சேதுமாதவன்… பிழைப்புக்காக தன் இருபது வயதில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டவர். பொள்ளாச்சி செழிப்பான ஊராக இருந்தாலும், இவரின் குடும்பம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எல்லாம் இல்லை.
வழக்கமாக கிராமங்களில் இருந்து சென்னைக்கு கிளம்பிவரும் சாதாரண மனிதராக வந்தவரை சென்னை ஆரம்பத்தில் சோதித்தாலும், அதன் பின்னான நேரங்களில் மொத்தமாக அணைத்து கொண்டது. அவரும் உழைக்க தயாராக இருக்க, அடுத்த ஏழு ஆண்டுகளில் நகரின் முக்கிய பகுதியில் சொந்தமாக ஒரு ஜவுளிக்கடையை விலைக்கு வாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
அவரின் அந்த தொழில் அவருக்கு கைகொடுக்க, பெரிதாக படிப்பு இல்லாதபோதும் அவரின் நேர்மையும், திறமையும் துணை நிற்க, வியாபாரம் எதிர்பார்த்தபடி கைகொடுத்தது. அந்த நேரம் வீட்டில் பெரியவர்கள் திருமணத்திற்காக பெண் பார்க்கவும், சத்யவதி சேதுமாதவனின் கைப்பிடித்தார்.
சத்யவதியின் குடும்பம் ஓரளவுக்கு நிலபுலன்களுடன் இருக்க, சேதுமாதவனின் தொழில் திறமை ஒன்றுக்காகவே பெண் கொடுத்திருந்தனர் அவர்கள். திருமணம் முடிந்து இருவரும் சென்னை வந்து இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்க, அந்த நேரத்தில் தான் வரதராஜன் சேது மாதவனுக்கு பழக்கமானார்.
வரதராஜன் சென்னையை பூர்விகமாக கொண்டவர். அவர்கள் குடும்பம் பரம்பரையாக நகை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்க, தந்தையின் தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். இவர்களின் ஜவுளிக்கடையும், நகைக்கடையும் அருகருகில் இருக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள் தான்.
இருவருமே ஒத்த மனம் கொண்டவர்களாக இருக்க, அவர்களின் தொழில் ஆர்வம் அவர்களை இணைத்து வைத்தது. தந்தையின் பிடிவாதத்தால் நகைக்கடையை கவனித்துக் கொண்டிருந்த வரதராஜனுக்கு ஒரே ஆறுதல் சேது மாதவனின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் தான்.
அவருக்கு சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று கனவு இருந்ததே தவிர, அதை எப்படி சாத்தியமாக்குவது என்று தெரியவில்லை. சேது மாதவன் வரதராஜனை வழிநடத்த, அவரின் சொல்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகைக்கடையில் லாபத்தை பெருக்கி காட்டியவர், தந்தையிடம் ஒரேடியாக பிடிவாதம் பிடித்து சுயதொழில் செய்ய அனுமதியும் பெற்று இருந்தார்.
ஆனால், வரதராஜனின் தந்தை ரத்னவேலுக்கு வரதராஜனை தனித்து விட விருப்பமில்லை. சேது மாதவனை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், சேது மாதவனையும் தொழிலில் இணைத்து கொள்ள சொன்னார் அவர். நண்பர்களுக்கு அவரின் அந்த ஆலோசனை பிடித்து போக, ஊரில் வாங்கி போட்டிருந்த நிலங்களை விற்று பணம் தேற்றினார் சேது மாதவன்.
வரதராஜனுக்கு அவர் தந்தை கொடுத்த பணம் இருக்க, இருவரும் சேர்ந்து வரதராஜனின் யோசனைப்படி சென்னையை அடுத்த செங்கல்பட்டில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கி இருந்தனர்.
சேதுமாதவன் ஜவுளிக்கடை, தொழிற்சாலை என்று அலைந்து கொண்டிருக்க, வரதராஜன் நகை தொழிலை மொத்தமாக தந்தையிடம் ஒப்படைத்து விட்டிருந்தார். அவரின் படிப்பு ஆட்டோ மொபைல் குறித்ததாகவே இருக்க, தொழிற்சாலையின் முழுப்பொறுப்பும் வரதராஜன் தான்.
