இது எனது 24 வது கதை. இந்த கதை முழுவதும் கற்பனையே இதில் குறிப்பிடும் அனைத்தும் இணைய வழி தகவலாகவும் கதைகளாகவும் நான் அறிந்தவை தான். இந்த கதையை மறுபதிப்போ தழுவியோ எழுத கூடாது இதன் உரிமம் அனைத்தும் இஷானா நீலகண்டன் உரியது.
ஆழி சூழ் உலகு என்ற சொல்லுக்கு ஏற்றது இந்த உலகம் கடல்களால் சூழப்பட்டு அங்காங்கே சில நில பரப்புகளையும் பல ஜீவராசிகளையும் கொண்டது.
ஆண்டவன் படைத்ததில் இருந்து இன்றும் மாற்றமில்லாமல் இருப்பது நம்மை சுற்றி உள்ள கடல்கள் தான்.
கடல் என்று ஒரு வார்த்தையில் நாம் சொல்ல கூடிய விஷயம் அதனுள் எண்ணி பார்க்க முடியாத ஆழத்தையும் அமைதியையும் கொண்டது.
பல ஆச்சர்யங்களையும் பல மர்மங்களையும் எண்ணில் அடங்கா பொங்கிஷங்களை தனக்குள் கொண்டு கற்பனைக்கு எட்டாத அதிசயங்களையும் மனதினால் யுகிக்க முடியாதவற்றையும் தனக்குள் மறைத்து கொண்டது.
கடல் அதிசயங்களாக கருதப்படும் பண்டையர்களின் பாரம்பரியம் சில வற்றை தன்னுள் உள்வாங்கி கொண்டது. அப்படி அரபு கடல் தன்னுள் உள்வாங்கிய துவாரகை நகரம் பற்றிய ஒரு தேடல்.
இந்த கதை தொடங்கிய இடம் குஜராத்தில் உள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுகடற்கரையில் மூழ்கி உள்ள பண்டைய நகரமான துவாரகையில். இது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவின் பெயரில் விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட அழகிய நகரம் என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். இதனை அமைக்க வருண பகவானிடம் கடலில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணர் பன்னிரண்டு யோஜனை நிலம் வாங்கியதாக புராணத்தில் சொல்ல படுகிறது.
அதே காலகட்டத்தில் காந்தாரியின் சாபத்தாலோ அல்லது இயற்கை சீற்றத்தாலோ அந்த நகரம் எங்கிருந்து வந்ததோ அங்கே சேர்ந்ததாக வரலாறுகள் சொல்கிறது. அதனை தேடியே நம் பயணமும் தொடர்கிறது.
ஆம் கடலில் மூழ்கிய கிருஷ்ணனின் துவாரகை தேடி ஒரு பயணம்.
அத்தியாயம் 1 : அரலை
” கிருஷ்ண பவனம் ” என்ற பெயர் பலகை சூரிய ஒளி பட்டு கண்ணைப் பறிக்கும் வண்ணம் தங்க நிறத்தில் மின்னியது.
அந்த வீட்டின் மூத்த குடி மக்கள் வாசுதேவன் – காமாட்சி. வாசுதேவன் என்று சொல்வதை காட்டிலும் பெரும்பாலும் அவரை அழைப்பது வாசுதேவன் யாதவ் என்று தான்.
அவர் பெயர் பின் வரும் அந்த பெயர் அவருக்குரிய மரியாதை பாரம்பரியம் குல வழக்கம். ஆம் அவர்கள் யாதவ குலத்தை சார்ந்தவர்கள். பலர் இப்போது ஜாதி ஒன்றை பார்க்கா விட்டாலும் முன்னோர்களின் பெருமைகளால் இன்னும் பிரிவினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
யாதவ குலத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெரும்பாலும் அந்த வீட்டில் கிருஷ்ண வழிபாடு தான்.
அவர்கள் குலத்தை எண்ணிய பெருமையும் கர்வமும் வம்சாவழியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றும் தங்கள் இனத்தில் இருந்து வெளியில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். யது வம்சம் என்ற பெயரே அவர்களின் அத்தனை பெருமைக்கும் உரியதாகும்.
