Advertisement

ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ

      “இனி ஒரு தடவை என் அப்பாவை பத்தி தப்பா பேசுன இந்த கல்லால உன் மண்டையை உடைச்சுருவேன் டா…”என்று கத்திக்கொண்டிருந்தேன் 15 வயதான நான்…

        “அப்டி தான் டா சொல்லுவேன் ராஸ்கல்…உன் அப்பன் ஒரு பொம்பள பொறுக்கி டா…அவன் மகன் நீயும் ஒரு பொம்பள பொறுக்கி தான் டா…நீயும் அப்டி தான் பண்ணி உன் அப்பன் இப்ப ஜெயில்ல கிடக்குற மாதிரி கிடைப்ப டா….”என்று அந்த மாணவன் பேசிக்கொண்டிருக்கும் போதே கல்லால் அவன் மண்டையை உடைத்திருந்தேன்…

     நானே நினைக்கவில்லை இப்டி நடக்குமென்று…அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை…பயப்படவும் இல்லை அவனிற்கு அது தேவை தான்…அதற்குள் அங்கே வந்த ஆசிரியர் என்னையும் அவனையும் ப்ரின்சிபாலிடம்

அழைத்து சென்றார்…

     அங்கு தான் முதன்முதலில் அவரை பார்த்தேன்…என்னையே ரொம்ப கூர்மையா பார்த்தாங்க…அவர் கண்களில் மட்டுமே எனக்கான பரிதாபம் தெரிந்தது…அது என் கற்பனையா கூட இருக்கலாம்…என் குடும்பத்தை பற்றி தெரிந்தால் எல்லாரையும் போல் கேவலமாகவும் பார்க்கலாம்…

ப்ரின்சிபாலிடம் எப்போதும் வாங்கும் திட்டை வாங்கிக்கொண்டு என் கிளாஸிற்கு சென்றேன்…

        அங்கும் அவங்க வந்தாங்க…அவங்க பெயர் சுருதியாம்…எங்களுக்கு புதிதாக வந்திருக்கும் கெஸ்ட் ஆங்கில ஆசிரியையாம்…அத்தனை பேருக்கு நடுவிலும் என்னை கண்டுகொண்டு நான் தனியாக உட்கார்ந்து இருப்பதால் ஒரு பெண்ணின் அருகில் அமர சொன்னார்கள்…

        பெண்கள் என்றாலே என் அப்பா என்னிடம் கடைசியாக சந்திக்கும் போது சொல்லியது  தான் ஞாபகம் வரும்…

         “பொம்பளைங்க எல்லாருமே சுயநலம் புடிச்சவங்க டா…அவங்க  நினைச்சது நடக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க…அவங்க கற்பை கூட கேள்வி குறி ஆக்குவாங்க…சில நேரம் அந்த கற்பு கூட நம்மால போன மாறி நாடகமாடி நம்மளை ஒண்ணுமில்லாம ஆக்கிருவாங்க…இப்ப அப்பா மேல பொய் கேஸ் போட்டு இருக்காங்களா அது மாறி டா…”

          அதிலிருந்து அவர்கள் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை…ஆனால் ஏதோ இந்த சுருதி சொன்னதை கேக்கணும் போல் இருந்தது…நான் திரும்பி என்னை போய் அமர சொன்ன இடத்தின் அருகே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தேன்…அவள் மிக பதட்டத்துடன் பயத்துடனும் என்னை பார்த்தாள்…நான் அவளை என்ன பண்ணிர போறேன்…எதற்காக அவள் பயந்தாள்…ஓவர் சீன்…அந்த கோவத்தையெல்லாம் சுருதி ஆசிரியை மேல் காட்டிவிட்டு வகுப்பறையை விட்டு  வெளியேறினேன்…

    பெண்கள் அனைவரும் சுயநலவாதிகள் தான்…ஆமாம் இல்லாவிடில் தன்னை பெற்ற தாயே தன்னை அவரின்  தாய் வழி தந்தையான என் தாத்தாவிடம் என்னை விட்டு சென்றிருப்பாரா…என் தந்தை செய்த தவறுக்கு…கண்டிப்பா என் அப்பா அதை செய்திருக்க மாட்டார்…கட்டிய கணவனிடம் அந்த நம்பிக்கை கூட இல்லாத என்ன மனைவி…

      இரண்டு வருடத்திற்கு முன் வரை என்னை மதித்த அனைவரும் இன்று என்னை பார்த்து முகத்தை சுளிக்கின்றனர்…

