Advertisement

RD – 18

    தன் கண் முன்னே கிறங்கி போய் நின்று இருந்தவளை பார்த்தவனுக்கு அவளை விட்டு அகலவே மனம் வரவில்லை. விஜய் அவளை விட்டு விலகியதை கூட உணராது ஒருவித மோன நிலையில் சஞ்சரித்து இருந்தாள் அந்த ரட்சகனின் தேவதை.

     வெளியே “விஜி” என்ற ப்ரணவின் சத்தத்தை கேட்டதும் மயக்கத்தில் இருந்து முழுமையாக வெளியேவந்தாள்.

       தன் முன்னே கண்களில் குறும்பு வழிய, இதழ் விரித்து புன்னைகை செய்து கொண்டு இருந்தவனை கண்டவள் மறுபடியும் மயங்கி போய் நின்றாள். அவளின் மயக்கத்தை உணர்ந்து கொண்டவன் முகத்தில் கர்வம் தோன்ற தன் மனையாளின் இடையை இன்னும் சற்று அழுத்தி பிடித்தான்.

       கனவு உலகத்தில் இருந்து மீண்டவள் தன் கணவனின் சிரிப்புக்கு உண்டான அர்த்தத்தை புரிந்து கொண்டவள் கோபம் போல் முறைத்து பார்த்தாள்.

       அவளின் முறைப்பை கண்டவன் ‘பார்டா’ என்பது போல் புருவம் உயர்த்த…. அதில் இதழ்கள் தானாக விறிய தனது வலது கையால் தன் கண்ணாளனின் கன்னத்தை தட்டியவள் அவன் மார்போடு கண்கள் மூடி சாய்ந்து கொண்டாள்.

       கார்த்திகாவின் செயலில் இன்னும் புன்னைகை விறிய அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான் அந்த காவலன்.

       சிறிது நேரம் கழித்து மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்க மனையாளை தன்னை விட்டு பிரித்தவன் அவளின் இதழில் அழுந்த முத்தம்மிட்டு “வரேன்” என்றவன் அழுத்தமான காலடி ஓசையுடன் வெளியே கிளம்பி விட்டான்.

      அதன் பின் அவசரகதியில் கிளம்பியவள் ப்ரணவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு, தானும் உண்டவள் அவனையும் அழைத்து கொண்டு கிளம்பி விட்டாள்.

      கல்லூரியில் இறங்கியதும் தன் கணவனிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்து இருப்பதை  அறிந்து எடுத்து பார்த்தாள்.

      ‘இன்று மாலை ஆறு மணிக்கு ப்ரணவுடன் கிளம்பி நில்’ என்ற செய்தியை அனுப்பி இருந்தான். ‘எங்கே கூட்டிட்டு போக போறான்’ என்ற ஆர்வம் பிறக்க கேட்கலாமா என யோசித்தாள் பின் அதை கைவிட்டவள் ‘ஓகே’ என சம்மதமாக செய்தி அனுப்பி வைத்தாள்.

      அடுத்த சில மணி நேரத்தில் திரும்ப மெசேஜ் வர…. அதை பார்த்தவளுக்கு மூச்சு அடைத்து, முகம் குப்பென சிவந்து விட்டது  ‘சரியான ரௌடி’ என்று வாயில் முணுமுணுத்தாள்.

      “என் விழிகள் தீண்டிய இடங்களை  விரல்கள் தீண்ட நேரம் வந்து விட்டது” என்ற அவனின் குறுஞ்செய்தியை இதழ் சிரிப்புடன் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்தாள்.

       கார்த்திகாவின் இந்த செயலை அந்த பக்கம் இருந்து அறிந்து வைத்து இருந்தவன் “ஒய் கிளாஸ்க்கு போடி” என்று அடுத்த மெசேஜ் அனுப்பினான்.

      அதில் உதடு சுளித்தவள் “போடா ரௌடி” என்று பதிலுக்கு அனுப்பி வைத்தவள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு முகம் முழுவதும் புன்னைகையுடன் வகுப்பை நோக்கி சென்றாள்.