வாசுதேவன் – காமாட்சி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்.
மூத்தவர் முகுந்தன் அவரின் மனைவி ராகவி இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மூத்தவன் கிருஷ்ணன் இளையவன் பிரபஞ்சன். இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் இடைவெளி உண்டு அதனாலே அதிகம் ஒட்டுதல் இல்லை என்பதை விட ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை இருவரின் குணமும் அவர்களை தள்ளி நிறுத்தி விட்டது.
கிருஷ்ணன் படிப்பை முடித்து விட்டு கடற்படையில் சேர்ந்தவன் தற்போது அதில் கேப்டனாக பணிபுரிகிறான். தாத்தாவின் அசல் வாரிசு இவன் எதிலும் தங்கள் குல பெருமை பார்ப்பவன்.
பிரபஞ்சன் சினி கோர்ஸ் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டில் அதிகம் ஒட்டாத ரகம் என்றும் சொல்லலாம். வீட்டு பெருமையோ அல்லது தந்தையின் பெருமையோ தாத்தாவின் பெருமையோ எங்கும் பேச விரும்பாத தன் பெயரை நிலை நாட்ட துடிக்கும் இளைஞன்.
வாசுதேவன் அந்த காலத்திலேயே மிக பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அதிலும் யது வம்சத்தை பற்றிய ஆராய்ச்சியும் கிருஷ்ணனை பற்றிய ஆராய்ச்சி நிறைய மேற்கொண்டு எங்கும் முற்று பெறாத நிலையில் தான் சேகரித்த தகவல் அனைத்தையும் தீசிஸ் எழுதி சமர்ப்பித்து இருக்கிறார் அவரின் நிறைய நாள் கனவு துவாரகை நகரத்தினை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென்பது.
அதில் அவர் முயன்று இருந்தாலும் நிறைய இடையூறுகளால் அது ஆரம்பித்த இடத்திலே நின்று விட ஸ்ரீ கிருஷ்ணர் அபிமன்யுவை பயிற்சி அளித்தது போல் தன் பேரனை துவாரகை பற்றிய ஆராய்ச்சிக்கு பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார்.
மூத்த மகனை சென்ட்ரல் மினிஸ்டராக்கி, இளைய மகனை மிக பெரிய ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக்கி, மூத்த பேரனை தன் விருப்பப்படி கடற்படையில் சேர்த்து விட்டார்.
இது இல்லாமல் இவர்களின் வீட்டு பெண்கள் பேர் சொல்லும் தொழிலுக்கு சொந்தக்காரர்கள். வாசுதேவன் மனைவி காமாட்சியிடம் இருபதுக்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளது. மூத்த மருமகள் ராகவி பெயர் சொல்லும் தகவல் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் அவர் உதவி கொண்டே பல தில்லுமுல்லுகள் செய்து விஷயத்தை கறந்து விடுவார்கள். இரண்டாவது மருமகள் பல மருத்துவமனையின் உரிமையாளர்.
பணத்திற்கு பஞ்சம் இல்லாத குடும்பம் என்று சொல்வதை காட்டிலும் பணம் தண்ணீர் பட்ட பாடு என்று சொன்னால் சரியாக இருக்கும்.
வாசுதேவனின் இரண்டாவது வாரிசு அவர் பெண் ராதா. தந்தை போல் அவரும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தான் படிப்பு முடிந்து வேலைக்காக சென்ற இடத்தில் தன் உடன் பணி செய்யும் ஒருவர் மீது காதல் வயப்பட்டு வீட்டிற்கு தெரியாமல் கலப்பு திருமணம் செய்து கொள்ள அன்றோடு தான் பெற்ற பெண்ணை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டதும் அல்லாமல் யார் கேட்டாலும் அவர் உயிரோடு இல்லை என்று முடித்துக் கொண்டார்.
