கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 15

                                     தமிழ்மாறனின் உறவுகள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாலும், கவனிக்காத பாவத்தோடு தான் உள்ளே நுழைந்தாள் ஆதி. அவளை கண்டதும் சத்யா மெல்ல தலையசைக்க, அந்த அத்தையும், சித்தியும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.  ஆதியும் அவர்களை சட்டை செய்யாமல் கட்டிலில் சத்யாவின் அருகே அமர்ந்து   கொண்டவள் “சாப்பிடறீங்களா அத்தை..” என்று கேட்க, மெல்ல தலையசைத்தார் சத்யா.

                                அவர் முன்னால் அவர் பயன்படுத்தும் குட்டி டேபிள் போன்ற ஒன்றை எடுத்து வைத்தவள் அவருக்கான உணவை அதில் வைக்க, “நீ சாப்பிட்டியா.. தமிழ், எழில் எல்லாம் சாப்பிட்டாச்சா..” என்று சத்யா கேட்க

                             “அவங்க வெளியே பேசிட்டு இருக்காங்க.. அவங்க வந்ததும் எல்லாரும் சாப்பிடட்டும்.. இப்போ நீங்க சாப்பிடுங்க…” என்றவள் அவர் உண்டு முடிக்கும் வரை உடன் இருந்தாலும், அந்த அறையில் இருந்த மற்றவர்களை திரும்பியும் பார்க்கவில்லை.

                          “நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளா..” என்ற எண்ணம்தான்… சத்யா உண்டு முடித்ததும், அவரை பார்த்துக் கொள்ளும் செவிலியிடம் “பார்த்துக்கோங்க.. ” என்று கூறி வெளியே வந்தவள் வாசலில் இருந்த தன் கணவனையும், எழிலையும் சாப்பிட அழைத்தாள். கூடவே மாறனின் சித்தப்பா, மாமா, பெரியப்பா மூவரும் வாசலில் இருக்க, அவர்களையும் “வாங்க மாமா சாப்பிடலாம்..” என்று மரியாதையாக அழைத்து வைத்தாள்.

                      ஆண்கள் ஐந்து பேரும் சாப்பிட அமரவும், வேலை செய்யும் ஆளின் உதவியோடு, அவளே அவர்களுக்கு பரிமாற, அந்த பெரியவர்களுக்கு குளிர்ந்து போனது.. அவள் காட்டிய பணிவும், அவள் முகத்தில் இருந்த புன்னகையும் அவர்களுக்கு இதமாக இருக்க, மாறனின் பெரியப்பா முறையில் இருந்தவர் “எங்கே உன் பொஞ்சாதி.. வந்த முதல் நாளே பிள்ளையை வேலை செய்ய விட்டுட்டு இந்த பொம்பளைங்க என்ன செய்யுறாங்க..” என்று சத்தமாக கேட்க

                      மாறனின் சித்தப்பாவுக்கும் அதே எண்ணம் தான். தன் அக்காவும், மனைவியும் எங்கே என்று அவர் பார்வையை சுழற்ற, “சின்னத்தை அத்தையோட பேசிட்டு இருக்காங்க மாமா… பெரியம்மாவும் அங்கேதான் இருக்காங்க..” என்றவள் அதற்குமேல் அமைதியாகி விட

                      மாறனின் சித்தப்பா “இவளுக்கு எங்கே வந்தாலும், ஊர் நியாயம் தான் சரியா இருக்கும்.. ஒரு வேலைக்கும் உபயோகமில்ல… ” என்று தன் மனைவியை கடிந்து கொள்ள

                       “இதுல என்ன இருக்கு மாமா.. நம்ம வீடு தானே.. அதுவும் அத்தையோட தானே பேசிட்டு இருக்காங்க.. நீங்க சாப்பிடுங்க..” என்று புன்னகையோடு கூறி இன்னும் ஒரு தோசையை அவர் தட்டில் வைத்தாள் ஆதி.

                        அவர்கள் உண்டு முடிக்கும் நேரம் பெண்கள் இருவரும் சத்யாவின் அறையில் இருந்து வெளியே வர, மாறனின் சித்தப்பா தன் மனைவியை அதிருப்தியாக பார்த்தவர் தன் அக்காவையும் முறைத்து வைத்தார். அவர்களின் பிள்ளைகள் எல்லாம் வேலை, படிப்பு என்று பல்வேறு காரணங்களால் திருமணம் முடிந்ததுமே கிளம்பி இருக்க, வீட்டில் பெண்கள் என்று இருந்தது அவர்கள் இருவரும் தான்.

