தி கொண்டு, ” நான் மங்களூர் exp . ல வந்தேன்ல “,

“‘ஆமா”,

“என்னோட ட்ரெயின்-ல வந்தவர் எழும்பூர் ல இருந்து போன் பண்ணினார். “

“கண்டவர்களுக்கு உங்க நம்பரை என் தர்றீங்க?”, என்றவள் உடனே,”ஐய்யயோ , எதையாவது மிஸ் பண்ணீட்டீங்களா?”

” இல்லடி , கொண்டு வந்துட்டேன்”, என்றான் சிரித்துக் கொண்டே…

“ஏதாவது புரியிறா மாதிரி சொல்லுங்க.. இல்ல…இப்போ நானே காபி போட்டு தர்றேன்…. “, புது விதமாய் மிரட்ட…

“ஓ நோ…. வேற எது வேணா பண்ணு … ஆனா.. காப்பின்னு ஒரு கழனி தண்ணி தருவியே அந்த தண்டனை மட்டும் வேணாம்… ,மீ பாவம். அழுதுருவேன் “, என்றவன் தொடர்ந்து… சிரிப்பினூடே ,

“தூக்க கலகத்துல, தாம்பரம் வந்த டென்ஷன் ல … , அவரோட செருப்பை போட்டுட்டு வந்துட்டேன்”, என்றான்..

“ஓஓ ,”, சிறிது யோசித்தவள், ” சரி அதுக்கு?. அதான் உங்க செருப்பு அவருக்கு இருக்கில்ல?”
“லூசு , வெளில ஷூ ராக்ல போய் பாரு…”,

வெளியே சென்றவள்…. அங்கே , இவன் அணிந்து வந்த செருப்பில், ஒன்று புத்தம் புதியதாய் இருக்க…. இன்னொன்று என்னை இதுக்கு மேல யூஸ் பண்ணிடுவ?, range – இல் இருந்தது…

“ரெண்டு பேருக்கும் உதவாத மாதிரி இப்படி பண்ணிட்டீங்களே ?, சரி போன் எதுக்கு பண்ணினார் ?”

“அவரு புது மாப்பிள்ளை…, லாஸ்ட் வீக் தான் கல்யாணம் ஆச்சு… திண்டுக்கல் ல ஒர்க் பண்றார்…, உன்னை மாதிரி பொண்டாட்டி போல அவருக்கு…”,

“ஏய் “, இடையிட்டவளை கண்டு கொள்ளாது தொடர்ந்தான்…

“அந்த செருப்பு சீதனமா வந்துதாண்டி…., 3000 ரூபாயாம்…தயவு செஞ்சு திருப்பி குடுங்கன்னு , மனுஷன் கால விழாத குறையா கெஞ்சறான்…இல்லன்னா , பொண்டாட்டி மறு வீடு விருந்துக்கு கூட வர மாட்டேன் -னு சொல்லிடுவா-ன்னு , இவனே பயந்துக்கிறான்.. அதான்… அட்ரஸ் அனுப்புங்க… கொரியர் பண்றேன்னு சொன்னேன்”…

“நம்ம வீடு அட்ரஸ்-ம் அனுப்புங்க.. அவரும் உங்க செருப்பை அனுப்பட்டும்”,

“உமா , மனசாட்சியே இல்லாம பேசாதே, free யா கொடுத்தா கூட எவனும் அந்த செருப்பை வாங்க மாட்டான்…. கொரியர் செலவுக்கு கூட அது ஒர்த் இல்ல…”, என்றவன் மனதுள் “ஏன்னா. அது உங்கப்பாவோடது”, இதை தைரியமாக மனைவியிடம் சொல்ல முடியுமா?

நமட்டு சிரிப்புடன், ” டிபன் ரெடி பண்ணு, ஆபீஸ் போகும்போது கொரியர் பண்ணிடறேன் “, சொல்லிவிட்டு குளிக்க சென்றான்..

