ஒரு கேக்கை வைத்து மணமக்களை வெட்ட சொல்லி, ஊட்டிவிட சொல்லி என்று ஆர்பரித்தவர்கள் அரைமணி நேரம் கழித்து கீழே இறங்க, அதுவரையிலும் கூட அவள் கண்ணில் படாமல் ஒதுங்கி தான் நின்றிருந்தான் தமிழ். இவர்கள் கீழே வந்ததும் முன்னால் வந்தவன் மேடையேற, அப்போது தான் யாழி அவனை கவனித்தாள்.
அவள் கண்கள் முதலில் அவனின் உடையை தான் கணக்கிட்டது. அன்று பார்த்து அவனும் கருப்புநிற கோட்சூட்டில் வந்திருக்க, சட்டென ஒரு உவகை உள்ளே ஊற்றெடுக்க, அதுவரை இருந்த எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகி விட்டாள் பெண். மனம் அவனின் எளிமையான அழகில் மயங்கி நிற்க, அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது நினைவில் வரவும்,முகம் மகிழ்ச்சியை மொத்தமாக இழந்து நின்றது.
தன் முகமாற்றத்தை நண்பர்கள் அறிந்து கொள்ளாமல் அழகாக சமாளித்தவள், முடிந்தவரை தமிழையும் தன்னுள் நிறைத்து கொண்டாள். இப்படி எப்போதாவது பார்ப்பது தான் அவனை. கிடைக்கும் நேரங்களில் ரசித்துக் கொள்வது தானே…
அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறான் என்று மனம் நினைவூட்ட, “சந்தோஷமா இருக்கட்டுமே அவனாவது…” என்றுதான் நினைத்தாள். ஆக, அவளின் நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி கொண்டது விலகளுக்கு..
தமிழ் தன் நண்பர்களுடன் உணவை முடித்துக் கொள்ள, அவன் கண்ணில் படும் இடத்தில தான் அமர்ந்திருந்தாள் யாழி. கையில் அவளின் உணவுத்தட்டு.ஆனால், பெரிதாக எதையும் உண்டிருக்கவில்லை. அவளின் நண்பர்கள் எழுந்து கொள்ளவும், அவளும் எழுந்து விட்டாள்.
மணப்பெண்ணிடம் சொல்லிக்கொண்டு அவள் கிளம்ப பார்க்க, “கார்ல தானே வந்திருக்க ஆதி.. கொஞ்ச நேரம் என்னோட இரேன்…” என்று அவளை வற்புறுத்தினாள் அவளின் தோழி. நேரம் இன்னும் ஒன்பதை தொடாமல் இருக்க, மறுக்காமல் ஆவலுடன் சிறிது நேரம் நின்றிருந்தாள்.
மற்ற தோழர்கள் கேப் புக் செய்து வந்திருக்க, பையன்கள் வண்டியில் வந்திருந்தனர். அவர்கள் “நீ பார்த்து போய்டுவியா ஆதி.. கிளம்பட்டுமா..”என்று கேட்டுக் கொண்டே நிற்க, அவர்களை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
“ஏய் குழந்தையாடா நான்.. அதெல்லாம் போய்டுவேன்.. கார் தானே..நீங்க முதல்ல ஒழுங்கா, நேரா வீட்டுக்கு போங்க..” என்று அதட்டி அவர்களை அனுப்பி வைத்தாள்.
சிறிது நேரம் அப்படியே கழிய, தமிழ் உணவை முடித்து வந்தவன் மேடையில் நின்றிருந்தவளை பார்த்து, தன் கையில் இருந்த வாட்சையும் பார்க்க, அதே நேரம் மணமக்களை சாப்பிட அழைத்து சென்றனர்.. நேரம் பத்து நாற்பதை தொட்டு கொண்டிருக்க, “இன்னும் கிளம்பாம என்ன பண்றா..” என்று அவளை முறைத்து பார்த்திருந்தான் மாறன்.
அவன் பார்வையை புரிந்தவள் தன் தோழியிடம் விடைபெற்று கார் இருக்குமிடம் வர, அந்த இடமே காலியாக இருந்தது. அவளுக்கு சற்று தள்ளி தன் காரின் அருகே நின்று அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான் அவன். ஏனோ அவன் அங்கே நின்றது இனம்புரியாத ஒரு ஆறுதலை கொடுக்க, சிறு சிரிப்புடன் அவனை நெருங்கியது பெண்.
தன் அலைபேசியில் இருந்து தலையை நிமிர்த்தியவன் முறைப்பாக யாழியை பார்க்க, “தேங்க்ஸ்..” என்றுவிட, அவளை புரியாமல் பார்த்தான் அவன்.
