Advertisement

அத்தியாம் 5  :

 

சுருதி இன்றுடன் அப்பள்ளியில் சேர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாகியிருந்தது….சுவேதாவின் விசேஷம் எந்த பிரச்னையுமின்றி நல்லபடியாக முடிந்திருந்தது…மற்றவர்களுக்கு…ஆனால் சுருதிக்கு அல்ல…அவளின் திருமணப்பேச்சை இந்த சோ கால்டு உறவுகள் பேச ஆரம்பித்திருந்தனர்….

சுருதியை பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்வின் மிக மிக முக்கிய அங்கம்…மற்ற பெண்களை போல் அவளும் திருமணத்தை எதிர்பார்த்திருந்தாள் தான்…ஆனால் இப்பொழுது ஏனோ சிறிது நாட்கள் செல்லட்டுமே என்றே தோன்றியது…

அதையே தான் அவளும் அவள் அப்பாவிடம் கூறினாள்….அதை கேட்ட அவள் அப்பா தான் கொதித்து போய் விட்டார்…வடிவேல் காமெடியில் வர மாதிரி “ரெண்டு ரூபாய் தான் டா கேட்டேன்.அவன் என்ன கோவத்துல இருந்தானு தெரில.பொசுக்குன்னு இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்” என்ற நிலைமை ஆகி விட்டது சுருதிக்கு..இங்கு வந்த வேலை முடிந்ததும் திருமணம் என்று கூறிச்சென்றிருந்தார்…அவர் இவ்வளவு அழுத்தமாக கூறியதில் இருந்தே தெரிந்தது மாப்பிளை ரெடி என்று… சுருதி அவர்களுக்கு ஒரே பெண்ணாய் இருக்கபோய் தான் இவ்வளவு நாள் திருமணம் முடிக்காமல் இருந்தது….

இதெல்லாம் சுருதியின் உள்மனதில் ஓடினாலும் எட்டாம் வகுப்பு அ பிரிவுக்கு டைப்ஸ் ஆப் சென்டென்ஸ் நடத்திகொண்டிருந்தாள்…அவளிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம் என்னவென்றால் அவள் பாடம் நடத்தும்போது கவனிக்க வேண்டும்..இல்லையெனில் கொட்டும் இல்லாமல்,குலவையும் இல்லாமல் ,சாமியாட ஆரம்பித்து விடுவாள்…

சுருதி பாடம் நடத்திக்கொன்டே மாணவர்களை சுற்றி பார்த்தபோது வெண்ணலாவின் கவனம் கிஞ்சித்தும் பாடத்தில் இல்லை… சுருதிக்கு    சுறுசுறுவென்று கோவம் ஏற ஆரம்பித்தது…கோவத்தை அடக்கிக்கொண்டு “வெண்ணிலா வெண்ணிலா “என்று இரண்டு முறை கூப்பிட்டும் வெண்ணிலாவின் கவனம் இங்கு இல்லை…

அவ்வளவு தான்..”வெண்ணிலா “என்று அந்த அறையே  அதிரும்படி ஒரு கத்தல்…அதில் தன் நினைவிலிருந்து வெளிவந்த வெண்ணிலா பேய் முழிமுழித்தாள்…

கெட் அவுட் வெண்ணிலா…உன்னால கவனிக்க முடியாட்டி ஏன் உள்ளே இருக்க…வெளியே போ…”

சாரி மிஸ்..சாரி..”

உன்னை நான் வெளிய போக சொன்னதா ஞாபகம் வெண்ணிலா…”என்று சுருதி அழுத்தமாக கூறியவுடன் கண்கள் கலங்கியவாறு வெண்ணிலா வெளியே சென்றாள்…இந்த ரணகளம் நடந்த அதே நேரத்தில் மைதானத்தில்…

மைதானத்தில் இருந்து சுதாகர் ரெஸ்ட் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்தான்..அவனுக்கு ஏனோ சுட்டு போட்டாலும் இந்த ஆங்கிலமோ..ஆங்கில இலக்கணமோ சற்றும் புரியாது…சுருதி இருக்கப்போய் ஏதோ சமாளித்து வருகிறான்..ஆனால் இன்றைய பாடவேளையில் அவனால் அந்த கிராம்மரை கவனிக்க முடியும் என்று தோன்றவில்லை…அதனால் ரெஸ்ட் ரூம் என்று பொய் சொல்லி தப்பித்து வந்திருந்தான்…

அப்பொழுது அவன் பாதையை மறைத்து ஒரு உருவம் நின்றது…

எவன் அவன்…”என்று நிமிர்ந்து பார்த்த சுதாகர் அதிர்ந்தான்…ஏனெனில் அவன் எதிராய் நின்றது அர்ஜுன்…

இவன் எதுக்கு நம்ம வழியை மறைச்சு நிக்கிறான்…”என்று யோசித்துக்கொன்டே என்ன என்று வினவினான்…

உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”என்று ஆரம்பித்து அர்ஜுன் கூறிய செய்தியை கேட்டு சுதாகரின் கோவம் கரையை கடந்தது…..