சேதுமாதவன் கூடவே இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் வரதராஜன் தான் முடிவெடுப்பது. துறை ரீதியாக அவரின் அறிவுகூர்மை உபயோகமாகவே இருந்தது நண்பர்களுக்கு. தொழில் விரிவடைந்த அதே நேரத்தில், இருவரின் வசதி வாய்ப்புகளும் உயர்ந்து கொண்டே வர, அவர்களின் குடும்பமும் பெருகி இருந்தது.
வரதராஜன்- உமாதேவிக்கு அபர்ணா, ஆதிரையாழ் என்று இரண்டு மகள்கள்.. சேது மாதவனுக்கு தமிழ்மாறன், எழிலரசு என்று இரண்டு மகன்கள். வாழ்க்கை வசந்தமாக இருக்க, வருடங்கள் கடந்து ஓட, வரதராஜன் தன் மூத்த மகளை அவளது தாய்மாமன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
இதில் அபர்ணா எப்போதும் பெற்றவர்களின் சொல்லுக்கு சரியென்று தலையாட்டிக் கொள்வாள் என்றால் ஆதி அப்படியே நேரெதிர்.. அவளுக்கு சரியென்று பட்டால் ஒழிய, அவளை ஒரு செயலை செய்ய வைக்கவே முடியாது. அக்கா அப்பாவின் பேச்சை கேட்டு பி காம் படித்து, திருமணம் முடித்து சென்றுவிட, தன் பிடிவாதத்தில் நின்று சட்டம் படிக்க சென்றவள் அவள்.
தமிழ்மாறன் வணிகவியலில் பட்டம் பெற்று, முதுகலை படிப்பில் இருக்க, சமீப காலமாகவே வரதராஜனுக்கு அவன் மீது ஒரு எண்ணம். அவருக்கும் பெண்பிள்ளைகளாக போய்விட, நண்பனின் மகன் கண்ணெதிரே துடிப்புடன் வளர்ந்து நின்றதில் அவனை மருமகனாக்கி கொண்டால் என்ன ?? என்றது மனம்.
அந்த எண்ணம் உதித்த சில நிமிடங்களில், அதுதான் சரி என்று முடிவே செய்துவிட்டார் வரதராஜன். தன் எண்ணத்தை அவர் சேது மாதவனிடமும் தெரியப்படுத்தி விட, அவரும் நண்பனை எண்ணி பூரித்து தான் போனார். பரம்பரை பணக்காரனாக இருந்தாலும் தன் நண்பன் தங்கள் நட்பை மதித்து தன் பெண்ணை கொடுக்க முன் வருகிறானே என்று பெருமிதமும் கூட.
பெரியவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ரத்னவேலுவிடம் செல்ல, அவருக்கும் மகிழ்ச்சிதான்… இருவருமே கண்ணெதிரே வளர்ந்த பிள்ளைகள் என்பதால் பெரிதாக யோசிக்கவில்லை அவர். மேலும் சொந்தங்களின் மீதும் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் போக, சேதுமாதவனை அந்த பெரிய மனிதர் முழுமையாக நம்பினார்.
குடும்பத்தினர் பேசி முடித்து தகவலை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க, இருவரிடமும் மறுப்பு எதுவும் இல்லை. ஆதிரா படிப்பு முடிந்ததும் திருமணம் என்றதோடு முடித்துக் கொள்ள, தமிழ்மாறன் தன் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே தந்தையிடம் காட்டிவிட்டான். சிறு வயதிலேயே சட்டென்று முறுக்கி கொண்டு நிற்கும் அந்த சண்டைக்காரியை பிடிக்கும் அவனுக்கு.