பெற்ற மகளை உடன் பிறந்த சகோதரியை நினைத்து வீட்டில் இருந்தோர் கலங்கினாலும் வாசுதேவனை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லாமல் போனது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. ஊர் உலகத்தை உறவினரை பொறுத்தவரை அவர் இறந்து போய்விட்டார்.
அதற்கு அடுத்து பிறந்தவர் தான் நந்த கோபாலன் பெங்களூரில் மிக பெரிய ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார். தந்தையின் பல முயற்சிகளை தங்கள் இன்ஸ்டிடியூட் மூலியமாக சாத்தியமாக்கி கொடுத்தவர்.
நந்த கோபாலன் மனைவி கோகிலா அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் முதல் மகளுக்கு வாசுகிக்கு நீரடி தொல்பொருள் ஆய்வாளர் கார்த்திகேயனை திருமணம் செய்து வைத்துள்ளார்கள் இப்போது அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவது பெண் யசோதா பெயிண்டிங் கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள்.
நந்த கோபாலனின் மூன்றாவது மகன் சுதர்ஷனா இப்போது தான் பள்ளிப்படிப்பில் இருக்கிறான்.
இதோ இப்போது கூட அவருடைய கனவின் ஒரு பகுதியை தான் நிறைவேற்றி கொண்டுள்ளார்.
மிக பெரிய அருங்காட்சியம் ஒன்றை கிருஷ்ண சகாப்தம் என்ற பெயரில் நிறுவி அங்கு யது வம்சத்தவர்கள் பற்றிய குறிப்புகள் கிருஷ்ணன் வாழ்ந்ததாக கிடைத்த சான்று யாதவர்கள் புலம்பயர்ந்த இடம் அவர்கள் தற்போது வாழும் பகுதிகள் பற்றிய குறிப்புகள் என்று அமைத்து இருந்தார்.
அதில் முக்கியமான இடமாக முடிவடையாமல் இருந்த இடம் துவாரகை.
அதனை நிறைவு செய்ய தான் இப்போது பேரனை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.
” இதை கூட உன்னால செய்ய முடியாதா அப்புறம் நீ என்ன பெரிய மினிஸ்டர் ” என்று வாசுதேவன் கொந்தளிக்க ” அப்பா என்னை என்ன பண்ண சொல்லுறீங்க இது சாதாரண விஷயம் இல்ல வெளிய வர ஒவ்வொரு ரகசியமும் இப்போ இருக்க அரசியல் அமைப்பை மாற்றுமோனு பயப்படுறாங்க ” என்று முகுந்தன் சொல்ல ” அண்ணா நாம பாதி கடல் தாண்டிட்டோம் இப்போ வந்து இப்படி சொன்னா என்ன செய்யுறது… நம்ம டீம் அங்க போக ரெடியா இருக்கு எல்லாருமே வெல் எஸ்பிரியன்ஸ்ட் அண்ட் ட்ரெயின்ட்… இந்த முறை கண்டிப்பா வெற்றி நமக்கு தான்… துவாரகைல கிடைக்கிற விஷயம் கண்டிப்பா நம்ம கிருஷ்ண சகாப்தம்க்கு தான் வரணும் ” என்று நந்த கோபாலனும் சொன்னார்.
” என்னை என்னடா பண்ண சொல்லுற ஏதோ நா பேசாத மாதிரி… எல்லாமே பண்ணிட்டேன் நீங்க கொடுத்த டீம்லா அனுமதிக்க முடியாது வெல் எலிஜிபில் பர்சன்ஸ் மட்டும்தான் அலவ் பண்ணுவோம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க ” என்று முகுந்தன் நொந்து கொண்டார்.
” தாத்தா ” என்று கிருஷ்ணன் அழைக்க ” சொல்லு தம்பி ” என்று மடிக்கணினி முன்பு வந்து அமர்ந்தவர் அதில் தெரியும் பேரனை பாசத்துடன் பார்த்தார்.
” அந்த செலக்ஷனுக்கு நம்ம டீமை அனுப்ப சொல்லுங்க செலக்ட் ஆகுறவங்க ஆகட்டும் ” என்று சொல்ல ” அப்படி பண்ணா நம்ம சைட் எவ்வளவு பேர் செலக்ட் ஆவாங்கனு தெரியாது ” என்றார் நந்தகோபாலன்.