ச்சீ யாரை பார்த்து என்ன சொல்ற…அவன் அப்படிப்பட்ட ஆளுல்லாம் இல்லை…எவ்வளவு தைரியம் இருந்தா என் ப்ரெண்டை பத்தி என்கிட்டயே தப்பா சொல்லுவ ராஸ்கல்…அவன் என்ன உங்க அப்பன் மாதிரின்னு நினைச்சியா..கேவலமான வேலையிலாம் பாக்க..”

எங்க அப்பாவை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுன அவ்வளவு தான் நடக்குறதே வேற…உங்களுக்குலாம் நல்லது பண்ணனும்னு நினைச்சேன் பாரு…என்னை சொல்லணும் டா..”

உங்க அப்பன பத்தி திட்டுறது என்ன…ரோட்டுல விட்டு செருப்பால அடிக்கணும் டா…பொறுக்கி ராஸ்கல்..அவன் பிள்ளை தான நீ..நீ மட்டும் எப்டி இருப்ப…அன்னைக்கு உன்னை தெரியாம இடிச்சு கீழ தள்ளி விட்டுட்டானு அவனை பத்தி எவ்ளோ தப்பா சொல்லற..நீ எல்லாம் ஒரு மனுஷன் தானா..”

அவ்வளவு தான் அர்ஜுனின் கோவம் எல்லையைக்கடந்தது வாய் சண்டை கை சண்டையாக மாறி இருவரும் அடித்து புரள ஆரம்பித்தனர்…ஐந்து நிமிடங்களில் விஷயம் காட்டு தீயாக பரவி மூவரும் பிரின்சிபால் ரூம் முன் நின்றிருந்தனர்…மூன்றாவது நபர் யாரென்றால் நம் சுருதி தான்…பாடவேளையில் மாணவர்களை வெளியே விட்டதற்க்காக..அர்ஜுன் எப்போதும் வெளியில் தான் திரிவான்..அதனால் அவன் ஆசிரியர் வரவில்லை…

சுருதி இங்கு வந்த இருபது நாட்களில் அவளுக்கு புரிந்தது இது தான்…அர்ஜுன் என்ன செய்தாலும் பள்ளியே விட்டு நீக்கத்தார்க்கான இரண்டு காரணங்கள் இருந்தன…ஒன்று அர்ஜுன் மிக மிக நன்றாக படிக்கும் மாணவன் வகுப்பை புறக்கணித்தாலும்..இரண்டு அர்ஜுனின் தாத்தா கேகே விற்கு மிகவும் வேண்டப்பட்டவர்…அதனால் சுருதிக்கு சுதாகரை நினைத்துதான் மிகவும் பயமாக இருந்தது…

கேகே “என்ன பிரச்னை…எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டிங்க..உன் பெயர் சுதாகர் தானே…முதல எக்கு தப்பா கேள்வி கேட்டு இங்க வந்து நிப்ப..இப்ப அடுத்த லெவலுக்கு போய் சண்டை போட்டு இங்க வரியா…வெல்..”என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்…சுருதியை அப்படியொரு முறைமுறைத்தான்..

கொஞ்ச நாளா தான் இவன்கிட்ட திட்டு வாங்காம இருக்கோமேன்னு நினைச்சு நிம்மதியா இருந்தேன்…ஆனால் இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து தேரை இழுத்து தெருவில விட்ட கதையா இப்டி பண்ணிட்டாங்க…இப்பயே கண்ணகட்டுதே..”

என்று தனக்குள் புலம்பிக்கொன்டே அவனை பாவமாக பார்த்தாள்…

சுதாகரும்,அர்ஜுனும் நடந்தவை அனைத்தையும் கூறி முடித்தனர்…அதுவரை எதுவோ சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்த சுருதிக்கும் கே கே விற்கும் இப்ப தான் பிரச்சனையின் தீவிரம் புரிந்தது…

கே கே”அர்ஜுன் உனக்கு எப்டி இது தெரியும்…”

நான் லஞ்ச் பிரேக்ல நேத்து பார்த்தேன் சார்..”