                       அதுவும் ஒருவர் சேது மாதவனின் உடன் பிறந்தவர்.. மற்றவர் சேதுமாதவனின் உடன்பிறந்தவரின் மனைவி.. ரத்த சொந்தமாக முன்னே நின்று வேலைகளை கவனிக்காமல் இப்படி வெட்டி நியாயம் பேசி பொழுதை போக்குவதா?? என்று தான் நினைத்தார் மாறனின் சித்தப்பா…

                    அதோடு, இது பெண்கள் விஷயமல்லவா.. இதில் தாங்கள் என்ன செய்ய முடியும்.. புது மருமகளுக்கு உடன் இருந்து வீட்டை பழக்கி கொடுக்காமல், உள்ளே சென்று அமர்ந்து கொண்டால் ஆகிற்றா?? என்று எரிச்சலாக உணர்ந்தவர் தன் மனைவிக்கும், அக்காவுக்கும் தனியாக வேப்பிலை அடித்து முடித்த பிறகே தான் உறங்க செல்ல, அதற்குமேல் இருவரும் முழு நல்லவர்களாக காட்சி கொடுத்தனர்… அன்று இரவு உறங்க செல்லும் நேரம் வரை…

                         ஆண்கள் அவரவர் அறைக்கு சென்று விட்டிருக்க, மாறனின் சித்தி வேலைக்காரர் காய்ச்சி வைத்திருந்த பாலை ஆதியிடம் கொடுத்தவர் “உனக்கு சொல்ல வேண்டியது இல்ல… புத்தியா பொழைச்சுக்கோ…” என்று விட்டு தன் நாத்தனாரையும் கையோடு அழைத்து சென்றுவிட்டார்.

                          ஆதிக்கு அப்போதே ஆத்திரம் தான்..அதென்ன “உனக்கு சொல்ல வேண்டியது இல்ல..” ” என்ன நினைச்சு பேசிட்டு  இந்தம்மா.. எவ்ளோ கொழுப்பு இருக்கணும்.. வயசு மட்டும்தான் வளர்ந்து இருக்கு போல…” என்று தன் இஷ்டப்படி அவரை வசைபாடிக் கொண்டே அவள் அறைக்கு வர, அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தான் மாறன்.

                           மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவியை கண்டதும், “வா” என தலையசைக்க, “உங்க சித்தி என்ன நினைச்சுட்டு இருக்காங்க… என்னமோ உனக்கு சொல்ல வேண்டியது இல்லன்னு சொல்லிட்டு போறாங்க… என்ன மீன் பன்றாங்க அவங்க.. எனக்கு எல்லாம் தெரியும் சொல்ல வர்ராங்களா… இல்ல, இதுக்கு முன்னாடியே நான் உங்களோட எல்லாம் பண்ணிட்டேன் ன்னு சொல்லிட்டு போறங்களா… அவங்க பொண்ணுக்கு இப்படிதான் சொல்லுமா இந்தம்மா…” என்று அவள் பாட்டிற்கு பொரிய

                      மாறன்  “யாழி.. சில்.. அவங்க தெரியாம ஏதோ பேசி இருப்பாங்க.. நீ ஏன் அவங்க வார்த்தைக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்துட்டு இருக்க.. உனக்கு நான் சொல்லனுமா..” என்று அவளையே கேட்க

                      “தெரியாம பேசினாங்களா.. எல்லாம் நல்லா தெரிஞ்சுதான் பேசுனாங்க உங்க சித்தி.. இதுக்கு உங்க அத்தையும் கூட்டு… இவங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது.. அப்போகூட கேட்டாங்க இல்ல,

                               அப்பனுக்கு மேல இருப்ப ன்னு.. இவங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்.” என்று அவள் புலம்ப

              மாறன் அவளை அமைதியாக்க தான் முயன்றான் அந்த நேரம். “யாழிம்மா.. அவங்கல்லாம் ஒரு ஆளா உனக்கு.. நாளைக்கு கிளம்ப போறவங்க அவங்க.. நீ ஏன் அவங்களை பத்தி கவலைப்படற. அவங்களை பாவம் பார்த்து விட்டுடுடி..” என்றவன் அவளை தோளோடு அணைக்க முயல, “ம்ச்..” என்ற ஒற்றை முனைகளோடு விலகி நின்றாள் அவள்.