” நம்ம கிட்ட இருக்கவங்க தான் பெஸ்ட்னு சொன்னீங்க… ” என்று கேள்வியாக நிறுத்தியவன் ” தகுதியானவங்களா இருந்தா ஜெயிச்சு வரட்டும்… வரவங்களை நம்ம வழிக்கு எப்படி கொண்டு வரதுனு தாத்தாக்கு தெரியும் ” என்று சொல்ல வாசுதேவன் பேரனை பெருமையாக பார்த்தார்.
” என் பேரன் சொன்னதை கேட்டீங்க தானே போங்க அதுக்கான ஏற்பாட்டை பண்ணுங்க ” என்றவர் கிருஷ்ணனை பார்த்து ” கிருஷ்ணா துவாரகைல கிடைக்குற எதுவா இருந்தாலும் நம்ம இன்ஸ்டிடியூட்க்கு ஆராய்ச்சிக்கு வரணும் நம்ம மியூசியம்ல தான் வைக்கணும் வேற எங்கையும் போக கூடாது… ” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
ஒரு விஷயத்தை ஆரம்பிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை இது பல முறை ஆரம்பித்து முற்று பெறாமல் நின்ற விஷயம். வாசுதேவன் காலத்திலே அகழ்வாராய்ச்சி செய்து நிறைய விஷயங்களை வெளியில் கொண்டு வந்து உள்ளார்கள்.
வாசுதேவன் அப்போதே நிறைய விஷயங்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இருந்தாலும் அவர் மனம் அதில் எல்லாம் அமைதி அடையாமல் இன்னும் வேறு ஏதோ ஒன்றை தேடி கொண்டே இருக்கிறது.
அதிலும் அங்கு கிடைக்கும் பொக்கிஷத்தை அவர்களின் மியூசியத்தில் வைக்க வேண்டுமென்று ஆசை அது நிறைவேறவில்லை என்றால் கூட அதனை வெளி கொண்டு வந்த பெருமை தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வேண்டுமென்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்.
காலத்தால் அழியாத இடத்தில் அவர்களின் யது வம்ச பெருமையை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கிறார்.
இதோ அவர்கள் பேசி கிட்டதட்ட அரை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் அந்த செலக்ஷன் முடிந்த பாடாக இல்லை.
இது போன்ற விஷயங்களுக்கு கிடைக்கும் அலட்சியமும் தாமதமும் சில நேரங்களில் இதை விட்டு விலகி விடுவோமா எண்ண வைக்கும் அளவில் இருக்கும்.
கிருஷ்ணன் தனது ஆறு மாத கால பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் ” எப்படி தம்பி இருக்க ” என்று பெண்கள் மூவரும் அவனை சூழ்ந்து கொண்டார்கள்.
” இப்படி உடம்பு குறைஞ்சு போய் வந்துருக்க சரியா சாப்பிடறது இல்லையா ” என்று காமாட்சி கேட்க ” அப்படிலாம் இல்லை பாட்டி நா நல்லா தான் சாப்பிடுறேன் ” என்று அவர் தோளில் கை போட்டு சொன்னான்.
” அப்பா வந்துட்டாங்களா ” என்று கேட்க,
” இப்போ வர நேரம் தான் நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா நா சாப்பாடு எடுத்து வைக்க சொல்றேன் ” என்று தாய் ராகவி சொல்ல,
“சரி மா ” என்றான்.
தம்பி தங்கைகளுடன் பேசியவன் வெளிநாட்டில் இருக்கும் அவனுடைய இளவன் பிரபஞ்சனுக்கும் அழைத்து பேசினான்.
இந்த ஆறு மாதமாக குடும்பத்தை பற்றிய சிந்தனைகளே இல்லாமல் இருந்தவன் கிருஷ்ண பவனம் வந்த பிறகே மனதின் ஆழத்தில் புதைந்து போய் இருந்த உறவுகள் மேல் எழும்பி வந்தார்கள்.
