“கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது… இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது.
நிறைவாகவும் கூட..!!
“நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.. என்னோட ஸ்டூடன்ட் நீ அப்படிங்கறதுல பெருமையாவும் இருக்கு..” என்று அவர் சொல்ல,
“தேங்க்ஸ் எ லாட் சார்.. உங்களோட கைடன்ஸ் இல்லன்னா கண்டிப்பா இது இல்ல..” என்று அவனும் சொல்ல,
“நோ நோ.. இது உன்னோட சின்சியாரிட்டிக்கு கிடைச்ச பரிசு..” என்று அவன் தோள் தட்டி சொன்னவர் “டிக்கட்ஸ் மெயில் பண்ணிடுவாங்க.. விசா ப்ராசஸ் ஆல்சோ அவங்களே டீல் பண்ணிடுவாங்க.. சோ நல்லபடியா கிளம்பி போயிட்டு வா..” என்றார் மனம் நிறைந்து.
மேலும் சில நொடிகள் அவரோடு பேசியவன், தனகென்று ஒதுக்கி இருக்கும் அறைக்கு வர, அவனின் அறைக்கு வெளி சுவரில் ‘சித்திரைச் செல்வன். துணை பேராசிரியர்..’ என்ற பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது.
இந்த நான்கு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள். சித்திரைச் செல்வனின் அகத்திலும் சரி, புறத்திலும் சரி.. அவன் வாழ்வின் ஏற்றங்களிலும் சரி. அவன் என்ன நினைத்திருந்தானோ அது அப்படியே நடந்தது.
நடக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்தான்.. வெற்றி பெற்றான்.
என்ன அதற்கு அவன் கொடுத்த விலை, தன்னுடைய சொந்த விருப்பங்கள்..
வேண்டாம் என்று ஒதுக்கியவை எல்லாம், அவனுள்ளே புதைத்து வைத்துக்கொண்டான்..
அதன் வடு அப்படியே தான் இருந்தது..
தன் இருக்கையில் சற்றே சாய்ந்து அமர்ந்தவனுக்கு ஒரு ஆசுவாசம்.. அப்பாவிற்கு அழைத்துப் பேசினான்.. பின் அம்மாவினோடும்..
“என்ன செல்வா எப்போ கிளம்பனும் நீ…” என்று மீனா கேட்க,
“அவங்க டிக்கட் எல்லாம் அனுப்புவாங்கம்மா.. அப்புறம் தான்..” என்றவன் வேறெதுவோ சொல்ல வர “சரி சரி அப்பாக்கிட்ட பேசு..” என்று கொடுத்துவிட்டார்.
“என்ன செல்வா??” என,
“அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்.. உங்கட்ட கொடுத்துட்டாங்க..” என ,
“ஹ்ம்ம்.. அவ சொல்றதை நீயும் கேளேன்டா.. இதுக்குமேலயும் நீ ஏன் டிலே பண்ற??” என்று அப்பாவாய் ஆதங்கப்பட,
“தப்பு பண்ணிட்டோம் செல்வா.. பாஸ்கி கல்யாணம் அப்போவே உனக்கும் நாங்க வம்படியா பொண்ணு பார்த்து பண்ணிருக்கணும்..” என்று அப்பாவின் குரலிலும் கசப்புத் தெரிய,
“ப்பா..!!” என்றான் வெறுமையாய்.
“தப்பு செல்வா.. இப்போவே லேட்… நீ ஜெர்மன் போயிட்டு வர்றப்போ நாங்க பொண்ணு பார்த்திருப்போம்.. அவ்வளோதான்..” என்று வைத்துவிட்டார்.
அலைபேசியை வைத்தவனுக்கு அப்படியே மனதில் மீண்டும் ஒரு பாரம் வந்து அமர்ந்துகொண்டது.. எப்போதுமே இருக்கும் உணர்வு தான். இப்போது இன்னும் அதிகரித்தது.. ஆழ்ந்து மூச்செடுத்து விட்டவன், நேரம் பார்க்க, அடுத்த வகுப்பு செல்வதற்கான நேரம் வந்ததை உணர்ந்து, கிளம்பினான்.
முன்னை விட இப்போது இன்னமும் அழகனாய் இருந்தான் சித்து. அவன் முகத்தினில் இருக்கும் இறுக்கம் மட்டுமில்லை எனில் மேலும் ஒரு வசீகரம் கூடித்தான் இருக்கும்..