********

            “சார் எனக்கு எதுவும் தெரியாது சார். வந்தவ பேரு கூட தெரியாது சார்.” என்று ஆட்டோக்கார பெருமாள் சொன்னான்.

       இருவரையும் ஸ்டேஷன் அருகில் உள்ள குடனுக்கு மாற்றிய பின் அங்கு வந்து இருந்தான் விஜய். வழக்கம் போல் அமைதியாக இருவர் எதிரில் அமர்ந்து இருந்து அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்.

     “உங்க இரண்டு பேரையும் கொலை செய்ய வந்தவன் ஏன் செய்யாம திரும்ப போனான்?” தன் மௌனத்தை விடுவித்து கேட்டான்.

     ‘உங்களுக்கு அதில் ரொம்ப வருத்தம் போல’ என்பது போல் பெருமாள் பார்க்க…. அவனின் மைன்ட் வாய்ஸை அறிந்தவன் உதட்டில் புன்னைகை ஒட்டிக்கொண்டது.

     “எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது சார். அவன் அங்கு இருந்தது ஒரு ஐந்து நிமிடம் இருக்கும். ஒரு வார்த்தை அவன் பேசவில்லை முகத்துல துணி கெட்டி இருந்ததால அவனுடைய முகத்த பார்க்க முடியல…. நான் இப்போ சொன்னது எல்லாமே நீங்க ஏற்கனவே அறிந்து வைத்ததாக இருக்கும்.” படபடவென பேசினான் கிருஷ்ணன்.

      பின் ஏதோ நினைவு வந்தவனாக “ஆஆ சார் அவனுக்கு போன்ல ஏதோ மெசேஜ் சவுண்ட் வந்தது அத பார்த்த உடனே அவன் கிளம்பி போய்ட்டான்.” கிருஷ்ணன் சொன்னதும் அங்கு இருந்து புயலென கிளம்பி விட்டான்.

      ஸ்டேஷனில் தீவிரமாக ஏதோ யோசித்து கொண்டு இருந்தவனை டிஜிபி அழைப்பு விஜயின் யோசனையை தடை செய்தது. அதை எடுத்து பேசியவன் அவரை நேரில் சந்திக்க கேசவனுடன் சென்றான்.

        “இன்னும் எவ்ளோ நாள் இந்த கேஸ இழுத்தடிக்க போற விஜய்?. கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆயிற்று. உன்கிட்ட இருந்து எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லை…..எப்போ கேஸ் முடிச்சு என் கையில ஒப்படைக்க போற?. ஹையர் ஆபீஸ்ல இருந்து பிரஷர் வரும் முன்னாடி சீக்கிரம் முடிக்கிற வழிய பாரு” என்றார் டிஜிபி.

        “சீக்கிரம் இந்த கேஸ் முடிச்சிறேன் சார்” என்று மட்டும் சொன்னவன் வெளியே சென்று விட்டான்.

        அவன் சென்ற திசையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தவர் ஒரு பெருமூச்சோடு தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

         ஸ்டேஷனில் ‘சிறை கைதி’ ரிபோர்ட்டை பார்த்து கொண்டு இருந்தவனை கார்த்திகாவின் மெசேஜ் அழைத்தது. மாலை ஒரு இடத்திற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று சொன்னது நினைவு வந்தது. கார்த்திகாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்தவன் கண்ணில் குட்டி கண்ணனாக  வீட்டில் ப்ரணவை அவனது அம்மா தயார் செய்து கொண்டு இருப்பதை பார்த்தபடியே நின்று விட்டான்.

        “ஐய்யோ என் செல்லம் கிளம்பிட்டிங்க போல?…. ஒரு டென் மினிட்ஸ் கண்ணா சித்தி உடனே கிளம்பி வந்துரேன்” என்றவள் ப்ரணவை அணைத்து முத்தம் ஒன்று பதித்து விட்டு  கனவில் நின்று கொண்டு இருந்தவனை இழுத்தபடி தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.

        உள்ளே சென்றவள் “எதுக்கு  ப்ரணவை அப்படி பார்த்திங்க?”  இருவருக்கும் உண்டான உடைகளை எடுத்து வைத்தபடி கேட்டு கொண்டு  இருந்தாள் கார்த்திகா.

