மாறன் அவளை கழுத்தோடு சிறை செய்திருக்க, அவ்வபோது சில மென்முத்தங்கள் அவளின் மேல்
நெற்றியிலும், அவளின் காது மாடல்களின் மீதும்… சில நீண்ட நிமிடங்களுக்கு பின்பே அவர்களின் மோனநிலை கலைய, இன்னமும் கண்ணீர் வற்றவே இல்லை யாழிக்கு…
அவளை அங்கிருந்த ஊஞ்சலில் அமர்த்தியவன், தான் தரையில் அமர்ந்து கொள்ள அடுத்த நிமிடம் அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள… தமிழ் காதலுடன் அவளை பார்த்தான். அவன் கழுத்தை வளைத்து இதழை சிறை செய்தவள் வெகுநேரம் கழித்தே விடுவிக்க, தமிழ் அதே மாறா புன்னகையுடன் தான் பார்த்திருந்தான் அவளை.
“என்னைக்கோ ஒருநாள் பேச்சு வாக்குல நான் சொன்னதையே உங்களால மறக்க முடியல.. வார்த்தைக்கு வார்த்தை வடிவம் கொடுத்து இருக்கீங்க… நீங்க என்னை மறந்துட்டீங்களா…” என்றவள் லேசாக கோபம் கொள்ள, மெல்ல சிரித்தான் மாறன்.
“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்..??” என்றவள் அவன் கண்களை கூர்ந்து நோக்க
“உனக்கு என்ன புரியுதோ அதுதான்..” என்றான் ஆழமாக…
அவன் குரல் அவன் மனநிலையை உணர்த்திவிட, “எனக்கு புரியவே இல்லை…ஏன் இந்த வேஷம்??? நான் என்ன தப்பு பண்ணேன் மாறா..” என்றவள் அவன் சட்டையின் காலரை பிடித்து இருக்க
அது அவளை குளிர்விக்காமல் கொதிக்க செய்ய “அது இப்போதான் தெரியுதா உனக்கு…” என்று அவன் இரு கன்னத்தையும் தன் இரண்டு கைகளால் பற்றியவள் வலிக்கும் படி இழுக்க, அந்த புன்னகை மாறவே இல்லை அவனிடம்.
அவளே அவனை விடுவிக்கவும், அவள் தாடையை ஒரு கையால் பற்றிக்கொண்டவன் “என் யாழியை பார்த்த முதல்நாளே தெரியும்… ஆனா, எனக்கு என்னையும் தெரியும் இல்லையா… என் யாழியை நானே தண்டிச்சுட கூடாது இல்லையா…”
“எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்லை யாழி.. அப்பா விஷயம் அதிர்ச்சிதான் எனக்கு.. அதுக்கு உன் அப்பா காரணம்ன்னு தெரிய வரவும், நிச்சயமா என்னால சொல்ல முடியாது…அன்னிக்கு நிலைமைக்கு என் அம்மாவும், தம்பியும் இல்லாம போயிருந்தா, உன் அப்பாவை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன் நான்.. அப்படி ஒரு கோபம்…”
“அதே கோபம் தான் உன் மேலேயும்.. அவரோட மகள் தானே இவ அப்படி யோசிச்சிட்டேன். ஆனா, நீ என்னோட யாழி ன்னு சொல்லிட்டே தான் இருந்த.. ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திட்டே இருந்த.. எதையுமே கேட்கிற மனநிலையில் நான் இல்லை யாழி..”
“எதுவும் வேண்டாம்ன்னு நினைச்சிட்டேன்… உன் அப்பாவை சொல்லி உன்னை பேசிட்டா, அப்புறம் என்னோட காதலுக்கு என்னடி அர்த்தம்… நிச்சயமா பேசி இருப்பேன் நான்.. அந்த நிலைமையில தான் இருந்தேன்…உன் அப்பாவையும் நான் சும்மா விடறதா இல்ல… அதனாலதான் உன்னை விட்டு விலகினேன்…”
“நீ எங்கேயோ, எப்படியோ நல்லா இருந்தா போதும் ன்னு நினைச்சேன்..என்னை பொறுத்த வரைக்கும் அது தப்பா தெரியல… “என்று அவன் முடிக்கும் முன்பே
“இப்படித்தான் இருக்கும் ன்னு தெரிஞ்சதால தானோ என்னவோ, உங்களை விடவே முடியல என்னால… ஒரு நிமிஷம் கூட உங்களை தாண்டி வேற யோசிச்சது இல்ல… ஏதோ ஒரு எண்ணம்.. என் மாறன் என்னை மறந்திட மாட்டார் ன்னு..” என்று யாழி கூற
அவளை வெறுமையாக பார்த்து சிரித்தவன் “நீ என்னை நம்பாமலே இருந்திருக்கலாம் யாழி.. உன்னோட இந்த நம்பிக்கை தான் என்னை குற்றவாளியா நிற்க வைக்குது..” என்றான் மாறன்..
