Advertisement

RD- 14

      திருமண நாள் குறித்ததும் இரு வீட்டார் தரப்பிலும்  வேலைகள் எல்லாம் மடமடவென நடைபெற்றது. ராகவ் அன்று பெண் வீட்டிற்கு வராதது அமிர்தம்மாளை ரொம்பவே பாதித்துவிட்டது.

     அவன் வீட்டிற்குள் வந்தாலே தன் அறையில் முடங்கி கொள்ளவது, தோட்டத்தில் உலாவ செல்வது என்று ஒதுங்கியே இருந்தார். இது ராகவின் கருத்தில் பதிய கண்டிப்பாக வாய்ப்பில்லை….. அவன்தான் வீட்டில் இருப்பவரை ஒரு பொருளாககூட மதித்து பார்த்தது இல்லையே?!….

      ஆனால், விஜயின் கண்ணில் இருந்து தன் அன்னையின் ஒதுக்கம் தப்பவில்லை. “ஏன்மா? நீயும் அண்ணன்கிட்ட இப்படி முகம் திருப்புற….. புது பழக்கமா இருக்கு” ஒரு கைதியை விசாரிப்பது போல் தன் அன்னையிடம் விசாரித்தான் அந்த காவலன்.

       அவன் கேள்வியில் கோபம் வர “ஆமாடா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் பாரு…. அதனால என்னைய கைதிய விசாரிக்கிற மாதிரி நடத்து”

        “இப்போ எதுக்கு நீ ரொம்ப டென்ஷன் ஆகுற. நீயும் ஒதுங்கி போனா அண்ணன் சுத்தமா நம்மள விட்டு தூரம் போயிருவான். பின், ப்ரணவ் நிலைமை என்னாகுறது?”

         “வீட்டுக்கு மூத்தவனா, உனக்கு அண்ணனாக அவன் கண்டிப்பா விஷேசத்திற்கு வந்து இருக்கனும். இந்த ஒரு விஷயத்தில் என்னை எதுவும் சொல்லாதே விஜய்….. என்னால் ராகவ் செய்ததை தாங்க முடியவில்லை. நானும் அவனின் கோபம், இறுக்கம் குறைய வேண்டும் என வேண்டாத கடவுள் இல்லை. சொல்லப்போனால் உன்னை விட அவனுக்கு தான் நானும், உன் அப்பாவும் எங்கள் வாழ்வில் முதன்மை கொடுத்து இருந்தோம்……….” என்றவரால் அதன் பின் பேச முடியவில்லை…

      வேதனையில் தொண்டை அடைக்க கலங்கி நின்றவரை ஓடி போய் தாங்கியவன் தன் தோளில் சாய்த்து கொண்டான்.

       “எனக்கு புரியுதுமா கண்டிப்பா அண்ணன் மாறுவான் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அவன் எப்படி நடந்து கொண்டாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அவனிடம் பேசாது உனக்கு இருக்க முடியாது… அப்புறம் எதுக்கு இந்த சென்டிமென்ட் கண்ணீர்?” குறும்புடன் தன் அன்னையிடம் வினவினான்.

      அவனின் பேச்சின் உண்மை அறிந்தவர் பொய் கோபத்துடன் “போடா, போலீஸ்காரன் உன்கிட்ட போய் என் கஷ்டத்த சொன்னேன் பாரு? என்னைய சொல்லனும்… இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் என் மருமக வந்து எனக்கு தோள் கொடுப்பாடா” என்றார் முகம் முழுவதும் பெருமையுடன்.

      தன் அன்னையின் பேச்சில் பலமாக சிரித்தவன் “ம்மா அவ நீ நினைக்கிற மாதிரி சாந்த சொருபிணி எல்லாம் கிடையாது. சிவகாசில செய்ற பட்டாசு உன் மருமககிட்ட தோத்து போயிரும்..! அம்மணி அப்படி ஒரு சவுண்ட் பார்டி” என்றான் சிரிப்பை நிறுத்தாமலே.

