Advertisement

அத்தியாயம்: 6

 

பகலும் இல்லாத,இரவும் இல்லாத அந்த அந்திசாயும் வேளையில்…ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்தகாட்டில்,காற்றின் ஓசையே பேரோசையாய் எழும்பி மனதில் திகிலூட்ட போதுமானதாய் இருந்தது…

அந்த அடர்ந்த காட்டினுள், வெயிலில்அலைந்து திரிந்ததால் உண்டான பழுப்பு நிறத்துடன்…மெலிந்த உடல்வாகுடன் பத்து வயது மதிக்கதக்க சிறுவன் உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக தரையில் வீழ்ந்து கிடந்தான்…அவனின் அம்மா அம்மா என்ற சிறு முனகலின் மூலம் அவன் உயிரோடு இருப்பது புரிந்தது…

அவனை சுற்றி கழுகுகளும்… ஓநாய்களும்.. புலிகளும்…சிங்கங்களும்…வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன…

அவ்வளவு தான்…அவனை தங்கள் பசிக்கு உணவாக்க போகின்றன…ஏதுமறியா சிறுவனை இந்த வெறிபிடித்த மிருகங்களிடமிருந்து யார் காப்பாற்ற போகிறார்கள்…ஒரு புலி தன் நகத்தால் அவன் முகத்தில் ஒரு கோடு கிழித்தது…இரத்தம் பொதபொதவென வழிகிறது…இரத்த வாடை கண்ட மிருகங்கள் அவனை சும்மா விடுமா????

ஆஆஆஆ….என்ற அலறலுடன் சுருதி தன் கனவிலிருந்து எழுந்தாள்…கனவின் தாக்கத்தால் உடம்பெல்லாம் ஜில்லென்று வேர்த்து…உடல் சிறிதாக நடுங்கிக்கொண்டிருந்தது…

தான் கேட்ட,பார்த்த,உணர்ந்த நினைவுக்குறிப்புகளின் எச்சம் தான் கனவு…ஆம் அவள் கேட்ட உண்மைகளின் எச்சம் தான் இந்த கனவும் என்று நினைத்துக்கொண்டாள்…கடந்த ஒரு வாரமாக இந்த கனவு மட்டுமே அவளுக்கு திருப்பி திருப்பி வந்துக்கொண்டிருக்கிறது…இந்த கனவு வந்த மறுநொடி அவளும் இப்டி தான் அலறி அடித்து கொண்டு எழுந்திருக்கிறாள்…அதற்கு பின் தூக்கம் இருந்த இடத்தில் துக்கம் அடைந்துக்கொள்கிறது…

கதிரின் பிரச்னை அனுமார் வால் மாதிரி நீண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது….கே கேவின்  நண்பர் ஒருவர் காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்…அவரின் மூலம் இப்பிரச்னையில் கதிர் மற்றும் இப்பள்ளியின் பெயரை நீக்கி போதை மருந்து கடத்தல் சப்ளையர்களை பிடித்துஇருந்தனர்…ஆனால் முழுவதும் இதை தடுக்க முடியாது…ஏனெனில் இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும்  பெரிய தலைகள் தான்…அவர்களை எதிர்த்து ஒன்னும் பண்ணமுடியாது…நம்மால் முடிந்தவரை நம்மை சார்ந்த குழந்தைகள் பெரியவர்களை தீயவழியில் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்…இதற்கிடையில் பள்ளியின் பின் பக்கமுள்ள வழியை அடைத்து இருந்தனர்…இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் நடந்தது…

தன் முன்னே  அமர்ந்து போட்டிக்கான  அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி  பேசிக்கொண்டிருக்கும் சுருதியை தான் கடந்த அரைமணி நேரமாக இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் கேகே…

அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது…அவள் விழிகளில் எப்பொழுதுமே நிரந்தரமாக  குடி கொண்டிருக்கும் குறும்பும்…தன்னை பார்த்தவுடனே அவள் கண்களில் பிரத்யேமாக வரும் சுவாரசியமும் இரசிப்பு தன்மையும் ஒரு வாரமாக அவளிடம் மிஸ்ஸிங்…எந்நேரமும் ஏதோ  சிந்தனையுடனும்,தன்னை பார்க்கும் போது என்னவென்றே கூறமுடியா ஒரு பாவனையுடனும் தான் இருக்கிறாள்…