        நம்மை மதித்தவர் நமக்கு கீழே இருந்தவர்கள் எல்லாம் இன்று நம்மை பார்த்து தரக்குறைவாக பேசுவதை கேப்பதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம் தெரியுமா…

   இது வரை என் அப்பா என்ன தவறு செய்தாக இந்த கேடுகெட்ட உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது என்று நான் சொல்லவே இல்லைல…

     என் அப்பா மலையாள திரைஉலகத்தின் மிகப்பெரிய இயக்குநர் இதுவரை இரண்டு திரைப்படத்துக்கு தேசிய விருது வாங்கிருக்கிறார்…

      அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா என்ற 12  வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அச்சிறுமியின் அம்மா காவல்துறையில் புகார் அளித்திருந்தார்…அதன் பெயரில் என் அப்பா மோகனை இந்த காவல்துறையினர் கைது செய்திருந்தனர்…பலகட்ட வாய்தாக்களுக்கு பிறகு இன்னும் இரண்டு வாரத்தில் அதற்கான இறுதி தீர்ப்பு…

       இந்த உலகமே என் அப்பாவை பத்தி தவறாக சொன்னாலும் நான் நம்பலாமா…நம்ப மாட்டேன்..எங்க அப்பா மேல எந்த தப்பும் இல்லைனு நான் நம்புறேன்…13 வருசமா என்னை எந்த கஷ்டமும் இல்லாம வளர்த்த என் அப்பா எப்படி திடிர்னு கெட்டவங்க ஆக முடியும்…

 அதே தான் எங்க அப்பாவும் சொன்னார்…இந்த வழக்கு அந்த பெண்ணின் அம்மா என் அப்பாவின் மீது போட்ட பொய்யான வழக்கு…அவர் என் அப்பாவின் அடுத்த படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கேட்டார்..அதை என் அப்பா தரமறுத்து விட்டார் …அதற்காக தான் இந்த பொய் வழக்கு…

    என் அப்பாவை பத்தி எல்லாரும்  கேவலமா விமர்சிக்கிற ஒவ்வொரு தடவையும் என்னை ஒட்டு துணி இல்லாம 1000  பேருக்கு நடுவுல நிக்க வைக்குற மாறி அவமானமா இருக்கும்…ஒரு கூடை புழுவை என் மேல கொட்டுற மாறி இருக்கும்…அவங்க சொல்லற ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ அசிங்கத்தை என் மேல வீசுற மாறி இருக்கும்…என்னை இந்த சமுதாயம் ஒதுக்கணும்னு நினைக்குறதுக்குள்ள நானே இந்த சமுதாயத்த விட்டு ஒதுக்கிட்டேன்…எனக்கு இங்கே யாரும் தேவை இல்லை…எதுவும் தேவை இல்லை…

      இப்டி ஒரு மனநிலைல நான் இருந்தப்ப தான் சுருதி டீச்சர் என்கிட்டே வந்து பேசுனாங்க…அவங்கள பல சமயம் எல்லார்டையும் பேசுற மாறி  பேசி அவமான படுத்திருக்கேன்…அதே மனசுல என்னைக்கும் வைச்சுக்காம என்கிட்ட திரும்பி திரும்பி பேசுனாங்க…ஒரு கட்டத்துல நானும் அவங்க மேல மரியாதை வைச்சேன்…ஆனால் அதே அவங்ககிட்ட காட்டிக்க விரும்பல…

       ஒரு நாள் அவங்க என்கிட்டே வந்து இந்த பள்ளியில் நடக்கும் போட்டிக்கு என்னை கலந்துக்க சொன்னாங்க…அப்ப நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க கேட்டது எங்க அப்பாவோட இறுதி தீர்ப்புக்கு முதல் நாள்…அப்ப என் மனசுல ஓடிட்டு இருந்தெல்லாம் எங்க அப்பா நிரபராதினு விடுவிக்க படனும் அதான்…வேற எதுவும் இல்லை…

         மறுநாள் விடியல் யாருக்கு நல்ல விடியல்லா இருந்ததோ எனக்கு தெரியாது…ஆனால் எனக்கு மிக நல்ல விடியல் தான்…என் வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல வைத்த நாள்…

          அன்று காலையிலே என்னை அழைத்த சுருதி டீச்சர் என்னை ஒரு இடத்திற்கு அவருடன் துணைக்கு அழைத்தார்…நான் அவருடன் போக விரும்பவில்லை…இருந்தாலும் அவருக்காக சென்றேன்…

