ஆனால், தமிழ் அவளை தெரிந்தவளாக கூட காட்டிக் கொள்ளவே இல்லை. அந்த இடம் அப்படி ஒரு அமைதியாக இருக்க,  இறுதி காரியங்கள் தொடங்கும் நேரம் தான் வந்து சேர்ந்தார் வரதராஜன். கையில் மாலையுடன் அவர் நெருங்க, அவனுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ, பாய்ந்து அவர் சட்டையை பிடித்து இருந்தான் தமிழ்.

                   “என்னய்யா பண்ண என் அப்பாவை… என்ன சொல்லி அந்த மனுஷனை உயிரோட கொன்னு போட்ட..” என்று அவன் கத்திய கத்தலில், உயிர் அடங்கி துடித்தது ஆதிக்கு.

                 வரதனும் சளைக்காமல் “என்னடா.. பழகின மரியாதைக்கு சடங்குக்கு வந்தா, என்மேலேயே பழி போடறியா… என் சட்டையில் கை வைக்க என்ன தைரியம் இருக்கணும் உனக்கு..” என்று வாய்ச்சவடால் விட, அவரை வயதை கூட பார்க்காமல் ஒரு அறை விட்டவன் பிடித்து கீழே தள்ளி இருந்தான்.

               ஆதிக்கு அப்போதுதான் உயிர்வர, ” தமிழ் என்ன பண்றிங்க நீங்க.. எதுக்காக அப்பாகிட்ட இப்படி நடந்துக்கறிங்க..” என்று ஆதங்கத்துடன் அவள் கேட்க,

                 “ஏய்.. என்ன.. அப்பனும், பொண்ணும் சேர்ந்து நாடகம் ஆடறீங்களா.. உங்க சங்காத்தமே வேண்டாம்.. வெளியே போடி..” என்று கத்த

                “ஏன் இப்படி பண்றிங்க..” என்று மீண்டும் அவள் கண்ணீருடன் நின்றதை பொருட்படுத்தாமல், அவள் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து வந்தவன் அவளை வாசலில் தள்ளிவிட, வரதன் மகளை தாங்கி கொண்டார்.

               ரத்னவேலுக்கு தன் பேத்தியின் முகத்தை பார்க்கவே தைரியம் இல்லை. தமிழ் நடந்து கொண்ட விதத்தை வைத்தே அவன் முடிவு என்னவாக இருக்கும் என்பது அந்த பெரியவருக்கு புரிந்து போக, தன் பேத்தி படும் வேதனையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவரால்.

                   அதன்பின்பு அங்கே இருக்க மனமில்லாமல் ஆதியின் குடும்பம் வீட்டிற்கு திரும்பிவிட, அதுதான் ஆதி  கடைசியாக தமிழை பார்த்தது. அதன்பின் அவளின் கண்ணில் படவே இல்லை அவன். அவள் அத்தனை முறை அழைத்தும், குறுஞ்சேதி அனுப்பியும் ஒரு பதிலும் இல்லை அவனிடமிருந்து.

                  அவளும் மொத்தமாக தனக்குள் சுருங்கி கொள்ள, சுற்றி நடக்கும் விஷயங்களை அவள் மனம் கவனிக்காமல் போனது. இப்படியாக ஒரு மாதம் கழிந்து விட, அன்றுதான் கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள் ஆதி. படிப்பில் கவனம் செலுத்தினால் இந்த வேதனை குறையுமோ என்ற எண்ணத்தில் தான் அவள் கல்லூரிக்கு சென்றது.

                  ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிப்போகும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. வழக்கம் போல் ஒருநாள் அவள் கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைய, வரிசையாக கார்கள் அவள் வீட்டு கேட்டிலிருந்தே அணிவகுத்து இருக்க, தன் வண்டியை உள்ளே செலுத்த இடம் இல்லாததால், இறங்கி நடந்தே சென்றாள்.

                 வீட்டினுள் காலடி எடுத்து வைக்க, வீடு முழுவதும் ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக இருக்க, புருவத்தை சுருக்கி பார்த்தவள், அமைதியாக தன் அறை நோக்கி நடக்க, அங்கே ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் பார்வை தன்மீது உரிமையாக படர்வதை கண்டுகொள்ள முடிந்தது அவளால்.