வாட்…ஸ்கூலுக்கு உள்ளேயா “என்று சுருதியும் கே கே வும் அதிர்ந்து போய் கேட்டனர்…

இல்ல சார்…ஸ்கூலுக்கு வெளியே தான் சார்..”என்று தயங்கியவாறு கூறினான்…

ஏனென்றால் அவர்கள் பள்ளியில் மதிய இடைவேளையில் வெளியே செல்ல முடியாது…மதுரையின் புறநகர்பகுதியில் ஒரு மலைக்கு கீழே இயற்கை எழிலுடன் அமைந்தது அவர்கள் பள்ளி…அதனால் வெளியே யாரும் செல்லவும் முடியாது…கே கே யின் அனுமதியின்றி யாராலும் உள்ளேயும் வரமுடியாது…

அப்புறம் எப்டி வெளியேனு சொல்ற…”என்று கூர்மையுடன் கேட்டான் கே கே…

சிறிதுநேரம் தலைகுனிந்து நின்ற அர்ஜுன்”லன்ச் பிரேக்ல கூட்டிட்டு போறேன் சார்…”என்று கூறினான்…

மதிய இடைவேளைக்கு பத்து நிமிடம் தான் இருந்தது…அவர்களது உரையாடல் முடித்தவுடன் சுதாகர் வேகமாக,

சார் அவன் அப்டிலாம் பண்றவன் கிடையாது சார்…அர்ஜுன் தான் பொய் சொல்றான் சார்…அவன் எப்பயும் என்கூட தான் சார் இருப்பான்…”

அர்ஜுன்”அப்ப இந்த ஒரு வாரமா அவன் உன்கூட தான் லன்ச் சாப்பிட்டு கிளாஸ்க்குள்ள வர்றானா…”என்று கூர்மையுடன் கேட்டான்…

அப்பொழுது தான் சுதாகருக்கு புத்தியில் ஒன்று உறைத்தது…அவன் தன்னுடன் சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு வராமல் ரெஸ்ட் ரூம் என்று தன்னை விட்டு தனித்து செல்வதும்,தான் வருகிறேன் என்றால் கூட வேண்டாம் என்று அவன் மட்டும் செல்வது…சென்று வந்த பின் பதட்டமாக இருப்பதும்…

சுதாகர் யோசித்து கொண்டிருந்தவேளையில் மதிய இடைவேளைக்கான மணி அடித்திருந்தது…

அர்ஜுன் அவர்கள் மூவரையும் மைதானத்தின் பின்பகுதிக்கு அழைத்து வந்திருந்தான்…மைதானத்தின் பின் பகுதி தான் பள்ளியின்  பின்பக்க மதில் சுவர் இருப்பது…மதில் சுவர் பார்க்க பிரமாண்டமாக மேலே இரும்பு வேலி சுற்றப்பட்டு பாதுகாப்பாகவே இருந்தது…

சுருதி”இதுல எப்டி வெளியே போக முடியும்…இது மேல ஏறி குதிச்சா வெளியே போகிறது…”

அது மைதானத்தின் பின்பகுதி மற்றும் மலையின் இறக்கமான பகுதி என்பதால் அடர்ந்த செடி கொடிகள் மற்றும் சில பாறைகள் இருந்தன…மதில் இருக்கும்  இடத்தை நெருங்க முடியாது….அவளை திரும்பி பார்த்த அர்ஜுன் சைகை மூலம் அவளை அமைதியாக வரச்சொல்லி அந்த கொடிகளை விலக்கிவிட்டு சென்றான்…ஒத்தையடி பாதை நன்றாக இருந்தது…கொடிகளை தாண்டி மதில் சுவரை நெருங்கும் போது தான் தெரிந்தது…மதில் சுவரில் ஒரு ஆள் சென்று வரும் அளவிற்கு ஓட்டை மாதிரி இருந்தது..சிதைந்தும் இருந்தது…

அதை பார்த்த அந்த பள்ளியின் ப்ரின்சிபாலான கே கே வின் நிலைமையே கூறவும் வேண்டுமா என்ன…அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்…