அவன் குரலின் வெறுமை ஆட்டி வைத்து ஆதிரையை… தந்தை இறந்த நேரத்தில் கூட அவன் முகத்தில் இந்த வெறுமையையோ நிராசையையோ கண்டதே இல்லை அவள்..
“ஏன் அப்படி சொல்றிங்க.. என்கிட்டே என்னப்பா.. என்ன உங்களை அரிச்சுட்டு இருக்கு… என்கிட்டே சொல்லலாம் இல்ல..” என்று கலங்கியவள் “பயமா இருக்கு மாறா.. ” என்றும் கூற
“அப்பாவோட இழப்பை என்னால இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியல யாழி.. அதுக்கு காரணமான உன் அப்பாவையும்சேர்த்து தான் சொல்றேன்.. என்னால ஏத்துக்க முடியல… என்னால அவரை உறவா எல்லாம் பார்க்க முடியும் ன்னு தோன்றவே இல்ல”
“அதோட இந்த கல்யாணமும்… எனக்கு இப்படி.. பெருசா கல்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இல்ல… நான் அந்த செர்டிபிகேட் வச்சு உன்னை தூக்கிட்டு போகத்தான் பிளான் பண்ணேன்… நீ என்னோட வந்துட்டா போதும்… உன்னை என்னால சமாளிக்க முடியும் ன்னு நினைச்சேன்… உன் அப்பாவுக்கு தண்டனையா..” என்று முடிக்க முடியாமல் திணறி அவன் நிறுத்த
அவன்மீது பெரிதாக கோபம் எல்லாம் வரவே இல்லை யாழிக்கு… “சொல்லவே முடியாமல், விழுங்கி கொண்டு நிற்கிறான்… இவனா என்னை கலங்க வைப்பான்..” என்று அப்போதும் அவனை நம்பியது பெண் மனம்…
அவனின் இந்த குற்ற உணர்வும், குனிந்த தலையும் தன் காதலுக்கான கவுரவமாகவே அவள் கருத, அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் மீண்டும்…
மாறன் புரியாமல் பார்க்க, “கல்யாணம் பண்ணிப்போம் மாறன்… என்ன நடந்தாலும், நீங்க என்கூடவே இருங்க.. அப்பாவை வச்சு என்னை எதுவும் பேசிட்டாலும் கூட, அடுத்த ஒருமணி நேரத்துல நீங்களே என்னை சரி பண்ணிடுங்க… ஆனா, எதுவா இருந்தாலும் விலக்கி நிறுத்த வேண்டாம்..”
“திரும்பவும் ஒருமுறை இதை எல்லாம் கடந்து வர தைரியம் இருக்குமா தெரியல… இப்போவே ரொம்ப வீக்கா இருக்கேன் நான்… என்னால இதையெல்லாம் தனியா ஹாண்டில் பண்ண முடியும் ன்னு தோணல.. உங்ககூடவே இருக்கேன்…”
“ என்னை அடிக்கிறதோ அணைக்கிறதோ எல்லாமே…எல்லாமே உங்க முடிவு தான்.. ஆனா, தனியா விடாதீங்க…” என்றவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ள, அவளின் காதல் “என்னை என்ன செய்ய முடியும் உன்னால்..” என்று கேள்வி கேட்டது தமிழிடம்…
“நீ என்னை ரொம்ப கேவலமா பீல் பண்ண வைக்கிற யாழி.. உன்கிட்ட காதலை சொன்னதை தவிர, எனக்கு வேற எந்த தகுதியும் இல்ல.. ஆனா, உன்னை விட்டு விலக முடியும்ன்னு தோணல.. கல்யாணம் பண்ணிப்போம்.. ஆனா, அதுக்கு பிறகு என்ன நடந்தாலும், நீயும் பொறுப்பு…”
“சொல்ல முடியாது… நானே உன்னை கஷ்டப்படுத்தலாம்.. நீ காயப்படும்படி எதுவும் பேசி வைக்கலாம்… நீ கடைசியா ஒருமுறை யோசிச்சுக்கோ..” என்று அப்போதும் அவன் கூற
“எனக்கு யோசிக்க எதுவும் இல்ல… நான் தெளிவா இருக்கேன்.. நீங்க என்கூட இருங்க, எது வந்தாலும் நான் மீண்டு வர அது போதும்… உங்களால மட்டும் இல்ல, என்னாலும் உங்களை விட்டு கொடுக்கவோ, விட்டு விலகவோ எப்போதும் முடியாது…” என்றவள் எழுந்து கொள்ள அவளை பிடித்து இழுத்தவன் மீண்டும் அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.
