IM 10
கல்பலதிகா, வெறித்துக் கொண்டிருந்தாள்.. பாஸ்கர் வந்து இவளை திட்டி சென்ற, அதே தோழியின் அலுவலகம். இன்னமும் அவளது சுற்றுலா முடியாததால், பூட்டியே கிடந்தது.. ஆனால், லதிகா, தினமும் அங்கு போவதை வழக்கமாக்கி இருந்தாள் .. அவன் தூசியில் எழுதி சென்ற அலைபேசி என்னை கூட இன்னமும் அழிக்காமல், அதை எழுதியபோது கோபத்தில் சிவந்திருந்த அவனின் முகத்தை, சிலும்பிய கேசத்தை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கண்டதும் காதல்”-ல்லாம், சினிமா-ல, கதை-ல தான் வரும். தினம் அரை மணிநேரம் நம்ம கூட வர்ற வண்டியையே எவ்வளவு பாத்து பாத்து வாங்கறோம். வாழ்நாள் மொத்தமும் கூட வர்றவன , ஒரு தடவ பாத்தோடனே பத்திக்குமா?,” – இது கிண்டலாய் அவள் தோழிகளிடம் சொன்னதுதான்.
இந்த ஒரு வருட வழக்கறிஞர் தொழிலில், பொது நல வழக்குகள் தவிர்த்து, அவள் அதிகம் கண்டது, விவாகரத்துக்களே.. அதிலும், தம்பதிகள் ரத்திற்கு சொல்லும் காரணங்கள்….அப்பப்பா… இவளுக்கு காதலிலும், திருமணத்திலும் இருந்த நம்பிக்கையை அசைத்திருந்தனர்.. அதிலும், போன மாதம் இவளிடம் வந்த ஒரு பெண், பத்தொன்பதே வயது ஆனவள், “அக்கா, நேத்தியோட எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகுது… தயவு செய்து எனக்கு அவன் கிட்ட இருந்து விடுதலை வாங்கி குடுத்துடுங்க”, என்று கூற .. இவள் அதிர்ந்து போய் “என்ன விஷயம்?, காரணம் சொல்லுங்க ?”, துருவ….
கல்லூரிக்காதல்… இவள் இரண்டாம் வருடம், இளங்கலை படிக்கும் மாணவி அவனோ முதுகலை முதலாம் வருடம்… இருவரும் படிக்கும் மாணவர்கள்… பேருந்து பயணத்தில் .. கண்கள் பார்க்க .. ஹார்மோன் கோளாறை காதல் என்று கணக்கிட்டு.. லைலா மஜ்னு ஆகினர் இருவரும்… வீட்டில் கண்டித்ததால், வயது ஒன்றை மட்டுமே தகுதி என நினைத்து, பெரும் சாதனை போல்… பதிவுத் திருமணம் செய்து., படிப்பை துறந்து.. பசியும் பட்டினியுமாய், ஒற்றை அறையில் குடித்தனம் செய்து… வாழ்க்கையின் எதார்த்தம் முகத்தில் அறைய…..இரண்டே மாதத்தில் காதல் கசந்து வழிந்தது…
விவாகரத்து வேண்டி நின்ற பெண்ணின் தலையாய கண்டுபிடிப்பு .. கணவன் சம்பாதிப்பது போதவில்லை… என்பது.. முனைவர் பட்டம் பெற்றவர்களே, முட்டி போட்டு BPO -வில் முழி பிதுங்கும் காலத்தில் .. இளங்கலை படித்தவன் சுந்தர் பிச்சை-யாய் சம்பாதிப்பானா என்ன?
