Advertisement

RD- 11   

      “நீ சொல்வது எனக்கு புரிகிறது விஜய் ஆனால், நம்மிடம் அதற்கு தேவையான ஆதாரம் இல்லை. உன் வேகத்தை குறைத்து விட்டு விவேகத்துடன் செயல்படு இந்த கேஸ் முடியும் வரை உன் விளையாட்டு தனத்தை கொஞ்சம் ஒதுக்கி வை. உன் திறமைய நீ ரொம்ப நாள் மறைக்க முடியாது விஜய் நீ இந்த போலீஸ் வேலைக்கு வந்ததே உன் அண்ணன் நலனுக்கு என்பது எனக்கு தெரியும்….”

     அதுவரை யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் வாய் திறந்தான். “அவனுடைய தாழ்வு மனப்பான்மையை போக்க அப்பா எனக்கு சொல்லி கொடுத்தது இது தான் அங்கிள். அவன் எதை எடுத்தாலும் நீ அதை தேர்ந்தெடுக்காத என்று சொல்லி சொல்லி வளர்த்தார்” என்றான் தன் தந்தையின் நினைவில்.

      “ஆனால், நீ தேர்ந்தெடுத்த வேலைக்கு முழு உழைப்புடன் இரு என்றும் சொல்லி கொடுத்து இருக்கிறான் உன் அப்பா. நீ இந்த துறையில் பெயர் எடுத்தால் ராகவின் மனநிலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.. அவன் துறையில் ஒரு பெரிய இடத்தில் தன் பெயரை பதித்து விட்டான் அதனால் அவனை நினைத்து உன் திறமையை புதைத்து கொள்ளாதே அது முழு முட்டாள் தனம்…. உன்னை சொல்லி குறை இல்லை உன் அப்பாவை சொல்லவேண்டும்”

      “அங்கிள், அப்பா எது செய்தாலும் அதில் நன்மை இருக்கும் அவரை குறை சொல்ல வேண்டாம்” என்றான் இறுகிய குரலில்.

     “அவனுக்கு உன் வாழ்வை விட உன் அண்ணன் வாழ்வு பெரிதாக தெரிகிறது… உன்னை கண்டித்து வளர்த்தது போல் அவனையும் கண்டித்து வளர்த்து இருந்தால் ப்ரோப்ளம் இருந்து இருக்காது. ராகவ் கோபக்காரன் என்று சொல்லி சொல்லி அவனை அவன் போக்கில் விட்டு விட்டான் உன் அப்பா. இதே தவறை தான் இப்பொழுது உன் அம்மாவும் செய்கிறார்” தான் பேசுவது எதுவும் அவன் காதில் வாங்க மாட்டன் என்பது அறிந்தும் அவர் சொல்லி கொண்டு இருந்தார்.

       ‘நாம் பேசுவதை அவன் கேட்க மாட்டான் ஆனால், அவன் சொல்வதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ மனதில் விஜயை அர்ச்சித்து கொண்டு இருந்தார்.

       “போதும் அங்கிள் என்னை தாளித்தது நான் இந்த கேஸில் முழு வீச்சாக இறங்குகிறேன்” என்றவன் சலுயுட்டுடன் கிளம்பினான்.

       அவன் கதவு அருகில் சென்றதும் “டேய் காலம் முழுவதும் பிரம்மசாரியாக உன் அண்ணனுக்கு துணைக்கு இருந்துருவ போல…. கல்யாண சாப்பாடு எப்போ போட போற?” முகம் முழுவதும் சிரிப்புடன் கேட்டார்.

        கல்யாணம் என்றதும் தன் மிளகாபட்டாசு நினைவு வர உதடு வளைத்து புன்னகையுடன் நின்றான். “டேய் நீ வெக்கபடுறத பார்த்தா பொண்ண செலக்ட் பண்ணிட்டபோல? போலீஸ்காரன் இப்படி வெட்கபட்டு வெளிய போகாதடா… நான் உன் அம்மாகிட்ட கேட்டுக்கிறேன்” அவனை கிண்டல் செய்தாலும் விஜயின் அந்த புன்னகை அவன் கம்பீரத்தை சிறிதும் குறைக்க வில்லை.

       பின் வந்த நாட்களில் முழு வீச்சாக தன் வேலையில் இறங்கி விட்டான். கார்த்திகாவின் நினைவு வந்தாலும் அதனை வலுகட்டாயமாக ஒதுக்கி வைத்தான் அன்று அவள் தோழி விசயமாக பார்த்த பின் அவளை பார்க்க விஜய் முயற்சிக்கவில்லை.

        அவள் தோழி இறப்பு பற்றிய முழு விவரம் தெரிந்த பின்புதான் அவளை சந்திக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்… ஆனால், அந்த முடிவு அவளை பற்றிய செய்தி கேட்டதும் அடியோடு தகர்ந்து விட்டது.

       தன் அறையில் கணினி முன்பு கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்து இருந்தவன் அருகில் வந்து “ஏன் விஜி இப்போ எல்லாம் நீ என்னை ஸ்கூல விடவும் வரமாட்டிக்க, என்கிட்ட பேசவும் மாட்டிக்க” படபடவென பொரிந்து தள்ளினான் ஜூனியர் ராகவ்.

