Advertisement

அத்தியாயம் 7 :

        சுருதிக்கு ஏனோ நடப்பது எதுவும் சரியில்லாத மாறியே ஒரு தோற்றம்…இன்று ஏதோ தவறான விஷயம் நடக்க போகிறது என்று அவள் மனதில் ஒரு குரல் கேட்டுக்கொன்டே இருக்கிறது…காலையிலிருந்தே மனசே சரி இல்லை…அதனாலே இன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்….இப்படி தோன்ற ஆரம்பித்தவுடனே அவள் விடுமுறை எடுக்க காரணம்…

        இன்று அர்ஜுனின் அப்பாவின் வழக்குக்கான இறுதி தீர்ப்பு வழங்கும் நாள்…அவனால் வரும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியுமோ…முடியாதோ…ஒரு வேளை அதனால் கூட அவன் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிட்டால் அதனால் தான்…  

              அவள் நினைத்தது போலவே அர்ஜுன் இன்று பள்ளிக்கு செல்லவில்லை…எனவே அவனை அழைத்து 10 மணி போல தன் வீட்டிற்கு வரசொல்லியிருந்தாள்…அவன் வந்தவுடன் ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்திருந்தாள்…

                அவள் நினைத்தது போலவே இன்று ஒரு அசம்பாவித சம்பவம் நடக்கவிருக்கிறது…ஆனால் அவள் எதிர்பார்க்காத இடத்தில்…

              கடிகாரம் மணி ஒன்பது என்று காட்டியது…ஆனால் சுருதியின் வீட்டில் மட்டும் காலைநேர பரபரப்பு சற்றும் குறையாமல் அதிகமாகி இருப்பது போல் ஒரு தோற்றம்…காரணம் இல்லாமலில்லை சுதாகரும்,கதிரும் பள்ளிக்கு போகாமல் தாங்களும் விடுமுறை எடுக்க வேண்டும் என சுருதியிடம் போராடி கொண்டிருந்தனர்…

           “டேய் மணி 9 ஆகிருச்சு டா…வேகமா ஸ்கூலுக்கு கிளம்பி போற வழிய பாருங்க டா எருமைமாடுகளா…எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு டா…”என்று 8 30 மணியிலிருந்து சுருதியும் இந்த பாட்டை தான் படித்துக்கொண்டிருந்தாள் …ஆனால் சென்ற அடைய வேண்டிய காதுகளுக்கோ திவ்வியமாய் சென்றடைந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்…

          “நாங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் லீவு போடுறோமே ப்ளீஸ்…உன்னை நாங்க தானே பார்த்துக்கணும் சுருதி…உங்க அப்பா அதாவது எங்க மாமா என்னை நம்பி தானே உன்னை விட்டுட்டு போயிருக்காங்க…அதுனாலே நீ எங்க போறியோ அங்கே நாங்களும் வருவோம்…”என்று பதில் பாட்டு படித்தான் அவள் அத்தைமகன் ரத்தினம்…

         கதிர் எதுவுமே பேசாமல் இருந்தாலும் அவனும் விடுமுறை எடுக்க தான் நினைத்திருந்தான் என்று அவன் முக பாவங்கள் கூறின…சுதாகர் பேசும் போது அவன் கருத்தை ஆமோதிக்கும் முகபாவமும் சுருதி பேசும் போது அவள் கருத்தை எதிர்ப்பது போன்ற முகபாவமும் கொடுத்துக்கொண்டு இருவர் ஆங்கேரிங் செய்யும் நிகழ்ச்சியில் ஒருத்தன் பேசும் போது இன்னோருத்தன் எக்ஸ்பிரேசனாலே பேசுவார்களே அப்படி பண்ணிக்கொண்டிருந்தான் கதிர்…

  “நீங்க இப்ப ஸ்கூலுக்கு போகமாட்டிங்க…கண்டிப்பா என் கூட தான் வருவீங்க என்ன…”

    “ஆமாம் போகமாட்டோம்…”என இருவரும் கோரஸாக கூறினர்…

     “ஓ..அப்ப சரி…இருங்க கேகே சார் கிட்ட கால் பண்ணி கேக்குறேன்…அவர் உங்கள கூட்டிட்டு போக சொன்ன கூட்டிட்டு போறேன் சரியா…”

    இதற்கு பின்பும் அவர்கள் இருவரும் அந்த இடத்தில் நின்று இருப்பார்களா என்ன….ரெடி ஜூட் தான்…

