Advertisement

அத்தியாயம் -7

     கேசவன், சுஜி படிக்கும் பள்ளியின் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் அமர்ந்து இருந்தார். விஜய் சொன்னது போலவே அந்த ஆட்டோ திரும்பி அந்த கடையின் முன் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கி வந்தவன் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் தன் வேகத்தையும், பதட்டத்தையும் வெளியில் காட்டாது நின்றான்.

      ஆனால், அது அனுபவசாலியான கேசவன் கண்களில் இருந்து தப்பவில்லை. அறையின் கதவை திறந்து வந்தவன் “இந்தாங்க சார் நீங்க கேட்ட  ஜெராக்ஸ் காபி மொத்தம் 45 ரூபாய் சார்” என்றான்.

       காசை கொடுத்து விட்டு அவர் வெளியேறியதும் அந்த ஆட்டோ டிரைவர் “டேய் இங்க பாரு நமக்கு இந்த ஸ்கூல் பொண்ணுங்களா வேண்ணா… நம்ம பண்ற தொழிலுக்கு எப்பவும்  அநாதை பிள்ளைங்கத்தான் ஒத்து வரும் அது தொலைஞ்சாலும், செத்தாலும் ஒருத்தரும் கண்டுக்க மாட்டாங்க…”

        “இது மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சிது உன் கதையே க்ளோஸ்…  ஆட்டோல வந்த பொண்ணு என்னைய சந்தேகமாவே பாத்துச்சு அதுக்கு போலீஸ் வேற நல்ல பழக்கம் போல”  தன்போக்கில் உளறிக் கொண்டு இருந்தான்.

       “இப்போ எதுக்கு இப்படி புலம்புற அதுலா ஒன்னும் ஆகாது.. இந்த பொண்ண எப்படி மடக்கனும்னு எனக்கு தெரியும் நீ இத நம்ம ஆளுங்க யாருகிட்டையும் சொல்லாமல் இருந்தால் எனக்கு அதுவே போதும்… நான் உனக்கு நைட் போன் பண்றேன் நீ ரொம்ப நேரம் இங்கு இருந்தா யாருக்காவது சந்தேகம் வரும் இப்போ இடத்தை காலி பண்ணு” அவன் சொன்னதுக்கு அரைமனதாக சம்மதித்து வெளியில் வந்தவன் திகைத்து நின்றான்.

        கேசவன் அங்கு நிற்பதை பார்த்து அதிர்ந்தவன் ஆட்டோவின் அருகில் செல்லவும் “இந்தாப்பா என்னைய சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுரு” என்றவர் ஏறி அமர்ந்து கொண்டார்.

      போலீஸ்காரன் என்பதால் அவனால் திருப்பி எதுவும் பேச முடியவில்லை. தன் நிலையை நொந்துகொண்டு வண்டியை எடுத்தான்… ஸ்டேஷன் வாயில் முன்பு வந்ததும் முகத்தில் லேசாக பயம் தெரிய அதை வெளியில் காட்டாது “முப்பத்தி அஞ்சி ரூபாய் சார்” என்றான்.

      “என்ன அவசரம் தம்பி உள்ளே வந்து வாங்கிக்கோ… என்கிட்ட இப்போ சில்ர இல்ல உள்ளே வா, சில்ர மாற்றிதரேன்” என்றவர் உள்ளே சென்று விட்டார்.

       வயிற்றில் பயபந்து உருள ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். கேஸ் ஒன்றை பார்த்துகொண்டு இருந்த விஜயின் அருகில் சென்றவர் “சார்” என்று அழைத்து அவன் கவனத்தை திருப்பினார்.

       நிமிர்ந்து பார்த்தவன் கேசவன் கண்ஜாடை செய்த திசையை பார்த்தான். கையில் இருந்த கோப்பை மூடிவைத்தவன் அந்த ஆட்டோ டிரைவர் அருகில் சென்றான்.

       அவனின் தோள் மீது கைபோட்டு வெகு இயல்பாக “ம்ம அப்புறம் சொல்லு பெருமாளு தொழில் எப்படி போயிட்டு இருக்கு” என்றவனின் கேள்வியில் உயிர் நடுங்க நின்று கொண்டு இருந்தான்.

      ஏற்கனவே பயத்தில் உறைந்து போய் நின்றவன் விஜய் தோள் மீது கை போடவும் முழுவதுமாக உறைந்து போய்விட்டான். “சா…ர்” என்று அவன் குரல் நடுங்கவும் “அட ஆட்டோ தொழில் எப்படி போகுது பெருமாளு நான் அதை தான் கேட்டேன்… நீ அந்த தொழில் மட்டும்தானே பண்ற” என்றான் கிண்டலுடன்.