                    மாறன் “இன்னும் என்ன பேச போகிறாளோ..” என்று பார்த்திருக்க, “நீங்க இத்தனை அமைதியா இருக்க ஆள் இல்லையே… இன்னிக்கு மட்டும் ஏன் இப்படி… அதுவும் அவங்களை எதுவும் சொல்லாம, என்னை விட்டுடு சொல்றிங்க… என்ன நினைக்கிறீங்க நீங்க..” என்று அவனையும் சேர்த்து வாட்ட தொடங்கினாள் மனைவி.

                          “உனக்கு என்ன தோணுது… நீயே ஏதாவது யோசிச்சு இருப்ப இல்ல… அதை சொல்லு முதல்ல..” என்றவன் அப்போதும் விளையாட்டாக தான் கேட்டு வைத்தான்.

                           ஆனால், காலையிலிருந்து நடந்துவிட்ட நிகழ்வுகளின் தாக்கத்தில் மொத்தமாக சிக்குண்டு நிலைகுலைந்து போயிருந்தவள், இப்போது இவர்கள் வேறு இப்படி பேசி வைக்க, மொத்தத்திற்கும் சேர்த்து கொண்டவனை பந்தாட முடிவு செய்து விட்டாள் போல…

                      “உங்களுக்கும் அப்படி தோணுதா… நான் வரதராஜன் பொண்ணு ன்னு தானே என்னை மூணு வருஷம் ஒதுக்கி வச்சிருந்திங்க… இப்பவும் இந்த கல்யாணம் கிட்டத்தட்ட நானே நடத்திகிட்டது தானே… நீங்களும் நான் அப்பாவை போலவே இல்லை அதுக்கும் மேலே இருப்பேனோ ன்னு தான் பயந்திங்களா… அதுதான் இப்போ அவங்க பேசியும் அமைதியா இருக்கீங்களா…” என்று நிறுத்தி நிதானமாக ஆதி கேட்டுவிட, மாறனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

                     அவளை ஆழ்ந்து பார்த்தவன் அமைதியாக கட்டிலில் இருந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற முற்பட, “இதுக்கு என்ன அர்த்தம்… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீங்க பாட்டுக்கு இப்படி வெளியே போவிங்களா… போங்க.. கீழே உங்க அத்தையும், சித்தியும் இதுக்குதான் காத்திட்டு இருப்பாங்க…” என்றுவிட்டாள் கோபமாக

                     ஆதியின் வார்த்தைகள் அவனை நிதானமிழக்க செய்ததால் தான் அவன் அறையை விட்டு வெளியேற பார்த்ததே.. ஆனால், அப்போதும் அவள் அவனை நிறுத்தி வைத்து கடுப்படிக்க “என்ன தான் வேணும் இவளுக்கு..” என்று எரிச்சல் தான் மாறனிடம் வெளிப்பட்டது.

                    அறைக்கதவில் இருந்து கையை எடுத்தவன் நிதானமாக அவளை திரும்பி பார்த்து, “நீ எப்போ இருந்து அடுத்தவங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்ச…” என்று கேட்க

                       அவன் வார்த்தைகளில் இன்னும் தவித்து போனாள் அவள். “நான் அப்படி நினைப்பேனா..” என்று ஒரு வார்த்தை கேட்கிறானா என்று அவள் தவிக்க, “என்னை தெரியாதா இவளுக்கு..” என்று அவன் இறுகி போனான்.

                      மாறன் பார்வை அப்பட்டமாக ஆதியை குற்றம்சாட்ட, “உங்களால தான் நான் இப்படி மாறிட்டேன்… எனக்கு அவங்க யாருமே இல்லதான்… ஆனா, நீங்க… நீங்க என்னோட நிற்கணும் இல்லையா..” என்று ஆதி பாவமாக கேட்க

                     கொஞ்சம்கூட புரிந்து கொள்ளாமல் பேசும் அவளை என்ன செய்வது என்றுதான் பார்த்தான் மாறன். முகத்திலும் கடுகடுப்பை காட்டி “இப்போ என்ன செய்யணும் ன்னு சொல்ற.. அவங்ககிட்ட போய் சண்டைக்கு நிற்கணுமா… என் பொண்டாட்டியை எதுக்கு இப்படி பேசினீங்க, வீட்டை விட்டு வெளியே போங்க ன்னு சொல்லனுமா..” என்றான் மாறன்..

