Advertisement

RD – 12

     தன் கண் முன் இருந்த போனில் அன்னையின் அழைப்பை பார்த்தவன் யோசனையில் மூழ்கி இருந்தான்.

   இதுவரைக்கும் அவனிடம் எந்த ஒரு விஷயம் பற்றி பேச அழைத்தது இல்லை…. ‘அழைத்தால் தான் எடுக்க மாட்டோம் என்று அவருக்கு நன்றாக தெரியும் அதனால் அழைக்க மாட்டார்’.

    ‘ஆனால், இப்பொழுது எதற்காக அழைத்து இருக்கிறார்?’ என்று யோசித்து கொண்டு இருந்தான் ‘ராகவ்’.

    வீட்டில் வெளிநாடு செல்கிறேன் என தகவல் கொடுத்தவன் அங்கு செல்லாது தன் மாஞ்சோலை எஸ்டேட்டில் தங்கி இரண்டு நாட்களை கழித்து விட்டான்.

     அவனுக்கு மனம் அமைதி இல்லாத போது இங்கு வந்து விடுவான். விஜயின் அதிரடியில் ஆடி போய் இருந்தவன் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ ஒன்றும் ஓடாது இருந்தான்.

     பின், தன் காரியதரிசியிடம் ‘எதற்கு அழைத்தார்?’ என்று கேட்டு சொல்லுமாறு கட்டளையிட்டவன் தன் வேளையில் மூழ்கி போனான்.  

     அனுமதி கேட்டு உள்ளே வந்த அவன் காரியதரசி தயங்கி நின்றான். ராகவ் ‘என்ன’ என்பது போல் பார்க்க… ஒருவாறு தைரியத்தை வரவழைத்து “சார் உங்க தம்பிக்கு நாளை பொண்ணு பார்க்க போறாங்களாம் குடும்பத்தில் மூத்தவன் என்கிற முறையில் நீங்க கண்டிப்பா வந்து ஆகணும் அப்படின்னு அம்மா சொன்னாங்க” ஒருவாறு சொல்லி முடித்துவிட்டான்.

     “என்ன, எனக்கு அவங்க ஆர்டர் போடுறாங்களா? என்னால் வர முடியாது என்று சொல்லிரு. ஏற்கனவே விஜய் மீது உள்ள கோபம் எனக்கு இன்னும் தனியவில்லை இப்பொழுது அவனை என்னால் கண்டிப்பாக பார்க்க முடியாது போய் சொல்லு” என்றவன் கோபத்தில் மூக்கு விடைக்க ஜன்னல் அருகில் சென்று சாலையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

         “சார்” அவன் ‘பிஏ’ அழைக்க இயந்திரத்தனமாக திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

     “எனக்கு என்னமோ நீங்க உங்க வீட்டிற்கு திரும்பி போகுறது நல்லதுன்னு தோணுது சார்” என்றான்.

      ராகவ் தன் ‘பிஏ’ வை திரும்பி பார்த்த பொழுது அவனிடம் பழைய கம்பீரம் வந்து இருந்தது.

       “கொஞ்ச நாள் கடத்தல் எதுவும் செய்ய வேண்டாம் பசங்ககிட்ட சொல்லிடு… கண்டிப்பாக என் தம்பி சும்மா இருக்க மாட்டான்.  அவனை திசை திருப்ப இந்த கல்யாணம் சரியான ஒன்று அதனால் கண்டிப்பா அது நடந்து ஆகணும்” உறுதியான குரலில் சொல்லி முடித்தான் ராகவ்.

      “அது எப்படி சார் உங்க தம்பி திசை மாறுவாருனு உறுதியா சொல்றிங்க? எனக்கு புரியல” யோசனையாக கேட்டவனை கண்கள் இடுங்க பார்த்தான் ராகவ்.

       “ஹ்ம்ம் அடுத்த உன் மனதில் என்ன கேள்வி ஓடுகிறது? ரகு அதையும் சொல்லி விடு உனக்கு விளங்கும் படி பதில் சொல்கிறேன்” அதே இடுங்கிய பார்வை இம்மியும் மாறாமல் அமைதியாக கேட்டான்.

       பயத்தில் “அய்யோ சாரி சார்…. இப்பவே நீங்க ஊருக்கு போற ஏற்பாடு பண்றேன்” என்றவன் அங்கு இருந்து ஓடி விட்டான்.  

         ராகவ் வர சம்மதித்துவிட்டான் என்ற செய்தி அறிந்த அமிர்தமாளுக்கு சந்தோசம் தாங்கவில்லை. விஜய் மனதில் நிம்மதியாக உணர்ந்தான். இருவரும் அவனின் வரவை எதிர்பார்த்து இருந்தனர் ‘ப்ரணவை’ தவிர……..

       விஜய் ஒப்புக்கொண்டதும் அடுத்து இரண்டு நாட்கள் கழித்து வருவதாக செய்தி சொல்லி அனுப்பி விட்டனர். அதுவரை அவன் கார்த்திகாவை எந்தவித தொடர்பும் கொள்ள முயலவில்லை.