முன்னேயே ஒரு மிடுக்கு இருக்கும், இப்போது வேலை, சம்பாத்தியம் எல்லாம் மேலும் ஒரு நிமிர்வை கொடுத்திருந்தது.
அவன் நடந்து செல்கையிலேயே எதிரே வந்த ஒரு ஆசிரியை “கங்க்ராட்ஸ் சித்து..” என,
விஷயம் வேறொன்றும் இல்லை, ஜெர்மனியில் இருக்கும் முனீச் பல்கலைகழகம் நடத்திய ஒரு போட்டியில் சித்திரைச் செல்வன் எழுதி அனுப்பியிருந்த ஒரு ஆர்ட்டிகில் தேர்வு செய்யப்பட்டிருக்க, அதன் பொருட்டு அங்கே நடக்கும் ஒரு கலந்துரையாடலுக்கும், அங்கே அவர்கள் நடத்தும் ஆறு மாத சிறப்பு வகுப்பிற்கும் சித்திரைச் செல்வனை அழைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து இருவர், அதில் ஒருவன் சித்திரைச் செல்வன்..
ஆக ஆறு மாத காலம் இனி அவன் ஜெர்மன் வாசம் செய்ய வேண்டும்..
முனீச் பல்கலைகழகமே, பிரயாணம், மற்றும் அங்கே தாங்கும் அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்பேற்றுக்கொள்ள, இதோ இன்னும் சில நாளில் சித்திரைச் செல்வன் அங்கே செல்லவிருக்கிறான்.
முனைவர் பட்டம் பெற்றதுமே மீனா கேட்டார் “பொண்ணு பாக்குறோம்டா..” என்று, நிரந்தர வேலை வரட்டும் என்று அப்போது ஒரு காரணம் சொல்லி தள்ளிப்போட்டான்.
வேலையும் கிடைத்தது, அதுவும் அவனின் விருப்பப்படியே.
மறு ஆண்டே பாஸ்கருக்கு திருமணம் நடக்க, அப்போதும் மீனாவும், பூபதியும் கேட்க “கொஞ்ச நாள் போகட்டும்..” என்றான்.
நாட்கள் வருடங்கள் ஆனது தான் மிச்சம்..
மானசாவை தாண்டி அவனின் விருப்பங்கள் வேறெங்கும் செல்லவில்லை. அவள் சென்றதோடு அப்படியே அங்கேயே, அவளிடமே நின்றும் போனது. திருமணம் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியிருக்கையில், எங்கே அவன் சரி சொல்வான்.
வேலையில் அமரும் வரைக்கும் அவன் சிந்தை எதிலும் நிலைக்கவில்லை..
அமர்ந்து, நிதானித்து நிமிர்கையில் மானசா பற்றிய நினைவு வந்தபடியே தான் இருந்தது. என்ன செய்வாள்??!! திருமணம் ஆகியிருக்குமா?? தன்னை நினைப்பாளா?? தான் சொல்ல வந்ததை கூட கேட்காது போனாளே?? என்று இப்போதும் அவனிடம் அந்த ஆதங்கம் உண்டு.
கேட்டிருந்தால் கூட இவன் பக்கத்து நியாயங்கள் அவளுக்கு புரிந்திருக்குமோ, இப்போதோ அவள் தன்னை தவறாய் தானே நினைத்து சென்றிருப்பாள், அதுவே அவனை இறுகிட வைத்தது.
‘நான் சொல்றதை நீ எப்போதான் கேட்ட மனு…’ என்று அவனே லச்சம் முறைக்கும் மேலே சொன்னது போல், இப்போதும் சொல்லிக்கொண்டான்..
‘ஒன்ஸ் என்னோட ரீசன்ஸ் நீ கேட்டிருக்கலாம்.. கேட்டிருக்கணும்…’ என்று நினைக்கையிலேயே மீண்டும் அவனின் அலைபேசி சிணுங்கியது.
அப்போதுதான் உணர முடிந்து, வகுப்புக்கள் முடிந்து, தான் அறைக்கு வந்து, மதிய உணவு வேளை கூட வந்துவிட்டது என்று. அதுகூட அவனுக்கு அப்போது நினைவில் இல்லை.