              விஷயம் ஓரளவுக்கு புரிய, அவர்கள் வாய் வழியாகவே வரட்டும் என்று நினைத்தவள் தன் அறையில் சென்று அமர்ந்துவிட, அடுத்த சில நிமிடங்களில் வரதன் மகளின் அறையில் இருந்தார். அவர் படபடப்பாக காணப்பட, அவருக்கு அப்படியே மாறாக மகள் வெகு நிதானமாக தென்பட்டாள்.

                 அவர் ஏதோ பேச வாயெடுக்க, “எனக்கு என்ன நடக்குது புரியும்ப்பா.. அவங்க எல்லாரையும் வெளியே போக சொல்லுங்க… ” என்றதோடு பேச்சை முடித்துக் கொள்ள

                 “இல்ல ஆதிம்மா.. அப்பா சொல்றதை..”

              “நீங்களே போய் சொல்லுங்கப்பா.. முதல்ல அவங்களை அனுப்பிட்டு வாங்க.. பேசுவோம்” என்றாள் அப்போதும்.

                “அவங்க போகமாட்டாங்க ஆதி.. இதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது.. நீ அப்பா சொல்றதை கேளேன்..” என்று அவர் வாதிட, இரண்டு நொடிகள் கூர்மையாக பார்வையால் அவரை சுட்டவள் கீழே இறங்கி இருந்தாள். அவர் தந்தை கெஞ்சியது எல்லாம் அவள் காதில் விழவே இல்லை..

               கீழே வந்தவள், அங்கே அமர்ந்திருந்தவர்களை பொதுவாக பார்த்து, “மன்னிச்சிடுங்க.. என் அப்பா தெரியாம உங்களை கூப்பிட்டுட்டாரு.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல..” என்று நிமிர்வாக கூறிவிட்டாள்.

               அந்த அமைச்சர் “எல்லாம் எங்களுக்கு தெரியும்மா.. நீ இன்னும் அந்த பையனை நினைச்சு ஏன் உன் வாழ்க்கையை கெடுத்துக்கணும்.. என் மகனை பாரு.. நாளைக்கே அமைச்சர் ஆகிடுவான்..” என்று பேச, அவரின் பேச்சில் அருவெறுப்பாக உணர்ந்தாள் அவள்.

               ஆனாலும், பதில் கொடுக்க வேண்டுமே…”எல்லாம் தெரிஞ்சு இருந்தா நிச்சயமா நீங்க இங்கே வந்து இருக்கமாட்டிங்க… எனக்கும், தமிழுக்கும் இருக்க உறவு காதலுக்கும் மேல.. நிச்சயமா என்னால உங்களுக்கு.. உங்ககூட வாழ முடியாது…”

                 “என்னால தமிழை தவிர யாரையும் அப்படி யோசிக்க கூட முடியாது… இவர் உங்ககிட்ட என்ன சொல்லி வச்சிருக்காரு எனக்கு தெரியாது… ஆனா, என் வாழ்க்கை இது… என்னோட முடிவுதான் எல்லாம்… என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது.. வெளியே போங்க..” என்றுவிட்டாள்.

                 அவளிடம் இருந்தது நேர்மையின் கம்பீரம். அவளுக்கு அந்த அமைச்சரால் எந்த காரியமும் ஆக வேண்டியது இல்லை. வரதனை போல் பயமும் இல்லை… தன் காதலின் மீது வாய்த்த நம்பிக்கையை துணையாக கொண்டு அவர்களை விரட்டியவள் அவர்கள் கிளம்பியதும் தந்தையின் பக்கம் திரும்பினாள்.

                     “சேது மாமாவை என்னசெஞ்சீங்க..” என்று நேரிடையகவே அவள் கேட்க

                     “நான் என்ன செஞ்சேன்.. அவன்தான் அறிவில்லாம பேசுறான் ன்னா நீயும் அவனோட சேர்ந்துட்டியா..” என்று கொதித்தார் வரதன்.

                      ரத்னவேல் அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தவர் மகனை நெருங்கி அவர் கன்னத்திலே அறைந்து விட, அவரை பாவமாக பார்த்தாள் பேத்தி..