இப்போது வளர்ந்து பருவ வயதில் நிற்கும் போது, உணர்வுகளும் வேறுபட, பிடித்தம் அவனறியாமல் காதலாக வளர்ந்து இருந்தது… இப்போது தந்தையும் தன் மனம் போலவே பேச, அவன் முகம் மலர்ந்து போனது. தந்தையிடம் வெளிப்படையாக எதையும் பேசும் குணம் கொண்டவன் என்பதால், தன் பிடித்ததையும் அவன் தெரிவித்துவிட, சேது மாதவனின் மகிழ்ச்சி இருமடங்காகி விட்டது.
ஆதிரா பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளுண்டு, அவள் படிப்பு உண்டு என்று இருக்க, தமிழ்மாறனால் அது முடியாமல் போனது. அடுத்த வாரத்தில் ஒருநாள் அவள் கல்லூரி வளாகத்திலேயே அவன் காத்திருக்க, வகுப்பு முடிந்து வெளியே வந்தவள் அவனை கண்டு திகைத்து நிற்க, அவளுக்கு முன்பாக கையை நீட்டினான் அவன்.
அவள் கேள்வியாக பார்க்க, “தமிழ்மாறன்… நீ ஓகே பண்ண மாப்பிளை..” என்று கூறியவன் கண்கள் சிரிக்க, அவன் விளையாட்டை தொடர்ந்தவள் தானும் கையை நீட்டி அவன் கையை பிடித்து லேசாக குலுக்கினாள்.
கூடவே, “நான் ஆதிரையாழ்… உங்ககிட்ட சிக்கப்போற அப்பாவி..” என்று அப்பாவித்தனம் நிறைந்த முகத்துடன் கூற,
“வரதன் மாமாவையே அலற விடுவ நீ… நீ அப்பாவியா..” என்று சிரிப்புடன் கேட்டவன் அவள் கையை அழுத்தமாக பற்றி இழுக்க, ஒரே இழுப்பில் அவனுக்கு நெருக்கமாக மாறி இருந்தாள் அவள். தான் இருப்பது கல்லூரி வளாகம் என்பது புத்தியில் உரைக்க “காலேஜ்ல இருக்கோம்… நான் இங்கே படிச்சுட்டு இருக்கேன்… சோ தள்ளி நில்லுங்க மாறன் சார்..” என்று ஒற்றை விரலை அவன் நெஞ்சில் வைத்து தள்ள,
“காலேஜ் டைம் முடிஞ்சுது மிஸ்ஸஸ். மாறன்… இது எனக்கான நேரம்…” என்றவன் அவள் கையை பிடித்து காரில் ஏற்ற
“நான் கார் எடுத்திட்டு வந்திருக்கேன்பா..” என்று ஆதி கூறியதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.
ஆதிராவை அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப் அழைத்து சென்றவன், ஒரு கேப்பர்ச்சினோ வுடன் அவளுக்கு எதிரில் அமர்ந்துவிட, “இந்த காஃபிக்காகவா என்னை இப்படி இழுத்துட்டு வந்திங்க..” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
அவளை பார்த்து சிரித்தவன் அழகாக கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு, “உனக்கு அப்படி தோணுதா..” என்று கேட்க
“வேற என்ன… என்ன தெரியணும் மாறனுக்கு..” என்று ஆதியும் பதில் கேள்வி கேட்கவே,
“என்னை எப்படி ஓகே பண்ண… ” என்றான் மாறன்..