         சிறிது நேர பயணத்துக்கு பின் நாங்கள் சென்ற இடம் ஒரு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையம்…

          “என்னை இங்கே எதுக்கு மிஸ் கூப்டு வந்திங்க…”

           “வா சொல்றேன்…”

என்று அவர் என்னை உள்ளே அழைத்து சென்றார்…அங்கு  ஒரு 50 பெண்கள் மேடைக்கு கீழே அமர்ந்திருந்தனர்…குழந்தைகள் குமரிகள் வயதான பெண்கள்  என அங்கு அனைவரும் கலந்திருந்தனர்…நாங்கள் அங்கு சென்றவுடன் ஒரு 50 வயது நிறைந்த பெண்மணி வந்து சுருதியை அழைத்து சென்றார்…

            “நீ இங்கே உக்காரு…நா இப்ப வந்துறேன்…இவங்ககிட்ட என்னனு கேட்டுட்டு… தயவு செஞ்சு எந்திருச்சு போயிராதே ப்ளீஸ்…”என்று என்னிடம் விடைபெற்று அந்த பெண்மணியுடன் மேடைக்கு சென்று பேச ஆரம்பித்தார்…

           “அனைவர்க்கும் வணக்கம்…உங்க எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும்…அதுனால இப்ப உங்ககூட பேச வரப்போறவங்க பத்தி உங்ககிட்ட சொல்ல போறேன்…பெண்களுக்கான நமக்கு நடக்குற பாலியல் கொடுமைகள் பத்தி நம்ம பெற்றோர்கள் கிட்டையே சொல்ல நம்ம பயப்படுறோம் எங்கே அவங்க நம்மள பத்தி தப்பா நினைச்சுருவாங்களோ அப்டினு…ஆனால் இவங்க தன்னோட 13  வயசுல நடந்த பாலியல் கொடுமைக்காக எதிர்த்து போராடுனாங்க…அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்ச சினிமா துறைல இருக்க இவங்க அங்கே தன் நடித்த படத்தில் இயக்குநர் மேலயே காவல்துறையில் புகார் குடுத்துருக்காங்க…அதுக்காக இரண்டு வருசமா தன் மேலயும் தன் அம்மா மேலயும் வைக்க படும் கேவலமான விமர்சனங்களும் தாங்கிட்டு  போராடிட்டு இருக்காங்க…இவ்வளவு சின்ன வயசுல போராடுற தைரியம் எத்தனை பேருக்கு வரும் சொல்லுங்க…இப்பயே நா யாரை பத்தி பேசுறேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்….அவங்க தான் மலையாள திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமான ஷீலா…வாங்க ஷீலா…”என்று சுருதியின் சொற்பொழிவிற்கு பின் வந்தது என் அப்பா மேல் பொய் வழக்கு போட்டாள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த அதே ஷீலா தான்…

       ஏனோ என்னால் அந்த இடத்தை விட்டு செல்ல முடியவில்லை…அப்டி அவள் என்ன தான் சொல்கிறாள் என்று பார்ப்போமே என்று இருந்தேன்…

       “எல்லாருக்கும் வணக்கம்…நான் ஷீலா…இன்னைக்கு காலைல நியூஸ் பார்த்து இருந்தா கூட என்னை பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்…இன்று தான் நான் தொடுத்த வழக்குக்கான இறுதி தீர்ப்பு…இந்த சமுதாயத்திற்கு நம்மை போன்ற பெண்களின் மீது சிறிது மரியாதை இருந்தால் கூட சரியான தீர்ப்பு கிடைக்கும்…நீங்க எல்லாரும் என்னை மாறி ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பிங்க இல்லையா…எல்லா பொண்ணுங்களும் ஏதோ ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்க பட்டுஇருப்பாள்…அதை எத்தனை பேர் வெளிய சொல்லி இருக்காங்க…கொஞ்சமே கொஞ்ச ஆட்கள் தான்…அதுல நானும் ஒருத்தின்றதுல பெருமை படுறேன் கண்டிப்பா…”

