விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில், தன் அறையின் பால்கனியில் இருட்டில் அமர்ந்திருந்தாள் ஆதி. எதிரே தெரிந்த கலவையான காட்சிகள் அவள் உள்ளதை அமைதிப்படுத்தவே இல்லை. இரவுகளில் எப்போதும் தன்னை மறந்து அவள் கண்ணயரும் பொழுதுகளில் தான் உறக்கம் அவளை நெருங்கும் இந்த மூன்றாண்டுகளாக..
பாதியில் தூக்கம் களைந்து போனாலும், அன்று இரவு முழுவதும் சிவராத்திரி தான். நிம்மதியான உறக்கம் எல்லாம் கனவாகவே போயிருந்தது. பலன் கண்களை சுற்றி எப்போதும் ஒரு கருவளையம் காணப்பட, அதை மறைப்பதற்காக ஒரு கிரீம்… தூக்கமில்லாம் சுருங்கி போகும் கண்களை சற்றே மலர்த்திக் காட்ட, அழுத்தமான கண்மை…
அதற்குத்தான் மினுக்கி கொண்டு இருப்பதாக குதறி விட்டு சென்றிருந்தான் தமிழ். இப்போது அசைபோட்டாலும், கிட்டத்தட்ட பத்தொன்பது மணிநேரங்கள் கழிந்து விட்டிருந்தாலும் வலித்தது அவளுக்கு. என்றுமே என்னை யோசிக்கவோ, புரிந்து கொள்ளவோ மாட்டாரா அவர்?? என்று எண்ணம் ஓட, பேய் உறங்கும் வேளையில் பேதை கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.
தலைவலி வேறு மண்டையை பிளக்க, எழுந்து சென்று ஒரு காஃபியை கலக்கி கொண்டு மீண்டும் வந்து தன்னிடத்தில் அமர்ந்து கொண்டவள், நன்றாக வெளிச்சம் வரும்வரைக்கும் அதே இடத்தில் தான் இருந்தாள். அக்கம் பக்கத்து மாடிகளில் ஆள் அரவம் தென்படவும், எழுந்து வீட்டிற்குள் வந்து அவள் குளித்து கிளம்ப, அவளின் வழக்கமான நாள் அங்கே தொடங்கியது.
குளித்து வந்து கண்ணாடி முன் நின்றவள் அங்கே இருந்த தன் அலங்கார பொருட்களை பார்க்க, மீண்டும் அவன் வார்த்தைகள் காதில் கேட்டது.. கண்களை அழுத்தமாக மூடி திறந்தவள், நிதானமாக ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால் அமர்ந்து தன்னை எப்போதையும் விட அழகாக மெருகேற்றிக் கொண்டாள்.
அவன் கண்கள் அழுத்தமாக பதிந்த தன் இதழ்களில் அடர்குங்கும நிற உதட்டுச்சாயம் இன்னும் அழுத்தமாக அமர்ந்து கொள்ள, கண்களில் கண்மையுடன் மஸ்காரா, ஐ லைனர் என சகலமும். அதன்பிறகே கொதித்த நெஞ்சம் கொஞ்சம் அடங்கியது போலாக, திருப்தியாக தன்னை பார்வையிட்டவள் நீதிமன்றத்திற்கு கிளம்பி இருந்தாள்.
அன்று அவளுக்கு முக்கியமான வழக்கு ஒன்று இருக்க, இவளின் ஜூனியர் கீர்த்தி நீதிமன்ற வாயிலில் இவளுக்காக காத்திருந்தாள். தன் காரில் ஆதி வந்து இறங்கவும், “வாவ்.. ஆதிக்கா… லூக்கிங் கார்ஜியஸ்… எனக்கே மயக்கம் வருதே..” என்றவள் மயங்கி விழுவது போல் நடிக்க, மௌனமாக சிரித்தவள் முன்னே நடந்து இருந்தாள்.
அந்த சிரிப்பிற்கு பின்னால் அவளிடம் இருந்து பதில் எதுவும் வராது என்பது புரிந்தே இருந்ததால், கீர்த்தியும் அமைதியாகவே அவளை பின்தொடர்ந்தாள். அவர்களின் வழக்கு முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட, எதிர்தரப்பு வாய்தா கேட்டதால், பெரிதாக வேலை இல்லை அங்கே.