‘ச்சே..’ என்று தன்னை தானே கடிந்துகொண்டவன், அழைப்பது யார் என்று பார்க்க பாஸ்கி தான்.
“ஹெலோ..” என்றிட,
“டேய்.. வாழ்த்துக்கள் டா..” என்றான் ஆனந்த கூக்குரலோடு.
“தேங்க்ஸ்டா..” என்றவனுக்கு, யார் சொல்லியிருப்பார்கள் என்று நன்கு தெரிந்தது.
“அப்புறம் மச்சி.. என்ன செய்ற.. இப்போ லஞ்ச் டைம் தானே..” என்று பாஸ்கர் பேச்சினை வளர்க்க,
“ஆமாடா..” என்றவன் “தீபா, பேபி எல்லாம் எப்படி இருக்காங்க??” என்று விசாரிக்க,
“அனைவரும் நலம்டா.. நீ ஒன் டைம் சென்னை வா..” என்றான்.
“வர்றேன் வர்றேன்.. அங்க வந்து தானே கிளம்பனும்..”
“அது கிளம்புறதுக்காக வர்றது.. நான் சொல்றது எங்க வீட்ல ஸ்டே பண்றதுக்காக கூப்பிடுறது..” என, திருமணம் ஆனாலும், குழந்தை வந்தாலும் கூட தன் நண்பனிடம் எவ்வித மாற்றமும் இல்லை என்பது சித்திரைச் செல்வனுக்கு நன்கு புரிந்தே இருந்தது.
இதழில் ஒரு மென்னகை கொடுக்க, “சரி டா வர்றேன்…” என்றான்.
“ம்ம்ம் இன்னும் எத்தனை நாளைக்குடா நீ இப்படியே இருக்கப் போற?? இல்லை இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்கியா?? அப்போவே நான் சொன்னேன் தானே..” என்று பாஸ்கர் மனம் கேளாது கேட்டுவிட,
“ம்ம்ச்.. நான் சொல்ல வந்த ரீசன் கூட கேட்காம போயிட்டா டா….” என்றான் எப்போதும் போல்.
“உன்னோட காரணங்கள் உனக்கு.. அது அவளுக்கு தேவை இல்லாததா கூட இருக்கலாம். சித்து இப்பவும் சொல்றேன்.. உனக்கு நல்ல சான்ஸ் வந்திருக்கு.. யூடிலைஸ் பண்ணிக்கோ.. லைப் பிரெஷா ஸ்டார்ட் பண்ணு..” என,
“ம்ம்ம் எதுவா இருந்தாலும் ஜெர்மன் போயிட்டு வந்துதான் யோசிக்கணும் பாஸ்கி..” என்றான் அப்போதைய சமாதானமாய்.
“நீ யோசிக்கிறது எந்த லட்சணத்துல யோசிப்பன்னு தெரியும்… அதுனால நாங்க சொல்றதையும் கொஞ்சம் கேளு.. அசிங்கமா பேச வைக்காத என்னை..” என்று திட்டிவிட்டு வைத்துவிட்டான்.
பாஸ்கர் திட்டியது கூட அந்த நேரத்தில் சித்திரைச் செல்வனுக்கு ஒரு நிம்மதி கொடுத்தது என்றுதான் சொல்லிட வேண்டும். இனியும் காலம் தள்ளிட முடியாது. கண்டிப்பாக அப்பா அம்மா இனியும் சும்மா விடமாட்டார்கள்..
‘யோசி சித்து…’ என்று அவனின் அறிவு எட்டிப் பார்க்க, ‘ஒன்ஸ் ஊட்டி போயிட்டு வாயேன்..’ என்று மனது சொல்லியது..
‘போய்?? போய் என்ன செய்ய??’
‘போ.. போய்… பாரு அவள.. பார்த்து பேசு..’ என,
“நோ.. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகிருந்தா.. அதையும் என்னால பார்க்க முடியாது.. அவ அப்படியே இருந்தாலும் என்னால தாங்கிக்க முடியாது..” என்று சித்து பதில் சொல்ல,
‘டேய்.. நீ கடைசி வரைக்கும் இப்படித்தான்டா இருக்கப் போற…’ என்றது அவனின் மனசாட்சி..
ஆனால் நிஜம் அதுதான்..!!
