அத்தியாயம் 04

செவ்வரி உதடுகள் துளித் துளியாக கசந்த காஃபியை உள்ளிழுக்க, தொண்டை வழி இறங்கிய இதமான இளஞ்சூடு நெஞ்சத்தின் சூட்டைத் தணிக்க, மெல்ல உடல் தளர்ந்தாள். மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறந்தது.

“சாஹர், ஜெனி” உரத்த குரலில் ஓங்கி அழைக்க, அடுத்த நொடி, மந்திரவாதியின் அழைப்பிற்கு வரும் பூதம் போல இருவரும் முன் வந்து நின்றனர்.

“என்ன செய்திட்டு இருக்கீங்க? இன்னைக்கு என்னென்ன வேலையிருக்குன்னு தெரியுமா இல்லையா?” விசாரணையாக வினவ, இருவரும் திருதிருவென விழித்தனர்.

அப்போதுதான் இவள் குரலுக்கு பால்கனியில் இருந்து எழுந்து வந்தான் மனோகர். ‘தன்னை அழைக்கவில்லையே செல்வதா? வேண்டாமா?’ யோசனையோடு அவளறை வாசலிலே நின்றுவிட்டான்.

“பதினொன்னு முப்பதுக்கு ஒரு சூட் இருக்கு” சாஹர் முந்திக்கொண்டு பதில் கூற, “அப்போ ஞாபகம் இருக்கு?” சுள்ளென கேட்க, மூச்சு விடாது வாயை மூடிக்கொண்டான்.

இவள் குற்றச்சாட்டின் அதிர்வுகள் தாங்காது, சாஹர், ஜெனி இருவரின் தலையும் தரை நோக்கித் தொங்கியது.

“க்ளையண்ட் வந்து வெய்ட் பண்ணுவாங்க அதுக்கு அப்புறம்தான் நீங்க ஏற்பாடெல்லாம் செய்வீங்களா? இல்லை நான் கூப்பிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் உங்களுக்கு ஸ்பூன் பீட் பண்ணுமா? நீங்க என்ன குழந்தைகளா?” உமிழும் எரிமலையின் அனலாக வார்த்தைகள் தெறித்து விழுந்தன. 

“இல்லை மேம், எடிட்டிங் வொர்க் தான்…” ஜெனி தாழ்ந்த குரலில் ஆரம்பிக்கும் போதே, “நெக்ஸ்ட் வீக் கம்ளீன்ட் செய்ய வேண்டிய வொர்க் இப்போவே முடிச்சிட்டு, இன்னைக்கு வொர்க் எப்போ செய்வ ஜெனி?” நறுக்கென வினவினாள்.

“உஷ்” பேசாதே என சாஹர் ஜாடை காட்ட, புரிந்து கொண்ட ஜெனியும் பசைப்போட்டு உடனடியாக உதடுகளை ஒட்டிக்கொண்டாள்.

மனோ அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இப்போதும் இவனுக்கு உறுத்தவில்லை, இங்கு நிகழும் அக்னித் தீர்த்தவாரி எல்லாம் இவனுக்கும் சேர்ந்துதான் என.

‘இவர்கள் வேலை செய்து கொண்டு தானே இருந்தார்கள்? பின் ஏன் திட்டிக்கொண்டு இருக்கிறாள்? உடனடி வேலையென்றால் அழைத்து ஒருவார்த்தை சொல்வதற்கு என்னவாம்?’ உள்ளம் குமுறினான்.

ஷிவியின் முகத்தில் எந்தவித மாற்றமுமில்லை என்றாலும் கல்லாய் இறுக்கிக் கிடக்கும் அழுத்தமும் இறுக்கமும் குரலில் தெறித்தது. கண்களில் கண்டிப்பு தெள்ளத் தெளிவாக தெரித்தது. கண்கள் இடுக்கி, கருவிழி விரிய, காட்டிய காரப்பார்வை கொஞ்சம் மிரட்சியூட்டியது. வியந்து போய், வாய் பிளந்து வேடிக்கை பார்த்தான் மனோ. 

பத்தடி தூரத்தில் இருந்த போதும் பற்றிக்கொண்டு வந்த உஷ்ணக்காற்று மனோகரைத் தகிக்கச் செய்தன. அவள் முகம் பார்ப்பதையே ஒவ்வாமையாக உணர்ந்தவன், சட்டென அவ்விடம் விட்டுவிலகி வந்தான்.

அதுவரையிலும் மூச்சையே பிடித்து வைத்திருந்த உணர்வில் இருந்தவன்,  வாய் திறந்து காற்றை ஊதி மூச்சை வெளிவிட்டு, வெளிக்காற்றை ஆழமாக உள்ளிழுத்து நிதானமான சுவாசத்திற்கு வந்தான்.

‘ச்சே! என்னப் பொண்ணுடா! பொண்ணாடா?’ வார்த்தையின்றி உள்ளே புழுங்கினான். இவள் போலே இவன் வாழ்வில் யாரையுமே பார்த்ததில்லை.

மனோ மீண்டும் உள்ளே வரும் போது ஸ்டிடுயோ ஹாலின் மையப் பகுதியில் இருந்தனர் சாஹரும் ஜெனியும்.