      “எனக்கு 12  வயசு இருக்கும் போது ஒரு இயக்குநர் அவர் பெயரை சொல்ல நா விருப்பப்படலை…அவர் படத்துல ஒரு குழந்தை நட்சத்திரமா நான் நடித்தேன்…அது வெளியூர்ல நடந்த படப்பிடிப்பு…அப்ப என் கூட வந்த என் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரில்ல…அவங்கள மருத்துவமனைல அனுமதித்து இருந்தோம்…எங்க அம்மா ஒரு 10 நாட்களுக்கு மருத்துவமனையில இருக்கணும்னு சொல்லிட்டாங்க…அதுனால நா பகல் முழுக்க மருத்துவமனையில தான் இருந்தேன்…இரவுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்துவதற்காக எல்லாரும் தங்கி இருந்த ஒரு விடுதிக்கு வந்துருவேன்…அப்டி இருக்கும் போது இரண்டு நாள் கடந்த நிலைல அந்த படத்தின் இயக்குநர் வந்து என்னை அவரோட தங்கிக்க சொன்னார்…தனியா இருந்த நீ பயப்புடுவா…அதுனால வா என்று அழைத்து சென்றார்…உண்மையாகவே ரெண்டு நாட்களாக எனக்கு ஒரு துளி தூக்கம் இல்லை..ரொம்ப பயந்தேன்…அதுனால் அவர் கூப்பிட்டவுடன் நானும் சென்று விட்டேன்…அவரை என் அப்பாவாக நினைத்தேன்…எனக்கு அப்பா இல்லை…நான் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்…அவர் இருந்திருந்தால் என்னை நடிக்க விட்டிருக்க மாட்டாரோ என்னவோ…”

      “அவருடைய அறையில் நல்ல உறக்கத்தில் இருந்த போது ஏதோ என் மேல் ஊர்வது மாதிரி இருந்தது…பயந்து எந்திரித்த போது அவர் என் அருகில் அமர்ந்து என்னையே பார்த்தவாறு இருந்தார்…நான் மிகவும் பயந்து விட்டேன்…என் மேல  ஏதோ ஊர்வதாகவும் அதை தட்டி விட வந்ததாகவும் கூறினார்…நானும் நம்பி திரும்பி தூங்கிவிட்டேன்…மறுநாள் இரவின் போது தூங்குவதற்கு முன் பால் குடித்து விட்டு தூங்க சொன்னார்…அதை போல் குடித்து விட்டு தூங்கினேன்…நல்ல தூக்கம் இடையில் முழிக்கவே இல்லை…இதே மாதிரி இரண்டு நாட்கள் சென்ற வேளையில்  எனக்கு ஏதோ ஒவ்வாத நிலை ஏற்பட்டது…எனக்கு சொல்ல தெரிய வில்லை…மறுநாள் நான் வருவது தெரியாமல் நான் குடிக்கும் பாலில் ஏதோ கலந்து கொண்டு இருந்தார்…அதை நான் பார்த்து என்னவென்று கேட்டேன் ஒண்ணுமில்லை என்று கூறிவிட்டார்…ஆனால் அன்று அந்த பாலை நா குடிக்காமல் அவருக்கு தெரியாமல் கீழே உத்திட்டேன்…அன்று நடுஇரவில் யாரோ என்னை தொடுவது போல் இருந்ததும் அடித்து பிடித்து எந்திருந்து பார்த்தால் என் அருகில் அமர்ந்துஇருந்தான்…எனக்கு இத்தனை நாளாக என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது…அழுதேன் கத்தினேன்…இதை வெளியே சொன்னால் என் அம்மாவை கொன்றுவிடுவேன் என்று பலவாறாக மிரட்டினான்…அதற்கு பிறகு என்னை தொந்தரவு செய்ய வில்லை…ஆனால் என்னுடைய நிம்மதி அடியோடு போய்விட்டது…யாருடன் பேச பிடிக்கவில்லை…நிம்மதியாக தூங்ககூட முடியவில்லை…அனைத்திற்கும் பயப்பட ஆரம்பித்தேன்…படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன்…ஆண்களை பார்த்தாலே வெறுக்க ஆரம்பித்தேன்… எனக்கே என்னை பிடிக்காமல் போய்விட்டது… என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்த என் அம்மா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்…அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் மனநல மருத்துவரிடம் அனுப்பினார்…அவரிடம் அனைத்தையும் கூறினேன்…பலகட்ட கவுன்சில்க்கு பின் அதில் இருந்து வெளிறினேன்…பிறகு தான் காவல் துறையில் புகார் குடுத்தேன்…”