அந்த பெண்ணுக்கு தக்க அறிவுரை கூறி, ஒரு வேலையும் தேடி தந்தாள்.. கூடவே, “உங்களுக்காக, அவர் [??], அவங்க வீட்டையெல்லாம் விட்டு வந்து, சம்பளம் கம்மியா இருந்தாலும் பொறுப்பா ஒரு வேலை பார்த்து, குடும்பம் நடத்தறாரா இல்லையா?, காதல் பண்றது பெரிசு இல்ல .. கல்யாணம் பண்ணி தலை நிமிந்து வாழ்ந்து காமிக்கணும்… “, தொடர்ந்து.. “காதல் தோத்துப்போகலாம், கல்யாணம் தோத்து போகக்கூடாது “, என்ற எப்போதோ கேட்ட ஒரு படத்தில் வரும் வசனத்தையும் சேர்த்து கூறினாள் .. என்ன புரிந்ததோ அப்பெண்ணுக்கு ?, [ஜீன்ஸ் போட்ட சகுனி – ங்கிறா மாதிரி, குர்தி போட்ட கூனி -ன்னு நம்மள யோசிச்சிருப்பாளோ?-என்ற சந்தேகம் அடிக்கடி வரும்]
அன்று முதல்… “கண்டதும் காதல்”, என்ற பதம் அவளுக்கு வேம்பானது… அதனால் தான், பாஸ்கருக்கு அவ்விதம் பதிலுரைத்தாள். அவனை மனதிற்கு பிடித்தாலும், அறிவு, “பொறு பொறு”, என்றது.. யோசித்து முடிவெடுக்க, அவகாசம் தேவைப்பட, அவனே அதை கொடுக்கவும் .. மௌனமாய் அழுத மனதை கட்டி… இதோ இத்தனை நாளும் அவனை சுற்றியே அவள் நினைவு..
முடிவெடுத்திருந்தாள் .. அவனுக்காய் எதையும் செய்ய.. இனி அவனை பாராமல் முடியாது என்னும் நிலைக்கு வந்திருந்தாள் .. பதினைந்து நாள் முடிந்து , அவனும் தெளிந்து வர .. காத்திருக்கிறாள்.
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா…..
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
++++++++++++++++++++++++++++++++++++
பாஸ்கர் ஆதித்யா, அவனது வோல்ஸ்வேகனில், ஜனவரி மாத இரவில், சன்னமான மழையில், ரஹ்மானின் மெல்லிசையை ஒலிக்கவிட்டு ரசித்துக் கொண்டு, திருப்பதி சென்று கொண்டிருந்தான். அவனை அவனே சீராய்வு செய்து கொண்டிருந்தான்..
லதிகா இவனை தெரியாதென எள்ளியபோது, அவளிடம் சண்டையிட்டபோது வந்த கோபம் … உணர்த்தியது.. இத்தனை உரிமையாய் யாரிடமும் கோபம் கொண்டதில்லை என்பதை… எப்போதும்.. யாரையும்… தொலைவில் நிறுத்துபவன், உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து பழகியவன் .. பாஸ்கர் ஆதித்யா..
ஆனால், லதிகா ?? ஒரே ஒரு முறை பார்த்தவள்…. தன்னை புரிந்து கொள்ளவேண்டும், தன்னை பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்த்தான். அவ்வாறு இல்லை என்பதைவிட, அதை அவள் உணர்ந்தும் உணராமல் இருப்பது , இவன் கோபத்தை தூண்டியது.. தன்னவள் என்ற எண்ணத்தில் விளைந்த தடங்கலில்லா திட்டுக்கள்… இன்னமும் அவள் நம்பர் தெரியாது.. முகவரி அட்டையை பார்க்கவில்லை..பார்த்தால் , பேசத் தோன்றும் என்பதால், விட்டிருந்தான்..
இதோ, அக்கா தியாவின் திருமண வேலைகள், ஓய்வெடுக்கவொட்டாமல் அவனை பம்பரமாய் சுற்ற வைத்தாலும், மனதின் ஓரம் அவள்… நங்கூரம் பாய்ச்சி நின்றாள்… தனியாய் சில நிமிடங்கள் கிடைத்தாலும், கற்பனையிலும் அவளுடன்தான் பேசினான். சில பிடித்தங்கள், தெரிந்து வருவதில்லை, வந்தபின் போவதில்லை… இது இறைவன் வகுத்த விதி..
ஆயிற்று.. இன்றோடு பதினோரு நாட்கள், …நாளை மாப்பிள்ளை அழைப்பு, மறுதினம் திருமணம்.. லதிகா -வை அழைக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட மனதினை, அடக்கி.. தியாவின் சகோதரனாய் அவன் கடமையை செவ்வனே செய்துகொண்டுள்ளான்…
வீட்டினர் அனைவரும் இரண்டு தினத்திற்கு முன்பே திருப்பதி சென்றிருக்க …. இவன் மீதமுள்ள ஏற்பாடுகளை செய்து, திரும்பி மணமக்கள் வரும்போது அவசியமானவைகளையும் முடித்து திருமணத்திற்கு செல்கிறான்…
=====================================