    “சீ என்னடா பேச்சு இது வீட்டுக்கு வர மருமகள போய்  ‘சவுண்ட் பார்டி’னு சொல்லுற ….” என்று முகம் சுருக்கியனார். பின் நினைவு வந்தவராக,

      “ஆமாடா, உன்கிட்ட ஒரு தரம் கார்த்திகா போட்டோ காட்டினே….. ஆனால், நீயும் அவளும் ரொம்ப நாள் பழக்கம் போல பொண்ணு வீட்ல வைச்சி நடந்துகிட்டிங்க.. நம்ம ப்ரணவ் குட்டிக்கு கூட தெரிஞ்சிருக்கு எப்படி டா?”

       “ஹ்ம்ம் யப்பா,! இப்பவாது உனக்கு இதை கேட்கணும் அப்படின்னு தோணுச்சே” என்றவன் அவளை அன்று மாலில் சந்தித்ததில் இருந்து அவள் தோழி கொலை விஷயம் வரை சொல்லி முடித்தான்.

       “கண்ணா, அந்த பொண்ணுக்கு  நீ சொல்ற மாதிரி கோபம் அதிகமா இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போகுமா?” கவலையுடன் கேட்ட தன் அன்னையை முறைத்து பார்த்தான் விஜய்.  

      அவனின் முறைப்பை கண்டவர் “டேய் நீ ரொம்ப நல்லவன் மாதிரி வேசம் போடாதே உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும்… நீ ஒன்னும் அந்த அளவுக்கு பொறுமைசாலி கிடையாது உன்  கோபத்தை நான் அறிவேன் கண்ணா” என்றார் கிண்டலாக.

       இதற்கு மேல் போனால்  அன்னை தன்னை ஒரு வழி படுத்திவிடுவார் என்று அறிந்தவன் ஸ்டேஷன் சென்றுவிட்டான்.

      ஆட்டோகாரனையும், ஜெராக்ஸ் கடைகாரனையும் அடைத்து

வைத்து இருந்த இடத்திற்கு கேசவனுடன் சென்றவன் அமைதியாக அவர்களை கட்டி வைத்து இருந்த இடத்தின் முன் கால் மேல் கால் போட்டு அவர்கள் இருவரையும் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

         “என்னைய விட்ரு சார் நான் இனிமே எந்த பொண்ணையும் கடத்திட்டு வரமாட்டேன் சார்…. எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல” ஆட்டோகாரன் கெஞ்சி கொண்டு இருந்தான்.

       “டேய் நீ வயசு பொண்ணுங்கள கடத்தி இருக்க இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா உனக்கு? கடைசி வர உனக்கு ஜெயில் தான் ராஸ்கல்” கேசவன் கூறியதை கேட்டதும் இருவர்  முகமும் வெளுத்து பயம் அப்பி கொண்டது.

     பெருமூச்சு  ஒன்றை வெளியிட்டவன் எழுந்து தன் பான்ட் பாக்கெட்டில் கை நுழைத்து நின்றவன் மெதுவாக அங்கும் இங்கும் நடந்தான்.

      “அது எப்படி உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாமல் இருக்கும்? யாரு என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு செய்ய சின்ன பிள்ளைங்களா நீங்க?” என்றவன் கிருஷ்ணனின் கன்னத்தில் அறைந்தான்.

     எதிர் பார்க்காமல் கிடைத்த அடியில் திகைத்து போய் இருந்தவன் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது. அவனுக்கு விழுந்த அடியில் பயத்தில் உறைந்து போய் இருந்தான் பெருமாள்.

      “அடுத்த இரண்டு நாள் கழித்து வருவேன் உண்மைய சொல்லல?” என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.

      வண்டியை ஒட்டி கொண்டு இருந்த கேசவனிடம் “என்ன கேசவா உங்க மூளைக்குள்ள ஏதோ ஒன்னு ஓடிக்கிட்டு இருக்கு போல?” என்று  பார்வையை ரோட்டின் ஓரம் பதித்தவாறு கேட்டான்.

      “அந்த இரண்டு பசங்களுக்கு எதுவும் தெரியாது அப்படின்னு உங்களுக்கு தெரியும் அதுக்கு அப்புறமும் ஏன் அவங்களை அடைச்சி வச்சி….. இரண்டு பேருக்கு தெரியாம கண்காணிப்பு கேமரா வேறு பொருத்தி வச்சி இருக்கீங்க” என்றார்.