     “ஏன் சுருதி…உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை…ஸ்கூலுக்கு போற பையன்களை பிடிச்சு வைச்சு பேசிட்டு இருக்க…இப்ப பாரு லேட் ஆயிருச்சு…”என்று கூறி சென்றது வேறு யாராக இருக்க முடியும் சுதாகர் தான்…

  ஆனால் அவன் கூறி சென்ற எதுவும் சுருதியின் காதில் விழவே இல்லை…அவள் தான் அவர்களின் பிரின்சிபால்லின் நினைவிலே நின்று விட்டாளே…

   கேகேயின் கடந்த காலம் தெரிந்ததிலிருந்து அவள் அவளாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…கேகேக்கு நடந்தது எதுவுமே அவளால் ஏற்று கொள்ள முடியவே இல்லை…அவனுக்கு ஏதாவது பண்ண வேண்டும்…அவனின் துன்பத்தை போக்க வேண்டும் என்று ஒரு உந்துதல்…அதற்கான காரணம் நேசம் என்று பத்தாம் பசலித்தனமாக நினைக்க தோன்றவில்லை அவளுக்கு…

  நாம் அனைவர்க்கும் ஆதர்ச நாயகன் என்று  ஒருவர் இருப்பார்…அவர் திரையில் தோன்றும் போதும் அவரின் தனிப்பட்ட விஷயங்கள் தெரிய வரும்போதும் அவர்களை ரசிப்போம்…அவர்களுடன் கனவிலே பேசி சிரித்து அவரை நமக்கு மிக நெருக்கமானவர்களாக உணர ஆரம்பிப்போம்…அப்படி நினைத்த நாயகனின் வாழ்க்கையில் பிரச்னை நடக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும்….அவர்கள் பிரச்னை தீர வேண்டும் என கடவுளை வணங்குவோம்…அதே சமயம் அவர்கள் அருகில் நாம் இருந்தால் நம்மால் செய்ய முடியாத செயலை கூட அவர்களுக்காக செய்வோம் இல்லையா அதே மாதிரியான உணர்வு தான் சுருதிக்கும்…

      இச்சூழ்நிலையில் சுருதியால் செய்ய முடிந்தது வர போகும் போட்டியில் அவர்கள் பள்ளியை வெற்றி பெறவைப்பது தான்…அது கேகே விற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பது அவளின் எண்ணம் …கேகே இந்த பள்ளியில் பிரின்சிபால் ஆகி எட்டு வருடங்கள் ஆகிருந்தன…இதில் ஒரு வருடம் கூட அவர்கள் பள்ளி வெற்றி பெற்றது இல்லை…பற்றாக்குறைக்கு இந்த வருடம் போட்டிகள் அனைத்தும் மதுரை கிளையில் அதாவது இவர்கள் பள்ளியில் நடக்கவிருக்கிறது…எனவே இதில் கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காவே சுருதியை இப்பள்ளியில் சேர்த்தது…

     வெற்றியடைய வேண்டும் என்பதற்க்காக இவள் தேர்ந்து எடுத்த நால்வரில் வெண்ணிலாவால் கண்டிப்பாக இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாதாம்…என்று வெண்ணிலாவே வந்து கெஞ்சி சென்றிருந்தாள்…அவளுக்கு பதிலாக வேற ஒரு பெண்ணையும் சேர்த்தாகிவிட்டது…ஆனால் இதில் சுருதிக்கு தான் மனசே இல்லை…ஏதோ இதில் வெண்ணிலா இருந்தால் தான் வெற்றி பெறமுடியும் என அவளுக்கு தோன்றியது…என்று அனைத்தையும் நினைத்து கொண்டே சுருதி வெளியே செல்ல கிளம்பிருந்தாள்…மணியும் பத்தை நெருங்க கால் மணி நேரம் மட்டுமே இருந்தது…

  சுருதி மாடியிலிருந்து இறங்கி வந்து அவள் அத்தையிடம் வெளியே போகவதாக கூறிவிட்டு சாப்பிட்டு வந்தாள்…மணி பத்தாகிருந்தது…அதே நேரம் வாசலில் அர்ஜுன் தன்னை அழைக்கும் சத்தம் கேட்டது…

    “பாருடா…பயப்பிள்ளை பயங்கர பங்க்சுவல் போலயே…”என்று நினைத்துக்கொண்டே அவனை நெருக்கினாள்…