இவளுக்கு என்ன தான் பிரச்னை என்று கேட்டுவிடுவமா என்று நினைத்துகொன்டே தனது இடத்தை விட்டு எழுந்து அவளை நோக்கி வந்தான்…அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இருபுறக்களிலும் கையை ஊன்றி அவள் கண்களை பார்த்து “உனக்கு என்ன தான் பிரச்னை…ஏன் இப்டி இருக்க…”என்று கேட்டான்…

சுருதி மூச்சுவிட மறந்து  தன் இரு முட்டை கண்களும் தெறித்து விழும் அளவிற்கு தன் முன்னே இருந்த கே கேவின் முகத்தை பார்த்தாள்…

கே கே உணரவேயில்லை…ஒரு பெண்ணின் மிக அருகில் இருவரது மூச்சுக்காற்றும் மோதி போர் புரியும் நெருக்கத்தில் உள்ளோம் என்பதை..அவனின் குறிக்கோள் முழுவதும் அவளின் பிரச்னை என்ன என்று அறிந்துகொள்வதிலேயே இருந்தது…

அடபாவி இவ்வளவு பக்கத்தில வந்து நின்னுகிட்டு என்ன பிரச்சனைன்னு கேக்கிறியே டா…இதை மட்டும் எங்க அப்பா பாக்கணும்…எங்க வீட்டு தோட்டத்துல இருக்க வாழைமரத்துக்கு என்னை வெட்டி உரமா போட்டுருவாங்களே…தள்ளி போ டா.. என்று எப்போதும் போலே தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டு இருந்தாள்…இது தெரியாத கேகேவோ அவளை உறுத்து விழித்துக்கொண்டிருந்தான்…

என்ன பிரச்சனையா இருந்தாலும் சொல்லு…நான் பார்த்துகிறேன் டா…”என்று கூறினான்…

நீ…நீ…நீங்க தான் சார்…”என்று திக்கி திணறி அழுகை குரலுடன் கூறினாள்…

அப்பொழுது தான் கவனித்தான் அவள் கண்கள் கலங்கிருப்பதை..பின்பு தான் புரிந்தது தான் எப்படி நின்று அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று…சட்டென்று அவளிடம் இருந்து விலகி தள்ளி நின்றான்…ஊப்ப்  என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டு ,தன் சிகையை அழுத்தமாக கோதிக்கொண்டான்….தான் ஏன் திடிரென்று எழுந்து அவளுக்கு அருகில் போய் நின்றோம் என்று அவனுக்கு புரியவில்லை…(சோசேட் கேகே )

அப்பொழுது கதவை தட்டி யாரோ உள்ளே வர அனுமதி கேட்டனர்…அவர்களை உள்ளே வருமாறு பணித்தான்…உள்ளே வந்த பியூன்

சார் உங்களை பாக்க ஒரு மூணாங்கிளாஸ் டீச்சர் ஒருத்தவங்க மூணு பசங்கள கூட்டிட்டு வந்துருங்காங்க சார்…”

யாரு இப்ப புதுசா வந்திருங்காளே அந்த மிஸ்ஸா…”

ஆமா…சார்..இன்னைக்கு என்ன பிரச்சனைன்னு தெரில சார்…பிள்ளைங்க மூணும் பாவமா இருக்குங்க சார்…”

இவங்களுக்கு வேற வேலையே இல்லையா…சின்னப்பிள்ளைக எதுக்கெடுத்தாலும் கம்பளைண்ட் பண்ண வந்துறாங்க…”என்று கூறிக்கொன்டே சுருதியை திரும்பி பார்த்தான்…கலங்கிய கண்களில் இப்பொழுது அளவுக்கறிய சுவாரசியம் தெரிந்தது…எனவே அவர்களை உள்ளே அனுப்ப சொல்லி பியூனிடம் கூறினான்…