பத்து மணிக்கு கொரியர் அலுவலகத்தில் ….. நம் ஈஸ்வர்…

” சார் , பார்சல் பிரிச்சி காமிங்க”,

“வாட்?”, “ஏன்? “

“அது ரூல் சார் , அதோ போர்டு ல இருக்கு பாருங்க..”

மனதுக்குள் தலையில் கை வைத்தவன், பார்சலை பிரித்து காட்ட …. இப்போது “ங்கே” என்று விழிப்பது புக்கிங் கிளார்க் முறையானது..

“சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க , மேனேஜர் வந்த உடனே புக் பண்ணிடறேன் “

“அவரு எப்ப வர்றது?, நான் எப்போ ஆபீஸ் போறது?”

“சார் … ஒத்தை செருப்பெல்லாம் கண்டிப்பா அனுப்ப முடியாது, மானேஜர் கிட்ட போய் நாங்க பர்மிசன் வாங்கி தான் அனுப்ப முடியும், நீங்க அதுல எதையும் வச்சு கடத்தலைன்னு என்ன நிச்சயம்?”, என்றாரே பார்க்கலாம் அவர்….

“என்னா…து ……!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!”, அதிர்ச்சியில் திறந்த வாய் மூடவில்லை ஈஸ்வருக்கு… “ஈஸ்வரா… கருப்பு காபி கூட குடிக்காத உன்ன… உன்…ன பாத்து கள்ள கடத்தல் மன்னன் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கறாங்களே ?” மனசு கொதித்தது….. [கருப்பு காபிக்கும் கள்ள கடத்தலுக்கும் என்ன தொடர்புன்னு கேக்க கூடாது…அது ஒரு flow – ல வந்தது எழுதிட்டேன்…]

“என்ன பாத்தா கடத்தல்காரன் மாதிரி இருக்கா?”

டிரஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இந்த திருட்டு முழி பாத்தாதான் சந்தேகமா இருக்கு.. – மனசுக்குள் கவுண்ட்டர் கொடுத்தது சாட்சாத் புக்கிங் கிளார்க் தான்….

“நான் மான நஷ்ட வழக்கு போடுறேன் உங்க மேல?” [ கிழிச்ச …. RTO காரன் கொடுத்த ரசீதை வச்சிக்கிட்டு ரெண்டு மாசம் முன்னால கோர்ட்க்கும் வீட்டுக்கும் அலைஞ்சது …. அதுக்கு உமா-கிட்ட வாங்கின திட்டு ஞாபகம் இருக்கா? – இது ஈஸ்வரன் மனசாட்சி ]

“எங்க உங்க மேனேஜர் ?”

“எஸ்.. நான்தான் மேனேஜர் .. என்ன வேணும் உங்களுக்கு?, என்ன பிரச்சனை ?”, சொன்ன குரல் பரிச்சயமானதாக இருக்க, ஈஸ்வர் திரும்பி அவரை பார்த்ததும் “டேய் .. தக்கிடி .. நீ எங்கடா இங்க?”, என்றவன் ஈஸ்வரின் பள்ளித் தோழன் வேணுகோபால்….

உடலும் உள்ளமும் சதோஷத்தில் மலர, “வேணி … “, என்று கூப்பிட்டு கொண்டே இறுகி அணைத்த தோழனை…. உள்ளே கூப்பிட்டு சென்றார் அந்த மேனேஜர்… [பின்ன வேணி-ன்னு செல்லப் பேரு-ல கூப்பிட்டா ????]

ஒருவாறாக மொத்தமும் விளக்கி… , கலகலத்து …[அட செருப்பு பத்திங்க …. ] , நண்பர்கள்… நம்பர்களாய் அலைபேசியில் பதிந்து கொண்டு… ஈஸ்வர் கிளம்பும்போது.. செருப்பும் கிளம்பியிருந்தது….

இரண்டு நாள் கழித்து , “Cheppal received , thanks “, என்று வந்த குறுஞ்செய்தி படித்து சிரித்து ….உமா என்றான்.. அவளுக்கு காண்பிக்க…. “ஹப்பாடா . ஜோடி சேர்ந்துடுச்சு…”, என்றாள் கலகலவென சிரித்தபடி…

Advertisement