எப்படி இது சாத்தியம்…இந்த பள்ளியை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறோம் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்..இவர்களை போல் எத்தனை மாணவர்களுக்கு இது தெரிந்துஇருக்கிறதோ…எப்படியெல்லாம் வழி மாறி போனார்களோ…மிகவும் கேவலமாக உணர்ந்தான் தன்னை நினைத்தே…என்னை நம்பி இத்தனை மாணவர்களை என் தலைமையில் விட்டு சென்ற பெற்றோர்களுக்கு தெரிந்தால் என்ன பதில் சொல்லுவேன்..எவ்வளவு அசிங்கம்…இவ்வழியே கயவர்கள் எவரும் உள்நுழைந்தால் என்ன செய்வது…”என்று நினைத்த கே கே விற்கு தலையே சுற்றியது…

அங்கு யாரோ வரும் சத்தம் கேட்கவும் நால்வரும் ஒளிந்து கொண்டனர்…

சுருதியால் கே கே வின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது…அவன் வலக்கையை ஆறுதலாக அழுத்தினாள்…சுருதியை பார்த்த அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை…இறுகிப்போயிருந்தான்…

அப்பொழுது கதிர் அந்த ஒற்றையடி பாதை வழியாக வந்து அந்த ஓட்டையின் வழியாக வெளியே சென்றான்…

கதிரின் சிறிதுநேர காத்திருப்புக்கு பின் இரண்டு பைக்களில் இருவர் இருவராக நால்வர் வந்திருந்தனர்…வண்டியில் வந்திருந்த நால்வருக்கும் மிஞ்சி மிஞ்சி போனால் பதினாறிலிருந்து பதினெட்டு வயது தான் இருக்கும்…

அவர்களை நெருங்கிய கதிர் தன்னிடமிருந்த பொருளை அவர்களிடம் குடுத்தான்…அவர்கள் கொடுத்த பொருளை வாங்க மறுத்து கொண்டிருந்தான்…

இல்லை அண்ணா..எனக்கு வேணாம் அண்ணா…ப்ளீஸ் என்னை விட்ருங்க அண்ணா..அதன் நீங்க செயின் கொண்டு வர சொன்னதை கேட்டு கொண்டுவந்துட்டேன்ல அண்ணா…எனக்கு எதுவும் வேணாம்…விட்ருங்க”என்று கெஞ்சி கொண்டிருந்தான்…

ஒருவன் அவன் செல்போனில் ஒரு காணொளியை காட்டி மிரட்டினான்…உடனே வாங்கிக்கொண்டு மறுபடியும் ஓட்டையின் வழியாக உள்ளே வந்தான்…முகமெல்லாம் வேர்த்து மிகுந்த பயத்தில் இருந்தான்..அவர்கள் கொடுத்ததை பிரித்து கீழே கொட்டி மண்ணை அள்ளி போட்டு மூடி கொண்டிருந்தான்…

அதைக்கண்ட அர்ஜுனை தவிர மூவரின் முகத்திலும் அதிர்ச்சி..

சுதாகாரால் இங்கு நடந்ததை நம்பவே முடியவில்லை…அவனின் ஆருயிர் நண்பன் கதிரா இப்படி…சுருதிக்கும் அதிர்ச்சி தான் இருந்தும் அவர்கள் அவனை மிரட்டி இதை செய்ய வைக்கிறார்கள் என்று புரிந்தது…கே கே யின் முகத்தில் கோவம்,ஆற்றாமை,  அனைத்தும் கலந்திருந்தது…

நால்வரும் கதிரை நெருங்கினர்…இவர்களை பார்த்ததும் அவன் முகம் பேயறைந்தது போல் மாறியது..கை கால்எல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து இருந்தது…கண்களிருந்து கண்ணீர் வர ஆரம்பித்திருந்தது…

கதிர்”நீங்க “என்று கூறி முடிக்க கூடவில்லை…கே கே ஓங்கி அறைந்து இருந்தான்…கே கே அறைந்த வேகத்தில் கீழே விழபோன கதிரை சுருதி ஓடி வந்து தாங்கி பிடித்திருந்தாள்…

சுருதி”சார் என்ன பண்றீங்க…சின்ன பையன் சார்..”என்று கூறியவளை ஒரு முறை முறைத்துவிட்டு அவனை பிடித்து இழுத்துக்கொண்டு அவனின் அறையை நோக்கி சென்றான் ..மூவரும் பின்னாடியே ஓடினர்..