சட்டென அவன் இழுத்து இப்படி மடியில் கிடத்திக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அதிர்ச்சி மாறாமல் யாழி அவனை பார்க்க, “இப்படி பார்த்து வைக்காத கடலைமிட்டாய்… கடிச்சு மென்னு தின்னு உன்னை முழுசா எனக்குள்ள கொண்டு வர தோணுதுடி எனக்கு..” என்றவன் அவள் காது மடலை லேசாக கடித்து விடுவிக்க, பே வென்று பார்த்திருந்தாள் பெண்.
அவளின் அந்த பார்வை இன்னமும் தூண்டிவிட, அவள் இடையை இறுக்கி வளைத்தவன் இந்த முறை அவள் கழுத்தில் அழுத்தமாக கடித்து வைக்க, பல் தடங்கள் பதிந்து போனது அங்கும்… வலியில் “ஸ்ஸ்ஸ்..” என்று லேசாக அவள் முனக, முனகிய உதடுகள் அடுத்த கணம் அவன் வசமாகி இருந்தது…
இருள் கவிழ்ந்து கொண்டிருந்த அந்த ஏகாந்த நேரம் இவர்களுக்கு விருந்தாக அமைந்தாலும், கண்ணியம் தவறாமல் ஒரு எல்லையோடு நின்றவன் கேட்க வந்ததை கூட அவளிடம் கேட்டுப்பெற முயற்சிக்காமல் அவளை அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்டான்.
ஆனால், “நீ கேட்காவிட்டாலும் உன்னை நானறிவேன்..” என்று அறிவிப்பது போல, அடுத்த நாளே அவள் காரியத்தை சாதித்து இருந்தாள் யாழி… மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக் கொண்டதாக ஒரு கதையை சொல்லி, திருமணத்தை எளிதாக ஒரு கோவிலில் வைத்துக் கொள்ள தன் வீட்டிலும், சத்யாவிடமும் பேசி ஒப்புதல் வாங்கி இருந்தாள்..
மாலையோ அல்லது அடுத்த நாளோ வரவேற்பு போல் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் எடுத்து சொன்னபோதும், “ம்மா.. நாங்க மேரேஜ் முடிஞ்ச அன்னைக்கே ஹனிமூன் கிளம்ப போறோம்… நேத்து அதைப்பத்தி பேசத்தான் என்னை கூட்டிட்டு போனாங்க..” என்றாள் வெட்கத்துடன்..
அதற்குமேல் பெரியவர்கள் எங்கே பேச… அடித்துக் கொண்டு, முட்டி மோதிக் கொண்டவர்கள் இப்போதாவது சமாதானம் ஆனார்களே என்று அந்த வகையில் ஆறுதல் பட்டுக் கொண்டனர்.
எழில் விஷயத்தை அப்படியே அண்ணனிடம் ஒப்புவிக்க, “அப்படியா..” என்பது போல கேட்டுக் கொண்டவன் அறைக்கு வந்ததும் தன்னவளுக்கு அழைக்க, அழைப்பு எடுக்கப்படவும், “சொல்லுங்க..” என்றாள் பெண்..
“என்ன சொல்லணும்… நிறைய நிறைய நன்றி தான் சொல்லணும்.. ஆனா, நமக்குள்ள அவசியம் இல்ல இல்லையா..” என்று காதலாக அவன் கேள்வியெழுப்ப, வெறுமனே “ம்ம் ” என்ற ம்காரத்தின் ஓசை மட்டுமே…
“சாப்பிட்டியா..” என்று கேட்டபோதும்
“ம்ம்..”
“கோர்ட்டுக்கு போறியா..” என்ற அடுத்த கேள்விக்கும்
“ம்ம்..”
“வெறும் ம்ம் மட்டுமே சொல்றேன் ன்னு எதுவும் வேண்டுதலா யாழிமா..” என்றதற்கும்
“ம்ம்” தான்
“ஏண்டி இப்படி பண்ற.. என்கிட்டே பேச என்ன..” என்று குரல் உயர்த்திய போதும்
“ம்ம்..” என்ற காரம், மெல்லிய நக்கல் கேள்விக்கான தொனியில் வெளிவந்தது…
பொறுமை இழந்தவனாக “யாழி..” என்று அவன் பல்லை கடிக்க
சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தமிழ்க் காதலி…. என்ற மெல்லிய குரல் மழைச்சாரல் போல் இனிமையாக நனைத்தது அவனை… அவள் காதலில் அவன் கரைந்து போக காத்திருக்க, எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட வெட்கம் ஆட்டுவித்ததில் அழைப்பை துண்டித்து, முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டாள் அவள்…
இருவரின் மனநிலையும் ஒரு இனிமையிலேயே இருக்க,அவர்கள் திருமணம் முடியும் நாள் வரை அந்த மனநிலையை நீட்டிக்க செய்ததில், பெரும்பங்கு யாழியை சேர்ந்தது.