       தன் அண்ணன் மகனின் செயல், பேச்சு எல்லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. ப்ரணவ் இந்தாளவுக்கு வாய் பேச கூடியவன் அல்ல அவனுக்கு வேண்டியதை கூட வாய் திறந்து சொல்ல மாட்டான் அத்தனை  அழுத்தம்.

        அவனை தூக்கி தன் மடியில் அமர வைத்தவன் “டேய் நீயா இப்படி பேசுற….? யாருடா உனக்கு இப்படி தைரியத்தை கொடுத்தது” அவன் கழுத்தில்  தன் கரங்களை சுற்றி கட்டிக்கொண்டு அங்கும், இங்கும் ஆடியபடி கேட்டான் விஜய்.

        ப்ரணவிற்கு அவன்  கூறியது ஏதோ அரைகுறையாக புரிய “அதுவா ஸ்கூல பிரேக் ஹௌவர்ல மித்து அக்கா வருவாங்க…” என்றான் குதுகலத்துடன்.

        இப்போ புரிந்தது விஜய்க்கு இவனின் துடுக்குத்தனம் எங்கு இருந்து வந்தது என்பது?!.. ‘சரியான வாலு,… மித்துவின்  பழக்க தோஷம் ஒட்டிக்கொண்டது போல இவனுக்கும்’ மனதில் நினைத்தவனின் நினைவில் அழையா விருந்தாளியாக கார்த்திகா வந்தாள்.

        “சரி கண்ணா… மித்து அக்காவை கொண்டு வந்து விட யாரு வருவாங்க” விளையாட்டு போல கேட்டான்.

        “அக்கா அவங்க அப்பா கூட வருவாங்க” என்றவனுக்கு  இன்று பள்ளியில் நடந்தது நினைவு வர விஜயின் புறம் திரும்பியவன் அவனின் மீசையை முறுக்கி விட்டவாறு “இன்னைக்கு மித்து அக்கா அழுதுட்டு வந்தாங்க தெரியுமா?” கண்கள் விரித்து சொன்னான்.

         “ஏன் செல்லம்?” மகனை போல கண்கள் விரித்து கேட்டான்.

         “அதுவா!… அவங்க அத்தை எப்பவும் வீட்ல அழுதுட்டே இருக்காங்களாம் மித்து அக்காகிட்ட பேசலையாம்……” அதன் பின் ப்ரணவ் ஸ்கூலில் உள்ள நண்பர்கள் பற்றி பேசிய எதுவும் அவன் காதிலும் விழவில்லை, கருத்திலும் பதியவில்லை.

         ‘முட்டாள்! முட்டாள்! நடந்ததை நினைத்து அழுது கொண்டு இருந்தாள் எல்லாம் சரியாகி விடுமா?…. இவள் எல்லாம் எப்படி காலேஜ் லெக்ச்சர் ஆனாலோ? சுத்தமா மெட்சூரே இல்லை. எதுவும் புரியாமல் பட்டாசு மாதிரி வெடிக்க மட்டும் நல்லா தெரியும்’ மனதில் அவளை அர்ச்சித்து கொண்டு இருந்தான் விஜய்.

       “விஜி! விஜி” என்று ப்ரணவ் பல முறை உலுக்கின பின்புதான் நினைவு உலகத்திற்கு வந்தான்.

        “உன்னை பாட்டி கூப்பிடுறாங்க” என்றவுடன் அவனை தூக்கி கொண்டு தன் அன்னையை காண சென்றான்.

         ஹாலில் ஜோசியருடன் தன் அன்னை விவாதித்து கொண்டு இருந்ததை கண்டவன் தீர்மானமான முடிவுடன் இருக்கையில் அமர்ந்தான்.

         “இங்க பாரு விஜய் உனக்கு அந்த பொண்ண பிடிச்சு இருந்தா சொல்லு பேசி முடிச்சிருவோம் இல்லையா வேறு பொண்ண பாப்போம்…. கிட்டத்தட்ட இரண்டு மாசம் கடந்துட்டு உனக்கு அந்த பொண்ணு போட்டோ காண்பித்து” தன் மகன் இன்னும் ஒரு முடிவும் சொல்ல மாட்டிகானே என்ற ஆற்றாமை அவர் குரலில் தெரிந்தது.

       “அந்த பொண்ணையே பேசி முடிச்சிருங்க அம்மா எனக்கு முழு சம்மதம்…. அப்பறம் நாளையே அவள் வீட்டுக்கு போய் பூ வச்சிட்டு வரோம்” என்று கட்டளை போட்டு விட்டு மாடி ஏறிவிட்டான்.

       தன் மகனா இது? என்பது போல் மேவாயில் கை வைத்து ஆச்சிரயமாக பார்த்து கொண்டு இருந்தார் அமிர்தம்மாள்.

        தன் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு அவர் கையில் இருந்த போட்டோவை வாங்கி பார்த்தவன் குதூகலத்தில் துள்ளி எழுந்தவன் “பாட்டி மித்து அக்கா அத்த” சந்தோஷ கூச்சலுடன் சொல்லி கொண்டு இருந்தான்.

        ‘மித்து அக்கா அத்தையா’ என்ன சொல்கிறான் இவன்?’ என்று இருவரின் செய்கையிலும் குழம்பி போய் இருந்தார் அந்த அன்னை.

தேவதை வருவாள்……..         

 

Advertisement