வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே நுழைய அத்தனை தயக்கம்.. கேளாமலே தந்தையின் முகம் வேறு நினைவு வர, சற்றுமுன் இருந்த புன்னகையை தொலைத்து முகம் கசங்கி போயிருந்தான் அவன். அவனை பற்றி தெரிந்து தான் யாழியும் அவசரமாக படிகளில் ஓடி வந்தாள்.
ஆனால், அவளுக்கு முன்பே உமாதேவி தமிழ்மாறனை பார்த்துவிட,கண்கள் கலங்கி போனது அவருக்கு.. முயன்று “வா தமி..” என்று தொடங்கியவர் “வாங்க.. தம்பி..” என்று மாற்றி கொண்டார்.
அவரின் தடுமாற்றம் உணர்ந்தவன் “உங்க தமிழ்தான் அத்தை…” என்றான் ஆதரவாக..
அவருக்கும் அந்த ஒரு வார்த்தையே போதுமாக இருக்க, அதற்குமேல் யோசிக்கவே இல்லை அவர். அவன் கைபிடித்து “வாடா கண்ணா..” என்று கண்ணீருடன் உள்ளே இழுத்து வந்தார்.
அவனை சோஃபாவில் அமர்த்தியவர், “இங்கேயே இரு வர்றேன்..” என்று சமையல் அறைக்குள் செல்ல, அப்போதுதான் யாழியை கவனித்தான் தமிழ்.
கடைசிப்படியில் நின்றவள் தலையில் இருந்த துண்டை இன்னும் இருக்கவில்லை. நெற்றியும் வெறும் நெற்றியாக இருக்க, அவளை நெருங்கினான் தமிழ். அவள் தலையில் இருந்த துண்டை அவன் கழட்டிவிட, முடி அவள் வயிற்று பகுதியை தாண்டி கீழே வரை நீண்டது.
அவளை ரசனையாக பார்வையிட்டு மீண்டும் முகத்திற்கு வந்தவன் “பொட்டுக்கூட வைக்காம என்ன பண்ற நீ…” என்று அவள் கண்ணில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கிவிட, சரியாக அப்போதுதான் வரதன் மேல்படியில் இருந்து இறங்கி கொண்டிருந்தார்.
அவர் பார்வையில் முதலில் விழுந்தது தமிழ்தான்.. அதன்பின்னரே மகளை கவனித்தவர் இருவரின் நெருக்கத்தில் ஆத்திரம் கொண்டு “ஆதி..” என்று அதட்டலாக அழைக்க, பதறிக் கொண்டு அவள் விலக முற்பட்டாள்… அவ்வளவுதான்.. தமிழ் தான் அவள் விளக்கவிடாமல் அவள் கையை பிடித்து நிற்க வைத்திருந்தானே…
ஆதி பதட்டத்துடன் தந்தையை பார்க்க, தமிழ் ஒரு சிரிப்புடன் தான் நின்றிருந்தான். அவரின் முறைப்பை கண்டுகொள்ளாமல் “சீக்கிரம் கிளம்பி கீழே வா..” என்று நிதானமாக அவளிடம் கூறி அவளை அனுப்பி வைத்தான் அவன்.
இதற்குள் உமாதேவியும் அவனுக்கு பிடிக்கும் விதத்தில் ஏலக்காய் மணக்க டீ எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். தன் கணவரையும், படியின் அருகில் நின்றிருந்த தமிழையும் அவர் பார்க்க, “டீ எனக்குதான அத்தை… “என்று கேட்டுக் கொண்டே டீயை கையில் எடுத்தவன் சாவகாசமாக சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
உமாதேவியும் அவன் அருகில் அமர்ந்தவர் “எப்படி இருக்க தமிழ்…அம்மா எப்படி இருக்கா… எழில் எப்படி இருக்கான்..” என்று கேள்வி எழுப்ப
வரதனும் வந்து அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர, அவரை கண்டுகொள்ளவே இல்லை உமாதேவி… அவரின் கவனம் தமிழிடம் தான் இருந்தது…
“என்ன பண்ற தமிழ்.. அம்மாவுக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா..” என்று அவர் கேட்க
“இத்தனி கேள்வி கேட்கறவங்க, நேராவே வந்து பார்த்துருக்கலாம்தானே..” என்றுவிட்டான் தமிழ்..