   “நீங்க வர சொன்னிங்களே…என்ன விஷயம்”என்று கேட்டான்…

      அர்ஜுனின் முகத்தை தான் விடாது பார்த்துக்கொண்டிருந்தாள் சுருதி…எப்பொழுதும் சிரித்த முகமாக இல்லாவிட்டாலும் அவனை மற்றவர்கள் நெருங்கும் அளவிற்காவது ஒரு சிநேகபாவம் அவன் முகத்தில் இருக்கும்…ஆனால் இன்று அது கூட இல்லாமல் முகம் இறுகிக்கிடந்தது…அவனை நினைத்தால் சுருதிக்கு பாவமாக தான் இருக்கும்…இந்த சிறு வயதில் அவன் சந்தித்த உலகம் யாருமே இந்த வயதில் அறியாதது…பள்ளி படிப்பு வரை மட்டும் தான் இந்த உலகம் அதனின் நல் முகத்தை நம்மிடம் காட்டும்…அந்த பாக்கியம் கூட இவனுக்கு கிட்டவில்லையே…வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான பிரச்னை…

        “நா ஒரு இடத்துக்கு போறேன்…எனக்கு துணைக்கு வரியா…சுதாகரையும் கதிரையும் இருக்க சொன்னேன்…அவங்களுக்கு ஏதோ ஒரு முக்கியமான டெஸ்ட்டாம் …அதான் வரலைன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டாங்க…அதான் ப்ளீஸ் …”என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பொய் கூறிக்கொண்டிருந்தாள் சுருதி…

      “கடவுளே முருகா…சரினு சொல்லணும்…இந்த பிளான் எவ்வளவு தூரத்துக்கு சரியா வரும்னு தெரில…ஆனால் ஒரு ட்ரை செய்ச்சு பாப்போமே…இது மட்டும் ஒர்க் ஆயிருச்சுனா சுதாகர்,கதிர்,அர்ஜுன் இவங்க மூணு பேருக்கும் மொட்டை போடுறேன் முருகா…”என்று மானசீகமாக வேண்ட ஆரம்பித்திருந்தாள்…

     அந்த முருகனுக்கும் அவர்கள் மூவரையும் மொட்டையில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக  இருக்குமோ என்னவோ…அர்ஜுன் அவளுடன் வர சம்மதித்திருந்தான்…

  அவர்கள் இருவரும் சுருதி சொன்ன இடத்திற்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தனர்…சுருதியால் எதையும் அறுதியிட்டு கூறமுடியவில்லை…அர்ஜுனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடிக்கவில்லை…

   அவள் அவனை பற்றி புரிந்துகொண்ட வரையில் அவனின் பிரச்னை அதை அவன் பார்க்கும் கோணம் இதுவாக தான் இருக்கும் என்று நினைத்தாள்…அந்த கோணம் தவறானது…அதை வேறுஒரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அவனை இங்கு அழைத்து வந்தது…

     அர்ஜுனை அவனின் வீட்டு முன்பாக இறக்கி விட்டாள்…

   “எல்லாத்துக்கும் இன்னொரு கோணம்னு ஒன்னு இருக்கு…அதன் வழியாக பார்த்தால் உனக்கு எது சரி தவறு என்று தெரியும்…யோசித்து பாரு…அடுத்தவர் செய்த தவறுக்காக நீ சிலுவை சுமக்க வேண்டும் என்று நினைக்காதே…உனக்கு புரியும்னு நினைக்குறேன்…இனிமே என்ன தீர்ப்பு வந்திருந்தாலும் உன்னால் ஏற்று கொள்ள முடியும்னு நினைக்குறேன் …”என்று கூறிவிட்டு சென்றாள்…

    சுருதி புள்ளியாக மறையும் வரை செல்லும் அவளையே பார்த்தவாறு  நின்று கொண்டிருந்தான்…அவனுள் ஒரு தெளிவு வந்திருந்தது…  

 சுருதி அவர்கள் வீட்டுக்கு  அருகிலுள்ள ஒரு பலசரக்கு கடையில் வண்டியை நிப்பாட்டி இறங்கினாள்…அவள் வரும் போது உளுந்து  வாங்கிட்டு வருமாறு அவள் அத்தை கூறியிருந்தார்…

   “நாம வேல்யூ என்னனு தெரியாம இந்த அத்தை நம்மள உளுந்து வாங்கிட்டு வா…பருப்பு வாங்கிட்டு வானு டேமேஜ் பண்ணுது…ஜனாதிபதி கையாள நல்லாசிரியர் விருது வாங்க வேண்டிய என்னை இந்த சமூகம் இந்த காது கேக்காத பாட்டிகிட்ட உளுந்து வாங்க வைக்குது…இந்த பாட்டிட இப்ப எப்படி நான் உளுந்துனு புரிய வைப்பேன்…”என்று மனதில் புலம்பிக்கொண்டே கடையை அடைந்தாள்….