அன்று பதினொன்று முப்பது மணி அளவில் பிறந்த ஒருமாதமே ஆன சிறு குழந்தை ஒன்றிற்கு புகைப்படப்பிடிப்பு இருக்க, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர் இருவரும். 

ஜெனி சுவரில் செயற்கையான பெரிய பெரிய இலைகளை ஒட்டி வைக்க, மின்னும் மஞ்சள் நிற எல்.ஈ.டி விளக்குகளை ஆங்காங்கு பொருத்தினான் சாஹர். 

தரையில் பிரவுன் நிற பஞ்சு விரிப்பு ஒன்றை வைத்து விட்டு இருவரும் அமர்ந்து விட்டனர். 

வெள்ளை நிற செயற்கை உதிரிப்பூக்களை இருவருமாகச் சோர்ந்து கோத்து, பூங்கொத்தைப் போல் வடிவமைத்துக் கொண்டிருந்தனர். 

கவனமாக அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்தபடி மனோகரும் அவர்களோடு அமர்ந்துவிட்டான்.

அவர்கள் என்னவோ இயல்பு நிலைக்குத் திரும்பி இலகுவாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, இங்கே இவனுக்குத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை.

“ஏங்க அவங்க இப்படியிருக்காங்க? நீங்களாவது உங்க நியாயத்தைப் பேச வேண்டியதானே? ஏன் அமைதியா இருந்தீங்க?” ஆத்திரத்தில் நெஞ்சு விடைக்க, கேட்டவனை இருவரும் விசித்திரமாகப் பார்த்தனர்.

“மனோ அவங்க நம்ம பாஸ்” மெல்லிய குரலில் கிசுகிசுத்த ஜெனி, இவனை அமைதிப்படுத்த முயன்றான்.

அவனோ மேலும் சீறி எழுந்து, “அவங்க பாஸ்ன்னா? நாம எம்பளாயிஸ்தான் அடிமைங்க இல்லையே?” குதித்தான். ‘இவன் குரல் எங்கே ஷிவியின் செவியின் வரை சென்றுவிடுமோ?’ என நினைத்து இருவரும் படபடத்தனர்.

மனோவின் புஜங்களைப் பற்றிய சாஹர், “ஷ்ஷ்… ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும் ப்ரோ” என ஆரம்பிக்க, “அப்புறம் அதுவே பழகிடும் மனோ” என முடித்தாள் ஜெனி.

கூம்பிய மனோவின் முகம் இன்னும் மலராது கிடக்க, “ஷிவன்யாவுக்கு வேலையில அலட்சியமா கவனக்குறைவா இருந்தா சுத்தமா பிடிக்காது. மத்தபடி வேற எதுவும் நம்மளை தப்புச் சொல்ல மாட்டாங்க, நம்ம வேலையை சரியா செய்துட்டா போதும்” எனப் பாடம் எடுத்தாள் ஜெனி.

“இங்க கிடைக்கிற பலன் வேற எங்க போனாலும் நமக்கு கிடைக்காது ப்ரோ. ஸ்டுடியோ க்ளோஸிங் டைம் ஈவினிங் ஆறுமணி பட் எனக்கு நாலு மணிக்கு காலேஜ் போகணும், ஜெனியும் அவங்க பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூப்பிடப் போகணும்னு எங்க வசதிக்கு எங்களுக்காக வொர்கிங் டைம் குறைத்து இருக்காங்க.

அப்படியிருந்தும் சம்பளத்துல எந்தவித குறையும் இல்லை. அதுவும் போக இங்க கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கு, அவங்களும் ஈகோ பார்க்காம சொல்லிக் கொடுக்குறாங்க தெரியுமா?” சாஹர் பரிசு வாங்க வந்த அரசவை புலவனைப் போல் ஷிவியின் புகழாரம் பாடிக் கொண்டிருந்தான்.

மனோவோ எதையும் ஏற்றுக்கொள்ளாது அலட்சியமாக உதட்டைச் சுழிக்க, “விடு சாஹர் போகப்போக மனோவுக்குப் புரியும்” என ஜெனி இடையில் புகுந்து அமைதிக் கொடியைப் பறக்க விட்டாள்.

மனோகர் வளவளத்துக் கொண்டிருக்க, தன் அறையில் இருந்த ஷிவியும் இரண்டு மூன்று முறை இவனை நோட்டமிட்டு பின் கணினியில் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். 

மனோ அவர்களோடு அமர்ந்து அவர்கள் செய்யும் வேலையில் பங்கெடுக்காது, வேடிக்கை பார்ப்பது ஷிவன்யாவிற்கு எரிச்சலூட்டியது.

‘என்னவோ இவர்கள் அனைவரும் இங்கே வேலையாள் போன்றும் அவன் முதலாளியைப் போல் உரிமையாக அல்லவா அமர்ந்திருக்கிறான்?’ மனதில் புழுங்கினாள். 

சரியாக அந்த நேரம் அவள் க்ளையண்ட் வந்துவிட எழுந்து வெளியே வந்த ஷிவி வரவேற்றாள். பச்சிளம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அதன் தாயும் குழந்தையின் பாட்டியுமாகப் பெண்கள் இருவர் வந்திருந்தனர். 