“வந்து விசாரிக்கிற மாதிரியா இருக்கு நிலைம… நீயா இங்கே வந்து நிற்கிற வரையும் கூட நம்பிக்கையே இல்ல… உன்னை திரும்பவும் இந்த வீட்டுக்குள்ள பார்ப்பேன் ன்னு.. எந்த முகத்தை வச்சுட்டு உங்களை தேடி வருவேன்… எல்லாத்தையும்விட, சத்யா.. அவளை பார்க்கிற தைரியம் இல்லையே எனக்கு..” என்று உமா கண்ணீர் விட, அவரின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தமிழ்.
வரதனுக்கு அவர்களை பார்க்க பார்க்க வயிறு எரிந்தது. தமிழின் வருகை நிச்சயம் சாதாரணம் இல்லை என்று தெரிந்தது அவருக்கு. அதுவும் மகளுடன் நெருக்கமாக அவன் நின்ற காட்சி இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது உள்ளே. இது எதுவும் தெரியாமல் அவனை சீராட்டிக் கொண்டிருக்கிறாள் என்று மனைவி மீதும் ஆத்திரம் தான்.
ஆனால், அவரின் ஆத்திரத்தை மதிக்க அங்கே ஆள் இல்லாமல் போக,அவரின் மகள் படிகளில் இறங்கி வந்தாள். தலையை ஒரு கிளிப்பில் அடக்கி இருக்க, ஒரு மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த சுடிதார்… நெற்றியில் அதே மஞ்சளும் கருப்பும் சேர்ந்த கல்பொட்டு.
மகளின் அழகு மனதை நிறைத்த அதே சமயம் அருகில் இருந்தவனை நினைத்து எரிச்சலாகவும் வந்தது. இவள் ஏன் இப்போது கீழே வந்தாள் ?? என்று மகள் மீதும் காரணமே இல்லாமல் கோபம் வர, “ஆபிசுக்கு கிளம்பலையா ஆதி..” என்று என்றும் இல்லாத திருநாளாக மகளிடம் கேள்வி கேட்டார் அவர்.
மகளும், தானும் சகஜமாக இருப்பதாக அவனிடம் காட்டிக் கொள்ளும் எண்ணம் தான். ஆதி அவரை பார்த்தவள் பதில் எதுவும் சொல்லாமல் நிற்க, தமிழ் பேசினான் அங்கே.
“நாந்தான் அவளை வீட்ல இருக்க சொன்னேன் அத்தை..” என்று அவன் உமாவிடம் கூற, அந்த இடத்திலேயே எரிச்சல் தான் வரதனுக்கு. இந்த சாக்கை வைத்தாவது மகளை பேசவைத்து விட வேண்டும் என்று அவர் நினைக்க, அவளுக்கு பதில் இவன் பேசுகிறானே என்று கோபம்தான் வந்தது.
அந்த கோபத்துடனே “என் மகளை வீட்ல இருக்க சொல்ல நீ யாருடா?? அவளை நீ ஏன் லீவு போடா சொன்ன..” என்று அவரின் அனுமதி இல்லாமல் தெறித்தது வார்த்தைகள்.
தமிழ் நிதானமாக அவரை பார்த்தவன் “மூணு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு முடிவு பண்ணவ அவ.. அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ன்னு அவளுக்கு தெரியும். நான் வந்தது எங்க கல்யாண விஷயமா பேச.. எப்போ இவளை என் வீட்டுக்கு அனுப்ப போறீங்க…” என்றான் தோரணையாக
அவனின் அந்த நிதானத்தில் சுதாரித்தவர் “என் மகளை உனக்கு கட்டி கொடுக்க நான் தயாரா இல்ல.. மூணு வருஷத்துக்கு முன்ன வாய் வார்த்தையா பேசினது தானே.. உங்களுக்கு நிச்சயம் கூட நடக்கல…அப்புறம் எதை வச்சு உரிமை கொண்டாட வந்திருக்க..”