    அப்பொழுது தான் அங்கு ஏற்கனவே வெண்ணிலா நிற்பது தெரிந்தது…இப்பொழுது மைண்ட் வாயிசில் பேசாமல் சத்தமாகவே கேட்டிருந்தாள்…

    “நீ ஸ்கூலுக்கு போகலையா…”

     “அது அது இல்லை மிஸ்…உடம்பு சரி இல்லை அதான் மிஸ்…”என்று சிறிது பதட்டமாக கூறினாளோ????

       “இந்த உலகத்திலே என்னை பார்த்து பயந்து பதட்டமா பேசுற ஒரு ஜீவன் இருக்குமென்றால் அது இவளா மட்டும் தான் இருங்க முடியும்…”என்று மைண்ட் வாய்ஸில் பேச ஆரம்பித்திருந்தாள்…

  அதற்குள் வெண்ணிலா அந்த சரியா காது கேக்காத பாட்டியிடம் அவளுக்கு தேவையான பொருளை கேட்டு வாங்கிருந்தாள்…அவள் வாங்கிய பொருளை சுருதிக்கு காட்ட விருப்பம் இல்லை போல மறைத்தவாறு சென்றாள்…ஆனால் அதை மறைக்க கடவுள் விரும்பவில்லை போல…கால் இடறி விழ போயி சமாளித்து நின்றாள் ஆனால் அவள் கையில் இருந்த பொருள் கீழே விழுந்திருந்தது…

    இவள் விழ போவதை பார்த்த உடனே அவளை நெருங்கிருந்தாள் சுருதி…கீழே கிடந்த பொருள்களை பார்த்த சுருதியின் கண்கள் இடுங்கின…

    “வெண்ணிலா உனக்கு எதுக்கு பிளேடு அப்றம் அது என்ன எலி மருந்து தானே…”

     “இல்லை மிஸ்…அம்மா தான் வாங்கிட்டு வர சொன்னாங்க…அதான் மிஸ்…”

      “ஓ …சரி போ…”

இனி நடக்கப்போகும் விபரீதம் தெரிந்திருந்தால் சுருதி அவளை தனியாக அனுப்பியிருக்க மாட்டாளோ…இல்லை நன்றாக விசாரித்து இருப்பாளோ….அனைத்தும் விதி பயனே…இதில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பு இல்லை…

       எப்படியோ அந்த பாட்டியிடம் போராடி உளுந்தை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தாள் சுருதி…

   தன் அத்தையிடம் வாங்கி வந்த உளுந்தை கொடுத்துவிட்டு சிறிது நேரம் அவர்கள் குடும்ப புரணியை பேசி விட்டு தனதறைக்கு சென்றிருந்தாள்…

    கசகசவென்று இருக்கவும் குளிக்க சென்றாள்…சில பேருக்கு குளித்து கொண்டிருக்கும் போது தான் சரியான சிந்தனைகள் வரும்…எடுத்துக்காட்டாக ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்திக்கொண்டு சென்றாரே….

     அது போல சுருதிக்கும் பல நினைவுகள் எங்கெங்கோ சென்று அவர்கள் பள்ளியில் வந்து முடிந்தது…

     “நானும் ஹார்ன் அடிச்சுட்டே வந்தேன்மே இந்த பொண்ணு தான் கண்டுக்காம நேர வந்து மோதுது..எந்த சாமி புண்ணியமோ நா சடன் பிரேக் போட்டனாலே பொழைச்சுகிச்சு ….