ஒருவேளை மானசா அவளுக்கென்று ஒரு வாழ்வை யோசிக்காது இருந்தாலும், அவனால் அதனை பொறுக்க முடியாது. இல்லை புதியாய் ஒரு வாழ்வு தொடங்கி அதில் இருந்தாலும் அதனை அவனால் கண்கொண்டு பார்க்க முடியாது.
‘அவள் இப்போது எப்படி இருக்கிறாளோ.. அப்படியே இருக்கட்டும். அது எப்படியாகினும் சரி…’ என்ற நிலைபாட்டிற்கு வந்தவன், தற்சமயம் அந்த சிந்தனைகளை ஒதுக்கி வைத்தான்.
அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது.. இப்படியே அமர்ந்துவிட்டால், அதனை எல்லாம் யார் பார்ப்பது..??!! இப்படி எண்ணி எண்ணியே தான் ஒவ்வொரு நாளையும் கடத்தினான்.
அப்படி கடத்தியதன் பலன், இதோ விமானத்தில் பறந்துகொண்டு இருக்கிறான் சித்திரைச் செல்வன். எதிர்பாராதா இந்தவொரு வாய்ப்பு.. ஏனோ உள்ளுணர்வு சொல்லியது இதில் உனக்கு மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது என்று..
புதிய வாய்ப்பு.. புதிய இடம்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே அங்கே புதிதாய் இருக்கப் போகிறது. நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஜெர்மன் செல்ல வாய்ப்பு என்றதுமே, முதலில் சித்து செய்தது ஒன்றே ஒன்றுதான். அடிப்படை தேவைக்காக அந்த மொழியை கற்றுக்கொண்டான்.
‘எல்லாமே நல்லபடியா நடக்கணும்..’ என்று வேண்டிக்கொண்டது அவனுள்ளம்.
இதோ இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கப் போகிறது என்ற அறிவுப்பு, அவனுள் ஒரு படபடப்பை கொடுத்தது. முதல் விமானப் பயணம் அல்ல, முதல் வெளிநாட்டுப் பயணமும் கூட. தன்னை அழைத்துச் செல்ல வரும் நபரிடம் இரண்டொரு முறை பேசியும் விட்டான்.
இருந்தும் அந்த படபடப்பு உள்ளுக்குள்ளே இருந்தது. அவனோடு நிறை இந்தியர்கள் பிரயாணம் செய்தனர் தான். இருந்தாலும் அவனுடைய உணர்வை அவன்தானே தாங்கிக்கொண்டு தரையிறங்க வேண்டும்..
விமானம் தரையிறங்கியது.. சித்திரைச் செல்வனும் தரையிறங்கினான்.. மற்ற வழிமுறைகள் எல்லாம் முடித்து, இதோ வெளி செல்லும் வழி வர “சித்திரைச் செல்வன்..” என்ற பெயர் தாங்கிய ஒரு பழகை வைத்து ஒருவன் நின்றிருந்தான்.
ஏறக்குறைய இவனின் வயது தான் இருக்கும்…!!
இவனைக் கண்டதும் அடையாளம் தெரிந்தது என்பதுபோல் அவன் ‘ஹாய்…’ என்று கை அசைக்க,
சித்துவிற்கும் ‘அப்பாடி..’ என்ற உணர்வோடு ‘ஹாய்..’ என்று அவனிடம் கரம் குலுக்கினான்.
வந்தவன் பெயர் நீல்… இந்திய வம்சாவளிதான்..
அடுத்த இரண்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. சித்திரைச் செல்வன், புதியாய் ஓரிடத்தில் ஒருவனிடம் இத்தனை பேசிட முடியுமா என்றால், அப்படி பேசிட வைத்திருந்தான் நீல். கலகல பேச்சு.. இந்தியாவை பற்றி ஆர்வமாய் அவன் கேட்கையில் இவனும் பதில் சொல்கையில் அந்த ஆர்வமும், கர்வமும் இவனுக்கும் ஒட்டிக்கொண்டது.
‘என் நாடு..’ என்ற எண்ணம்..
கார் பயணத்தில் நிறைய பேசினார்கள்.. கிட்டத்தட்ட நண்பர்கள் பேசிக்கொள்வது போல.
“என்னோட பிளாட்தான் டிபார்ட்மென்ட்ல அலாட் பண்ணிருக்காங்க..” என்று நீல் சொல்கையில்,
“நோ பிராப்ளம்..” என்று சந்தோசமாகவே ஏற்றுக்கொண்டான் சித்து.