அவனின் கேள்வியில் சிரித்து விட்டவள் “வேண்டாம் சொல்ல பெருசா எந்த ரீசனும் இல்ல… அதான் விஷயம்” என்று விட்டு “சத்யா அத்தைக்கு மாமியார் ரோல் எல்லாம் சுத்தமா வராது.. சேது மாமா என்ன நடந்தாலும் எனக்கு சப்போர்ட் பண்ணிடுவாங்க சோ ப்ராப்லம் இல்ல. அதோட என் நண்பன் எழில் வேற கூடவே இருக்கான்…சோ என் லைப் ஜாலியா இருக்கும்…” என்றாள் இலகுவாக…
கேட்டுக் கொண்டிருந்தவன் முகம் தான் தொங்கி போனது…”இதெல்லாம் ஒரு காரணமாடி…” என்று அவன் உள்ளே கொதிக்க
அவன் முகத்தை பார்த்தவள் “நிச்சயமா எனக்கு இதெல்லாம் தான் காரணம் மாறன்.. எனக்கு உங்களை சின்ன வயசுல இருந்து தெரியும்.. நல்ல பிரெண்ட்.. என் சேது மாமா பையன்.. இப்படித்தான் தோணுச்சு.. உங்களுக்கும் அப்படித்தான…இதுல டிஸ்சப்பாய்ண்ட் ஆக என்ன இருக்கு…??” என்று அவள் இயல்பாகவே இருந்தாள் அப்போதும்..
மாறன் “எனக்கு நிச்சயமா அப்படி இல்ல யாழி.. வரதன் மாமா பொண்ணை பிடிக்கும்தான்… ஆனா, அதைவிட அதிகமா என் யாழ்பேபிய பிடிக்கும்… யாழியை யாழிக்காகவே பிடிக்கும்…” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல, லேசாக பிடிபட்டது பெண்ணுக்கு…
அவள் மாறனை கொஞ்சமே கொஞ்சம் ஆர்வமாக பார்க்க, “பல்ப் எரியுது போலவே…” என்று அவன் தலையை சாய்த்து புன்னகைக்க,
“நீங்கதான் அப்பாகிட்ட பேசினீர்களா..”
“இல்ல… ஆனா, கண்டிப்பா பேசி இருப்பேன்.. உன் படிப்பு முடிஞ்சதும்..” என்று மாறன் விளக்கவும், மெல்லிய கோடாக சிரித்தவள் “சாரி… இப்படி நான் நினைக்கல..” என்றுவிட
“சாரிக்கு பதிலா, ஐ லவ் யூடா மாறா ன்னு சொல்லு…”என்றவன் இருக்கையில் பின்னால் சரிந்து அமர
“இப்போ அதெல்லாம் சொன்னா, சினிமாட்டிக்கா இருக்காது.. எனக்கு கொஞ்சம் லவ் வரட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறியவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.
அவளின் வார்த்தைகளில் “உன்னை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா..” என்று கேட்கும் நிலையில் தான் இருந்தான் மாறன்…
“உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் எல்லாம் வரலையா…” என்று கேட்க
“லவ் பண்றேன் தான சொன்னிங்க.. இதுக்கு ஏன் வெட்கப்படணும்… ” என்று மீண்டும் கேட்டவள் பதிலுக்காக அவன் முகம் பார்க்க, அவன் பதில் கூறவில்லை..
மௌனமாக மாறன் அவளை பார்த்து இருக்க, “எனக்கு வெட்கம் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது… லவ்வரை செலக்ட் பண்ணும்போதே இதையெல்லாம் நீங்க யோசிச்சு இருக்கணும்… இப்போகூட ஒன்னும் இல்ல… தப்பிக்கணும்ன்னு எண்ணம் இருந்தா ஓடிடுங்க…” என்றாள் சிரிப்புடன்.
“எனக்கு இந்த கடலை மிட்டாய் கண்டிப்பா வேணும்… வர்றது வரட்டும் பார்த்துக்கலாம்…” என்று அவன் சட்டையின் கைகளை மடித்து விட,
முகத்தை சுருக்கி, “அதென்ன கடலை மிட்டாய்.. என்னை அப்படி சொல்லாதீங்க..” என்று சண்டைக்கு நின்றாள் ஆதி..
“எனக்கு கடலைமிட்டாய் தான்..” என்றான் அழுத்தமாக..