அன்று வேறு வழக்குகளும் இல்லாததால், அவள் அந்த வளாகத்தை விட்டு வெளியே வர, அவளுக்கு எதிரில் வந்து கொண்டிருந்தான் தமிழ்மாறன். அவனின் தந்தை வாங்கி போட்டிருந்த ஒரு சொத்தின் ஆக்கிரமிப்பு குறித்து அவன் வழக்கு நடத்திக் கொண்டிருக்க, அவ்வபோது அவனும் நீதிமன்றம் வந்து சென்று கொண்டிருக்கிறான் தான்.
ஆனால், இன்று போல இப்படி நேருக்கு நேராக ஆதியை சந்திக்கும் நிலை வந்தது இல்லை இதுவரை. தூரத்தில் வரும்போதே அவன் ஆதியை கவனித்துவிட, முதலில் கண்ணில்பட்டது அவளின் அந்த அடர்ந்த உதட்டுச்சாயம் தான். அவளின் வெண்மை நிறத்திற்கு அந்த அடர் சிவப்புநிறம் பளிச்சென்று தெரிய, அவள் இன்னும் இவனை கவனித்தே இருக்கவில்லை.
அவள் பார்வை வெளியில் எங்கோ பதிந்து இருக்க, நிதானமாக நடந்து கொண்டிருந்தாள். தமிழுக்கு அவளின் அந்த சிவப்பு சாயத்தையும், கண் மையையும் பார்த்ததுமே புரிந்து போனது இது தனக்கான எதிர்வினை என… அதில் இன்னமும் அவன் சூடாக, அவளை கண்டுகொள்ளாதவன் போல, தன் வழியில் முன்னேறியவன் சட்டென்று என்ன தோன்றியதோ தன் நடையை நிதானமாக்கினான்.
எதிரில் வந்து கொண்டிருந்தவள் இவனை நெருங்கி கொண்டே இருக்க, இன்னும் கூட பார்வை இவன் புறம் திரும்பவில்லை. அவள் கவனம் வேறு எங்கோ இருக்க, வேண்டுமென்றே தான் அவள் வரும் பாதையில் நடந்தான் தமிழ். அவன் எதிர்பார்த்தது போலவே, அவனை நெருங்கியவள் கவனிக்காமல் அவன் மீது மோதிவிட, யாரோ என்று பயந்து விலகி நின்றாள் அவள்.
அவள் தன் மீது மோதியது முதல் விலகி நின்றது வரை அத்தனையும் அவதானித்தவன் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. அழுத்தமாக அவன் நிற்க, அவன் நாடகம் புரியாமல் ஏதோ தவறு செய்தவள் போல் அவன் முன் நின்றாள் ஆதி.
அவள் கண்கள் மெல்ல அவனை நோக்கி நிமிர, அவளை கடுமையாக முறைத்தவன் “சுவத்துக்கு வெள்ளை அடிக்கிற மாதிரி மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சா மட்டும் போதாது… கண்ணு தெரியனும்… இல்ல ஒருவேளை தெரிஞ்சேதான் இடிச்சியோ…” என்று அதே கடுமையுடன் அவன் கேட்டு நிற்க
அவள் பதட்டத்துடன் மறுக்க முற்படும்போதே கையை நீட்டி அவளை தடுத்தவன் “வாயை திறக்காத… வர்ற கோபத்துக்கு அன்னிக்கு மாதிரி கழுத்தை நெறிச்சுடுவேன்…”என்றான் உக்கிரமாக..
அவன் எப்படியும் பேச விடமாட்டான் என்பது தெரிந்து போக, அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட முயன்றாள் ஆதி. அவள் நகரவும், சட்டென அவள் கையை பிடித்தவன் மணிக்கட்டில் ஒரு இறுக்கம் கொடுக்க, வலியில் முகம் சுளித்து விட்டவள் பார்வை தங்களை சுற்றி தான் சுழன்றது.
அவள் பயந்தது போல் அவர்களை கவனிக்க அங்கே யாருக்கும் நேரமில்லை போல.. கீர்த்தி மட்டும்தான் தமிழை பயந்து பார்த்திருந்தாள். தமிழுடன் செல்வா… ஆனால், இன்னும் சில நிமிடங்கள் இதே நிலை நீடித்தாலும், அனைவரின் கவனமும் தங்கள் பக்கம் திரும்பும் ஆபத்திருப்பது புரிய, “கையை விடுங்க தமிழ்…” வழக்கத்திற்கு மாறாக அழுத்தம் சுமந்திருந்தது அவள் குரல்.
அவள் குரலின் அழுத்தத்தில் சூழ்நிலை புரிந்தவன் “உன் கையை பிடிச்சுக்க இங்கே யாரும் காத்துட்டு இருக்கல..” என்றவன் வெறுப்போடு அவள் கையை உதற, அவன் உதறிய வேகத்தில் அருகில் இருந்த தூணில் பட்டென போய் இடித்து கொண்டது அவள் விரல்கள்..
அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாதவனாய் அவன் விரைந்து விட, விரல்களை நீட்டி மடக்கி வலியை பொறுத்தவள் முகத்தை சலனமே இல்லாமல் காட்டிக் கொண்டு அவனுக்கு எதிர்புறத்தில் நகர்ந்து இருந்தாள். அன்று அதற்குமேல் மனம் வேறு எதிலும் ஈடுபடாமல் போக, அமைதியாக காரில் ஏறியவள் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு விநாயகர் கோவிலில் சென்று அமர்ந்து இருந்தாள்.
கோர்ட் வளாகத்தில் நடந்ததை மனம் அசைபோட, தமிழ்மாறனின் செயல்கள், அவன் நிலை அனைத்துமே புரிந்தது அவளுக்கு. ஆனால், அவன் துன்பத்திற்கு எந்த வகையில் தான் பொறுப்பானோம் என்றுதான் விளங்கவே இல்லை.
அவன் கோபம் நியாயமானது என்பதால் தான் அவன் கடுமையை பொறுத்துக் கொண்டு அவள் காத்திருப்பதும்.. ஆனால், அவளை காயத்திற்கு மருந்தாக கூட ஏற்றுக் கொள்ளாதவன், அவளை காயப்படுத்தி விடுவதில் மட்டும் முனைப்பாக இருக்கிறானே… என்னை காயப்படுத்தி அழ வைக்கும் உரிமையை மட்டும் இவனுக்கு யார் கொடுத்ததாம் ?? என்று எதிரில் இருந்த அந்த ஆனைமுகத்தானை அவள் கேள்விகளால் குடைய, தன் புன்னகையை பதிலாக கொடுத்து அமர்ந்திருந்தார் அவர்.
இவள் அந்த கோவிலில் இருந்த அதே நேரத்தில், மாஜி அமைச்சரின் குடும்பமும் அதே கோவிலுக்கு வர, அந்த அமைச்சரின் மனைவி அவர் மருமகள் பேரனுடன் காரில் வந்து இறங்கினார்… கடவுளை வணங்கி முடித்தவர் சன்னதியின் எதிரே அமர்ந்திருந்தவளை பார்த்துவிட, கண்களில் பெருகிய ஏளனத்துடன் அவளை நெருங்கி நின்றார் அவர்.
“என்னமா வக்கீலம்மா.. எவனோ ஒருதனுக்காக என் மகனை கட்டிக்கிட மாட்டேன்னு சொன்னியே… அவன் உன்னை கட்டிகிட்டானா…” என்றவர் அவளை ஆராயும் பார்வை பார்த்து “கழுத்துல தாலி எதுவும் காணோமே…” என்று நிறுத்த, “உன்னை மதித்தால் தானே” என்று எழுந்து கொண்டாள் ஆதி.
அவள் கண்டு கொள்ளாமல் விட்டதில் இன்னமும் கடுப்பானவர் ” வெள்ளை உடுத்தி இருக்கியே.. ஒருவேளை உன் புருஷன் செத்து கித்து..” என்று முடிக்கும் முன்னமே, “ஏய்.. என்ன.. என்ன வேணும் உனக்கு..” என்று குரலை உயர்த்தி இருந்தாள் ஆதி..
அந்த அம்மாவோ “ஓஒ.. இன்னும் கல்யாணமே நடக்கலையா… ஏன் அவன் உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு வேற எவ கூடவாவது ஓடிட்டானா..” என்றது எகத்தாளமாக…
“இந்த ஜென்மத்துல அவன் என்னை தவிர யாரையும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்..” என்று உள்ளம் கர்வமாக பதில் கொடுத்தாலும், “அவன் உன்னையும் திரும்பி பார்க்கவில்லையே..” என்று குட்டியது மூளை.
எதிரில் நின்றவர்கள் பதிலுக்காக காத்திருப்பது புரிய, அவர்களிடம் எதுவுமே பேசாமல் மௌனமாக கோவிலை விட்டு வெளியேறி இருந்தாள் அவள்.
வீட்டை அடைந்தவள் மனத்தை எதிலாவது திருப்பி விடும் ஆவலில், சமையலில் இறங்கி இருந்தாள். வீட்டில் இருந்த பொருட்களை வைத்து சிம்பிளாக தக்காளி சாதம் ஒன்றை குக்கரில் தாளித்து விட்டவள், இன்னொரு அடுப்பில் ஒரு ஆம்லெட் போட்டுக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.