இவர்கள் ஐவரும் கதிரின் பெற்றோரும் பிரின்சிபால் அறையில் இருந்தனர்..அறையில் ஒரு சங்கடமான அமைதி நிலவியது…கதிர் அவன் அம்மாவின் அருகில் நின்று அழுது கொண்டிருந்தான்..அவனை விசாரித்ததில் தெரிய வந்தது இது தான்…

கதிர்”எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு போயிருவாங்க… அப்ப நா எப்பயும் எங்க அப்பா கூட   தான் எங்க அப்பத்தா வீட்டுல இருப்பேன்…அப்டி போன தடவை போனப்ப தான் எங்க அப்பத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்க சரவணா அண்ணா கூட பேச ஆரம்பிச்சேன்…”

 

இரண்டு வாரத்திற்கு முன்….

மாலை வேளையில் மரத்தின் கீழ் அமர்ந்து காலை கட்டிக்கொண்டு கதிர் அழுதுகொண்டிருந்தான்…பார்க்க அநாதரவாக பாவமாக இருந்தது…பாவம் அவனின் நிலை அப்படி…அப்பொழுது அங்கே வந்த சரவணன் கதிரின் மேல் இரங்கம் கொண்டு அவனை நெருங்கினான்…

ஏன் இப்டி அழுதிட்டு இருக்க…என்ன ஆச்சு..என்னை உன் கூட பிறந்த அண்ணனா நினைச்சுட்டு எல்லாத்தையும் சொல்லு….”என்று அவனின் தலையை தடவி கொடுத்தவாறு சரவணன் கேட்டான்…பாசத்திற்கும் ஆறுதலுக்கும் ஏங்கி கொண்டிருந்த கதிர் அனைத்தையும் கூறினான்…நன்றாக கேட்ட சரவணன்

இதுக்கெல்லாம் அழுக கூடாது டா…ஆம்பள தைரியமா இருக்க வேணாமா…உன்னை மாதிரி தான் நானும்…எங்க அம்மா அப்பாவும் எப்ப பார்த்தாலும் இப்டி தான் சண்டை போட்டுட்டே இருப்பாங்க…அவர்களேல்லாம் மதிக்கவே கூடாது டா…அவங்களுக்கு நாம மேல அக்கறையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது…அவங்களுக்கு அவங்க வாழ்கை தான் முக்கியம்..அவங்க பிரச்னை தா முக்கியம் நாம இல்ல..புரியுதா..அவங்ககிட்ட இருந்து விலகிரணும் டா..நான்லாம் என்னை பெத்தவங்ககிட்ட இருந்து விலகிட்டேன்… “என்று பிச்சு மனதில் விஷத்தை ஏற்றினான்…

தன்னை போல் அன்புக்கு ஏங்கும் ஒரு ஜீவன் என்று கதிரும் அவனுடன் பழக ஆரம்பித்தான்…இரண்டு நாட்களுக்கு பின் சரவணன் கதிரை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்..அது ஒதுக்குபுறமான சீமை கருவேல மரங்கள் நிறைந்த இடமாக இருந்தது…அவர்களை போல் அங்கு நிறைய பசங்க இருந்தார்கள்…அங்கு கதிரை வற்புறுத்தி ஒரு சிகரெட் கொடுத்தனர்…

கதிர் “அண்ணா..என்னது இது…இதுலாம் தப்பு அண்ணா..சிகரெட்லாம் குடிக்க கூடாது அண்ணா…”என்று பயத்துடன் கூறினான்…

சரவணன்”அது எல்லாம் தப்பு இல்ல டா..குடி..ப்ளீஸ் இந்த அண்ணனுக்காக…”என்று கெஞ்சி கொஞ்சி அவனை அதை புகைக்க வைத்தனர்…புகைத்த பின் தான் தெரிந்தது அது சாதாரணமான சிகரெட் கிடையாது என்று…ஏனென்றால் அதை புகைத்த உடன் தலையெல்லாம் சுற்றி..உடம்பெல்லாம் நடுங்கி ஜில்லென்று ஆகி…ஏதோ சொர்க்கத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வர ஆரம்பித்தது…மொத்த மூளையும் வேலை நிறுத்தம் செய்த மாதிரி கண்கள் சொக்கியது…அந்த நடுக்கத்துடனே சரவணனிடம் கேட்ட பொழுது தான் கூறினான்…

இது வெறும் சிகரெட் இல்லை..கஞ்சா என்று..இதை பிடிச்சா உனக்கு எந்த கஷ்டமும் தெரியாது  என்றும் கூறினார்…

கதிர்கும் பிடித்த மாதிரி தான் இருந்தது…உடனே அவன் நினைவில் அவனின் பெற்றோர்..அவன் ஆருயிர் தோழன் சுதாகர்…வந்தனர்….அதற்கு பின் தான் அவனின் தவறு அவனுக்கு புரிந்தது..