அங்கிருந்த நீண்ட சோஃபாவில் அவர்களை அமர வைத்த ஷிவி தானும் அமர்ந்தாள். குழந்தையைக் கொஞ்சியபடி, இவளுக்குத் தேவையான தகவல்களை விசாரித்துக் கொண்டாள். 

குழந்தை உறங்கும் நேரம், உறங்கினால் எவ்வளவு மணி நேரம் உறங்கும்? எதற்கு உற்சாகமடையும்? பிடித்த நிறம்? இசை? எல்லாம் கேட்டறிந்து கொண்டாள். 

கொஞ்சிப்பேசி, விளையாட்டு காட்டியபடியே தன் கைக்கு வாங்கிக் கொண்ட ஷிவி, குழந்தையோடு பழக ஆரம்பித்தாள். 

ஷிவன்யா அப்படியே தலைகீழாக மாறிப் போயிருந்தாள். கையில் இருக்கும் ரோஜா மொட்டுக் குட்டிக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி இவள் முகம் பார்த்து கை, கால்களை ஆட்டிக்காட்டிச் சிரித்தது. ஷிவிக்கு அந்த நொடி அவள் உள்ளம் கொள்ளைப் போனது. 

ஜெனியும் சாஹரும் அவர்கள் வேலையை முடித்திருந்தனர். இப்போதுதான் மனோவின் பார்வை ஷிவியின் மீது திரும்பி இருந்தது. 

‘முதல் நாளில் இருந்து சற்று நேரம் முன்பு வரை தான் பார்த்தது இவளைத்தானா?’ விழிகள் விரிய வியந்து போனான், நம்பவே முடியவில்லை.

மனோ இமைகளைச் சிமிட்ட மறந்து பார்த்திருந்தான். கண்களின் கனிவும் பரிவும் விரிந்து கிடக்க, முகமோ கையில் இருக்கும் குழந்தைக்குப் போட்டியாக இளகியிருந்தது. மலர்ந்த முகம், விரித்த புன்னகை புது ஆபரணம் அவளுக்குச் சூட்டியதைப் போல் ஷிவியின் அழகைக் கூட்டிக் காட்டியது. 

ஷிவியின் உதடுகளில் முதல் முறையாகப் புன்னகையைக் கண்ட மனோ, காணக் கிடைக்காத அதிசயம் போலக் கண்டு பிரமித்தான். இந்த முகம் இவனுக்குப் புதிதாக தெரிந்தது.

“ஏன்டா நம்ம பாஸ்க்கு சந்திரமுகியாகவும் சாத்விகமாகவும் மாறுகிற ஸ்பிலிட் பெர்சினாலிட்டி நோய் எதுவும் இருக்காடா?” மெல்ல சாஹரிடம் கிசுகிசுத்துக் கேட்டான். சாஹரோ பொங்கி வந்த சிரிப்பை மென்று விழுங்கினான்.

குழந்தை பசியில் சிணுங்கி அழ, அன்னையின் கையில் கொடுத்தவள் மேக்கப் அறை நோக்கிக் கை நீட்டினாள். அதற்குள் தனியாக அனைத்து வசதிகளுடன் பீடிங் ரூம் செட் செய்து வைத்து உள்ளாள். 

குழந்தையோடு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் இங்கு உண்டு. 

ஷிவி இவர்கள் அலங்காரத்தை சரி பார்த்துக் கொண்டிருக்க, சாஹர் சூட்க்கு தேவையான லைட்டிங் செய்து கொண்டிருந்தான். ஜெனியோ அங்கு அமர்ந்திருக்கும் குழந்தையின் பாட்டிக்கு எந்தவிதமான புகைப்படங்கள் எடுக்க இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். 

அனைவருமே ஆளுக்கு ஒரு வேலையில் பரபரப்பாக இருந்தனர். மனோ அப்போதும் வேடிக்கை பார்த்தபடிதான் அமர்ந்து இருந்தான்.

இப்போது வரையிலும் அவரவர்கள் தங்களுடைய வேலையைப் பார்க்கின்றனர் என நினைத்தவன் தனக்கான வேலைக்கு காத்திருந்தான். தன் கையில் கேமராவை கொடுக்கப் போகும் நொடியை ஆவலும் ஆசையுமாக எதிர்பார்த்து இருந்தான். 

பசியாறிய குழந்தை லேசான உறக்கத்திற்குச் சென்றிருந்தது. குழந்தையோடு வெளியே வந்த இளம்பெண், ஷிவியிடம் வந்து குழந்தையை நீட்டினாள்.

உள்ளங்கை விரித்து அந்த இளம் பிஞ்சை தாங்கிக் கொண்டவள், கையில் ஏந்தியிருந்த குழந்தையைப் பட்டுப்போல தடவிக்கொடுத்தாள். இனிமையான தேன் குரலில் தாலாட்டு போலப் பாடல் ஒன்றை ஹம்மிங் செய்தபடி நடைபயின்று கொண்டே இருந்தாள்.