அன்று இரவு மீண்டும் அனைவரும் ஒன்று கூடி துவாரகை பற்றி பேசினார்கள்.
” அப்பா என்னாச்சு எந்த அளவு மூவ் ஆகியிருக்கு ” என்று கிருஷ்ணன் கேட்க ” ஓர் அளவு எல்லாமே முடியுற ஸ்டேஜ் தான் கிரிஷ்… ஷிப் அரேச்மெண்ட்ஸ் சப் மெரைன் எல்லாமே மேலிடத்துல பேசிட்டேன் இந்த கவர்மெண்ட் உண்மையை வெளி கொண்டு வர முழு ஆதரவு தராங்க ஆனா இதுல இருக்க சின்ன சிக்கல் என்னனா இதுல ஒரே டீமா போக போறது இல்ல குறிப்பிட்ட மூணு இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவங்க தனி தனி டீம்மா ரிசர்ச் செஞ்சு கண்டுபிடிக்க அனுமதி கொடுத்து இருக்காங்க அவங்க கண்டுபிடிக்கிறது எங்க சார்ந்ததுனு அவங்க தான் முடிவு பண்ணனும் இன்ஸ்டிடியூட் தலையிடாது மெக்சிமம் அந்த மாநிலத்துல உள்ளது தான் தேர்ந்தெடுப்பாங்க நினைக்கிறேன் ” என்றார்.
” கடைசி நேரத்துல என்ன இப்படி வந்து சொல்லுற நம்மளோட குல பெருமையை நாம தான் கண்டுபிடிக்கணும்… இடம் பெயர்ந்து சிதறி போய் வாழ்ந்தாலும் நாம யது வம்சம் தான் ” என்று தாத்தா கண்டிப்பாக சொல்ல முகுந்தன் தம்பியை பார்த்தார்.
” அப்பா அவங்க என்ன முடிவு பண்ணாலும் நாம தான் கண்டுபிடிப்போம் வேற யார் கண்டுபிடிக்கிறதும் வெளில வராது ஷிப் அண்ட் சப் மெரைன் கண்ட்ரோல் முழுக்க நம்ம கிருஷ்ணன் கண்ட்ரோல்ல இருக்கு… அதோட நம்ம சார்பா போற ஒவ்வொரு ட்ரைனியும் சாமர்த்தியமானவங்க நம்மளை மீறி எதுவும் வெளில வர விட மாட்டாங்க ” என்று நந்தகோபலன் சொன்னார்.
” கோபப்படாதீங்க தாத்தா போட்டி இருந்தா தான் நிறைய விஷயங்கள் வெளில வரும் ” என்ற கிருஷ்ணன் ” மத்த டீம்ல நடக்கிறது நமக்கு தெரியணும் பா வெளில இருந்து பேசுற மாதிரி விலை பேசி பாருங்க யாராச்சும் ஒரு ஆளாச்சும் நம்ம ஆள் அங்க இருக்கனும் அவங்க கண்டுபிடிக்கிறது என்னனு நமக்கு தெரியணும் ” என்று தெளிவாக சொன்னான்.
” நா பேசுறேன் கிரிஷ் ” என்றவர் ” ஒரு டீமுக்கு நாலு பேர்னு மூணு டீம் 12 பேர் போறாங்க ” என்றார்.
” ஷிப்ல உள்ள ஆட்கள் செலக்ஷன் முடிஞ்சுருச்சா ” என்று கிருஷ்ணன் கேட்க ” ம்ம்ம் முடிஞ்சுருச்சு நீ சொன்ன மாதிரி எல்லாருமே நம்மோட ஆட்கள் தான் உன்னோட ரெண்டு ப்ரெண்ட் ஸ்ரீவர்ஷன், ருத்ரன் அவங்களையும் நீ சொன்ன மாதிரி இதுல சேர்த்துட்டேன் ” என்றார்.
ஸ்ரீவர்ஷன், ருத்ரன் இருவருமே கிருஷ்ணனின் ஆருயிர் தோழர்கள். மூவருமே சிறு வயதில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் மூவரின் குணாதிசயங்கள் பெரும்பாலும் ஒன்றாக தான் இருக்கும்.