“ஏன் அப்படி சொல்றிங்க…”
“உனக்கு கொஞ்சமே கொஞ்சம் காதல் வரட்டும்.. அப்புறம் சொல்றது என்ன.. ம்ஹும்..” என்று பெருமூச்சு விட்டு கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தவன் “போவோமா..” என்று எழுந்து கொண்டான்…
அவன் முன்னே நடக்க, ஓரடி இடைவெளியில் அவனை தொடர்ந்தவள், அவனுக்கு பழிப்பு காட்டிக் கொண்டே நடந்தாள்… அடுத்து வந்த நாட்களில் இருவரும் அலைபேசி வாயிலாக பேசிக்கொள்ள, அவ்வபோது நேரிலும் வந்து நிற்பான் மாறன்.
“காதல் வரட்டும்..” என்று உதடுகள் உரைத்தாலும், “காதல் வந்துவிட்டது..” என்பதை ஆதியின் கண்கள் காட்டி கொடுத்துவிட, மாறன் கல்லூரிக்கு வந்து நிற்கும் நேரங்களில் சட்டென மலர்ந்துவிடும் அவள் முகமும் மாறனுக்கு அத்தனை நிறைவை கொடுத்தது.
அடுத்த ஓராண்டு காலமும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, இவர்களின் காதல் வளர்ந்த அளவுக்கு சேது மாதவனின் சவால்களும் வளர்ந்து இருந்தது.
தன் பெரியப்பா மகனை கைதூக்கி விட நினைத்து, ஓராண்டிற்கு முன் அவர் போட்டிருந்த முப்பது கோடிக்கான ஜாமீன் கையெழுத்து அவரை இப்போது மிரட்டிக் கொண்டிருந்தது.. அந்த பெரியப்பா மகன் கடன் பிரச்சனையால் தற்கொலை முடிவெடுத்து தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்க, அந்த கடன் சேது மாதவனின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து இருந்தது…
கூடவே அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர் வாயிலாக, வாகன தொழிற்சாலையிலும் சில பிரச்சனைகள்… அந்த அமைச்சர் இவர்களிடம் இருந்து பணம் பார்க்க திட்டமிட்டு இருக்க, சேது மாதவன் முடியாது என்று நிற்கவும், சுற்றுசூழலுக்கு பாதிப்பு, முறையான விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று ஏதேதோ காரணங்கள்…
அந்த நேரம்தான் வரதராஜன் சேது மாதவனிடம் இருந்து முரண்பட்டு நின்றது. அவன் கேட்ட பணத்தை கொடுத்துவிடுவோம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தவர் இப்போது தொழிற்சாலையை மூடும் நிலை வரவும், அத்தனைக்கும் சேது மாதவனை கைகாட்டினார்…
அவரின் கனவு தொழிற்சாலை அல்லவா… ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரால்… தன் தொழில் கையை விட்டுப்போக சேது தான் காரணம் என்று உறுதியாக நம்பியவர், தொழிற்சாலை விதிகளை தான் முறையாக பின்பற்றியதே இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை..
அவர்களின் அத்தனை ஆண்டுகால நட்பில் முதல் விரிசல் அது.. அது போதாது என்று அதே அமைச்சர் ஒரு பொது நிகழ்ச்சியில் வரதராஜனை சந்தித்தவர் தன் மகனுக்கு ஆதியை பெண் கேட்டு வைக்க, வரதன் மொத்தமாக மாறிப்போனது அந்த நொடியில் தான்.
அவர்களின் தொழிற்சாலையை மறுபடியும் திறப்பதும் அந்த அமைச்சரின் கையில் இருக்க, சட்டென மறுக்க முடியவில்லை அவரால்.. கூடவே சேதுவின் முப்பது கோடி கடன் விஷயமும் நெருட, அவர் தமிழ்மாறனை தள்ளி வைத்தார்.
பெரிதாக சேது மாதவனை நெருங்காமல் அவர் நிற்க, சேது தன் ஒரு கடையை விற்று கடனை அடைத்தவர், போதாத குறைக்கு ஆங்காங்கே கடனும் வாங்கி வைத்திருக்க, மாறனுக்கு தந்தையின் நிலை புரியவும் அவருக்கு துணையாக கடைக்கு செல்ல தொடங்கி இருந்தான் அவன்.