சுருதி குஷியானதற்கான காரணம்…குழந்தைகளின் சண்டைகள் எப்பொழுதுமே சுவாரசியமானது…நமக்கு உப்பு சப்பு பெயராத காரணங்கள் அவர்களின் உலகில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருக்கும்…நமக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக்கில் விழச் செய்யும் அளவுக்கு இருக்கும் காரணங்கள் அவர்களுக்கு எழுதுகோளின் முனை உடைந்தது போன்ற சாதாரண இடத்தை பெற்றிருக்கும்…

உள்ளே நால்வரும் நுழைந்தனர்..அந்த மூன்றாம் வகுப்பு ஆசிரியை மிகுந்த கோவத்தில் இருந்தார் என்பதை அவர் முகமே சொன்னது…அவருடன் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் வந்திருந்தனர்…மூவரும் தலையை தொங்கப்போட்டு இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற அளவுக்கு பாவமாக இருந்தனர்…

அந்த ஆசிரியை தனது கையிலிருந்த ஒரு துண்டு சீட்டை கேகே விடம் கொடுத்தாள்…அதை பார்த்த கே கே வின் முகத்தில் வடை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் மிளகாயை கடித்துவிட்டால் ஒரு ரியாக்ஷன் தருவோமே அப்டி ஒரு ரியாக்ஷன் உடன் நின்றான்…

இவன் ஏன் பேய் முழி முழிக்கிறான்…”என்று நினைத்துக்கொன்டே எட்டிப்பார்த்த சுருதியினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…சிரிக்க ஆரம்பித்திருந்தாள்…

அவளை ஐவர் கொலைவெறியோடு முறைத்து கொண்டிருந்ததை அவள் பெரிசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை…அந்த பேப்பரில் இதான் எழுதிருந்தது…அதில் காதலின் சின்னமான ஹார்டின் வரைந்து அதனுள் ஆகாஷ்,பாரதி என்று எழுதிருந்தது…

சுருதி “என்ற கே கே வின் அழுத்தமான அழைப்பில் தான் சிரிப்பை நிறுத்தியிருந்தாள்…

லேசான சிரிப்புடனே கேகே வின் அருகில் சென்று அந்த ஆசிரியையை வெளியே அனுப்பச் சொல்லி கேட்டாள்…

இவளை முறைத்துகொன்டே அந்த ஆசிரியையை வெளியே போகச் சொன்னான்..

நல்ல அடிங்க சார்…இந்த வயசுலயே இதுக பண்ற வேலையே பாருங்க…இதெல்லாம் எங்க உருப்பட போகுதோ…”என்று அவனிடம் கூறிவிட்டு வெளியிறிச்சென்றார்…

சிரிப்புடனே அந்த மூவர் படையை நெருங்கி அவர்கள் உயரத்திற்கு ஏற்றவாறு முட்டிங்கால் போட்டு அமர்ந்தாள்…

உங்க ரெண்டுபேருல எவன் டா ஆகாஷ் “அவர்கள் இருவரில் கொஞ்சம் சிவப்பாக உயரமாக இருந்தவன் தான்தான் என்று கையை தூக்கினான்…

ஆகாஷ் அல்லாதவனிடம் திரும்பி”நீ ஏன் டா இவங்க கூட வந்துருக்க…அவங்க ரெண்டுபேரோட பெரு தானே அதுல இருக்கு…”என்று கேட்டாள்…

அவனிற்கு முன்னே அங்கே இருந்த பாரதியான பெண் குழந்தை”மிஸ்..அவன் தான் அப்டி பேப்பர்ல எழுதினான் மிஸ்…எனக்கு ஒன்னும் தெரியாது மிஸ்…”என்று கூறினாள்…

இதை எழுதியவன் கருப்பாக,குட்டையாக அழகாக இருந்தான்…

கள்ளனை நம்புனாலும் நம்பலாம்…குள்ளனே நம்பக்கூடாதுனு சும்மாவா சொல்லிருக்காங்க…ஏன்டா இப்டி எழுதுன…”