“என் மகளுக்கு மாப்பிளை பார்க்க எனக்கு தெரியும்.. கண்டவன் எல்லாம் வந்து அவளை கட்டிட்டு போக முடியாது.. வெளியே போடா..” என்று விட்டார் காட்டமாக
அவரின் இந்த மரியாதை அற்ற வார்த்தைகளில் தானும் கடுப்பானவன், திரும்பி யாழியை பார்க்க,அவளும் பதைத்துக் கொண்டு தான் நின்றிருந்தாள்.. முகம் முழுக்க தவிப்புடன் அவளை பார்க்கவே ஏதோ போல் இருக்க, தன்னை அடக்கி கொண்டான் அவன்.
உமாதேவி “உங்களுக்கு எத்தனை பட்டாலும் புத்தியே வராதா.. என் மகளை பத்திக் கூட யோசிக்க மாட்டிங்களா?? அவ வாழ்க்கையை கெடுக்கறதுல அப்படி என்ன உங்களுக்கு ஆசை உங்களுக்கு?? அவளை நிம்மதியாவே விடமாட்டிங்கள்ங்க நீங்க..” என்று கத்த
“இது என் மக வாழ்க்கை.. என் முடிவு தான்… நீ இதுல தலையிடாத உமா.. இவன் நீ நினைக்கிற மாதிரி இல்ல.. என் மகள் இவனை கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்..” என்று அவர் பேசிக் கொண்டே இருக்க
“அதை சொல்ல நீங்க யாரு..” என்றான் அவன்..
வரதன் ஆத்திரமாக, “நான் யாரா?? என் பொண்ணுடா அவ…நான் சொல்லாம யாரு சொல்வா..” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றுவிட்டார்.
அவ்வளவுதான்.. அடுத்த நிமிடம் “என் பொண்டாட்டி அவ.. என்னைத்தவிர யாருக்கும் அவமேல உரிமை இல்ல…” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தான் அவன்.
யாழிக்கு அவன் போகும் பாதை புரிந்துவிட, வரதன் “பொண்டாட்டியா… என் மகளை நீ எப்போடா கல்யாணம் பண்ண… இப்போதான் கல்யாணம் பேசவே வந்திருக்க, அதுவும் நான் முடியாது வெளியே போ ன்னு சொல்லியாச்சு.. இதுல பொண்டாட்டியாம்..” என்று நக்கலாக பேசிவிட
தன் சட்டை பையில் இருந்த தங்களின் அந்த திருமண சான்றிதழை வரதனிடமும் நீட்டினான் தமிழ்.. ஆனால் “இதை எல்லாம் நம்ப நான் என்ன முட்டாளா.. எனக்கு தெரியும்டா என் மகளை…. எங்களை மீறி அவ எதுவும் செய்யமாட்டா…நீ முதல்ல வெளியே போ..” என்று அவர் அந்த காகிதத்தை கையில் கூட வாங்காமல் சத்தம் போட
தமிழ் இப்போது அவர் மகளை நெருங்கினான். “கிளம்பு.. என் வீட்டுக்கு போகலாம்.. இவர் உன்னை அனுப்பி வைக்கிறதா இல்ல.. இப்போவே என்னோட கிளம்பு யாழி..” என்று நிற்க, அவன் வார்த்தைகளில் யாழி மட்டும் இல்லாமல், உமாதேவியும் அதிர்ந்து தான் நின்றார்.
ஆனால், வரதன் இன்னமும் ஆத்திரம் கொண்டவராக அவன் சட்டையை பிடிக்க, அவரின் கையை லேசாக தட்டி விட்டவன் “நாந்தான் பொய் சொல்றேன்.. உன் பொண்ணை கேளு… இந்த சர்டிபிகேட் பொய் ன்னு சொல்ல சொல்லுய்யா..” என்று என்றான் திமிராக
அவன் கூற்றில் கொதித்தவர் “நீ சொல்லு ஆதிம்மா.. இதுக்கு என்ன அர்த்தம்..” என்று மகளிடம் கேட்க, அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தான் நின்றாள் அவள்..அவள் அமைதியில் இன்னுமே கோபம் வர “உன்கிட்டேதான் கேட்கிறேன் ஆதி.. பதில் சொல்லு.. இவன் என்ன சொல்றான்..” என்று மகளை உலுக்க, கண்களில் கண்ணீருடன் தமிழை பார்த்தாள் அவள்.