அவன் கவனம் முழுதாக தொழிலில் இருக்க, இங்கே வரதராஜன் முழுதாக அமைச்சரின் கைப்பாவையாக மாறி தன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க, என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருந்தார்.
வரதராஜனின் இந்த நடவடிக்கைகள் குறித்து சேதுவுக்கு தெரியவர, அவரை எச்சரிக்கை செய்யவே அவரை தேடி சென்றார் சேது.. ஆனால் வரதன் அவரின் பேச்சை காது கொடுத்து கேட்பதாக இல்லை.. கூடவே அவரை எடுத்தெறிந்தும் பேசிவிட்டவர் முடிவாக
“உனக்கு விருப்பம் இல்லையென்றால் விலகிக்கோ சேது.. இந்த கம்பெனி என் கனவு.. என்னால இதை விட முடியாது.. உனக்கு சேர வேண்டியதை பிரிச்சு கொடுத்துட்றேன்..” என்று விட
“கம்பெனியை பிரிச்சு கொடுக்கறியா… நீ என்ன நினைச்சுட்டு இருக்க வரதா.. தொழிலை பிரிச்சுக்குவோம் சரி… நம்ம நட்பு.. அதுக்கும் மேல நம்ம பிள்ளைகளோட வாழ்க்கை.. அதுக்கு என்ன பண்ண போற…” என்று சேது நிதானமாக வினவ
“என் மக வாழ்க்கைக்கு என்ன செய்யணும் ன்னு எனக்கு தெரியும் சேது.. அவளை ஒரு கடன்காரன் வீட்டுக்கு அனுப்ப நான் தயாரா இல்ல.. அதனால அந்த பேச்சை எல்லாம் மறந்திடு.. நான் கொடுக்கிற பணத்தை வச்சு கடனை அடைச்சுட்டு, நிம்மதியா வாழ வழியை பாரு…”
“இது கூட உன்கூட பழகின கடமைக்கு சொல்றேன்… அவ்ளோதான்… உன் மகனையும் என் மக கிட்ட நெருங்க வேண்டாம்ன்னு சொல்லு.. அவளுக்கு நான் வேற மாப்பிளை பார்த்துட்டேன்..” என்று முகத்தில் அடித்தது போல் கூறி முடித்து விட்டார்.
அவரிடம் இருந்து இப்படியான பேச்சை சேது மாதவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை.. தொழில் ஆசையில் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்ற நினைவில் தான் அவர் வந்தது. ஆனால், உயிர் நண்பன் தன் சுயரூபத்தை காட்டிவிட, அப்போதே முழுதாக உடைந்து போனார் மனிதர்.
இருந்தாலும், “நீ முடிவு பண்ணா போதுமா வரதா.. என் மருமகளை கேட்க வேண்டாமா?? ” என்று கேட்டு பார்க்க
“ஏன் உன் மகனை வச்சு அவளை மயக்கி கைக்குள்ள வச்சு இருக்க திமிர்ல பேசுறியா சேது.. அவ என்னோட மக.. நான் சொன்னா செய்வா.. செஞ்சுதான் ஆகணும்.. என்ன நடந்தாலும் உன் மகனுக்கு என் மகளை கொடுக்க மாட்டேன்..” என்றுவிட
அந்த வார்த்தைகளே போதுமாக இருந்தது சேதுமாதவனுக்கு.. அதற்குமேல் ஒன்றுமே பேசவில்லை மனிதர். அங்கிருந்து கிளம்பியவர் நேராக வீட்டுக்கு வந்து படுத்துவிட, அவரின் கண்ணெதிரே ஆவல் ததும்பிய அவர் மகனின் முகம் தான் வந்து போனது.
தன் மகனின் மனதை அறிந்த தந்தையாக அவரால் தங்கி கொள்ளவே முடியாமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திற்கு சென்றவர் அதன்பிறகு எழவே இல்லை… தூக்கத்திலேயே அவர் இதயம் துடிப்பை நிறுத்தி இருக்க, மகனை பற்றிய கவலையிலேயே உயிரை விட்டிருந்தார் மனிதர்.