       “கேசவன் நமக்கு இந்த கேஸில் ஒரு குழுவும் கிடைக்க வில்லை… கிடைத்த ஒரே துருப்பு சீட்டு இவங்க இரண்டு பேரு மட்டும் தான். கண்டிப்பா இவங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு அந்த பெரிய புள்ளி வரும்…” அறைகுறையாக சொல்லி முடித்தவன் மனதில் என்ன திட்டம் ஓடுகிறது என்பதை கேசவனால் சுத்தமாக கணிக்க முடியவில்லை.

     ஆனால், விஜய் தன் திட்டத்தில் எந்தவித குழப்பமும் இன்றி மிக தெளிவாக இருந்தான்.

       விஜயின் வேலை ஒரு புறம் போய் கொண்டு இருக்க இதற்கு இடையில் கல்யாண நாளும் நெருங்கு வந்தது.  திருமணத்திற்கு முந்தின நாள் இரவு வீட்டில் வேலையாட்கள், சொந்த பந்தம் என்று நிறைந்து இருக்க விஜயின்  அன்னை ஒருபுறம் ஓடியாடி வேலையை கவனிக்க, ப்ரணவ் ஒருபுறம் விளையாண்டு கொண்டு இருக்க…. அன்று வீடே கலகலப்பாக இருந்தது.

       தன் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக ராகவின் அறைக்கு சென்றான். தன் கணினியில் மூழ்கி இருந்தவன் ‘யாரோ, வரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்தான்.

      உடலுடன் இறுகிய டீ-ஷர்ட்  மற்றும் ட்ரக் சூட்டில் இருந்தவன் உடல் கிரக்கே வீரன் போல் கட்டு மஸ்துடன் இருந்தது.  வெற்று பார்வை ஒன்றை பார்த்தவன் “என்ன?” என்றான் எங்கோ வெறித்தவாறு.

        அவனின் வெறித்த பார்வை மனதை வருத்த தொண்டையை செருமி கொண்டு “நாளைக்கு நம்ம வீட்டில நடக்குற விசேஷம் உனக்கு தெரியும் நீ கண்டிப்பா வீட்டில இருக்கனும் இல்லைனா அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க அண்ணா”

    “என்ன எனக்கு நீ ஆர்டர் போடுறியா?” என்றான் ராகவ் கோபமாக.

    “அது உன் பார்வையை பொருத்து இருக்கு அண்ணா. இந்த மாதிரி ஒரு நிலைமை உலகத்தில் எந்த தம்பிக்கும் வர கூடாது”  இறுகிபோய் சொன்னான்.

    “ஹ்ம்ம் தம்பி……..” இகழ்ச்சியாக சொல்லி நகைத்தவன் அவன் முன் வந்து நின்று “என் சித்தப்பா பையன் என்கிற உறவு முறையில் உன் கல்யாணத்திற்கு வருகிறேன்” அந்த ‘சித்தப்பா பையன்’ என்பதில் அழுத்தம் கூட்டி உச்சரித்தான்.

     “ஒரே வார்த்தையில் சொல்லிட்ட அண்ணா உன் மனதில் எனக்கு இருக்கும் இடத்தை… ஆனால், எனக்கு அந்த வரம் இல்லை உன்னை மாதிரி மனதில் இருப்பதை சொல்லுவதற்கு, ஏனா உண்மையா பாசம் வச்சி தொலைச்சிட்டேன்” என்றான் ராகவின் கண்களை நோக்கி.

       “உன்னுடைய இந்த வசனத்தை கேட்க எனக்கு நேரம் இல்லை. நாளைக்கு உன் கல்யாணத்திற்கு வரணும் அவ்ளோதானே?! வந்துரேன் இப்போ நீ கிளம்பலாம்” என்றவன் அதற்கு பின் அங்கு ஒருத்தன் இருப்பதை கண்டுக்காது தன் வேலையில் மூழ்கி போனான்.

        அவனை சிறிது நொடி வெறித்து பார்த்தவன் பின் வேகமாக வெளியே சென்று விட்டான்.