“இங்கே வெயிட் பண்ணதுக்கு..” என்று அவளே கூற
“இப்படி வேற நினைப்பிருக்கா உனக்கு… யார் நீ.. நான் ஏன் உனக்காக வெயிட் பண்ணனும்…” என்று வழக்கம் போல் அவன் கத்த
என்ன மனநிலையில் இருந்தாலோ வழக்கமாக அமைதியாக கடந்து விடுபவள் அன்று “ஆமா.. நீங்க ஏன் வெயிட் பண்ண போறீங்க…அதான் வீட்ல மேரேஜ்க்கு ஓகே சொல்லியாச்சே.. இனி என்னை பத்தி என்ன..” என்றுவிட்டாள்.
“ஏய்..என்ன வேவு பார்க்கறியா.. ஆமா.. கல்யாணம் பண்ணத்தான் போறேன்.. என்ன செய்ய போற.. என்ன செய்ய முடியும் உன்னால…”
“நிச்சயமா உங்களை எதுவும் செய்ய முடியாது என்னால.. அது உங்களுக்கே தெரிஞ்சிருக்கணும் இந்த மூணு வருஷத்துல..என்ன பண்றது?? நான் தப்பு பண்ணிட்டேன் போல..” என்று விரக்தியாக சொன்னவள் விலகி நடக்க
“நீ தப்பு பண்ணலடி.. தப்பு மொத்தமும் நான் செஞ்சது.. உன்னை பார்த்திருக்கவே கூடாது நான்.. உன் அப்பனோட பணத்தாசைக்கு என் அப்பாவ பலியா கொடுத்திருக்கேன். நீயும் உன் அப்பா கூட நின்னவ தான… இப்போ மட்டும் ஏன் விடாம துரத்தி இந்த நல்லவ வேஷம்…”
“உன் அப்பன் சொல்லி கொடுத்தானா… என்னைவிட அதிகமா பணம் வச்சிருக்கான்.. அவன்கூட ஒட்டிக்கோ ன்னு சொன்னானா… அதான் நான் போற வர்ற இடமெல்லாம் இப்படி சிங்காரிச்சுட்டு வந்து நின்னுட்டு இருக்கியா…அசிங்கமா..” என்று வார்த்தையை அவன் முடிக்கும் முன்பே தன் காலில் இருந்த தன் ஹை ஹீல்ஸ் செப்பலை அவன் முகத்தில் வீசி விட்டாள் யாழி..
அவன் அதிர்ந்து நிற்கும் போதே அடுத்த காலணியும் அவனை நோக்கி பறக்க, அவன் நெஞ்சில் பட்டு கீழே விழுந்தது அவளின் செப்பல். அவளின் செயலில் கொதித்து போனவன் ஆவேசமாக அவளை நெருங்கி அவளின் கழுத்தை பிடிக்க, மொத்தமாக நொந்து போயிருந்தவள் அவனை தடுக்கவே இல்லை..
ஒரு நிலைக்கு மேல், தமிழ் அவள் மூச்சுக்கு திணறுவதை பார்த்து அவனாகவே கையை எடுக்க, தொண்டையை நீவி தன்னை சரி செய்து கொண்டவள் “ஏன் நிறுத்திட்டீங்க… மொத்தமா கொன்னு போட்டிருக்கலாமே… கொஞ்சம் கொஞ்சமா குத்தி குத்தி கொல்றதுக்கு இது எவ்வளவோ மேல்..
“என்ன ஏமாத்திட்டேன் உங்களை.. உங்க அப்பாவை கத்தியால குத்தி கொன்னுட்டேனா நான்.. நீங்க எல்லாம் செஞ்ச தப்புக்கு எனக்கு தண்டனை கொடுப்பீங்களா… உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் கேட்டேனா?? இல்ல உன்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்திட்டு வேறு ஒருத்தன் கூட போய்ட்டேனா..??”
“என்னை உனக்கு செலக்ட் பண்ணது உன் அப்பா.. என்னை லவ் பண்ணது நீங்க… உன் அப்பாவுக்கு துரோகம் செஞ்சது என் அப்பா.. ஒருவார்த்தை கூட என் நிலைமை என்னன்னு கேட்காம என்னை மொத்தமா ஒதுக்கி வச்சது நீயும், உன் குடும்பமும்.. இதுல நான் எங்கே வர்றேன்…”
“என்ன ஏமாத்தினேன் உங்களை..நாந்தான் ஏமாந்துட்டேன்.. மொத்தமா என் வாழ்க்கையையே முடிச்சுட்டு நிற்கிறேன்.. என்னால எவனையும் யோசிக்க கூட முடியல.. பெத்தவங்களை விட்டு , பிறந்து வளர்ந்த என் வீட்டை விட்டு, என் அக்காவை விட்டு, எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி நின்னுட்டேன்…”
“நீங்க அத்தனை பேருமே சுயநலவாதிங்க தான்.. நீங்க யாருமே வேண்டாம் எனக்கு.. இப்படியே மீதி வாழ்க்கையையும் என்னால கடந்து போக முடியும்.. என் முகத்துல கூட முழிக்காதிங்க இனிமே…” என்று கத்தி முடித்தவள் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ, அவள் அழுவதை ஒரு நிமிடம் நின்று பார்த்தவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து விலகி இருந்தான்.