இல்லை அண்ணா..எனக்கு வேணாம்…இதல்லாம் தப்பு..”அதற்கு பின் தான் அவர்களின் உண்மை சுயரூபம் தெரிய ஆரம்பித்தது…அவன் அந்த கஞ்சா எடுத்ததை அவர்கள் செல்பேசியில் படம் எடுத்து வைத்து இருந்தனர்…அவன் இவர்கள் சொல்படி கேக்கவில்லை என்றால் இந்த காணொளியை அவனின் பெற்றோர் மற்றும் பள்ளியில் காட்டுவோம் என்று மிரட்டினார்…கதிர்ற்கும் வேற வழி இல்லாததால் அவர்கள் கூறுவதை செய்வதாக ஒத்து  கொண்டான்…முதல் அவன் வீட்டிலிருந்து பணம் எடுத்து வர சொன்னார்கள்…நான்கு முறை பணம் கொடுத்து இருக்கிறான்…பிறகு அவன் அன்றொரு நாள் அணிந்திருந்த செயினை கேட்டு இருக்கின்றனர்…அவனின் மறுப்பு அவர்களிடம் எடுபடவில்லை…..அதையும் இன்று கொடுத்து இருந்தான்….

 

என்று அனைத்தையும் இவர்களிடம் கூறி முடித்து தான் உட்க்கார்ந்து அழுது கொண்டிருந்தான்…இதை கேட்ட அவனின் பெற்றோர் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது…தங்களின் சண்டையால் தங்கள் ஒரே செல்வமான செல்ல மகன் வழி தவறி சென்றிருக்கிறான் என்று…கதிரின் அப்பா மிகவும் உடைந்து போய் காணப்பட்டார்…குரலை சரி படுத்திகொண்டு கதிரின் அப்பா பேச ஆரம்பித்தார்…

பிரின்சிபால் சார்..எங்களை மன்னிச்சுருங்க..எங்க பையனால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்…அவன் பள்ளி நீக்க சான்றிதழ் குடுங்க சார்..இந்த ஊருல இருந்தே நாங்க போக போறோம் சார்..வேற ஊருக்கு போய் என் பிள்ளையை நல்ல படியா நாங்க பாத்துகிறோம் சார்…இங்க வேண்டாம்…”இந்த திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை ….கே கே உட்பட..

கே கே”அது எல்லாம் வேண்டாம் சார்…கதிர் இங்கேயே படிக்கட்டும்..அவனே இந்த பிரச்சனைல இருந்து வெளியே கொண்டு வர்ரது என் பொறுப்பு…அவன் மனசு புரிஞ்சுருச்சுல சார்..இனிமே சண்டை போடாதீங்க…நீங்க போங்க …”என்று அனைவரையும் வெளியே அனுப்பினான் கதிரை தவிர….

வெளியே வந்த கதிரின் பெற்றோர் அர்ஜுன் மற்றும் சுதாகரிடம் நன்றி உரைத்து விட்டு சென்றனர்…சுதாகர் அர்ஜுனிடம் மன்னிப்பு கேட்டான்…அர்ஜுனும் மன்னித்து அவனை தன் நண்பனாக ஏற்று கொண்டான்…

இதையெல்லாம் சுருதி அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்..அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு அவள் மட்டும் அங்கேயே நின்றாள்..அவளுக்கு போக மனசில்லை…அப்பொழுது அனைவர்க்கும் முன்னே கதிரை அடித்த கேகே இப்பொழுது யாரும் இல்லாமல் என்ன செய்கிறானோ என்று பயத்தில் ரூமின் பின் பக்கம் இருக்கும் சன்னலை பிடித்து எட்டி அங்கு நடப்பதை பார்த்தாள்…

கே கே கதிரிடம் கூறிய அனைத்தையும் கேட்ட சுருதியின் கண்களிருந்து நிக்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..ஜன்னலை பிடித்துஇருந்த பிடி தழுவி கீழே விழுந்த சுருதி தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்…சத்தம் வராமல் இருப்பதற்க்காக வாயே மூடி கொண்டு அழுதாள்…அவள் அழுவது பொறுக்காமல் வருண பகவானும் அழ ஆரம்பித்தார்….

 

Advertisement