       “அதற்கு பிறகு நானும் என் அம்மாவும் அனுபவித்த வேதனை பல…பாதிக்கப்பட்டவரே குற்றவாளியாக கருதும் கேடுகெட்ட சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்…இத்தனை நாட்கள் சொல்லாமல் ஒரு வருடத்திற்கு பின் ஏன் சொல்கிறீர்கள்…அதற்கு ஆதாரம் உண்டா…இப்ப மட்டும் ஏன் சொல்றிங்க…அப்டி இப்டி என்று நிறைய விமர்சனங்கள்…ஒரு பெண் தனக்கு நடந்த பாலியல் துன்புறத்தலை வெளியே சொல்கிறாள் என்றால் அவள் மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்….குடும்ப பின்னணியில்…  சமுதாய   பின்னணியில் இதனை விஷயங்களை   தாண்டிருக்க  வேண்டும்…அதை யோசிப்பதே  இல்லை…கேள்வி கேட்கும் ஆண்கள்…”

   “இந்த பொண்ணு என்னடா வெட்கமே இல்லாம எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்குனு நீங்க நினைக்கலாம்…தப்பு பண்றவங்குளுக்கே வெக்கம் இல்லாத போது எனக்கு ஏன் இருக்கனும்…”என்று பேசிய அவள் இடைஇடையே வழிந்த கண்ணீரே தொடைத்து கொண்டாள்…

  இது அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த என் நிலைமை கதறி அழ வேண்டும் போல் தோணியது…ஆனால் அழவில்லை…

    இத்தனை வருடங்களாக எனக்கு அனைத்தும் என்று நினைத்த  அ அ அ அவரை அப்பா என்று நினைக்க கூட அவ்வளவு வலிக்குறது…வாந்தி வரும் போல இருந்தது…உண்மை உண்மையிலே இவ்வளவு கசக்க கூடாது…எனக்கு நல்ல அப்பாவாக இருந்த அந்த மனிதர் அதே நேரத்தில் என் வயதுள்ள ஒரு பெண்ணுக்கு ஒரு காம கொடூரனாக இருந்திருக்கிறார்…முடியவில்லை…இப்டியே சாகனும் போல் தோனுகிறதே…இத்தனை நாள் இந்த சமுதாயம் சொன்ன அனைத்துமே சரி தான் என்ன…நான் தான் தவறு…

       எத்தனை பேரை அவரை தவறாக பேசினார்கள் என்று அடித்திருப்பேன்…அவர்கள் எல்லாம் என்னை கல்லால் அடித்தே கொன்றிருக்க வேண்டும்…அவரின் வழி வந்த யாரும் வாழவே தகுதி அற்றவர்கள்…என்று நான் என் சோகத்தில் உழண்டு கொண்டிருக்கும்போதே சுருதி டீச்சர் வந்து என்னை அந்த இடத்திலிருந்து என் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்…நான் செல்லும் போது அழைத்து கூறினார்…

“எல்லாத்துக்கும் இன்னொரு கோணம்னு ஒன்னு இருக்கு…அதன் வழியாக பார்த்தால் உனக்கு எது சரி தவறு என்று தெரியும்…யோசித்து பாரு…அடுத்தவர் செய்த தவறுக்காக நீ சிலுவை சுமக்க வேண்டும் என்று நினைக்காதே…உனக்கு புரியும்னு நினைக்குறேன்…இனிமே என்ன தீர்ப்பு வந்திருந்தாலும் உன்னால் ஏற்று கொள்ள முடியும்னு நினைக்குறேன் …”

  அவர் கூறி சென்ற வார்த்தைகள் எவ்வளவு சரியான வார்த்தைகள்…

    என்னை சரியாக யோசிக்க வைத்தார்…என்னோட பிரச்னை என்னவென்றே நான் கூறாமலே என்னை  புரிந்து வைத்து எனக்கு சரியான பாதையை காட்டினார்…

    என் அப்பாவிற்கு இல்லை இல்லை அந்த மனிதர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு 7  ஆண்டுகள் சிறை தண்டனை…50000 அபராதம் விதித்தனர்…

    இந்த தண்டனை அறிந்தபொழுது எனக்கு எந்த விதமான உணர்வுகளும் தோன்ற வில்லை…

     என்னால் என் அப்பாவை வெறுக்க முடியவே முடியாது 13  வருடங்களாக என் தோழனாக,ஆசானாக,நண்பனாக,தாயுமானவனாக இருந்த என் தந்தை என்ற அந்த பிம்பத்தின் மேல் இந்த பிம்பத்தினை பொறுத்த முடியவில்லை…அர்ஜுன் என்னும் என்னுடைய திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் என் 13  வயதுடன் நின்று விட்டது…இது என் தந்தை இல்லை..சிறு பிள்ளையை முகர்ந்த காமுகன்…இதயம் வெடிக்கும் அளவிற்கு வலிக்கிறதே….