நீ இங்க வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் அவ நீச்சல் குளத்துல விழுந்து உயிருக்கு போராட்டிட்டு இருந்தவளை கப்பாத்துனாங்க…அந்த பெண்னே போய் நீச்சல் போட்டிக்கு போட்டு இருக்க…

    “வெண்ணிலா உனக்கு எதுக்கு பிளேடு அப்றம் அது என்ன எலி மருந்து தானே…”என்று மாத்தி மாத்தி குரல்கள் அவள் மூளையில் ஒலிக்க ஆரம்பித்தன…வேகமாக வெளிய வந்த சுருதி கைக்கு அகப்பட்ட ஒரு சுடிதாரை போட்டு கொண்டு வெண்ணிலாவின் வீட்டுக்கு ஓடினாள்…

   அங்கு சென்று பார்த்தால் கதவு பூட்டி இருந்தது உள்பக்கமாக தான்…தட்டினாள் துறக்கவில்லை…நெஞ்சம் பதறியது…அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக பார்க்க சென்றாள்…அனைத்து ஜன்னலும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது…உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை…வேகமாக அவர்கள் மாடிக்கு சென்றாள் ஏதாவது வழி கிடைக்குமா என்று….அவள் நம்பிக்கை வீண் போகவில்லை…வெளிச்சம் வருவதற்காக ஒரு சிறிய ஜன்னல் ஹாலுக்கு நேராக இருந்தது….அங்கே அவள் கண்ட காட்சி உயிரை அதிர செய்தது…

      வெண்ணிலா தன் வலக்கையை நன்றாக நீட்டிகொண்டு இடதுகையில் பிளேடு வைத்து வெட்டுவதற்கு தயாராக இருந்தாள்…முன்னாடி ஒரு மொபைல் போன் இருந்தது…

 

மூன்று மாதங்களுக்கு பின்…

          அவர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த போட்டிகளும் இனிதாக ஆரம்பித்திருந்தது…முதல் போட்டியாக நீச்சல் போட்டி தான் ஆரம்பித்திருந்தது…

           ஜெயராம் பள்ளியே விழாகோலம் பூண்டிருந்தது…பள்ளிகளில் விழாக்கள் என்றாலே அது ஒரு மகிழ்ச்சியான மனநிலை தானே…மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் என்று அனைவர்க்கும்…   16 பள்ளியில் இருந்தும் போட்டிக்கு கலந்துகொள்ள வந்த மாணவர்கள் ஆசிரியர்கள்…பள்ளியின் ட்ரஸ்ட்டி என்று பள்ளியே புது ரத்தம் பாய சுறுசுறுப்பாக இருந்தது…

         நீச்சல் போட்டி ஆரம்பம் ஆகிருந்தது…இப்போட்டியில் 16  பள்ளிகளில் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள் மட்டுமே…நீச்சல் போட்டியில் முதல் வரும் 12 மாணவிகளையுடைய பள்ளிகள் மட்டுமே அடுத்த போட்டியில் கலந்துக்கொள்ள முடியும்…

  அந்த இடத்தில் கூடியிருந்த அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள்…பிரின்சிபால்கள் அனைவரது பார்வையும் நீச்சல் போட்டியில் இல்லாமல் அந்த ஓரத்தில் இருந்த ஒரு 15 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை மீது தான் இருந்தன…அது யாரென்று நான் தனியாக கூறவேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறன்…ஆம் நம் சுருதியும் அவளது வானர கூட்டங்களும் தான்…கேகேவால் மற்ற பிரின்ஸிபால்க்களிடமிருந்து தனியாக வர முடிந்திருந்தால் சுருதி மற்றும் அவளை சூழ்ந்திருக்கும் வானர கூட்டங்களின் தலை வீங்கிருக்கும்…ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் தப்பித்து இருந்தனர்…

சுருதி அண்ட் கோ “தங்கத்தட்டு தகரத்தட்டு…

வெண்ணிலா ஜெயிக்க போது கைய தட்டு…”

            “காலம் சொல்லும் வரலாறு …

               வெண்ணிலா வந்தாலே தகராறு…”

என்று முதல் வரியை சுருதி சத்தமாக சொல்ல அடுத்த வரியை சுதாகர் கதிர் அர்ஜுன் மற்றும் கூட இருந்த அவர்கள் பள்ளி மாணவர்கள் சத்தமாக கூறினர்…

                கே கே அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்து இருந்தான்…சுருதி இவன் பக்கம் திரும்பி பார்த்தால் கூட நிப்பாட்ட சொல்லிருப்பான்…அது தெரிந்து தான் என்னவோ சுருதி அவன் பக்கம் பார்வையை கூட திருப்பவில்லை…முடியட்டும் உங்களுக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு சிரித்தவாறு முகத்தை வைத்துக்கொண்டு அருகில் இருந்தவரிடம் பேசினான்…