                     “என்ன நடக்குது தாத்தா இந்த வீட்ல..” என்று வேதனையுடன் அவள் கேட்க, ரத்னவேல் அவளிடம் நடந்த அனைத்தையும் ஆதி முதல் அந்தமாக கூறிவிட, தன் தந்தையை கேவலமாக பார்த்தவள் அவரிடம் பேசவே தயாராக இல்லை…

                  அவளுக்கு தனிமை தேவையாக இருக்க, தன் அறையில் சென்று அடைந்து கொண்டாள். அவள் சென்ற நிமிடம் அல்லாமல் மகனுக்கும், தந்தைக்கும் மீண்டும் வாக்குவாதம் ஆரம்பிக்க, அந்த பெரியவர் ரத்த அழுத்தம் அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரின் வயோதிகம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக சாய்த்துக் கொண்டிருந்தது.

                  தன் முடிவு அவருக்கு தெரிந்து விட, தன் பேத்தியை அருகில் அழைத்தவர் “என்ன நடந்தாலும் மாறனை விட்டுடாத ஆதிம்மா…அவன் ரொம்ப நல்லவன்.. சேது இல்லாம தடுமாறி போயிருக்கான், நீ அவன்கூடவே இருந்து அவனை பார்த்துக்கணும்.. உன் அப்பன் செஞ்சு இருக்க பாவத்துக்கு அது ஒண்ணுதான் பதில்… உன் அப்பனை எப்பவும் நம்பாத..” என்று கூறியதோடு கண்களை மூடிக் கொள்ள, அடுத்த மூன்று மணிநேரத்தில் அவரின் உயிர் பிரிந்து இருந்தது.

                    அவரின் இறுதி காரியங்களுக்கு கூட தமிழ் வராமல் போக, மொத்தமாக தனக்குள் இறுகி போனாள் பெண். தாத்தாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடியவும், தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

                      உமா அவளின் இந்த முடிவில் கதறி தீர்க்க, “இங்கேயே இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்ம்மா… நான் செத்தே போய்டுவேன் போல.. எனக்கு இங்கே இருக்க முடியல.. என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்.. என்னை தனியா விட்டுடுமா..” என்று அவளும் அழவும், அதற்குமேல் அந்த தாயால் எதுவும் பேசமுடியாமல் போனது.

                    தன் தாத்தாவின் பணத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை பிடித்தவள் மொத்தமாக அங்கேயே தன்னை பொருத்திக் கொண்டாள். அதன் பின்னான நேரங்களில் அவளின் நேரம் மொத்தமும் படிப்பு, வேலை என்று அதிலேயே கழிந்து விட, ஆறுமாதங்கள் கழித்து எழில் மட்டும் ஒருமுறை அவளை வந்து சந்தித்து சென்றிருந்தான்.

                  அவனது நிலையை புரிந்தவள் ஆறுதலாக அவனிடம் பேசி வைக்க, அவ்வபோது தொலைபேசி வாயிலாகவும் பேசிக் கொள்வர் இருவரும். இவர்களின் உறுதியான நட்பு மீண்டும் தூசி தட்டப்பட, இன்னும் அவர்களின் பிணைப்பு வலுவானது அங்கே.

                  எழில் ஆதியிடம் பேசுவது தெரிந்தாலும் கூட, தெரிந்தது போல் காட்டிக் கொள்ள மாட்டான் தமிழ்மாறன். அவன் அன்னையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.. “ஆதி பேசினாம்மா..” என்று எழிலாக கூறினால் கூட, என்ன எது என்று கேட்கவே மாட்டார் அவர்.

                  அவர் அவரது இழப்பு அவரவர்க்கு பெரிதாக இருக்க, அத்தனை பெரும் ஏதோ ஒன்றை இழந்து தான் நின்றனர் அங்கே…

                  சத்யவதி தன் உயிருக்கும் மேலான கணவனை இழந்திருக்க, எழில் தன் தந்தையையும், தன் கனவையும் இழந்திருந்தான். உமாதேவி தன் மகளை இழந்து இருக்க, வரதன் தன் பேராசையால் தன் தந்தையை பலி கொடுத்து இருந்தார்.. கூடவே அவரது ஆசை மகளையும்.. ஆனால், இவர்கள் அத்தனியா பேரின் இழப்பும் வாழ்வில் ஏதோ ஒரு பகுதியாக தான் இருந்தது..

                    இதில் மொத்தமாக தன் வாழ்வை தெரிந்தே தொலைத்து நின்றவன் தமிழ்மாறன்… அவனை இழந்ததால் தன் சுயத்தை இழந்து நின்றவள் அவனின் யாழி… விதி இன்றுவரை அவர்களுக்கு கருணையே காட்டாமல் வதைத்து இருக்க, இனி என்ன வைத்துளதோ??