அவள் சிரிப்புடன் தங்களுக்கு சமமாக அமர்ந்து கேள்வி கேட்பதால் தங்களை அடிக்கமாட்டாள் என்று அவர்களுக்கு தோன்றிருக்குமோ என்னமோ…மடை திறந்த வெள்ளமாக கதை கூற  ஆரம்பித்திருந்தனர்…அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை வராவிட்டால் அவர்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தை வாங்குவதென்பது நம் பிரதமரின் 15  லட்சம் திட்டம் போல் சாத்தியமற்றது ஆகி விடும்…

இல்லை மிஸ்…ஆகாஷ் தான் ஒரு நாளைக்குஒரு நாளைக்கு என்கிட்டே சொன்னான்…அவன் படத்துலலாம் வர மாதிரி பாரதியே அது…அது…பண்றேன்னு சொன்னான் மிஸ்…”

அது…அதுனா என்ன டா…”

அதான் மிஸ்…அதான்…உங்க காதே காட்டுங்களேன் சொல்றேன்…”என்று அவளிடம் கூறிக்கொன்டே தனது ப்ரின்சிபாலான கேகே வை ஒரு பார்வை பார்த்து கொண்டான்…சுருதி அவன் அருகில் நெருங்கியதும்”லவ் பன்றேன்னு சொன்னான் மிஸ்…”என்று கூறிவிட்டு தனது வாயிலே அடித்துக்கொண்டான்…இவர்களின் உரையாடலை கவனித்த கேகே விற்கு சிரிப்பு தான் வந்துதொலைத்தது…(உனக்கு மட்டுமா வருது…எங்களுக்கும் தான்…)

ஆகாஷ்”அது வந்து மிஸ்…நான் முன்னாடி ஒருநாளைக்கு சொன்னது மிஸ்…இப்ப இல்லை…இவன் தான் இப்ப தேவைல்லாம இதை எழுதி மிஸ்ட்ட அடி வாங்க விட்டுட்டான்…”என்று கூறினான்…

அந்த பாரதி இவர்கள் இருவரையும் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்…

சுருதி”நீங்க மூணு பேரும் உங்க அம்மா அப்பா மேல பாசம் வச்சுருக்கீங்களா…எவ்ளோ பாசம் வைச்சுருக்கீங்க…”மூன்று பேரும் கோரஸாக ரொம்ப என்று தங்கள் இருகைகளையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்துக்காட்டினர்…

நீங்க உங்க அம்மா அப்பா மேல இவ்வளவு பாசம் வச்சுருக்கீங்கள அது பேரு தான் இங்கிலிஷ்ல லவ் ன்னு சொல்ராங்க…தமிழ் ல பாசம்,அன்பு,பிடிச்சுயிருக்கினு சொல்றதுக்கு நிறைய வார்த்தை இருக்கு…ஆனால் பாவம் இந்த இங்கிலிஷ்ல லவ் னு ஒரு வார்த்தை தான் இருக்கு…அதான் படத்துல ஹீரோலம் அப்டி சொல்றாங்க…ஆகாஷுக்கும் பாரதியை அவன் அம்மா அப்பா அளவுக்கு அவ்வளவு பிடிச்சு இருக்கு போல..என்ன ஆகாஷ்…லவ் ஒன்னும் தப்பு வார்தைலாம் இல்லை…புரியுதா…இப்டி பேப்பர்ல எழுதுறது தான் தப்பு…இனிமே இப்டி எழுதக்கூடாது புரியுதா….போங்க கிளாஸ்க்கு ஒடுங்க…”என்று அவர்களை அனுப்பிவிட்டாள்…

மூன்று வாண்டுகளும் சிரித்த படியே அந்த அறையை விட்டு வெளியேறினர்…சுருதியும் சிரித்தபடியே எழுந்திரித்து திரும்பினாள்…கேகே சிரிப்புடன் தன்னை சுவாரசியமாக பார்ப்பது புரிந்தது…