இதில் ஸ்ரீவர்ஷன் மட்டும் எளிதாக அனைவரிடமும் பழக கூடியவன் மற்ற இருவரும் தள்ளி தான் நிற்பார்கள் என்பதை காட்டிலும் தள்ளி தான் வைப்பார்கள்.
” அப்புறம் இன்னொரு விஷயம் கிரிஷ் சப்மிரைன் அந்த ஷிப் உள்ள இருக்கது யாருக்கும் தெரியாது உள்ள போறவங்களுக்கு ஏதும் ஆபத்துனா தான் அதை பயன்படுத்த சொல்லுவாங்க” என்றார்.
” ம்ம்ம் சரி ப்பா ” என்றவன் ” வர போற ஒவ்வொரு பார்ட்டிசிபிடேட்டரோட டீடைல்ஸ் எனக்கு வேணும் ப்பா ” என்றான்.
” ம்ம்ம் நா பிரதிப் கிட்ட சொல்லி எடுத்து குடுக்க சொல்றேன் ” என்றார்.
முகுந்தனும் நந்தகோபாலனும் சென்று விட கிருஷ்ணன் அங்கிருந்த துவாரகையின் கடல் வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
” உண்மையிலே இந்த தேடல்ல எதுவும் நமக்கு கிடைக்குமா தாத்தா ” என்று கேள்வியாக இழுக்க ” அந்த கடல் மறைச்சு வச்சுருக்கது ஒரு கட்டிடத்தை இல்ல ஒரு சாம்ராஜ்யத்தை நிச்சயம் அதுக்குள்ள நமக்கு தேவையான ஏதாச்சும் கண்டிப்பா கிடைக்கும்… ஒரு அளவுக்கு மேல ஆழத்துக்குள்ள போறதுக்கு அனுமதி இல்லாததுனால தான் பல ரகசியம் ரகசியமா இருக்கு ஒரு சில விஷயதுக்காக உயிரை துச்சமா மதிச்சு அதை இலக்கா வச்சு அடைய துடிக்கிற துணிஞ்சு இறங்குற துணிச்சலான யாரோ ஒருத்தருக்கு அந்த பொக்கிஷம் சொந்தம் ஆகலாம்… ” என்று அழுத்தமாக சொன்னவர் ‘ அதை நிச்சயம் நா அபகரிப்பேன் ‘ என்று மனதில் நினைத்து கொண்டார்.
அதே நேரம் இமையமலை அருகில் மலை கிராமத்தில் உள்ள மூங்கில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.
நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் ” ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா நானே இன்னும் உள்ள போன பொண்ணை காணும்னு தவிச்சு போய் இருக்கேன் ” என்று சத்தமாக அதட்டினார்.
” ப்ரொபசர் அவ தான் உங்க பேச்சை கேட்காம உள்ள போனது நீங்க எதுக்கு அவளை பத்தி கவலை படுறீங்க ” என்று ஷாகித்யா கேட்க ” ப்ச் இப்படிலாம் பேசாத ஷாகி ஒரு குழுவா சேர்ந்து வேலை செய்யும் போது இருக்க வேண்டிய முக்கியமான பண்பு ஒற்றுமை ” என்று கண்டிப்புடன் சொன்னார்.
” சாரி ப்ரொபசர் அவ நம்ம பேச்சை கேட்காம உள்ள போன கோபத்துல பேசிட்டேன் எனக்குமே அவளுக்கு எதுவும் ஆகியிருமோனு டென்சன் இருக்க தான் செய்து.. ” என்று ஷாகித்யா சொல்ல ” அவ நல்லபடியா திரும்பி வரணும் ” என்று இதுவரை சண்டை போட்டு கொண்டிருந்த சபரி சொன்னான்.
இவர்கள் பரிதவிப்புக்கு காரணமானவளோ இமைமலையின் மறைவில் இருந்த ஒரு பெரிய குகை நோக்கி முன்னேறி கொண்டிருந்தாள்.