      இந்த வலியிலிருந்து என்னை விடுவித்ததும் என் சுருதி டீச்சரே…எனக்கு என்று இரண்டு உயிர் தோழர்களையும்…ஒரு குட்டி தங்கையும் எனக்கு கொடுத்தவர்…என் வாழ்க்கையை அழகாக்கியவர்…என் கதையின் தொடர் அத்தியாயங்களை மகிழ்ச்சி சமுதாயம் என்னும் அழகான மையினால் எழுத உதவியவர்…

       இன்னும் ஒரு நாளில் எங்கள் பள்ளியை விட்டு செல்ல போகிறார்…சிலர் நாம் வாழ்வில் சில மாதங்களே வருகின்றனர்…ஆனால் அவர்கள் நம்மிடம் விட்டு செல்லும் மாற்றங்கள் அதிகம்…

ஸ்பரிசம் இல்லா தீண்டல் நீ…”சுருதி டீச்சர் என் வாழ்வில்…

 என்றதுடன் அந்த சிறுகதை முடிவடைந்திருந்தது…வெற்றி பெற்ற சிறுகதையாக அறிவிக்கப்பட்டவுடன் அனைவரிடமும் அந்த கதை வழங்க பட்டிருந்தது…

   அதை வாசித்த சுருதி தன் முன்னால் தன் கருத்துக்காக காத்திருக்கும் அர்ஜுனை கண்களில் வழிந்த நீருடன் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்…

    “தேங்க்ஸ் டா…”என்று கூறிக்கொண்டே இன்னும் அழுதாள்…

      அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கே கே விற்கு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது…தோன்றியதை செயலும் ஆகிருந்தான்…

       தன் பக்கவாட்டில் இருந்த சுருதியை தோளோடு அணைத்து “அழுகாதே “என்று கூறினான்…

       அவளும் அவனின் தோள் மீது வாகாக சாய்ந்துகொண்டு அழுதாள்…

      அந்த அணைப்பில் காதல், காமம்,நட்பு என்று எதுவும் இல்லை…அது ஒரு விளக்க முடியா பந்தம்…அப்டி என்று தான்  கேகே விற்கும் தோன்றியது….

     சுருதி அவனுக்கு மிகவும் முக்கியமானவள்…மற்றவர்களை விட ஒரு படி மேலவும் தான்…ஆனால் அவள் மீது காதல் காமம் நட்பு என்று எதுவும் இல்லை…

    தனக்கு ஒரு அக்கா இருந்து அதற்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவன் என்ன கண்ணோட்டத்தில் பாத்திருப்பானோ அதை கண்ணோட்டம் தான் இவள் மேலும்…அது நமக்கெல்லாம் புரியாது…ஒரு தாய்மாமனாக தன் அக்காவின் குழந்தையை வளர்த்த ஒவ்வொரு மாமனுக்கும் புரியும்…தன் உதிரத்தில் இருந்து பிறக்கும் பிள்ளையில் வைக்கும் பாசத்தை விட தன் அக்கா பெண்ணின் மேல் வைக்கும் அன்பு அதிகமானது…அந்த பெண்ணை கிண்டல் பண்ண முடியும்…கொஞ்ச முடியும்…என்னை கல்யாணம் பணிகிறாயான்னு கேட்டு அழ வைக்க முடியும்…அவர்களின் ஒவ்வொரு சுப விஷயத்தின் போதும் அவர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்க முடியும்…அவள் அணியும் முதன்முதல் காதணி தான் வாங்கிக்குடுத்து தன் மடியில் வைத்து போடமுடியும்…அவள் பெரிய மனுசி ஆகும் போது அவள் அணிகின்ற முதல் சேலை நாம் வாங்கிக்குடுத்தாக இருக்க முடியும்…அவள் கல்யாணத்துக்கு போடும் மாலை நம் வாங்கியதாக இருக்க முடியும்…அவள் சாப்பிடும் முதல் விருந்து நாம் வீடுதாக இருக்க முடியும்…அவள் சாகும் போது போடும் கோடி துணி கூட அவன் வாரிசு வாங்கி தந்தாக தன் இருக்கும்…இப்டி ஒரு உறவில் தான் கே கே சுருதிக்கு இருக்க நினைத்தான்…இருப்பான்…இந்த உறவை யாராலும் கேள்விகேட்க முடியாது…வரையறுக்க முடியாது…

            

     

 

Advertisement