      “இப்போலா அவன்கிட்ட என்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியல கார்த்தி. இப்போ நான் கையில எடுத்திருக்க கேஸ் என்னை ரொம்ப அப்நார்மல் ஆக்குது….” ஒருவித இயலாமையுடன் தலையில் கை வைத்து கட்டிலில் அமர்ந்து விட்டான்.

       துணிகளை எடுத்து கொண்டு இருந்தவள் அவனின் வருத்தம் கண்டு அருகில் வந்து அமர்ந்து அவனது கையை எடுத்து தன் கைக்குள் அடக்கி வைத்து கொண்டாள்.

       “நான் பார்த்தது வரை நீங்க இப்படி சோர்ந்து போய் இருப்பது இது தான் முதல் முறை. நீங்க இப்போ ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கீங்க…. இந்த நேரத்துல எதுவும் யோசிக்க முடியாது சோ பீ ரிலாக்ஸ் டிசிபி சார்” அவள் சொன்னது எதுவும் அவன் காதில் ஏறியது போல் தெரியவில்லை. கண்களை மூடியவாரே அமர்ந்து இருந்தான்.

      “டிசிபி சார் பொதுவா போலீஸ் எல்லாம் ரொம்ப விறைப்பா, சிரிக்க கூட காசு கேட்ப்பாங்கனு சொல்லுவாங்களே அது மாதிரி இருப்பாங்கன்னு பார்த்து இருக்கேன். ஆனா, நீங்க என்னடான ஒரு விறைப்பும் கிடையாது, ‘ஒன்னும் கிடையாது’! ….. பொண்டாட்டி என் முன்னாடி சும்மா கெத்தா இருக்க வேண்டாம்?” அந்த ஒன்னும் இல்லை என்பதை ஓர கண்ணால் அவனை பார்த்தவாரே அழுத்தி சொன்னாள் அவனின் மனையாள்.

        கார்த்திகாவின் இந்த முயற்சி வெற்றி அடைய தலை குனிந்து இருந்தவன் இதழ் ஓரம் சிரிப்பு தவழ்ந்து கொண்டு இருந்தது. சட்டென நிமிர்ந்து நொடி பொழுதில் கார்த்திகாவை கட்டிலில் சாய்த்தவன் அவள் மீது கொடியென படர்ந்து விட்டான்.

        சோகத்தில் இருந்தவன் திடீரென்று ரொமான்ஸ்க்கு மாறுவான் என்று அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவனின் தாக்குதலில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தவள் பின் அவனிடம் இருந்து விடுபட போராடினாள். அவளின் முயற்சியை அறிந்தவன் தனது கால்களால் அவளது கால்களை இறும்பென சிறை செய்து விட்டான்.

        மேலும் திமிறியவளை அடக்கியவன் அவளின் உதட்டை அளந்தவாறு “இந்த சின்ன உதடு அப்படியே பட்டாசு மாதிரி பட படனு பொறிந்து தள்ளுது பம்ளிமோஸ்” அவளை கண்களால் அங்கம அங்கமாக ரசித்து கொண்டு இருந்தான்.

        அவனின் பார்வை ஒருவித பதட்டம் தர இனம் புரியாத உணர்ச்சியில் தத்தளித்து கொண்டு இருந்தாள். “உங்கள நார்மல் மோடுக்கு கொண்டு வர தான் நான் அப்படி பேசினேன்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

        “ஆமா, என்ன சொன்ன? எனக்கு ‘ஒன்னுமே………….’” என்று கேள்வி கேட்டவாறு இன்னும் அவளை இறுக்கினான்.

          அவனின் கேள்வியில் அதிர்ந்து போனவள் “இல்லை நான் அப்படி எதுவும் சொல்லல?” கண்களை உருட்டி தலையை இருபுறமும் ஆட்டினாள்.

            “எல்லா நேரமும் பொறிந்து தள்ளுற வாய்…. நான் பக்கத்துல வந்தா மட்டும் ஏண்டி தந்தி அடிக்குது?” உதட்டை பிடித்து இழுத்தவாறு கேட்டான்.