      “சார் எனக்கு எதுவும் தெரியாது அந்த கிருஷ்ணா இப்படி ஏதாவது வேலை கொடுப்பான் நான் செய்வேன் அவ்வளவுதா சார் வேற அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” பயத்தில் முழுவதுமாக உளறியவனை கண்டு சத்தமாக சிரித்து வைத்தான் விஜய்.

    புரியாமல் முழித்தவன் தோளை இன்னும் இறுக்கி “டேய் சரியான உளறுவாய் உன்கிட்ட போய் வேலையை கொடுத்தான் பாரு அவன் பெரிய முட்டாள்தான்” என்றவன் கேசவன் புறம் திரும்பி “நமக்கு வேலை வைக்காமல் அவனே எல்லாம் உளறிட்டான் கேசவன் இவன் ஆர்சி புக், இன்சூரன்ஸ் காபி எல்லாம் வாங்கி வச்சிகோங்க….. அவன் இங்கே இருக்கட்டும்” வேகமாக கட்டளையிட்டவன் வெளியே கிளம்பி சென்று விட்டான்.

         விஜயின் வண்டி அந்த ஜெராக்ஸ் கடையின் முன்பு போய் நின்றது. கொஞ்ச மாசமாவே பதின்வயது அனாதை பிள்ளைகளின் கடத்தல் நடந்து கொண்டே இருந்தது… இந்த ஜெராக்ஸ் கடைக்காரனுக்கு அதில் சம்மந்தம் இருக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்தான். விஜயை அங்கு பார்த்தவன் ஒன்றும் ஓடாது அங்கு இருந்து தப்பி செல்ல முயற்சிக்க ஒரே தாவலில் அவனை பிடித்து ஷட்டரை மூடிவிட்டு வந்தான்.

      ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து போட்டவன் தன் துப்பாக்கிஉறையை எடுத்து டேபிள் மீது வைத்து இடது காலை தரையில் ஊன்றி, வலது கால் பாதி அந்தரத்தில் தொங்க டேபிளில் அமர்ந்தான்.

      “ம்ம அந்த பெருமாள் சொன்னமாதிரி உண்மைய கடகடன்னு என்கிட்ட ஒப்பிச்சிறு” என்றவன் பக்கத்தில் இருந்த துப்பாக்கியை பார்த்தான்.

      அவன் பார்வை சென்ற இடத்தை அலட்சியமாக பார்த்தவன் “என்னை இழுத்துட்டு வந்ததை இந்த ஊரே வேடிக்கை பார்த்தது… இப்போ என்னை கொலை செஞ்சிங்கான கண்டிப்பா அதுக்கு நீங்க மட்டும்தான் காரணம்னு தெரியவரும், பின்ன உங்க வேலைக்கே ஆபத்து வரலாம்” தோளை குலுக்கி சொன்னவன் கைகளை தட்டியவாறு எழுந்தான்.

       “நாட் பேட்…. அந்த பெருமாள் அளவுக்கு நீ முட்டாள் இல்லை” என்றவன் கேசவனுக்கு கண்காட்டவும் அவர் இரண்டு டீ கோப்பையை டேபிள் மீது வைத்துவிட்டு சென்றார். ஒன்றை தான் எடுத்து கொண்டவன் மற்றொன்றை தனக்கு எதிரில் உள்ளவனிடம் நீட்டினான்.

      சந்தேக பார்வையோடு அதை வாங்கியவன் ஒரு மிடறு குடித்துவிட்டு யோசனையுடன் அமர்ந்து இருந்தான்… “சும்மா பயப்படமா குடி தலைவா விஷம் எதுவும் சேர்க்கல… உனக்கு அந்த அளவுக்கு சீன் எல்லாம் இல்லை” என்றான் விஜய் நக்கலாக.

     டீயை குடித்து முடித்ததும் டேபிளில் வசதியாக உட்கார்ந்தவன் “கேசவன்” என்று கை நீட்டவும் அவர் ஒரு பாட்டில் மாத்திரையை அவன் கையில் வைத்துவிட்டு சென்றார்.