சுருதி “அவங்ககிட்ட இப்டி எடுத்து சொன்ன புரிஞ்சுப்பாங்க…இதுக்கெல்லாம் அவங்களே அடிக்கணும்னா மொத அவங்க பெற்றோரை தான் அடிக்கணும்…நாம குடும்பத்தாரோட உக்காந்து பாக்குற படம்,நாடகம்லாம் இதானே நடக்குது…சின்ன பிள்ளைங்கல வைச்சு ஷோ பண்றோம்ர பேர்ல ஏதாவது ஒரு ஹீரோயினே கூட்டிட்டு வந்து சின்ன பிள்ளைகளை போய் அவங்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வைக்குதுங்க…அதை பார்த்து அந்த பசங்களோட பெற்றோர்கள் சிரிக்குறாங்க…அந்த கருமத்தை நாமளும் டீவில பார்த்து சிரிக்குறோம்…குழந்தைகள் ஒரு கண்ணாடி மாதிரி…நாமளோட பிரதி பிம்பம் தான் அவங்க…”

கே கே “குட்..சரி இப்ப நாம பிரச்சனைக்கு வருவோமா…நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க ஒரு வாரமா…ஏதாவது பேமிலி ப்ரோபலமா…”

ஒண்ணுமில்லை சார் “என்று பலவாறாக சமாளித்து வெளியே வந்த சுருதிக்கு அன்று அவள் ஒளிந்திருந்து கதிர்,கே கே  பேசியதை கேட்டது ரீவைண்ட் பட்டனை அமுக்கியது போல மனதில் ஓடியது…

அன்று:

கதிரை தவிர அனைவரையும் வெளியே அனுப்பிய கே கே பேச ஆரம்பித்தான்…

கதிர் நீ பண்ணியது எதுவும் உன் அறியாமையினாலோ…உன் பெற்றோரோட அன்பு கிடைக்காம தான் இப்டி ஆயிட்டேன்னு சொல்லி நியாயப்படுத்த முடியாது…”

நீ சீரியல் கொலைகாரர்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கியா…சைக்கோஸ்…யாருனே தெரியாதவங்கள,ஒரு பாவமும் அறியாதவங்கள டார்ச்சர் பண்ணி கொல்லுவாங்களா அவங்க பண்றதெல்லாம் நியாயமா???”

இல்லை சார்…”

அதை மாதிரி தான் நீ பண்ணியதும்…ஏன் சொல்லறேனா…சைக்கோஸ் இருக்காங்களா அவங்க இப்டி ஆகுறதுக்கு காரணமே அவங்க இளமை பருவம் தான்…ஏன்னா நீயும் நானும் கனவுல கூட நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு அவங்களோட இளமை பருவம் மிகவும் கொடுமையானதா இருக்கும்…அதுக்காக அவங்க பண்றது சரியானது ஆகாதுல…அவங்கள மாதிரி அதிக கொடுமையே சிறு வயசில அனுபிச்சவங்க நிறைய பேர் நல்ல பதவில நாலு பேருக்கு உதவுற மாதிரி நல்ல நிலமைல இருக்காங்க…உனக்கு என்னை பத்தி எதுவும் தெரியாதுல…சொல்றேன் கேளு…”என்று தனது கடந்த காலத்தின் வலிகளை கூற ஆரம்பித்தான்…  

கே கே விற்கு ஆறு வயதாக இருக்கும் போது அவனது அன்னை தற்கொலை செய்துக்கொண்டார்…அவர் தற்கொலைக்கு முழு முதற் காரணம் கே கே வின் அப்பா தான்…எந்நேரமும் குடித்து விட்டு வந்து அவரை சந்தேகப்பட்டு வார்த்தைகளால் குதறி,அடியால் வதைத்து கொடுமைப்படுத்தினார்…கே கே வின் அம்மாவாலும் எவ்வளவு நாட்கள் தான் இந்த கொடுமையை தாக்குபிடிக்க முடியும்…எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா…எனவே அவரே தன் முடிவை தேடிக்கொண்டார்…

மனைவி இறந்தது பற்றி சிறிதும் கவலையில்லாமல் இன்னும் குடிக்க ஆரம்பித்தவர் தன் வழியே வந்த தன் மகனையே “நீ எவனுக்கு பிறந்தவனோஎன்று அடித்தார்…அவருக்கு குடித்து விட்டு அடிக்க ஒருத்தர் தேவை அது மனைவியோ,மகனோ …

இப்டி சென்று கொண்டிருந்த அவன் வாழ்வில்,அப்பாவின் நண்பன் என்று ஒருவன் அவ்வீட்டில் வந்து தங்கினான்…அது அவர்களின் சொந்த வீடு…அது மட்டுமே சொந்தமாகவும் இருந்தது…தங்கிருந்தவனோ பத்து வயது கேகே வை பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தான்…பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்களோ அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் ஆளாகின்றனர்….