        “எனக்கு இப்போ இந்த கல்யாணம் வேண்டாம் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் அப்படின்னு தோணலையா அம்மா” அழுது கரைந்து தன் அன்னையிடம் வாதாடி கொண்டு இருந்தாள்.

        அவளுக்கு அலங்காரத்துக்கு தேவையான பொருளை எடுத்து வைத்து கொண்டு இருந்தவர் எந்தவித பதட்டமும் இல்லாமல் “இங்கு பார் இது இரண்டு மாசத்துக்கு முன்னமே உனக்கு பார்த்த வரன் இப்போ மாப்பிளை வீட்டில் இருந்து ஓகே சொல்லிட்டாங்க அதனால உன் முன்கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அழகாக அலங்காரம் செய்து விட்டு வர வழியை பார்” என்றார் காரராக.

        அவள் இறந்து போன தோழியை நினைத்து அழுது கொண்டே இருந்த அவளது மனதை மாற்ற இந்த திருமணம் தவிர வேறு வழியில்லை என்பதை நன்கு அறிந்ததால் தான் இந்த முடிவிற்கு வந்தனர்.  

        தன் அன்னை வாய்மொழியை கேட்டவள் கோபத்தில் அருகில் இருந்த பட்டுசேலையை தூக்கி எறிந்துவிட்டாள் “எனக்கு தெரியாமல் மாதகணக்கில் மாப்பிள்ளை தேடும் படலம் நடந்து இருக்குது….. உங்களுக்கு பிடிச்சதும் நான் ஒத்துப்பேனு எப்படி நீங்க நினைக்கலாம்?”

         ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்த அறையில் வாய் பிளந்து தன் அன்னையை வெறித்து பார்த்தவளாக நின்று இருந்தாள் கார்த்திகா.

        “என்னடி ரொம்ப துள்ளுற படிச்சு வேலைக்கு போற திமிர காட்றியா என்ன?” மனம் வலித்தாலும் தன் மகள் வாழ்வு நன்றாக இருக்க அந்த அன்னை வார்த்தையை தடித்து பேசினார்.

         கண்களில் கண்ணீர் வடிய, உதடு துடிக்க “ஏன் மா இப்படி எல்லாம் பேசுற? நான் அப்படி பட்டவளா?” சிறு குழந்தையாக தன் அன்னையிடம் வினவினாள் அந்த மங்கை.

        இளக துடித்த மனதை இறுக்கி கொண்டவர் “இப்போ சொல்வதற்கு ஒன்றும் இல்லை சீக்கிரம் கிளம்பி இரு உன் அண்ணி வந்து கூட்டிட்டு போக வருவா….” என்றவர் தன் கண்ணீரை மறைத்து கொண்டு வெளியே சென்று விட்டார்.

       அவள் அன்னை சென்ற பின்பு மனம் முழுவதும் ‘விஜய்’ மட்டுமே நிறைந்து இருந்தான். அவனை மூன்று முறை பார்த்து இருப்பாள் ஆனால் , மனம் முழுவதும் நிரம்பி விட்டான்.

       அவனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்தவள் பின் வரும் மாப்பிளையிடம் நேரடியாக தன் கருத்தை சொல்லி விடலாம் என முடிவெடுத்து கிளம்பி தயாராகி இருந்தாள்.

       கீழே கார் வரும் சத்தம்… அதனை தொடர்ந்து உபசரிப்பு படலம் நடப்பது எல்லாம் தன் அறையில் இருந்து கேட்டு கொண்டு இருந்தாள்.

        சிறிது நேரம் கழித்து தன் அண்ணி வரவும் மீண்டும் கண்ணீர் சுரந்தது அவளுக்கு.

        “ஏன் அண்ணி நீங்களும் என்கிட்ட சொல்லவில்லை மாப்பிளை பார்த்த செய்தியை?” என்றாள் தொண்டை அடைக்க.

        டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தவர் மிகவும் நிதானமாக “கொஞ்சம் நிகழ்உலகிற்கு வா கார்த்தி. உன் தோழி இறந்தது கஷ்டமான ஒன்று தான்…….. ஆனால், அதையே நினைத்து வருந்துவது முட்டாள் தனம் அதை தான் இப்போ நீ செய்துகிட்டு இருக்க”

     அவளின் அருகில் அமர்ந்து கையை பிடித்து “மாப்பிளை போட்டோ உன்கிட்ட கொஞ்ச நாளுக்கு முன்னாடி கொடுத்தேன் ஆனால் நீ காலேஜ் போகுற அவசரத்துல அதை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்?  உன் சம்மதம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது கார்த்தி அதனால் கவலை மறந்து கீழே வா” என்று அழைத்து சென்றார்.

       ‘எப்பொழுது மாப்பிள்ளை போட்டோ அண்ணி தந்தாங்க?’ பல குழப்பத்தில் இருந்தவளின்  மூளை செயல் பட மறுக்க இயந்திரமாக தன் அண்ணியுடன் கீழே சென்றாள்.

 

தேவதை வருவாள்….  

 

Advertisement