  

 எவ்வளவு முயன்றும் வெண்ணிலாவால் முதலாவதாக வர முடியவில்லை…அது கூட பரவாயில்லை முதல் மூன்று இடத்தில் கூட வர முடியவில்லை…ஐந்தாவதாக தான் வந்தாள்…சுருதியை போல் அனைவரும் இவளை நம்பி தான் இருந்திருப்பார்கள் போல் அனைவர்க்கும் அதிர்ச்சியே…இருந்தாலும் அதிர்ச்சியை உடனே மறைத்த சுருதி ஓடி போய் வெண்ணிலாவை அணைத்து கொண்டாள்…துவட்ட துண்டை போர்த்தி விட்டு சுருதி அண்ட் கோ வெண்ணிலாவையும் சேர்த்து கொண்டு ‘DAB’ எனப்படும் இக்கால இளைஞர்கள் வெற்றியின் குறியீடாக கருதும் நடனத்தை ஆடினர்…வலக்கையை மடக்கி அதில் தலையை சாய்த்து இடக்கையை நீட்டி எதிர் எதிர் திசையில் அசைத்து ஆடப்படும் நடன அசைவு…

      கே கே விற்கு கோவத்தை தாண்டி சிரிப்பும் வந்தது…அதன் பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து இந்த ‘DAB’யை செய்தனர்…மிகவும் மகிழ்ச்சி அலை அங்கு அடிக்க ஆரம்பித்திருந்தது…

நாளைக்கான போட்டியின் பெயரை சொல்லி விட்டு பள்ளியின் ட்ரஸ்டியாக புதிதாக பொறுப்பெடுத்து இருக்கும் பெண் கூறிவிட்டு சென்றார்…

  சுருதி அண்ட் கோ மொத்தமாக அனைவரும் கே கேவின் அறையில் நின்றுக்கொண்டிருந்தனர்…

    இந்த வார்த்தைன்னு இல்லாமல் எல்லா விதமான நல்ல வார்த்தைகளிலும் அனைவர்க்கும் அபிஷேகம் நடத்திக்கொண்டிருந்தான்…

    யாரை முக்கியமாக திட்டுகின்றானோ அவளோ சிறிதும் அவனை கண்டுகொள்ளாமல் ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த குருவிகளை பார்த்து கொண்டிருந்தாள்…இதை கவனித்து விட்ட கேகே வின் கோவத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா…வானர படைகளை வெளியே அனுப்பிய கே கே தனியாக சிக்கி கொண்ட சுருதியை திட்ட ஆரம்பித்து இருந்தான்…

  “கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா…நீ ஸ்டுடென்ட் கிடையாது…டீச்சர் அது கொஞ்சமாச்சும் உன் மனசுல இருக்கா…அப்படி கத்திட்டு இருக்க…மொத்த ஸ்கூலே உங்களை தான் பாக்குது…ஆனா மேடம் யாரையும் கவனிக்கல…என்னையும் பாக்கல…பார்த்த திட்டுவேன்னு… “இன்னும் ஏதுஏதோ திட்டி கொண்டிருந்தான்…

     “நா இன்னும் இங்கே 4 டேஸ் தானே டீச்சரா இருப்பேன்…அப்புறம் எங்க ஊர்க்கே போயிருவேன்…அதன் என்ஜோய் பண்ணிட்டு இருக்கேன்…ஆனா எனக்கு சின்ன டவுட் நா போன பிறகு யாரை இப்படி திட்டுவீங்க…”என்று சுருதி அதிக யோசனையுடன் கேட்டாள்…

   இதை கேட்ட கே கே விற்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது…இவள் இன்னும் 5 நாட்களில் போய் விடுவாளோ என்று…சிறிது இல்லை கொஞ்சம் அதிகமாவே வருத்தப்பட்டான்…

   “நீ இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டி தானே….”என்று கேட்டான்…

   “இதுக்கு மேல ஒரு நாள் அதிகமா இருந்தா கூட எங்க அப்பா வந்துருவாரு…”என்று கூறிவிட்டு போயிட்டு வரேன் என்று சென்றுவிட்டாள்…

    

 

    

 

       

Advertisement