      அதை பார்த்த கிருஷ்ணனின் முகம் வெளுக்க திகைத்து விழித்தான். அருகில் இந்த காட்சியை பார்த்துகொண்டு இருந்த பெருமாள் ‘நமக்கு கொண்டு வந்த டீ போல பாவம் ஜெராக்ஸ் கடைக்காரன் மாட்டிகிட்டான்… எப்பா இந்த ஆளுக்கிட்ட உசார இருக்கனும்’ என்றவன் இனி அரங்கேற போகும் காட்சியை காண ஆவலாக அமர்ந்து கொண்டான்.

      “நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணுமேயில்லை மிஸ்டர்.ஜீனியஸ். நான் இந்த டீயில ஸ்லோ பாயிசன் கலக்கல… இன்னும் இரண்டு நாள் மட்டும் நீங்க உயிரோட இருப்பிங்கனு நினைக்கல..” ‘அலைபாயுதே’ படத்தின் காதல் வசனத்தை உள்ட்டாவாக சொல்லி அந்த கிருஷ்ணனை கதி கலங்க வைத்தான்.

     அவன் அதிர்ந்த முகத்தை திருப்த்தியாக பார்த்தவன் கண் இமைக்கும் நேரத்தில் கிருஷ்ணன் அருகில் வந்து கழுத்தை நெரித்தவன் “யூ ப. . . க் , இடியட் …… போலீஸ் ஒன்னும் முட்டாளும்  இல்லை… கிரிமினல்ஸ் எல்லாம் புத்திசாலியும் இல்லை. உனக்கு தெரிந்த உண்மையை சொன்னால் உயிர் மிஞ்சும் ..இல்ல” என்றவனின் பார்வை அவன் தலையை குறிப்பாக பார்த்து மீண்டது.

     விஜய் சொல்வது எதிரில் இருப்பவனுக்கு புரியாமல் இல்லை.. மேலும் அவனின் இறுகிய தாடையும், சிவந்த கண்களும் இன்னும் பயத்தை அளிக்க மூச்சிக்கு திணறியவாறு “நா… சொல்..றேன் சார்..” கண்கள் மேலே சொருக மயங்கும் நிலையில் நின்று இருந்தவனை உதறி தள்ளவும் கீழே விழுந்தவன் ஒருவாறு இருமி தன்னை சமன் படுத்தி கொண்டான்.

       அவன் முன்பு இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் தன் தாடையில் கைவைத்து புருவம் உயிர்த்தி “ம்ம் சொல்லு” என்றான் கூர்மையாக.

      “எனக்கு எதுவும் முழுமையா தெரியாது சார்…. என் வாட்ஸ்ஸப் நம்பருக்கு ப்ட்டோ மற்றும் கடத்த போற பொண்ணை பற்றிய தகவல் வரும். ஒரு மாசத்துக்குள்ள அந்த பொண்ணை என் வலைக்குள்ள சிக்கவச்சிருவேன். அப்புறோம் தனியா எங்காவது வரசொல்லி எனக்கு ஆர்டர் போட்டவுங்ககிட்ட ஒப்படசிடுவேன்”.

      தன் வாக்குமூலத்தை சொல்லிக்கொண்டு இருந்தவனின் அரஸ்ட்டை பற்றிய விவரம் அங்கு ‘ஜான்’ காதிற்கு சென்றது. ஏற்கனவே, அந்த சிறை கைதி கொலையை விஜய் விசாரிக்கிறான் என்றதும் அவன் ‘பாஸ்’ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

       ‘இப்பொழுது இவன் மாட்டிகொண்டது தெரிந்தால் கண்டிப்பா உயிர் நம் உடம்பில் இருக்காது’ என்று அவன் எண்ணி முடிக்கிறதுக்குள் “படார்” என்று அறைக்கதவு திறந்து புயலென தன் கால்தடம் அழுந்த பதிய உள்ளே வந்தவனை கண்டு கண்கள் தெறிக்க, நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள “பாஸ்” என்று அழைத்தவனின் சத்தம் காற்றோடு கலந்து சென்றது.

     ஜானுக்கு எதிரில் வந்து நின்றவன் “என்ன ஜான் என் தம்பி நம் சார்ந்த ஒவ்வொரு கேஸா துருவி விசாரிச்சிகிட்டு இருக்கான்… நீங்க எல்லாம் இங்கு இருந்து என்ன ——-ங்கிட்டு இருக்கீங்க” வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினான் ஜானின் பாஸ் மற்றும் விஜயின் அண்ணனாகிய பெரிய பிஸினெஸ் மக்னேட் ‘மிஸ்டர். ராகவ் மகேந்திர பூபதி’.

தேவதை வருவாள்….

                     

            

             

 

Advertisement