அந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை கடக்கும் முன் மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் இப்படியும், அப்படியுமாக திருப்பி பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் குளிக்க சென்றாள். குளித்து, உண்டு முடித்தவள், வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டு டீபாயில் இருந்த கார்வானை இயக்க, அதில்
வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே – பாம்பே ஜெயஸ்ரீ உருகி கொண்டிருந்தார்.
ஆதிக்கு இந்த பாடலில் இன்னமும் கடுப்பாக, “இதுகூட என்னை வச்சு செய்யுதே..” என்று கார்வானை தான் முறைத்து கொண்டிருந்தாள்…
அதன் தலையில் தட்டி “நான் சோகமா இருக்கேன் ன்னு சொன்னேனா..” என்று அதன் காதை திருக,
“சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே….” என்று ஜேசுதாஸ் தாலாட்ட, அமைதியாக கண்களை மூடிக் கொண்டு படுத்துவிட்டாள்.
அதே நேரம் தன் வீட்டின் மொட்டை மாடியில் அமைத்து இருந்த நீச்சல்குளத்தில் மிதந்து கொண்டிருந்தான் தமிழ்மாறன். அதன் நான்கு புறமும் நான்கு தூண்கள் அமைந்திருக்க, தூணை சுற்றி பச்சை பசேலென படர்ந்திருந்தது முல்லைக்கொடி…
நீச்சல்குளத்திற்கு மேலே கண்ணாடி தகடுகளால் கூரை போன்று தடுப்பு இருக்க, மொட்டை மாடியின் மீதி இடத்தில் விலையுயர்ந்த நாற்காலிகள், ஊஞ்சல் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது அந்த இடம். ஆனால, அந்த இடத்தின் இனிமை அவன் மனத்தில் நிற்காமல் போக, அவனை இம்சித்துக் கொண்டிருந்தாள் பாவை.
காலையில் அவள் மீது மோதி நின்ற கணங்கள் அழகாக மனத்தில் அமர்ந்து கொள்ள, தன்னை கண்டதும் பயந்து, பதறி, குறுகி என்று அவள் கண்கள் ஆடிய நாட்டியம் அத்தனை பிடித்தது அவனுக்கு. அதுவும் அவளின் இன்றைய அந்த ஒப்பனை, “ப்பா…” என்றுதான் வந்தது…
அதுவும் மோதி நின்ற கணங்களின் நெருக்கத்தில் கண்டு கொண்ட அவளின் ஈரப்பதத்துடன் கூடிய இதழ்கள் அவனை வசமிழக்கவே வைத்து அந்த நேரம். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் அவன் இல்லையே…
பாவத்திற்கு அவள் ஏன் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே பிரதானமாக இருக்க, அவளை விட்டு விலகிக்கொள் என்று எச்சரித்து கொண்டே தான் இருந்தது மூளை… ஆனால், சில பல சமயங்களில் மனது மூளையை வென்று விடுவதும் நடப்பதே அல்லவா. அதுபோலான ஒரு தருணம் தான் காலை நிகழ்வு..
அவளை சிந்தையில் சுமந்து தண்ணிரில் அலைந்தவன், வெகுநேரம் கழித்தே வெளியே வந்தான்.. அப்போதும் கீழே செல்ல மனம் வராமல், அந்த நீச்சல் குளத்தின் ஒரு ஓரத்தில் ஈர உடையுடனே படுத்துக் கொண்டான்.
காதலர்கள் இருவருக்குமே அந்த நாள் கடினமாக கழிய, அடுத்த இரண்டு நாட்கள் கூட ஏதோ ஒரூ வகையில் மௌனமாகவே கழிந்தது.
மூன்றாம் நாள் காலை தமிழ்மாறன் எப்போதும் போல, அலுவலகத்திற்கு கிளம்பியவன் தன் அம்மாவை காண அவரின் அறைக்கு செல்ல, இவனுக்காகவே காத்திருந்தார் போல.. கட்டிலில் லேசாக சாய்ந்து அமர்ந்திருந்தார் சத்யவதி.. அவரின் கூடவே எழிலரசு கட்டிலில் அமர்ந்திருந்தான்..
தம்பியை காணவும், “காலேஜ் கிளம்பலையா…” என்று முகம் சுருக்கி தமிழ் வினவ
“இன்னும் 15 நாளைக்கு காலேஜ் லீவு.. செம் ஹாலிடேய்ஸ்..” என்றான் எழில்.