இதை ஒவ்வொரு முறையும் தன் தந்தையிடம் கூறிய போது இந்த வயதிலேயே இப்டி பொய்  கூறுகிறாயா என்று அடித்தவுடன் விடாமல் சூடும் வைத்தார்…தொடர்ந்த இரண்டு வாரங்கள் இந்த கொடுமையிலேயே,அளவுக்கதிகமான பயத்திலேயே தன் வாழ்வை கழித்தான் கேகே…

ஒரு நாள் குடித்துவிட்டு தூங்கிய அவன் தந்தை தூக்கத்திலே உயிரை விட்டிருந்தார்…அவனுக்கிருந்த ஒரு உறவும் அற்றுப்போனது…எந்த உறவுக்கும் இவனை எடுத்து வளர்க்க விரும்பமில்லை…பணவசதியுமில்லை…வளர்க்கின்றோம் என்று முன் வந்தவர்களையும் தான் வளர்ப்பதாக கூறி நிராகத்திருந்தான் தந்தையின் நண்பன்…அவன் ஒரு நாள் ஒருவனிடம் பேசியதை கேகே  எதிர்பாராத விதமாக கேட்க நேர்ந்தது…

வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் சைல்ட் செக்ஸ் என்னும் கொடூரமான வியாபாரத்தில் தன்னை விற்க போவதாக தெரிந்து அங்கிருந்து தப்பித்து வந்தான்…

அவன் ஊரிலிருந்து மதுரையின் ஆண்டாள் புரத்துக்கு வர ஆகும் 50 கிமீ தூரமும் நடந்தே வந்திருந்தான்…தற்பொழுது போல் வாகனங்கள் அதிகம் இல்லாத காரணத்தினால் குறுக்கு வழியாக வந்ததனால் உடை எல்லாம் முட்களால் கிழிந்து தெரு நாய்களிடம் கடி வாங்கி கிழிந்து தன்னுணரவு இல்லாமல் வீதியில் மயங்கி கிடந்தான்…அந்த நேரத்தில் ஏதோ புண்ணியவான் அவன் கழுத்தில் அவன் அம்மா ஞாபகமாக அணிந்திருந்த தங்க சங்கலியையும்,அவன் உடையும் கழட்டி சென்றிருந்தான்…

ஆண்டாள் புரத்தில் ஒரு மரத்தினடியில் சிறு துணியில்லாமல் நிர்வாணமாக அதை கூட உணர முடியா பசி மயக்கத்தில் வீழ்ந்துகிடந்தான்…அவனைச்சுற்றி நாய்க்கூட்டம் கடிக்க குறிபார்த்து இருந்தது…அந்த வழியாய் வந்த ஒருவர் இவனை காப்பாற்றி ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்தது மட்டுமில்லாமல் அவனின் படிப்பு செலவையும் மொத்தமாக ஏற்றுக்கொண்டார்…அவர் தான் அர்ஜுனின் தாத்தா குமரவேல்… என்ன தான் அவன் அந்த கொடூர நாட்களிருந்து காப்பாற்ற பட்டாலும் அவனின் கொடூர நினைவிகளிருந்து இல்லை…அவனின் காலம் முழுவதும் பயங்களாவே சென்றன…பல நாட்கள் உறக்கமில்லாமல் விடிய விடிய முழித்தவரே கழித்தான்…

அதில் தான் அவனின் மனநோய் OCD (obessive compulsation disorder )ஆரம்பம்…சிறு வயதில் பாலியல் துன்பங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு இம்மனநோய் தாக்குகிறது…இந்நோய் தாக்க பட்டவர்கள் அதிகப்படியான சுத்தம்,செய்த செயல்களையே திருப்பி திருப்பி செய்றது,அனைத்தும் ஒரு வரிசைக்கிரமத்தில் சரியாக இருப்பது,தன்னை சுற்றி இருப்பவர்களும் சரியாக இருக்க வைப்பது,எல்லாத்திலும் அதிகப்படியான பயம்,அதிகப்படியான கவனம் என்று இருப்பது ஆகும்…