                       “நான் அப்படி சொன்னேனா.. அவங்களை வீட்டை விட்டு துரத்த நினைக்கிறேனா நான்.. ” என்றவளுக்கு கண்ணீர் வந்துவிட, அது இன்னும் அவனை ஆத்திரமாக்கியது…

                      “என்னடி வேணும் உனக்கு… என்ன பண்ண சொல்ற என்னை… இப்போ நான் போய் பேசினா, இன்னமும் அதிகமா தான் பேசுவாங்க… அப்பாவும் உன்னைத்தான் பேசுவாங்க..அதோட நிற்காது… ஊருக்கு போயும் சேதுமாதவன் குடும்பத்தில இப்படியெல்லாம் நடக்குது… எங்களை துரத்திட்டாங்க ன்னு தான் பேசுவாங்க… தேவையா இதெல்லாம்..” என்று கத்தியவன்

                       “நீ என்ன வேணா நினைச்சுக்கோ.. எனக்கு எதுவும் இல்ல.. ஒவ்வொரு முறையும் உனக்கு இதுதான், இப்படித்தான் ன்னு புரியவச்சிட்டு இருக்க முடியாது.. உனக்கே புரிஞ்சா தான் உண்டு…” என்று முடித்து கொள்ள

                               “அப்படி எத்தனை முறை இதுவரைக்கும் எனக்கு புரிய வச்சு இருக்கீங்க நீங்க.. இதுல எனக்கே புரியணுமா… என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு..” என்று மூக்கு விடைக்க அவள் சண்டைக்கு நிற்க

                        “பார்த்தா என்ன தெரியுது.. நல்லா கண்ணனுக்கு குளிர்ச்சியா தான் இருக்க.. ஆனா, பேசினா பேக்கு ன்னு தெரிஞ்சிடும்…” என்று அவன் கோபமாகவே சொல்லி வைத்தான்.. கூடவே கீழிருந்து மேலாக ஒரு நிதானப்பார்வையும்…

                   அவன் பார்வையும், அவன் தொனியும் கேலி செய்வதாகவே இருக்க, இயலாமைதான் பொங்கியது அவளுக்கு… எது பேசினாலும் பதில் பேசினானே ஒழிய, அவளை குளிர்விக்கும் அளவுக்கு எதுவும் சொல்லிவிடவில்லை மாறன். அதுவே அவளுக்கு குறையாகி போக, முகத்தை திருப்பிக் கொண்டு அவள் கட்டிலில் படுத்துவிட, அவளுக்கு மறுபுறம் வந்து அமைதியாக படுத்துவிட்டான் மாறன்.

                    அப்போதும் அவளை அணைத்து கொள்ளவோ, இல்லை சமாதானபடுத்தவோ எந்த செயலையும் செய்யவே இல்லை அவன்.. “என்னை கொஞ்சம் கூட நினைக்கமாட்டானா.. என்மேல கொஞ்சமாவது லவ் இருந்தா, இப்படி பேசுவானா என்கிட்டே.. இவனுக்கு என்னைவிட இவன் அத்தையம், சித்தியும் முக்கியமா ஆகிட்டாங்களா…” என்று தப்புத்தப்பாகவே சிந்தித்து கொண்டிருந்தாள் ஆதி.

                      அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கம் மாறனிடமும் மிச்சம் இருக்க, அவளை நெருங்கவே இல்லை அவன். “யாரோ எதுவோ பேசினா, அதுக்கு என்னை சோதிப்பாளா இவ.. இவளை பார்த்து பயந்தேனாம்… என்னென்ன பேசுறா… மூணு வருஷம் பின்னாடி சுத்தினா என்ன வேணாலும் பேசுவாளா??” என்று தான் அவனும் எண்ணமிட்டு கொண்டிருந்தான்.

                   இருவருக்குமே அன்று உறக்கம் இல்லாமல் போக, கையை குறுக்காக வைத்து கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த மாறன், ஆதி அழும் சத்தத்தில் எழுந்து அமர்ந்து விட்டான்… “இவளை..” என்று ஆத்திரத்தோடு எழுந்தவன் அறையின் விளக்கை எரியவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.. ஆதியின் கையை பிடித்து இழுத்து எழுப்பி அமர்த்தியவன் முகம் கோபத்தை மட்டுமே காட்டியது ஆதிக்கு..