அவன் கார் கடந்து போவதை வலியுடன் வேடிக்கை பார்த்தவள், அழுது கொண்டே தன் காரை திறக்க முற்பட, பூட்டி இருந்தது.. அவளின் பர்ஸ் அருகில் விழுந்து கிடக்க, அதை எடுத்தவள் அதில் இருந்த சாவியை கொண்டு காரை திறந்து உள்ளே அமர்ந்து விட்டாள்.
ஆனால், நிச்சயமாக அவளின் மனநிலையில் காரை இயக்க முடியும் என்ற நம்பிக்கையே இல்லை அவளிடம். ஸ்டியரிங் வீல் மீது தலையை கவிழ்த்துக் கொண்டு அவள் கண்களை மூடிக் கொள்ள, அந்த கார் பார்க்கிங் மயான அமைதியை சூழ்ந்து இருந்ததையோ, அங்கே அவளின் காரை தவிர இரண்டு கார்கள் மட்டுமே நின்றதையோ கவனிக்கவே இல்லை அவள்.
தன்னிலேயே உழன்றவள் வெகுநேரம் அங்கேயே இருந்து விட, அதே நேரம் மூன்று இளைஞர்கள் அந்த பார்க்கிங் ஏரியாவில் நுழைந்தனர். அவர்களின் கார் அங்கு இருக்க, காரை எடுக்க வந்தவர்கள் அருகில் காரில் அமர்ந்திருந்த யாழியை கவனித்து விட்டிருந்தனர்.
மூவரும் மது வேறு அருந்தி இருக்க, அந்த இரவில் மோகினியாக தனியே இருந்தவளை கண்டதும், அவர்களின் புத்தி தடம் மாறி போக, சுற்றி இருந்த சிசிடிவி காமெராக்களோ, வாசலில் இருந்த காவலாளியோ எதுவுமே அவர்களின் கவனத்தில் வரவே இல்லை.
அவர்களின் எண்ணம் எப்படியாவது அவளை தங்கள் காரில் தூக்கி போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்று விடுவதாக இருக்க, கிட்டத்தட்ட மயக்க நிலையில் இருந்தவள் போல் கிடந்தவள் அவர்களை அதுவரையும் கூட உணரவே இல்லை.
அந்த மூவரில் ஒருவன் மட்டும் முன்னால் சென்று யாழியின் கார்கதவை தட்ட, தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் விழித்தவளிடம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை உணர்வும் இல்லை.. அவள் தான் மொத்தமாக தன் வசம் இழந்து கிடந்தாளே..
கண்ணாடியை தட்டியவன் அவளிடம் ஏதோ பேச, அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் லேசாக காரின் கண்ணாடியை அவள் இறக்க, அந்த இடைவெளியில் கையை உள்ளே விட்டவன் வண்டி சாவியை கையில் எடுக்க முற்பட, அப்போது தான் லேசாக சுதாரித்தாள் அவள்.
அவன் கையை தட்டி விட்டவள் கூடவே காரின் கண்ணாடியையும் ஏற்றிவிட முயல, அவள் முகத்தில் பலங்கொண்ட மட்டும் குத்தியவன் மற்றவர்களுக்கு கண்ணை காட்ட அவர்களும் நெருங்கி இருந்தனர்..
அவர்கள் மூவரையும் கண்ட கணமே எத்தனை பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறோம் என்பது யாழிக்கு புரிய, மூக்கில் வழிந்த ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அவள் போராடிக் கொண்டிருக்க, இலகுவாக அவளை சமாளித்து சாவியை எடுத்திருந்தனர் அந்த மூவரும்.
யாழி வேகமாக மறுபக்க கதவை திறக்க முற்பட, அதற்குள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறக்கப்பட்டு உள்ளே இழுக்கப்பட்டாள் யாழி… “ஹெல்ப்..” என்று பெரும் குரலெடுத்து அவள் கத்த, அவன் இழுத்ததில் பிளவுஸ் ஒரு ஓரம் கிழிந்து தொங்கியது..
“கடவுளே..” என்று அவள் பயத்தில் கதற, சரியாக அதே நேரம் அவளை நெருங்கி இருந்தான் தமிழ்மாறன். அவள் பக்க கார்கதவை திறந்தவன்தலையை உள்ளே நீட்டி, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனின் வாயில் ஒன்று விட, அவன் வாயெல்லாம் ரத்தம் வடிய, யாழியை பிடித்திருந்த பிடியை விட்டுவிட்டான்.
தமிழ் யாழியை வெளியே இழுத்தவன் தனக்கு பின்னால் நிறுத்திக் கொண்டிருந்தான் அவளை