“என்ன செய்ய போற.. என்னோட ஆபிஸ் வர்றியா..” என்று அண்ணன் கேட்க
“என்னை ஆளை விடு.. நான் என் அம்மாகூட இருக்கேன்… எங்கேயும் வரல…” என்று கையெடுத்து கும்பிட்டவன் அன்னையை கழுத்தோடு கட்டிக் கொண்டான்.
தமிழ் அவனின் செயலில் சிரித்தவன், அன்னையிடம் “சாப்பிட்டீங்களா அம்மா..” என்று பாசமாக கேட்க, அவன் கையை பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் சத்யவதி..
தமிழ் ” என்னம்மா.. என்ன செய்யுது உடம்பு எதுவும் முடியலையா..” என்று ஆதுரமாக கேட்க, தலையசைத்து மறுத்தவர் மகனை ஏக்கமாக பார்த்தார்.
அன்னையின் பார்வையை உணர்ந்தவன் “என்னம்மா.. என்ன சொல்லணும்..” என்று அவர் கையை பிடிக்க,
சத்யவதி வெகுவாக திக்கி திணறியவர் “க்கல்யாணம்.. பண்ணிக்கிறியா த்தமிழ்..”என்று கேட்க, மகனின் முகம் மாறிப்போனது.
அவனின் இந்த முகமாற்றம் எதிரில் இருப்பவரை இன்னமும் சோர்ந்து போக செய்ய, தன் வலக்கையை அவன் பிடியில் இருந்து விடுவித்தவர் அந்த கையால் அவன் முகம் தடவ, அன்னையை பார்த்து லேசாக சிரித்தவன்
“இப்போ என்னம்மா அவசரம்.. இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே…” என்று லேசாக மறுக்க
“எப்போ இருந்தாலும் கல்யாணம் பண்ணனும் இல்ல.. நான் இருக்கும்போதே..” என
அவரின் வாயை கையை வைத்து மூடியவன் “நீங்க இருப்பிங்க.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது..” என்றான் முறைப்பாக…
அவன் வார்த்தைகள் தைரியம் கொடுக்க, “கல்யாணம் பண்ணிக்கோ தமிழா… அம்மாக்கு ஆசையா இருக்கு..” என்று கெஞ்சலாக கேட்க,
அவரின் வார்த்தையை மீற முடியாமல் “சரிம்மா.. பண்ணிக்கிறேன்…” என்றுவிட்டான் தமிழ்…
சத்யவதியின் முகம் மலர்ந்து போக, எழில் அப்பட்டமாக அதிர்ந்து போனான்… சத்யவதி ஏற்கனவே எழில் உதவியுடன் தராகரிடம் பேசி இருக்க, அவர் மொபைலில் அனுப்பி இருந்த புகைப்படங்களை மௌனமாக தமிழுக்கு அனுப்பி வைத்தான் எழில்.
சத்யவதி அவனை அந்த படங்களை அப்போதே பார்க்க சொல்ல, மொபைலை கையில் எடுக்கவே இல்லை தமிழ்.. “நீங்களே பார்த்திடுங்கம்மா.. நீங்க யாரை சொன்னாலும் எனக்கு ஓகே தான்..” என்றவன் “ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சும்மா.. கிளம்புறேன்..” என்று மேலே அவரை பேச விடாமல் வெளியே வந்து விட்டான்.
எழில் “போடா.. போ.. எதுவரைக்கும் போற ன்னு பார்க்கிறேன்…” என்று மனதில் நினைத்தவன் தன் அன்னையிடம் “உன் பிள்ளை ஆதியை தவிர வேற யாரை கல்யாணம் செஞ்சாலும் நிம்மதியா இருக்கமாட்டான்.. நீ செய்யுறது வேண்டாத வேலை..” என்று விட, அவனை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தார் சத்யவதி..
எழில் “எப்படியோ போங்க..” என்று கத்தியதோடு நிற்காமல், அங்கு நடந்ததை அப்படியே ஆதியிடமும் கூறிவிட்டவன் “தயவு செஞ்சு நீ உன் லைஃபை பாரு ஆதி.. அண்ணனுக்காக பார்த்து உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.. இவன் மாறவே மாட்டான்..” என்று கத்தி முடித்து வைத்துவிட்டான்…
அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட விஷயம் ஆதியை கலங்க செய்ய, “தன் வாழ்க்கை அவ்வளவே தானா…” என்று அலைபாய தொடங்கியது அவள் மனம்…
அவளின் இந்த அலைப்புறுதல் அவளை எத்தனி பெரிய ஆபத்தில் கொண்டு போய் என்பதை அப்போது அவள் அறியவே இல்லை….