         அவன் வெளியேறியதும் நிமிர்ந்தவன் விஜய் நின்று தன்னுடன் பேசிய கொண்டு இருந்த  இடத்தை கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

      ‘நான் தான் விஜய் உன்னை மாதிரி நல்லவனாக வாழ வரம் வாங்கி வரவில்லை….. நீ  லட்சுமணனாக தான் இருக்கிறாய் விஜய் ஆனால், என் மனம் கர்ணனாக உள்ளது… அந்த அளவிற்கு உன் மீது எனக்கு வெறுப்பு கொட்டி கிடக்கிறது’ ஒரு கசந்த முறுவல் அவன் இதழிலில் தோன்றியது……

         மறுநாள் காலை ஆட்கள் பேச்சு குரலில் எழுந்தவன் தன் அருகில் ஒரு புது உடை மற்றும் காற்றில் தன் உடலை அசைத்து கொண்டு இருந்த ஒரு சின்ன பேப்பர் இருப்பதை கண்டான்.

          ‘உன் சித்தப்பா மகனின் அன்பளிப்பு’ என்று இருந்த அந்த வாக்கியத்தை படித்தவன் உதட்டில் புன்னகை தவழ்ந்தது ‘சரியான கேடி பயல்’ என்று விஜயை நினைத்தவன் அரைமணி நேரத்தில்   ரெடியாகி கீழே வந்தான்.

         வீட்டின் வேலையால், எல்லாரும் மண்டபம் போய்விட்டார்கள் என்றதும் தன் காரை எடுத்துகொண்டு மண்டபம் நோக்கி பறந்தான்.

        மண்டபத்தில் சொந்தபந்தங்கள் போக, இருவரின் வேலை தொடர்புடைய பெரிய புள்ளி அனைவரும் வந்து இருந்தனர். கார்த்திகாவின் குடும்பம் வந்து இருக்கிற பெரிய மனிதர்களை கண்டு விழி பிதுங்கி நின்று இருந்தனர்.

        “டேய் மாப்ளை வசதியை பற்றி தெரியும்தான் ஆனால், இந்த அளவிற்கு நான் எதிர்பார்க்கவில்லை மதன்… நம்ம சீர் வரிசை எல்லாம் இவங்க வசதிக்கு பத்துமாடா?” கவலையுடன் தன் மகனிடம் சொல்லி கொண்டு இருந்தார் கார்த்திகாவின் அன்னை.

           “ச்சு ம்மா, நம்மளும் வசதியில குறைந்தவங்க இல்லை…. அவங்களுக்கு சம்மமாக தான் சீர்வரிசை செய்து இருக்கிறோம் நீ கண்டதையும் போட்டு மனதை குழப்பிக்காதே?” மதனின் வார்த்தையில் ஒரளவு சம்மாதனம் அடைந்தவர் மணமகள் அறை நோக்கி சென்றார்.

      அடுத்த சிறிது நேரத்தில் அய்யர் அழைத்து விட இன்னும் சிலமணி நிமிடத்தில் தன் மனைவியாக போகும் மங்கை வருவை இமை கொட்டாது பார்த்து கொண்டு இருந்தான் அந்த ரட்ச்சகன்.

       தங்க சிலையென அருகில் வந்து அமர்ந்த ‘தன் பம்பிளிமோசை’ இன்ச் இன்ச்சாக ரசித்தான் அந்த காவலன்.

      “எல்லாம் ஓகே… பட், ஒன்னு மட்டும் அதிகமா இருக்கு” என்றான் தாழ்ந்த குரலில்.

       அனைவரின் பார்வை தங்கள் மீதே இருப்பதால் அவன் முகம் பார்க்க முடியாமல் திணறியவள் அவனின் பேச்சில் ‘என்ன அதிகம்’ என்பதை கை அசைவில் கேட்டாள்.

       அவளின் கை அசைவை கண்டு புன்னகை சிந்தியவன் “என் மடியில் நீ! இரவின் மடியில் நாம் இருக்கும்….. தருணத்தில் சொல்கிறேன் கண்மணி” கவிதையாக பேசியவனின் மீது காதல் அதிகரிக்க, அவன் வார்த்தையின் அர்த்தம் புரிய முகம் சிவந்து போய் அமர்ந்து இருந்தாள் அந்த காவலனின் தேவதை.

         பின் அய்யர் மந்திரம் சொல்ல தன் தேவதையின் கழுத்தில் மங்கல தாலி அணிந்து தன் பாதியாக்கி கொண்டான் அந்த ரட்ச்சகன்.

         “ராகவ்” என்ற தன் அன்னையின் வார்த்தையில் வாயில் நோக்கி தன் பார்வையை செலுத்தினான்……..

தேவதை வருவாள்………               

 

Advertisement