“பட் நானும் கூட ஸ்டே பண்ணுவேன்..” என, அவன் சொல்கையில் அவன் முகம் காட்டிய பாவனையில் சித்துவிற்கு சிரிப்பே வந்துவிட்டது.
அதற்கும் “நோ பிராப்ளம்..” என,
“சோ.. நெக்ஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ், நம்ம லிவிங் டூகெதர்…” என்று அவன் சொல்லவும் சித்திரைச் செல்வனுக்கு பக்கென்று பயங்கர சிரிப்பு வந்துவிட்டது.
இப்படி சிரித்து வருடங்கள் ஆகியதோ என்னவோ..
வந்த முதல் சிறிது நேரத்திலேயே ஜெர்மன் அவனை சிரிக்க வைத்துவிட்டது.. ஆக அனைத்தும் நல்லபடியாகவே நடந்திடும் என்று அவனாகவே ஒரு கணக்கு போட்டு எண்ணிக்கொண்டான்.
கார் பயணம் முடிந்து, நீலின் பிளாட் வர, “மோஸ்ட்லி இங்க இண்டியன்ஸ் தான் இந்த ஏரியால..” என்றான்.
“ஓ..!! குட்…” என்றவனுக்கு இன்னும் பெரும் நிம்மதி.
நீல் பேசியபடியே சித்துவிற்கான அறையை காட்டியவன், எதை எப்படி உபயோகம் செய்திட வேண்டும் என்றும் சொல்லிவிட்டு “ஓகே.. யூ டேக் ரெஸ்ட்.. கொஞ்சம் திங்க்ஸ் ஷாப் பண்ணிட்டு வந்திடுறேன்..” என்றவன் கிளம்பிவிட்டான்.
உடலில் அசதி இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் அவன் அறையின் பால்கனி பெரிய கண்ணாடி கதவு கொண்டிருக்க, மின்னல் வெட்டாய் அவனுள் ஊட்டியின் நியாபகம் வந்து சென்றது. அவனையும் அறியாது கால்கள், அங்கே பால்கனி நோக்கி செல்ல, கைகள் தன்னப்போல் கதவினைத் தள்ளி, இவன் வெளியே சென்று பார்க்க, அந்த பக்கம் சிறுவர் பூங்கா போல் இருந்தது.
நிறைய குழந்தைகளை விளையாடிக்கொண்டு இருக்க, உடன் பெரியவர்களும் இருந்தனர்..
சிலர் பிள்ளைகளை விளையாடவிட்டு அமர்ந்திருந்தார்கள். சிலர் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டு இருந்தார்கள்..
பார்ப்பதற்கு அழகான காட்சிகளாய் இருக்க, நின்று கொண்டிருந்தவன் செவிகளில் திடீரென “சீட்டிங் மனு…” என்ற ஒரு சிறுமியின் குரல் கோபமாய் ஒலிப்பது கேட்டது..
‘மனு.!!!!’ அவன் செவி நரம்புகள் தொடங்கி, உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் அனைத்து செல்களும் பரபரப்படைய, வேகமாய் குரல் வந்த திக்கு நோக்கி பார்வையை திருப்ப, அவளே தான்…
மனு.. மானசா.. அவன் மனதை ஒரே இடத்தினில் நிற்க வைத்தவள்..!! ஒரு சிறுமியோடு நடந்துவந்து கொண்டு இருந்தாள்.
அதாவது பிடிவாதமாய் அக்குழந்தையை இழுத்து வராத குறையாய் வந்துகொண்டு இருந்தாள்.
‘மனு…!!’ என்று அவனி இதழ்கள் உச்சரிக்க,
“மனு… ப்ளீஸ் லீவ் மீ.. யூ ஆர் எ சீட்டர்.. மனு…” என்று அந்த குழந்தை திமிறிக்கொண்டு இருந்தது..
இவர்கள் இருவரின் பின்னே சிரித்த முகமாய் ஒருவன் நடந்து வந்துகொண்டு இருந்தான்.. யாரவன்.. சட்டென்று சொல்லியது அவன் டேவிட் என்று.. சித்துவிற்கு ஒருவித நெஞ்சடைக்கும் உணர்வு..