அவள் தவிப்பை உணர்ந்தவராக உமாதேவி “அவளை ஏன் கேட்கறீங்க.. எனக்கு தெரியும்.. விடுங்க.. தமிழ் சொல்றது உண்மைதான்.. அவ என்கிட்டே சொல்லிட்டு தான் செய்தா..” என்றுவிட, அவர் முடிக்கும் முன்பாகவே அவரை கன்னத்தில் அறைந்திருந்தார் வரதன்..
“என்ன இவன் கூட சேர்ந்திட்டு நாடகம் ஆடறியா… என் பொண்ணு இப்படி ஒரு காரியத்தை செய்வாளா… எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்த பார்க்கிறிங்களா..” என்று கத்திவிட்டு
மீண்டும் யாழியிடமே திரும்பினார். “நீ சொல்லு ஆதி.. இது உண்மையா..” என்று அவர் கேட்க, அவர் அன்னையை அடித்ததிலேயே, அவர் நிதானத்தில் இல்லை என்று புரிந்தது அவளுக்கு.
அவரின் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்தவள் “உண்மைதான்..” என்றுவிட, தளர்ந்து போனார் வரதன். மகளின் மீது வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டு இருக்க, இரண்டடி பின்னால் சென்று நின்றார் அவர்.
தன் குடும்பம் தன் கையை விட்டு போனது போல் இருந்தது அவருக்கு. சேதுமாதவன் தன்னை ஏளனமாக பார்த்து சிரிப்பது போலவும் ஒரு பிரம்மை… தொழில் அடி மேல் அடி விழுந்த போதும் கூட கலங்காதவர் இன்று மகளின் செயலில் கலங்கி போயிருந்தார்.
மகள் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிந்து இருப்பாள் என்று நம்பவே முடியவில்லை அவரால். அன்று பெரிய மகள் சொன்னபோது கூட, தமிழ் பொய் சொல்வதாகவே நினைத்திருந்தார் அவர்.
இப்போது மகள் “உண்மைதான் ” என்றுவிட, இதற்குமேல் என்ன இருக்கிறது என்று நினைவு தான். தமிழ் அவரின் நிலையை பார்த்துக் கொண்டே நின்றவன், மீண்டும் அழுத்தமாக “இப்போ நான் இவளை கூட்டிட்டு போகலாம் இல்லையா… ” என்று கேட்டுவிட்டு அவள் கையை பிடித்துக் கொண்டு வெளியே நடக்க முற்பட, அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் யாழி..
அவன் இப்படி அழைத்து சென்று விடும் முடிவில் இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை அவள். அவள் அவன் இழுப்புக்கு நடக்க, உமாதேவி சுதாரித்து இருந்தார். தமிழுக்கு முன்பாக வந்து நின்றவர் “அவளை விடு தமிழ்…” என்று கட்டளையாக கூறவும், சட்டென தன் கையை விலக்கி கொண்டான்.
உமாதேவி மகளை தன்னிடம் இழுத்துக் கொண்டவர் “கல்யாணமே ஆனாலும் கூட, இவ என் பொண்ணுதான்… உனக்கு பொண்டாட்டி ஆகிட்டா, எனக்கு மக இல்லன்னு ஆகிடுமா… நீ கிளம்பு.. நான் அடுத்து என்ன செய்யணும்ன்னு சத்யாகிட்ட பேசிக்கறேன்..”
“கல்யாணம் செஞ்சவரைக்கும் போதும்.. அதுக்குமேல என்ன செய்ய ன்னு பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்…” என்று கூறியவர் “கிளம்பு..” என்பது போல் பார்க்க, அமைதியாக அங்கிருந்து கிளம்பினான் அவன்.
ஆனால், அவன் மனதில் வரதனை வென்றுவிட்ட திருப்தி இல்லவே இல்லை. மாறாக யாழியின் தவித்த முகம் கண்ணிலேயே இருந்தது. அது போதாது என்று அடுத்த அரைமணி நேரத்தில் அவன் அழைத்தும் அவன் அழைப்பை எடுக்காமல் அவனை தவிக்க விட்டவள், அடுத்த ஒரு வாரமும் முடிந்த போதும் அவனிடம் பேசி இருக்கவில்லை…
வீட்டை விட்டும் வெளியே வராமல் தனக்குள் சுருங்கி கொண்டிருந்தாள் அவனின் யாழி….