இந்த நோயினால் அவனின் வாழ்க்கை வேறு விதத்தில் பாதித்தது…அவன் தன் 25  வயதில் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்…அதுவும் அவனுக்கு நிலைக்க வில்லை..இவனால் யாருடனும் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் வாழமுடியாது…எனவே அவனின் மனைவி அவனிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டாள்…

கே கே “என் வாழ்க்கைல இவ்வளவு நடந்தும் நான் எக்காரணம் கொண்டும் வழி மாறலை…இப்ப உனக்கு ஒரு ஆசிரியரா,இந்த பள்ளியின் பிரின்ஸிபாலா இருக்கேன்…அதை மாறி நீயும் உன் வாழ்க்கைல அதற்கான இடத்துக்கு சரியா போனும்..நாம போற பாதைல முள்ளு இருக்குன்றத்துக்காக நாம வேற பாதைல போக கூடாது…அது நம்மள சேக்குற இடம் வேற மாறி இருக்கும்…உனக்கு   புரியும்னு நினைக்குறேன்…”

யாருக்கும் இப்டி ஒரு நிலை வரவே கூடாது…தான் ரசிக்கும் ஆதர்ச நாயகனின் வாழ்வின் இருண்ட பக்கங்களை அவர்களின் வாயிலாக தெரிந்து கொள்வதென்பது இதயம் பிளக்கும் வலியை தரக்கூடியது….தன் முன் கம்பிரமாக இருப்பவன் ஒரு நாள் உண்ண உணவின்றி,உடுத்த உடையின்றி நிர்வாணமாக கிடந்தான் என்பது எவ்வளவு வேதனைக்குரியது…

தற்பொழுது நினைத்து பார்த்த சுருதி வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்…

மேலும் ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்…சுருதி பிரின்சிபால் அறையில் இருந்தாள்…கே கே அவனுக்கு முன்னே இருந்த பேப்பரில் இருந்த நான்கு பெயர்களையும் சுருதியையும் மாறி மாறி  பார்த்து கொண்டிருந்தான்…

கே கே “இது என்ன சுருதி…” என்று வினவினான்…

போட்டில பார்ட்டிசிபேட் பண்ணபோறவங்களோட நேம் லிஸ்ட் சார்”

அது தெரியுது எனக்கு…அதுல ஏன் இவங்க பேர்லாம் வந்துருக்கு சுருதி…”

ப்ளீஸ்…இதுல எந்த விதமான நெபொடிசும்(nepotism )இல்லை சார்…எல்லாத்துக்குமே ஸ்கூல் லெவல்ல போட்டி வச்சு எடுத்தது தான் சார்…”

வெண்ணிலாவே எந்த போட்டியின் அடிப்படையில் எடுத்தனு தெரிஞ்சுக்கலாமா…”என்று கோவமாக கேட்டான்..

ஐ டிரஸ்ட் ஹேர் சார்…இதான் என் முடிவு…”

ஆர் யூ மேட்…நீ இங்க வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் அவ நீச்சல் குளத்துல விழுந்து உயிருக்கு போராட்டிட்டு இருந்தவளை கப்பாத்துனாங்க…அந்த பெண்னே போய் நீச்சல் போட்டிக்கு போட்டு இருக்க…கேட்டா ஐ டிரஸ்ட் ஹேர் னு லூசு  மாறி பதில் சொல்ற…அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரு பதில் சொல்றது…  “

ஆனால்..அவ ஸ்டேட் லெவல் பிளேயர் சார்…ஒரு தடவ மிஸ் பண்ணிட்டானு நீங்க இப்டி பேசுறது சரி இல்ல சார்…டூ டேய்ஸ் டைம் குடுங்க…நான் அவளால முடியும்னு புரூப் பண்ணி காட்டுறேன்…”என்று சவால் விட்டு வெளியேறினாள்….

Advertisement