            வலியில் முகம் சுருக்கியவள்  “ஸ்ஸ் ஆ எனக்கு தெரியல டிசிபி சார்” என்றவள் அவனின் கையை படக்கென தட்டி விட்டாள்.

“ஆமா, அது என்ன? டிசிபி சார். இப்போ உனக்கு நான் புருசன்டி சோ அழகா மாமானு அழைக்கனும் சரியா செல்லம்” என்றவன் கன்னம் வலிக்க அவளை கடித்து வைத்தான்.

         “ம்ச்சு சரியான ராட்சசன்  விஜய் நீங்க” என்றவள் இப்பொழுது பழைய நிலை திரும்பி இருந்தாள்.

         “என்னால மாமா, நாதா, அத்தான் அப்படியெல்லாம் கூப்பிட முடியாது. நான் விஜய்ன்னு தான் சொல்லுவேன்” என்றாள் புருவம் உயர்த்தி.    

         அவளின் செயலில் மயங்கியவன் ‘முடியாதுன்னு’ சொன்ன வாய்க்கு அவனது பாணியில் தண்டனை கொடுத்தான்.

           இதழ் முத்தத்தில் திளைத்து இருந்தவன் பின் அவளின் வலது  கழுத்தின் ஓரம் முகம் புதைத்து “இந்த மச்சம்………..” என்று ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்ன வார்த்தையில் மோனமயக்கத்தில் இருந்து எழுந்தவள் அவனை தள்ளிவிட்டு  தனது மாற்று உடையை எடுத்துகொண்டு பக்கத்தில் உள்ள அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

          அவள் வெளியே ஓடி வரும் வரை அவனின் சிரிப்பு சத்தம் காதில் கேட்டு கொண்டே இருந்தது. கதவை மூடி தாழ் போட்டவள் நெஞ்சு படபடக்க கட்டிலில் போய் முகம் சிவக்க அமர்ந்து விட்டாள். ‘சீ பொறுக்கி எப்படியெல்லாம் பேசுறான்…… ராஸ்கல்’ என்று நினைத்தவள் கண்ணாடி முன்பு சென்று நின்றாள். தனது வலது கழுத்தின் கீழ் கடுகு போல் இருந்த மச்சத்தை தொட்டு பார்த்தவளுக்கு அவன் கூறிய சொல் நினைவு வர வெட்கத்தில் முகம் அந்திவானம் ஆயிற்று.

     ஒருவழியாக மூவரும் கிளம்பி கமிஷ்னர் ‘குரு’ வீட்டிற்கு  சென்றனர். அவர் வீட்டின் முன்பு காரை நிறுத்தியவன் ‘யாரு வீடு’ என்ற மனையாளின் பதிலுக்கு “அப்பாவோட க்ளோஸ் ப்ரண்ட் அண்ட் என்னோட சீனியர் போலீஸ்” என்றான்.

     உள்ளே வந்தவர்களை வரவேற்ற குரு தனது மனைவி பார்வதியை அறிமுகம் செய்து வைத்தார். “இந்த ராஸ்கலுக்கு இப்பவாது உன்னை இங்க கூட்டிட்டு வர தோணுச்சே சரியான சோம்பேறி” என்றார் குரு.

      அவரின் பேச்சை தூசு போல தட்டி விட்டவன் பார்வதி பின்னோடு சமையல் அறை நோக்கி சென்று விட்டான்.

       அவனின் செய்கையை ஆச்சிர்யமாக பார்த்தவளை கண்டவர் “என்னமா மதிக்காம போறான்னு பார்க்குறியா?” என்றார் சிரிப்புடன்.

        ‘ஆமாம்’ என்று தலை ஆட்டினாள். “அவன் அப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவன் அண்ணன் பற்றி குறை சொல்லிட்டேன் அதுக்கு இப்படி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கான்” என்றார் ஆற்றாமையுடன்.

         ‘என்ன பெரிய அத்தான் பற்றி குறை சொல்லும் ஒரு ஜீவனும் இந்த குடும்பத்தில் இருக்கிறாரா?’ என்று இன்னும் ஆச்சிர்யமாக குருவை பார்த்தாள் நம் நாயகி.

தேவதை வருவாள்……….  

 

Advertisement