                  அவள் கண்ணீரில் இன்னமும் கடுப்பானவன் கையை ஓங்கி விட்டான்… ஆனால், ஆதி பயத்துடன் கண்களை மூடி முகத்தை சுருக்கி கொள்ளவும், தன்னையே நிதானித்தவன் “ஒரு அடி வச்சேன்.. பல்லெல்லாம் கொட்டிடும் யாழி… இன்னிக்குதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு நமக்கு… ஞாபகம் இருக்கா….”

                     “காலையில இருந்து அழுதுட்டே இருக்க… கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு… இதுல பயந்தியா??? படுத்தியா??? ன்னு ஆராய்ச்சி வேற..” என்று அவள் தலையில் தட்டியவன் “கண்ணை துடைடி..” என்று அதட்ட, வீம்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆதி…

                     அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன் “இன்னிக்கு உன்னோட கோட்டா முடிஞ்சுது.. மீதியை நாளைக்கு வச்சுக்கோ.. இப்போ அமைதியா படுத்து தூங்குற.. என்னையும் தூங்க விடற.. அழுது என்னை தூங்க விடாம பண்ணின… அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பு இல்ல..” என்றான் கடைசி முறையாக

                    ஆதி சற்றே திமிருடன் பார்க்க, “என்ன.. என்ன நடக்கும் ன்னு கேட்கறியா.. இன்னிக்கு பர்ஸ்ட் நைட் தானே நமக்கு.. ஏன் அழுது நேரத்தை வீணாக்கனும்.. வா நாம அந்த வேலையை பார்ப்போம்…” என்று மீண்டும் அவள் கையை பிடித்து மாறன் இழுக்க, இம்முறை வேகமாக அவனை தள்ளி விட்டவள் கட்டிலில் பின்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

                               மாறன் எதுவும் பேசாமல் அவளை அசையாமல் பார்த்திருக்க, “எனக்கு தூங்கணும்.. வழி விடுங்க..” என்றாள் உத்தரவாக

                 “என்னை தூங்கவிடாம பண்ணிட்டு நீ தூங்குவியா… எனக்கு தூக்கம் வரல இப்போ… அதுக்கென்ன பண்றது..” என்று மாறன் முறைக்க

                   “தெரியாம அழுதுட்டேன்.. இனி அதையும் பண்ணமாட்டேன்.. உங்க தூக்கத்துக்கு ஒரு குறையும் வராது.. போய் படுங்க..” என்றவள் படுக்க போக,

                அவளை பிடித்து அமர்த்தியவன், “இந்த சாரியை மாத்திட்டு படு… முகத்தை கழுவு.. எழுந்துக்கோ..” என்றான் கட்டளையாக… அவன் குரலை மறுக்காமல் அந்த அறையில் இருந்த தன் பெட்டியில் இருந்து ஒரு இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தவள் அடுத்த பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தாள்..

                  மீண்டும் அவள் கட்டிலுக்கு செல்ல, “யாழி இதை குடிச்சுட்டு படு…” என்று பாலை அவளிடம் நீட்டினான் மாறன்…

                  “எனக்கு வேண்டாம்..” என்றுவிட

                 “சண்டை போட்டு டயர்டா இருக்க.. குடிச்சுட்டு படு…” என்றவன் நீட்டிக் கொண்டே இருக்க,

                 “உங்க சித்தி அந்த பாலை வேறொரு விஷயத்துக்கு கொடுத்தாங்க..” என்று நக்கலாக அவள் ஞாபகப்படுத்த

                    “வாய் அடங்குதா இவளுக்கு…” என்று தான் பார்த்தான் மாறன் அப்போதும்…

                     ஆதி தானாகவே, “உங்க சித்தி கொடுத்த பாலை குடிச்சு தான் நான் பர்ஸ்ட் நைட் கொண்டாடணும்ன்னா, அது தேவையே இல்ல…” என்றவள் அந்த கட்டிலில் இருந்த போர்வையை தலைவரை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

                      மாறனின் மனம் நேரங்காலம் இல்லாமல் “வாய்ப்பில்ல ராஜா…” என்று நக்கலடிக்க, “போடி..” என்று அவளை திட்டிக் கொண்டே படுத்தான் அவன்…